11 அதிகாரம்
மனுபுத்திரர் ஒரு நகரத்தையும், கோபுரத்தையும் கட்டுகிறார்கள். கர்த்தர் அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்கி அவர்களை பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணுகிறார் (ஆதி 11:1#9). பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு ஒரு நகரத்தையும், ஒரு கோபுரத்தையும் கட்ட வேண்டும் என்பது மனுபுத்திரருடைய திட்டமாயிருக்கிறது (ஆதி 11:1#4).
தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு அவர்கள்மீது வருகிறது. கர்த்தர் அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்கி, அவர்களை பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணுகிறார் (ஆதி 11:5#9).
சேமுடைய வம்சவரலாற்றைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வம்சவரலாறு ஆபிரகாம் வரையிலும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது (ஆதி 11:10#26).
தேராகு ஆபிரகாமின் தகப்பனார். இந்த வசனப்பகுதியில் தேராகுடைய வம்சவரலாற்றைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேராகும் அவருடைய குடும்பத்தாரும் ஊர் என்னும் கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு கானான் தேசத்திற்கு புறப்பட்டுப்போகிறார்கள். அவர்கள் ஆரான் மட்டும் வந்து, அங்கே தங்கிவிடுகிறார்கள் (ஆதி 11:27#32).
பாபேல் கோபுரம்
ஆதி 11:1#4
ஆதி 11:1. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.
ஆதி 11:2. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
ஆதி 11:3. அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
ஆதி 11:4. பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்-க்கொண்டார்கள்.
ஜலப்பிரளயத்திற்கு பின்பு, நோவாவுடைய குமாரரின் வம்சங்களால், பூமியிலே ஜாதிகள் பிரிகிறார்கள். அவர்கள் வெவ்வேறு ஜாதிகளாகவும், வெவ்வேறு கோத்திரங்களாகவும், வெவ்வேறு குடும்பங்களாகவும் பிரிகிறார்கள். நோவா அவர்களை வெவ்வேறு ஜாதிகளாக பிரித்திருக்கலாம்.
இவர்கள் எல்லோரும் பூமியிலே, தங்கள் தங்கள் ஜாதிகளுக்கு நியமிக்கப்பட்ட இடங்களில் வாசம்பண்ணுகிறார்கள். இவர்கள் வாசம்பண்ணுவதற்கான ஸ்தலங்களை, இவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தது யார் என்பது தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் தங்கள் ஜாதிகளின் பிரகாரம் பூமியிலே குடியிருப்பதற்கு நோவா உதவிசெய்திருக்கலாம். நோவா அவர்களுக்கு ஆலோசனை சொல்லியிருக்கலாம். நோவாவுடைய குமாரரின் வம்சங்களும், நோவாவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, தங்கள் ஜாதிகளின் பிரகாரம், இந்தப் பூமியில் குடியிருக்கிறார்கள்.
நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் பூமியிலே பிரிந்திருந்தாலும், மனுபுத்திரர் வெவ்வேறு இடங்களில் பிரிந்திராமல், ஒரே இடத்தில் ஒன்றாய்க்கூடி குடியிருப்பதையே விரும்புகிறார்கள். ஒரு ஜாதியும், மற்றொரு ஜாதியும் வெவ்வேறு இடங்களில் பிரிந்துபோய் குடியிருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
மனுபுத்திரர் எல்லோரும் ஒரே இடத்தில் மொத்தமாக குடியிருந்தால் அது தங்களுக்கு பாதுகாப்பாயிருக்கும் என்றும், அதுவே தங்களுக்கு சந்தோஷம் என்றும் ஜனங்கள் நினைக்கிறார்கள். மனுபுத்திரர் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
நோவாவுடைய குமாரரின் வம்சங்கள், கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாகவும், நோவாவுடைய ஆலோசனையின் பிரகாரமாகவும், இந்தப் பூமியிலே வெவ்வேறு ஜாதிகளாக பிரிந்திருந்தார்கள். இந்த ஜாதியார் தங்களை தேவனைவிடவும், நோவாவைவிடவும் ஞானமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பூமியின் மீதெங்கும் சிதறிப்போய், வெவ்வேறு இடங்களில் குடியிருக்க பிடிக்கவில்லை. ஒரே இடத்தில் எல்லா ஜாதியாரும் குடியிருக்கவேண்டும் என்று ஆலோசனைபண்ணுகிறார்கள்.
நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இந்தப் பூமியிலே ஜாதிகளாக பிரிந்திருந்தாலும், பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருக்கிறது (ஆதி 11:1). இது அவர்கள் ஒன்றாய்க்கூடி வாசம்பண்ணுவதற்கு அநுகூலமாயிருக்கிறது. அவர்கள் பேசுவது ஒருவருக்கொருவர் புரிகிறது. அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும், ஒரே இடத்தில் கூடிவந்து வாசம்பண்ணுவதே, தங்களுக்கு உதவியாயிருக்கும் என்று மனுபுத்திரர் நினைக்கிறார்கள்.
பூமியில் முதலாவது பாஷை எது என்பது பற்றி மொழியியல் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாஷையைப் பூமியில் பேசப்பட்ட முதலாவது மொழி என்று கூறுகிறார்கள். பழைய ஏற்பாட்டை தேவன் எபிரெய மொழியில் வெளிப்படுத்தியதினாலும், இயேசு கிறிஸ்து பேசியபோது, எபிரெய மொழியில் பேசியதினாலும் எபிரெய பாஷையே பூமியில் பேசப்பட்ட முதலாவது பாஷை என்று வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள். பவுல் அப்போஸ்தலருக்குக் கிரேக்க பாஷையும் நன்றாகத் தெரியும் (அப் 21:40; அப் 22:2; அப் 26:14).
பூமியின் ஜாதிகள் ஒரே இடத்தில் குடியிருப்பதற்கு, வசதியான இடத்தை தேடிக்கண்டுபிடிக்கிறார்கள். ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருக்கிறார்கள் (ஆதி 11:2). சிநெயார் தேசம் சமபூமியாயிருப்பதினால், அந்தப் பூமியே தங்களுடைய குடியிருப்புக்கு ஏற்ற பூமி என்று மனுபுத்திரர் நினைக்கிறார்கள்.
ஜலப்பிரளயத்திற்குப் பின்பு நூறு வருஷமாயிற்று. ஜனங்கள் அரராத் மலையிலிருந்து ஐபிராத்து நதியின் கிழக்கு திசையை நோக்கி பிரயாணம் பண்ணுகிறார்கள். ""சிநெயார்'' தேசம் என்பது பாபிலோனியா தேசத்தைக் குறிக்கும் (ஆதி 14:1; ஏசா 11:11; தானி 1:2; சக 5:11).
சிநெயார் தேசம் மகாவிஸ்தாரமான பூமி. இங்கே கனிவிருட்சங்கள் ஏராளமாய் முளைத்திருக்கிறது. நோவாவுடைய குமாரரின் வம்சங்களில் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் குடியிருப்பதற்கு போதுமான இடவசதி சிநெயார் தேசத்திலுள்ளது. இந்த தேசத்தின் விளைச்சல் அவர்களுக்கு போதுமான ஆகாரத்தைக் கொடுக்கிறது. இதிலுள்ள மேய்ச்சல் நிலம் அவர்களுடைய மந்தைக்கு தேவையான தீவனத்தை தாராளமாய்க் கொடுக்கிறது.
நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இந்தப் பூமியிலே ஜாதிகளாக பிரிந்திருக்கிறார்கள். பிரிந்திருக்கிற அவர்கள் தங்களை ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்து, ஒரே ஜாதியாக கட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொரு ஜாதியாரும் தங்களுடைய தேசத்தின் எல்லையை விஸ்தாரம்பண்ணி, அங்கங்கே பரவி குடியிருந்தால், மனுபுத்திரர் மத்தியிலே சண்டை சச்சரவுகளும், தேவையில்லாத வாக்குவாதங்களும் ஏற்படாது.
ஒவ்வொரு ஜாதியாரும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட தேசத்தில் போய் குடியிருக்கவேண்டும். ஒன்றாய்க்கூடி ஒரே இடத்தில் குடியிருப்பது அவர்களுக்கு பாதுகாப்பைக் கொடுத்தாலும், அவர்கள் மனுஷருடைய பாதுகாப்பைவிட, கர்த்தருடைய பாதுகாப்பையே நாடவேண்டும்.
மனுபுத்திரரின் ஜாதிகள் ஒரே இடத்தில் குடியிருந்து, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரண்களைக் கட்டவேண்டும் என்று திட்டம்பண்ணுகிறார்கள். தங்களுடைய வீடுகளை ஒரே இடத்தில் கட்டி ஒரு பெரிய நகரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம்.
சிநெயார் தேசத்தில் குடியிருக்கிற ஜனங்கள், ""நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள்'' (ஆதி 11:4) என்று தங்களுக்குள் சொல்-க்கொள்கிறார்கள்.
ஒரு நகரத்தையும், ஒரு கோபுரத்தையும் கட்டவேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். தங்களுடைய திட்டத்தை நிறைவேற்ற எல்லா ஜாதியாரும் ஒன்றாய்க் கூடுகிறார்கள். அவர்கள், ""நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள்'' (ஆதி 11:3) என்று ஒருவரோடொருவர் பேசிக்கொள்கிறார்கள்.
செங்கல் அறுப்பதைப் பற்றி வேதாகமத்தில் இந்த வசனத்தில் முதன்முறையாகக் கூறப்பட்டிருக்கிறது. (யாத் 1:14; யாத் 5:7,8,18#19; 2சாமு 12:31)
பாலஸ்தீன தேசத்தில் செங்கல் அறுக்கும்போது அதைச் சூரிய வெயிலில் உலர வைப்பார்கள். ஆனால் இங்கு அவற்றை நன்றாய்ச் சுடுகிறார்கள். இதனால் செங்கல் அறுக்கும் வேலை துரிதமாக நடைபெறும். தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணும்போது ஜனங்கள் துரிதமாகவே செயல்படுவார்கள்.
பாபிலோனில் இன்னும் நிலக்கீல் கேணிகள் ஏராளமாக உள்ளன. அக்காலத்தில் நிலக்கீலினால் பூசப்பட்ட கட்டிடங்கள் இன்னும் வலுவாக உள்ளன. கட்டிடக்கலைஞர்களுக்கு இது மிகவும் ஆச்சரியமான விஷயம்.
தங்களுக்கு ஒரு நகரத்தையும், கோபுரத்தையும் கட்டவேண்டும் என்று மனுபுத்திரர் எல்லோருமே விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய விருப்பத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு, இந்த வேலையிலே எல்லோரும் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.
சிநெயார் தேசத்தில் குடியிருக்கிற ஜனங்களுக்கு கட்டிடத்தைக் கட்ட தெரியும். ஆனால் கட்டிடம் கட்டுவதற்குத் தேவையான பொருட்கள் சிநெயார் தேசத்தில் இல்லை. ஆனாலும் மனுபுத்திரர் அதைப் பார்த்து சோர்ந்துபோகவில்லை. அவர்களிடத்தில் கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் இருக்கிறது (ஆதி 11:3).
நகரத்திலுள்ள வீடுகளையும், கோபுரத்தையும் கல்லால் கட்டினால் அது வலுவாகயிருக்கும். ஆனால் சிநெயார் தேசத்தில் கல் இல்லை. கல்லை இணைப்பதற்கு சாந்தைப் பயன்படுத்தவேண்டும். ஆனால் அந்த தேசத்தில் சாந்தும் இல்லை. இதைப் பார்த்து அவர்கள் சோர்ந்துபோய்விடவில்லை. அவர்கள் கல்லுக்குப்பதிலாக செங்கலையும், சாந்துக்கு பதிலாக நிலக்கீலையும் பயன்படுத்தவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.
கல்லும் சாந்தும் இல்லை என்பதற்காக, அவர்கள் நகரத்தைக் கட்டுவதையும், கோபுரத்தைக்கட்டுவதையும் நிறுத்திவிடவில்லை. மனுபுத்திரர் தங்களுடைய தீர்மானத்தில் உறுதியாயிருக்கிறார்கள்.
கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற நமக்கு சில சமயங்களில் வசதி குறைவுகளும், வாய்ப்பு குறைவுகளும் ஏற்படலாம். பொருளாதாரம் குறைவு படலாம். நமக்கு ஏற்பட்டிருக்கும் குறைவுகளை நோக்கிப் பார்த்து, நாம் செய்யவேண்டிய ஊழியத்தை நிறுத்திவிடக்கூடாது. நமக்கு குறைவு ஏற்பட்டாலும், அந்தக் குறைவை நிறைவாக்குகிற கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற ஊழியத்தை நேர்த்தியாய் நிறைவேற்றவேண்டும்.
சிநெயார் தேசத்தில் குடியிருந்த ஜனங்கள், கல்லுக்குப் பதிலாக செங்கலையும், சாந்துக்கு பதிலாக நிலக்கீலையும் பயன்படுத்தியதுபோல, கர்த்தர் நமக்கு கொடுக்கும் வாய்ப்புக்களையும், வசதிகளையும் பயன்படுத்தி, கர்த்தருடைய ஊழியத்தை தொடர்ந்து செய்யவேண்டும்.
மனுபுத்திரர் ஒரு நகரத்தையும், ஒரு கோபுரத்தையும் கட்டினாலும், அவர்களுடைய மனதும் சிந்தையும் இருதயமும் கர்த்தருக்கு முன்பாக சுத்தமாகயில்லை. அவர்கள் இந்தப் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகக்கூடாது என்பதற்காக தங்களுக்கு ஒரு நகரத்தைக் கட்டுகிறார்கள். பரலோகத்திற்கு போய்விடவேண்டும் என்னும் ஆசையில், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தைக் கட்டுகிறார்கள். இவற்றை கட்டுவதன் மூலமாக தங்களுக்கு பேர் உண்டாகப்பண்ணவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாயிருக்கிறது.
மனுபுத்திரர் வானத்தை அளாவும் சிகரமுள்ள கோபுரத்தைக் கட்டி, தங்களை தேவனுக்கு மேலாக உயர்த்துகிறார்கள். தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறார்கள். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், தங்களுடைய சுயஆசைகளுக்கு இடங்கொடுத்து, அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.
தங்களுக்கு பேர் உண்டாகப் பண்ணவேண்டும் என்பது மனுபுத்திரருடைய விருப்பமாயிருக்கிறது. அவர்களுடைய பின்சந்ததியார், அவர்களைப்பற்றி நினைவுகூரவேண்டும். அவர்கள் தங்கள் முன்னோர்களை மறந்துவிடக்கூடாது. அதற்காக ஒரு நகரத்தையும், ஒரு கோபுரத்தையும் கட்டி தங்களுக்கு பேர் உண்டாகப்பண்ணவேண்டும் என்பது அவர்களுடைய திட்டமாயிருக்கிறது.
மனுபுத்திரருடைய யோசனையில் பெருமையும், பேராசையும், மதியீனமும் இருக்கிறது. அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டினாலும், தங்களுடைய பின்சந்ததியார் மத்தியிலே அவர்களால் தங்களுக்கு நல்ல பெயரை உண்டாக்க முடியாது. இந்தக் கோபுரத்தின் மூலமாக அவர்கள் தங்களுடைய பெருமையையும், பேராசையையும், மதியீனத்தையும், தங்களுடைய பின்சந்ததியாருக்கு வெளிப்படுத்தி காண்பிப்பார்கள்.
பாபேல் கோபுரத்தை கட்டியவர்களின் மதியீனத்தைப்பற்றி இந்தப் பூமியில் எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. உலக சரித்திரத்திலே, பாபேல் கோபுரத்திற்கு முக்கியமான இடமுண்டு. இந்தக் கோபுரம் மனுபுத்திரரின் ஞானத்தையும், புத்தியையும் வெளிப்படுத்தாமல், அவர்களுடைய மதியீனத்தையே வெளிப்படுத்துகிறது. தங்களுக்கு பேர் உண்டாகப்பண்ணவேண்டும் என்பதற்காக மனுபுத்திரர் பாபேல் கோபுரத்தைக் கட்டினார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தக் கோபுரத்தின் மூலமாய் நல்ல பெயர் உண்டாகாமல், கெட்ட பெயரே உண்டாயிற்று.
தாங்கள் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகக்கூடாது என்பது மனுபுத்திரருடைய திட்டம். நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இந்தப் பூமியிலே ஜாதிகளாகப் பிரிந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் நிம்ரோத்தின் காலத்தில் ஒன்றாய்க் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். நிம்ரோத் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாயிருக்கிறான். அவன் கர்த்தருக்கு விரோதமான காரியங்களை செய்கிறான். காட்டு மிருகங்களை வேட்டையாடுவதுபோல, மனுஷரை வேட்டையாடி தன்னிடத்தில் சேர்த்துக்கொள்கிறான்.
தன்னோடு கூடயிருக்கிற ஜனங்கள் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகக்கூடாது என்பதும், அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் குடியிருக்கவேண்டும் என்பதும் நிம்ரோத்தின் திட்டம். இதற்காக அவன் மனுபுத்திரருக்கு ஒரு நகரத்தைக் கட்டுகிறான். உலகம் முழுவதையும் ஆளுகை செய்யவேண்டும் என்பது நிம்ரோத்தின் விருப்பம். தனக்கும் தன்னோடு கூடயிருக்கிற ஜனங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கவேண்டுமென்றால், அவர்கள் எல்லோரும் சிதறிப்போகாதபடிக்கு, ஒரு நகரத்தில் குடியிருக்கவேண்டும் என்று நிம்ரோத் திட்டம் பண்ணுகிறான்.
மனுபுத்திரர் எல்லோரும் ஒரே இடத்தில் குடியிருந்தால், அவர்களை ஆளுகை செய்வது நிம்ரோத்திற்கு எளிதாகயிருக்கும். நிம்ரோத்தால் அவர்கள் எல்லோரையும் கவனமாய்க் கண்காணிக்க முடியும். அவர்களுக்கு பொதுவான பாதுகாப்பு கிடைக்கும். நிம்ரோத் மனுபுத்திரர் எல்லோர்மீதும் அதிகாரம் செலுத்துகிறான். அவர்களை தன்னுடைய ஆளுகைக்குட்படுத்துகிறான்.
கர்த்தரே சர்வஆளுகையுள்ளவர். நிம்ரோத் தன்னுடைய தேசத்தை ஆளுகை செய்யலாம். அதுவும் அவன் கர்த்தருக்கு கீழ்ப்படிந்துதான் ஆளுகை செய்யவேண்டும். கர்த்தர் தம்முடைய சித்தத்தின் பிரகாரமாக ராஜாக்களை சிங்காசனத்தில் அமரச் செய்கிறார். சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ராஜாக்களை கீழே தள்ளியும் விடுகிறார்.
நிம்ரோத்தின் மனதில் பெருமையும் மேட்டிமையும் இருக்கிறது. தானும் கர்த்தரைப்போல, சர்வஆளுகையோடிருக்கவேண்டும் என்று நிம்ரோத் பேராசைப்படுகிறான். கர்த்தர் மாத்திரமே கர்த்தாதி கர்த்தாவாகவும், ராஜாதி ராஜாவாகவும் இருக்கிறார். ஆனால் நிம்ரோத்தோ தன்னுடைய சிங்காசனத்தை, கர்த்தருடைய சிங்காசனத்திற்கு மேலாக உயர்த்த விரும்புகிறான். அதற்காக வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தைக் கட்டுகிறான்.
கர்த்தரே மகிமையுள்ளவர். அவர் தம்முடைய மகிமையை யாரோடும் பகிர்ந்துகொள்ளமாட்டார். நிம்ரோத்தோ கர்த்தரைப்போல தனக்கும் மகிமை வரவேண்டும் என்று ஆசைப்படுகிறான். தனக்கு பேர் உண்டாக வேண்டும் என்பதற்காக நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுகிறான். கர்த்தருடைய நாமம் மாத்திரமே மகிமையுள்ளது. அவருடைய நாமம் மாத்திரமே வல்லமையும், மாட்சிமையுமுள்ளது. நாம் கர்த்தருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தவேண்டும். நிம்ரோத்திடத்தில் பணிவும் மனத்தாழ்மையுமில்லை.
பாபேல் கோபுரத்தைக் கட்டும் வரையிலும் பூமியில் எல்லா ஜாதியாருக்கும் ஒரே பாஷையே இருந்தது. ஒரேவிதமான விக்கிரகாராதனையே இருந்தது. தேவன் அவர்களுடைய பாஷையைத் தாறுமாறாக்கினார். மார்க்கக் காரியங்களிலும், மேலும் அநேக சமுதாயக் காரியங்களிலும் அவர்கள் ஒத்துப்போகாமல் முரண்பட்டுப் பிரிந்து போனார்கள். இதன் வாயிலாகப் பூமியின்மீது பல்வேறு பாஷைக்காரரும், ஜாதிக்காரரும் உண்டானார்கள்.
எபிரெய மொழியில் ""தொடுதல், அளாவுதல்'' என்னும் பொருளைத் தரும் வார்த்தையில்லை. ஆகையினால் பாபேல் கோபுரம் வானத்தை எட்டுமளவிற்கு மிகவும் உயரமானது என்று பொருள்கூறக்கூடாது. பாபேல் கோபுத்தின் உச்சிப்பகுதி வானங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1876 ஆம் ஆண்டில் பாபேல் கோபுரத்தைப் பற்றி பாபிலோனில் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோபுரம் கட்டுவதற்காக விரிவான மைதானம் இருந்தது. அதன் நீளம் 1156 அடி, அதன் அகலம் 900 அடி. இந்த வளாகத்தின் நடுவில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடை 450 அடி அகலமும், 1056 அடி நீளமும் உடையது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வாயிலாக இந்த மேடைக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
இந்த மேடையின் மையப்பகுதியில் கோபுரத்தைக் கட்டியிருக்கிறார்கள். இந்த மேடையின் அடிவாரத்தில் ஏராளமான விக்கிரகங்கள் உள்ளன. இவை அவர்களுடைய பல்வேறு தெய்வங்களின் விக்கிரகங்களாகும்.
இதன்மீது எழுப்பப்பட்டிருக்கும் பாபேல் கோபுத்தின் மொத்த உயரம் 300 அடியாகும். இந்தப் பீடத்தின்மீது ஏழு தட்டுகளாகக் கோபுரம் கட்டப்பட்டிருக்கிறது.
1. முதலாவது தட்டு # பரப்பளவு 300 சதுர அடி, உயரம் 110 அடி
2. இரண்டாவது தட்டு # பரப்பளவு 260 சதுர அடி, உயரம் 60 அடி
3. மூன்றாவது தட்டு # பரப்பளவு 200 சதுர அடி, உயரம் 20 அடி
4. நான்காவது தட்டு # பரப்பளவு 170 சதுர அடி, உயரம் 20 அடி
5. ஐந்தாவது தட்டு # பரப்பளவு 140 சதுர அடி, உயரம் 20 அடி
6. ஆறாவது தட்டு # பரப்பளவு 110 சதுர அடி, உயரம் 20 அடி
7. ஏழாவது தட்டு # 80 அடி நீளமும், 60 அடி அகலமும் உள்ளது. உயரம் 50 அடி
ஏழாவது தட்டின்மீது ஒரு பீடம் கட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பீடத்தின் நீளம் 80 அடி, அகலம் 60. இது பெல்#மேரோதாக் என்னும் தெய்வத்தின் கோயிலாகும்.
பாபேல் கோபுரத்தைக் கட்டியவர்கள் ஓரளவு கட்டி முடித்து விட்டார்கள். கோபுரத்தைக் கட்டிவிட்டு, நகரத்தைக் கட்டும்போது தேவன் அவர்களைப் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார். அப்பொழுது அவர்கள் நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள் (ஆதி 11:4,8).
பாபேல் கோபுரத்தைக் கட்டியவர்கள் இராட்சதர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் அக்காலத்துத் தெய்வங்களோடு எப்போதும் யுத்தம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். நிம்ரோத் ஒரு பராக்கிரமசாலி என்று அழைக்கப்படுகிறான். ஆதி 6:4 ஆவது வசனத்திலும், இராட்சதர்கள் ""பேர்பெற்ற மனுஷராகிய பலவான்கள்'' ஆக இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடு கூடுகிறதினால் இராட்சதர்கள் பிறந்தார்கள். (ஆதி 6:4)
பூமியின் மீதெங்கும் சிதறிப்போகக்கூடாது என்பதற்காக ஜனங்கள் கோபுரத்தையும், நகரத்தையும் கட்டினார்கள். ஆனால் தேவன் அவர்களைப் பூமியின் மீதெங்கும் சிதறப்போகப்பண்ணினார். (ஆதி 11:4,9; உபா. 32:8; அப் 17:26).
தாறுமாறான பாஷை
ஆதி 11:5#9
ஆதி 11:5. மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார்.
ஆதி 11:6. அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
ஆதி 11:7. நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
ஆதி 11:8. அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்தி-ருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
ஆதி 11:9. பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்தி-ருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார்.
நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுகிறவர்கள் மனமேட்டிமையாயும், பெருமையாயும் இருக்கிறார்கள். தாங்கள் செய்ய நினைப்பது ஒன்றும் தடைபடமாட்டாது என்று தங்கள் மனதில் இருமாப்பான சிந்தனையோடிருக்கிறார்கள். கர்த்தரோ அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்குகிறார். அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணுகிறார்.
கர்த்தருடைய கிரியைகளெல்லாமே நீதியும் நியாயமுமானவை. அவர் மனுஷருடைய இருதயங்களின் நினைவுகளை அறிந்திருக்கிறார். தங்களுக்கு பேர் உண்டாகப் பண்ணவேண்டும் என்பதற்காக மனுபுத்திரர் நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள கோபுரத்தையும் கட்டுகிறார்கள். கர்த்தர் தம்முடைய நீதியினால் அவர்களை நியாயந்தீர்க்கிறார். கர்த்தருடைய கரம் பாவத்திற்கு விரோதமாகவும், பாவிகளுக்கு விரோதமாகவும் நீட்டப்பட்டிருக்கிறது. பாவிகள் தேவனுடைய நீதியினால் தண்டிக்கப்படுவார்கள்.
மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்குகிறார் (ஆதி 11:5). மனுபுத்திரர் என்னும் வார்த்தை ஆதாமின் புத்திரரைக் குறிக்கிறது. இவர்கள் ஆதாமைப்போலவே கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்கிறார்கள். கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் காணப்படுகிற பாவமான சுபாவம், மனுபுத்திரரிடத்தில் காணப்படுகிறது.
மனுஷரைப் போலவே தேவனும் பிரயாணம் பண்ணியதற்குத் வேதாகமத்தில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. (ஆதி 3:8; ஆதி 11:5; ஆதி 18:1#22,33; ஆதி 32:24#32; ஆதி 35:13; யோவான் 4:24).
மனுபுத்திரர் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுகிறபோது, ஏபேரின் சந்ததியார் அவர்களோடு சேர்ந்து, இந்தக் கட்டுமான வேலைகளை செய்யவில்லை. அவர்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அவர்கள் கர்த்தருடைய பிள்ளைகள். நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுகிறவர்களோ மனுபுத்திரர்கள். இவர்கள் பாவிகளாகவும், தேவபக்தியற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், அவருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறார்கள்.
கர்த்தர் நித்தியமானவர். கர்த்தருடைய ஆலோசனைகள் எல்லாமே நீதியும் பரிசுத்தமுமானது. கர்த்தர் தம்முடைய தேவத்துவத்தில், மனுபுத்திரருடைய பாவத்திற்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார். அவர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்கு, கர்த்தர் பரலோகத்திலிருந்து, இந்தப் பூமிக்கு இறங்கிவருகிறார்.
மனுபுத்திரர் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம். அவர்களை உடனே அழித்துப்போடவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமல்ல. கர்த்தர் பாவிகளை தண்டிப்பதற்கு முன்பாக, தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப அவர்களுக்கு வாய்ப்புக்களைக் கொடுக்கிறார். இது கர்த்தருடைய கிருபை. நாம் கர்த்தருடைய கிருபையையும் இரக்கத்தையும் அசட்டைபண்ணிவிடக்கூடாது.
கர்த்தர் தம்முடைய வார்த்தைகளினாலும், ஆலோசனைகளினாலும், கட்டளைகளினாலும் மனுபுத்திரருக்கு புத்தி சொல்லுகிறார். அவர்களுடைய சிந்தனைகளும், செயல்களும் வீணானவை. தங்களுக்கு பேர் உண்டாகப் பண்ணவேண்டும் என்பதற்காக, அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுகிறார்கள். தாங்கள் செய்ய நினைப்பது ஒன்றும் தடைபடமாட்டாது என்றும் அவர்கள் இருமாப்பாய் சிந்திக்கிறார்கள்.
மனுபுத்திரரிடத்தில் தெய்வபயமில்லை. கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். ஆனால் அவர்களோ கர்த்தருக்கு பயப்படாமல், தங்களிடத்தில் ஞானம் இருப்பதாக நினைக்கிறார்கள். தங்களுக்கு அறிவும், புத்தியும் இருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். கர்த்தர் அவர்களுடைய பாவங்களை உணர்த்துகிறார். ஆனால் அவர்களோ தங்கள் பாவங்களை உணர மறுக்கிறார்கள். அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதை அவர்கள் நிறுத்திப்போடவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆனால் அவர்களோ நகரத்தையும் கோபுரத்தையும் தொடர்ந்து கட்டுகிறார்கள்.
மனுபுத்திரர் கர்த்தருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படியவில்லை, அவருடைய கட்டளைக்கும் கீழ்ப்படியவில்லை. தம்முடைய வார்த்தைக்கு மனுஷர் கீழ்ப்படியவில்லையென்றால், கர்த்தர் அவர்களை தம்முடைய நீதியினால் தண்டிப்பார். கர்த்தர் பாவிகளை தண்டித்தாலும், அந்தத் தண்டனையில் அவருடைய கிருபையும் இரக்கமும் வெளிப்படும்.
கர்த்தர் நம்முடைய பாவத்திற்குதக்க பிரகாரம் நம்மைத் தண்டிப்பதில்லை. அப்படி தண்டித்தால், நம்மில் ஒருவரும் ஜீவனோடிருக்க முடியாது. நாம் இன்று ஜீவனோடிருப்பது கர்த்தருடைய சுத்த கிருபை.
மனுபுத்திரர் ஒரு நகரத்தையும், ஒரு கோபுரத்தையும் கட்டி கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். கர்த்தர் தம்முடைய நீதியினால் அவர்களை தண்டிக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். ஆனாலும் அவர் தம்முடைய கிருபையினால் அவர்களை மொத்தமாக சங்காரம்பண்ணிவிடவில்லை. கர்த்தர் வானத்திலிருந்து அக்கினியையும், கல்மழையையும் அனுப்பி அவர்களை மொத்தமாய் அழித்துப்போடவில்லை. மின்னலும் இடியும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியும். தமக்கு விரோதமாகப் பாவம் செய்கிற மனுபுத்திரரை அழிப்பதற்கு, கர்த்தர் அவர்கள்மீது மின்னலையும் இடியையும் அனுப்பவில்லை.
கர்த்தர் மனுபுத்திரரை அழிப்பதற்கு முன்பாக, அவர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்ப்பதற்கு கீழே இறங்குகிறார். அவர்களுடைய பாஷையைத் தாறுமாறாக்கி, அவர்களை பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணவேண்டும் என்பதே கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு. அவர்கள் மரணத்திற்கு பாத்திரமானவர்கள். பாவத்தின் சம்பளம் மரணம். ஆனாலும் தேவனுடைய கிருபையோ, அவர்களுக்கு மரணத்தைக் கொடுக்கவில்லை.
கர்த்தர் தம்முடைய கிருபையினால் பாவம் செய்கிற மனுபுத்திரரை அழித்துப்போடாமல், அவர்களை சிதறிப்போகப்பண்ணுகிறார். மனுபுத்திரர் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தாலும், கர்த்தர் அவர்கள்மீது நீடிய பொறுமையோடிருக்கிறார். அவர்கள் தங்கள் பாவத்தினால் கர்த்தருக்கு கோபத்தை உண்டுபண்ணுகிறார்கள். ஆனாலும் கர்த்தர் தம்முடைய கோபத்தினால் அவர்களை உடனே அழித்துப்போடாமல், தம்முடைய கிருபையினால் அவர்கள்மீது நீடியபொறுமையோடிருக்கிறார்.
மனுபுத்திரர் நகரத்தையும், கோபுரத்தையும் கட்டும்போது பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சுமாயிருக்கிறது. அவர்கள் ஒரே கூட்டமாயிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையிருப்பதினால், அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். தாங்கள் ஆரம்பித்தது ஒருபோதும் தடைபடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது அவர்களுடைய மதியீனம். கர்த்தருடைய சித்தமில்லாமல், அவருடைய உதவியும் ஒத்தாசையுமில்லாமல், நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அவர்களோ, தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று நினைக்கிறார்கள் (ஆதி 11:6).
கர்த்தர் பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருகிறார். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறார். கர்த்தர் தம்முடைய தெய்வீக ஆலோசனையில், ""நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம்'' (ஆதி 11:7) என்று சொல்லுகிறார்.
தேவனுக்கு இங்கு பன்மை சுட்டுப்பெயரான ""நாம்'' என்னும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேவத்துவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரும் வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை இது வலியுறுத்திக் கூறுகிறது.
உலகத்தில் 6,760 பாஷைகள் இருப்பதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். பாஷைகள் பிரிந்தது தேவனுடைய நியாயத்தீர்ப்பாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. சபையில் அந்நிய பாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாக இராமல் அவிசுவாசிகளுக்கு அடையாளமாக இருக்கிறது (ஏசா 28:11; 1கொரி. 14:21#22).
கர்த்தர் அவர்களை அவ்விடத்தி-ருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணுகிறார். தேவன் பூமியைப் பகுப்பதற்கு முன்பாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. (ஆதி 10:25). ஜனங்கள் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகிறார்கள். அதன் பின்பு பூமியானது பல்வேறு கண்டங்களாகவும், தேசங்களாகவும், தீவுகளாகவும், ஜாதிகளாகவும் பகுக்கப்படுகிறது.
கர்த்தருடைய கட்டளையின் பிரகாரம் அவர்களுடைய பாஷை தாறுமாறாயிற்று. ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியவில்லை. அவர்களுடைய பாஷை தாறுமாறானதினால், அவர்களுக்குள் குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் உண்டாயிற்று. யாருடைய பேச்சும் யாருக்கும் புரியவில்லை. அவர்களால் இப்போது ஒரே கூட்டமாகயிருக்க முடியவில்லை. அவர்களால் ஒருவருக்கொருவர் உதவி செய்து, நகரத்தையும் கோபுரத்தையும் கட்ட முடியவில்லை. அவர்கள் எல்லோரும் யாருக்கும் புரியாத பாஷையைப் பேசுகிறார்கள். அவர்களுடைய பாஷை தாறுமாறாயிற்று.
கர்த்தர் அவர்களுடைய பாஷையைத் தாறுமாறாக்கி, அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணுகிறார். அப்பொழுது அவர்கள் நகரம் கட்டுகிறதை விட்டுவிடுகிறார்கள் (ஆதி 11:8). ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, கர்த்தர் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினபடியினால், அவர்கள் நகரம் கட்டுகிறதை விட்டுவிடுகிறார்கள்.
இதுவரையிலும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று நினைத்தவர்கள், இப்போது நகரம் கட்டுகிறதை விட்டுவிடுகிறார்கள். அவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. குழப்பமுண்டாயிற்று. கர்த்தருடைய கரம் தங்களுக்கு விரோதமாக எழும்பியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்களால் கர்த்தருக்கு விரோதமாக எதிர்த்து நின்று யுத்தம்பண்ண முடியவில்லை. அவர்கள் நகரம் கட்டுகிறதை விட்டுவிடுகிறார்கள்.
கர்த்தருடைய சித்தம் நம்முடைய சித்தத்திற்கு விரோதமாக இருக்கும்போது, நாம் நம்முடைய சித்தத்தை கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். கர்த்தர் தம்முடைய சித்தத்தை, நம்முடைய சித்தத்திற்கு ஏற்ற பிரகாரம் மாற்றிக்கொள்ளவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. கர்த்தர் நம்முடைய யோசனைகளுக்கும், செயல்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணும்போது, நம்முடைய யோசனைகளையும், செயல்களையும் அப்படியே நிறுத்திவிடவேண்டும். இதுவே மெய்யான ஞானம். நாம் ஒருபோதும் கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறவர்களாயிருக்கக்கூடாது.
கர்த்தர் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுகிறவர்களை பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணுகிறார் (ஆதி 11:8,9). அவர்கள் மறுபடியுமாக தங்கள் தங்கள் ஜாதியின் படியேயும், பாஷையின் படியேயும், கோத்திரத்தின் படியேயும், தங்களுக்கு நியமிக்கப்பட்ட தேசங்களில் குடியேறுகிறார்கள் (ஆதி 10:5,20,31).
தங்களுக்கு பேர் உண்டாகப் பண்ணவேண்டும் என்பதற்காக அவர்கள் ஒரு நகரத்தையும், ஒரு கோபுரத்தையும் கட்டினார்கள். ஆனால் இப்போதோ அவர்கள் நகரம் கட்டுகிறதை விட்டுவிடுகிறார்கள்.
பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்படுகிறது; கர்த்தர் அவர்களை அவ்விடத்தி-ருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணுகிறார் (ஆதி 11:9).
பாபேல் என்னும் பெயருக்கு குழப்பம் அல்லது தாறுமாறு என்று பொருள். அவர்கள் தங்களுக்கு நல்ல பெயர் உண்டாகப்பண்ணவேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு கெட்ட பெயர் உண்டாயிற்று. மனுபுத்திரர் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகிறார்கள். சிதறிப்போனவர்கள் இதுவரையிலும் மறுபடியுமாக ஒரே கூட்டமாக ஒன்றுசேரவில்லை.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்போது, எல்லா ஜாதிகளும், தேசத்தாரும் அவருக்கு முன்பாக கூட்டிச்சேர்க்கப்படுவார்கள். அதுவரையிலும் பூமியின் மீதெங்கும் சிதறிப்போனவர்கள், சிதறிப்போனவர்களாகவே இருப்பார்கள்.
""அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்'' (மத் 25:31#33).
சேமுடைய வம்சவரலாறு
ஆதி 11:10#26
ஆதி 11:10. சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாய் இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
ஆதி 11:11. சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 11:12. அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
ஆதி 11:13. சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்,
ஆதி 11:14. சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
ஆதி 11:15. ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 11:16. ஏபேர் முப்பத்துநாலு வயதான போது, பேலேகைப் பெற்றான்.
ஆதி 11:17. பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 11:18. பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
ஆதி 11:19. ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 11:20. ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
ஆதி 11:21. செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 11:22. செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
ஆதி 11:23. நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 11:24. நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
ஆதி 11:25. தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஆதி 11:26. தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
சேமுடைய வம்சவரலாற்றைப்பற்றி இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இது முடிவு பெறாத நித்திய வம்சவரலாறு அல்ல. சேமின் வம்சவரலாறு இந்த வசனப்பகுதியில் ஆபிராமோடு முடிவு பெறுகிறது. ஆபிராம் தேவனுடைய சிநேகிதர். ஆபிராமின் சந்ததியில் இயேசுகிறிஸ்து வருகிறார். அவரே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்து.
""ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்...........; யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்'' (மத் 1:1#16).
சேமுடைய வம்சவரலாறு: ""ஜலப்பிரளயம் உண்டாய் இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்'' (ஆதி 11:10) என்று ஆரம்பமாகிறது. இந்த வம்சவரலாற்றில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களும், அவர்களுடைய வயதும் மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களைப்பற்றிய அதிகமான விவரங்கள் எதுவும் இங்கு சொல்லப்படவில்லை.
சேம் பேழைக்குள் நுழைந்தபோது அவனுக்கு 97 வயது. (ஆதி 11:10; ஆதி 5:32; ஆதி 7:6; ஆதி 8:13) அவனுடைய தந்தையாகிய நோவாவைப் பார்த்து தேவன் பேழையைக் கட்டுமாறு கூறியபோது சேம் வளர்ந்து பெரியவனாகி திருமணமும் செய்திருந்தான். (ஆதி 6:9#10,18). ஆகையினால், நோவா பேழையைக் கட்டிய காலம் 120 வருஷமாக இருந்திருக்காது என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள்.
ஆதாமிலிருந்து ஆபிரகாம் வரையிலுமுள்ள காலத்தில் சேம் பதினொறாவது சந்ததி ஆவான். மெத்தூசலா ஆதாமின் காலத்தில் 243 வருஷங்கள் இருந்தார். (ஆதி 5:1#32) சேம் மெத்தூசலாவின் காலத்தில் 97 வருஷங்கள் இருந்தார். (ஆதி 5:32; ஆதி 11:10#11). ஆபிரகாம் சேமின் காலத்தில் 150 வருஷங்கள் இருந்தார். (ஆதி 11:10#32) யாக்கோபு ஆபிரகாம் காலத்தில் 15 வருஷங்கள் இருந்தார். ஆகையினால் ஆதாமின் காலத்து செய்தி ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு எளிதாகக் கடந்து வருவதற்கு வாய்ப்பு உண்டாயிருக்கிறது.
சேமுடைய வம்சவரலாற்றில் இடம் பெற்றிருக்கிறவர்கள் எல்லோரும், பூர்வகாலத்திலிருந்த முற்பிதாக்கள். கர்த்தர் தம்முடைய கிருபையினாலும், பூர்வகாலத்திலிருந்த முன்னோர்களைப்பற்றி தம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
""முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்'' (பிர 3:15).
முற்பிதாக்களின் வயது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது. ""சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்'' (ஆதி 11:11). சேம் அறுநூறு வருஷம் உயிரோடிருந்தார். ஜலப்பிரளயத்திற்கு முந்தியிருந்தவர்கள், இதைவிட அதிகமான வருஷங்களுக்கு உயிரோடிருந்திருக்கிறார்கள்.
சேமுக்கு பின்பு வருகிறவர்கள் அறுநூறு வருஷம்கூட உயிரோடிருக்கவில்லை. அவர்களுடைய ஆயுசுகாலம் இன்னும் குறைகிறது. ஒரு சிலர் முன்னூறு வருஷம் வரையிலும், வேறு சிலர் இருநூறு வருஷம் வரையிலும் மாத்திரமே உயிரோடிருந்திருக்கிறார்கள்.
""அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான், சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான். ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்'' (ஆதி 11:12#15).
லூக்கா 3:36 ஆவது வசனத்தில் ""சாலா காயினானின் குமாரன்'' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் காயினானைப் பற்றி எந்த வசனத்திலும் கூறப்படவில்லை. (1நாளா. 1:18). ஒருவேளை செப்துவஜிந்த் பதிப்பிலிருந்து இந்தப் பெயர் கடந்து வந்திருக்கலாம்.
""ஏபேர் முப்பத்துநாலு வயதான போது, பேலேகைப் பெற்றான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான். ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்'' (ஆதி 11:16#19).
""பேலேகு'' என்பவன் ஆதி 11:9 ஆவது வசனத்தின் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு 14 வருஷங்களுக்கு முன்பாக பிறந்தான். இவனுடைய காலத்தில் ஆதி 11:1#9 ஆகிய வசனத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவன் காலத்தில் பூமி தேசங்களாகவும், தீவுகளாகவும் பகுக்கப்பட்டது. (ஆதி 11:16; ஆதி 10:25; 1நாளா 1:19).
பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்தான். மனுஷனுடைய ஆயுசு காலம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வருகிறது. ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனுஷர் ஆயிரம் வருஷம் வரையிலும் உயிரோடு இருந்தார்கள். (ஆதி 5). ஜலப்பிரளயத்திற்குப் பின்பு வந்த முதலாவது சந்ததியார் சுமார் 400 வருஷம் உயிரோடு இருந்தார்கள். (ஆதி 11:10#17). அதற்குப் பிந்திய சந்ததியார் 200#250 வருஷங்கள் உயிரோடு இருந்தார்கள். (ஆதி 11:18#32) இதற்கும் பின்னால் வரும் சந்ததியார் 100#200 வருஷங்கள் உயிரோடிருந்தார்கள். (ஆதி 23:1; ஆதி 25:7,17; ஆதி 35:28; ஆதி 47:28; ஆதி 50:22; உபா 31:2; உபா 34:7).
""ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான். செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான். நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான்'' (ஆதி 11:20#23).
நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான். தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான் (ஆதி 11:24#26).
தேவன் மூத்தவன்மீது இளையவனைத் தெரிந்தெடுக்கிறார். ஆகையினால் ஆபிரகாமின் பெயர் இங்கு முதலாவதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆபிரகாம் பிறந்த போது, தேராகுவிற்கு 130 வயது. (ஆதி 11:26#12:5). ஆபிரகாம் எபிரெயரின் முற்பிதா.
ஏபேரின் வம்சத்தில் எபிரெயர்கள் வருகிறார்கள். ஜலப்பிரளயத்திற்கு பின்பு ஏபேர் அதிகமான வருஷங்களுக்கு உயிரோடிருக்கிறார். அவருடைய ஆயுசுகாலம் நானூற்று அறுபத்து நாலு ஆகும். அவர் கர்த்தரிடத்தில் பக்தியுள்ளவராயிருந்து, கர்த்தருடைய வழியில் நடந்ததினால், கர்த்தர் அவருடைய ஆயுசுகாலத்தை கூட்டிக் கொடுத்திருக்கிறார்.
தேராகுடைய வம்சவரலாறு
ஆதி 11:27#32
ஆதி 11:27. தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.
ஆதி 11:28. ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்கு முன்னே மரித்தான்.
ஆதி 11:29. ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
ஆதி 11:30. சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
ஆதி 11:31. தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக் கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.
ஆதி 11:32. தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.
தேராகுடைய வம்சவரலாற்றில் ஆபிரகாமின் சரித்திரம் ஆரம்பமாகிறது. ஆபிரகாம் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் மிகவும் முக்கியமானவர். இவர் ஊர் என்கிற கல்தேயர் தேசத்து பட்டணத்தைச் சேர்ந்தவர். இந்தப் பட்டணத்தில் விக்கிரகாராதனை அதிகமாயிருந்தது. தேராகுவின் வம்சத்தார் இந்தப் பட்டணத்தில் வாசம்பண்ணினார்கள். இவர்கள் எல்லோரும் ஏபேரின் சந்ததியை சேர்ந்தவர்கள்.
வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்கிறவர்கள், கர்த்தருடைய கிருபையினாலேயே அந்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்கிறார்கள். அவர்கள் வாக்குத்தத்த தேசத்திலிருந்தாலும் தங்களுடைய சொந்த தேசத்தை மறந்துவிடக்கூடாது. ஆபிரகாமின் சந்ததியார் கர்த்தருடைய ஜனமாகயிருந்தாலும், ஆபிரகாமின் முன்னோர்கள் ஒரு காலத்தில் ஊர் என்கிற கல்தேயர் தேசத்து பட்டணத்திலே வாசம்பண்ணினவர்கள். ஆபிரகாம் கர்த்தரை ஆராதித்தாலும், அவர்களுடைய முன்னோர்கள் கல்தேயர் தேசத்திலே விக்கிரகங்களை ஆராதித்தவர்கள்.
ஆபிகாரமின் உற்றார் உறவினர்களைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின் தகப்பனார் தேராகு. இந்த வசனப்பகுதியின் முன்னுரை, "" தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்'' (ஆதி 11:27) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
தேராகு விக்கிரகங்களை ஆராதித்தவர். இவர் யோர்தான் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தவர். பூர்வத்திலேயே, ஜனங்கள் விக்கிரகங்களை ஆராதித்தார்கள். கர்த்தரை ஆராதிக்கிறவர்கள், விக்கிரகாராதனைக்காரர்கள் மத்தியிலே ஜீவித்தாலும், அவர்கள் விக்கிரகங்களை சேவிக்காமல், கர்த்தரையே சேவித்தார்கள்.
""அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்'' (யோசு 24:2).
ஆபிரகாமின் சகோதரரைப்பற்றியும் இந்த வசனப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. நாகோர், ஆரான் ஆகியோர் ஆபிரகாமின் சகோதரர்கள். ஈசாக்கும் யாக்கோபும் நாகோரின் குடும்பத்திலிருந்து தங்களுக்கு மனைவிகளை பெற்றுக்கொண்டார்கள்.
ஆரான் லோத்தின் தகப்பனார். ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்கு முன்னே மரித்தார் (ஆதி 11:28).
ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணம் இப்பொழுது ஐபிராத்து நதியின் மேற்குக்கரையில் உள்ளது. இதன் தற்காலத்துப் பெயர் முகேயீர் என்பதாகும்.
பெற்றோர் மரித்த பின்புதான் பிள்ளைகள் மரிப்பார்கள் என்னும் நியதி எதுவுமில்லை. பெற்றோர் மரிப்பதற்கு முன்பாகவே, அவர்களுடைய பிள்ளைகள் மரித்துப்போவதற்கு வாய்ப்புள்ளது. எல்லோருக்கும் மரணம் வரும். அது வயதின் அடிப்படையில் வரும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்ட காலத்திலேயே அவர்களுக்கு மரணம் வரும்.
""காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராததேசத்துக்கு, நான் போகுமுன்னே, நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்'' (யோபு 10:21,22).
ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்து பட்டணத்திலே மரித்தார். தேராகும், அவருடைய குடும்பத்தாரும் விக்கிரகாராதனை நிரம்பிய ஊர் பட்டணத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே, ஆரான் அந்தப் பட்டணத்தில் மரித்துப்போனார்.
ஆபிரகாமின் மனைவியாகிய சாராய், ஆரானுடைய குமாரத்தி. ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொள்கிறார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன் (ஆதி 11:29).
""சாராய்'' என்னும் பெயர் பரிசுத்த வேதாகமத்தில் 59 தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சாராயின் பிறப்பைப் பற்றிய செய்தியை ஆதி 11:29#31; ஆதி 12:1#23:19 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. சாராயைப் பற்றிய மற்ற செய்திகள் ஆதி 24:36; ஆதி 25:10; ஆதி 49:31; ஏசா 51:2; ரோமர் 4:19; ரோமர் 9:9; எபி 11:11; 1பேதுரு 3:6 ஆகிய வசனங்களில் உள்ளன. வேதாகமத்தில் சாராய் என்னும் பெயரில் வேறொரு ஸ்திரீயும் இருக்கிறாள் (எண் 26:46).
""மில்க்காள்'' (ஆதி 11:29; ஆதி 22:20#24:47). வேதாகமத்தில் மில்க்காள் என்னும் பெயரில் வேறொரு ஸ்திரீயும் இருக்கிறாள். (எண் 26:33; எண் 27:1; எண் 36:11; யோசு 17:3).
இஸ்காள் என்பது சாராயைக் குறிக்கும் என்று யோசபஸ் கூறுகிறார். ஆனால் ஆதி 11:27,29; ஆதி 14:12; ஆதி 20:12 ஆகிய வசனங்களிலிருந்து இந்தக் கருத்து தெளிவாக இல்லை. சாராய் ஆபிரகாமின் ஒன்றுவிட்ட சகோதரரி.
ஆபிரகாம் சாராளைப்பற்றிச் சொல்லும்போது, அவள் தன்னுடைய தகப்பனாரின் குமாரத்தி என்று சொல்லுகிறார். அவளை தன்னுடைய தாயாரின் குமாரத்தி என்று சொல்லவில்லை. சாராய் ஆபிராமைவிட பத்து வருஷம் வயதில் இளையவள். சாராயிக்கு பிள்ளையில்லை. அவள் மலடியாயிருக்கிறாள்.
""அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்'' (ஆதி 20:12).
ஆபிராம் தன்னுடைய தகப்பனாராகிய தேராகோடும், தன் உறவினரான லோத்தோடும், மற்றும் தன்னுடைய குடும்பத்தாரோடும், கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்கு புறப்பட்டுப்போகிறார்.
""தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக் கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்'' (ஆதி 11:31).
ஆபிரகாமே தேவனுடைய அழைப்பைப் பெற்றவர். தேராகு தேவனுடைய அழைப்பைப் பெறவில்லை. (ஆதி 12:1; அப் 7:2).
ஆரான் மெசப்பதோமியாவில் வடகிழக்கில் உள்ள பகுதி. இது பேலியாஸ் நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இந்த நதியில் ஐபிராத்து நதி கலக்கிறது. இது நினிவேயிலிருந்து கர்கெமிஷிற்கு செல்லும் பாதையிலுள்ள வியாபார மையம். (எசே 27:23). இந்த இடத்திலுள்ள ஜனங்கள் சந்திரனைச் சீன் என்னும் தெய்வமாக வழிபடுகிறார்கள். ஈசாக்கும், யாக்கோபும் இந்தப் பகுதியிலிருந்து தங்களுக்கு மனைவிகளைத் திருமணம் செய்கிறார்கள். (ஆதி 24:1#35:29, 2இராஜா 19:12; ஏசா 37:12; அப் 7:2,4).
கர்த்தர் ஆபிராமை நோக்கி: ""நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்'' (ஆதி 12:1#3) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவர் புறப்பட்டுப்போகிறார்; லோத்தும் ஆபிராமோடேகூடப் போகிறார். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருக்கிறார் (ஆதி 12:4).
அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது அங்கே இருந்துவிடுகிறார்கள். ஆரான் ஊருக்கும் கானானுக்கும் நடுவிலுள்ளது. தேராகு ஆரானிலே மரித்துப்போகிறார். தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்று ஐந்து வருஷம். தேராகு மரிக்கும் வரையிலும் அவர்கள் ஆரானிலே இருக்கிறார்கள்.
தேராகு ஒருவேளை வயது முதிர்ந்தவராகயிருப்பதினால், அவரால் பிரயாணம் பண்ண முடியாமலிருந்திருக்கலாம். அல்லது அவர்கள் கானானுக்கு தொடர்ந்து பிரயாணம்பண்ண வேறு ஏதாவது தடைகள் ஏற்பட்டிருக்கலாம். கர்த்தர் அவர்களை கானான் தேசத்திற்கு போகச்சொன்னார். ஆனால் அவர்களோ கானானுக்கு வந்து சேராமல் ஆரானிலே தங்கியிருக்கிறார்கள்.
இவர்களைப்போலவே அநேகர் தங்கள் ஆவிக்குரிய பிரயாணத்தில் கானானுக்கு வந்து சேராமல், ஆரானிலே தங்கிவிடுகிறார்கள். அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு தூரமாயில்லை. அதற்கு அருகாமையில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கவில்லை.
