புற தேசத்துக்கு பிரயாணம் போன வீட்டு எஜமான்
அவனவனுக்கு தன்தன் வேலை
ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தணிக்கும் போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங் கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான் (மாற்கு 13:34).
இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு மறுபடியும் வருவார். அவர் எப்போது வருவாரென்று நமக்குத் தெரியாது. ஆகையினால் அவருடைய வருகைக்காக நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும். எச்சரிக்கையாக இருந்து ஜெபம்பண்ணவேண்டும். இதை விவரிப்பதற்காக இயேசுகிறிஸ்து ஒரு உவமையைக் கூறுகிறார். எஜமான் ஒருவன் தன் வீட்டைவிட்டு புறத்தேசத்திற்கு பிரயாணம் போக எத்தனிக்கிறான்.
அப்போது தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவர்கள் செய்யவேண்டிய வேலையையும் நியமிக்கிறான். ஒவ்வொரு ஊழியக்காரருக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்புக்களை கொடுக்கிறான். ஒரு சிலருக்கு வேலையையும், வேறு சிலருக்கு அதிகாரத்தையும் கொடுக்கிறான். அதிகமான அதிகாரம் பெற்றிருக்கிறவர்கள் அதிகமாகவேலை செய்யவேண்டும். புறத்தேசத்திற்கு எஜமான் போகும்போது விழித்திருக்கும்படிக்கு காவல்காக்கிறவனுக்கும் கற்பிக்கிறான். தான் மறுபடியும் திரும்பி வரும்போது காவல்காக்கிறவன் எஜமானுக்கு கதவுகளைத் திறந்து கொடுக்க ஆயத்தமாக இருக்கவேண்டும்.
அந்த எஜமானைப்போலவே இயேசுகிறிஸ்துவும் பரமேறிப்போயிருக்கிறார். தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோருக்கும் அவரவர்களுக்குரிய ஊழியங்களைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருக்குமே ஊழியப்பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மில் சிலருக்கு ஊழியம் செய்யவும், வேறு சிலருக்கு ஆளுகை செய்யவும் அவர் அதிகாரங்கொடுத்திருக்கிறார்.
வீட்டெஜமான்
அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டு பிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார் (மாற்கு 13:35-37).
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவார். ஆனால் அவர் எப்போது வருவாரென்று நமக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆகையினால் நாம் எப்போதும் எச்சரிக்கையாயிருந்து, விழித்திருந்து ஜெபம்பண்ணவேண்டும். வீட்டெஜமான் அறியாதவேளையில் வருவதுபோல நம்முடைய கர்த்தரும் நாம் அறியாத வேளையில் வருவார். வீட்டெஜமான் நினையாத வேளையில் வந்தாலும், அவனுடைய ஊழியக்காரர்கள் தூங்குகிறவர்களாகக் காணப்படக்கூடாது. வீட்டெஜமானின் வரவுக்காக அவர்கள் எப்போதும் விழித்திருந்து ஆயத்தமாக இருக்கவேண்டும்.
அதுபோலவே நம்முடைய கர்த்தரும் எப்போது வருவாரென்று தெரியாது. நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒருவேளை அவர் வருவதற்கு தாமதமாகலாம், அல்லது நமக்கு மரணமுண்டாகலாம். மரணமும் நாம் நினையாத வேளையிலேயே நமக்கு வரும். நாம் எப்போதுமே மரிப்பதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.
நம்முடைய தற்போதைய ஜீவன் இரவு வேளையைப்போன்று இருக்கிறது. அது இருளடைந்த ஜாமம் போலிருக்கிறது. எஜமான் எந்த ஜாமத்தில் வருவார் என்று காவல் காக்கிறவருக்குத் தெரியாது. அதுபோல நமது மரணமும் இளமையில் வருமா, வாலிபத்தில் வருமா அல்லது முதுமையில் வருமா என்பது நமக்குத் தெரியாது. ஆகையினால் நாம் மிகுந்த எச்சரிக்கையாக ஜீவித்து, விழித்திருந்து ஜெபிக்கவேண்டும்.
நாம் இந்த பூமியில் பிறக்கும்போதே மரிக்க ஆரம்பித்துவிடுகிறோம். இந்த மரணம் நமது வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். நாம் எப்போதுமே நமது மரணத்தை எதிர்பார்த்தவர்களாக ஜீவிக்கவேண்டும். கர்த்தர் வரும்போது அவர் நம்மைத் தூங்குகிறவர்களாக கண்டுபிடியாதபடிக்கு நாம் விழித்திருக்கவேண்டும். நமது காவலைக் காத்துக்கொண்டு அவரது வருகைக்காக விழித்திருக்க வேண்டும். அவர் வரும்போது நம்மைத் தூங்குகிறவர்களாக அவர் கண்டுபிடித்தால் நமது நிலமை பரிதாபமாக இருக்கும்.
அவருடைய வருகை நினையாத நாழிகையிலும் இருக்கும். அது திடீரெனவும் வரும். ஆகையினால் இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றும், எச்சரிக்கையாயிருங்கள் என்றும் கூறுகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களில் நான்கு பேருக்கு கூறும் இந்த சத்தியத்தை, அவர்கள் மற்ற சீஷர்களுக்கும் கூறவேண்டும். இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிற எல்லோருக்கும் சீஷர்கள் இந்த சத்தியத்தைச் சொல்லவேண்டும். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு விசுவாசிகள் எல்லோரும் ஆயத்தமாக இருக்கவேண்டும். விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். கறைதிரையில்லாமல் அவரைச் சந்திப்பதற்கு நாம் விழிப்போடு காத்திருக்கவேண்டும்.


