2021 ஏப்ரல் மாத வாக்குதத்தம் ஏசா 45:1-4
ஏசா 45:1. கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
ஏசா 45:2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
ஏசா 45:3. உன்னைப் பெயர்சொல்- அழைக்கிற இஸ்ரவே-ன் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
ஏசா 45:4. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவே-னிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்- அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.
கோரேசு மேதிய தேசத்தைச் சேர்ந்தவன். மேதியாவின் ராஜாவாகிய அஸ்தயாகஸ் என்பரின் வம்சவழியில் வந்தவன். புறஜாதி தேசத்தைச் சேர்ந்த சரித்திர ஆசிரியர்கள், கோரேசின் வம்சவரலாற்றைப்பற்றி ஒன்றுபோல் எழுதாமல், வெவ்வேறு விதமாக எழுதியிருக்கிறார்கள். கோரேசு சிறுபிள்ளையாகயிருந்தபோதே, அவனை யாரும் கவனிக்காமல், மேதிய தேசத்தைவிட்டுத் துரத்திவிட்டார்கள் என்று ஒரு வரலாறு சொல்லுகிறது. கோரேசு சிறுபிள்ளையாக வனாந்தரத்திலே கிடந்தபோது, மேய்ப்பரின் மனைவி ஒருத்தி, அவனை எடுத்து காப்பாற்றினாள் என்றும் ஒரு வரலாறு சொல்லுகிறது.
லீதியாவின் ராஜாவாகிய குரோயேசஸ் என்பவர், கோரேசை தன்னுடைய ராஜ்யத்திற்கு வாரிசாக அறிவித்தார். லீதியாவில் நடைபெற்ற உள்நாட்டு குழப்பங்களை அடக்கி, கோரேசு அந்த தேசத்திற்கு ராஜாவானான். லீதியா தேசம் ஐசுவரியம் மிகுந்த தேசம். லீதியாவுக்கும், அதை சார்ந்திருந்த மற்ற மாகாணங்களுக்கும் கோரேசு ராஜாவாக முடிசூட்டப்பட்டான்.
தரியு என்பவன் கோரேசின் மாமன். இவன் பெர்சிய தேசத்து ராஜா. பத்து வருஷங்களுக்குப் பின்பு, கோரேசு தன்னுடைய மாமனாகிய தரியுவுடன் சேர்ந்துகொண்டு, பாபிலோன் தேசத்தின் மீது யுத்தம்பண்ணினான். இக்காலத்தில் பாபிலோன் தேசம் ஐசுவரியம் மிகுந்த தேசமாகவும், வல்லமை மிகுந்த தேசமாகவும் விளங்கிற்று. பாபிலோன் நகரத்து கோட்டைச்சுவர் அதிக பலமுள்ளது. அந்த சுவற்றின்மேல் ஆறு இரதங்கள் ஒன்றுபோல் ஓடுமளவுக்கு அகலமாக இருந்தது. பாபிலோன் தேசத்தை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்னும் வைராக்கியம் கோரேசிடம் இருந்தது. கோரேசு பாபிலோனுக்கு விரோதமாய்த் துணிச்சலோடு யுத்தம்பண்ணி, பாபிலோனைக் கைப்பற்றினான்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு பல வருஷங்களுக்கு முன்பாகவே, கர்த்தர் கோரேசைப்பற்றி தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். அவன் பாபிலோனைக் கைப்பற்றி, அந்த தேசத்து சிறையிருப்பிலிருக்கிற யூதர்களை விடுவிப்பான் என்று கர்த்தர் முன்னறிவிக்கிறார்.
கர்த்தர் கோரேசுக்காக பெரிய காரியங்களைச் செய்வார். தம்முடைய ஜனத்தை விடுவிப்பதற்காக கர்த்தர் கோரேசை தம்முடைய பலத்தினால் இடைக்கட்டு கட்டுவார். கர்த்தருடைய அநுக்கிரகத்தினால் கோரேசு பாபிலோன் தேசத்தின்மீது யுத்தம்பண்ணி அதைப்பிடிப்பான். அவன் ஐசுவரியம் மிகுந்த ராஜாவாவான். அநேக தேசங்கள் கோரேசுக்கு கப்பம் கட்டி அவனை பணிந்துகொள்ளும். அந்த தேசத்தார் அவனுக்கு தங்கள் பணத்தையும் மனுஷரையும் கொடுத்து, தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள்.
கோரேசு தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவன். கர்த்தர் தம்முடைய ஊழியத்தை செய்வதற்காக கோரேசை தெரிந்துகொண்டார். கோரேசு மேசியாவுக்கு அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறான். கர்த்தர் கோரேசைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசு'' (ஏசா 45:1) என்று சொல்லுகிறார். கர்த்தர் கோரேசின் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, தம்முடைய வார்த்தைகளை அவனுக்குச் சொல்லுகிறார். இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு விரோதமாய் தன்னுடைய அம்பை எய்தபோது, எலிசா ராஜாவின் கையை பிடித்துக்கொண்டதுபோல, கர்த்தர் கோரேசின் வலது கையைப் பிடித்துக் கொள்கிறார்.
""எ-சா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான். அப்பொழுது அவன் இஸ்ரவே-ன் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்-ன்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எ-சா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எ-சா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப்பீர் என்றான்'' (2இராஜா 13:15-17).
கர்த்தர் கோரேசின் வலதுகையைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆகையினால் யாராலும் கோரேசை எதிர்க்க முடியாது. கர்த்தர் கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்துவார். ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்ப்பார். கோரேசுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாமலிருக்கும். கதவுகள் திறக்கப்பட்டிருக்கும். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே, கோரேசுக்கு முன்னே போய், கோணலானவைகளை செவ்வையாக்குவார். ஜனம் பெருத்த தேசங்கள் கோரேசை சேவிக்கும். யுத்தம் கர்த்தருடையது. இந்த யுத்தத்தில் கோரேசுக்கு வெற்றி உண்டாகும்.
பலமிக்க ராஜாக்கள்கூட கோரேசுக்கு முன்பாக கீழே விழுவார்கள். கர்த்தர் அந்த ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்த்துப்போடுவார். பெல்ஷாத்சாரின் காலத்தில் இந்த வாக்கியம் அப்படியே நிறைவேறிற்று. சுவற்றிலே கையினால் எழுதப்பட்ட எழுத்துக்களைப் பார்த்தபோது ராஜாவினுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது.
""அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது'' (தானி 5:6).
கோரேசுக்கு முன்பாக பெரிய பட்டணங்களும் தோற்றுப்போகும். அவை அவனுக்கு முன்பாக வந்து சரணடையும். எந்தப் பட்டணமும் கோரேசுக்கு விரோதமாக யுத்தம்பண்ண வரமாட்டார்கள். அந்நிய தேசத்து பட்டணங்களின் வாசல்கள் கோரேசுக்கு பூட்டப்படாமலிருக்கும். அதன் கதவுகள் கோரேசுக்காக எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். தங்களால் கோரேசோடு யுத்தம்பண்ண முடியாது என்று எல்லா பட்டணத்தாரும் அறிந்து வைத்திருப்பார்கள். கோரேசோடு யுத்தம் பண்ணுவதற்குப் பதிலாக, அவனுக்கு முன்பாக சரணடைய விரும்புவார்கள்.
கோரேசு தூரதேசத்திற்கும் தன்னுடைய படைகளை வழிநடத்திக்கொண்டு போனான். ஆபத்தான வழிகளாகயிருந்தாலும் அங்கும் அஞ்சாமல் போனான். யுத்தம் அவனுக்கு எளிதாயிருந்தது. படைகளை நடத்திச் செல்வதும் கோரேசுக்கு இலகுவாயிருந்தது. கர்த்தர் கோரேசுக்கு முன்னே போகிறார். அவர் கோரேசுக்காக கோணலானவைகளை செவ்வையாக்குகிறார். இதனால் கோரேசு எந்தவிதமான தடையுமில்லாமல், எல்லா பாதைகளிலும் எளிதாகப் போகிறான்.
கோரேசு செல்ல வேண்டிய பாதைகளில் குன்றுகளும், மலைகளும் இருந்தாலும் அவை அவனுக்கு சமபூமியாக்கப்படும். கோரேசை எதிர்ப்பார் ஒருவருமில்லை. கர்த்தரே கோரேசுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். அவர் கோரேசுக்காக யுத்தம்பண்ணுகிறார். கர்த்தர் வெண்கல கதவுகளை உடைக்கிறார். இருப்புத் தாழ்பாள்களை முறிக்கிறார். அந்தகாரத்திலிருக்கிற பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் கர்த்தர் கோரேசுக்குக் கொடுக்கிறார் (ஏசா 45:4).
சத்துருக்கள் தங்கள் கோட்டைகளை வெண்கல கதவுகளைப் போட்டு மூடியிருக்கிறார்கள். கோட்டை கதவுகளுக்கு இருப்புத் தாழ்ப்பாள்களைப் போட்டு பலப்படுத்தியிருக்கிறார்கள். பாபிலோன் நகரத்தில் நூறு வெண்கல கதவுகள் இருந்ததாக சரித்திர ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். கதவுகளின் கீல்களும் முளைகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. பாபிலோன் கோட்டை வலுவாயிருந்தது. கர்த்தரோ கோட்டையின் வெண்கல கதவுகளை உடைத்துப்போடுகிறார். இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்துப்போடுகிறார்.
பாபிலோன் தேசம் ஐசுவரியம் மிகுந்த தேசம். அத்தேசத்தில் பொன்னும் வெள்ளியும் ஏராளமாயுள்ளது. அவர்கள் தங்கள் பொக்கிஷங்களை பூமிக்கடியில் புதைத்து வைத்து பாதுகாக்கிறார்கள். அவையெல்லாம் ஒளிப்பிடத்திலிருந்தாலும், கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமேயில்லை. கர்த்தர் அந்தகாரத்திலிருக்கிற பொக்கிஷங்களை கோரேசுக்குக் கொடுக்கிறார். ஒளிப்பிடத்திலிருக்கிற புதையல்களையும் அவனுக்குக் கொடுக்கிறார்.
கர்த்தரே கோரேசை தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற தெரிந்துகொண்டார். அவனை அபிஷேகம்பண்ணியிருக்கிறார். கர்த்தர் கோரேசை ஆசீர்வதிக்கிறார். கோரேசு கர்த்தருக்கு நன்றியுள்ளவனாகயிருக்கிறான். பாபிலோன் தேசத்திலே சிறையிருப்பிலிருக்கிற கர்த்தருடைய ஜனத்தை கோரேசு விடுதலை பண்ணுகிறான். கோரேசு கர்த்தரை அறியவில்லை. ஆனாலும் கர்த்தர் அவனை பெயர் சொல்லி அழைத்து, அவனுக்கு கோரேசு என்னும் நாமத்தைத் தரித்திருக்கிறார். கர்த்தர் தனக்கு செய்த நன்மைகளை கோரேசும் மறந்துவிடாமல் அங்கீகரிக்கிறான்.
""பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்'' (எஸ்றா 1:2).
கர்த்தர் கோரேசுக்கு அநேக நன்மைகளை செய்கிறார். கர்த்தர் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே தன்னை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார் என்பதை கோரேசு அறியவேண்டும். தம்முடைய தாசனாகிய யாக்கோபினிமித்தமும் தாம் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும் கர்த்தர் கோரேசைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். கோரேசு கர்த்தரை அறியாதிருந்தும், கர்த்தர் அவனுக்கு நாமம் தரித்திருக்கிறார்.
கோரேசு தேவனுடைய இஸ்ரவேல் புத்திரரை பாபிலோன் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கவேண்டும். கோரேசு கர்த்தரை அறிந்திருக்கவில்லை. ஆனாலும் கர்த்தர் அவனோடு பேசுகிறார். கர்த்தர் கோரேசை தம்முடைய ஜனத்திற்கு மேய்ப்பனாக நியமிக்கிறார். அவனுக்கு கோரேசு என்னும் பெயரை தருகிறார். அவனை அபிஷேகம்பண்ணுகிறார். இவையெல்லாவற்றையும் கர்த்தர் கோரேசுக்கு விசேஷமாய்ச் செய்கிறார்.
கோரேசை மேன்மைப்படுத்தவேண்டும் என்பதோ, அவனை உயர்த்தவேண்டும் என்பதோ கர்த்தருடைய நோக்கமல்ல. கோரேசு நற்குணமுள்ளவன் என்பதற்காகவோ, அவன் பராக்கிரமசாலி என்பதற்காகவோ, கர்த்தர் அவனுக்கு பெரிய காரியங்களை செய்யவில்லை.
பாபிலோன் தேசத்து சரித்திர ஆசிரியர்களும், மேதிய - பெர்சிய சரித்திர ஆசிரியர்களும் கோரேசைப்பற்றி எழுதும்போது, அவன் ஈவு இரக்கமில்லாதவன் என்றும், இரத்தவெறி பிடித்த துன்மார்க்கன் என்றும் அவனைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால் கர்த்தரோ கோரேசின் வலதுகையைப் பிடித்துக்கொண்டு அவனோடு பேசுகிறார். அவனை அபிஷேகம்பண்ணுகிறார். அவனுக்காக யுத்தம்பண்ணுகிறார்.
கர்த்தர் கோரேசுக்கு அநேக நன்மைகளை செய்கிறார். இவையெல்லாவற்றையும் கர்த்தர் கோரேசின் நிமித்தமாய் செய்யாமல், தம்முடைய தாசனாகிய யாக்கோபினிமித்தமும், தாம் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினினிமித்தமும் செய்கிறார். கோரேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிறான். எல்லா தேசங்கள்மீதும் யுத்தம்பண்ணி, எல்லா தேசத்தாரையும், ஜாதியாரையும் ஜெயிக்கிறான். திரளான ஐசுவரியம் அவனிடத்திலிருக்கிறது. அதிக வல்லமையுள்ளவனாகயிருக்கிறான். கோரேசு தன்னுடைய ஐசுவரியங்களையும், வல்லமைகளையும் கர்த்தருடைய ஜனத்தின் பிரயோஜனத்திற்காகப் பயன்படுத்தவேண்டும். கர்த்தர் கோரேசை உயர்த்தும்போது, அவன் சிறையிருப்பிலிருக்கிறவர்களை விடுதலை பண்ணவேண்டும்.
அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்னும் வாக்கியம் மேசியாவிற்குப் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயத்தில் ராஜாக்களுக்கும், ஆசாரியர்களுக்கும், இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கும், அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்னும் வாக்கியம் வேதாகமத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கோரேசைப் பொறுத்த அளவில் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறவர் என்னும் வார்த்தை அவனுடைய பரிசுத்தத்தையோ சுபாவத்தையோ குறிப்பிடவில்லை. ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காகக் கோரேசு நியமிக்கப்பட்டிருப்பதையே இந்த வார்த்தை குறிப்பிடுகிறது. தேவனுடைய ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்வதினால் கோரேசு நீதிமான் என்று அழைக்கப்பட்டிருக்கிறான்.
கோரேசைப் பற்றிய செய்திகள்
1. கர்த்தர் அவனை எழுப்புவார். (ஏசா 41:2; ஏசா 45:13).
2. கர்த்தர் அவனை அழைப்பார். (ஏசா 41:2).
3. கர்த்தர் அவனை ராஜாக்கள்மீது ஆளுகை செய்யுமாறு செய்வார்.
4. கர்த்தர் அவனுடைய கைகளில் தேசங்களைக் கொடுத்து அவற்றை அழிக்குமாறு செய்வார்.
5. அவனுடைய வலதுகையைப் பிடித்துக் கொள்வார் (ஏசா 45:1).
6. அவன் தேசங்களைக் கீழ்ப்படுத்துவான். (ஏசா 41:2; ஏசா 45:1).
7. ராஜாக்களின் இடைக்கட்டுக்களை அவிழ்ப்பான். (ஏசா 45:1).
8. வாசல்களைத் திறந்து வைப்பான்.
9. கர்த்தர் அவனுக்கு முன்னே போவார். (ஏசா 45:2).
10. கர்த்தர் கோணலானவைகளைச் செவ்வையாக்குவார்.
11. கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைப்பார். (ஏசா 45:4)
12. கர்த்தர் இருப்புத் தாழ்ப்பாள்களை முறிப்பார்.
13. பாபிலோனின் ஐசுவரியங்களைக் கர்த்தர் அவனுக்குக் கொடுப்பார். (ஏசா 45:3).
14. கர்த்தர் அவன் வழிகளெல்லாம் செவ்வைப்படுத்துவார். (ஏசா 45:13).
கோரேசு ஜெயித்த தேசங்கள்
1. சிலிசியா
2. சீரியா
3. பப்லகோனியா
4. கப்பதோக்கியா
5. பெர்கியா
6. லீதியா
7. காரியா
8. பொனிஷியா
9. அரபியா
10. பாபிலோனியா
11. அசீரியா
12. பக்திரியா
13. சாகாயா
14. மரியாந்தினியா
இடைக்கட்டுக்கள் கட்டப்பட்டிருப்பது என்பதற்கு ஒரு வேலையைச் செய்வதற்கு ஆயத்தமாயிருப்பது, யுத்தம் பண்ணுவதற்கு ஆயத்தமாயிருப்பது என்று பொருள். இடைக்கட்டுக்களை அவிழ்ப்பது என்பதற்கு ஓய்வெடுப்பது, அல்லது சோம்பலாயிருப்பது என்று பொருள். கோரேசிற்கு முன்பாகக் கர்த்தர் ராஜாக்களைப் பலவீனப்படுத்துவார். இதனால் கோரேசு ராஜாக்களை எளிதாக ஜெயித்துவிடுவான்.
ஐபிராத்து நதியிலிருந்து எதிரிகளின் தேசத்திற்குப் போக வேண்டும். ஆனால் அந்த தேசங்களுக்குள் போக முடியாதவாறு ஐபிராத்து நதிக்கரைகளில் இரும்பு கதவுகளும், வெண்கலக் கதவுகளும் போடப்பட்டிருக்கும். இந்தக் கதவுகள் திறக்கப்பட்டால் மேதிய-பெர்சிய தேசத்தார் எந்தவிதத் தடையுமில்லாமல் தேசங்களுக்குள் சென்றுவிடுவார்கள். இந்தச் சம்பவம் நடைபெற்று 200 வருஷங்களுக்கு முன்பாகக் கர்த்தர் இதை முன்னறிவித்திருக்கிறார்.
யுத்தங்களில் ஜெயத்தையும், தோல்வியையும், கர்த்தரே கட்டளையிடுகிறவர். பூமியில் நடைபெறும் யுத்தங்களின் முடிவு பரலோகத்தில் தீர்மானம் பண்ணப்படுகிறது. (தானி 4:13; தானி 10:13). கோரேசின் வெற்றிக்குத் தடையாக இருக்கும் எல்லாத் தடைகளையும் அகற்றிப் போடுவதாகக் கர்த்தர் வாக்குப் பண்ணுகிறார்.
யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் அந்நிய தேசத்திலிருந்து கொள்ளையிட்டுக் கொண்டு வரும் பொக்கிஷங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருப்பது வழக்கம். அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் மட்டுமே அதைப் பயன்படுத்துவார்கள். பாலஸ்தீன தேசத்தில் இதுபோன்று ஏராளமான பொக்கிஷங்கள் அந்தகாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் எகிப்து, அசீரியா, யூதேயா போன்ற பல தேசங்களைக் கொள்ளையிட்டு, அந்தப் பொக்கிஷங்களை எல்லாம் தங்கள் தேசத்தில் மறைத்து வைத்திருந்தார்கள். (எரே 50:13).
கோரேசு பிறப்பதற்கு முன்பாகவே கர்த்தர் அவனுக்குப் பெயரிடுகிறார். (ஏசா 45:3,4).
ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றும், ஒருவன் இரட்சிக்கப்படக்கூடாது என்றும் கர்த்தர் யாரையும் தெரிந்தெடுப்பதில்லை. கர்த்தருடைய தெரிந்தெடுப்பின் நிமித்தமாக மாத்திரம் யாரும் இரட்சிக்கப்படுவதில்லை. கர்த்தருடைய திட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இரட்சிக்கப்பட வேண்டுமென்னும் அழைப்பு எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. (லூக்கா 18:7). இந்த அழைப்பை ஏற்றுக் கொள்கிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். அழைப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இரட்சிக்கப்படுவதில்லை. தேவனுடைய திட்டத்தில் பட்சபாதம் எதுவுமில்லை
ஒருவர் இரட்சிக்கப்படும்போது அவர் மறுபடியும் பிறக்கிறார். கிறிஸ்துவில் புதிய சிருஷ்டியாகிறார். இரட்சிக்கப்பட்ட பின்பு அவருடைய ஜீவியத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அவர் நீதியாகவும், நியாயமாகவும் தன்னுடைய ஜீவியத்தில் கிரியை நடப்பிக்கிறார்
ஒருவர் இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் செய்தால் அவர் மறுபடியும் மனந்திரும்பி கர்த்தருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கும் பாவிகளுக்குரிய தண்டனையே கிடைக்கும். (1யோவான் 1:9; 1யோவான் 2:1-2). பாவத்தில் ஜீவிக்கிறவர்களும், பாவத்தில் மரிக்கிறவர்களும் இரட்சிக்கப்படுவதில்லை
கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தைத் தெரிந்து கொண்டார். புறஜாதியார் மத்தியில் இந்தத் தேசம் கர்த்தருடைய தேசமாகக் கிரியை நடப்பிக்க வேண்டும். அதே சமயத்தில் தேவனுடைய திட்டத்தின்படி ஜீவிக்கிற யூதரும், புறஜாதியாரும் இஸ்ரவேலராகவே கருதப் படுகிறார்கள். இரட்சிக்கப்படுவதற்குக் கர்த்தர் நியமித்திருக்கும் நிபந்தனைகளைக் கைக்கொள்கிறவர்களே ""தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்''
கர்த்தர் தம்மிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களையும், (ரோமர் 3:26) தம்மை விசுவாசிக்காதவர்களையும் நீதியாக நியாயந்தீர்க்கிறார்
கர்த்தர் கோரேசை அழைத்த போது அவன் தேவனைப் பற்றி அறியாதவனாக இருந்தான். (ஏசா 44:28; எஸ்றா 1:1-6).