நாசரேத்
சரித்திர அடிப்படையில் அப்படியொன்றும் பிரசித்தி
பெற்ற நகரமல்ல நாசரேத் பண்டைக்கால ராஜாக்களின் கவனத்தைக் கவர்ந்ததோ அல்லது பெரிய வணிக நகரமோ கூட இல்லை இந்த நாசரேத்.
நாலைந்து குக்கிராமங்கள் சங்கமிக்கிற இடத்தில் அமைந் துள்ளது இந்த ஊர். அவ்வளவுதான்.
நம் நாட்டில் பார்த்திருப்பீர்களே, சுற்றுப்பட்டி கிராமங்கள் சங்கமிக்கும் இடத்தில் கொஞ்சம் பெரியதாய் ஒரு ஊர் இருக்கும். பக்கத்துப் பட்டிகள் எல்லாம் வராந்திர சந்தைக்காக அங்கே கூட்டம் கூடும். மற்ற நாட்களில் வெறிச்! டீக்கடைகளில் கூட பேப்பர் படிக்க ஆளிருக்காது. அதுமாதிரியான சுமார் வகையை சேர்ந்த ஊர்தான் நாசரேத்.
சட்டென்று கேட்டால் அது நகரமாக அல்லது கிராமமா அடையாளம் சொல்ல திகைக்கவேண்டிவரும் வகையை சேர்ந்தது இந்த ஊர்.
ஆனால் நான் சொல்லும் இதெல்லாம் நாசரேத்தின் பழைய கதை.
சாதரணங்களையே தெரிந்து கொண்டு அவற்றை அசாதா ரணமாக்கும் நம் தேவன் இதைத் தெரிந்து கொண்டதால் இன்று நாசரேத் ஒரு புகழ்பெற்ற நகரம்.
ஒரு காலத்தில் நாசரேத்திலிருந்து நன்மை வருமா? என்று ஏளனமாக கேட்கப்பட்ட நகரம், இன்றைக்கு கிறிஸ்தவர்களையும், யாத்தீரிகர்களையும் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கவர்ந் திழுக்கும் காந்த நகரமாகியுள்ளது.
இஸ்ரவேல் புனிதப்பயணம் மேற்கொள்ளும் யாவரும் நாசரேத்தை பார்க்காமல் திரும்புவதில்லை.
நாலுபேர் வருகிறார்கள், என்றவுடன் வசதிகள் கூடிக் கொள்வது இயல்புதானே? நாசரேத்தும் அதற்கு விதிவிலக்கல்ல.
இன்றைக்கு நிறைய நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்கள் நாசரேத்தில் முளைத்துள்ளன. தவிர சிறிதும் பெரிதுமாக நிறைய விடுதிகள், உணவுச்சாலைகள், இரவுபகலாக சாலைகளில் காற்றை கிழித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடும் வாகனங்கள், கண்ணாடி வைத்த வானளாவிய கட்டங்கள், கறுப்பு மொசைக் கல் போட்ட மாதிரி வழு வழு சாலைகள், கண்கவர் தேவாலயங்கள்.
நாசரேத் ரொம்பவும் தான் மாறிப் போயிருக்கிறது. வாலிபக் காலத்தில் வற்றிப் போய் திரிந்து விட்டு வயசான காலத்தில் மேக்கப் போட்டுக் கொள்கிறவர்கள் மாதிரி.
புதுப் பணக்காரர்களின் தோரணை நிறையவே நாசரேத் தில் காணப்படுகிறது.
இங்குள்ள Church of Announciation என்ற பிரம்மாண்டமான தேவாலயம் வெகு பிரசித்தி பெற்றது.
காரணம், இந்த இடத்தில் தான் தேவதூதன் மரியாளுக்கு முன்பாகத் தோன்றி இயேசுவின் பிறப்பைப் பற்றி முன்னறி வித்ததாக ஐதீகம். அந்த இடத்தில் ஆலயம் கட்டி பிரம்மாண்டம் பண்ணிவிட்டார்கள்.
இன்றைக்கு இத்தனை நவீனமாகவும், பிரம்மாண்ட மாகவும் தோன்றும் நாசரேத் இயேசு வாழ்ந்த காலத்தில் எப்படியிருந்தது என்று தெரிந்து கொள்ளலாம் வருகிறீர்களா?
முதலில் நாசரேத்தின் அமைப்பு.
நாசரேத் கடல் மட்டத்திலிருந்து 1230 அடி உயரத்தில் அமைந்துள்ள ஊர்.
கலிலேயாக் கடலிலிருந்து மேற்கே தோராயமாக பயணிப் பீர்களேயானால் நிச்சயமாக நாசரேத்தை காணலாம்.
இது எஸ்டிரலோன் சமவெளியிலிருந்து வடக்கே 500 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது.
சுற்றிலும் சில குன்றுகள், தூரமாய் தெரியும்' கருநீல மலைகள் ஆகியவற்றின் நடுவே மிகவும் பாதுகாப்பாக அமைந்துள் ளதால் நாசரேத்திலிருந்து அக்காலத்தில் சட்டென்று வெளியுலகத் தொடர்பு கொள்ள மிகவும் கஷ்டம்.
நான் சொல்வது அக்காலம் பற்றி. இன்று விஞ்ஞானத்தால் தொடர்பு சாதனங்களை நவீனப்படுத்தி விட்டதால் இன்டெர்நெட் செல்போன்கள் உதவியுடன் கொஞ்சம் முயற்சித்தால் நீங்கள் பாதாளத்தில் உள்ள ஆசாமியுடன் கூட தொடர்பு கொண்டு பேசி விடலாம். (என்ன, அவர் செல்போனுடன் செத்துப் போயிருக்க வேண்டும்)
ஆனால் அக்காலத்தில் நாசரேத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரம் போனால் மட்டுமே மலைகளுக்கு அப்பால் உள்ள வெளியுலகத் தொடர்பு கிடைக்கும்.
நாசரேத்தில் நின்று கொண்டு சற்று மேற்காக திரும்பிப் பார்ப்பீர்களானால் தெரியும் மலைதான் இன்று கிறிஸ்தவர் களுக்கு நடுவில் பல சபைகளுக்கும், தெருக்களுக்கும் பெயராகிப் போன கர்மேல் மலை. இங்கு தான் எலியா வானத்திலிருந்து தீயை இறக்கி அற்புதம் செய்தார்.
சரி. இங்கே கிழக்கே திரும்பிப் பாருங்கள். ஒரு பள்ளத் தாக்கு தெரிகிறதா? அதுதான் யோர்தான் பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு யோர்தானிலிருந்து எஸ்திராவை கடந்து நாசரேத் வரை பரவியுள்ளது.
எருசலேமிலிருந்து நாசரேத்துக்கு சமாரியாவைத்
தொடாமல் போக வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் இந்தப் பள்ளத்தாக்கின் ஊடாகத்தான் நீங்கள் கடந்து போக வேண்டும். யோசுவா பாளயமிறங்கியிருந்ததாக வேதம் சொல்லும் பள்ளத் தாக்கும் இதுதான். (யோசுவா 3 : 1)
யோசுவா 3:1
அதிகாலமே யோசுவா எழுந்திருந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம் பண்ணி, யோர்தான் மட்டும் வந்து அதைக் கடந்து போகும் முன் அங்கே இராத் தங்கினார்கள்.
வடக்கே வெள்ளைத் தொப்பியணிந்த நம்நாட்டு தேசீயத் தலைவர்கள் மாதிரி பனிமூடிய சிகரங்களுடன் காணப்படுவது தான் எர்மோன் மலை. தாவீது ராஜாவால் பாடல் பெற்ற மலை. (சங் 133:3)
இதுதவிர இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்திரத்திற்கு ஆவியானவரால் கொண்டு போகப்பட்டதாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடமும் இதுதான் என்கிறார்கள்.
கொஞ்சம் ஆவிக்குரிய உணர்வோடு கண்களை ஏறெடுத் துப் பார்த்தால் எலியா, எலிசா, யோகவா, தாவீது என்று அநேகம் பக்தர்களை நினைவுக்கு கொண்டு வரும் இடத்தில் அமைந்துள் ளது இந்த நாசரேத்.
மற்றபடி சரித்திரம் என்று பார்க்கப்போனால் நாசரேத் துக்கு எந்தவிதமான பலமான சரித்திரப் பின்னணியும் கிடையாது. இவ்வளவு ஏன்? இந்நகரம் தோன்றிய காலம் என்னவென்பது கூட யாருக்கும் தெரியாது.
கி.பி. 66ல் வெஸ்பேசியன் என்ற ரோமத்தளபதி யூதாவின் மேல் படையெடுத்து, கலகத்தை அடக்கி, யூதர்களை சிதறடித்தான் அல்லவா? அச்சமயம் இந்த நாசரேத்தும் கூட்டத்தோடு கூட்டமாக அழிக்கப்பட்டு குடியற்றுப் போய்விட்டது.
இதன் ஜனங்களெல்லாம் சிதறி கலிலேயாவில் குடியேறி னார்கள். பின்னர் பர்கோக்பா என்ற ஒரு புரட்சியாளர் எழும்பி ரோமர்களை ஜெயித்து நாசரேத்தை கைப்பற்றியபோதுதான் நாசரேத்துக்கு போன உயிர் திரும்பவந்தது. சிதறி ஓடிப்போயி ருந்த யூதர்களில் பலர் பெருமூச்சோடு மீண்டும் நாசரேத்தில் குடி யேறினார்கள். இவர்கள் சிதிலடைந்திருந்த நாசரேத்தின் எல்லாப் பகுதிகளையும் மறுபடியுமாக புதுப்பித்துக் காட்டினார்கள்.
பிறகு மீண்டும் நாசரேத்துக்காரர்களுக்கு சோதனை கி.பி. 629ல் ஏற்பட்டது.
ஹிராக்கிளியஸ் என்பவனது தலைமையில் யூதர்கள் பெர்ஸியர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கிறிஸ்தவர் களுக்கு விரோதமாக சண்டை செய்தார்கள். கலகம் காரணமாக நாசரேத் பலமான சேதத்திற்குள்ளானது.
அதன்பின் சிலுவைப்போர்கள் நடைபெற்ற காலங்களி ளெல்லாம் நாசரேத் மிகவும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்து கொண்டிருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் தான் கலிலேயாவின் இளவரசன் என்று அழைக்கப்பட்ட டான்கிரெட் (Tancred) என்பவர் நாசரேத்தை திரும்பவும் புதுப்பித்துக் கட்டினார். நாசரேத் இந்தக் காலக்கட்டத்தில் ரொம்பவுமே நிம்மதியாக இருந்தது.
ஆனால் நிம்மதி நீடித்ததோ கொஞ்சநாட்களுக்குத்தான். மீண்டும் நாசரேத்துக்குப் பிரச்சனை கி.பி. 1187ல் வந்தது.
பிரச்சனையின் பெயர் சலாவுதீன். (அற்புதவிளக்கு அலாவுதீன் அல்ல. இவர் சலாவுதீன்) இவர் கி.பி. 1187ல் நாசரேத்திற் குள்ளாக நுழைந்து வாள் முனையில் அதைக் கையகப்படுத்திக் கொண்டார்.
சலாவுதீன் ஒரு விஷயத்தில் பரவாயில்லை. நகரத்தின் அழகிற்கோ, அதன் கட்டிடங்களுக்கோ பங்கம் வராமல் ஆட்சி நடத்தினார்.
ஆனால் கி.பி. 1263ல் பேய்பர்ஸ் என்ற மன்னர் (பேய்க்கு எதற்கு பர்ஸ்) நாசரேத்தை பிடித்தபோது பெயருக்கு ஏற்ற மாதிரி நகரத்தை பேய்த்தனமாக தாக்கி நாசரேத்தை நாசமாக்கினார்.
பார்த்துப் பார்த்துக் கட்டிய பல அழகிய நகரங்கள் தவிடு
பொடியாயின.
துறவிகள் மடங்கள் தகர்க்கப்பட்டன. பாவம், துறவிகள்,
தங்கள் மடத்தையும் துறந்துவிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளா
னார்கள். நாசரேத்தை விட்டு கண்ணுக்கெட்டாத ஓடிப்போய்
விட்டார்கள். பிறகு ஜெபதபங்களையெல்லாம் கண்மறைவான
இடங்களிலேயே வைத்துக்கொண்டார்கள்.
இதற்குப் பின் அலுக்க அலுக்க நானூறு வருடங்கள் இஸ்லாமியர்களின் ஆட்சிதான் நாசரேத்தில்
அதன் பிறகு காலத்தின் சுழற்சியால் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படத் துவங்கின.
கி.பி. 1620ல் சில கிறிஸ்தவ குடும்பங்கள் மெள்ளமாக நாசரேத்தில் குடியேறின. அக்கால கட்டத்தில் ஆட்சி செய்த ஆட்சி யாளர்களும் கடுமை குறைந்து தாராள மனப்பான்மையுடன் ஆட்சி செய்து வந்தனர்.
இந்தக் குடும்பங்களைத் தொடர்ந்து, இன்னும் திரளான கிறிஸ்தவக் குடும்பங்கள் மூட்டை முடிக்சுகளுடன் நாசரேத்தில் குடியேறின. இவர்கள் சன்னஞ் சன்னமாக இடங்களையும், கட்டி டங்களையும் அராபியர்களிடமிருந்து விலைக்கு வாங்கத் துவங் கினார்கள்.
இன்றைக்கு நாசரேத்தில் மெஜாரிட்டி கிறிஸ்தவர்கள் தான்.
இடையில் சோர்ந்திருந்த நாசரேத் இன்று சுறுசுறுப்பாக, பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன் பாருங்கள். அனன்சியேஷன் ஆலயம் (The Church Of Announciation) இந்த ஆலயம் நாசரேத்தில் மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25ம் தேதி, கன்னிமரியாள் தன் கருவில் இயேசுவைத் தாங்கின நாள் என்று கருதப்பட்டு அதை புனித நாளாக நினைவு கூர்ந்து ஒரு திரு விழாவையே விமரிசையாக இந்த ஆலயத்தில் கொண்டாடுகிறார்கள்.
உலகின் பல பாகங்களிலுமிருந்து கிறிஸ்தவர்கள் திரளாய் வந்து இந்த ஆலயத்தின் விழாவில் பங்கேற்றுச் செல்கிறார்கள்.
இன்று இவ்வளவு முன்னேறியுள்ள நகரம், இயேசுவின் காலத்தில் எப்படியிருந்தது?
பிரம்மாண்ட ஆலயம்?.... நட்சத்திர ஹோட்டல்கள்?.... வழுக்கும் சாலைகள்? ம்ஹும்.... இவையெல்லாம் ஒன்றும் இருந்த தில்லை.
இயேசுவின் காலத்தில் இது நகரமா, அல்லது கிராமமா என்று வரையறுத்து சொல்ல முடியாதபடி இருந்தது.
நாசரேத்துக்கு தெற்கேயுள்ள மலையடிவாரங்கள்தான் விவசாயத்திற்கு ஏற்ற இடம். எனவே இங்கே கொஞ்சம் பசை யுள்ள விவசாயிகள் பெரும் அளவில் நிலங்களை வளைத்துப் போட்டுக் கொண்டு விவசாயம் செய்து வந்தனர். பசையில்லா தவர்கள் இவர்களிடம் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். எனவே, இப்பகுதிகளையொட்டிய இடங்களில்தான் மக்கள் நெருக்கமே காணப்பட்டது.
இப்பகுதி நிலங்களிலெல்லாம் திராட்சைத்தோட்டங்கள் தான் பெருவாரியாக பரவியிருந்தன. இவற்றிக்கு இணையாக ஒலிவத்தோப்புகளும் இருந்தன. இடையிடையே பசேல் என்று கோதுமை வயல்கள்.
இவற்றினூடே ஒரு பெரிய நெடுஞ்சாலை சென்றது. இந்த சாலைதான் தமஸ்குவையும் (டமாஸ்கஸ் என்பதுதான் தமஸ்கு- தமிழில்) செசரியாவையும் இணைத்தது.
நெடுஞ்சாலை என்றவுடன் நீங்கள் ஏதோ பளபளவென்று தார் பூசி, நடுவில் வெள்ளைக்கோடுகளுடன் டிராபிக் வகிடெத்து, நாலு லாரி போகுமளவிற்கு விசாலம் பண்ணியிருந்தாலும் தினசரி ஒரு ஏழெட்டு விபத்துகளையாவது சந்தித்துவிடும் நம்நாட்டு தேசீய நெடுஞ்சாலைகள் மாதிரி நினைத்துவிடக் கூடாது.
செசரியா தமஸ்கு நெஞ்சாலை என்பது கரடுமுரடான சாலை. எங்கிருந்தோ பாளம் பாளமாக வெட்டிக் கொண்டு வந்து பரப்பப்பட்ட கல்பாளங்களுக்கிடையே களிமண் மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை பாவி, கூடுமானவரை சமப்படுத்த முயற்சி செய்யப்பட்ட சாலைகள்.
இந்த நெடுஞ்சாலைகளில் குதிரை மற்றும் கோவேறு கழுதைகளில் மட்டுமே ஒரு பெரிய பாட்டுப்பாடிக் கொண்டே பயணம் செய்யலாம். தொடர்ந்து செசரியா தமஸ்கு நெடுஞ் சாலை யில் நாலுதடவை பாட்டுப்பாடி பயணம் செய்தால் உத்திரவாதமாக முதுகுத்தண்டில் டிஸ்க் விலகி... டிராக்ஷன் போட்டு ரொம்ப நாள் பாடுபட வேண்டும். பிறகு பாட்டென்ன. ஒப்பாரி கூட வைக்க முடியாது. நடையாளர்கள் இச்சாலையில் தாராளமாக நடக்கலாம். ஆனால் முழங்காலை மாத்திரம் நெஞ்சிலே தட்டுகிற அளவிற்கு காலைத் தூக்கிக் தூக்கி வைத்து நடக்க வேண்டும். நிலவில் நடக்கிற
மாதிரி. காலை தேய்த்துத் தேய்த்து நடக்கிற பேர்வழிகள் இச்சாலை வழியே நடப்பதை அறவே தவிர்த்து விடுவது உத்தமம். இல்லா விட்டால் பாளம் பாளமான பாறைகளுக்கு நடுவிலுள்ள இடை வெளிகளில் கால்விரல்கள் சிக்கிக் கொண்டு காணாமல் போய் விடும் அபாயம் உண்டு. அதே போல இருதய நோய் பிரிஸ்கிரிப் ஷனுக்கும் இந்த சாலையில் நடப்பது ஆகாது.
மற்றபடி இக்கால கார் மாதிரியான சொகுசு வாகனங்க ளெல்லாம் இந்த சாலையில் போக முடியாது. பிடிவாதமாக வாகனத்தில் இச்சாலையில் போயேதான் தீர வேண்டுமானால் ரோடுரோலர் மாத்திரம்தான் ஏற்றது.
சாலைகள் அவ்வளவு நேர்த்தியானவை.
நாசரேத் ஒரு ஊரே தவிர நன்கு திட்டமிட்டு அமைக்கப் பட்ட ஊரல்ல. காமாசோமா ரகம். தெருக்களின் இருமருங்கிலும் வீடுகள் காணப்பட்டாலும் அவை நெருக்கமாகவும் வரிசை விலகி முளைத்த பற்கள் போல் உள்ளடங்கியும், வெளியே துருத்திக் கொண்டும் காணப்பட்டன.
தெருக்களில் சுத்தமும ஒழுங்கும் இல்லாமலிருந்தாலும் வீதிகள் கிரமமாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
அதாவது, ஒரு தெருவுக்குள் நுழையும் போதே ரொட்டி சுடும் வாசனை மூக்கை துளைக்கிறதா, அது ரொட்டிக்காரத் தெரு, எந்த வீட்டிலும் புகுந்து ரொட்டி விலைக்கு வாங்கிக் கொள்ள லாம்.
ஒரு தெருவுக்குள் நடக்கும் போதே காலெல்லாம் களிமண் ஒட்டிக் கொள்கிறதா, சட்டென்று குனிந்து பார்ப்பதற்குள் கட்டை விரல் தரையில் பதிக்கப்பட்ட சக்கரத்தில் இடித்துக் கொள்கிறதா. அது குயவர் தெரு.
மடார்... மடார் என்று காதைப்பிளக்கும் சம்மட்டியொலி தலையில் அறைந்தமாதிரி கேட்கிறதா. அது கருமார்கள் தெரு. அதாவது கொல்லர் தெரு. பட்டறை ஆட்களை பெருவாரியாக பார்க்கலாம்.
இது மாதிரியே தச்சர் தெரு. உடை தயாரிப்பாளர்கள் தெரு,
மேய்ப்பர்கள் தெரு, என்று ரகரகமான தெருக்கள் உண்டு. அந்தந்த
தெருக்களில் அந்தந்த தொழிலாளர்களைப் பார்க்கலாம். ஒரேவித
தொழிலாளர்கள் ஒரே இடத்தில் வாழ்ந்தது அதிசயம்தான்.
நாசரேத்திலிருந்த வீடுகளும் வித்தியாசமானவையே.
வீடு என்பது ஒரேயொரு அறைதான். இந்த அறையிலேயே தான் அந்த வீட்டு மனிதர்களும், அவர்களது வளர்ப்பு மகன்களும்... மன்னிக்கவும் வளர்ப்பு பிராணிகளும் தங்கிக்கொள்ள வேண்டும்.
அறை பாதியாக பிரிக்கப்பட்டு சரிபாதி மேடாக, ஒரு மேடை மாதிரி அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடைகள் கால் நடைகளின் உயரத்தைவிட ஓரிரண்டு அடி பெரிதாக இருக்கும். ஒரு மாண்புமிகு அமைச்சர் நின்று சொற்பொழிவாற்றும் மேடை யளவுக்கு உயரம்!
இந்த மேடைப்பகுதியில்தான் மனிதர்கள் தங்கிக் கொள் வார்கள். அவர்களது பொருட்களும் அங்குதான் வைக்கப்பட்டி ருக்கும். தரை போர்ஷன் கால்நடைகளுக்கானது. ஒரு ஓரமாய் அவற்றின் தீவனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கழுநீர் தண்ணீர் தொட்டியும் பக்கத்திலேயே இருக்கும். நம்மைப் போல நாசரேத்துக்காரர்கள் தங்கள் வீடுகளில் அறைகள் பிரித்து தனித் தனி கதவுகள் போட்டுக் கொள்வதில்லை. ஆடுமாடுகள் தங்கும் பகுதி, மனிதர் தங்கும் மேடை எல்லாவற்றிற்கும் சேர்த்து வீட்டிற்கு ஒரே ஒரு தலை வாசல்தான். அதில் மாத்திரம்தான் கதவு.
"எண்ணங்கண்ணா, கால்நடைகளோட ஒண்ணு மண்ணா தங்கியிருப்பதில் கஷ்டமாயில்லீங்களா?" என்று நாசரேத்துக் காரரிடம் பேச்சுக் கொடுத்தால்... "கஷ்டமா? சரியாப் போச்சு. கால் நடைகள் இல்லாவிட்டால் தான் தூக்கம் வராது. இன்னொண்ணு தெரியுமா? கால்நடைகளோடே ஒரே வீட்டில் தங்கியிருப்பதால் குளிர்காலத்தில் ரொம்பவே கதகதப்பாயிருக்கும்" என்பார். உண்மைதான்.
ஆனால் வீட்டிற்குள் கால்நடை வாசனைதான் கொஞ்சம்
தூக்கலாயிருக்கிறது. நமக்கு கஷ்டம். அவர்களுக்கு பழகிப்
போய்விட்டது. ஏதோ, சௌகரியமாயிருந்தால் சரிதான்.
இக்காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று
பட்டியல் போட்டால் மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மிஷின், குக்கர்,
சிலிண்டர் அடுப்பு என்று ரயில் நீளத்திற்கு வரும். ஆனால்
அக்காலத்திய நாசரேத் வீட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள்
வெகு சொற்பம். அப்படி என்னதான் வைத்திருக்கிறார்கள் வாருங்
கள். எட்டிப்பார்ப்போம்.
தண்ணீருக்கு என்று சில மண்சாடிகள். நமக்கு ஜாடிகள் என்றால் ஊறுகாய் ஞாபகத்திற்கு வரும் அல்லது அலாவுதீன் பூதம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அக்காலத்தில் மண்சாடிகள் தான் பாப்புலர். இக்காலத்தில் குடம் மாதிரி. நாசரேத்தில் தண்ணீர் வைக்கும் இந்த வகைச் சாடிகள் ஒவ்வொன்றும் உங்கள் உயரம்.
எண்ணைக்கு என்று கொஞ்சம் உயரம் குறைந்த சாடிகள். அதுவும் மண்தான். சில உணவுத்தட்டுகள். இவை மரத்தாலானவை. நாலைந்து எண்ணெய் விளக்கு, ஒரு மாவரைக்கும் திரிகை. சுருக்கமாக ஒன்றிரண்டு சமையல் பாத்திரங்கள்.... அவ்வளவுதான்.
வீட்டு உபயோகப்பொருட்களில் நாசரேத்துக்காரர்கள் கவனம் செலுத்தியது திரிகைகளில்தான். அப்படி என்னதான் மோகமோ திரிகைகளில், விதவிதமான டிசைன்களில் திரிகைகள் செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியிருந்த விதவிதமான திரிகைகளை பழம் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, துடைத்து காட்சியகங்களில் வைத்திருக்கிறார்கள். கிரைண்டர்கள் தான் எக்காலத்திலும் மவுசு குறையாத பொருள் போலும்.
திரிகைகளுக்கு அடுத்து அவர்கள் கவனப்பட்டது விளக்கு களில், பல்வேறு விதமான விளக்குகளை பயன்படுத்தி வந்தனர். நாசரேத்தில் பயன்பட்ட விளக்குகளின் வகைகளை விளக்கினால் நாலைந்து பக்கத்துக்கு வரும். அந்தளவு விளக்குகளை கலை நயத்தோடு வடிவமைத்திருக்கிறார்கள்.
இக்காலத்தின் கப்போர்டுகளுக்கு முன்னோடியாக சுவர்களில் பெரிய பெரிய பொந்துகளை உண்டுபண்ணி அதில் தங்கள் படுக்கைகளையும் பாத்திரங்களையும் பாந்தமாய் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
நம் இந்திய கிராமங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல்
ஆடுமாடுகளின் சாணத்தை எருவாக்கி அதை சுவர்களில் காய
வைத்திருக்கிறார்கள். எனவே, ஒன்று பாக்கியில்லாமல் ஏறத்தாழ
எல்லா வீட்டுச் சுவர்களிலேயுமே எரு தட்டின ரேகைகள் நீக்கமற
நிறைந்திருக்கின்றன.
மொத்தமாக சொல்லப்போனால் நாசரேத் அழுக்கும்,
தூசியும் நிறைந்த ஒரு பெரிய சைஸ் கிராமமாகத்தான் காணப்
பட்டிருக்கிறது.
இந்த அழுக்கு ஊர்தான் இன்றைக்கு உலகத்தின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலி ருந்தும் சாரி சாரியாக யாத்ரீகர்கள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இரவெல்லாம் தூங்காமல் கார்கள் இரைந்து ஓடிக் கொண்டே இருக்கின்றன. வேதம் தெரியாத பயணிகளை குறிவைத்து கைடுகள் ராப்பகலாக சுற்றிக் கொண்டேயிருக் கிறார்கள்- நிறைய கதைகளுடன். இரவு பன்னிரண்டு மணிக்கு கூட நாசரேத்தில் சுடச்சுட முழுச்சாப்பாடு கிடைக்கிறது.
நடன அரங்குகள், தியேட்டர்கள் என்று பொழுதுபோக்கு அம்சங்கள் ஒருபுறம் இரைச்சல் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. நாசரேத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்றைக்கு பணமும் நவீனமும் தெரிகிறது.
ஒழுங்கற்றதும் தூசி நிறைந்ததுமாக இருந்த இந்த ஊரின் இன்றைய செழுமைக்கும், மகிமைக்கும் காரணம் என்ன?
ஒற்றை வரியில் சொல்வதானால் இயேசு என்று சொல்லலாம்.
ஆம். இயேசு அங்கே வாழ்ந்தார் என்கிற ஒரேயொரு விஷயம்தான் நாசரேத் இத்தனை உச்சாணிக் கொம்பில் இன்றைக்கு ஏறிக் கொள்ளக் காரணம்.
இயேசு இங்கே வாழ்ந்திராவிட்டால் நாசரேத் என்ற பெயரே யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. நூற்றுக்கணக் கான இஸ்ரேலிய குக்கிராமங்களில் ஒன்றாக இதுவும் மறக்கப் பட்டுப் போயிருக்கும்.
ஒழுங்கற்றதும், வெறுமையுமாய் துவக்கத்தில் இருந்த பூமியில் தேவன் உலாவிய போதுதான் எல்லாம் ஒழுங்கும், சீரும் வளமுமாயிற்று.வாசித்துப்பாருங்கள். ஆதி 1 : 2, 31
ஆதியாகமம் 1 : 2, 31
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டி ருந்தார்.
31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கிய எல்லா வற்றையும் பார்த்தார். அது மிகவும் நன்றாக இருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
ஒழுங்கற்றவைகளை சீர்ப்படுத்தும் காரணமாகவே கர்த்தர் அதன் நடுவில் உலாவவும், வாசம் செய்யவும் விரும்புகிறார்.
ஒழுங்கற்றவைகள் ஒழுங்குபெறவும், சீரற்றவை சீர் பெறவும் ஓர் எளிய வழியுண்டு. ஆம், இயேசுவை அங்கே வசிக்க விடுவதே அந்த வழி. அது தனிநபர் வாழ்க்கையானாலும் சரி. சமுதாய அமைப்பிலானாலும் சரி. ஒரு நகரினாலும் சரி. ஒரு நாட்டிலா னாலும் சரி.
ஒழுங்கற்றதும் வெறுமையானதும் பிறரால் புறக்கணிக்கப்
பட்டதுமான நம்முடைய வாழ்விலும் இயேசு வாழ்ந்தால்.... சந்தேகமேயில்லை. நாமும் நிச்சயமாக நாசரேத்தாக மாற முடியும்.
இதோ, வாசற்படியில் நின்று ஆசையாய் கதவைத் தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டுக் கத வைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடே போஜனம் பண்ணுவேன்.(வெளி 3: 20)
இது உங்களை உன்னதம் வரை உயர்த்தும் இயேசுவின் அழைப்பு.
அப்படியானால்.... கதவைத் திறக்க இன்னமும் தாமதமேன் நண்பரே?
மூலம்: ஆழங்கள் சொல்லும் சாட்சிகள்
ஆசிரியர்: சகோ.வின்சென்ட் செல்வகேமார்
