12 அதிகாரம்

12 அதிகாரம்

கர்த்தர் ஆபிராமை கானான் தேசத்திற்குப் போகுமாறு அழைக்கிறார் (ஆதி 12:1#3). ஆபிராம் கர்த்தருடைய அழைப்புக்கு கீழ்ப்படிகிறார் (ஆதி 12:4,5). கானான் தேசத்திலே ஆபிராம் (ஆதி 12:6#9).

ஆபிராம் கானான் தேசத்திலிருந்து எகிப்து தேசத்திற்கு பிரயாணம்பண்ணுகிறார். எகிப்து தேசத்தில் நடைபெற்ற சம்பவங்கள் (ஆதி 12:10#13). எகிப்திலே சாராயிக்கு வந்த ஆபத்தும், அதிலிருந்து அவள் மீட்கப்படுவதும் (ஆதி 12:14#20).

நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ

ஆதி 12:1#3

ஆதி 12:1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

ஆதி 12:2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

ஆதி 12:3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ஆபிராம் தன்னுடைய சொந்த தேசத்திலிருந்து வாக்குத்தத்த தேசத்திற்கு போகவேண்டும். கர்த்தர் ஆபிராமின் விசுவாசத்தை சோதிக்க ƒவிரும்புகிறார். ஆபிராம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவேண்டும். ஆபிராம் கர்த்தருடைய விசேஷித்த ஊழியத்தை செய்வதற்காக, அவர் தன்னை கர்த்தருக்காக வேறு பிரித்துக்கொள்ளவேண்டும்.

ஸ்தேவான் பிரதான ஆசாரியனிடம் ஆபிரகாமைப்பற்றியும், கர்த்தர் கானான் தேசத்திற்கு அவரை அழைத்த சம்பவம் பற்றியும் சொல்லும்போது, ""மகிமையின் தேவன் அவருக்கு தரிசனமானார்'' என்று சொல்லுகிறார்.

""அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமானார்'' (அப் 7:2).

மகிமையின் தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதினால், அவர் தேவனுடைய வார்த்தையை சந்தேகப்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிற்று. தேவனுடைய தெய்வீக அதிகாரம், ஆபிரகாமை கானான் தேசத்திற்குப்போகுமாறு அழைக்கிறது. ஆரம்பத்தில் தேவன் ஆபிரகாமுக்கு தம்முடைய மகிமையில் தரிசனமானார். அதன்பின்பு அவர் பல்வேறு உபாயங்கள் மூலமாக ஆபிரகாமுக்கு தரிசனமானார்.

ஆனாலும் தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமுக்கு முதன் முதலாக தம்மை வெளிப்படுத்தியபோது, அவர் தம்முடைய மகிமையில் ஆபிரகாமுக்கு தம்மை வெளிப்படுத்தினார். தேவன் தம்முடைய மகிமையில் ஆபிரகாமோடு பேசினார்.

கர்த்தர் ஆபிரகாமோடு இந்த வாக்கியத்தை சொல்லும்போது அவர் மெசபொத்தோமியாவில் இருக்கிறார். அவர் இன்னும் ஆரானுக்கு வரவில்லை. ஆரான் என்பது கல்தேயருடைய தேசம் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். ஆகையினால் ஆரானும் ஆபிரகாமுடைய தேசத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

ஆபிராம் ஆரானிலே ஐந்து வருஷங்கள் தங்கியிருந்தார். ஆகையினால் அவர் ஆரானை தன்னுடைய தேசம் என்றே சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். கர்த்தர் ஆபிரகாமுக்கு ஆரானை வாக்குப்பண்ணவில்லை. ஆனால் ஆபிராமோ ஆரானில் தங்கியிருக்கிறார். ஆபிராம் சுதந்தரிக்க வேண்டிய தேசம் ஆரான் அல்ல என்றும், கானான் தேசமே அவர் சுதந்தரிக்கவேண்டிய தேசம் என்றும் கர்த்தர் ஆபிராமுக்கு தெளிவுபடுத்துகிறார்.

கர்த்தர் நம்மை நேசிக்கிறார். தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். நாம் கானானில் தங்கி தாபரிக்கவேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தம். நாம் கானானை விட்டு வெளியே எங்கே தங்கியிருந்தாலும், கர்த்தர் தம்முடைய கிருபையினாலும் அன்பினாலும் நம்மை கானானுக்கு அழைத்து வருவார்.

கர்த்தர் நம்மை கானானுக்கு வருமாறு அழைக்கும்போது, நாம் கர்த்தருடைய அழைப்பை ஏற்று கானானுக்கு புறப்பட்டுப்போய்விடவேண்டும். நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லையென்றால், கர்த்தருடைய அழைப்பு நமக்கு மறுபடியும் கொடுக்கப்படும். இது கர்த்தருடைய கிருபை. நாம் அவருடைய கிருபையை ஒருபோதும் அசட்டைபண்ணிவிடக்கூடாது.

கர்த்தர் தாம் ஆரம்பித்த நற்கிரியையை ƒநிறைவேற்றவேண்டும் என்று விரும்புகிறார். கர்த்தர் செய்ய நினைக்கிற காரியம் ஒருபோதும் தடைபடாது. நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குள் உறுதியாய் நிலைத்திருக்கவேண்டும். நம்முடைய ஆத்துமாவுக்கும் கர்த்தருக்கும் இடையே நெருங்கிய ஐக்கியம் இருக்கவேண்டும். அப்போதுதான் கர்த்தருடைய அழைப்புக்கு நம்மால் செவிகொடுக்க முடியும். கர்த்தர் நம்மை அழைக்கும்போது, தம்முடைய வாக்குத்தத்தங்களையும் நமக்கு உறுதிபண்ணுகிறார்.

கர்த்தர் ஆபிராமை நோக்கி: ""நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ'' (ஆதி 12:1) என்று சொல்லுகிறார்.

ஆபிராம் ஆரானுக்குப் போவதற்கு முன்பாகத் தேவன் அவரை அழைத்தார் என்று அப் 7:2 ஆவது வசனம் வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்பாக தேராகுவும், அவருடைய குடும்பத்தாரும் விக்கிரகாராதனை செய்தார்கள் என்று யோசு 24:2 ஆவது வசனம் கூறுகிறது. தேராகு ஆபிராமையும், மற்றவர்களையும் கானானுக்குக் கூட்டிக் கொண்டு போகிறார்.

தேராகு தன்னுடைய விக்கிரகாராதனையை விட்டுவிட்டு, ஆபிராமின் தேவனை ஆராதிக்கிறார். விக்கிரகாராதனையிலிருந்தும், உபத்திரவங்களிலிருந்தும் விடுதலை பெறுவதற்காகத் தேராகு தன் தேசத்தை விட்டு கானான் தேசத்திற்குப் போகிறார்.

இதனால் ஆபிராம் தேவனுடைய சப்தத்திற்குக் கீழ்ப்படியவில்லை என்று பொருளல்ல. ஆபிராம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் (ஆதி 12:4; ஆதி 13:14; ஆதி 31:53). கல்தேயருடைய ஊர் பட்டணத்தில் தேவன் ஆபிராமுக்குக் கொடுத்த அழைப்பை இங்கு மறுபடியும் கூறுகிறார் (அப் 7:2).

கர்த்தர் ஆபிராமை சோதிக்கிறார். ஆபிராமுக்கு தம்மீது அதிகமான அன்பு இருக்கிறதா அல்லது தன்னுடைய சொந்த தேசத்தின்மீதும், தன்னுடைய இனத்தின்மீதும், தன்னுடைய தகப்பன் வீட்டின்மீதும் ஆபிராமுக்கு அதிகமான அன்பு இருக்கிறதா என்பதை கர்த்தர் சோதித்து பார்க்க விரும்புகிறார்.

இயேசுகிறிஸ்துவை பின்பற்ற விரும்புகிறவர்கள் தங்களை தாங்களே வெறுத்து, இயேசுகிறிஸ்துவின் சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்பற்றி செல்லவேண்டும். ஆபிரகாம் தன்னுடைய தேசத்தையும், தன்னுடைய ஜனங்களையும் விட்டு விட்டு, கர்த்தரைப் பின்பற்றவேண்டும். ஆபிரகாமின் தேசம் விக்கிரகாராதனை நிரம்பியிருக்கிற தேசம். ஆபிரகாமின் இனத்தாரும், அவருடைய தகப்பன் வீட்டாரும், அவருக்கு எப்போதுமே சோதனைகளையும் வேதனைகளையும் கொடுக்கிறார்கள்.

தேவன் ஆபிராமுக்கு ஏராளமான கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். அவற்றின் விவரம் வருமாறு :

1. உன் தேசத்தை விட்டுப் புறப்பட்டுப்போ. (ஆதி 12:1; அப் 7:2).

2. உன் இனத்தை விட்டுப் புறப்பட்டுப்போ (ஆதி 12:1).

3. உன் தகப்பனுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டுப்போ (ஆதி 12:1).

4. நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. (ஆதி 12:1).

5. நீ எழுந்து, தேசத்தின் நீளமும், அகலமும் எம்மட்டோ அம்மட்டும் நடந்து திரி. (ஆதி 13:17).

6. நீ எனக்கு பலி செலுத்து. (ஆதி 15:9#12).

7. நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. (ஆதி 17:1).

8. என் உடன்படிக்கையைக் கைக்கொள். (ஆதி 17:9#14).

9. உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளையும், விருத்தசேதனம்பண்ணு. (ஆதி 17:10#14).

10. எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணு. (ஆதி 17:12).

11. உன் மகனுக்கு ஈசாக்கு என்று பேரிடு. (ஆதி 17:19).

12. சாராள் இந்த விஷயத்தில் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். (ஆதி 21:12).

13. உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கைத் தகன பலியாகப் பலியிடு. (ஆதி 22:2).

14. பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே. (ஆதி 22:12).

தேவன் ஆபிராமுக்கு ஏராளமான வாக்குத்தத்தங்களையும் கொடுத்திருக்கிறார். அவற்றின் விவரம் வருமாறு:

1. நான் உனக்குத் தேசத்தைக் காண்பிப்பேன். (ஆதி 12:1).

2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதி 12:2).

3. நான் உன்னை ஆசீர்வதிப்பேன். (ஆதி 12:2; ஆதி 22:17).

4. நான் உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். (ஆதி 12:2).

5. நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். (ஆதி 12:2).

6. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன். (ஆதி 12:3).

7. உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். (ஆதி 12:3)

8. பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். (ஆதி 12:3; ஆதி 22:18).

9. உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்தியமாகக் கொடுப்பேன். (ஆதி 12:7; ஆதி 13:14#17; ஆதி 15:18#21; ஆதி 17:8)

10. உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். (ஆதி 13:16).

11. நான் உனக்குக் கேடகமாயிருக்கிறேன். (ஆதி 15:1).

12. நான் உனக்கு மகா பெரிய பலனாயிருக்கிறேன். (ஆதி 15:1).

13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளை உனக்குச் சுதந்தரவாளியாய் இருப்பாôன். (ஆதி 15:2#4).

14. உன் சந்ததி வானத்து நட்சத்திரங்களைப்போல எண்ண முடியாத அளவுக்குத் திரளாக இருக்கும். (ஆதி 15:5; ஆதி 22:17)

15. உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் (ஆதி 15:13).

16. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன். (ஆதி 15:14).

17. அடிமைத்தனத்திலிருந்து உன் சந்ததியை விடுவித்து வெளியே கொண்டுவருவேன். (ஆதி 15:14#16, யாத் 12)

18. உன் சந்ததியை மிகுந்த பொருள்களுடனே ஆசீர்வதிப்பேன். (ஆதி 15:14).

19. நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய். (ஆதி 15:15).

20. நல்ல முதிர்வயதிலே அடக்கம் பண்ணப்படுவாய். (ஆதி 15:15).

21. என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். (ஆதி 17:4,7).

22. உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன். (ஆதி 17:2; ஆதி 22:17).

23. நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்துவேன். (ஆதி 17:5#6).

24. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணுவேன். (ஆதி 17:6).

25. உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். (ஆதி 17:6).

26. தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். (ஆதி 17:7).

27. உனக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பேன். (ஆதி 17:7#8).

28. நான் உன் மனைவியை (சாராளை) ஆசீர்வதிப்பேன். (ஆதி 17:16).

29. அவளாலே (சாராளாலே) உனக்கு ஒரு குமாரனைத் தருவேன் (ஆதி 17:16#19).

30. அவள் (சாராள்) பல ஜாதிகளுக்குத் தாயாக அவளை ஆசீர்வதிப்பேன். (ஆதி 17:16).

31. அவளாலே (சாராளாலே) ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாக அவளை ஆசீர்வதிப்பேன். (ஆதி 17:16).

32. என் உடன்படிக்கையை ஈசாக்குக்கும், அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். (ஆதி 17:19#21).

33. நான் இஸ்மவேலை ஆசீர்வதிப்பேன். (ஆதி 17:20).

34. அவனை மிகவும் அதிகமாகப் பலுகப் பண்ணுவேன். (ஆதி 17:20).

35. அவனை மிகவும் அதிகமாகப் பெருகப் பண்ணுவேன் (ஆதி 17:20).

36. அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். (ஆதி 17:20).

37. அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதி 17:20).

38. வருகிற வருஷத்தில் குறித்த காலத்திலே சாராள் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள். (ஆதி 17:21; ஆதி 18:10,14).

39. நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன். (ஆதி 18:26).

40. நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:28).

41. நாற்பது நீதிமான்கள் நிமித்தம் சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:29).

42. நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால் சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:30).

43. இருபது நீதிமான்கள் நிமித்தம் சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:31).

44. பத்து நீதிமான்கள் நிமித்தம் சோதோமை அழிப்பதில்லை. (ஆதி 18:32).

45. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். (ஆதி 21:12).

46. உன் சந்ததியை கடற்கரை மணலைப்போல பெருகவே பெருகப் பண்ணுவேன். (ஆதி 22:17).

47. உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். (ஆதி 22:17).

48. உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும். (ஆதி 22:18).

ஆபிராமின் இனத்தார் அவரை விக்கிரகாராதனையில் ஈடுபடுத்த விரும்புகிறார்கள். ஆபிராமுக்கு தன் இனத்தார் மூலமாக தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஆபிராமின் ஆத்துமாவுக்கு ஆபத்துக்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. ஆபிராம் தன்னுடைய ஆத்தும ஆபத்துக்கு தப்பிக்கவேண்டுமென்றால், அவர் தன்னுடைய தேசத்தையும், இனத்தையும் விட்டு வெளியேற வேண்டும். அவருடைய தேசத்தின் விக்கிரகாராதனை, அவரைப் பாதிக்கக்கூடாது.

கர்த்தர் ஆபிராமுக்கு கொடுக்கும் கட்டளை, சுவிசேஷத்தின் மூலமாக நமக்கு கொடுக்கப்படும் கட்டளைக்கு ஒப்பாயிருக்கிறது. நாம் விசுவாசத்தினால் ஆபிரகாமின் சந்ததியாராயிருக்கிறோம். கர்த்தர் நம்மோடுகூட உடன்படிக்கை பண்ணியிருக்கிறார். நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லவேண்டும்.

உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. நாம் கர்த்தரிடத்தில் மாத்திரமே நம்முடைய முழுஇருதயத்தோடும், முழுமனதோடும், முழுஆத்துமாவோடும் அன்புகூரவேண்டும். கர்த்தரை நேசிக்க வேண்டிய ஸ்தானத்திலே, நம்முடைய தேசத்தையோ அல்லது நம்முடைய இனத்தையோ வைத்து, அதை நேசிக்கக்கூடாது. நாம் கர்த்தரை நேசியாமல், கர்த்தருக்கு பதிலாக மற்ற காரியங்களை நேசிக்கும்போது, நாம் தேவனுடைய கிருபையை இழந்துவிடுவோம்.

நாம் எல்லா சூழ்நிலைகளிலும் பாவத்தை விட்டு விலகி வரவேண்டும். தீயசகவாசங்கள், தீயசம்பாஷணைகள் நம்முடைய ஆத்துமாவுக்கு எப்போதுமே ஆபத்தானது. விசுவாசிகளாகிய நாம் விக்கிரகங்களை விட்டும், விக்கிரகாராதனையைவிட்டும் விலகி வரவேண்டும். நம்முடைய இருதயத்தில் விக்கிரகாராதனைக்கு இடம் இருக்கக்கூடாது. நாம் கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியத்திலிருப்பதற்கு தடையாகயிருக்கக்கூடிய எல்லா காரியங்களையும் விட்டு விலகி வருவது நமக்கு நல்லது.

விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கவேண்டும். உலகப்பிரகாரமான சந்தோஷம் மாயையானது. நாம் இந்த உலகத்தையும், உலகத்தின் காரியங்களையும் பரிசுத்தமான கண்களோடு பார்க்கும்போது, அசுத்தத்திற்கும் சுத்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு நமக்கு தெரியும். இந்தப் பிரபஞ்சம் நமக்கு நிலையான வாசஸ்தலமல்ல. பரலோகமே நம்முடைய நித்திய வாசஸ்தலம்.

நம்முடைய தேசத்தையும், நம்முடைய வீட்டையும் நாம் நோக்கிப் பார்க்கும்போது, இதுவே நமக்கு நிலையான ஸ்தலம் என்று நினைத்துவிடக்கூடாது. நாம் இந்தப் பிரபஞ்சத்தில் பரதேசிகளைப்போல இருக்கிறோம். நம்முடைய வீட்டில் ஒரு பரதேசியைப்போல தங்கியிருக்கிறோம். ஆகையினால் நாம் இந்தப் பூமியில் ஜீவித்தாலும், பூமிக்குரிய காரியங்களை நோக்கிப் பார்க்காமல், பரலோகத்தின் மேலான காரியங்களையே நோக்கிப் பார்க்கவேண்டும். இந்தப் பிரபஞ்ச காரியங்கள்மீது அன்பு வைக்காமல், பரலோக காரியங்கள்மீது அன்பு வைக்கவேண்டும்.

ஆபிரகாம் தம்மை அதிகமாக நேசிப்பாரா அல்லது அவர் தன்னுடைய தேசத்தையும், இனத்தையும், தன் தகப்பனுடைய வீட்டையும் அதிகமாய் நேசிப்பாரா என்பதை கர்த்தர் சோதித்து பார்க்க விரும்புகிறார். ஆபிராம் கர்த்தரை நம்பவேண்டும். கர்த்தர்மீது நம்பிக்கையில்லாமல், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவது இயலாத காரியம்.

கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ'' என்று சொல்லுகிறார். கர்த்தர் அவரிடம், ""நான் உனக்கு கொடுக்கும் தேசத்திற்கு போ'' என்று சொல்லவில்லை. கர்த்தர் அப்படி சொல்லுவதற்கு பதிலாக, ""நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ'' என்று மாத்திரமே சொல்லுகிறார்.

ஆபிராம் கர்த்தருடைய வார்த்தையின் பிரகாரம் புறப்பட்டுப்போகவேண்டுமென்றால், அவர் கர்த்தரை நம்பித்தான் புறப்பட்டுப்போகவேண்டும். விசுவாசமில்லாமல் கர்த்தரை பின்பற்றிப்போவது இயலாத காரியம். கர்த்தர் ஆபிராமுக்கு எந்தப் பாதுகாப்பையும் உறுதிபண்ணவில்லை.

ஆபிராம் தன்னுடைய தேசத்தையும், தன்னுடைய இனத்தையும், தன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டுப்போனால், அவருக்கு ஒரு இழப்பும் ஏற்படாது என்று கர்த்தர் வாக்குப்பண்ணவுமில்லை. தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால், தம்மைப் பின்பற்றிப்போனால், ஆபிராமுக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்றும் கர்த்தர் சொல்லவில்லை.

கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ'' என்று மாத்திரமே சொல்லுகிறார். அந்த தேசம் எப்படியிருக்கும் என்பது ஆபிரகாமுக்கு இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அந்த தேசத்தில் ஆபிரகாமுக்கு என்ன நடைபெறும் என்பதையும் கர்த்தர் அவருக்கு முன்னறிவிக்கவில்லை.

கர்த்தர் ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை சொல்லுகிறார். கர்த்தர் ஆபிராமை நோக்கி, ""நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்'' (ஆதி 12:2,3) என்று சொல்லுகிறார்.

கர்த்தர் சொல்லுகிற வாக்குத்தத்தம் ஆபிராமுக்கு நிறைவேறவேண்டுமென்றால், ஆபிராம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, கர்த்தர் தனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போகவேண்டும். கர்த்தருடைய வாக்குத்தத்தம் மிகவும் ஆசீர்வாதமானது. ஆனாலும் அந்த வாக்குத்தத்தத்தோடு ஒரு நிபந்தனையும் சேர்க்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால் மாத்திரமே, அவருடைய வாக்குத்தத்தம் நம்முடைய ஜீவியத்தில் நிறைவேறும்.

நாம் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியும்போது, கர்த்தர் நிச்சயமாகவே தம்முடைய வார்த்தைகளையும், வாக்குத்தத்தங்களையும் நமக்கு நிறைவேற்றுவார். கர்த்தர் தம்முடைய வார்த்தையிலும், கிரியையிலும் உண்மையுள்ளவர்.

கர்த்தர் ஆபிராமுக்கு தம்முடைய வார்த்தைகளை சொல்லும்போது, ஆறுவிதமான வாக்குத்தத்தங்களை சொல்லுகிறார். அவையாவன :

1. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

2. நான் உன்னை ஆசீர்வதிப்பேன்.

3. நான் உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்;

4. நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

5. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன். உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.