தானியேல் 11ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

தானியேல் 11ஆம் அதிகாரம் வேத ஆராய்ச்சி

தானியேல் ஒரு தரிசனம் கண்டார். காபிரியேல் அதன் விளக்கத்தை அவருக்கு சொல்லுகிறார். ""கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்கு சம்பவிப்பதை உனக்கு தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்'' (தானி 10:14) என்று தானியேலிடம் சொல்லுகிறார். காபிரியேல் மேலும், ""சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்கு தெரிவிப்பேன்'' (தானி 10:21) என்றும் தானியேலுக்கு சொல்லுகிறார்.

பெர்சிய ராஜ்யம் அழிந்துபோகும். அதன் அழிவின்மீது கிரேக்க ராஜ்யம் கட்டியெழுப்பப்படும் (தானி 11:1-4),

எகிப்து, சீரியா ஆகிய இரண்டு ராஜ்யங்களைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள். இவை தென்றிசை ராஜ்யம் என்றும், வடதிசை ராஜ்யம் என்றும் அழைக்கப்படுகிறது (தானி 11:5-20).

அந்தியோகஸ் எப்பிபேனஸ் ஆட்சிக்கு வருவதும், அவனுடைய கிரியைகளும், அவன் பெறுகிற வெற்றிகளும் (தானி 11:21-29). யூதாதேசத்திற்கும், யூதர்களுக்கும் அந்தியோகஸ் எப்பிபேனஸ் மிகுந்த கேடு செய்கிறான். அவன் எல்லா மார்க்கங்களையும் அவமதிக்கிறான் (தானி 11:30-39). முடிவிலே அந்தியோகசின் ராஜ்யம் வீழ்ச்சியடைந்து அழிந்துபோகும் (தானி 11:40-45).

நாலு ராஜாக்கள் தானி 11:1-4

தானி 11:1. மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத்திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன்.

தானி 11:2. இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின் பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.

தானி 11:3. ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.

தானி 11:4. அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறே பேர்களிடமாய்த் தாண்டிப்போம்.

தானியேல் தான் கண்ட தரிசனத்தைப் புரிந்துகொள்வதற்கு, காபிரியேல் என்னும் தேவதூதன் அவருக்கு உதவி செய்கிறார். அவர் யூதாதேசத்திற்கு அதிக நன்மைகளை செய்திருக்கிறார். நேபுகாத்நேச்சார் தன்னுடைய சொப்பனத்தில் ஒரு சிலையைக் கண்டான். அதன் தலை பொன்னாயிருந்தது. அது உடைந்துபோயிற்று. மரத்தின் வேரானது கோடரியினால் வெட்டப்பட்டது.

கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாத்து பராமரிக்கிறார். நமக்கு வேதனைகளும் துன்பங்களும் வரும்போது, நாம் கர்த்தரையே சார்ந்துகொள்ளவேண்டும். கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு கடந்த காலங்களிலே செய்த நன்மைகளையும், கொடுத்த பாதுகாப்புக்களையும், பராமரிப்புக்களையும் தியானம்பண்ணவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகள் நமக்கு ஆறுதலையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.

பெர்சிய தேசத்தை நான்கு ராஜாக்கள் ஆளுகை செய்வார்கள். காபிரியேல் இது பற்றிய செய்தியை தானியேலுக்கு அறிவிக்கிறார்.

""மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத்திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன். இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்'' (தானி 11:1,2) என்று காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார்.

பெர்சியா தேசத்தில் இன்னும் மூன்றுபேர் எழும்புவார்கள். இவர்கள் தரியு ராஜாவுக்கு பின்பு பெர்சியா தேசத்தை ஆட்சி செய்கிறவர்கள். தரியு ராஜாவின் காலத்தில், தானியேலுக்கு இந்த தீர்க்கதரிசனம் வெளிப்படுத்தப்படுகிறது.

""கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்-ய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்'' (தானி 9:1,2).

பெர்சியா தேசத்தில் எழும்பும் மூன்று ராஜாக்களின் பெயர்களாவன: 1. கோரேசு, 2. அர்தசஷ்டா அல்லது அர்தசேர்க்கஸ், 3. அகாஸ்வேரு. கிரேக்கர்கள் அர்தசஷ்டா ராஜாவை கம்பைசிஸ் என்று அழைக்கிறார்கள். அகாஸ்வேரு ராஜா எஸ்தர் ராஜாத்தியை திருமணம் செய்து கொண்டார். இவர் கிஸ்டாஸ்ப்சஸ் என்பவரின் குமாரனாகிய தரியு என்றும் அழைக்கப்படுகிறார்.

சரித்திரத்திலே பெர்சியாவின் இம்மூன்று ராஜாக்களைப்பற்றி ஏராளமான செய்திகள் எழுதப்பட்டிருக்கிறது. கோரேசு இவர்களுக்கு தகப்பன். அர்தசஷ்டா என்று அழைக்கப்படும் சிம்பையாசிஸ் இவர்கள் எல்லோருக்கும் எஜமானைப்போல இருந்தார். தரியு இவர்களுடைய தேசத்தை கட்டியெழுப்பினார்.

பெர்சியா தேசத்திலே, இம்மூன்று ராஜாக்களுக்கு பின்பு நாலாவதாக ஒரு ராஜா எழும்புவான். இந்த ராஜா எல்லாரிலும் மகாஐசுவரிய சம்பன்னனாயிருப்பான். தன் ஐசுவரியத்தினால் பலன்கொள்ளுவான். இவன் கிரேக்கு ராஜ்யத்திற்கு விரோதமாக சகலரையும் எழுப்பிவிடுவான் (தானி 11:2).

பெர்சியா தேசத்தின் நாலாவது ராஜா என்பது செர்க்கஸ் என்பவனைக் குறிக்கும் என்று கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். இவனுடைய சேனையில் எட்டு லட்சம் போர்வீரர்கள் இருந்தார்களாம்.

செர்க்கஸ் கிரேக்கு தேசத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணினான். இந்த யுத்தத்தில் பெர்சியாவின் ராஜாவாகிய செர்க்கசுக்கு படுதோல்வியும், ஏராளமான உயிர்ச்சேதமும் உண்டாயிற்று.

பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்த யூதர்களில் அநேகர், தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிப்போனார்கள். இந்த சம்பவம் நடைபெற்று முப்பது வருஷங்களுக்கு பின்பு, தரியுவைப்பற்றிய செய்தி எஸ்றாவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

இக்காலத்தில் தரியு ஒரு வாலிபனாகயிருக்கிறான். எருசலேமிலுள்ள தேவாலயக் கட்டுமான வேலைகளை புதுப்பிக்கிறான். ஆலயக்கட்டுமான வேலைகளில் ஏற்பட்ட தடைகளை நீக்கிப்போடுகிறான்.

""அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்தி-ருக்கிற தேசாபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்தி-ருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள். தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்'' (எஸ்றா 6:6,7).

மகாஅலெச்சாந்தருடைய வெற்றிகளையும், அவனுடைய ராஜ்யம் பங்கு பிரிக்கப்படுவதையும் பற்றி காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார். ""ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்'' (தானி 11:3).

பெர்சியாவின் ராஜாவுக்கு விரோதமாக அலெக்சாந்தர் என்னும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்புவான். அவன் பிரபலமாய் ஆட்சி செய்வான். அவன் அதிக வல்லமையுள்ளவனாயிருப்பான். அலெக்சாந்தர் தனக்கு இஷ்டமானபடியெல்லாம் செய்வான். அவனுக்கு விரோதமாக யாரும் எதிர்த்து நிற்கமுடியாது.

அலெக்சாந்தர் பராக்கிரமமுள்ள ராஜாவாயிருந்தாலும், அவனுடைய ராஜ்யம் உடைந்துபோகும் என்று காபிரியேல் சொல்லுகிறார். ""அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறே பேர்களிடமாய்த் தாண்டிப்போம்'' (தானி 11:4).

அலெக்சாந்தருடைய ராஜ்யத்தை நாலு பங்காக பிரிப்பார்கள். அலெக்சாந்தருடைய குடும்பத்திலுள்ளவர்களுக்கு, அவனுடைய ராஜ்யத்தில் பங்கு கிடைக்காது. அரிதேயுஸ் என்பவன் அலெச்சாந்தருடைய சகோதரன். இவன் மக்கதோனியா தேசத்திற்கு ராஜாவானான்.

ஒலிம்பியாஸ் என்பவள் அலெக்சாந்தரின் தாயார். இவள் அரிதேயுசைக் கொன்றுபோட்டாள். அலெக்சாந்தருக்கு ஹெர்குலஸ், அலெக்சாந்தர் ஆகிய இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அலெக்சாந்தரின் தாயார் இவ்விரண்டு பிள்ளைகளையும் விஷம் வைத்து கொன்றுபோட்டாள். இவ்வாறாக அலெக்சாந்தரின் குடும்பம் முற்றிலுமாய் அழிந்துபோயிற்று.

பெர்சிய ராஜாக்கள்

1. கோரேசு - இவன் இரண்டு வருஷம் ஆட்சி புரிந்தான். மேதியனாகிய தரியு அல்லது அஸ்திகேசசிற்குப் பின்பு இவன் ஆட்சிப் பொறுப்பேற்கிறான். (தானி 10:1).

2. கம்பைசஸ் - இவன் கோரேசின் குமாரன். பெர்சியாவில் இவன் கி.மு. 527 - 520 ஆகிய ஏழு வருஷங்களுக்கு ஆட்சி புரிந்தான்.

3. முதலாம் தரியு - இவன் 35 வருஷங்களுக்கு ஆட்சி புரிந்தான். ஆட்சிக் காலம் கி.மு. 520-485. இவன் கிரேக்கு தேசத்தின்மீது படையெடுத்த முதலாவது பெர்சிய தேசத்து ராஜாவாவான். கி.மு. 490 ஆம் வருஷத்தில் மாரத்தோன் என்னும் இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் முதலாம் தரியு தோற்றுப்போனான்.

4. சஷ்டா - இவன் 21 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 485-464. இவன் பெர்சிய தேசத்து ராஜா. கிரேக்க தேசத்திற்கு எதிராக எல்லா தேசங்களையும் எழுப்பிவிட்டான். தானி 11:2 ஆவது வசனம் இவன் மூலமாக நிறைவேறிற்று. கிரேக்கரோடு நடைபெற்ற யுத்தத்தில் கி.மு. 480-479 ஆவது வருஷத்தில் சஷ்டா தோல்வியுற்றான்.

சஷ்டாவிற்குப் பின்பு ஆட்சி புரிந்த பெர்சியாவின் ராஜாக்கள்

1. முதலாம் அர்தசஷ்டா - 40 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 464-424.

2. இரண்டாம் சஷ்டா - ஒரு வருஷம் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 423

3. இரண்டாம் தரியு - 19 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 423-404.

4. இரண்டாம் அர்தசஷ்டா - 46 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 404-358.

5. மூன்றாம் அர்தசஷ்டா - 20 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக் காலம் கி.மு. 358-338.

6. மூன்றாம் தரியு - 8 வருஷங்கள் ஆட்சி புரிந்தான். ஆட்சிக்காலம் கி.மு. 338-330.

மகா அலெக்ஸôண்டர் மூன்றாம் தரியுவை யுத்தத்தில் ஜெயித்தான். மேதிய-பெர்சிய பேரரசு கிரேக்கப் பேரரசிற்குக் கீழ் வந்தது. புறஜாதியாரின் காலத்தில் இவர்கள் இஸ்ரவேலை ஒடுக்கிய ஐந்தாவது உலகப்பேரரசாக இருக்கிறார்கள். தானி 2:37-45; தானி 7:3-8; தானி 8:3-8,20-21 ஆகிய வசனங்களில் கிரேக்கு தேசம் மூன்றாவது உலகப் பேரரசாகக் கூறப்பட்டுள்ளது.

பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்புவான் (தானி 11:3) என்பது மகா அலெக்ஸôண்டரைக் குறிக்கும். இவன் தன்னுடைய தந்தை பிலிப்புவின் திட்டங்களை நிறைவேற்றினான். பெர்சிய பேரரசின்மீது யுத்தம் பண்ணினான். கி.மு. 336 ஆம் வருஷத்தில் யுத்தம் ஆரம்பமாயிற்று. இக்காலத்தில் அலெக்ஸôண்டர் கிரேக்கு தேசத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றான். 13 வருஷங்களில் அலெக்ஸôண்டர் பெர்சிய தேசம் முழுவதையும், மேலும் பல தேசங்களையும் தன்னுடைய ஆளுகையின்கீழ் கொண்டு வந்தான். ""தனக்கு இஷ்டமானபடி செய்வான்'' (தானி 11:3) என்று கூறப்பட்டிருக்கிற பிரகாரம் அலெக்ஸôண்டர் நடந்து கொண்டான்.

பராக்கிரமமுள்ள ராஜாவினுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும் (தானி 11:4). மகா அலெக்ஸôண்டரின் மரணத்திற்குப் பின்பு கிரேக்கு பேரரசு 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அலெக்ஸôண்டரின் காலத்திலிருந்து ரோமர்கள் கிரேக்க தேசத்தின் நான்கு பகுதிகளையும் கைப்பற்றிய காலம் வரையிலும் ஹெலனிஸ்டிக் காலம் அல்லது அலெக்ஸôண்டரின் காலம் என்று அழைக்கப்படுகிறது.

பராக்கிரமமுள்ள ராஜாவினுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம் (தானி 11:4). அலெக்ஸôண்டரின் ராஜ்யம் பிரிக்கப்படுகிறது. அலெக்ஸôண்டரின் சந்ததியில் வராதவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். 15 வருஷக்காலத்திற்குப் பின்பு அலெக்ஸôண்டரின் குடும்பத்தில் யாரும் ஆட்சிப் பொறுப்பில் இல்லை.

தென்றிசை ராஜாவும் வடதிசை ராஜாவும் தானி 11:5-20

தானி 11:5. தென்றிசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்.

தானி 11:6. அவர்கள் சில வருஷங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம் பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இராமற்போம்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்து வந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

தானி 11:7. ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடதிசை ராஜாவின் அரணிப்புக்குள் பிரவேசித்து, அவர்களை விரோதித்து,

தானி 11:8. அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்துக்குக் கொண்டுபோய், சில வருஷங்கள்மட்டும் வடதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாய் நிற்பான்.

தானி 11:9. தென்றிசை ராஜா அவன் ராஜ்யதுக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான்.

தானி 11:10. ஆனாலும் அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான்.

தானி 11:11. அப்பொழுது தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுவான்; இவன் பெரிய சேனையை ஏகமாய் நிறுத்துவான்; ஆனாலும் இந்தச் சேனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்.

தானி 11:12. அவன் இந்தச் சேனையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்.

தானி 11:13. சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தின சேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான்.

தானி 11:14. அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்.

தானி 11:15. வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப்பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போம்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது.

தானி 11:16. ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச்செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் சிங்காரமான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும்.

தானி 11:17. தன் ராஜ்யத்தின் வல்லமையோடெல்லாம் தானும் தன்னோடேகூடச் செம்மைமார்க்கத்தாரும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதியுண்டாகும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே ஸ்திரம்பெறான்; அவள் அவன் பட்சத்தில் நில்லாள்.

தானி 11:18. பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந் தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்.

தானி 11:19. ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத்திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான்.

தானி 11:20. செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான்.

அலெக்சாந்தருடைய வெற்றிகளைத் தொடர்ந்து, அவனுக்கு பின்பு இரண்டு ராஜ்யங்கள் எழும்புகிறது. அவைகளில் ஒன்று எகிப்து ராஜ்யம். மற்றொன்று சீரியா ராஜ்யம்.

அலெக்சாந்தரின் படைத்தளபதிகளில் ஒருவனாகிய தால்மேயஸ் லாகஸ் என்பவன் எகிப்து தேசத்திற்கு ராஜாவாகிறான். இவன் தென்றிசை ராஜா என்று அழைக்கப்படுகிறான் (தானி 11:8,42,43). இவனுக்கு தால்மி என்னும் மறுபெயருமுண்டு. இவனுடைய ஆளுகையின்கீழ், எகிப்து, பொனிஷியா, அரபியா, லிபியா, எத்தியோப்பியா ஆகிய தேசங்கள் இருந்தன.

""தென்றிசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்'' (தானி 11:5).

அலெக்சாந்தரின் பிரபுக்களில் ஒருவனுடைய பெயர் செலூக்கஸ் நிக்கனோர் என்பதாகும். அலெக்சாந்தருக்கு பின்பு, அவனுடைய தேசத்தை பங்கிட்டுக்கொண்டவர்களில் செலூக்கஸ் மிகவும் பலமிக்கவன். இவன் சீரியா ராஜ்யத்திற்கு ராஜாவானான். இந்த ராஜ்யம் வடதிசை ராஜ்யம் என்று அழைக்கப்படுகிறது.

தால்மி யூதேயா தேசத்தின்மீது யுத்தம்பண்ணினான். ஒரு ஓய்வுநாளின்போது, அவன் யூதேயா தேசத்தில் ஒரு சிநேகிதனைப்போல பிரவேசித்தான். யூதர்கள் ஓய்ந்திருக்கும் அந்த நாளிலே, தால்மி எருசலேமைப் கைப்பற்றினான். சீரியாவின் ராஜாவாகிய செலூக்கஸ் யூதேயா தேசத்திற்கு எப்போதும் பிரச்சனைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

தென்றிசை ராஜ்யத்தையும், வடதிசை ராஜ்யத்தையும் இணைப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவ்விரண்டு ராஜ்யங்களும் ஒன்றாய் இணையவில்லை. நேபுகாத்நேச்சார், தன்னுடைய சொப்பனத்திலே ஒரு சிலையைக் கண்டான். அந்த சிலையின் பாதங்கள் பாதி இரும்பும், பாதி களிமண்ணுமாயிருந்தது (தானி 2:33). இரும்பும் களிமண்ணும் ஒன்றுசேராது. வடதிசை ராஜ்யமும் தென்றிசை ராஜ்யமும் ஒன்று சேரவில்லை.

""அவர்கள் சில வருஷங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம் பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்'' (தானி 11:6).

""சில வருஷங்களுக்கு பின்பு'' என்னும் வாக்கியத்திற்கு, அலெக்சாந்தர் மரணமடைந்து எழுபது வருஷங்களுக்கு பின்பு என்று பொருள். இந்த வருஷத்தில், லாகிடேயும், செலூக்கிடேயும் ஓரளவு ஒன்றாய் இணைந்தார்கள். ஆனாலும் அவர்கள் மத்தியிலே உண்மையான இணைப்பு காணப்படவில்லை. சமயம் வாய்க்கும்போது ஒருவரையொருவர் வஞ்சிப்பதற்கு ஆயத்தமாயிருந்தார்கள்.

எகிப்து தேசத்தின் ராஜாவாகிய தால்மி விலெடெல்பஸ் என்வன், தன்னுடைய மகளாகிய பெர்னீசை, சீரிய தேசத்து ராஜாவாகிய அந்தியோகஸ் தியோஸ் என்பவனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு பண்ணினான். சீரியாவின் ராஜா ஏற்கெனவே திருமணமானவன். அவனுக்கு லவோடேஸ் என்னும் பெயரில் ஒரு மனைவி இருக்கிறாள்.

பெர்னீஸ் வடதிசை ராஜாவினிடத்தில் ஒப்பந்தம் பண்ண வருவாள். ஆனால் அவளுக்கு புயபலமில்லாமல் போகும். பெர்னீசோ அல்லது அவளுடைய சந்ததியாரோ யாருக்கும் வடதிசை ராஜ்யத்தில் பங்கு இருக்காது. அவர்கள் சில வருஷங்களுக்குப் பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம் பண்ணும்படிக்கு வருவார்கள். தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இராமற்போம்; அவளும் அவளுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் (தானி 11:6).

சீரியாவின் ராஜாவாகிய அந்தியோகஸ் தன்னுடைய மனைவி பெர்னீசை விவாகரத்து செய்து விடுகிறான். அவன் மறுபடியுமாய் தன்னுடைய முந்திய மனைவியாகிய லவோடேசுடன் இணைந்துகொள்கிறான். லவோடேசோ அந்தியோகசை வஞ்சகமாய்ப் பழிவாங்குகிறாள். அவனுக்கு விஷம் கொடுத்து கொன்றுபோடுகிறாள். பெர்னீசையும், அவள் குமாரனையும் லவோடேஸ் கொன்றுபோடுகிறாள்.

லவோடேசுக்கு அந்தியோகஸ் என்னும் பேரில் ஒரு குமாரன் இருக்கிறான். லவோடேஸ் தன் குமாரனை சீரிய தேசத்திற்கு ராஜாவாக்குகிறாள். இவன் பிற்காலத்தில் செலூக்கஸ் கல்லினிக்கஸ் என்று அழைக்கப்படுகிறான்.

வடதிசை ராஜ்யத்திற்கும், தென்றிசை ராஜ்யத்திற்கும் இடையே யுத்தம் நடைபெறுகிறது. ""ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடதிசை ராஜாவின் அரணிப்புக்குள் பிரவேசித்து, அவர்களை விரோதித்து, அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்துக்குக் கொண்டுபோய், சில வருஷங்கள்மட்டும் வடதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாய் நிற்பான்'' (தானி 11:7,8).

பெர்னீசுடைய வேர்களின் கிளையில் ஒருவன் தோன்றுகிறான். அவன் வடதிசை ராஜாவைப் பார்க்கிலும் நிலையாய் நிற்கிறான். தென்றிசை ராஜாவான தால்மி பிலெடெல்பசுக்கு, தால்மேயஸ் யூகேடஸ் என்னும் பெயரில் ஒரு குமாரன் இருக்கிறான். இவன் சீரியாவின் ராஜாவாகிய செலூக்கஸ் கல்லினிக்கசுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறான். யுத்தத்தில் தென்றிசை ராஜா ஜெயம் பெறுகிறான்.

சீரிய தேசத்திலுள்ள விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையும் எகிப்து தேசத்திற்கு கொண்டு போய்விடுகிறான். எகிப்து தேசத்தின் ராஜா சில வருஷங்கள் மட்டும், சீரிய தேசத்து ராஜாவைப் பார்க்கிலும் நிலையாய் நிற்கிறான்.

""தென்றிசை ராஜா அவன் ராஜ்யதுக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான்'' (தானி 11:9). தென்றிசை ராஜா தன்னுடைய தேசத்தில் சமாதானத்தை உண்டுபண்ணுவதற்காக, வடதிசை தேசத்திலிருந்து தன் தேசத்திற்கு திரும்பிப்போகிறான்.

சீரிய தேசத்தின் ராஜாவாகிய அந்தியோகஸ் தியோஸ் என்பவன், வடதிசை தேசத்தின்மீது நீண்டகாலம் ராஜாவாயிருக்கிறான். தென்றிசை ராஜா இவன்மீது யுத்தம்பண்ணி, இவனை ஜெயிக்கும் வரையிலும், இவனே வடதிசை ராஜ்யத்திற்கு ராஜாவாயிருக்கிறான் (தானி 11:7). தென்றிசை ராஜா வடதிசை ராஜாவின் அரணிப்புக்குள் பிரவேசித்து, அவர்களை விரோதித்து, அவர்களுடைய அதிபதிகளை, தென்றிசை ராஜ்யமாகிய எகிப்துதேசத்திற்கு கொண்டு போய்விடுகிறான். இந்த யுத்தத்தில் வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் தியோஸ் என்பவன் மரித்துப்போகிறான்.

வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் தியோஸ் என்பவனுக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பெயர் செலூக்கஸ், சின்ன அந்தியோகஸ் என்பதாகும். இவர்கள் இருவரும் பெரும் படையை திரட்டி, தென்றிசை ராஜ்யமாகிய எகிப்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போகிறார்கள்.

""ஆனாலும் அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான்'' (தானி 11:10).

பெரிய அந்தியோகசின் குமாரர்களில் மூத்த குமாரனாகிய செலூக்கஸ் என்பவன், வடதிசை ராஜ்யத்தை இரண்டு வருஷங்கள் மாத்திரமே ஆட்சி புரிகிறான். அவனுக்கு விஷம் கொடுத்து கொன்றுபோடுகிறார்கள். அவனுக்கு பின்பு சின்ன அந்தியோகஸ், வடதிசை ராஜ்யமாகிய சீரிய தேசத்திற்கு ராஜாவாகிறான். இவன் முப்பத்தியேழு வருஷங்கள் சீரிய தேசத்திற்கு ராஜாவாயிருக்கிறான்.

வடதிசை ராஜ்யத்திற்கும், தென்றிசை ராஜ்யத்திற்கும் இடையே நீண்டகாலம் யுத்தம் நடைபெறுகிறது. இந்த யுத்தத்தில் தென்றிசை ராஜ்யம் ஆரம்பத்தில் ஜெயம் பெறுகிறது.

சீரியாவின் ராஜாவாகிய அந்தியோகஸ், எகிப்து தேசத்திற்கு விரோதமாக செய்த கொடுமைகள் அதிகம். இதனால் தென்றிசை ராஜ்யமாகிய எகிப்து தேசத்தின் ராஜா தால்மேயஸ் பிலோபீட்டர் என்பவன் கடுங்கோபங்கொண்டு, வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுகிறான். எகிப்தின் சேனை பெரிதாயிருக்கிறது. தென்றிசை ராஜா, தன்னுடைய சேனையை, வடதிசைக்கு விரோதமாக ஏகமாய் நிறுத்துகிறான். இந்த யுத்தத்தில் வடதிசையின் சேனை, தென்றிசை ராஜ்யமாகிய எகிப்து தேசத்தின் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

வடதிசை ராஜ்யத்திற்கும், தென்றிசை ராஜ்யத்திற்கும் நடைபெற்ற யுத்தத்தில், தென்றிசை ராஜ்யம் வெற்றி பெறுகிறது. இதனால் தென்றிசை ராஜாவாகிய தால்மேயஸ் பிலோபீட்டரின் இருதயம் கர்வம்கொள்கிறது. அவன் தன்னுடைய கர்வத்தில் எருசலேமுக்குப்போய், அங்கே உள்ள தேவாலயத்தில் பிரவேசிக்கிறான். தேவாலயத்திலுள்ள மகாபரிசுத்த ஸ்தலத்தை தீட்டுப்படுத்துகிறான்.

""அப்பொழுது தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுவான்; இவன் பெரிய சேனையை ஏகமாய் நிறுத்துவான்; ஆனாலும் இந்தச் சேனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவன் இந்தச் சேனையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்'' (தானி 11:11,12).

சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் தியோஸ் என்பவன் மறுபடியும் தென்றிசை ராஜ்யத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணவருகிறான். சீரியாவின் ராஜா திரும்ப முந்தின சேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும், தென்றிசை ராஜ்யமாகிய எகிப்து தேசத்திற்கு விரோதமாய் வருகிறான் (தானி 11:13).

சீரியாவின் ராஜா எகிப்து தேசத்தின்மீது யுத்தம்பண்ண வரும்போது, எகிப்து தேசத்திலே தால்மேயஸ் எப்பிபேனஸ் என்பவன் ராஜாவாயிருக்கிறான். இவன் தால்மேயஸ் பிலோபேட்டரின் குமாரன். இந்த யுத்தத்திலே எகிப்து தேசத்திற்கு விரோதமாக அநேகர் எழும்புகிறார்கள். அநேக ராஜாக்கள் வடதிசை ராஜ்யத்தோடு சேர்ந்துகொள்கிறார்கள்.

""அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்'' (தானி 11:14).

மக்கதோனியாவின் ராஜாவாகிய பிலிப்பு என்பவன் வடதிசை ராஜாவாகிய அந்தியோகசோடு இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்கிறான். அந்தியோகஸ் எகிப்தின் ராஜாவுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்போது, மக்கதோனியாவின் ராஜாவாகிய பிலிப்புவும், எகிப்து தேசத்திற்கு எதிரான யுத்தத்தில் அந்தியோகசுக்கு உதவி செய்கிறான். ""அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்'' (தானி 11:14) என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது.

சீரியாவின் ராஜாவாகிய அந்தியோகஸ், எகிப்து தேசத்தின் ராஜாவை யுத்தத்திலே வேரோடு அழித்துப்போடுகிறான். எகிப்தியரின் சேனையில் பெரும்பகுதியையும் அவன் சங்காரம்பண்ணுகிறான். இந்த யுத்தத்தில் யூதர்களும் வடதிசை ராஜாவுக்கு உதவியாக வருகிறார்கள். எகிப்து தேசத்தின் ராஜாவாகிய தால்மேயசின் இராணுவத்தளங்களை முற்றிக்கையிடுவதற்கு யூதர்களும் அந்தியோகசுக்கு உதவிசெய்து அவனோடு சேர்ந்துகொள்கிறார்கள்.

""அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்'' (தானி 11:14) என்று காபிரியேல் கர்த்தருடைய வார்த்தையை தானியேலுக்கு அறிவிக்கிறார். ""துண்டரிக்கக்காரர்'' என்னும் வார்த்தைக்கு ""கொள்ளைக்காரர்'' என்று பொருள். யூதாவின் ஜனத்தார், அந்தியோகசோடு சேர்ந்து, எகிப்து தேசத்தை கொள்ளையிடுகிறார்கள்.

வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ், தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக மேலும் ஒரு யுத்தத்திற்கு திட்டம் வகுக்கிறான். ""வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப்பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போம்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது'' (தானி 11:15).

அந்தியோகஸ் எகிப்து தேசத்தின்மீது திடீரென்று, யாரும் எதிர்பாராத வேளையிலே யுத்தம் பண்ண வருவான். அவனுக்கு விரோதமாக யாராலும் எதிர்த்து நிற்க முடியாது. எகிப்தின் ராஜாவால் அந்தியோகசை எதிர்த்து நின்று யுத்தம்பண்ண முடியாது. ""ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச்செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை'' (தானி 11:16).

அந்தியோகஸ் யூதேயா தேசத்திற்கும் ராஜாவாகிறான். ""அவன் சிங்காரமான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும்'' (தானி 11:16). ""சிங்காரமான தேசம்'' என்னும் வார்த்தை யூதேயா தேசத்தைக் குறிக்கிறது.

""அவனுக்கு விரோதமாக வருகிறவன்'' என்னும் வாக்கியம் தெற்கு ராஜ்யத்திற்கு விரோதமாக வருகிற, வடக்கு ராஜ்யத்தின் ராஜாவாகிய அந்தியோகசைக் குறிக்கிறது. அந்தியோகஸ் தன்னுடைய இஷ்டப்படி செய்கிறான். அவன் இஸ்ரவேல் தேசம் முழுவதையும் அழித்துப்போடுகிறான். பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அந்தியோகஸ் பாழாக்கிப்போடுகிறான்.

இக்காலத்தில் எகிப்து தேசமும், சீரியா தேசமும் பெரிய ராஜ்யங்களாயிருக்கிறது. இவ்விரண்டு பெரிய ராஜ்யங்களுக்கு நடுவே, இஸ்ரவேல் தேசம் பூகோள ரீதியாக அமைந்துள்ளது. இவ்விரண்டு பெரிய தேசங்களுக்கும் நடுவே யுத்தம் நடைபெறும்போது, இஸ்ரவேல் தேசத்திற்கு பெரும் சேதமுண்டாகிறது. இவ்விரண்டு தேசத்தாரும், பல சமயங்களில் இஸ்ரவேல் தேசத்திலே யுத்தம் பண்ணியிருக்கிறார்கள். இஸ்ரவேல் தேசம்,எகிப்தியருக்கும், சீரியருக்கும் யுத்தக்களமாயிருக்கிறது.

வடக்கு தேசத்தின் ராஜா தெற்கு தேசத்திற்கு விரோதமாக தன்னுடைய முகத்தைத் திருப்புகிறான். வடக்கு தேசத்தின் ராஜா ""தன் ராஜ்யத்தின் வல்லமையோடெல்லாம் தானும் தன்னோடேகூடச் செம்மைமார்க்கத்தாரும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதியுண்டாகும்படிஅவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே ஸ்திரம்பெறான்; அவள் அவன் பட்சத்தில் நில்லாள்'' (தானி 11:17).

வடதிசை ராஜ்யத்தின் ராஜா, தென்றிசை ராஜ்யமாகிய எகிப்து தேசத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணும்போது, எகிப்திலே தால்மி எப்பிபேனஸ் என்பவன் ஆட்சி புரிகிறான். இவன் ஒரு சிறுவன். இவனுக்கு ராஜாவுக்குரிய தகுதிகளோ, திறமைகளோ இல்லை. வடதிசை ராஜ்யத்தின் ராஜா, இந்த நல்ல சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, எகிப்து தேசத்தின்மீது யுத்தம்பண்ணி, அதை மிகவும் எளிதாக ஜெயித்துவிடுகிறான்.

வடதிசை ராஜா தன் முகத்தை தீவுகளுக்கு நேராகத் திருப்புகிறான். அவன் அநேகம் தீவுகளை பிடிக்கிறான். வடதிசை ராஜாவுக்கும், ரோமாபுரி, கிரேக்கம், இத்தாலி ஆகிய தேசங்களுக்கும் யுத்தம் நடைபெறுகிறது.

""பின்பு இவன் (வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனஸ்) தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந் தீவுகளைப் பிடிப்பான்'' (தானி 11:18).

அந்தியோகஸ் அநேக தீவுகளைப் பிடிக்கிறான். ஹெல்லஸ்பான்டை சுற்றிலுமுள்ள எல்லா தீவுகளையும் அந்தியோகஸ் பிடிக்கிறான். ஆனாலும் அந்தியோகசின் சேனையிலுள்ள ஒரு சேனாபதி, அவனுக்கு விரோதமாக எழும்புகிறான். ""ஆனாலும் ஒரு சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான்'' (தானி 11:18).

அந்தியோகஸ் ரோமாபுரிக்கு விரோதமாக யுத்தம்பண்ணும்போது, அந்தியோகசுக்கு யுத்தத்தில் தோல்வி உண்டாயிற்று. அந்தியோகஸ் மற்ற தேசங்கள்மீது யுத்தம்பண்ணும்போது, அவனுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் இப்போதோ, அந்தியோகஸ் ரோமப்பேரரசிடம் தோற்று, தன்னுடைய முகத்தை தன் தேசத்தின் அரண்களுக்கு நேராக திருப்புகிறான். அந்தியோகஸ் யுத்தத்தில் தோல்வியடைந்து சீரிய தேசத்திற்கு திரும்பிப்போகிறான் (தானி 11:19).

அந்தியோகசிடம் ஏராளமான கொள்ளைப்பொருட்கள் இருக்கிறது. ரோமப்பேரரசோடு நடைபெற்ற யுத்தத்தில், அந்தியோகசுக்கு தோல்வி உண்டானதினால், அவன் தன்னுடைய கொள்ளைப்பொருட்கள் எல்லாவற்றையும் யுத்தக்களத்திலே விட்டுவிட்டு, தன் தேசத்திற்கு வெறுங்கையோடு வருகிறான். அந்தியோகஸ் ரோமப்பேரரசுக்கு கப்பம் கட்டவேண்டும். அதற்கு அவனிடத்தில் பணமில்லை.

வடதிசை ராஜ்யத்தில் யூப்பித்தருக்கு பெரிய கோவில் ஒன்று உள்ளது. அதில் ஏராளமான பொக்கிஷங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. வடதிசை ராஜா, ரோமப்பேரரசுக்கு கப்பம் கட்டுவதற்காக, யூப்பித்தரின் ஆலயத்தை கொள்ளையிடுகிறான். இதனால் வடதிசை ராஜ்யத்தின் ஜனங்கள், ராஜாவுக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.

வடதிசை ராஜ்யத்தின் ஜனங்கள், தங்களுடைய ராஜாவைக் கொன்றுபோடுகிறார்கள். அந்தியோகஸ் கொலைசெய்யப்படுகிறான். அவனுடைய பிரேதம் அவன் தேசத்திலே கீழே விழுகிறது. அதன் பின்பு அவன் சரித்திரத்தில் காணப்படாமல் போனான். ""அங்கே இடறி விழுந்து காணப்படாமற்போவான்'' (தானி 11:19) என்று வடதிசை ராஜாவின் முடிவை காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார்.

வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் மரித்துப்போன பின்பு, அவனுடைய ஸ்தானத்தில் வேறொருவன் ராஜாவாகிறான். அந்தியோகசின் மூத்த குமாரனாகிய செல்லூக்கஸ் பிலோபீட்டர் என்பவனே, அந்தியோகசின் ஸ்தானத்திலே ராஜாவாகிறான். இவன் சீரிய தேசத்து ஜனங்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். ஜனங்கள்மீது அதிகமான வரிகளை விதித்து, அதை கடினமான வழிகளில் வசூல் பண்ணினான்.

""செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான்'' (தானி 11:20) என்று அந்தியோகசின் மூத்த மகனான செல்லூக்கஸ் பிலோபீட்டரைப்பற்றி வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்தியோகஸ் தன் தேசத்திலுள்ள யூப்பித்தரின் கோவிலைக் கொள்ளையிட்டான். அவனுடைய மூத்த குமாரனாகிய செல்லூக்கஸ் பிலோபீட்டரோ எருசலேமிலுள்ள தேவாலயத்தை கொள்ளையிட முயற்சிபண்ணினான். ஆனால் அவனுடைய முயற்சிகள் நிறைவேறவில்லை. அவன் சில நாட்களில் மரித்துப்போனான். ""ஆகிலும் சில நாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான்'' (தானி 11:20) என்று இவனைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஹெலியோடோரஸ் என்பவன் செலூக்கஸ் பிலோபீட்டரின் மெய்க்காப்பாளன். இவன் ராஜாவுக்கு விஷம் கொடுத்து கொன்றுபோட்டான் என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். வேதத்தில் எழுதியிருக்கிற பிரகாரமாக, செலூக்கஸ் பிலோபீட்டர், சில நாட்களுக்குள், கோபமில்லாமலும், யுத்தமில்லாமலும் நாசமடைந்தான்.

காபிரியேல் இனிமேல் வரப்போகும் சம்பவங்களைப்பற்றி தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார். நாம் இந்த சம்பவங்களிலிருந்து இரண்டு முக்கியமான சத்தியங்களை அறிந்துகொள்ளலாம். அவையாவன :

1. கர்த்தர் தமக்கு சித்தமானவனை ராஜாவின் சிங்காசனத்தில் அமரச்செய்கிறார். கர்த்தர் தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரம், ராஜாவின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவனை, கீழே விழத்தள்ளிவிடுகிறார். சகலமும் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமே நடைபெறும். கர்த்தர் செய்ய நினைக்கிற காரியம் ஒருபோதும் தடைபடாது.

2. இந்த உலகத்தின் சரித்திரத்தில் ஏராளமான சண்டைகளும், யுத்தங்களும் நடைபெற்றிருக்கிறது. இவையெல்லாவற்றிற்கும் மனுஷருடைய பேராசைகளே மூலகாரணம். இப்போதும் இந்த உலகம் முழுவதும் யுத்தங்களும் சண்டைகளும் சூழ்ந்திருக்கிறது.

""தென்றிசை ராஜா'' என்பது முதலாம் தால்மியைக் குறிக்கும் (தானி 11:5). இவன் கிரேக்கப் பேரரசில் எகிப்திய பிரிவை ஸ்தாபித்தவன். எகிப்து மாகாணம் கி.மு. 323-30வரையிலும் ஆட்சி பொறுப்பில் இருந்தது. அதன் பின்பு எகிப்து தேசம் ரோமப் பேரரசின் ஆளுகைக்குள் வந்தது. தென்தேசம் என்பது யூதேயா தேசத்திற்குத் தென்பகுதியிலுள்ள தேசம் என்று பொருள்.

முதலாம் தால்மி பலவானாக இருக்கிறான். எகிப்து தேசத்தோடு கொரிந்து, காரியா, போனிஷியா, சைப்பிரஸ் ஆகிய பிரதேசங்களைச் சேர்த்துக் கொண்டான் (தானி 11:5).

தென்திசை ராஜாவினுடைய பிரபுக்களில் ஒருவன் என்பது முதலாம் செலூக்கசைக் குறிக்கும் (தானி 11:5). இவன் செலூக்கப் பேரரசை ஸ்தாபித்தவன். ஆட்சிக்காலம் கி.மு. 312-280. அந்திகோனசோடு நடைபெற்ற யுத்தத்தில் முதலாம் செலூக்கஸ் தோற்றுப் போனான். அதன் பின்பு செலூக்கஸ் எகிப்திற்கு ஓடிப்போனான். முதலாம் தால்மியின் படைத்தளபதிகளில் ஒருவனாக பணியாற்றினான். ஆகையினால் இவன் தால்மியின் பிரபுக்களில் ஒருவன் என்று அழைக்கப்படுகிறான். (தானி 11:5).

கி.மு. 312 ஆம் வருஷத்தில் காசாவில் நடைபெற்ற யுத்தத்தில் தால்மி ஜெயம் பெற்றான். இதனால் செலூக்கஸ் பாபிலோனுக்குத் திரும்பி வருவதற்கு ஒரு வாய்ப்பு உண்டாயிற்று. அலெக்ஸôண்டருடைய பேரரசின் கிழக்குப் பகுதி முழுவதையும் செலூக்காஸ் 9 வருஷங்களில் கைப்பற்றினான். கி.மு. 301 ஆம் வருஷத்தில் சீரியாவையும், சின்ன ஆசியாவின் ஒரு பகுதியையும் தன்னுடைய ராஜ்யத்தோடு சேர்த்துக் கொண்டான். செலூக்கப் பேரரசின் ஆட்சிக்காலம் கி.மு. 312-65 ஆகும். இக்காலத்தில் பேரரசாக விளங்கிய சீரிய தேசம் ரோமப்பேரரசில் ஒரு சிறிய மாகாணமாயிற்று.

""சில வருஷங்களுக்குப் பின்பு'' (தானி 11:6) என்னும் வாக்கியத்திற்கு 65 வருஷங்களுக்குப்பின்பு என்று பொருள். இக்காலத்தில் பல வரலாற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. (2நாளா 18:2).

ஒருவரோடொருவர் சம்பந்தம் பண்ணும் படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள் (தானி 11:6). வடதிசை என்பது சீரிய தேசத்தையும், தென்திசை என்பது எகிப்து தேசத்தையும் குறிக்கும். இவர்கள் உடன்படிக்கை பண்ணிக் கொள்வார்கள். இவர்களுக்கு இடையே பல வருஷங்கள் யுத்தம் நடைபெற்றது. கி.மு. 250 ஆம் வருஷத்தில் இவ்விரு தேசங்களும் இனிமேல் யுத்தம் பண்ணுவதில்லை என்று ஒப்பந்தம் பண்ணிக் கொண்டன. எகிப்து தேசத்தின் ராஜாவாகிய இரண்டாம் தால்மியின் குமாரத்தியாகிய பெரேனீஸ் சீரியாவின் ராஜாவாகிய இரண்டாம் அந்தியோக்கஸிற்கு மனைவியாகிறாள்.

அவளுக்குப் புயபலம் இராமற்போம் (தானி 11:6). சீரிய தேசத்தின் சிங்காசனத்தில் பெரேனீசின் வாரிசுகள் அமர்ந்து ஆட்சி புரியவில்லை. இரண்டாம் அந்தியோக்கஸ் பெரேனீசைத் தள்ளி வைத்துவிட்டு தன் முதல் மனைவியோடு சேர்ந்து கொள்கிறான் (தானி 11:6).

அவனும் அவனுடைய புயமும் நிலை நிற்பதில்லை (தானி 11:6) இரண்டாம் அந்தியோக்கசின் முதல் மனைவியின் பெயர் லாவோடீஸ். இவள் இரண்டாம் அந்தியோக்கசை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு, தன்னுடைய மகனைச் சிங்காசனத்தில் அமர்த்தியதாக வரலாறு கூறுகிறது. (தானி 11:6).

""ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்'' என்பதற்கு பெரேனீசை இரண்டாம் அந்தியோக்கஸ் தள்ளிவைத்து விடுவான் என்று பொருள். ""அவளை அழைத்து வந்தவர்கள்'' என்பது பெரேனீசோடு எகிப்து தேசத்திலிருந்து வந்த ஸ்திரீகள் என்று பொருள். பெரேனீஸ் கொல்லப்பட்டபோது எகிப்து தேசத்து ஸ்திரீகள் பெரேனீசைப் பாதுகாக்க முயற்சி பண்ணினார்கள். ஆனால் பெரேனீசோடு இவர்களும் கொல்லப்பட்டார்கள்.

""அவளைப் பெற்றவன்'' என்பதற்கு அவளால் அழைத்து வரப்பட்டவன் என்று பொருள். இது பெரேனீசின் குமாரனைக் குறிக்கும். பெரேனீசோடு அவனுடைய குமாரனும் கொல்லப்பட்டான். (தானி 11:6). ""அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவன்'' என்பது பெரேனீசின் தகப்பனைக் குறிக்கும். இவன் அந்தியோக்கசிற்குப் பெரேனீசை மனைவியாகக் கொடுத்தவன். (தானி 11:6).

""அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன்'' (தானி 11:7) என்பது பெரேனீசின் சகோதரனைக் குறிக்கும். இவன் மூன்றாம் தால்மி என்று அழைக்கப்படுகிறான். எகிப்தின் சிங்காசனத்தில் அமர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான். எகிப்து தேசத்தின் கிழக்குப் பிரதேசங்களைத் தன் தேசத்தோடு சேர்த்துக் கொண்டான். தன்னுடைய கடற்படைப் பலத்தினால் சின்ன ஆசியாவிலுள்ள கடற்கரைப் பிரதேசங்களை கி.மு. 246 ஆம் வருஷத்தில் கைப்பற்றினான். (தானி 11:7-9).

""வடதிசை ராஜா'' (தானி 11:7) என்பது இரண்டாம் செலூக்கசைக் குறிக்கும். இவன் மூன்றாம் தால்மியிடம் தோற்றுப்போனான். மூன்றாம் தால்மி வடக்கு தேசத்திற்குள் புகுந்து, அதிலுள்ள அனைத்தையும் கொள்ளையிட்டான். ஆயினும் தன்னுடைய தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளினால் யுத்தத்தின் வெற்றிகளை மூன்றாம் தால்மியினால் அனுபவிக்க முடியவில்லை. (தானி 11:9). அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய தெய்வங்களையும், எகிப்துக்குக் கொண்டு வந்தான். (தானி 11:8)

சில வருஷங்கள் மட்டும் வடதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாய் நிற்பான் (தானி 11:8). இரண்டாம் செலூக்கஸ் குதிரையிலிருந்து தவறிகீழே விழுந்ததினால் மரித்துப்போனான் என்று வரலாறு கூறுகிறது. மூன்றாம் தால்மி அவனைவிட 5 வருஷங்கள் அதிகமாக உயிரோடு இருந்தான்.

""தென்றிசை ராஜா'' (தானி 11:11) என்பது தால்மி பைலோபேட்டரைக் குறிக்கும். இவனுடைய ஆட்சிக்காலம் கி.மு. 221-204. சீரியாவின் ராஜாவாகிய அந்தியோக்கஸ் கி.மு. 219 ஆம் வருஷத்தில் இவன்மீது யுத்தம் பண்ண வந்தான். கி.மு. 217 ஆம் வருஷத்தில் அந்தியோக்கஸ் யுத்தத்தில் தோற்றுப்போனான். இதனால் தால்மி பைலோபேட்டர் அதிகமாக உயர்த்தப்பட்டான். யூதர்களை அதிகமாக ஒடுக்கினான். (தானி 11:12) இவனுடைய இருதயம் பல வெற்றிகளினால் கர்வங்கொண்டது. ஆயினும் இவன் தன்தேசத்தில் பலங்கொள்ளவில்லை. (தானி 11:12).

""வடதிசை ராஜா'' (தானி 11:13) என்பது மூன்றாம் அந்தியோக்கசைக் குறிக்கும். இவனுடைய ஆட்சிக்காலம் கி.மு. 223-187. இவன் எகிப்தியரோடு ஒருமுறை யுத்தம்பண்ணி தோற்றுப்போனான். ஆயினும் 14 வருஷங்களுக்குப் பின்பு மறுபடியும் எகிப்தியரோடு யுத்தம்பண்ணி, தன்னுடைய ராஜ்யத்தின் கிழக்குப் பகுதியை எகிப்தியரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டான்.

தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள் (தானி 11:14). எகிப்து தேசத்தின்மீதுயுத்தம் பண்ணுவதற்கு அந்தியோக்கசும், மக்கதோனியாவின் பிலிப்புவும் ஒன்றுசேர்ந்தார்கள். கி.மு. 198 ஆம்வருஷத்தில் எகிப்து தோல்வியுற்றது. பாலஸ்தீன தேசம் மறுபடியும் செலூக்கியரின் வசமாயிற்று.

""தென்றிசை ராஜா'' (தானி 11:14) என்பது ஐந்தாம் தால்மியைக் குறிக்கும். இவன் எப்பிபேனஸ் என்று அழைக்கப்பட்டான். பைலோபேட்டர் மரித்தபோது, எப்பிபேனசிற்கு 5 வயது மட்டுமே ஆயிற்று.

தென்திசை ராஜாவின் ஜனத்திலுள்ள துண்டரிக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள் (தானி 11:14). யூதர்கள் தங்கள் மார்க்கத்தை மறுதலித்து விட்டு தால்மியோடு சேர்ந்துகொள்வார்கள். அந்தியோக்கஸ் எகிப்தின் படைத்தளபதியை கி.மு. 198 ஆம் வருஷத்தில் ஜெயித்தான். யூதர்கள் சீரியரோடு சேர்ந்து, யூதாவை விடுவிக்க முயற்சி பண்ணினார்கள். இதனால் எகிப்தியருக்கு யூதர்கள்மீது கோபம் அதிகமாயிற்று. அந்தியோக்கஸ் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது பாலஸ்தீன தேசம் தோற்கடிக்கப்பட்டது. அதிலிருந்து திரளான கொள்ளைப்பொருட்கள் எகிப்து தேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வடதிசை ராஜா வருவான் (தானி 11:15). இது அந்தியோக்கசை குறிக்கும் இவன் யூதாவை மீட்பதற்காக வருவான். பல அரணான பட்டணங்களை கைப்பற்றுவான். எகிப்தின் தளபதிகளில் யாராலும் இவனை எதிர்த்து நிற்க முடியாது. (தானி 11:15-16).

தால்மிக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச்செய்வான் (தானி 11:16). இது தால்மிக்கு எதிராக வரும் அந்தியோகசை குறிக்கும். இவன் வெற்றி பெற்று தனக்கு இஷ்டமானதை யெல்லாம் செய்வான்.

வடதிசை ராஜா சிங்காரமான தேசத்தில் தங்குவான் (தானி 11:16). அந்தியோக்கசிற்கு யூதர்கள் உதவி புரிவார்கள். இதனால் அந்தியோகஸ் யூதர்களுக்கு பல சகாயங்களைச் செய்வான். ஆசாரியர்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பான். பாலஸ்தீன தேசத்தில் பல வருஷங்கள் யுத்தம் நடைபெற்றதினால் அங்கு பஞ்சம் நிலவும்.

அந்தியோக்கஸ் எகிப்திற்கு நேராக யுத்தம் பண்ணுவதற்கு ஆயத்தமாவான். ஆயினும் தால்மியோடு யுத்தம்பண்ணாமல் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வான். அந்தியோக்கசின் மகளுடைய பெயர் கிளியோபட்ரா. இவள் தால்மியை ஒரு கண்ணியில் விழ வைப்பாள் என்று அந்தியோக்கஸ் எதிர்பார்த்தான். ஆனால் கிளியோபட்ராவோ தன் தகப்பனுக்கு உதவி புரியாமல் தன் கணவனைக் காப்பாற்றுகிறாள் (தானி 11:17).

வடதிசை ராஜா தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந் தீவுகளைப் பிடிப்பான் (தானி 11:18). எகிப்து தேசத்தோடு உடன்படிக்கை செய்து கொண்ட பின்பு அந்தியோகஸ் பல கப்பல்களைக் கட்டினான். மத்தியதரைக் கடலிலுள்ள பல தீவுகளைக் கைப்பற்றினான். ரோதே, காமோல், கோலோபோன் ஆகிய தீவுகள் அந்தியோகசின் கைவசமாயிற்று.

ஆனாலும் ஒரு சேனாபதி....... வடதிசை ராஜா செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான் (தானி 11:18). இது ரோமாபுரியின் சேனாபதியைக் குறிக்கும். இவன் அந்தியோகசை ஜெயிப்பான். ரோமபேரரசார் சின்ன ஆசியாவில் அந்தியோகிசை ஜெயிப்பார்கள். ரோமாபுரியின் மீது நிந்தை உண்டாக்க வேண்டுமென்று அந்தியோகஸ் நினைத்தான். ஆனால் அந்த நிந்தை அவன் மீதே திரும்பிற்று.

வடதிசை ராஜா அங்கே இடறிவிழுந்து காணப்படாமற் போவான் (தானி 11:19). அந்தியோக்கஸ் யுத்தத்தில் தோல்வியுற்று திரும்பவும் அந்தியோகியாவிற்கு திரும்பி வருகிறான். கி. மு. 187ஆவது வருஷத்தில் நடைபெற்ற யுத்தத்தில் அந்தியோக்கஸ் தோல்வியுற்று அழிந்து போனான்.

தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான் (தானி 11:20) அந்தியோக்கசிற்குப் பின்பு அவனுடைய குமாரன் நான்காம் செலூக்கஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவன் தண்டல்காரனாக இருந்தான். இவனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 187-176. இவனுடைய இராஜ்ஜியத்தில் சீரியா, சிலிசியா, பாலஸ்தீனம், மெசெபத்தோமியா, பாபிலோனியா, மேதியா, பெர்சியா, ஆகிய தேசங்கள் அடங்கியிருந்தன.

அந்தியோக்கஸ் ரோமப்பேரரசின் மீது நடத்திய யுத்தத்தில் தோல்வியுற்றான். இதற்காக அவன் ரோமபேரரசிற்கு வரி செலுத்த வேண்டும். இந்நிலையில் அந்தியோகஸ் மரித்துப்போனான். அவனுடைய மகன் நான்காம் செலூகஸ் தன் தந்தை கட்டவேண்டிய வரியை கட்டுவதற்கு ஆவன செய்கிறான். பல புதிய உபாயங்கள் மூலமாக வரியைத் தண்டல்பண்ணுகிறான். எருசலேமிலுள்ள தேவாலயத்தை கொள்ளையிடவும் தன்னுடைய அதிகாரியை அனுப்புகிறான்.

ஆகிலும் வடதிசை ராஜா சில நாளைக்குள் கோபம் இல்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான் (தானி 11:20). ""சில நாளைக்குள்'' என்பது எத்தனை நாட்களுக்குள் என்று தெரியவில்லை. நான்காம் செலூகஸ் பதினொரு வருஷம் ஆட்சிபுரிந்தான். எருசலேமிலுள்ள தேவாலயத்தை கொள்ளையிட்ட சில நாளைக்குள் இவன் மரித்துப்போனான். எருசலேமின் தேவாலயம் ""இராஜ்ஜியத்தின் மேன்மை'' என்று அழைக்கப்படுகிறது. நான்காம் செலூக்கஸ் யுத்தத்தில் மரித்துப் போகவில்லை. இவனுடைய நம்பிக்கை துரோகி ஒருவன் இவனுக்கு விஷம் வைத்து இவனைக் கொன்று போட்டான்.

வடதிசை ராஜா தானி 11:21-24

தானி 11:21. அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக்கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம்பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான்.

தானி 11:22. பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்.

தானி 11:23. ஏனென்றால் அவனோடே சம்பந்தம்பண்ணின நாட்கள்முதல் அவன் சூதாய் நடந்து, கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்ளுவான்.

தானி 11:24. தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும்.

தானியேல் தன்னுடைய தரிசனத்திலே ஆட்டுக்கடாவையும், வெள்ளாட்டுக்கடாவையும் பார்த்தார். விசேஷமாய் முளைத்தெழும்பின நாலு கொம்புகளையும் தானியேல் தரிசித்தார். ""அவைகளில் ஒன்றி-ருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும் சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று'' (தானி 8:9).

இந்த தரிசன வாக்கியத்தில், ""சின்னக்கொம்பு'' என்று எழுதப்பட்டிருக்கிறவன் அந்தியோகஸ் எப்பிபேனசைக் குறிக்கும். இவன் யூதமார்க்கத்திற்கு மிகப்பெரிய சத்துருவாயிருந்தான். இவன் யூதர்களை அதிகமாய்த் துன்பப்படுத்தி உபத்திரவப்படுத்தினான். அந்தியோகஸ் எப்பிபேனசினுடைய ஆட்சிக்காலம் இங்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

புதியஏற்பாட்டிலே அந்திக்கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தியோகஸ் எப்பிபேனஸ் என்பவனே, அந்திக்கிறிஸ்துவுக்கு அடையாளமானவன் என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

""ராஜா தனக்கு இஷ்டமானபடிசெய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும். அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கினான்'' (தானி 11:36,37).

அந்தியோகஸ் எப்பிபேனஸ் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறவன். அவன் தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்கிறவன். அவன் சில சமயங்களில் அரண்மனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி, தன்னுடைய நகரத்திற்குள் மாறுவேஷம்போட்டு, சுற்றி அலைவானாம். இவன் தீயகுணமுள்ளவன் என்றும், இவன் ஒரு பைத்தியக்காரன் என்றும் சரித்திர ஆசிரியர்கள் இவனைப்பற்றி எழுதுகிறார்கள்.

அந்தியோகஸ் எப்பிபேனசுடைய தகப்பன் ரோமப்பேரரசுக்கு விரோதமாக கலகம்பண்ணினான். ரோமப்பேரரசார் இவனை ஒடுக்குவதற்காக, அந்தியோகஸ் எப்பிபேனசை, ரோமாபுரியின் சிறைச்சாலையிலே, பிணைக்கைதியாகப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள்.

""எப்பிபேனஸ்'' என்னும் பெயருக்கு அறிவாளி, புத்திசாலி என்று பொருள். இவன் உண்மையில் புத்திசாலியல்ல. இவன் தன்னைத்தானே புத்திசாலி என்று சொல்லிக்கொண்டான்.

அந்தியோகஸ் எப்பிபேனஸ், ரோமாபுரி சிறைச்சாலையில், பிணைக்கைதியாக அடைக்கப்பட்டிருந்தபோது, சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றும், சீரிய தேசத்திற்கு தான் ராஜாவாகவேண்டும் என்றும் அவனுக்குள் ஆசையும் யோசனையும் உண்டாயிற்று.

தன்னுடைய மூத்த சகோதரனின் குமாரன் தேமேத்திரியுவை ரோமப்பேரரசாரிடம், தனக்குப் பதிலாக, பிணைக்கைதியாக ஒப்புக்கொடுத்து அவன் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினான். இக்காலத்தில் அந்தியோகஸ் எப்பிபேனசுடைய மூத்த சகோதரனை ஹெலியோடோரஸ் என்பவன் கொன்றுபோட்டான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அந்தியோகஸ் எப்பிபேனஸ் சீரிய தேசத்திற்கு ராஜாவானான்.

""அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்'' (தானி 11:21) என்று இவனைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

அந்தியோகஸ் எப்பிபேனஸ் தன்னுடைய மூத்த சகோதரனுக்கு பின்பு, சீரிய தேசத்தின் சிங்காசனத்தில் வீற்றிருந்தாலும், சீரிய தேசத்தை ஆளுகை செய்யும் பொறுப்பு அவனுக்கு கொடுக்கப்படவில்லை.

ஆனால் அந்தியோகஸ் எப்பிபேனஸ் மிகவும் தந்திரமுள்ளவன். தன்னுடைய மூத்த சகோதரன் மரித்துப்போனதினால், சீரிய தேசத்தைக் காப்பாற்றுவதற்காக, தான் ரோமப்பேரரசின் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று வந்திருப்பதாக சீரிய தேசத்து ஜனங்களுக்கு சொன்னான். தனக்குப் பதிலாக, தன்னுடைய மூத்த சகோதரனுடைய குமாரனை, ரோமப்பேரரசாரிடம் பிணைக்கைதியாக ஒப்படைத்திருப்பதாகவும் ஜனங்களிடம் பேசினான். ஜனங்களுக்கு இச்சகமான வார்த்தைகளையும் சொன்னான்.

""இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம்பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான்'' (தானி 11:21) என்று இவனைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்தியோகஸ் எப்பிபேனஸ், தன்னுடைய மூத்த சகோதரனைக் கொன்றுபோட்ட ஹெலியோடோரசையும் அழித்துப்போடுகிறான். இவனுடைய மூத்த சகோதரனுக்கு பின்பு, அவனுடைய குமாரன் முறைப்படி ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் அந்தியோகஸ் எப்பிபேனசோ சீரிய தேசத்தாரிடம் இச்சகமாகப் பேசுகிறான். தன்னுடைய மூத்த சகோதரனுடைய குமாரன், ரோமாபுரி சிறைச்சாலையிலிருந்து விடுதலைபெற்று வந்தவுடன், ஆட்சிப்பொறுப்பை அவனிடத்தில் ஒப்புக்கொடுத்து விடுவதாக அந்தியோகஸ் எப்பிபேனஸ் இச்சகமாகப் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்கிறான். தன் சகோதரனுடைய குமாரனிடம் இது தொடர்பாக, தான் உடன்படிக்கை பண்ணியிருப்பதாகவும், சீரிய தேசத்து ஜனங்கள் மத்தியிலே இச்சகம் பேசுகிறான்.

அந்தியோகஸ் எப்பிபேனஸ், தன் மூத்த சகோதரனுடைய குமாரனோடே சம்மந்தம் பண்ணின நாட்கள் முதல், அவன் சூதானமாய் நடக்கிறான். கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டு வந்து பெலன்கொள்கிறான். பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படுகிறது.

சீரிய தேசத்தை ஆளுகை செய்யவேண்டிய உடன்படிக்கையின் ராஜா ரோமாபுரி சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டிருக்கிறான். ""உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான்'' (தானி 11:22) என்று அந்தியோகஸ் எப்பிபேனசைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

சீரிய தேசத்தின் பிரபுக்களெல்லோரும் அந்தியோகஸ் எப்பிபேனசுக்கு ஆதரவாயிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு சிலர் மாத்திரமே இவனோடு கூடயிருந்தார்கள். அதன் பின்பு எல்லோரும் இவன் பக்கமாகச் சேர்ந்துகொண்டார்கள். அந்தியோகஸ் எப்பிபேனஸ் பெலன் கொள்கிறான்.

சீரிய தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்தியோகஸ் எப்பிபேனஸ் சீரிய தேசத்திற்குள்ளே பிரவேசிக்கிறான். தன் பிதாக்களும், தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததை அந்தியோகஸ் எப்பிபேனஸ் செய்கிறான். யுத்தத்திலே தனக்கு கிடைத்த கொள்ளைப்பொருட்களை, சீரிய தேசத்து ஜனங்களுக்கு இறைத்து பங்கிடுகிறான் (தானி 11:24). ஜனங்கள் இவன்மீது சந்தோஷமாயிருக்கிறார்கள். இந்தக் கொள்ளைப்பொருட்களெல்லாம் அந்நிய தேசங்களிலே கொள்ளையிட்டு சூறையாடி அபகரித்தவையாகும்.

அந்தியோகஸ் எப்பிபேனஸ் சீரிய தேசத்து ஜனங்களுக்கு கொள்ளைப்பொருளைப் பங்கிட்டுக்கொடுத்தாலும், அவன் அரண்களுக்கு விரோதமாக தனக்குள் உபாயங்களை யோசிக்கிறான் (தானி 11:24). சீரிய தேசத்திலே இருக்கிற பலவான்கள், பிரபுக்கள், இராணுவ தளபதிகள் ஆகியவர்கள் அந்த தேசத்தில் அரண்களைப்போல இருக்கிறார்கள்.

அந்தியோகஸ் எப்பிபேனஸ் அரண்களைப்போல இருக்கிற இவர்களுக்கு மேலாக தன்னை உயர்த்தி, தன்னுடைய ராஜாசனத்தை பாதுகாத்துக்கொள்கிறான். தனக்கு ஆதரவு கொடுக்கிற பிரபுக்களை நேசிக்கிறான். அவர்களுக்கு வெகுமதி கொடுக்கிறான். தனக்கு எதிர்த்து நிற்கிறவர்களையோ வஞ்சனை செய்து அழித்துப்போடுகிறான். சீரிய தேசத்திலுள்ள எல்லா அரண்களையும் தன்னுடைய கட்டுப்பட்டிற்குள் கொண்டு வருகிறான்.

""சில காலம் மட்டும் இப்படியிருக்கும்'' (தானி 11:24). அந்தியோகஸ் எப்பிபேனஸ் ஆரம்பத்தில், ஜனங்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக, கொள்ளைப் பொருட்களை அவர்களுக்கு பங்கிட்டுக்கொடுத்தான். தேசத்திலுள்ள எல்லா அரண்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். அதன் பின்பு கொள்ளைப்பொருட்களை ஜனங்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதை நிறுத்திவிட்டான். அவர்களை அடக்கி ஆளுகை செய்ய ஆரம்பித்தான். சில காலம் மட்டும் உதவி செய்வதுபோல நடித்தான். அதன் பின்பு அவன் தன் கொடூரமான சுயரூபத்தைக் காண்பித்தான்.

வடதிசை ராஜாவின் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான் (தானி 11:21). இது நான்காம் அந்தியோகசைக் குறிக்கும். இவனுடைய மறுபெயர் எப்பிபேனஸ். இவனுடைய ஆட்சிக் காலம் கி.மு. 175-163. தானி 11:21-34 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் இவனைப் பற்றியது ஆகும். சீரியாவின் கடைசி ராஜாவாகிய அந்திக் கிறிஸ்துவைப் பற்றியும் இந்த வசனப்பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. ஆயினும் அந்தியோக்கஸ் எப்பிபேனஸ் என்பவன் அந்திகிறிஸ்து அல்ல.

அந்தியோக்கஸ் எப்பிபேனசிற்கும் யாசேனுக்கும் இடையிலுள்ள ஒப்பந்தம் முடிந்துபோயிற்று. (தானி 11:22). அந்தியோக்கஸ் எப்பிபேனஸ் தன் தந்தையின் மூலமாக ரோமப்பேரரசுக்கு கட்ட வேண்டிய வரிப்பணத்தை கட்டமுடியாமல் போனதற்காக சிறைப்பிடிக்கப் படுகிறான். சிறையிருப்பிற்குப் பின்பு அவன் தன் தேசத்திற்கு திரும்பி வரும்போது தேசத்தில் பலவிதமான குழப்பங்கள் நிலவிற்று. இவனுக்கு கொஞ்சம் ஜனங்களே ஆதரவாக இருந்தார்கள். ஆயினும் தன் சகோதரன், தன் ஆதரவாளர்கள் ஆகியோருடைய துணையுடன் மறுபடியும் ஆட்சிப்பெறுப்பை பெற்றுக்கொள்கிறான்.

தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசிப்பான் (தானி 11:24). அந்தியோக்கஸ் எப்பிபேனஸ் ராஜாவான பின்பு பாலஸ்தீனமும் பொனீசியாவும் தனக்கு உரியது என்று அறிவித்தான். இதனால் சீரியாவிற்கும் எகிப்திற்கும் இடையில் யுத்தம் உண்டாயிற்று. (தானி 11:23).

அவன் தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான் (தானி 11:24). யுத்தத்தில் கிடைத்த கொள்ளைப் பொருட்களை அந்தியோகஸ் தன்னுடைய நண்பர்களுக்கும் படை வீரர்களுக்கும் தாராளமாக பிரித்துக் கொடுத்தான். இவனுடைய முன்னோர்கள் இதுபோன்று செய்யவில்லை. இவன் வீதிகளுக்குச் சென்று பொன், வெள்ளி ஆகியவற்றை ஜனங்கள் மத்தியில் எறிவான் என்று வரலாறு கூறுகிறது.

""அவன் அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்'' (தானி 11:24). அந்தியோக்கசின் ஆட்சிக் காலத்தில் எகிப்து தேசம் இவன் மீது யுத்தம் பண்ண முயற்சிபண்ணிற்று. இவன் பலவிதமான உபாயங்களை யோசித்து எகிப்தின் மீது யுத்தத்தைத் தவிர்த்தான். தன்னுடைய எல்லைகளைப் பலப்படுத்தி எகிப்தின் மீது யுத்தம்பண்ண ஆயத்தமானான்.

தென்றிசை ராஜாவுக்கு விரோதமாய் இரண்டாவது யுத்தம் தானி 11:25-27

தானி 11:25. பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடேபோய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.

தானி 11:26. அவனுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் பிரவாகமாய்வரும்; அநேகர் கொலையுண்டு விழுவார்கள்.

தானி 11:27. இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியி-ருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்துக்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.

வடதிசை ராஜ்யத்தின் ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனஸ், தென்றிசை ராஜ்யமாகிய எகிப்து தேசத்தின்மீது இரண்டாம் முறையாக யுத்தம்பண்ணுகிற சம்பவம் இந்த வசனப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் எகிப்து தேசத்திலே தால்மேயஸ் பிலோமீட்டர் என்பவன் ராஜாவாயிருக்கிறான். அந்தியோகஸ் தென்றிசை ராஜாவாகிய இவனுக்கு விரோதமாய், பெரிய சேனையோடே போர் செய்ய தன் வல்லமையையும், தன் ஸ்திரத்தையும் எழுப்புகிறான்.

சரித்திரத்தில் தால்மேயஸ் பிலோமீட்டர் என்பவன் ""தால்மி'' என்றும் அழைக்கப்படுகிறான். ""தால்மி'' என்பது எகிப்து தேசத்து ராஜாக்களின் பொதுவான பெயராகும். அந்தியோகசுக்கு விரோதமாக, தென்றிசை ராஜாவாகிய தால்மியும், மிகவும் பலத்த பெரிய இராணுத்தோடே போய் யுத்தம் கலக்கிறான். இந்த யுத்தத்தில் அந்தியோகசின் பெரிய சேனை, தால்மியின் பலத்த இராணுவத்தை முறியடிக்கிறார்கள்.

எகிப்து தேசத்தின் இராணுவ தளபதிகள் அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறார்கள். தால்மிக்கு இராணுவ ஆலோசனை சொல்லுகிறவர்கள், அவனுக்கு தப்பான ஆலோசனைகளைச் சொல்லி, அவனை மோசம்போக்குகிறார்கள். ""அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்'' (தானி 11:25) என்று இந்த சம்பவத்தைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

எகிப்து தேசத்து ராஜாவின் போஜனங்களை சாப்பிடுகிறவனே அவனை வஞ்சித்துவிடுகிறான். தால்மியினுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துகிறார்கள்; வடதிசை ராஜாவினுடைய இராணுவம் பிரவாகமாய்வருகிறது; இந்த யுத்தத்தில், எகிப்து தேசத்தின் இராணுவத்திலுள்ள அநேகர் கொலையுண்டு விழுகிறார்கள் (தானி 11:26).

இந்த யுத்தத்திற்கு பின்பு வடதிசை ராஜ்யத்திற்கும், தென்றிசை ராஜ்யத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த உடன்படிக்கைக்கு, இவ்விரண்டு தேசங்களின் ராஜாக்களும் உண்மையுள்ளவர்களாயில்லை.

""இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியி-ருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்துக்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்'' (தானி 11:27).

இவ்விரண்டு ராஜாக்களும் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கை வாய்க்கவில்லை. ஒருவரையொருவர் வஞ்சிக்க நினைக்கிறார்கள். ஒருவருக்கொருவர் தீங்கு செய்கிறார்கள். இரண்டு தேசங்களுக்கும் இடையில் சமாதானம் உண்டாகவில்லை. இவ்விரண்டு தேசங்களுக்கும் கர்த்தரால் நியமிக்கப்பட்ட முடிவு, உடனே நிறைவேறாமல், கர்த்தரால் குறிக்கப்பட்டுள்ள காலம் வரையிலும், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்தியோகஸ் எப்பிபேனஸ் பல வருஷங்கள் ஆயத்தம் செய்து இறுதியில் எகிப்து தேசத்தின் மீது யுத்தம்பண்ணி அதை ஜெயித்தான். தால்மியை கைது பண்ணினான். அந்தியோகஸ் எகிப்து தேசத்தின் ராஜாவானான். இவனுடைய ஆட்சிக்காலம் கி.மு. 171-167.

தால்மியின் அதிகாரிகள் சிலரை அந்தியோகஸ் எப்பிபேனஸ் தந்திரமாகத் தன் வசப்படுத்திக் கொண்டான். இவர்கள் தால்மியைத் தோற்க வைப்பதற்கு எப்பிபேனசிற்கு உதவி புரிந்தார்கள். இவர்களுடைய உதவியினால் எகிப்து விழுந்தது. (தானி 1)

சீரியாவின் ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனசின் இருதயமும் எகிப்தின் ராஜாவாகிய தால்மியின் இருதயமும் தீங்கு செய்ய நினைத்தது. இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக நடித்தார்கள். ஆயினும் இவர்கள் ஒருவருக் கொருவர் தீங்கு செய்து கொண்டார்கள். ஒருவருக்கொருவர் பொய் பேசிக்கொண்டார்கள். எகிப்து தங்களிடம் சரணடைய வேண்டுமென்று ரோமப்பேரரசார் கோரிக்கை விடுத்தார்கள். இதனால் தால்மி வளம்பெறவில்லை. (தானி 11:27)

தென்றிசை ராஜாவுக்கு விரோதமாய் மூன்றாவது யுத்தம் தானி 11:28,29

தானி 11:28. அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்துக்குத் திரும்பிப் போவான்.

தானி 11:29. குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல இராது.

வடதிசை ராஜா எகிப்து தேசத்திற்கு விரோதமாக மறுபடியும் யுத்தம்பண்ண வருகிறான். இதற்கு முந்தி நடைபெற்ற யுத்தத்தில், வடதிசை ராஜாவுக்கு ஏராளமான கொள்ளைப்பொருட்கள் கிடைத்தது. அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்திற்கு திரும்பிப்போனான்.

எகிப்து தேசமும், சீரிய தேசமும் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த உடன்படிக்கைக்கு இவ்விரண்டு ராஜாக்களும் உண்மையாயில்லை. அந்த உடன்படிக்கையும் வாய்க்கவில்லை. வடக்கு ராஜ்யத்தின் ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனஸ், தான் தென்றிசை ராஜாவோடு செய்து கொண்ட சமாதான உடன்படிக்கைக்கு விரோதமாக சிந்தித்து செயல்படுகிறான். அவன் தன் இருதயத்தை பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைக்கிறான் தென்றிசை ராஜ்யத்துடன் மறுபடியும் யுத்தம்பண்ணுவதற்கான காரியங்களை செய்கிறான். வடதிசை ராஜா, எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போதே, அந்த தேசத்தின்மீது மறுபடியும் யுத்தம்பண்ண வேண்டும் என்னும் எண்ணத்தோடு, தன் தேசத்திற்கு திரும்பிப்போகிறான்.

அந்தியோகஸ் எப்பிபேனஸ் எகிப்து தேசத்தின்மீது மறுபடியும் யுத்தம் பண்ண சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். இரண்டு வருஷங்கள் சென்ற பின்பு, குறித்த காலத்திலே, வடதிசை ராஜா திரும்பவும் தென்தேசத்தின்மீது யுத்தம்பண்ண வருகிறான். ஆனால் இந்த யுத்தத்தில் வடதிசை ராஜாவால் ஜெயிக்க முடியவில்லை. ""அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது'' (தானி 11:29) என்று எழுதப்பட்டிருக்கிறது. வடதிசை ராஜாவுக்கு விரோதமாக கித்தீமின் கப்பல்கள் வரும் (தானி 11:30).

""கித்தீமின் கப்பல்கள்'' என்பது ரோமப்பேரரசின் கப்பல் படையைக் குறிக்கும் வார்த்தை. அல்லது இந்த வார்த்தை ரோமப்பேரரசின் பிரபுக்கள் சபையிலுள்ள பிரதிநிதிகளைக் குறிக்கலாம். இந்த பிரதிநிதிகள் அந்தியோகஸ் எப்பிபேனசுக்கு விரோதமாக கப்பல்களில் வந்திருக்கலாம்.

இக்காலத்தில் எகிப்து தேசத்திற்கு, தால்மேயஸ் பிலோமீட்டர் என்பவன் ராஜாவாயிருக்கிறான். இவன் ரோமப்பேரரசோடு இராணுவ ஒப்பந்தம் செய்திருக்கிறான். அந்தியோகஸ் எகிப்து தேசத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ண வந்தபோது, எகிப்தின் ராஜா ரோமப்பேரரசின் உதவியை நாடுகிறான்.

அந்தியோகஸ் எப்பிபேனஸ் தன்னுடைய பலத்த சேனையோடு எகிப்து தேசத்தை முற்றிக்கையிடுகிறான். எகிப்து தேசத்தின் பிரதான பட்டணமான அலெக்சந்திரியா பட்டணத்தில், எகிப்தின் ராஜாவும், அவனுடைய தாயாராகிய கிளியோபத்திராவும் தங்கியிருக்கிறார்கள். அந்தியோகஸ் அலெக்சந்திரியா பட்டணத்தை தன் பலத்த படைபலத்தினால் முற்றிக்கையிடுகிறான். இந்த சூழ்நிலையில் எகிப்தின் ராஜா ரோமப்பேரரசின் உதவியை நாடுகிறான்.

ரோமப்பேரரசின் பிரபுக்கள் சபை, வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனசிடம் தன்னுடைய தூதுவர்களை அனுப்புகிறார்கள். வடதிசை தேசத்தின் இராணுவம் அலெக்சந்திரியா பட்டணத்திற்கு விரோதமாக போட்டிருக்கிற முற்றிக்கையை விலக்கிக்கொள்ளுமாறு ரோமப்பேரரசார் கட்டளையிடுகிறார்கள். வடதிசையின் ராஜாவும் வேறு வழியில்லாமல் முற்றிக்கையை விலக்கிக்கொள்கிறான். அவனால் ரோமப்பேரரசுக்கு விரோதமாக யுத்தம்பண்ண முடியவில்லை.

எகிப்து தேசத்திலிருந்து, வடதிசையின் பலத்த இராணுவம், எகிப்தின் சேனையோடு யுத்தம்பண்ண முடியாமல், தங்கள் தேசத்திற்கு திரும்பிப்போகிறார்கள். அந்தியோகஸ் எப்பிபேனஸ் ஏற்கெனவே எகிப்து தேசத்தின்மீது யுத்தம்பண்ணி அதைக் கொள்ளையிட்டதுபோல, இப்போது கொள்ளையிட முடியவில்லை. அவனுடைய பின்நடபடி முன்நடபடி போல இல்லை.

எகிப்து தேசத்தைக் கைப்பற்றி விட்டு அந்தியோகஸ் அந்தியோகியாவிற்கு திரும்பி வருகிறான். யுத்தத்தில் அந்தியோகஸ் மரித்துப் போனான் என்று நினைத்து எருசலேமிலுள்ள ஜனங்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். இதைக்கண்ட அந்தியோகசிற்கு யூதர்கள் மீது மிகுந்த கோபமுண்டாயிற்று. அதன்பின்பு அந்தியோகஸ் யூதர்களுக்கு விரோதமாக செயல்படுகிறான் (தானி 11:28).

அந்தியோக்கஸ் எப்பிபேனஸ் மறுபடியும் எகிப்து தேசத்தின் மீது யுத்தம்பண்ணுவான். முதலாவது யுத்தத்தில் அந்தியோகஸ் ஜெயம் பெற்றான். ஆனால் இரண்டாவது யுத்தத்தில் அந்தியோகஸ் எகிப்தை ஜெயிக்கமாட்டான் (தானி 11:29).

யூதாதேசத்தாருக்கு உபத்திரவங்கள் தானி 11:30-39

தானி 11:30. அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான்.

தானி 11:31. ஆனாலும் அவனிடத்தி-ருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அன்றாடப-யை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.

தானி 11:32. உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்.

தானி 11:33. ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்.

தானி 11:34. இப்படி அவர்கள் விழுகையில் கொஞ்சம் ஒத்தாசையால் சகாயமடைவார்கள்; அப்பொழுது அநேகர் இச்சக வார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்கொள்வார்கள்.

தானி 11:35. அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்.

தானி 11:36. ராஜா தனக்கு இஷ்டமானபடிசெய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

தானி 11:37. அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,

தானி 11:38. அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப்பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.

தானி 11:39. அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான்.

வடதிசை ராஜா எகிப்து தேசத்தின்மீது யுத்தம்பண்ண முடியாமல், தன் தேசத்திற்கு திரும்பிப்போகிறான். அவனுக்கு விரோதமாய் கித்தீமின் கப்பல்கள் வந்ததினால், அவனால் எகிப்து தேசத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ண முடியவில்லை. வடதிசை ராஜா மனநோவடைந்து, தன் தேசத்திற்கு திரும்பிப்போகிறான்.

தென்றிசை தேசத்திற்கும், வடதிசை தேசத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய், வடதிசை ராஜா குரோதம் கொள்கிறான். ஒரு சிலர் இவ்விரண்டு தேசங்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையை ஆதரிக்கவில்லை. அவர்கள் இந்தப் பரிசுத்த உடன்படிக்கையை தள்ளிவிடுகிறார்கள். வடதிசை ராஜாவாகிய எப்பிபேனஸ், இந்த உடன்படிக்கையை தள்ளினவர்களோடு சிநேகம் கொண்டு, அவர்களை அனுசரிக்கிறான்.

வடதிசை ராஜாவால் தென்றிசை ராஜ்யத்தின்மீது யுத்தம்பண்ண முடியவில்லை. ரோமப்பேரரசார் தென்றிசை ராஜ்யத்திற்கு ஆதரவாகயிருந்து அவர்களைப் பாதுகாக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வடதிசையின் ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனஸ், யூதர்களுக்கு விரோதமாக எழும்புகிறான். எருசலேம் நகரத்தையும் தேவாலயத்தையும் பாழாக்கிப்போடுகிறான்.

வடதிசையின் ராஜா, தென்றிசை ராஜ்யத்திற்கு விரோதமாக யுத்தம் பண்ண முடியாமல் மனநோவடைந்து, தன் தேசத்திற்கு திரும்பி வரும்போது, வழியிலிருக்கும் யூதாதேசத்தின்மீது யுத்தம்பண்ணுகிறான். வடதிசை ராஜாவால் எகிப்திற்கு விரோதமாக யுத்தம்பண்ண முடியவில்லை. ரோமப்பேரரசார் எகிப்திற்கு ஆதரவாகயிருக்கிறார்கள். யூதாதேசத்திற்கு ஆதரவாக ஒருவருமில்லை. ஆகையினால் தன்னால் யூதாதேசத்திற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதை ஜெயிக்க முடியும் என்று வடதிசையின் ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனஸ் நினைக்கிறான்.

வடதிசை ராஜாவும், அவனுடைய சேனைகளும் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறார்கள். எருசலேம் நகரத்தை அழித்துப்போடுகிறார்கள். தேவாலயத்தில் அன்றாட பலியை நீக்குகிறார்கள். அங்கே பாழாக்கும் அருவருப்பை வைக்கிறார்கள் (தானி 11:31).

வடதிசை ராஜாவுக்கு யூதாமார்க்கத்தின்மீது ஏற்கெனவே வெறுப்பும் விரோதமும் உண்டு. அவனுடைய இருதயம் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாயிருக்கிறது (தானி 11:28). அவன் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக குரோதம் கொண்டிருக்கிறான் (தானி 11:30). அவன் பரிசுத்த உடன்படிக்கையை தள்ளினவர்களை அனுசரிக்கிறான்.

வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனஸ் யூதருடைய மார்க்கத்தை வெறுக்கிறான். அவன் மோசேயின் பிரமாணத்தையும் வெறுக்கிறான். மெய்யான தேவனை ஆராதிப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கானான் தேசத்தை ஆசீர்வதிக்கிறார். இஸ்ரவேல் வம்சத்தாருக்கு கர்த்தர் அநேக ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் கொடுத்திருக்கிறார். அந்தியோகஸ் எப்பிபேனஸ் இந்த வாக்குத்தத்தங்களை எண்ணிப்பார்த்து, யூதர்கள்மீது பொறாமைப்படுகிறான். அவர்களுக்கு விரோதமாக குரோதம் கொள்கிறான்.

•யூதர்களில் சிலர் மோசேயின் பிரமாணத்திற்கு விரோதமாகயிருக்கிறார்கள். இவர்கள் கர்த்தருடைய பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்கள். இவர்கள் யூதமார்க்கத்திலிருந்து பின்மாரிப்போனவர்கள். அந்தியோகஸ் எப்பிபேனஸ், பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளி, யூதமார்க்கத்தைவிட்டுப் பின்வாங்கிப் போனவர்களை, தன் பக்கமாக அனுசரித்துக்கொள்கிறான் (தானி 11:30).

அந்தியோகஸ் எப்பிபேனஸ் யூதர்களுக்கும், யூதாதேசத்திற்கும் செய்த தீங்குகள் மக்கபியருடைய புஸ்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. யூதர்கள் கர்த்தருடைய பரிசுத்த உடன்படிக்கைக்கு கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள். யூதமார்க்கத்திலிருந்து பின்வாங்கிப் போனவர்களோ, கர்த்தருடைய பரிசுத்த உடன்படிக்கைக்கு துரோகிகளாயும், கீழ்ப்படியாதவர்களாயும் இருக்கிறார்கள்.

அந்தியோகஸ் இவர்களோடு இச்சகமாகப் பேசுகிறான். தன்னுடைய சாதுரிய வார்த்தைகளினாலும், இச்சக பேச்சுக்களினாலும், யூதமார்க்கத்திலிருந்து பின்வாங்கிப்போனவர்களை கள்ளமார்க்கத்தராக்குகிறான் (தானி 11:32). உடன்படிக்கைக்கு துரோகிகளாகயிருக்கிற இவர்கள், மற்ற யூதர்களையும் கள்ளமார்க்கத்தாராக ஆக்குகிற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அந்தியோகஸ் எப்பிபேனஸ் இப்படிப்பட்ட துரோகிகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறான்.

வடதிசை ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள். அவர்கள் தேவாலயத்திலே அன்றாடப-யை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைக்கிறார்கள் (தானி 11:31). அந்தியோகசின் சேனையிலுள்ளவர்கள் மாத்திரமல்ல, யூதமார்க்கத்திலிருந்து பின்மாறிப்போனவர்களும், பரிசுத்த உடன்படிக்கையை தள்ளினவர்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டு பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்த குலைச்சலாக்குகிறார்கள்.

அந்தியோகஸ் தேவாலயத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கிறான். இக்காலத்தில் மினெலாயுஸ் என்பவன் யூதமார்க்கத்தைவிட்டு விலகி, கர்த்தருடைய பிரமாணத்திற்கு துரோகம்பண்ணுகிறான். இவன் யூதாதேசத்திற்கும் துரோகியாயிருக்கிறான். இவன் வடதிசை ராஜாவாகிய அந்தியோகசை தேவாலயத்திற்குள் வழிநடத்தி அழைத்துக்கொண்டு போகிறான். அந்தியோகஸ் தேவாலயத்திலிருந்து அன்றாடபலியை நீக்கிப்போடுகிறான் (தானி 11:31).

அந்தியோகஸ் கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்திலே யூப்பித்தர் ஒலிம்பியசுக்கு ஒருசிலையை நிறுவினான் என்றும், கர்த்தருடைய ஆலயத்தை ""யூப்பித்தர் ஒலிம்பியசுடைய ஆலயம்'' என்று அழைத்தான் என்றும் சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

யூதமார்க்கத்தில் உறுதியாய்த் தரித்திருக்கிறவர்களையும், கர்த்தருடைய வேதப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறவர்களையும் அந்தியோகஸ் கொடுமைப்படுத்தினான். யூதர்களில் அநேகர் பரிசுத்த உடன்படிக்கையை தள்ளிவிட்ட போதிலும், மேலும் அநேகர் பரிசுத்த உடன்படிக்கைக்கு துரோகிகளானபோதிலும், யூதர்களில் ஏராளமானோர் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேலின் தேவனை அறிந்திருக்கிறார்கள். தங்கள் தேவனை அறிந்திருக்கிற யூதமார்க்கத்து ஜனங்கள் திடன்கொண்டு, வேதப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரகாரம், கர்த்தருக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கிறார்கள் (தானி 11:32).

இக்காலத்தில் தேவனை அறிந்திருக்கிற ஜனங்களில் எலெயாசார் என்னும் வேதபாரகன் மிகவும் முக்கியமானவன். அந்தியோகஸ் இவனுடைய வாயிலே பன்றியின் இறைச்சியைத் திணித்தான். எலெயாசரோ அந்த இறைச்சியை சுவைக்காமல் தைரியமாய்த் துப்பினான். இதன் நிமித்தமாக அவன் சித்திரவதை செய்யப்பட்டான் என்றும், அவன் இரத்தச்சாட்சியாய் மரித்தான் என்றும் யூதருடைய வரலாறு சொல்லுகிறது. இவனோடு சேர்ந்து, இவனுடைய தாயாரும், இவனுடைய ஏழுகுமாரர்களும் இரத்த சாட்சியாக மரித்தார்கள்.

இவர்கள் தங்கள் தேவனை அறிந்திருக்கிறவர்கள். இவர்கள் ""அறிவாளிகள்'' என்று அழைக்கப்படுகிறார்கள். கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்வதைவிட, பாடுகளை அனுபவிப்பதையே இந்த அறிவாளிகள் தெரிந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு தேவனைப்பற்றிய சரியான அறிவு இருக்கிறது ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துகிறார்கள். கர்த்தரைப்பற்றிய சரியான அறிவே நம்முடைய ஆத்துமாவுக்கு பெலனாயிருக்கிறது. இந்த பெலத்தினால் கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருக்கு சாட்சியாய் ஜீவிக்கிறார்கள்.

கர்த்தரை அறிந்திருக்கிறவர்கள், கர்த்தரைப்பற்றிய அறிவை மற்றவர்களுக்கும் போதிக்கிறார்கள். இவர்களுக்கு நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் தெரியும். மெய்யான தேவனுக்கும் பொய்யான விக்கிரகங்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசங்களை இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.இவர்கள் உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசத்தை அறிந்திருக்கிற அறிவாளிகள்.

அந்தியோகஸ் யூதமார்க்கத்தை அழித்துப்போடவேண்டுமென்று முயற்சி பண்ணுகிறான். யூதர்களைக் கொடுமைப்படுத்துகிறான். இக்காலத்தில் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் ஒரு சமுதாயமாக எழும்புகிறார்கள். இவர்கள் தேவனைப்பற்றிய சத்தியங்களை ஜனங்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்கள். யூதர்கள் மத்தியிலே இவர்கள் ""அறிவாளிகள்'' என்று அழைக்கப்படுகிறார்கள்.

தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் ""அநேக நாள் மட்டும் பட்டயத்தினாலும், அக்கினியினாலும், சிறையிருப்பினாலும், கொள்ளையினாலும் விழுகிறார்கள்'' (தானி 11:33). தங்கள் தேவனை அறிந்திருக்கிற அறிவாளிகள், கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாய் ஜீவித்து, இரத்த சாட்சிகளாய் மரித்துப்போகிறார்கள்.

ஜனங்களில் அறிவாளிகள் சத்தியத்திற்காக பாடுகளை அனுபவிக்கிறார்கள். யூதர்களை சுத்திகரிக்கவேண்டுமென்று இவர்கள் பிரயாசம் மேற்கொள்கிறார்கள். யூதஜனங்களுக்கு கர்த்தருடைய பிரமாணத்தைப போதிக்கிறார்கள். ஜனங்களில் அறிவாளிகளில் சிலர் இரத்த சாட்சியாக மரித்தாலும், இன்னும் அநேகர் கர்த்தருக்காக எழும்பி பிரகாசிக்கிறார்கள். அந்தியோகசால் கர்த்தருடைய ஜனத்தை முற்றிலுமாய் அழிக்க முடியவில்லை.

தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் விழுகையில், கொஞ்சம் ஒத்தாசையால் சகாயமடைகிறார்கள் (தானி 11:34). கர்த்தருடைய ஜனம் வேதனைகளையும் உபத்திரவங்களையும் அனுபவித்தாலும், பரலோகத்திலிருந்து அவர்களுக்கு சகாயம் கிடைக்கிறது. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்கிறார்.

""அப்பொழுது அநேகர் இச்சக வார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்கொள்வார்கள்'' (தானி 11:34) என்று காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார். யூதருடைய வரலாற்றில் மக்கபியர்கள் செழிக்கிறார்கள். அப்போது யூதர்களில் சிலர் இவர்களோடு ஒட்டிக்கொள்கிறார்கள். மக்கபியரை சிநேகிப்பதுபோல இச்சக வார்த்தைகளைப்பேசி, அவர்களை வஞ்சித்து அழிக்கவேண்டுமென்று சிலர் முயற்சிபண்ணுகிறார்கள். வேறுசிலரோ தங்கள் சமுதாய வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று ஆசைப்பட்டு, மக்கபியரோடு சேர்ந்துகொள்கிறார்கள்.

அந்தியோகசினுடைய காலத்தில், யூதர்களில் அநேகர் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கிறார்கள். தங்கள் தேவனை உண்மையாய் அறிந்திருக்கிற யூதர்களும் இருக்கிறார்கள். தங்கள் தேவனை அறியாமல், தங்களை அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்கிற மாய்மாலக்காரரும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே சோதிக்கப்படுவார்கள்.

""அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்'' (தானி 11:35) என்று காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார். யூதருக்கு உபத்திரவ காலம் வரும். இந்த உபத்திரவ காலம் நீடித்த காலமாயிருக்கும். ஆனாலும் உபத்திரவத்திற்கு முடிவு உண்டு.

வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் மெத்த பெருமைக்காரனாயிருக்கிறான். அவனுக்கு யுத்தத்திலே ஏராளமான வெற்றிகள் உண்டாயிற்று. அவன் அநேக தேசங்களை ஜெயித்து பெருமையோடிருக்கிறான். இவனுடைய மனதின் பெருமை மிகவும் அதிகரிக்கிறது. இவன் தன்னை பரலோகத்திற்கு சமமாக உயர்த்துகிறான். தேவனைவிட தான் பெரியவன் என்று சொல்லுகிறான்.

அந்தியோகஸ் தனக்கு இஷ்டமானபடி செய்கிறான். தன்னை உயர்த்துகிறான். எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்குகிறான். தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுகிறான் (தானி 11:36). இஸ்ரவேலின் தேவனே இங்கு ""தேவாதி தேவன்'' என்று அழைக்கப்படுகிறார். கர்த்தருடைய சித்தத்திற்கு விரோதமாக, அந்தியோகஸ் தன்னுடைய சித்தத்தைச் செய்கிறான். தனக்கு இஷ்டமானபடி செய்கிறான். கர்த்தருடைய ஜனத்திற்கு விரோதமாகவும், அவருடைய பரிசுத்த மார்க்கத்திற்கு விரோதமாகவும் அந்தியோகஸ் தனக்கு இஷ்டமானபடி செய்கிறான்.

அந்தியோகஸ் எருசலேமிலுள்ள பரிசுத்த ஆலயத்திற்குள் பிரவேசித்து, கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்த குலைச்சலாக்குகிறான். கர்த்தருடைய ஆலயத்தில் செலுத்தப்படும் அன்றாட பலியை நீக்கிப்போடுகிறான். ஓய்வுநாள் பிரமாணத்தை பரிசுத்த குலைச்சலாக்குகிறான். கர்த்தருடைய பரிசுத்தஸ்தலத்தையும், அவருடைய பரிசுத்தவான்களையும் அந்தியோகஸ் தன்னுடைய ஆணவத்தினாலும், பெருமையினாலும், பரிசுத்த குலைச்சலாக்குகிறான்.

கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிற பரிசுத்தவான்களுக்கு அந்தியோகஸ் மரணதண்டனை கொடுக்கிறான். கர்த்தரையும், கர்த்தருடைய பிரமாணத்தையும் மறுதலிக்கிறவர்களை, மரணத்திற்கு விடுவிக்கிறான். ஜனங்களில் அறிவாளிகள் அநேருக்கு அறிவை உணர்த்துகிறார்கள். இவர்கள் தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள். அந்தியோகஸ் இந்த அறிவாளிகளைக் கொன்றுபோட்டு, ஜனங்கள் மத்தியில் தேவனைப்பற்றிய அறிவு பரவாதபடி சதிபண்ணுகிறான்.

யூதமார்க்கத்திற்கு விரோதமாக இருக்கிறவர்கள் உதவியோடும், கர்த்தருடைய பிரமாணத்திற்கு துரோகிகளாக இருக்கிறவர்கள் ஒத்தாசையோடும், அந்தியோகஸ் கர்த்தருடைய பிரமாணத்தையே மாற்றுகிறான்.

அந்தியோகஸ் ஒரு நாஸ்திகன். அவன் எந்த மார்க்கத்தின் தேவனையும் மதிப்பதில்லை. அவன் தன் பிதாக்களின் தேவர்களையும் மதிப்பதில்லை. ஸ்திரீகளின் சிநேகத்தையும் மதிப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தியோகஸ் தன்னையே பெரியவனாக்குகிறான் (தானி 11:37). அந்தியோகஸ் கர்த்தருக்கு விரோதமாகக் கிரியை செய்தாலும் அவனுக்கு காரியங்கள் கைகூடிவருகிறது. ""கோபம் தீருமட்டும் அவனுக்கு கைகூடிவரும். நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்'' (தானி 11:36) என்று காபிரியேல் தானியேலுக்கு சொல்லுகிறார்.

அந்தியோகஸ் தன்னுடைய பரம்பரை தெய்வத்தையும் மதிக்கவில்லை. தன்னுடைய தேசத்திலே எந்த மார்க்கமும் இருக்கக்கூடாது என்று நினைத்து, எல்லா மார்க்கங்களையும் ஒழிப்பதற்கு சட்டம் இயற்றுகிறான். அந்தியோகஸ் தன்னுடைய பூர்வீகத்து மார்க்கங்களையும், தன்னுடைய பிதாக்களின் தேவர்களையும் மதிக்கவில்லையென்றாலும், அவன் கிரேக்கர்களின் விக்கிரகங்களை விரும்புகிறான். வடதிசை ராஜ்யத்தில் இதுவரையிலும் இல்லாத புதிய தெய்வத்தை, தன் தேசத்திற்கு கொண்டு வந்து ஸ்தாபிக்கிறான்.

அந்தியோகஸ் அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணுகிறான். அவன் தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப்பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுகிறான் (தானி 11:38).

""அரண்களின் தேவன்'' என்பது அதிகாரத்தின் தேவனாகயிருக்கலாம். இந்த தேவனைப்பற்றி அந்தியோகசின் பிதாக்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் இந்த தேவனை அறியவுமில்லை. இதை வழிபடவும் இல்லை. அரண்களின் தேவன் என்பது, ""யூப்பித்தர் ஒலிம்பியஸ்'' என்னும் கிரேக்கருடைய தெய்வமாகயிருக்கலாம். அந்தியோகசின் காலத்திற்கு முன்பு, சீரிய தேசத்திலே ""அரண்களின் தேவன்'' காணப்படவே இல்லை.

இஸ்ரவேல் வம்சத்தாருக்கு, எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயம் ""அரணான பரிசுத்த ஸ்தலமாகயிருக்கிறது'' (தானி 11:31). அந்தியோகஸ் அரண்களின் தேவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதை ""அரணிப்பான கோட்டை'' என்று அழைக்கிறான். இந்த கோட்டையில் அரண்களின் தேவனுடைய சிலையை ஸ்தாபிக்கிறான். ""அரண்களின் தேவன்'' என்பது பணமாகயிருக்கலாம். அல்லது ஐசுவரியமாகயிருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். பணத்தால் எதையும் விலைக்கு வாங்க முடியும் என்றும், பணம் எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் என்றும் அந்தியோகஸ் நம்புகிறான்.

தான் ஸ்தாபித்த அரணிப்பான கோட்டைகளையும், அந்நிய தேவனையும் மதிக்கிறவர்களுக்கு, அந்தியோகஸ் மகாகனமுண்டாக்குகிறான். அவர்களுக்கு ராஜ்யத்திலே அதிகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறான். அரண்களின் தேவனை கனம்பண்ணி, தங்கள் தெய்வமாக ஏற்றுக்கொள்கிறவர்கள், அநேகரை ஆளுகை செய்யும் பிரபுக்களாக உயர்த்தப்படுகிறார்கள். அந்தியோகஸ் அவர்களுக்கு சீரிய தேசத்தை கிரயத்திற்காக பங்கிட்டு கொடுக்கிறான்.

அந்தியோக்கசால் எகிப்தின் மீது தொடர்ந்து யுத்தம்பண்ண முடியவில்லை. ரோமபேரரசுடைய கித்தீமின் கப்பல்கள் அந்தியோகசிற்கு விரோதமாக வந்தன. அந்தியோகஸ் ரோமபேரரசுக்கு பணிந்து எகிப்தின் மீது யுத்தம்பண்ணுவதை நிறுத்தி விட்டு தன் தேசத்திற்கு திரும்பிப் போனான்.

அவன் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொள்வான் (தானி 11:30). அந்தியோக்கஸ் எருசலேமுக்கு விரோதமாக வந்து ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று போட்டான். பலரை அடிமையாக விற்றான். யூதர்களுடைய தேவாலயத்தை அருவருப்பாக்கினான். பரிசுத்த பணிமுட்டுக்களை எடுத்துச்சென்றான். யூதமார்க்கத்தின் ஆராதனையைத் தடை பண்ணினான். தன்னுடைய தெய்வத்தின் ஆராதனையை யூதருடைய தேவாலயத்தில் ஆரம்பித்து வைத்தான். யூதர்கள் அந்தியோகசிற்கு எதிராக நான்கு வருஷங்களாக கலகம் பண்ணினார்கள். (தானி 11:32-34).

பெர்சியாவில் நடைபெற்ற யுத்தத்தில் அந்தியோகஸ் மரித்துப்போனான். இத்துடன் தானியேலின் தரிசனத்தில் வரலாற்றுப் பகுதி முடிவு பெறுகிறது (தானி 11:2-34). சீரியா தேசத்திலும் எகிப்து தேசத்திலும் மேலும் பல ராஜாக்கள் ஆட்சிபுரிந்தார்கள். கி.மு. 30ஆவது வருஷத்தில் ரோமபேரரசார் இவ்விரு தேசங்களையும் கைப்பற்றினார்கள்.

அவர்கள் அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அன்றாடப-யை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள் (தானி 11:31). வருங்காலத்தில் அந்திக்கிறிஸ்து பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்த குலைச்சலாக்குவான். அங்கு அன்றாட பலியை நீக்குவான். பாழாக்கும் அருவருப்பை தேவாலயத்தில் வைப்பான். அந்த சம்பவம் வேறு. இந்த சம்பவம் வேறு (தானி 8:9-14). அந்தியோகஸ் தேவாலயத்தில் பாழாக்குகிற அருவருப்பை வைத்து 2100 வருஷங்களுக்கு மேலாயிற்று.

அந்தியோகஸ் எப்பிபேனசிஸ்கு எதிராக யூதர்கள் கலகம்பண்ணுவார்கள். அவர்களுக்கு சிறிது ஒத்தாசையே கிடைக்கும்.

""முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும்'' (தானி 11:35). கடைசி நாட்களில் இஸ்ரவேலின் மீது நடைபெறப்போகும் சம்பவங்களைக் காண்பிப்பதே இந்த தரிசனத்தின் முக்கியமான நோக்கமாகும் (தானி 10:14).

ராஜா தனக்கு இஷ்டமானபடிசெய்வான் (தானி 11:36). இந்த வசனத்திலிருந்து தானியேலின் புஸ்தகம் கடைசி வரையிலும் வருங்காலத்து அந்திக் கிறிஸ்துவைப் பற்றியும் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு சீரியாவின் கடைசி ராஜாவோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.

இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகை வரையிலும் அந்திக்கிறிஸ்து தனக்கு இஷ்டமானபடி செய்வான். அதன் பின்பு, அவனால் தனக்கு இஷ்டமானதைச் செய்ய முடியாது. (தானி 7:11; தானி 8:25).

""கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்'' (தானி 11:36) இந்த வாக்கியம் கர்த்தருடைய கோபத்தைக் குறிப்பிடுகிறது. முத்திரைகள், எக்காளங்கள், கலசங்கள், ஐயோக்கள் ஆகியவை மனுஷர்மீது வரும். தானியேலின் எழுபதாவது வாரத்தில் மனுஷருடைய பாவங்களின் நிமித்தமாகக் கர்த்தருடைய கோபம் அவர்கள்மீது வரும். (வெளி 6:17; வெளி 15:1). இந்தக் காலத்தில் இஸ்ரவேல் தேசத்தார் தங்கள் பாவங்களைவிட்டு மனந்திரும்புவார்கள்.

பூமியில் பாவத்தையும், கலகத்தையும் அழிப்பதற்காக இயேசு கிறிஸ்து மறுபடியும் வருவார். அப்போது இஸ்ரவேல் ஜனத்தாரோடு மற்ற ஜனத்தாரும் மனந்திரும்புவார்கள். (1கொரி 15:24-28; எபே 1:10; வெளி 21:3-7). இந்த வசனங்களெல்லாம் இங்கு கூறப்பட்டிருக்கும் ராஜா இனிமேல் வரப்போகிறவன் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. கர்த்தர் பூமியில் பாவத்தை ஒழிக்கும்போது இந்தப் பூமியை ஆளுகை செய்யும் கடைசி ராஜா இவனாகவே இருப்பான். இவன் 2தெச 2:8; வெளி 13:18) ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் மிருகமாக இருப்பான். கர்த்தருடைய கோபத்தைப் பற்றி தானி 8:19; தானி 9:16; ஏசா 10:23,25 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

தானி 10-12 ஆகிய அதிகாரங்களின் நோக்கம்

1. கடைசி நாட்களில் இஸ்ரவேலில் நடைபெறப் போகும் சம்பவங்களை விவரிப்பது (தானி 10:14)

2. அந்திக்கிறிஸ்து எங்கிருந்து வருவான் என்பதை வெளிப்படுத்துவது (தானி 11:2-45)

3. இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக இஸ்ரவேல் தேசத்தை ஒடுக்கும் புறஜாதி தேசங்களைப் பற்றி முழுவதுமாக வெளிப்படுத்துவது (தானி 2:37-45; தானி 7:17-27; தானி 8:20-25)

4. சின்னக்கொம்பு அல்லது அந்திக் கிறிஸ்துவைப் பற்றி அதிகமான செய்தியை அறிவிப்பது (தானி 11:36-12:7)

5. வடதிசையின் ராஜாவே அந்திக்கிறிஸ்து என்பதை அறிவிப்பது (தானி 11:36-45).

6. திருத்தப்பட்ட ரோமப்பேரரசையும் திருத்தப்பட்ட கிரேக்க பேரரசையும் பற்றி முழுவதுமாக வெளிப்படுத்துவது (தானி 2:40-43; தானி 7:23-24)

7. அந்திக்கிறிஸ்து எங்கிருந்து வருவான் என்பதைக் குறிப்பிட்டு அறிவிப்பது. அவன் சீரியா தேசத்திலிருந்து வருவான் (தானி 7:23-24; தானி 8:9-14,20-25; தானி 11:36-45)

8. அந்திக்கிறிஸ்து எப்பொழுது வருவான். ஏன் வருவான் எப்படி வருவான் என்பதை விவரிப்பது (தானி 7:23-24;

தானி 8:9-14, 20-25; தானி 9:27; தானி 11:36-45)

9. கடைசி நாளின் யுத்தங்களைப் பற்றி முழுவதுமாக வெளிப்படுத்துவது (தானி 2:40-45; தானி 7:23-24; தானி 8:9-14,20-25; தானி 11:40-45)

10. இக்காலத்து உலகிலுள்ள இராஜ்யங்களில் சாத்தானின் அதிகாரங்கள் செயல் படுவதைக் காண்பிப்பது(தானி 10:12- 21; தானி 11:1; தானி 12:1)

அந்திக்கிறிஸ்து - வடதிசை ராஜா

தானி 11:36-12:13 ஆகிய வசனங்களில் அந்திக்கிறிஸ்து கடைசி நாட்களில் வடதிசை ராஜாவாக இருப்பான் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இது சீரிய தேசத்தைக் குறிக்கும். தானியேலின் தரிசனத்தினுடைய நோக்கம் கடைசி நாட்களில் யூத ஜனங்களுக்கு சம்பவிப்பதை தானியேலுக்குத் தெரியப் பண்ணுவதாகும் (தானி 10:14). சீரியாவின் ராஜாவாகிய அந்தியோகஸ் எப்பிபேனஸ் அந்திக்கிறிஸ்துவைப் போல செயல்பட்டான். ஆயினும் அவன் அந்திக்கிறிஸ்து அல்ல (தானி 11:21-34). அந்திக்கிறிஸ்து கிரேக்கு தேசத்தின் நான்கு பிரிவுகளில் ஒரு பிரிவான சீரிய தேசத்திலிருந்து வருவான்.

தானி 2, தானி 7 ஆகிய அதிகாரங்களில் பழைய ரோமப்பேரரசிற்குள் பத்து இராஜ்ஜியங்கள் ஸ்தாபிக்கப்படப்போவதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்த பத்து இராஜ்யங்களில் ஒன்றிலிருந்து அந்திக்கிறிஸ்து வருவான். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அந்திக்கிறிஸ்து இந்த தேசங்களை கிறிஸ்துவிற்கு எதிராக எழுப்புவான். தானி 8ஆவது அதிகாரத்தில் தானி 2, தானி 7 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளோடு கூடுதலான செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தானியேலின் கடைசி தரிசனத்தில் (தானி 10:1-12:13) அந்திக்கிறிஸ்து சீரிய தேசத்திலிருந்து வருவான் என்று குறிப்பிட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சீரிய தேசம் வருங்கால கிரேக்கப் பேரரசில் ஏற்படும் நான்கு பிரிவுகளில் ஒரு பிரிவாக இருக்கும். தானியேலின் தரிசனத்தில் கடைசி நாட்களைப் பற்றியும், மேசியாவின் ஆளுகையைப்பற்றியும் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. தானி 11:35-12:13 ஆகிய வசனங்களில் அந்திக்கிறிஸ்துவைப் பற்றிய கடைசி விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வருங்கால அந்திக்கிறிஸ்து

வருங்கால அந்திக்கிறிஸ்துவின்மறுபெயர்கள் - சின்னக்கொம்பு, வடதிசை ராஜா, பாவத்தின் மனுஷன், வெளிப்படுத்தின விசேஷத்தின் மிருகம். அந்திக்கிறிஸ்துவைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகளின் விவரம் வருமாறு:

1. இவன் தனக்கு இஷ்டமானபடியெல்லாம் செய்வான். (தானி 11:36=தானி 7:25; தானி 8:24; 2தெச 2:10-12; வெளி 13:5-7).

2. எந்தத் தேவனிலும் தன்னை பெரியவனாக்கி, தன்னை உயர்த்துவான். (தானி 11:36,37=தானி 7:25; தானி 8:25; 2தெச 2:4; வெளி 13).

3. தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான். (தானி 11:36= தானி 7:8,11,20,25; வெளி 13:1-7; 2தெச 2:4).

4. கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும். தானி 8:19; வெளி 6:19, தானி 11:36= தானி 8:9-11,21,22,25-27; 2தெச 2:8; வெளி 19:11-21).

5. அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதிக்கமாட்டான். (தானி 11:37=தானி 7:25; தானி 8:25; வெளி 13:1-7; 2தெச 2:4; யோவான் 5:43).

6. தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைக் கனம்பண்ணுவான். (தானி 11:38-39= தானி 8:24; 2தெச 2:8; வெளி 13:1-4).

7. முடிவுகாலத்தில் அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான். (தானி 11:40-42= தானி 7:8,11-12,20-26; தானி 11:23-25; 2தெச 2:8; வெளி 13:1-10; வெளி 17:8-17).

8. சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான் (தானி 11:45= தானி 9:27; 2தெச 2:4; வெளி 11:1-2; வெளி 12:1-17; வெளி 13:1-18).

9. இவனால் யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும் (தானி 12:1= தானி 7:21-27; தானி 8:19, 24-25; தானி 9:27; மத் 24:15-23; 2தெச 2:8-12; வெளி 13:1-18; வெளி 15:2-4; வெளி 20:1-6).

10. ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமளவும் எல்லோரும் இஸ்ரவேல்மீது யுத்தம் பண்ணுவார்கள். (தானி 12:7= தானி 7:21-22,25-26; தானி 8:24; வெளி 13; மத் 24:15-23).

11. இவன் அன்றாடப-யை நீக்கிப்போட்டு பாழாக்கும் அருவருப்பை ஸ்தாபிப்பான். (தானி 12:11= தானி 7:25; தானி 8:24-25; மத் 24:15; 2தெச 2:4; வெளி 13).

12. அவன் முடிவடைவான். (தானி 11:45= தானி 7:8-11,21-22,25-27; தானி 8:25; 2தெச 2:8; வெளி 19:11-21; வெளி 20:10).

கிரேக்கப் பேரரசின் நான்கு பிரிவுகளில் ஒன்றிலிருந்து சின்னக்கொம்பு வருவதைத் தானியேல் காண்கிறார். (தானி 8:8-9,21-23). இது அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசி காலத்தில் நடைபெறும். இந்த ராஜ்யங்கள் இன்னும் ஸ்தாபிக்கப்படவில்லை. (தானி 8:23). கிரேக்கு தேசத்தின் இந்த நான்கு பிரிவுகள் தற்காலத்தில் கிரேக்கு, துருக்கி, சீரியா, எகிப்து என்று அழைக்கப்படுகிறது. தானி 7 ஆவது அதிகாரத்தில் அந்திக்கிறிஸ்துவின் வருகையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ரோமப்பேரரசிற்குள்ள பத்து ராஜ்யங்களிலிருந்து அந்திக்கிறிஸ்து வருவான். தானி 8 ஆவது அதிகாரத்தில் நான்கு ராஜ்யங்களில் ஒன்றிலிருந்து அந்திக்கிறிஸ்து வருவான் என்று கூறப்பட்டுள்ளது.

அந்திக்கிறிஸ்துவும், தேவர்களும்

1. அந்திக்கிறிஸ்து தன் பிதாக்களின் தேவர்களை மதிக்கமாட்டான். (தானி 11:37; யோவான் 5:43).

2. ஸ்திரீகள் சிநேகிக்கும் தேவர்களையும் மதிக்கமாட்டான்.

3. எந்த விக்கிரக தேவனையும் மதிக்க மாட்டான். (தானி 11:37).

4. எல்லா தெய்வங்களுக்கும் (மெய்யான தேவனுக்கும், விக்கிரகங்களுக்கும்) தன்னைப் பெரியவனாக்குவான். (தானி 11:36-37; 2தெச 2:4; வெளி 13).

5. அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணுவான். (தானி 11:38).

6. தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைக் கனம்பண்ணுவான். (தானி 11:38).

7. அந்நிய தேவனைக் கனம் பண்ணுவான். (தானி 11:38-39; 2தெச 2:4; வெளி 13:1-18).

இவன் அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணுவான் (தானி 11:38). தன்னுடைய பிதாக்களின் தேவனைக் கனம்பண்ணுவதற்குப் பதிலாக இவன் பொன்னினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களைக் கனம்பண்ணுவான். தன்னுடைய அரண்களில் காணப்படும் பொக்கிஷங்களைக் கனம்பண்ணுவான் (தானி 11:38-39).

அவன் அவர்களுக்கு தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான் (தானி 11:39). மற்ற தேசங்களிலிருந்து கிடைத்த கொள்ளைப்பொருட்களைத் தாராளமாகப் பங்கிடுவான். இக்காரியத்தில் இவன் அந்தியோக்கஸ் எப்பிபேனசைப்போல செயல்படுகிறான். (தானி 11:24).

தென்றிசை ராஜாவுக்கு விரோதமாய் நான்காவது யுத்தம் தானி 11:40-43

தானி 11:40. முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக்கடந்துபோவான்.

தானி 11:41. அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்.

தானி 11:42. அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை.

தானி 11:43. எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.

சீரிய தேசத்திற்கும் எகிப்து தேசத்திற்கும் இடையே மேலும் ஒரு யுத்தம் நடைபெறுகிறது. இது முடிவுகாலத்தில் நடைபெறுகிற யுத்தம். தென்றிசை ராஜா வடதிசை ராஜாவோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாய் வருவான்; வடதிசை ராஜா தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக்கடந்துபோவான் (தானி 11:40).

வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் புயல்காற்று போலவும், சூறைக்காற்று போலவும் எகிப்து தேசத்திற்கு விரோதமாக வேகமாய் வருவான். அந்தியோகசின் படைபலம் பெரியது. அவனிடத்தில் இரதங்களும், குதிரை வீரர்களும் கப்பல்களும் ஏராளமாயிருக்கிறது. அந்தியோகஸ் எகிப்து தேசத்தின்மீது யுத்தம்பண்ணப்போகும்போது, அவன் மற்ற தேசங்கள் வழியாக கடந்துபோவான். இதனால் அந்த தேசங்களெல்லாம் அழிந்துபோகும்.

வடதிசை ராஜாவாகிய அந்தியோகஸ் சிங்காரமான தேசத்திலும் வருவான். சிங்காரமான தேசம் என்பது இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கும் வார்த்தை. அந்தியோகஸ் எகிப்து தேசத்தின்மீது யுத்தம்பண்ணப்போகும்போது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும். ஆனாலும் ஒரு சில தேசங்கள் அந்தியோகசின் கைக்கு தப்பிப்போவார்கள். ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள் (தானி 11:41).

அந்தியோகஸ் எல்லா தேசங்களின்மேலும் தன் கையை நீட்டுவான். அவன் கையினால் அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும். ஒரு சில தேசங்கள் தப்பித்துக்கொள்ளும். ஆனாலும் எகிப்து தேசம் அந்தியோகசின் கைக்கு தப்புவதில்லை (தானி 11:42).

அந்தியோகஸ் எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அந்தியோகசுக்குப் பின்செல்லுவார்கள் (தானி 11:43). அந்தியோகஸ் எகிப்து தேசத்தை சர்வநாசம்பண்ணுவான். எகிப்தின் பொக்கிஷங்களையெல்லாம் கொள்ளையிட்டு தன்னுடைய தேசத்திற்கு கொண்டுபோய்விடுவான்.

""முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்'' (தானி 11:40) இந்த வாக்கியம் இந்தத் தரிசனம் நிறைவேறும் காலத்தைக் குறிப்பிடுகிறது. புறஜாதி தேசங்களின் ஆளுகைக்காலத்தின் முடிவில் இந்தச் சம்பவம் நடைபெறும். (தானி 11:40; தானி 8:19; தானி 9:27; தானி 11:35,45; தானி 12:1,7-13). புறஜாதி தேசங்களின் ராஜாக்களைப் பற்றி தானி 2 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் சிலையும், தானி 7, தானி 8; வெளி 13; வெளி 17:8-17 ஆகிய அதிகாரங்களிலும், வசனங்களிலும் கூறப்பட்டிருக்கும் மிருகங்களும் விளக்குகின்றன.

முடிவு காலத்தில் தென்றிசை ராஜா (எகிப்து) அவனோடே (வடதிசை ராஜா - சீரியா) முட்டுக்கு நிற்பான். வடதிசை ராஜா தன் சேனைகளோடு வந்து பல தேசங்களைக் கைப்பற்றுவான். (தானி 11:40). இந்த வசனத்தில் ""தேசங்கள்'' என்பது பழைய கிரேக்கப் பேரரசின் பிரிவுகளைக் குறிக்கும். இந்தத் தேசங்களைப் பற்றி தானி 11 ஆவது அதிகாரத்திலும், தானி 8:8-9,20-23 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.

""வடதிசை ராஜா'' (தானி 11:40) என்பது சின்னக்கொம்பு அல்லது அந்திக்கிறிஸ்துவைக் குறிக்கும். புதிய ரோமப்பேரரசின் பத்துக் கொம்புகளிலிருந்து அந்திக்கிறிஸ்து வெளிவருவான். தானியேலின் எழுபதாவது வாரத்தின் முதல் பாதியான மூன்றரை வருஷங்களில் அந்திக்கிறிஸ்து மற்ற தேசங்கள்மீது அதிகாரம் செலுத்துவான். அவற்றில் மூன்று ராஜ்யங்களைக் கைப்பற்றுவான். (தானி 7:23:24). மற்ற ராஜ்யங்கள் யுத்தமில்லாமல் அந்திக் கிறிஸ்துவிற்குக் கட்டுப்படும். (வெளி 17:12-17).

அந்திக்கிறிஸ்து சீரியா தேசத்திலிருந்து வருவான். கிரேக்கப் பேரரசின் நான்கு பிரிவுகளில் சீரிய தேசமும் ஒன்றாக இருக்கும். (தானி 8:9,23; தானி 11:36-45) மற்ற மூன்று பிரிவுகளான கிரேக்கு, துருக்கி, எகிப்து ஆகிய ராஜ்யங்களை அந்திக்கிறிஸ்து அகற்றிப் போடுவான். இவ்வாறாக அவன் பழைய கிரேக்கப் பேரரசைப் புதுப்பிப்பான். இது தானி 7:6 ஆவது வசனத்தில் சிவிங்கி என்று அடையாளமாகக் கூறப்பட்டிருக்கிறது. (வெளி 13:1-2).

பழைய ரோமப்பேரரசின் மற்ற ஆறு ராஜ்யங்களும் அந்திக்கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியும். இந்தத் தேசங்களெல்லாம் வடக்கிலும், கிழக்கிலும் யுத்தம் பண்ணுவதற்கு அந்திக்கிறிஸ்துவைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளும். (தானி 11:44; வெளி 17:12-17).

""அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான்'' (தானி 11:41). அந்திக்கிறிஸ்து சீரியாவிலிருந்து வந்து, கிரேக்கு, துருக்கி, எகிப்து ஆகிய தேசங்களைக் கைப்பற்றிய பின்பு, அவன் யூதரோடு உறுதிபண்ணியிருந்த உடன்படிக்கையை முறித்துப் போடுவான். (தானி 9:27) பாலஸ்தீன தேசத்தையும், பிந்திய ரோமப்பேரரசின் மற்ற ஆறு ராஜ்யங்களையும் அந்திக்கிறிஸ்து பிடித்துக் கொள்வான்.

""அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்'' (தானி 11:41). அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டது. மூன்று ராஜ்யங்கள் அந்திக்கிறிஸ்துவின் கைக்குத் தப்பிப்போகும். இவை அந்திக்கிறிஸ்துவின் எல்லைப் பகுதியில் இருக்கிறபோதிலும் அவன் கையிலிருந்து தப்பிப் போய்விடும்.

""அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்'' (தானி 11:42). இங்கு கூறப்பட்டிருக்கும் தேசங்கள் அவன் அடிமைப்படுத்தும் மூன்று ராஜ்யங்களாக இருக்கலாம். (தானி 7:24) இவை தவிர, இவை அந்திக்கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியும், பிந்திய ரோமப்பேரரசின் பத்து ராஜ்யங்களாகவும் இருக்கலாம். (வெளி 17:12-17) இவை லீபியாவாகவும், எத்தியோப்பியாவாகவும் இருக்கலாம். (தானி 11:43).

""எகிப்துதேசம் தப்புவதில்லை'' (தானி 11:42) தானி 11:5-34 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் யுத்தம் சீரியாவிற்கும், எகிப்திற்கும் இடையே நடைபெறுகிறது. தானி 11:40-43 ஆகிய வசனங்களில் கடைசி நாட்களில் நடைபெறும் யுத்தம், சீரியாவிற்கும், எகிப்திற்கும் இடையே நடைபெறுகிறது. எகிப்து என்பது தென்றிசை தேசத்தையும், சீரியா என்பது வடதிசை தேசத்தையும் குறிக்கும். இதனால் அந்திக்கிறிஸ்து சீரியாவிலிருந்து வருவான் என்பது உறுதியாகிறது. (தானி 7:8,19-27; தானி 8:9-14,22-25; தானி 9:27)

வடதிசை ராஜாவின் அழிவு தானி 11:44,45

தானி 11:44. ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்தவரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம் பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய்,

தானி 11:45. சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.

இந்த வசனங்களில், வடதிசை ராஜாவாகிய அந்தியோகசின் வீழ்ச்சியும் அழிவும் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. ""அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர் விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்'' (தானி 8:25).

அந்தியோகஸ் தனக்கு இஷ்டமானபடிசெய்தான். தன்னை உயர்த்தினான். எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கினான். தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசினான்; நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையிலும் அவனுக்கு எல்லாம் கைகூடி வந்தது (தானி 11:36). அந்தக் காலம் முடிந்த பின்பு அந்தியோகசுக்கு அழிவு வருகிறது.

அந்தியோகஸ் தன்னுடைய பெருமையின் உச்சியிலே இருந்தபோது கிழக்கிலும் வடக்கிலும் இருந்து சில செய்திகள் வருகிறது. அந்தச் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணுகிறது.

அந்தியோகஸ் தன்னுடைய கலக்கத்திலே நிதானமிழக்கிறான். தான் செய்ய நினைத்த வேலைகளையெல்லாம் நிறுத்திவிடுகிறான். பெர்சியருக்கும் பார்த்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ண தீர்மானிக்கிறான். அவர்களில் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகாஉக்கிரத்தோடே புறப்பட்டுப்போகிறான். அந்தியோசின் மனதிலே கலக்கமும் இருக்கிறது. உக்கிர கோபமும் இருக்கிறது. அவனிடத்தில் தெளிந்த சிந்தனையோ, தெளிந்த புத்தியோ இல்லை.

அந்தியோகசுக்கு யூதர்கள்மீது எப்போதுமே வெறுப்பும் கோபமும் உண்டு. தன்னுடைய கடைசி முயற்சியாக அவன் யூதர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணப்போகிறான். அவனுடைய கோபம் அதிகரிக்கிறது. யூதர்களில் அநேகரை அழிக்கவும், சங்காரம் பண்ணவும் வேண்டுமென்று தீர்மானித்து, மகாஉக்கிரத்தோடே, யூதாதேசத்திற்கு விரோதமாகப் புறப்பட்டுப்போகிறான். அந்தியோகஸ் சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுகிறான் (தானி 11:45).

கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய பரிசுத்தவான்களுக்கு விரோதமாகவும் தீங்கு செய்கிறவர்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவார்கள். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு அவர்கள்மீது நிச்சயமாய் வரும். ஒருவன் கர்த்தருக்கு விரோதமாய்த் தன்னை உயர்த்தும்போது, அவன் கர்த்தருக்கு அருகாமையில் போகாமல், தன்னுடைய அழிவுக்கு அருகாமையில் போகிறான். கர்த்தருக்கு விரோதமாகத் தீங்கு செய்ய நினைக்கிறவர்கள், தங்களுக்குத் தாங்களே தீங்குகளை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

அந்தியோகஸ் கர்த்தருடைய ஜனத்திற்கு விரோதமாக மகாஉக்கிரத்தோடே புறப்பட்டுப்போனான். யூதர்களில் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் வேண்டுமென்று தீர்மானம்பண்ணினான். ஆனால் அந்தியோகசுக்கு ஒத்தாசை பண்ண ஒருவருமில்லை. அந்தியோகஸ் அழிந்துபோனான்.

""ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்'' (தானி 11:45) என்று காபிரியேல் அந்தியோகசின் முடிவைப்பற்றி தானியேலுக்கு வெளிப்படுத்துகிறார். இந்த செய்தி ஏற்கெனவே தீர்க்கதரிசனமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.

""அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர் விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்'' (தானி 8:25).

வருங்கால யுத்தங்கள்

1. முதலாவது யுத்தம் பழைய ரோமப் பேரரசிற்குள் நடைபெறும். இதன் மூலமாக இந்தப் பேரரசிற்குள் பத்து ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்படும். (தானி 7:23-24) இந்தப் பத்து ராஜ்யங்களும், பிந்திய ரோமப்பேரரசாக இருக்கும். இவை தானி 2 ஆவது அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் பத்துக் கால்விரல்களாகவும், தானி 7, வெளி 12, வெளி 13, வெளி 17 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் சின்னக் கொம்பாகவும் இருக்கும்.

2. இரண்டாவது யுத்தம் பத்து ராஜ்யங்கள் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, பிந்திய ரோமப்பேரரசு சிறிது காலம் தொடர்ந்த பின்பு நடைபெறும். (வெளி 17:10). சின்னக்கொம்பு அல்லது வருங்கால அந்திக்கிறிஸ்து இந்தப் பத்து ராஜ்யங்களில் ஒன்றிலிருந்து வருவான். இவற்றிலிருந்து வெளி 17:8-17 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் எட்டாவது ராஜ்யத்தை ஸ்தாபிப்பான். இரண்டாவது யுத்தத்தில் பத்து ராஜ்யங்களில் மூன்று ராஜ்யங்களை அகற்றுவான். அதன் பின்பு மற்ற ராஜ்யங்கள் அந்திக்கிறிஸ்துவிற்குத் தானாகவே, யுத்தமில்லாமல் கீழ்ப்படியும். (தானி 7:23-24; வெளி 17:12-17).

3. மூன்றாவது யுத்தம் அந்திக்கிறிஸ்து பத்து ராஜ்யங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றிய பின்பு நடைபெறும். இது தானியேலின் எழுபதாவது வாரத்தின் பாதியில் நடைபெறும். இது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மூன்றரை வருஷங்களுக்கு முன்பு நடைபெறும். (வெளி 13:5). அந்திக்கிறிஸ்துவின் கீழுள்ள பத்து ராஜ்யங்களும் இந்த யுத்தத்தில் பங்கு பெறும். இவர்கள் அந்திக்கிறிஸ்துவோடு சேர்ந்து, பழைய ரோமப்பேரரசின் வட திசையிலுள்ள தேசங்கள் மீதும், கீழ்திசையிலுள்ள தேசங்கள் மீதும் யுத்தம் பண்ணுவார்கள். (தானி 11:44). அந்திக்கிறிஸ்து இந்த தேசங்களை ஜெயித்த பின்பு, அவன் எருசலேமிற்கு நேராக யுத்தம் பண்ணப் புறப்படுவான். அப்போது இயேசு கிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்து அந்திக் கிறிஸ்துவையும், அவனுடைய சேனையையும் தோற்கடிப்பார். (எசே 38-39; சக 14, வெளி 19:11-21).

""சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்'' (தானி 11:45). அந்திக்கிறிஸ்து அல்லது வடதிசையின் (சீரியா) ராஜா தன்னுடைய தலைநகரத்தை எருசலேமிலுள்ள யூதருடைய தேவாலயத்தில் ஸ்தாபிப்பான். இது சவக்கடலுக்கும், மத்திய தரைக்கடலுக்கும் நடுவிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதமாகிய மோரியா மலையில் அமைந்திருக்கிறது. ஆயினும் அந்திக் கிறிஸ்துவின் ஆளுகை அர்மெகதோனில் முடிவுபெறும். (தானி 7:11,26-27; தானி 8:25; தானி 9:27; 2தெச 2:8; வெளி 19:19-21).

""அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்'' (தானி 11:45). அந்திக்கிறிஸ்து எரிகிற அக்கினிக்கடலில் தள்ளப்படுவான். (தானி 7:11; ஏசா 11:4; வெளி 19:20; வெளி 20:10). அந்திக்கிறிஸ்துவின் சேனையில் ஆறில் ஒரு பகுதியைத் தவிர, மற்றவர்கள் அழிக்கப் படுவார்கள். (எசே 39:2). அந்திக்கிறிஸ்துவிற்கு உதவி புரிந்த சாத்தானும், அவனுடைய தூதர்களும், பிசாசுகளும் பாதாளத்தில் தள்ளப்படுவார்கள். (வெளி 20:1-3; ஏசா 24:21-22) அந்திக்கிறிஸ்துவிற்கு யாரும் உதவிபண்ணுவதற்கு ஆளில்லாமல் தனித்து விடப்பட்டிருப்பான். சாதாரண மனுஷனைப் போல மரித்துப்போவான். (வெளி 19:20).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.