தானியேல் 12ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி
அந்தியோகசுடைய ஆட்சியிலே யூதர்களுக்கு மிகுந்த துன்பமுண்டாகும் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கும், கிறிஸ்துவின் சபைக்கும் சத்துருக்கள் மூலமாக பாடுகளும் உபத்திரவங்களும் உண்டாகும் என்பதற்கு இந்த தீர்க்கதரிசனம் அடையாளமாயிருக்கிறது.
கர்த்தருடைய ஜனத்திற்கு உபத்திரவக்காலம் வரும்போது, கர்த்தருடைய ஆதரவும் பாதுகாப்பும் அவருடைய ஜனங்களுக்கு கிடைக்கும். இது விசுவாசிகளுக்கு ஆறுதலான செய்தி (தானி 12:1-4).
இந்த சம்பவங்கள் எப்பொழுது நடைபெறும் என்பது சம்பந்தமாக இயேசுகிறிஸ்துவும், ஒரு தேவதூதனும் பேசிக்கொள்கிறார்கள் (தானி 12:5-7). தானியேல் இயேசுகிறிஸ்துவிடம் ""இவைகளின் முடிவு என்னமாயிருக்கும்'' என்று கேட்கிறார் (தானி 12:8). தானியேலின் கேள்விக்கு கர்த்தர் பதில் கொடுக்கிறார் (தானி 12:9-13).
பெரிய அதிபதியாகிய மிகாவேல் தானி 12:1-4
தானி 12:1. உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான் யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
தானி 12:2. பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
தானி 12:3. ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தானி 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய சபையை போஷிக்கிறவராகவும், பாதுகாக்கிறவராகவும் எழும்புவார். ""பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்'' (தானி 12:1) என்று காபிரியேல் தானியேலிடம் சொல்லுகிறார்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே பெரிய அதிபதியாகிய இருக்கிறார். அக்காலத்திலே மிகாவேல் நம்முடைய நித்திய இரட்சிப்பு நிறைவேறுவதற்காக எழும்புவார். தேவகுமாரன் மனுஷரூபமெடுப்பார். அவர் பிசாசின் கிரியைகளை அழித்துப்போடுவார். கர்த்தர் தம்முடைய ஜனத்திற்காக எழும்புவார். ""உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்தில் எழும்புவான்'' (தானி 12:1) என்று காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார்.
கிறிஸ்துவானவர் நமக்காகப் பாவமானார். அவர் நமக்காக சாபமானார். நம்முடைய பாவங்களினிமித்தமாக, நாம் தண்டனைகளை அனுபவிக்க வேண்டிய இடத்தில், நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து நமக்காக பலியானார். நம்முடைய சாபங்களை கிறிஸ்துவானவர் தம்மீது ஏற்றுக்கொண்டார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, தம்முடைய திருஇரத்தத்தை, நம்மை மீட்கும் கிரயமாகச் செலுத்தினார். நம்முடைய பாவங்களை நீக்குவதற்கு, கிறிஸ்துவானவர் பாவநிவாரண பலியாக தம்மையே ஒப்புக்கொடுத்தார்.
கிறிஸ்துவானவர் இந்தப் பூமியில் தோன்றும்போது, தம்முடைய ஜனத்திற்கு விரோதமாக தீங்கு செய்தவர்களைதண்டிப்பார். வேதனைகளையும், உபத்திரவங்களையும் அனுபவித்த தம்முடைய பிள்ளைகளுக்கு ஆறுதல் கொடுப்பார். இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே மனுஷனாக அவதரிக்கும் காலத்தில், யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல், அக்காலம் மட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும் (தானி 12:1).
இந்த ஆபத்துக்காலத்திலே எருசலேம் அழிக்கப்படும். கிறிஸ்துவானவர் இந்தக் காலத்தை மகாஉபத்திரவ காலம் என்று சொல்லுகிறார். ""ஏனெனில், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்'' (மத் 24:21).
இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே வரும் காலம் மகாநாளின் நியாயத்தீர்ப்பு நடைபெறும். இக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாக காணப்படுகிற ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் (தானி 12:1). ஜீவப்புஸ்தகத்திலே பெயர் எழுதப்படாதவர்கள் எரிகிற அக்கினியிலே தள்ளப்படுவார்கள். பெரிய அதிபதியாகிய மிகாவேல், மகாநாளின் நியாயத்தீர்ப்பின்போது, சத்துருக்களுக்கு விரோதமாக நியாயந்தீர்ப்பார்.
கிறிஸ்துவானவர் இந்தப் பூமியிலே மனுஷரூபமெடுத்து வரும்போது, தம்முடைய ஜனத்திற்கு இரட்சிப்பைக் கட்டளையிடுவார். இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வரும் காலத்திலே, அவருடைய ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். தங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள். சாத்தானுடைய ஆளுகையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அந்தியோகஸ் கொடுக்கும் கொடுமைகளிலிருந்தும், உபத்திரவங்களிலிருந்தும், அழிவிலிருந்தும், கர்த்தருடைய ஜனங்கள் விடுவிக்கப்படுவார்கள்.
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்துஎழுந்திருப்பார்கள் (தானி 12:2).
கர்த்தர் தம்முடைய ஜனத்தை, அவர்கள் அனுபவிக்கும் உபத்திரவங்களிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் விடுவிப்பார். இந்த விடுதலை கர்த்தருடைய ஜனங்களுக்கு உயிர்த்தெழுதலைப்போல இருக்கும். யூதர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து விடுதலை பெறுவது, அவர்களுக்கு விழித்தெழுந்திருப்பதைப் போலிருக்கும்(எசே 37-ஆவது அதிகாரம்). யூதர்கள் அந்தியோகசினுடைய கொடுமையிலிருந்து விடுதலை பெறுவது மரணத்திலிருந்து உயிர்பெறுவது போல இருக்கும்.
நம்முடைய பெரிய அதிபதியாகிய மிகாவேல் எழும்பும்போது அவருடைய சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும். அப்போது தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர், அந்த சுவிசேஷத்தினால் எழுந்திருப்பார்கள். தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் புதிய உணர்வையும், புதிய வல்லமையையும் பெற்றுக்கொள்வார்கள். எழுந்திருக்கிறவர்களில் அநேகர் யூதர்களாகவும், புறஜாதியாராகவும் இருப்பார்கள்.
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் நித்திய ஜீவனுக்கு எழுந்திருப்பார்கள். இயேசுகிறிஸ்துவையும், அவருடைய சுவிசேஷத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் நித்திய நிந்தைக்கும், இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள் (தானி 12:2).
காபிரியேல் இங்கு ""விழித்து எழுந்திருப்பார்கள்'' என்று சொல்லுவது கடைசி நாளில் நடைபெறும் பொதுவான உயிர்த்தெழுதலைக் குறிக்கலாம். அந்நாளிலே பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிற திரளான ஜனங்கள் எழுந்திருப்பார்கள்.
யூதர்களுக்கு உபத்திரவக்காலம் வந்தபோது ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்தினார்கள் அறிவாளிகளில் அநேகர் பட்டயத்தினாலும், அக்கினியினாலும், சிறையிருப்பினாலும், கொள்ளையினாலும் விழுந்தார்கள் (தானி 11:33).
உபத்திரவக்காலத்திலே தங்களுக்கு வந்த உபத்திரவங்களைப் பொருட்படுத்தாமல், அறிவாளிகள் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாய் ஜீவித்தார்கள். தங்கள் தேவனை அறிந்திருக்கிற இவர்கள் திடன்கொண்டு, அதற்கேற்றபடி ஜீவித்தார்கள். அறிவாளிகள் கர்த்தருடைய பிரமாணத்தை ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள்.
காபிரியேல் அறிவாளிகளை இங்கு ""ஞானவான்கள்'' என்று சொல்லுகிறார். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள் (தானி 12:3).
இவர்கள் கர்த்தருக்காக ஊழியம் செய்தாலும் இவர்களில் அநேகர் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் இரத்த சாட்சியாய் மரித்தார்கள். இவர்களில் பலர் சிறையிருப்புக்குட்படுத்தப்பட்டார்கள். இவர்களுக்கு துன்பங்களும் வேதனைகளும் வந்தாலும், இவர்கள் அநேகரை நீதிக்குட்படுத்தினார்கள். தமக்காக ஊழியம் செய்த இவர்களை கர்த்தர் கனம்பண்ணுகிறார்.
""சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன் (யாக் 5:19,20).
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள், தங்கள் சரீரத்தில் மரித்துப்போன பின்பு, அவர்கள் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள். நித்திய ஜீவன் இல்லையென்றால், நம்முடைய பிரயாசங்களெல்லாம் வீணாய்ப்போகும். நாம் இரத்த சாட்சியாக மரிப்பதினால் நமக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாது. நாம் மரித்தாலும் நித்திய ஜீவனுக்கு நேராக எழுந்திருப்போம் என்பதே நம்முடைய நம்பிக்கை.
நாம் இந்தப் பூமியில் ஜீவிக்கும் காலம் வரையிலும், பாவிகளை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வரவேண்டும். பாவிகள் மனந்திரும்புவதற்கு தேவையான ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லவேண்டும். அவர்கள் பாவிகளாகவே இருந்து மரித்துப்போனால், நித்திய நரகத்திலே பிரவேசிப்பார்கள். அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, மரித்துப்போனால் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள். அவர்களை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தினவர்களுக்கு, அவர்களுடைய மகிமையில் பங்கு கிடைக்கும்.
கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாய்ச் செய்கிறவர்களுக்கு இரட்டிப்பான நன்மை உண்டாகும். அவர்களுக்கு தங்களுடைய மகிமையும் கிடைக்கும். அவர்கள் யாரை நீதிக்குட்படுத்தினார்களோ, அவர்களுடைய மகிமையிலும் பங்கு கிடைக்கும்.
காபிரியேல் சொல்லுகிற தீர்க்கதரிசனங்களை தானியேல் முத்திரைபோட்டு மூடிவைக்கவேண்டும். ""தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்'' என்று காபிரியேல் சொல்லுகிறார் (தானி 12:4).
இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் இப்பொழுது புதைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகம் முத்திரைபோட்டு மூடப்பட்டிருக்கிறது. ஆனாலும் வருங்காலத்தில், இதன் புதைபொருள் வெளிப்படுத்தப்படும். அக்காலத்தில் அது அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கும். இந்த தீர்க்கதரிசனம் நிறைவேற அநேக நாள் செல்லும். ஆகையினால் இப்பொழுது இது புதைபொருளாக வைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
தானியேல் இந்தப் புஸ்தகத்தை பத்திரமாக வைத்திருக்கவேண்டும். விலையுயர்ந்த பொக்கிஷத்தைப் பாதுகாப்பதுபோல பாதுகாக்கவேண்டும். இனிமேல் வரப்போகிற சந்ததியாருக்காக இதைப் பாதுகாத்து வைத்திருக்கவேண்டும்.
தேவனுடைய காரியங்களில் பல இப்பொழுது நமக்கு மறைவான மறைபொருளாகயிருக்கலாம். ஆனாலும் ஏற்ற வேளை வரும்போது, கர்த்தர் தம்முடைய மறைபொருளை நமக்கு வெளிப்படுத்துவார். அப்போது நாம் வேதத்தின் இரகசியங்களை எளிமையாகப் புரிந்துகொள்வோம். வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் எல்லாமே நிறைவேறும். அவை நிறைவேறும்போது, அவற்றின் அர்த்தம் நமக்குத் தெளிவாகப் புரியும்.
1,44,000 யூதர்களும் ஆண்பிள்ளையாக விடுவிக்கப்படுவார்கள் (மாற்றப்படுவார்கள்). (வெளி 12:5) இதன் பின்பு இவர்கள் பரலோகத்தில் காணப்படுகிறார்கள்.
அக்காலத்தில் நடைபெறும் முக்கியமான சம்பவங்களின் விவரம்:
1. அக்காலத்தில் அந்திக்கிறிஸ்து சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான் (தானி 11:45; 2தெச 2:4; வெளி 13).
2. பெரிய அதிபதி எழும்புவான். சாத்தானையும், அவனுடைய தூதர்களையும் பூமியில் மனுஷர் மத்தியில் தள்ளிவிடுவான். (தானி 12:1; வெளி 12:7-12).
3. தானியேலின் எழுபதாவது வாரத்தின் நடுவில் மகா உபத்திரவக்காலம் ஆரம்பமாகும். இது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மூன்றரை வருஷங்களுக்கு முன்பு நடைபெறும். (தானி 12:1; தானி 8:24-25; தானி 9:27; எரே 30:6-7; மத் 24:15-22; வெளி 10:1-19:21).
4. அக்காலத்தில் தானியேலின் ஜனங்கள் அனைவரும் (1,44,000 பேர்) விடுவிக்கப் படுவார்கள் (மாற்றப்படுவார்கள் - இவர்களுடைய பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும். (தானி 12:1; ஏசா 66:7-8; வெளி 7:1-8; வெளி14:1-5) ஜீவபுஸ்தகத்தைப் பற்றிய விவரம் தானி 12:1; யாத் 32:32-33; சங் 56:8; சங் 69:28; லூக்கா 10:20; வெளி 3:5; வெளி 13:8; வெளி 20:12,15; வெளி 22:18-19 ஆகிய வசனங்களில் காணப்படுகிறது.
""ஆபத்துக்காலம்'' என்பது உபத்திரவக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தைப் பற்றிய விவரம் வருமாறு:
1. உபத்திரவம் வரும் காலமும், அதன் காலஅளவும்
2. உபத்திரவக்காலத்தின் பிரிவுகள்
3. உபத்திரவக்காலத்தின் நோக்கம்
4. உபத்திரவக்காலத்தின் தன்மை
5. உபத்திரவக்காலம் உலகம் முழுவதும் இருக்குமா
உபத்திரவம் வரும் காலமும், அதன் காலஅளவும்
தானியேலின் எழுபதாவது வாரம் ஆரம்பமாகும் முன்பு இஸ்ரவேலுக்கு உபத்திரவக்காலம் வரும். எவ்வளவு காலத்திற்கு முன்பு என்று உறுதியாகத் தெரியவில்லை. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அந்திக்கிறிஸ்து எழும்புவான். இஸ்ரவேல் தேசம் பிந்திய ரோமப்பேரரசின் பத்து ராஜ்யங்கள் மூலமாக உபத்திரவங்களை அனுபவிக்கும்.
அந்திக்கிறிஸ்து வரும்போது, அவன் இஸ்ரவேலோடு ஏழு வருஷ உடன்படிக்கையை உறுதிபண்ணுவான். அவர்கள் ஒரு தேசமாகத் தொடர்ந்து ஸ்தாபிக்கப் படுவதற்குப் பாதுகாப்பு தருவதாக அந்திக்கிறிஸ்து உறுதிகூறுவான். (தானி 9:27).
யூதர்கள் இரகசிய பாபிலோனுக்கு கீழ்ப்படியமாட்டார்கள். இதனால் யூதர்களுக்கு உபத்திரவம் உண்டாகும். இக்காலத்தில் யூதர்கள் எல்லா தேசத்தாராலும் வெறுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இது வருத்தங்களின் ஆரம்பகாலம். இக்காலத்தில் அந்திக்கிறிஸ்து எல்லா தேசங்களையும் கைப்பற்ற முயற்சி பண்ணுவான். (மத் 24:4-12).
தேசங்களைக் கைப்பற்றுவதற்கு அந்திக் கிறிஸ்துவிற்கு யூதருடைய பொருளாதார உதவி தேவைப்படும். இதற்காக அவன் யூதரோடு ஏழு வருஷ உடன்படிக்கை செய்து கொள்வான். ஆகையினால் உபத்திரவக்காலம் என்பது தானியேலின் எழுபதாவது வாரம் முழுவதுமே உபத்திரவமாக இருக்கும். (தானி 9:27). இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது உபத்திரவக்காலம் முடிவு பெறும். (மத் 24:29-31; வெளி 19:11-21).
உபத்திரவக்காலத்தின் பிரிவுகள்
உபத்திரவக்காலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவையாவன:
1. தானியேலின் எழுபதாவது வாரத்தில் முதல் மூன்றரை வருஷங்களில் முதலாவது பிரிவு வருகிறது. இக்காலத்தில் உபத்திரவம் குறைவாக இருக்கும். இரண்டாவது மூன்றரை வருஷத்தின் போது உபத்திரவம் மிகவும் அதிகமாக இருக்கும். முதலாவது காலத்தில் அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலுக்குப் பாதுகாப்பாக இருப்பான். முதல் மூன்றரை வருஷங்களில் இஸ்ரவேல் தேசத்தாரை இரகசிய பாபிலோனும், பத்து தேசத்தாரும் உபத்திரவப்படுத்துவார்கள். இந்தப் பிரிவின் மூலமாக வெளி 6:1-9:21 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் நிறைவேறுகிறது. ஆறாவது முத்திரையின் நியாயத்தீர்ப்புகளும், முதல் ஆறு எக்காளங்களின் நியாயத் தீர்ப்புகளும் இக்காலத்தில் நடைபெறும்.
2. தானியேலின் எழுபதாவது வாரத்தின் கடைசி மூன்றரை வருஷத்தில் உபத்திரவக் காலத்தின் இரண்டாவது பிரிவு வருகிறது. இது மகா உபத்திரவக்காலம் என அழைக்கப் படுகிறது. ஏனெனில் முதல் மூன்றரை வருஷங்களில் இருந்த உபத்திரவங்களை விட இந்த மூன்றரை வருஷங்களில் இஸ்ரவேல்மீது உபத்திரவம் அதிகமாக இருக்கும். முதல் மூன்றரை வருஷங்களுக்கு அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலுக்குப் பாதுகாப்பாக இருப்பான். இந்த வாரத்தின் நடுவில் அவன் இஸ்ரவேலோடு செய்துகொண்ட உடன்படிக்கையை முறித்துப் போடுவான். அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலுக்குச் சத்துருவாக மாறுவான். இஸ்ரவேலை அழிக்க முயற்சி பண்ணுவான். அந்திக் கிறிஸ்துவின் இந்தச் செய்கையினால் ஏழு கலசங்களின் நியாயத்தீர்ப்புகள் கடைசி மூன்றரை வருஷங்களில் உண்டாகும். இந்த உபத்திரவக் காலத்தில் வெளி 10:1-19:21 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் நிறைவேறும். இயேசு, தானியேல், எரேமியா ஆகியோர் இஸ்ரவேலுக்கு வரும் இந்த உபத்திரவத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். (தானி 12:1; எரே 30:4-11; மத் 24:21,22; வெளி 11:1,2; வெளி 12:14-17; வெளி 13:5-7).
உபத்திரவக்காலத்தின் நோக்கம்
1. இஸ்ரவேல் தேசத்தாரைச் சுத்திகரிப்பதற்கு. இஸ்ரவேல் கோத்திரத்தாரின் முற்பிதாக்களோடு கர்த்தர் செய்து கொண்ட நித்திய உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்காக. இஸ்ரவேல் தேசத்தாரை அவர்களுடைய சொந்த தேசத்திற்கு அழைத்து வருவதற்காக. (ஏசா 2:5-22; ஏசா 16:1-5)
2. இஸ்ரவேல் புத்திரரின் எல்லாக் கலகங்களையும் ஒடுக்கி, அவர்களைச் சுத்திகரிப்பதற்காக. (எசே 20:33,4; எசே 22:17:22; சக 13:8,9; மல் 3:3,4).
3. புதிய உடன்படிக்கைக்கு இஸ்ரவேல் புத்திரரை அழைத்து வருவதற்காக. (எசே 20:33,34; எசே 36:24-28; எரே 30:3-11; சக 12:10-13:9; மல் 4:3,4).
4. மேசியாவை மறுதலித்ததற்காக இஸ்ரவேல் புத்திரரை நியாயம் தீர்த்து, அவர்களைத் தண்டிப்பதற்காக. இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை இந்தப் பூமிக்கு வரும்போது இஸ்ரவேல் புத்திரர் அவரை மனப்பூர்வமாக அங்கிகரிப்பதற்காக. (எசே 20:33,34; சக 12:10-13:9; சக 14:1-15; மத் 24:15-31).
5. இஸ்ரவேல் தேசத்தை உபத்திரவப்படுத்திய தேசங்களை நியாயந்தீர்ப்பதற்காக. (ஏசா 63:1-6; யோவே 3; வெளி 6:1-19:21).
6. இஸ்ரவேல் தேசத்தாரை முழுமையாக மனந்திருந்த வைப்பதற்காக. (சக 12:10-13:9; ரோமர் 11:26-29; மத் 23:39).
7. தானி 9:24-27; வெளி 6:1-19:21; மத் 24:15,29 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதற்காக.
8. இஸ்ரவேல் தேசத்தாரை ஏதோம், மோவாப் ஆகியவற்றின் வனாந்தரங்களுக்குத் தப்பியோடச் செய்வதற்காக. இஸ்ரவேல் தேசத்தாருக்கு உபத்திரவம் அதிகரிப்பதினால் அவர்கள் உதவிக்காகக் கர்த்தரிடத்திற்குத் திரும்பி வருவார்கள். (ஏசா 16:1-5; எசே 20:33-35; தானி 11:40-12:7; ஓசி 2:14-17; மத் 24:15-31; வெளி 12).
உபத்திரவக்காலத்தின் தன்மை
மனுஷருடைய துன்மார்க்கத்திற்காகவும், நியாயக்கேட்டிற்காகவும் கர்த்தருடைய கோபம் மனுக்குலத்தின்மீது ஊற்றப்படுகிறது. நோவா, லோத்து ஆகியோரின் காலங்களைவிட ஜனங்கள் அதிகமாகப் பாவம் செய்கிறார்கள். (ஆதி 6; மத் 24:37-39; லூக்கா 17:22-37; 2தீமோ 3:1-12). தேவனுக்கும், பிசாசுக்கும் இடையில் நடைபெறும் கடைசி யுத்தத்தின்போது மனுஷருடைய துன்மார்க்கம் அதிகமாக இருக்கும். (வெளி 11:15; வெளி 12:7-12; வெளி 19:11-21; வெளி 20:1-3). ஜனங்கள் சத்தியத்தை மறுதலிப்பார்கள்.ஆகையினால் கர்த்தர் அந்திக்கிறிஸ்துவின் கொடிய வஞ்சகத்திற்கு ஜனங்களை ஒப்புக்கொடுப்பார். அந்திக்கிறிஸ்து ஜனங்களை மோசம் போக்குவான். அவர்கள் பொய்யை நம்புவார்கள். (2தெச 2:8-12; 2பேதுரு 3:1-9). கர்த்தர் மனுஷர்மீது தமது நியாயத்தீர்ப்புகளை அனுப்பிய பின்பும் அவர்கள் கர்த்தரை மறுதலிப்பார்கள். (வெளி 9:20,21; வெளி 6:2-11; வெளி 17:1-18; வெளி 18:1-24).
உபத்திரவக்காலம் உலகம் முழுவதும் இருக்குமா
அந்திக்கிறிஸ்து இந்த முழு உலகத்தையும் ஆளுகை செய்யமாட்டான். பழைய ரோமப் பேரரசின் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கியுள்ள பத்து ராஜ்யங்களை மட்டுமே ஆளுகை செய்வான். வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டிருக்கும் எக்காளங்களின் நியாயத் தீர்ப்புகளும், கலசங்களின் நியாயத்தீர்ப்புகளும் பூமியில் நான்கில் ஒரு பங்கின் மீதி மட்டுமே வரும். (வெளி 8:7-12; வெளி 9:12-21) மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள்மீதும், மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மீதும், அவனுடைய ராஜ்யத்தின்மீதும், கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வரும். (வெளி 16:2,10,12). பிசாசு தள்ளப்படும்போது அவனுடைய கோபம் எதுவரையிலும் பரவியிருக்கும் என்று வேதத்தில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. (வெளி 9:1-11; வெளி 12:7-12).
உபத்திரவம் என்பது பொதுவாக தேவனுடைய ஜனமாகிய யூதஜனங்களுடைய உபத்திரவத்தையே குறிக்கும். தானியேலின் எழுபதாவது வாரம் இஸ்ரவேல் தேசத்தையும், அவர்களுடைய நகரமாகிய எருசலேமையும் மட்டுமே குறிப்பிடுகிறது. இந்த வாரத்தின் கடைசிப் பகுதி யாக்கோபின் உபத்திரவக் காலமாக இருக்கும். ஆகையினால் இந்த உபத்திரவம் உலகம் முழுவதும் இராது.
மனுஷன் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறான். ஆகையினால் அவன் மரித்த பின்பு அவனுடைய சரீரம் மண்ணுக்குத் திரும்பிப் போகிறது. (ஆதி 2:7; ஆதி 3:19; பிர 3:19-21).
""சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.'' (தானி 12:2). இந்த வாக்கியத்தின் பிரகாரமாக இரண்டு உயிர்த்தெழுதல்கள் இருக்கும் என்பது தெரியவருகிறது. இவ்விரண்டு உயிர்த்தெழுதல்களுக்கும் இடையில் ஆயிரம் வருஷ இடைவெளி இருக்கும்.
உயிர்த்தெழுதல்கள்
உயிர்த்தெழுதல்கள் இரு வகைப்படும். அவையாவன: 1. ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் 2. சரீரத்திற்குரிய உயிர்த்தெழுதல்.
பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்த மனுஷன் தன்னுடைய பாவத்திற்கு மனந்திரும்பி, கர்த்தரிடத்தில் மன்னிப்பைப் பெற்றுக் கொண்டு புதிய ஜீவனைப் பெறுவது ஆவிக்குரிய உயிர்த்தெழுதலாகும். (1கொரி 11:7; எபே 4:21-24; கொலோ 3:10; 1யோவான் 3:9). இந்தச் சத்தியம் எபே 2:1-6; எபே 5:14; ரோமர் 6:11 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் இந்த ஜீவனில் மட்டுமே நடைபெற முடியும். சரீரம் மரித்தபின்பு ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் உண்டாகாது. ஒருவருக்குச் சரீர மரணம் வரும்போது, அதன் பின்பு அவருக்கு ஆவிக்குரிய உயிர்த்தெழுதல் உண்டாவதற்கு வாய்ப்பில்லை. (பிர 11:1; எபி 9:27; வெளி 22:11). சரீரத்திற்குரிய உயிர்த்தெழுதல் என்பது மனுஷருடைய சரீரத்திற்குரியது.
சரீரத்திற்குரிய உயிர்த்தெழுதல்
இந்த உயிர்த்தெழுதல் இரண்டு வகைப்படும். 1. நீதிமானின் உயிர்த்தெழுதல் 2. துன்மார்க்கரின் உயிர்த்தெழுதல். நீதிமானின் உயிர்த்தெழுதல் ஆயிரம் வருஷ அரசாட்சிக்கு முன்பு நடைபெறும். துன்மார்க்கரின் உயிர்த்தெழுதல் ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பின்பு நடைபெறும். (தானி 12:3; யோவான் 5:28-29; வெளி 10:4-6,11-15). இவ்விரண்டு உயிர்த்தெழுதல்களுக்கும் இடையில் ஆயிரம் வருஷம் இடைவெளி இருக்கும். (வெளி 20:4-6).
உயிர்த்தெழுதலுக்கு எடுத்துக்காட்டுகள்
1. தற்காலிக உயிர்த்தெழுதல் (மத் 9:25)
வேதாகமத்தில் பத்து இடங்களில் மரித்தோர் உயிரோடு எழுப்பப்பட்ட அற்புதங்களை நாம் வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து மரித்துப்போன மூவரை உயிரோடு எழுப்பினார். (மத் 9:25; லூக்கா 7:14; யோவான் 11) மற்றவர்கள் மரித்துப்போன மேலும் ஏழு பேரை உயிரோடு எழுப்பினார்கள். (1இராஜா 17:21; 2இராஜா 4:34; 2இராஜா 13:20-21; யோனா 2:1-10-மத் 12:40; அப் 9:40; அப் 14:20; அப் 20:10).
2. நிரந்தர உயிர்த்தெழுதல்
தங்கள் சரீரங்களில் உயிர்த்தெழுந்து நித்தியகாலமாக ஜீவிக்கிறவர்கள். நித்திய உயிர்த்தெழுதலுக்கு இயேசு கிறிஸ்து முதற்பலனானவராக இருக்கிறார். (1கொரி 15:1-23) இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் உயிரோடு எழும்பினார்கள். (மத் 27:53).
முதலாவது உயிர்த்தெழுதலில் எடுத்துக் கொள்ளப்படுகிறவர்கள்
1. கிறிஸ்துவும், அநேக பரிசுத்தவான்களும் - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர்கள் உயிர்த்தெழுவார்கள். (1கொரி 15:20,23; மத் 27:52-53; எபே 4:8-10).
2. அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (1கொரி 15:23,51-54; யோவான் 14:1-3) கிறிஸ்துவில் இருக்கிறவர்கள் மரித்தவர்களாக இருந்தாலும் ஜீவனுள்ளவர்களாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். கிறிஸ்துவில் இருக்கிற யாரும் இந்தப் பூமியில் கைவிடப்பட மாட்டார்கள். (1தெச 4:16-17).
3. தானியேலின் எழுபதாவது வாரத்தின் முதலாவது மூன்றரை வருஷத்தில் இரட்சிக்கப்பட்ட 144,000 யூதர்கள். (வெளி 7:1-8) இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு மூன்றரை வருஷத்தில் இது நிறைவேறும். (வெளி 12:5; வெளி 14:1-5; ஏசா 66:7-8; தானி 12:1).
4. சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு உபத்திரவக்காலத்தில் இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள். தானியேலின் எழுபதாவது வாரகாலம் முழுவதிலும் இரட்சிக்கப்பட்டவர்கள். (வெளி 6:1-19:21). இரத்தச்சாட்சியாக முதலாவது மரித்தவர்கள். (வெளி 6:9-11) சபை எடுத்துக் கொள்ளப்படும்போது தேவன் தம்முடைய பரிசுத்தவான்களை மத்திய ஆகாயத்திற்கு அழைத்துச் சென்று, ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்தில் பங்குபெறச் செய்வார். (வெளி 7:9-17; வெளி 15: 2-4; வெளி 19:1-21, வெளி 20:4-6; யூதா 1:14; சக 14:5).
சபை எடுத்துக் கொள்ளப்படுவதில் பங்கு பெறுவதற்கு நிபந்தனைகள்
1. இயேசுகிறிஸ்துவிற்குள் இருக்க வேண்டும். (1தெச 4:14,16; 2கொரி 5:17-18).
2. கிறிஸ்துவினுடையவர்களாக இருக்க வேண்டும். (1கொரி 15:23; கலா 5:24).
3. ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்தமானவர்களாகவும் இருக்க வேண்டும். (வெளி 20:4-6; எபி 12:14)
4. நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். (யோவான் 5:28-29).
5. பாத்திரராக இருக்க வேண்டும். (லூக்கா 21:36).
6. சபையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். (1கொரி 12:13; எபே 1:20-23; எபே 4:4-6; எபே 5:27; கொலோ 1:18,24)
7. சுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். (1யோவான் 3:2-3).
8. கறைதிரையற்றவர்களாக இருக்க வேண்டும். (எபே 5:27)
9. ஆவியில் ஜீவித்து நடக்க வேண்டும். (கலா 5:19-21).
10. வெளிச்சத்தில் நடக்க வேண்டும். (1யோவான் 1:7; கொலோ 2:6).
உயிர்த்தெழும் விதத்தைப் பற்றி அப்போஸ்தலர் பவுல் 1கொரி 15:35-50 ஆகிய வசனங்களில் விவரித்துக் கூறியிருக்கிறார். விதைக்கப்படும் விதை செத்து அதன் பின்பு முளைத்து மேனியைக் கொடுப்பதுபோல உயிர்த்தெழுதல் இருக்கும். மனுஷர் மரித்துப் போன பின்பு மறுபடியும் உயிரோடு எழும்புவார்கள்.
முதலாம் உயிர்த்தெழுதல்
ஆதாமின் காலத்திலிருந்து ஆயிரம் வருஷ அரசாட்சியின் காலம் வரையிலும் நீதிமான்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரிசுத்தவான்கள் ஆகியோர் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவார்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளிலிருந்து உபத்திரவக் காலத்து பரிசுத்தவான்கள் உயிர்த்தெழும் காலம்வரையிலும் முதலாம் உயிர்த்தெழுதலின் காலமாகும். இந்த உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறவர்கள் அனைவரும் கிறிஸ்துவோடு ஆளுகை செய்வார்கள். (வெளி 20:4-6). கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் இந்த உயிர்த்தெழுதலில் பங்குபெறுவார்கள். கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததுபோல கிறிஸ்துவிற்குள் மரித்தவர்களும் உயிர்த்தெழுவார்கள். கிறிஸ்துவிற்குள் மரித்த எல்லோருமே உயிர்த்தெழுவார்கள். ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பின்பு துன்மார்க்கர்கள் உயிர்த்தெழுவார்கள். அவர்கள் நியாயந் தீர்க்கப்படுவார்கள். எரியும் அக்கினியில் தள்ளப்படுவார்கள். (வெளி 20:4-6,11-15).
நீதிமானின் உயிர்த்தெழுதல்
1. முதலாம் உயிர்த்தெழுதல் (வெளி 20:4-6)
2. நீதிமானின் உயிர்த்தெழுதல் (லூக்கா 14:14)
3. ஜீவனை அடையும்படி உயிர்த்தெழுதல் (யோவான் 5:29)
4. மேன்மையான உயிர்த்தெழுதல் (எபி 11:35)
5. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் (பிலி 3:10-15)
இரண்டாம் உயிர்த்தெழுதல்
இது துன்மார்க்கரின் உயிர்த்தெழுதலாகும். ஆதாமின் காலத்திலிருந்து ஆயிரம் வருஷ அரசாட்சியின் முடிவு வரையிலுமுள்ள துன்மார்க்கர் இந்த உயிர்த்தெழுதலில் பங்குபெறுவார்கள். ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பின்பு இரண்டாம் உயிர்த்தெழுதல் நடைபெறும். ஆயிரம் வருஷ அரசாட்சியில் மரித்துப்போன துன்மார்க்கரும், இந்த உயிர்த்தெழுதலில் பங்குபெறுவார்கள். (வெளி 20:4-6,11-15). தங்கள் அழியாத சரீரத்தோடு எழுந்திருந்து இவர்கள் நரகத்தில் நித்திய ஆக்கினையை அனுபவிப்பார்கள்.
""முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு'' (தானி 12:4) என்னும் வாக்கியம், இந்தச் சம்பவங்களெல்லாம் கடைசி காலத்தில் நடைபெறும் என்பதை விவரிக்கிறது (தானி 2:28-29, 43-45).
மனுஷர் மத்தியிலே அறிவு பெருகியிருக்கிறது. இன்னும் தொடர்ந்து பெருகிக் கொண்டு வருகிறது. மனுஷன் புதிய புதிய காரியங்களையெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறான் (தானி 12:4).
இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் தானி 12:5-7
தானி 12:5. அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன்.
தானி 12:6. சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.
தானி 12:7. அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக்கேட்டேன்.
தானியேல் பல ராஜ்யங்களை தன்னுடைய தரிசனத்திலே கண்டார். இந்த ராஜ்யங்களின்மீது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நடப்பித்த கிரியைகளையும் தானியேல் தன்னுடைய தரிசனத்திலே பார்த்தார். கர்த்தருடைய ஜனத்திற்கு மிகுந்த உபத்திரவக்காலம் வரும் என்பதையும் அறிந்துகொள்கிறார். இதன் முடிவு எப்பொழுது வரும் என்றும், இதன் முடிவு எப்படியிருக்கும் என்றும் தானியேல் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறார்.
தானியேல் ஊலாய் நதியின் கரையில் நின்றுகொண்டிருக்கிறார். அப்பொழுது ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கிறதை தானியேல் காண்கிறார் (தானி 12:5). இவர்கள் இருவர் தவிர மேலும் ஒருவர், சணல் வஸ்திரம் தரித்து ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறார் (தானி 12:6).
தானியேல் இதுவரையிலும் காபிரியேலோடு பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது அந்த ஆற்றின் கரையில் தானியேல் இரண்டு தூதர்களைப் பார்க்கிறார். தானியேல் இவர்கள் இருவரையும் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இவர்கள் இருவரும் ஆற்றின் கரையிலிருக்கிறார்கள். ஒருவர் ஆற்றுக்கு இக்கரையிலும், மற்றொருவர் ஆற்றுக்கு அக்கரையிலும் இருக்கிறார்கள். இவ்விரண்டு துதர்கள் தவிர, இயேசுகிறிஸ்து ஆற்றின் தண்ணீர்களின் மேல் நிற்கிறார்.
தானியேல் இம்மூன்றுபேரையும் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அவர்கள் இப்போது தங்களுக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். அப்பொழுது தானியேல் தன் கண்களை ஏறெடுத்து அவர்களைப் பார்க்கிறார்.
சணல் வஸ்திரம் தரித்தவரைப்பற்றி ஏற்கெனவே தானியேல் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
""என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்ன-ன் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது'' (தானி 10:5,6).
சணல் வஸ்திரம் ஆசாரியருடைய வஸ்திரம். கிறிஸ்துவானவர் நம்முடைய மகாபிரதான ஆசாரியராயிருக்கிறார். அவர் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறார். ஆற்றின் கரையில் நிற்கிற இரண்டு தேவதூதர்களில் ஒருவர், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவரிடத்தில், ""இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவு காலம் செல்லும்'' என்று கேட்கிறார் (தானி 12:6).
கர்த்தருடைய ஜனங்கள் இப்போது மிகுந்த வேதனைகளையும் உபத்திரவங்களையும் அனுபவித்து வருகிறார்கள். கர்த்தருடைய ஜனத்திற்கு உபத்திரவக்காலம் எப்பொழுது முடியும் என்று தேவதூதன் இயேசுகிறிஸ்துவிடம் கேட்கிறார். தன்னிடத்தில் கேள்வி கேட்ட தூதனுக்கு, கிறிஸ்துவானவர் ""ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும்'' (தானி 12:7) என்று பொதுவான பதிலைச் சொல்லுகிறார்.
இந்த வாக்கியத்திற்கு, ""ஒரு வருஷமும், இரண்டு வருஷங்களும், அரைவருஷமும் செல்லும்'' என்று பொருள். அதாவது மொத்தம் ""மூன்றரை வருஷங்கள் செல்லும்'' என்று பொருள் சொல்லலாம்.
""உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்'' (தானி 7:25).
""ஒரு காலமும் காலங்களும் அரைக்காலமும்'' என்னும் வாக்கியத்திற்கு வேதபண்டிதர்கள் வெவ்வேறு விளக்கங்களைச் சொல்லுகிறார்கள். இந்த வாக்கியம் நித்திய காலத்தைக் குறிக்கும் என்று ஒரு சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள். வேறு சிலரோ, ""நிச்சயமில்லாத காலத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிற ஒரு காலம்'' என்றும் பொருள் சொல்லுகிறார்கள். இந்த வாக்கியத்திற்கு ""ஒரு குறிப்பிட்ட காலம்'' என்றும் பொருள் சொல்லலாம்.
""ஒரு நீண்ட காலத்தில், இது ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கும்'' என்றும் இந்த வாக்கியத்திற்கு ஒரு வியாக்கியானம் உள்ளது. இயேசுகிறிஸ்து, ""ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும்'' என்று சொல்லுகிறார். அரைக்காலம் என்பது, உபத்திரவம் ஒரு முழுக்காலம் வரையிலும் இருந்த பின்பு, அது இன்னும் ஒரு அரைக்காலம் வரையிலும் இருக்குமோ என்னும் பயமுண்டாகும்.
வெளிப்படுத்தின விசேஷத்திலும் இந்தக் காலத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒருவேளை மூன்றரை நாட்களாகயிருக்கலாம் அல்லது மூன்றரை வருஷங்களாகயிருக்கலாம். மூன்றரை வருஷங்கள் என்பது நாற்பத்திரண்டு மாதங்களைக் குறிக்கும். அல்லது இது 1,260 நாட்களைக் குறிக்கும்.
தானியேல் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவரைப் பார்க்கிறார். அவர் சணல் வஸ்திரம் தரித்திருக்கிறார். அவருடைய இரண்டு கால்களும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் இருக்கிறது. அவர் தம்முடைய வலது கரத்தையும், தம்முடைய இடது கரத்தையும் வானத்திற்கு நேராக ஏறெடுக்கிறார்.
கர்த்தருடைய ஜனங்கள் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும்போது, அந்த துன்பத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக கர்த்தர் வருகிறார். தங்களால் இனிமேல் வேதனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாது என்னும் சூழ்நிலையில் விசுவாசிகள் கஷ்டப்படும்போது, கர்த்தர் அவர்களை அந்த வேதனையிலிருந்து தப்புவிப்பதற்காக வருகிறார்.
ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கை கர்த்தருடைய பர்வதத்திலே பலியிடுவதற்காகப் போனார். அவர் தன்னுடைய குமாரனை பலியிடப்போகும் வேளையிலே, கர்த்தர் அவரைச் சந்தித்தார். ஈசாக்கைத் தப்புவித்தார்.
கர்த்தருடைய ஜனம் மிகுந்த வேதனைகளையும், உபத்திரவங்களையும் அனுபவிப்பார்கள். இதற்குமேல் தங்களால் வேதனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாது என்னும் நிலமைக்கு அவர்கள் வருவார்கள். அப்போது கர்த்தர் நிச்சயமாகவே தம்முடைய ஜனத்தை, அவர்களுடைய வேதனைகளிலிருந்து விடுவிப்பார்.
அந்தியோகஸ் எருசலேமுக்கு விரோதமாக திடீரென்று வந்தான். எருசலேமின் குடிகள் எதிர்பாராத வேளையிலே, அந்தியோகஸ் எருசலேமுக்குள் பிரவேசித்து, அதை தன் வசமாக்கிக்கொண்டான். அவன் எருசலேமை மூன்று வருஷங்களும், ஆறு மாதங்களும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அதன் பின்பு மக்கபியர்கள் அந்தியோகசுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அவனையும், அவனுடைய சேனையையும், எருசலேமிலிருந்து துரத்திவிட்டார்கள்.
இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே மூன்றரை வருஷங்கள் ஊழியம் செய்தார். வேதபாரகர்களும், சதுசேயரும், பரிசேயரும், பாவிகளும் இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக எதிர்த்து நின்றார்கள். அவருக்கு விரோதமாகக் குற்றம் சொன்னார்கள். கிறிஸ்துவானவரோ அவர்களுடைய குற்றச்சாட்டுக்களுக்கெல்லாம் நீதியான பதிலைச் சொன்னார். அவர் எளிமையாக வாழ்ந்தார். ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை அவமானப்படுத்தினார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையிலே மரித்தபோது, அவருடைய சத்துருக்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். கிறிஸ்துவானவரோ தமக்கு கிடைத்த வெற்றியை உறுதிபண்ணும் விதமாய் ""எல்லாம் முடிந்தது'' என்று சொல்லி, கல்வாரி சிலுவையிலே தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார்.
இயேசுகிறிஸ்து, ""ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும்'' என்று சொன்ன வாக்கியம், இந்த உலகத்தில் அவர் ஊழியம் செய்த மூன்றரை வருஷகாலத்தைக் குறிக்கும் என்று வேதபண்டிதர்களில் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள்.
இயேசுகிறிஸ்து இந்தக் காலத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீரும்'' (தானி 12:7) என்றும் சொல்லுகிறார். கிறிஸ்துவானவர் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிட்டுச் சொல்லுகிறார்.
கிறிஸ்துவானவர் தானியேலுக்கு இனிமேல் வரப்போகும் சம்பவங்களைப்பற்றிச் சொல்லுகிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு உபத்திரவக்காலம் வரும். அது சீக்கிரத்தில் முடிவு பெறாது. கிறிஸ்துவானவர் உபத்திரவக்காலம் எப்போது வரும் என்பதையும் தானியேலுக்கு விவரிக்கிறார்.
""அன்றாடப- நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும்'' (தானி 12:11) என்று கிறிஸ்துவானவர் தானியேலுக்கு சொல்லுகிறார்.
அந்தியோகஸ் கர்த்தருடைய ஆலயத்திலே அன்றாட பலியை நீக்கிப்போடுவான். தேவாலயத்திலே யூப்பித்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டியெழுப்புவான். இந்தப் பலிபீடம் ""பாழாக்கும் அருவருப்பு'' என்று அழைக்கப்படுகிறது. கர்த்தருடைய ஜனத்திற்கு 1,290 நாட்களுக்கு உபத்திரவக்காலம் இருக்கும். இந்தக் காலத்தை வேதபண்டிதர்கள் ""மூன்று வருஷங்களும் ஏழுமாதங்களும்'' என்று கணக்கு சொல்லுகிறார்கள். வேறு சிலரோ, இந்த நாட்களைப்பற்றி கணக்கு சொல்லும்போது, ""மூன்றுவருஷங்களும் ஆறுமாதங்களும், பதினைந்து நாட்களும்'' என்று கணக்கு சொல்லுகிறார்கள். அதன் பின்பு கர்த்தருடைய ஆலயத்திலே மறுபடியும் அன்றாட பலி செலுத்தப்படும். கர்த்தருடைய ஆலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற பாழாக்கும் அருவருப்பு வெளியேற்றப்படும்.
வேதபண்டிதர்களும், சரித்திர ஆசிரியர்களும், இந்தக் காலத்தை கணக்கிட்டுச் சொல்லுகிறார்கள். செலூக்கியரின் 145-ஆவது வருஷத்து ஆட்சியின்போது உபத்திரவக்காலம் துவங்கும் என்றும், அது அவர்களுடைய 148-ஆவது வருஷத்து ஆட்சியின்போது முடிவு பெறும் என்றும் கணக்கு சொல்லுகிறார்கள்.
இந்த வெளிப்படுத்துதல் மூலமாய் நமக்கு ஒரு சத்தியம் தெளிவுபடுத்தப்படுகிறது. சபைக்கு உபத்திரவக்காலம் வரும். அந்த உபத்திரவம் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மாத்திரமே இருக்கும். அதன்பின்பு உபத்திரவம் இருக்காது. கர்த்தருடைய ஜனத்திற்கு உபத்திரவத்திலிருந்து விடுதலை உண்டாகும்.
கர்த்தருடைய ஜனம் உபத்திரவங்களை அனுபவிக்கும்போது, அவர்கள் விசுவாசத்தோடும், நீடிய பொறுமையோடும், கர்த்தருடைய நாள் வருவதற்காக காத்திருக்கவேண்டும். தங்களுடைய விடுதலையின் காலத்திற்காக விசுவாசிகள் பொறுமையோடு, விசுவாசத்தோடு காத்திருக்கவேண்டும்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உபத்திரவக்காலம் முடிவு பெறும்போது, கர்த்தர் தமது கிருபையினால், அவர்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சணல் வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின் மேல் நிற்கிறவரும் ""தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுக்கிறார்கள்'' (தானி 12:7). இந்தச் செய்கை வெளி 10:1-6 ஆகிய வசனங்களில் தூதருடைய (கிறிஸ்து) செய்கை போன்றுள்ளது. இது தானியேலின் எழுபதாவது வாரத்தின் கடைசி மூன்றரை வருஷத்தோடு தொடர்புடையது. (தானி 12:7; தானி 7:25; வெளி 11:1-3; வெளி 12:6,14; வெளி 13:5). இக்காலத்தில் தரிசனம் நிறைவு பெறும். காலத்தின் முடிவு வரும்.
பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீரும் (தானி 12:7). அந்திக்கிறிஸ்து யூதருடைய ராஜ்யத்தை அழிக்கமாட்டான். அவன் யூதர்களைச் சிதறடிப்பான். அவர்களுடைய வல்லமையை முறித்துப்போடுவான். இதன் பின்பு, யூதர்கள் நித்தியமாகக் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். (தானி 9:24; எசே 37; ரோமர் 11:25).
தானி 12 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் காலங்கள்
1. ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் - மூன்றரை வருஷங்கள். (தானி 12:7) இஸ்ரவேல்மீது அந்திக் கிறிஸ்து யுத்தம் பண்ணும் 42 மாதங்களை இக்காலம் குறிப்பிடுகிறது. தேசத்தில் எல்லாக் கலகங்களையும் அடக்குவதற்கு முன், இந்த யுத்தம் நடைபெறும். (எசே 20:33-38; சக 13:9; மல் 3:3).
குறுகிய காலத்தில் அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலை எளிதாக அழித்துப் போடுவான். அவர்களோடு தான் உறுதிபண்ணிய உடன்படிக்கையை அந்திக் கிறிஸ்து முறித்துப் போடுவான். கர்த்தர் இந்தச் சமயத்தில் இடைப்படா விட்டால் அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலை முழுமையாக அழித்துப்போடுவான். கர்த்தர் அற்புதமாக இந்தச் சமயத்தில் கிரியை நடப்பிப்பார்.
இஸ்ரவேல் தேசத்தார் அந்திக் கிறிஸ்துவின் கைகளிலிருந்து தப்பி, மோவாபின் வனாந்தரத்திற்கும், ஏதோமின் வனாந்தரத்திற்கும் ஓடிப்போய் விடுவார்கள். அந்திக்கிறிஸ்துவின் சேனை அவர்களைத் துரத்திச் செல்லுவார்கள். கர்த்தர் பூமியைப் பிளக்கச் செய்வார். அந்தப் பாதாளத்திற்குள் அந்திக் கிறிஸ்துவின் சேனைகள் விழுங்கப்படும். (தானி 11:41; ஏசா 16:1-5; மத் 24:16; வெளி 12:14-17)
வனாந்தரத்திற்கு ஓடிப்போகாத ஸ்திரீயின் மீதியானவர்களைக் கர்த்தர் பாதுகாப்பார். அந்திக்கிறிஸ்துவிற்கு எதிராக வடக்கிலும், கிழக்கிலுமுள்ள தேசங்களைக் கர்த்தர் எழுப்பி விடுவார்.
கடைசி மூன்றரை வருஷங்களில் அந்திக் கிறிஸ்து ஸ்திரீயின் மீதியானவர்களை விட்டுவிட்டு, வடக்கிலும், கிழக்கிலுமுள்ள தேசங்கள்மீது யுத்தம் பண்ணுவதற்காகப் புறப்பட்டுப்போவான். இக்காலத்தில் இந்த யுத்தம் முழுமையாக நடைபெறும். அந்திக்கிறிஸ்து இந்தத் தேசங்களை ஜெயிப்பான். அதன் பின்பு, எருசலேமை அழிப்பதற்காகப் பல தேசங்களைக் கூட்டிச் சேர்த்து, எருசலேமிற்கு விரோதமாக வருவான். இந்தச் சமயத்தில் கர்த்தர் வருவார். புறஜாதி ராஜ்யத்தின் ஆளுகையை முடிவுக்குக் கொண்டுவந்து, இஸ்ரவேலை விடுவிப்பார். (சக 14; வெளி 19). அந்திக்கிறிஸ்துவிற்கும், வடக்கு, கிழக்கு திசைகளிலுள்ள தேசங்களுக்கும் யுத்தம் நடைபெறுவதினால் இஸ்ரவேல் தேசத்தார்மீது நியமிக்கப்பட்டிருக்கும் உபத்திரவம் குறைந்துபோகும். (மத் 24:22)
2. இந்தக் காலத்தில் மேலே கூறப்பட்டிருக்கும் காலமாகிய 1,260 (தானி 12:11) நாட்களோடு கூடுதலாக 30 நாட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
3. கடைசிக் காலம் 1,335 நாட்களாகும். இதில் இரண்டாவது காலத்தோடு 45 நாட்கள் கூட்டப்பட்டிருக்கிறது. தானி 12:7-13 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் 1335 நாட்கள் இக்காலத்தில் நிறைவு பெறுகிறது. தானி 12:11 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் 1260 நாட்களோடு 30 நாட்களும், மேலும் 45 நாட்களும் சேர்ந்து இக்காலத்தில் மொத்தம் 1335 நாட்கள் ஆகின்றன. 1,335 நாட்களுடைய காலத்தின் கடைசி நாளில் ராஜ்யத்தைப் பற்றி அறிவிக்கப்படும். உபத்திரவக்காலத்தின் வழியாக ஜீவித்த மனுஷர் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அப்போது இயேசு கிறிஸ்து ""வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்'' (மத் 25:34). என்று ஆட்டுக்குட்டியின் தேசங்களிடத்தில் கூறுவார்.
1260 நாட்களோடு கூடுதலாகச் சேர்க்கப்படும் 75 நாட்களில் பல முக்கியமான சம்பவங்கள் நடைபெறும். ராஜ்யத்தை அறிவிப்பதற்கு இந்தச் சம்பவங்களெல்லாம் நடைபெற வேண்டும்.
75 நாட்களில் நடைபெறும் சம்பவங்கள்
1. அர்மெகதோன் யுத்தம் (யோவே 3; சக 14; வெளி 19:11-21)
2. மரித்தவர்களை அடக்கம் பண்ணுவது ஆரம்பம். (எசே 39:8-22)
3. மகா பூமியதிர்ச்சியும், ஒலிவமலை பிளந்து போவதும். (சக 14:1-5)
4. அந்திக்கிறிஸ்துவின் சேனை சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்படுவது. (எசே 39:2)
5. சாத்தானும், பிசாசுகளும், விழுந்த தூதர்களும் சுற்றி வளைக்கப்பட்டு பாதாளத்தில் தள்ளப்படுவது. (ஏசா 24:21-22; வெளி 20:1-3)
6. தேவதூதர்கள் இஸ்ரவேல் ஜனத்தாரைக் கூட்டிச்சேர்ப்பது. (ஏசா 11:10-12; மத் 24:31)
7. நியாயத்தீர்ப்பிற்குத் தேசங்களைக் கூட்டிச் சேர்ப்பது. (மத் 25:31-46)
8. களைகளையும், கோதுமையையும் வேறுபிரிப்பது. (மத் 13:39-50)
9. எருசலேமைச் சுத்திகரிப்பதும், நித்திய ராஜ்யத்திற்காக மறுபடியும் கட்டுவதை ஆரம்பிப்பதும். (எசே 48)
10. மிருகங்களை ஆராதிப்பவர்களையும், மிருகத்தின் அடையாளத்தைத் தரித்திருப்பவர்களையும் நரகத்திற்கு அனுப்புவதற்காகக் கூட்டிச் சேர்ப்பது. (வெளி 14:9-11)
11. ஆயிரம் வருஷத்து தேவாலயம் ஸ்தாபிக்கப்படுவது. (எசே 40-46; சக 6:12-13)
12. பூமியை ஆளுகை செய்வதற்காக உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களைப் புதிய பூமிக்கு அனுப்பி பூமியைச் சுதந்தரிக்கப் பண்ணுவது. (தானி 7:18,27; 1கொரி 6:2; வெளி 5:10; வெளி 11:15; வெளி 22:4-5)
13. தேசங்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக எருசலேமிலிருந்து மிஷினெரிகளை அனுப்புவது. (ஏசா 2:2-4; ஏசா 11:9; ஏசா 52:7; சக 8:23)
14. பூமியின் எல்லாப் பாகத்திலும் அலுவலகங்களை ஸ்தாபித்து, பூமியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் பரலோக ராஜ்யத்தில் புதிய பிரமாணங்களை அறிவிப்பது. (ஏசா 2:2-4)
15. வாக்குத்தத்த தேசத்தை 12 பிரிவுகளாகப் பிரித்து 12 கோத்திரத்தாரையும் அவர்களுடைய பங்குவீதங்களில் குடியிருக்கச் செய்வது. (எசே 48)
16. பூமியிலுள்ள அவர்களுடைய சொந்த பங்கு வீதங்களில் தேசங்களைக் குடியமர்த்துவது. (உபா 32:8; அப் 17:26)
17. பூமியைத் திறந்து, ஆயிரம் வருஷத்து நதியைப் பாயச்செய்வது. (எசே 47)
18. ஆயிரம் வருஷத்து அரசாட்சியில் காணப்படும் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் செய்ய வேண்டிய எல்லாக் காரியங்களையும் செய்வது.
இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் தானி 12:8-13
தானி 12:8. நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
தானி 12:9. அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
தானி 12:10. அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.
தானி 12:11. அன்றாடப- நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும்.
தானி 12:12. ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
தானி 12:13. நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.
கிறிஸ்து ஆணையிடுவதை தானியேல் தன்னுடைய செவிகளால் கேட்கிறார். தானியேல் அந்த வார்த்தையைக் கேட்டும், அதன் பொருளை அவர் அறியவில்லை. ஆகையால் தானியேல், ""என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும்'' (தானி 12:8) என்று கேட்கிறார்.
கிறிஸ்து சொன்னதை தானியேல் கேட்கிறார். ஆனால் அதன் பொருளை அவர் அறியவில்லை. ஆகையினால் தானியேல் கிறிஸ்துவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். தானியேல் காபிரியேலினிடத்திலோ அல்லதுகிறிஸ்துவினிடத்தில் பேசிக்கொண்டிருக்கிற தேவதூதனிடத்திலோ இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. தானியேல் இந்தக் கேள்வியை கிறிஸ்துவிடம் நேரடியாகவே கேட்கிறார்.
நாம் இந்த உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். இந்த உலகத்திற்கு மத்தியிலே சபையின் கிரியைகளையும் பார்க்கிறோம். உலகப்பிரகாரமான காரியங்களை பார்க்கும்போது நம்முடைய விசுவாசம் சோர்ந்துபோகும். மனுஷர் மத்தியிலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற தேவனுடைய ராஜ்யம் அழிந்துபோகுமோ என்னும் பயம் நமக்கு வந்துவிடும்.
இந்த உலகத்தில் நீதிமான்கள் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். துன்மார்க்கரோ செழித்திருக்கிறார்கள். கர்த்தரிடத்தில் பக்தியில்லாதவர்கள் சவுக்கியமாயிருக்கிறார்கள். விசுவாசிகளுக்கு ஏராளமான பிரச்சனைகளும், பாடுகளும் வருகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நாம் சோர்ந்துபோய், ""என் ஆண்டவனே இவைகளின் முடிவு என்னமாயிருக்கும்'' என்று தானியேலைப்போல நாமும் கர்த்தரிடத்தில் கேட்கிறோம்.
கிறிஸ்துவானவர் தானியேலிடம், ""தானியேலே போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்'' (தானி 12:9) என்று பதில் சொல்லி அனுப்பிவிடுகிறார். தானியேல் எல்லா இரகசியங்களையும் அறிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆவலில் இருக்கிறார். கர்த்தரோ அவருக்கு ஒரு குறிப்பிட்ட இரகசியத்தை மாத்திரம் வெளிப்படுத்துகிறார். தானியேல் தனக்கு சொல்லப்பட்ட வெளிப்பாடுகளில் திருப்தியடையவேண்டும். கர்த்தர் தனக்கு சொன்ன வார்த்தைகளினால், தானியேல் தன்னை கர்த்தருக்குள் பெலப்படுத்திக்கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்போதுதான், அதன் முழுமையான அர்த்தம் நமக்கு புரியும். இந்த உலகம் இருக்கும் வரையிலும், இங்கு நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள்.
கிறிஸ்துவானவர் தானியேலிடம் ""அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்'' (தானி 12:10) என்று சொல்லுகிறார்.
கெட்ட மரங்கள் நல்ல பழங்களைக் கொடுக்காது. துன்மார்க்கர் துன்மார்க்கமாய் நடப்பார்கள். துன்மார்க்கரிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியாது. துன்மார்க்கர் சத்தியத்தை உணரவும் மாட்டார்கள். அவர்கள் வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாதபடிக்கு தங்கள் கண்களை மூடிக்கொள்கிறார்கள். இவர்கள் கண்களிருந்தும் குருடர்களாகயிருக்கிறார்கள்.
ஒரு சிலர் அறியாமல் பாவம் செய்கிறார்கள். துன்மார்க்கரோ அறிந்தும் துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள். இவர்கள் சத்தியத்தையும், வெளிச்சத்தையும் வெறுக்கிறார்கள்.
""ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது'' (யோவா 3:19).
இந்த உலகம் மோசமாகயிருந்தாலும், கர்த்தர் இந்த உலகத்தில் தமக்கென்று மீதியானவர்களை வைத்திருக்கிறார். இவர்கள் நீதிமான்கள். கர்த்தருடைய ஞானவான்கள். இவர்கள் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டவர்கள். இவர்கள் கர்த்தரால் புடமிடப்பட்டவர்கள்.
""அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்'' (தானி 11:35).
கர்த்தருடைய வார்த்தை நீதிமான்களைப் புடமிடும். துன்மார்க்கரோ கர்த்தருடைய வார்த்தையை உணரமாட்டார்கள். ஞானவான்களோ அதை உணர்ந்துகொள்வார்கள். கர்த்தருடைய தெய்வீக பிரமாணமும், அவருடைய அன்பும் ஞானவான்களை ஆளுகை செய்யும். அவர்கள் தேவனுடைய வெளிச்சத்தில் பிரகாசமாயிருப்பார்கள்.
""அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்'' (யோவா 7:17).
நேரமும் நாட்களும் முடிந்துபோகும். நம்முடைய நேரங்களும், நம்முடைய நாட்களும் சீக்கிரத்தில் முடிந்துபோகும். அதேவேளையில் எல்லா நேரங்களும், எல்லா நாட்களும் முடிவிலே முடிந்துபோகும். ""ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்'' (தானி 12:12) என்று கிறிஸ்துவானவர் தானியேலுக்கு சொல்லுகிறார்.
கிறிஸ்துவானவரின் வார்த்தை தானியேலுக்கு ஆறுதலாயிருக்கிறது. அவருக்கு மாத்திரமல்ல, எல்லா பரிசுத்தவான்களுக்கும் இந்த வார்த்தை ஆறுதலைக் கொடுக்கிறது. கிறிஸ்துவானவர் தானியேலிடம் ""நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்'' (தானி 12:13) என்று சொல்லுகிறார்.
தானியேல் விசுவாசத்தோடு கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கவேண்டும். நம்முடைய நாட்களின் முடிவிலே, கர்த்தர் நம்முடைய சுதந்தரவீதத்திற்கு, நம்மை எழுப்புவார் என்று விசுவாசிக்கவேண்டும். நாம் நித்திய இளைப்பாறுதலில் பிரவேசிப்போம் என்று எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும். நாம் பரமகானானுக்குள் பிரவேசிப்போம் என்னும் நம்பிக்கையோடு, இந்தப் பூமியிலே பொறுமையோடு காத்திருக்கவேண்டும். நாம் மரிக்கும் தருவாயில், இந்த நம்பிக்கையே நமக்கு ஜீவனுள்ள ஆறுதலைத் தரும்.
தானியேலுக்குக் கூறப்பட்டிருக்கும் பதிலுரை
1. நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு (தானி 12:13).
2. முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வை. (தானி 12:4).
3. அநேகர் சுத்தமாக விளங்குவார்கள்.
4. அநேகர் வெண்மையாக்கப்பட்டு விளங்குவார்கள்.
5. அநேகர் புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்.
6. துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்;.
7. துன்மார்க்கரில் ஒருவனும் இந்தத் தரிசனத்தை உணரான், ஞானவான்களோ உணர்ந்து கொள்ளுவார்கள். (தானி 12:10).
8. இவ்வேளையிலிருந்து அன்றாடப- நீக்கப்படும். (தானி 12:11; தானி 8:9-14; தானி 9:27) பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படும் மூன்றுகாலங்கள்.
(1) 1,260 நாட்கள் (தானி 12:7)
(2) 1,290 நாட்கள் (தானி 12:11)
(3) 1,335 நாட்கள் (தானி 12:12).
9. ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான். (தானி 12:12).
10. நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே (1,335 நாட்கள்) உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் (தானி 12:13).
""நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்'' (தானி 12:13) என்று தானியேலுக்கு சொல்லப்படுகிறது. தானியேல் உயிர்த்தெழுந்த பின்பு, அவருக்கும் இந்தச் சிலாக்கியங்களில் பங்கு இருக்கும். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இந்த உலகத்தை நியாயந்தீர்த்து, கிறிஸ்துவோடு நித்திய காலமாக இந்தப் பூமியை ஆளுகை செய்வார்கள். (தானி 2:44-45)
