பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள்

 




பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள் (ரோம 16:17)

அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலக வேண்டுமென்று, உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்  (ரோம 16:17).


ஒரு சில சுபாவங்களும், பழக்க வழக்கங்களும் கிறிஸ்தவ அன்புக்கு விரோதமாகயிருக்கும். அவை அன்பை அதிகரிக்கச் செய்வதற்குப் பதிலாக, அன்பை அழித்துப்போடும். அப்படிப்பட்ட சுபாவங்களைக் குறித்து பவுல் எச்சரிக்கிறார். ""சகோதரரே, உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்'' என்று சொல்லுகிறார். பவுல் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை. தன்னுடைய விருப்பத்தையும் சித்தத்தையும் அவர்கள்மீது  திணிக்கவில்லை. அவர்கள்மீதுள்ள அன்பினிமித்தமாக அவர்களுக்குப் புத்தி சொல்லுகிறார். பவுல் அவர்களுக்கு இரண்டு புத்திமதிகளைச் சொல்லுகிறார் அவையாவன: 1. பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும். 2. அவர்களைவிட்டு விலகவேண்டும்.


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஊழியக்காரர்கள் மூலமாக உபதேசங்களைக் கற்றுக்கொள்கிறோம். நாம் கற்றுக்கொண்ட  உபதேசத்திற்கு விரோதமாய் ஒரு சிலர் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறார்கள். அவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையோடிருக்கவேண்டும் அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். பிரிவினைகளும் குழப்பங்களும் வருமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார். அவற்றைக் குறித்து  நம்மை எச்சரித்துமிருக்கிறார். 


ஒரு சிலர் கள்ளஉபதேசங்களைச்  சொல்லி சபையைப் பாரப்படுத்துவார்கள். பிரிவினைகளுக்கும் இடறல்களுக்கும் ஏதுவான உபதேசங்களைச் சொல்லுவார்கள். இதனால்  விசுவாசிகள் இடறலடைவார்கள். சபையில் பிரிவினை உண்டாகும். இவற்றை உண்டாக்குகிறவர்களுடைய உபதேசங்களும்•நூதனமாயிருக்கும். நாம் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பேசுவார்கள். 


சபையில் சத்தியமில்லையென்றால் அங்கு சமாதானமும் இருக்காது. ஒற்றுமையும் இருக்காது. அமைதியும் இருக்காது. இவையெல்லாம் இல்லையென்றால் சபையில் பிரிவினை வந்துவிடும். இப்படிப்பட்ட பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து  நாம் மிகவும் கவனமாயிருக்கவேண்டும். அவர்கள் மூலமாய் வரக்கூடிய ஆபத்தை நாம் உணர்ந்தவர்களாக, விழிப்போடிருக்கவேண்டும். அவர்கள் மாய்மாலக்காரர்கள். நல்ல உபதேசங்களை சொல்லுவதுபோல நடித்து துர்உபதேசங்களை சபைக்கு கொடுத்துவிடுவார்கள். இவர்களுடைய உபதேசத்தினால் சபைக்கு ஆசீர்வாதம் உண்டாகாது. பிரிவினையும் கேடும் உண்டாகும்.  


நாம் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைவிட்டு விலகவேண்டும் என்று பவுல் புத்தி சொல்லுகிறார். இவர்கள் யூதமார்க்கத்தையும்,   முன்னோர்களின் பாரம்பரியத்தையும் உபதேசிக்கிற கள்ளப்போதர்களென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். 


திருச்சபையில் சிலர் பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குவார்கள். அவர்களைக் குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடு இருக்க வேண்டும். 

கள்ளப்போதகர்களின் அடையாளங்கள்

    1. விசுவாசிகள் மத்தியில் பிரிவினைகளை உண்டாக்குவார்கள்.

    2. சத்தியத்திற்கு எதிராக உபதேசம் பண்ணுவார்கள். (ரோமர் 16:18).

    3. அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்யவில்லை. (ரோமர் 16:17-18)

    4. தங்கள் வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள். (ரோமர் 16:18;        பிலி 3:19).

    5. விசுவாசிகளை வஞ்சிப்பதற்கு நயவசனிப்பையும், இச்சகப் பேச்சையும் பயன்படுத்துகிறார்கள். (ரோமர் 16:18).

    6. அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர். (பிலி 3:18).

    7. அவர்கள் சுவிசேஷத்திற்கு விலகி வேறு விதமாக நடக்கிறார்கள். (பிலி 3:18).

    8. அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே. (பிலி 3:19).

    9. அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். (பிலி 3:19).

    10. வேதப்புரட்டுக்களைத் தந்திரமாக நுழையப் பண்ணுகிறார்கள். (2பேதுரு 2:1;  மத் 7:15)

வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள் 

 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப் பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள் (ரோம 16:18).


பிரிவினையையும் இடறலையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து விசுவாசிகள் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். அவர்களுடைய சுபாவங்களை பவுல் இங்கு குறிப்பிடுகிறார். அவையாவன : 1. அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை.   2. அவர்கள் கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறார்கள். 


விசுவாசிகள் மத்தியில் பிரிவினையையும், இடறலையும் உண்டுபண்ணுகிறவர்கள் தங்களை  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள்  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை. கர்த்தருக்கு ஊழியம் செய்வதுபோல நடிக்கிறார்கள். அவர்கள் உண்மையில் தங்கள் வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள்.  தங்களுடைய மாம்சத்தின் இச்சைகளுக்கு அவர்கள் ஊழியம் செய்கிறார்கள். தங்களுக்குப் பிரியமுண்டாகவேண்டும் என்பதற்காக ஊழியம் செய்யலாம். இவர்களுக்கு கர்த்தருடைய சந்தோஷம் முக்கியமல்ல. தங்களுடைய சுயசந்தோஷமே முக்கியம்.  இவர்களுடைய தேவன் வயிறு (பிலி 3:19). அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சை. அவர்கள் பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறார்கள். 


தங்கள் வயிற்றுக்கு ஊழியம் செய்கிறவர்கள் நயவசனிப்பையும், இச்சகப்பேச்சையும் பயன்படுத்துகிறார்கள். கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சித்துவிடுகிறார்கள். அவர்களுடைய சாதுரியமான பேச்சினால் மக்களை ஏமாற்றுகிறார்கள். தாங்கள் பரிசுத்தவான்களென்றும், தேவபக்தியுள்ளவர்களென்றும் ஜனங்களை நம்பவைக்கிறார்கள். நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும் ஜனங்களை வஞ்சிக்கிறார்கள். 


மற்றவர்கள்மீது தங்களுக்கு அன்பும் அக்கரையும் இருப்பதுபோல நடிக்கிறார்கள்.  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதுபோல மாய்மாலம் பண்ணுகிறார்கள்.  ஆனால் இவர்கள் உண்மையில் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள்.  கபடில்லாத இருதயமுடையவர்களுக்கு இவர்கள் ஆபத்தானவர்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது.  பிறரை வஞ்சிக்கக்கூடாது. நம்மைப் பிறர் வஞ்சிக்கவும் இடம் கொடுக்கக் கூடாது. தேவன் தாமே நம்முடைய இருதயங்களை தம்முடைய ஞானத்தினால் நிரப்புமாறு ஜெபிக்கவேண்டும். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.