அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனிஅப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)
அ) முற்பிதாக்களின் நாட்களைக் குறித்த விபரம் (அப்போஸ்தலர் 7:1-19)
அப்போஸ்தலர் 7:35-36
35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.36 இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
தேசிய விடுதலைக்கான செய்தியுடன் மோசே வந்த போது மக்கள் அவனை புறக்கணித்தார்கள். இறைவன் ஆவிக்குரிய விடுதலையை கொண்டு வரும்படி அவனை தெரிந்துகொண்டார். அவனது மக்கள் அவனைப் புறக்கணித்ததால், அவனும் இயேசுவைப் போல இருந்தான். இறைவன் இயேசுவுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினார். பாவத்திற்கு அடிமைகளாய் இருக்கும் எண்ணிலடங்கா மக்களை அவர் விடுவிக்கும்படி அப்படிச் செய்தார். ஸ்தேவான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவன் மோசேயைப் புறக்கணித்தான் என்பதாகும். ஆனால் ஸ்தேவான் மோசேயின் பெயரை உயர்த்தினார். அவனை உன்னதப் பட்டங்கள் சூட்டி அழைத்தார். அவன் மோசேயை அதிகாரி, மீட்பர் என்று அழைத்தார். அவருடைய மக்களுக்கு தலையாக அவன் இருந்தான். இறைவனுடைய கடினமான மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு பாடுப்பட்டான். இதைப் போலவே கிறிஸ்து அவருடைய சபைக்கு தலையாக இருக்கிறார். அவரே உண்மையான விடுதலையாளர் மற்றும் மீட்பர் ஆவார். பரிசுத்தத்தின் அழகிற்கு நேராகவும், அவருடைய பிதாவினிடத்திலும் ஆவிக்குரிய ஆண்கள் மற்றும் பெண்களை அவர் வழி நடத்துகிறார். அவருடைய புதிய உடன்படிக்கையில் அவர்களை அவர் உறுதிப்படுத்துகிறார்.
இறைவனுடைய சிங்காசனத்தின் தூதனானவன் இறைவனின் தோற்றத்தை பிரதிபலித்துக் காண்பிக்கிறார். வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகளாக மோசேயுடன் அவர் இணைந்து இருந்தார் என்று ஸ்தேவான் கூறுகிறார். வயது முதிர்ந்த மோசே பலவீனமானவனாய் இருந்தான். அவன் பேச்சில் வல்லவன் அல்ல. வனாந்தரத்தில் அவருடைய எண்ணிலடங்கா மக்களை அனுதினமும் போஷிப்பது, அவனது மிகப்பெரும் பொறுப்பாக இருப்பதை நினைத்து அவனுடைய மனம் கவலை கொண்டது. கர்த்தருடைய தூதனானவர் தன்னுடைய கரத்தினால் அவனை எடுத்து. படிப்படியாக அவனை வழிநடத்தினார். அவரை நோக்கி வந்த தீவிரமான எதிர்ப்புகளில் இருந்து அவனை விலக்கிக் காத்தார். இருளின் அதிகார மையத்தில் இருந்து அவர் அவனை வெற்றியாய் வழிநடத்தினார். இறைவனின் வல்லமையினால் உண்டான மிகப்பெரும் அற்புதங்களினால் அவனை கனப்படுத்தினார். மோசே தன்னில் தானே ஒரு அதிகாரியாகவோ அல்லது மீட்பராகவோ இல்லை. இந்த எளிய மனிதனில் இறைவன் தனது சர்வவல்லமையை வெளிப்படுத்தினார். நாற்பது ஆண்டுகளாக அவருடைய வேலைக்காரனுக்கு அவர் உதவினார்.
நாமும் வெற்றியுள்ள ஆண்டவரை, நமக்காக செயல்படுகிற மீட்பரை பெற்றிருக்கிறோம். அவர் தூதர்களின் உதவியை இதற்காக நாடவில்லை. அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட இறைவன் ஆவார். அவருடைய வெற்றிப்பவனியில் இன்றும் அவர் எல்லா நாடுகள், மக்கள் மத்தியில் இருந்து தன்னுடைய மக்களை தெரிந்தெடுத்து வழிநடத்துகிறார். நம்முடைய பிரபஞ்சத்தின் இருண்ட வனாந்தரங்களின் மத்தியில் நாம் ஆரவாரம், நன்றியுணர்வு, துதியினால் அவரை பின்பற்றகிறோம்.
விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் சபையின் தலையாக இருக்கிறீர். எங்களது உண்மையுள்ள விடுதலையாளராக இருக்கிறீர். நீர் எங்களை உமது சிறகுகளால் மூடுகிறீர். உமது ஆகாரத்தினால் நாங்கள் உயிர் வாழ்கிறோம். எங்கள் எதிர்காலத்தை நாங்கள் கட்டும்படி உமது உண்மையினிமித்தம் நாங்கள் உம்மில் மாத்திரமே தொடர்ந்திருக்கிறோம். நீர் ஒருபோதும் எங்களை விட்டுவிலகுவதில்லை.
அப்போஸ்தலர் 7:37-43
37 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.38 சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.39 இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,40 ஆரோனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;41 அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.42 அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,43 பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே.
மோசே மற்றும் நியாயப்பிரமாணத்திற்கு எதிரான தூஷணம் என்ற குற்றச்சாட்டிற்கு கீழாக ஸ்தேவான் கொண்டுவரப்பட்டான். ஆகவே தான் தன்னுடைய வாதத்தின் போது ஐந்து முறை அவன் வலியுறுத்தினான். மோசே இறைவன் முன்பு பெற்றிருந்த தனித்துவமான நிலையைக் குறித்து “இந்த” என்ற பெயரை அவன் பயன்படுத்தினான் பழைய ஏற்பாட்டில் வேறு எவரும் இதைப் பெற்றிருக்கவில்லை. உன்னதமானவர் அவனிடம் தனிப்பட்டவிதத்தில் பேசினார். (வசனங்கள் 35,36,37,38,40). பழைய ஏற்பாட்டின் மத்தியஸ்தராக மோசே இருந்தான். அவன் மரண ஆபத்தின் கீழ் இருந்தான். அக்கினி மற்றும் புகையைக் கக்கும் எரிமலையில் ஏறினான். அங்கு அவன் ஆண்டவரின் தூதனை சந்தித்தான்.
ஸ்தேவான் நியாயப்பிரமாணத்தை குறிப்பிட்டு பேசினான். இறைவனிடமிருந்து மோசே இதைப் பெற்றான். இது இறைவனின் இருதயத்தில் இருந்து புறப்பட்ட “உயிருள்ள பிரமாணங்கள்” ஆகும். உடன்படிக்கையின் மக்களின் பிரதிநிதியிடம் இவைகள் தூதனின் கரத்தால் வழங்கப்பட்டது. நியாயப்பிரமாணத்தை அழிவுள்ளது, செத்துப்போன கடிதம் என்று ஸ்தேவான் கூறவில்லை. அது வாழ்வின் வழிகாட்டி, இறைவனின் பரிசுத்தத்தில் வெளிப்பட்ட நீரோடை என்று கூறினான். நியாயப்பிரமாணத்தை கைக்கொள்பவன் என்றென்றம் வாழுவான்.
ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக மோசேயை உயர்த்தி பேசுவதையும், நியாயப்பிரமாணத்தை மகிமைப்படுத்துவதையும் விட ஸ்தேவான் இன்னொரு காரியத்தில் அக்கறையுள்ளவனாக இருந்தான் அவன் அவர்களுக்கு ஒரு காரியத்தை தெளிவுபடுத்த விரும்பினான். பழைய ஏற்பாட்டின் மத்தியஸ்தரை அவனோ அல்லது கிறிஸ்தவ சபையோ, ஒருபோதும் மறுதலிக்கவில்லை. அவனுக்கு விரோதமாக அவர்கள் ஒரு போதும் நிந்தனை செய்ததில்லை. இஸ்ரவேல் மக்கள் பல நேரங்களில் அவனை மறுதலித்தார்கள். தொடர்ந்து அப்படிச் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியாமையின் மக்களாக இருந்தார்கள். ஸ்தேவான் தனது பேச்சின் ஆரம்பித்தில் ஒரு காரியத்தை தெளிவுப்படுத்தினான். எகிப்தில் இருந்த அடிமைகள் மோசேயைப் புரிந்துக்கொள்ளவில்லை. அவனை அழித்தொழிக்க முயற்சித்தார்கள். அவனது உதவியை அவனது மக்களே புறக்கணித்ததால் அவன் ஓட வேண்டியதாய் இருந்தது. இருப்பினும் இறைவன் அவனை புறக்கணித்த மக்களுக்கு தலைவனாக ஏற்படுத்தினார். அவர்களது கடின இருதயத்தை எதிர்த்து வெற்றியுள்ளவனாக அவனை மாற்றினார். இறைவனிடம் உடன்படிக்கையின் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக்கொள்ள அவன் வந்த போது, அவனை பின்பற்றியவர்கள் அவனை மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்களுடைய இருதயத்தை ஆண்டவரிடமிருந்து திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் ஆடம்பர வாழ்வு மீது எண்ணங்கள் உடையவராக இருந்தார்கள். அவர்கள் தங்களது மத்தியஸ்தருக்கு காத்திருப்பதற்கு பதில் பொன் கன்றுக்குட்டியை ஆராதிப்பதை தெரிந்துகொண்டார்கள். இறைவனுடனான அவனது சந்திப்பில் தாமதம் ஏற்பட்டபோது இது நேரிட்டது.
ஸ்தேவான் தனக்காக வாதாடும்போது கொடுத்த இந்த பிரசங்கம் முழுவதும் ஆவிக்குரிய முக்கியத்துவம் வாய்ந்தது. மோசே நீண்ட காலமாக இறைவனின் பார்வையில் இருந்து தூரமாய் இருந்து பின்பு திரும்பி வந்து பழைய ஏற்பாட்டின் மக்களுக்கு உறுதிப்படுத்தினார். அது போல கிறிஸ்துவும் இன்று பரலோகப் பிதாவின் பார்வையில் தூரமாய் இருந்து, ஏற்ற காலத்தில் திரும்பி வருகிறார். தன்னுடைய சமாதானத்தை பூமியில் கொண்டு வருகிறார். அந்நேரத்தில் அவர்களது தலைவரை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் மனிதர்கள் கிறிஸ்துவை நம்புவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் செழிப்பின் பொன் கன்றுக்குட்டியை சுற்றி நடனம் ஆடுகிறார்கள். அவர்கள் தொழில்நுட்பம், மரண ஆயுதங்கள், தங்களது சொத்துக்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து பெருமையாய் பேசுகிறார்கள். இவர்கள் இறைவனைப் பார்ப்பதில்லை. கரும் மேகத்தைப் போல் வரும் அவருடைய நியாயத்தீர்ப்பை அவர் புரிந்து கொள்ளவில்லை.இஸ்ரவேல் அடிமைப்படுத்தப்பட்டது இறைவனின் நியாயத்தீர்ப்பு ஆகும் என்பதை ஸ்தேவான் நீதிபதிகளுக்கு காண்பித்தான். ஏனெனில் அவர்கள் அவரை விட்டுவிட்டார்கள். இந்த நியாயத்தீர்ப்பு ஒரே நேரத்தில் நிகழாமல், படிப்படியாக நடந்தேறியது. இந்த மக்கள் விக்கிரகாராதனை, பணஆசையில் வீழ்ந்து போனபோது ஆண்டவருக்கும் உடன்படிக்கையின் மக்களுக்கும் முறிவு ஏற்பட்டது. அவர்கள் வானசாஸ்திரத்தை நம்பினார்கள். தீய ஆவிகள் தங்கியிருந்த இடங்களில் ஆராதனை செய்தார்கள். அவர்களை சுற்றியிருந்த எல்லா தேவதைகளையும் அவர்கள் வணங்கினார்கள். ஒவ்வொரு புதிய யோசனையையும் ஏற்றுக்கொள்ளவும், அவர்களது கண்களுக்கு பயமுறுத்தக் கூடியதை ஏற்றுக்கொள்ளவும் ஆயத்தமாயிருந்தார்கள். காணக்கூடாத இறைவனை அறியும் அறிவை நாடுவது நன்மையானது என்று அவர்கள் கருதவில்லை. எனவே அவர்களது மனச்சாட்சியில் பேசின பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு அவர்கள் கீழ்ப்படிவதை தெரிந்துகொள்ளவில்லை. இதுவே எல்லா நியாயத்தீர்ப்பிற்கும் முக்கிய காரணமாக உள்ளது. நீ இன்று இறைவனுக்கு செவிகொடுக்கிறாயா? அவருடைய வார்த்தையைக் கேட்கிறாயா? அவருடைய சித்தத்தை மகிழ்ச்சியுள்ள இதயத்துடன், உடனடியாகவும், முழுமையாகவும் நிறைவேற்றுகிறாயா?
ஸ்தேவான் மிகுந்த எதிர்பார்ப்புடன் தன்னைக் கவனிப்பவர்களிடம் மோசேயைக் குறித்து பேசினான். அவர்கள் மோசேயை நன்கு அறிந்தவர்கள். இறைவன் மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார். அவர் மத்தியஸ்தராக இருந்து, தன்னை பின்பற்றுபவர்களின் இருதயங்களை இறைவனுடைய இரக்கங்கள் மற்றும் வல்லமைகளுக்கு நேராக நடத்துவார். ஆலோசனைச் சங்கத்தில் இருந்த ஒவ்வொருவரும் மோசே குறிப்பிட்ட இந்த பழைய வாக்குத்தத்தம் வரப்போகிற கிறிஸ்துவை குறிக்கிறது என்று அறிந்திருந்தார்கள். இந்த வரப்போகிற தீர்க்கதரிசி ஒரு புதிய உடன்படிக்கையை ஸ்தாபிப்பார். ஒப்பற்ற வழியில் தன்னை பின்பற்றுபவர்களுக்கு அதை உறுதிப்படுத்துவார். இறைவனுடன் ஒரே மக்களாக அவர்களை கொண்டு வருவார். இந்த தீர்க்கதரிசனம் கிறிஸ்தவர்கள் அறிந்த ஒன்றாக இருந்தது. ஸ்தேவானும் இந்த வசனம் இயேசுவைக் குறிப்பிடுகிறது என்று புரிந்து வைத்திருந்தார்.
மோசே மற்றும் நியாயப்பிரமாணத்தின் காரியங்களில் இவ்விதமாக ஸ்தேவான் தனது நிலையை காண்பித்தான். அதே நேரத்தில் மக்களின் தொடர்ச்சியான கீழ்ப்படியாமைக்காக அவன் கண்டித்தும் பேசினான். மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தினான். அவரில் மாத்திரமே நியாயப்பிரமாணம் நிறைவேறும் என்கிற ஒப்பற்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் புதிய உடன்படிக்கையை நிறுவுகிறார். ஸ்தேவான் மிகவும் தெளிவாக இந்த காரியங்களை உறுதியுடன் முன் வைத்தான். இது பரிசுத்த ஆவியினால் தாழ்மையுள்ள பிரசங்கிக்கு அருளப்பட்ட தெளிவான பிரசங்கிக்கும் வரம் ஆகும்.
விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனே, எங்கள் கடின இருதயங்களுக்காக எங்களை மன்னியும். உம்முடைய குமாரனை புறக்கணிக்காமல், அவரை புரிந்துகொள்ள, எங்களுக்கு உதவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும், அவருக்காக காத்திருக்கவும், உதவி செய்யும். உமது ஆவியானவர் எங்களில் புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துவாராக. எங்களில் தாழ்மை, அன்பு மற்றும் விசுவாசத்தை உருவாக்குவாராக.
கேள்வி:
- மோசே மற்றும் நியாயப்பிரமாணத்தை குறித்து ஆலோசனைச் சங்கத்தில் பேசிய காரியங்களில் ஸ்தேவான் குறிப்பிட்ட மூன்று முக்கிய உண்மைகள் என்ன?
