மிகுந்த கனி
நீங்கள் மிகுந்த கனிகளைக்
கொடுப்பதினால்... யோவான் - 15:8
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது தெய்வீக நற்குணங்கள் என்னும் கனிகளைக் கொடுக்கின்ற வாழ்க்கை ஆகும். நம்முடைய ஜெபம், தியானம், சபைகூடுதல்கள், பாடல்கள், பிரசங்கங்கள் இவைகளினால் தேவன் மகிமைப்பட்டுவிட்டார் என்று நாம் முழுமையாகக் கூற முடியாது. நாம் நம்முடைய ஜென்ம சுபாவ அனுபவங்களைக் களைந்து விட்டு கிறிஸ்துவுக்கேற்ற சுபாவங்களை நம்மில் வெளிப்படுத்தும் போதுதான் தேவன் பிறர் நடுவில் மகிமைப்படுகின்றார். அந்தக் கனி கொடுக்கும் அனுபவத்திற்காகவே தேவன் காத்திருக்கின்றார்.
கனி கொடுப்பதுகூட ஏதோ ஒரு கிறிஸ்தவ பக்திக்காக சில நற்குணங்களை மட்டும் கொண்டிருப்பதல்ல. நாம் மிகுதியான கனிகளைக் கொடுக்கும்போதுதான் தேவன் மகிமைப்படுகிறார் என்று இயேசு சொன்னார். ஆனால் மிகுதியான கனி கொடுக்கும் அனுபவம் யாருக்குமே எளிதில் விரைவாக வந்துவிடாது. முதலில் சாதாரண கனி கொடுக்கும் அனுபவத்திலேயே அது ஆரம்பிக்கும். நம்மை நாமே செழிப்புள்ள திராட்சைச் செடிகளாக மாற்றிவிட முடியாது. தேவன் பரிசுத்த ஆவியின் மூலம்தான் நம்மில் அந்தக் கனி கொடுக்கும் அனுபவத்தை உருவாக்குகின்றார்.
ஆனால் நமக்குக் கிடைத்த கொஞ்சம் செழிப்பில் அல்லது குறைவான வாய்ப்புகளுக்கு நடுவில் எந்த அளவு கனி கொடுக்கிறோம் என்பதை தேவன் கவனிக்கிறார். தேவனை மகிமைப்படுத்துவதற்கும், நம்முடைய பரிசுத்தத்தையும், உண்மையையும் வெளிப்படுத்துவதற்கும் கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் நாம் சரியாகப் பயன்படுத்த விழிப்பாயிருக்க வேண்டும். நமக்கு முன்புள்ள கொஞ்சம் சூழ்நிலையில், மன உண்மையுடன் நடந்து அதற்கேற்ப கொஞ்ச கனிகளாவது கொடுக்கும்போதுதான், தேவன் மென்மேலும் நம்மை செழிக்கச் செய்கிறார். கனி கொடுக்கும் வாய்ப்புகளில் பெருகச் செய்கின்றார். அப்போது நாம் அதிகக் கனிகளைக் கொடுப்போம். அப்போதுதான் தேவன் மகிமைப்படுவார்.
நமக்குக் கிடைக்கும் கொஞ்ச வாய்ப்புகளில் உண்மையாயிருந்து கனி கொடுத்தால்தான், நமக்கு விசாலமான வாய்ப்புகள் கிடைக்கும் போது அதற்கேற்ப கனி கொடுக்கும் இயல்பு செயல்படும். கொஞ்சத்தில் உண்மையாயிராதவர்களுக்கு, மிகுதியாக வந்தாலும் உண்மையாயிருக்க முடியாது. பிலதெல்பியா சபையின் ஒரு முக்கியமான விசேஷம் என்னவென்றால், அதற்கு கொஞ்சம் பெலன் இருந்தும் வசனத்க்ை கைக்கொள்வதில் உறுதியாயிருந்தது. எனவே உயிர்த்தெழுந்த இயேசு அந்தச் சபையைப் பாராட்டியதோடு, அதற்காக திறந்த வாசலையும் வைப்பதாக வாக்களித்தார். (வெளி 3:8)
கடந்த கால வரலாறு அல்ல. நிகழ்கால நிஜமாக விளங்குவதே சிறிஸ்தவம்.
