சங்கீதம் 13-3-5 விளக்கம்

சங்கீதம் 13:3-5 விளக்கம்

கர்த்தாவே, எனக்குச் செவிகொடுத்தருளும்

சங் 13 : 3-5

சங் 13:3. என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

சங் 13:4. அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.

சங் 13:5. நான் உம்முடைய கிருபையின் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

தாவீதின் சஞ்சலம் அதிகரிக்கிறது. அவர் கர்த்தரிடத்தில் முறையிடுகிற வார்த்தைகள் ஜெபவார்த்தைகளாக மாறுகிறது. நாம் கர்த்தருடைய சமுகத்தில் எப்போதும் முறையிடுகிறவர்களாக இருக்கக்கூடாது. நமக்கு எவ்வளவு சஞ்சலம் வந்தாலும், எவ்வளவு வேதனை வந்தாலும் அவற்றை தேவனுடைய சமுகத்தில் ஒருதரம் சொல்லிவிட்டு, அதன்பின்பு கர்த்தருடைய கிருபைக்காக நாம் ஜெபத்தோடு காத்திருக்கவேண்டும். நமக்குத் துன்பம் வரும்போது, நாம் முழங்காலில் ஜெபிப்பதற்கு அது நமக்கு உதவிபுரியவேண்டும்.

கர்த்தர் தன்னை நோக்கிப் பார்க்கவேண்டுமென்றும், அவர் தன்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்கவேண்டுமென்றும், அவர் தன்னுடைய கண்களைத் தெளிவாக்கவேண்டுமென்றும் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். நம்முடைய கண்கள் தெளிவடையவேண்டுமென்றால் நம்முடைய விசுவாசம் வலுவடையவேண்டும். விசுவாசமே நம்முடைய ஆத்துமாவின் கண். நம்முடைய மனக்கண்கள் எப்போதும் பிரகாசமுள்ளதாயிருக்கவேண்டும்.

நம்முடைய மனக்கண்கள் தெளிவாகயிருந்தால்தான் நம்மால் பரலோகத்திற்கு நேராக நம்முடைய கண்களை ஏறெடுக்க முடியும். நம்முடைய பிரகாசமான மனக்கண்களினால் நம்முடைய ஆத்துமாவை ஊடுருவிப் பார்க்க முடியும். நம்முடைய மாம்சப்பிரகாரமான கண்களினால், நம்முடைய பிரச்சனைகளையும், நம்முடைய சூழ்நிலைகளையும் மாத்திரமே பார்க்க முடியும். பிரச்சனைகளைத் தாண்டி, சூழ்நிலைகளைத் தாண்டி, நம்முடைய மாம்சத்தின் கண்களால் ஏறிட்டுப் பார்க்க முடியாது. நம்முடைய மனக்கண்கள் தெளிவாகயிருக்கும்போது, நாம் துன்பத்திலிருந்தாலும், நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற சந்தோஷத்தையும், ஆறுதலையும் நம்மால் விசுவாசத்தோடு பார்க்க முடியும்.

தன்னுடைய கண்களை கர்த்தர் தெளிவாக்கவில்லையென்றால், தான் மரணநித்திரை அடைந்துவிடுவதாக தாவீது சொல்லுகிறார். நம்முடைய மனக்கண்கள் பிரகாசமுள்ளதாக இல்லையென்றால் நாம் ஆவிக்குரிய ரீதியாக மரித்துப்போவோம். ஆவிக்குரிய மரணம் நித்திய மரணமாயிருக்கும். இது மரண நித்திரை என்றும் அழைக்கப்படுகிறது.

தாவீதுக்கு அநேக பிரச்சனைகள் வந்திருக்கிறது. இந்த வேதனைகளைத் தாங்கிக்கொண்டு அவரால் இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவிக்க முடியவில்லை. தன்னுடைய இருதயத்திலே தாவீது நித்தம் நித்தம் சஞ்சலத்தை வைத்திருக்கிறார். அது பற்றி தன்னுடைய ஆத்துமாவில் அனுதினமும் ஆலோசனைபண்ணி சோர்ந்துபோயிருக்கிறார். தாவீதின் சோர்வு அவருடைய சத்துருக்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது.

தாவீது தள்ளாடும்போது அவருடைய சத்துருக்கள் களிகூருகிறார்கள். தாவீது விழுந்துவிடும்போது, அவருடைய சத்துருக்கள் ""அவனை மேற்கொண்டேன்'' என்று ஆணவமாய்ச் சொல்லுகிறார்கள். தாவீதும் தாவீதின் தேவனும் பெலமிழந்துவிட்டார்கள் என்று பகைஞர் ஏளனமாகப் பேசுகிறார்கள். கர்த்தருடைய நாமம் தூஷிக்கப்படக்கூடாது. சத்துருக்கள் களிகூரக்கூடாது.

பக்தியுள்ளவர்கள் நீதியில் சந்தோஷப்படுவார்கள். துன்மார்க்கரோ பாவத்திலும் அக்கிரமத்திலும் சந்தோஷப்படுவார்கள். தாவீது தோற்றுப்போனால் அவருடைய சத்துருக்கள் களிகூருவார்கள். தன்னுடைய சத்துருக்கள் களிகூராதபடிக்கு கர்த்தர் தன்னுடைய நடைகளை ஸ்திரப்படுத்தவேண்டும் என்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். பகைஞர் தன்னை மேற்கொள்ளக்கூடாது என்றும், தான் மரண நித்திரை அடையக்கூடாது என்றும் தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.

தாவீதின் விண்ணப்பங்கள்

1. என்னை நோக்கிப்பாரும்

2. எனக்கு செவிகொடும்

3. என் கண்களைத் தெளிவாக்கும் (என்னை ஏற்றுக்கொள்ளும்)

தாவீது மரண நித்திரை அடையக்கூடாது என்று விண்ணப்பம் செய்வதற்குக் காரணங்கள்

1. நான் மரிக்கக் கூடாது

2. என் சத்துரு என்னை மேற்கொள்ளக் கூடாது (சங் 13:4)

3. என் சத்துரு என் தோல்வியினால் களிகூரக் கூடாது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.