நன்மைக்கு ஞானிகள்

 




நன்மைக்கு ஞானிகள் (ரோம 16:19)

உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு         ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன் (ரோம 16:19). 


ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளின் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. எல்லா சபையிலுள்ளவர்களும் இவர்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களைக் கவனிக்கிறார்கள்.  இவர்களுடைய கீழ்ப்படிதலினால் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். 


ரோமாபுரியிலுள்ள விசுவாசிகள் ஆவிக்குரிய காரியங்களில் கீழ்ப்படிதலுள்ளவர்களாகயிருக்கிறார்கள்.  இதனால் சத்துரு இவர்களை அழித்துப்போட பிரயாசப்படுவான். சாதாரண விசுவாசிகளை தாக்குவதைவிட, கீழ்ப்படிதலுள்ள விசுவாசிகளை  தாக்கவேண்டுமென்று சாத்தான் முயற்சிசெய்வான். அவர்கள் மத்தியில் கள்ளப்போதகர்களையும் கள்ளத்தீர்க்கதரிசிகளையும்     அனுப்புவான். இவர்கள் கீழ்ப்படிதலுள்ளவர்களாயிருக்கிறபடியினால், தன்னுடைய கள்ளஉபதேசத்திற்கும் அவர்கள் கீழ்ப்படிவார்கள் என்று நம்பி அவர்களிடத்தில் வருவான். 


ரோமாபுரியிலுள்ள விசுவாசிகள் கீழ்ப்படிதலுள்ளவர்களாயிருந்தாலும், பிரிவினையையும் இடறலையும் உண்டுபண்ணுகிற கள்ளப்போதகர்கள் மூலமாய்,  அவர்களுக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளது. ஆகையினால் விசுவாசிகள் அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும். அவர்களைவிட்டு விலகவேண்டும். 


""உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது'' என்னும் வாக்கியம் அவர்களைப் பாராட்கிற வாக்கியம் போலிருக்கிறது. ஆனாலும் பவுல் அவர்களை எச்சரிக்கிற எச்சரிக்கையின் வார்த்தையாகவே இதைச் சொல்லுகிறார். இவர்கள் கீழ்ப்படிதலுள்ளவர்களாயிருந்தாலும் பாதுகாப்பில் குறைவுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களுடைய இருதயங்கள் கபடில்லாமலிருக்கிறது.  வஞ்சிக்கிறவர்கள் இவர்களை எளிதாய் வஞ்சித்துவிடுவார்கள். தங்கள் நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும் இவர்கள் வஞ்சிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆகையினால் இவர்கள் மிகுந்த எச்சரிப்போடிருக்கவேண்டும். 


நம்முடைய இருதயம் கபடில்லாமல் இருக்கவேண்டும். நம்மை ஆளுகை செய்கிறவர்களும் கபடில்லாதவர்களாக இருந்தால்தான் நமக்கு நல்லது. இல்லையென்றால் நம்முடைய கபடில்லாத குணம்  நமக்கே கண்ணியாகிவிடும். நாம் எவ்வாறு எச்சரிப்போடிருக்கவேண்டும் என்று பவுல் இரண்டு ஆலோசனைகளைச் சொல்லுகிறார். 1. நாம் நன்மைக்கு ஞானிகளாயிருக்கவேண்டும். 2. தீமைக்கு பேதைகளாயிருக்கவேண்டும். 


நன்மையான காரியங்களை நாம் செய்யவேண்டும். நல்ல சத்தியங்களை நாம் பற்றிக்கொள்ளவேண்டுமென்றால் நமக்கு ஞானம் வேண்டும். நல்ல கிரியைகளைச் செய்வதற்கு ஞானம் தேவை. ஞானமில்லாதவர்களால் நற்கிரியைகளைச் செய்யமுடியாது. அவர்கள் நல்ல சத்தியங்களைப் பற்றிக்கொள்ளமாட்டார்கள். பிறருடைய நயவசனிப்பில் சிக்கி வஞ்சிக்கப்படுவார்கள்.


நாம் நன்மைக்கு ஞானிகளாயிருக்கும்போது, தீமைக்கு  பேதைகளாகவும் இருக்கவேண்டும். சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாக இருக்கவேண்டும். பழைய பாம்பாகிய பிசாசின்  வஞ்சிக்கிற குணம் நம்மிடத்தில் இருக்கக்கூடாது. அதே வேளையில் நாம் சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.  ஞானமுள்ள மனுஷன் சத்தியத்திற்கு விரோதமான காரியங்களை அறிந்து வைத்திருப்பான். எதுவும் தன்னை பாதித்துவிடாதவாறு மிகுந்த எச்சரிப்போடிருப்பான். 


ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளை மற்ற தேசத்திலுள்ளவர்களெல்லாம் கவனித்துப் பார்க்கிறார்கள். அவர்கள் மலைமீதுள்ள பட்டணத்தைப்போலிருக்கிறார்கள். அவர்களால் மறைந்திருக்க முடியாது. அவர்களை வஞ்சிப்பதற்கு அநேகர் முன்வருவார்கள்.  அவர்களுக்குள் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டுபண்ணுவதற்கு அநேகர் முயற்சி செய்வார்கள். ஆகையால் இவர்கள் மிகுந்த எச்சரிப்போடிருக்கவேண்டும். நன்மைக்கு ஞானிகளாகவும், தீமைக்கு பேதைகளாகவும் இருக்கவேண்டும். 


மெய்யான தலைவர்களையும், பொய்யான தலைவர்களையும் அவர்களுடைய விசுவாசம், பக்தி, சுயநலமின்மை, உண்மை ஆகியவற்றின் மூலமாகக் கண்டுபிடிக்கலாம். விசுவாசிகள் நன்மை தீமை அறியத்தக்கவர்களாக இருக்க வேண்டும். தீமையைத் தெரிந்தெடுக்காமல், நன்மையைத் தெரிந்தெடுக்க வேண்டும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.