சங்கீதம் 32 விளக்கம்
(மஸ்கீல் என்னும் தாவீதின் போதக சங்கீதம்.)
இரண்டாவது போதக சங்கீதம்
பொருளடக்கம்
1. பாக்கியவானிடம் காணப்படும் நான்கு காரியங்கள் - (32:1-2)
2. தண்டித்துத் திருத்தப்படுவதற்கு நான்கு அடையாளங்கள் - (32:3-4)
3. தண்டித்து திருத்தியதால் ஏற்பட்ட நான்கு விளைவுகள் - (32:5)
4. தண்டித்துத் திருத்தப்பட்ட பின்பு நான்கு ஆசீர்வாதங்கள் - (32:6-7)
5. போதிப்பதினால் உண்டாகும் நான்கு ஆசீர்வாதங்கள். அறியாமைக்கு எடுத்துக்காட்டு - (32:8-10)
6. தண்டித்துத் திருத்தப்பட்டோருக்கு இறுதி உபதேசங்கள் - (32:11)
முப்பத்திரண்டாவது சங்கீதத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி வெளிப்படையாகவோ அல்லது நேரடியாகவோ எதுவும் சொல்லப்படவில்லை. ஆனாலும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் இந்த சங்கீதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனுஷருடைய பாவமன்னிப்பில் சுவிசேஷத்தின் கிருபை முக்கிய இடம் பெற்றிருக்கிறது (சங் 32:1,2). தேவன் தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கிறார் (சங் 32:7). வழிநடத்துகிறார் (சங் 32:8).
பாவிகளாகிய நாம் நம்முடைய பாவங்களை கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்யவேண்டும் (சங் 32:3-5). கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணவேண்டும் (சங் 32:6). நம்மை தீங்குகளுக்கு விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும் (சங் 32:9,10). நாம் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூரவேண்டும் (சங் 32:11). ஆசரிப்புக்கூடாரத்தில், பாவநிவாரண நாளின்போது, தாவீது இந்த சங்கீதத்தைப் பாடியிருக்கவேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டவன் பாக்கியவான்
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான் (சங் 32:1,2).
முப்பத்திரண்டாவது சங்கீதத்திற்கு மஸ்கீல் என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்த சங்கீதத்தைப் பாட வேண்டிய ராகம். மஸ்கீல் என்பது ஒரு இசையின் பெயர். முப்பத்திரண்டாவது சங்கீதத்தை மஸ்கீல் என்னும் ராகத்தில் பாடவேண்டும் என்று ஒரு சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலரோ இந்த சங்கீதத்திற்கு ""தாவீதின் போதக சங்கீதம்'' என்று தலைப்பு பெயர் கொடுக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய உபதேசம் தேவைப்படுகிறது. மெய்யான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு ஆவிக்குரிய போதகம் தேவை. நம்முடைய பேச்சும், கிரியைகளும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவேண்டும். நம்முடைய சந்தோஷம் கர்த்தர் அங்கீகரிக்கிற சந்தோஷமாயிருக்கவேண்டும்.
கர்த்தருடைய கிருபையினால்தான் நமக்கு மெய்யான சந்தோஷம் கிடைக்கிறது. ஆவிக்குரிய சந்தோஷமே மெய்யான சந்தோஷம். இதுவே நிலைத்து நிற்கும். உலகப்பிரகாரமான ஆஸ்திகளினாலோ, சொத்துக்களினாலோ, ஐசுவரியங்களினாலோ வரக்கூடிய சந்தோஷம் நிலைத்திருப்பதில்லை.நமக்கு ஆவிக்குரிய சந்தோஷம் வேண்டுமென்றால், நாம் ஆவிக்குரிய உபதேசத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
தாவீது இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் ""எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ அவன் பாக்கியவான்'' என்று சொல்லுகிறார். நம்முடைய பாவம் மன்னிக்கப்படுவதே நம்முடைய சந்தோஷத்திற்கு ஆதாரம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற பெரிய சிலாக்கியம். பாவங்கள் மன்னிக்கப்படுவதிலிருந்துதான் மற்ற ஆசீர்வாதங்களெல்லாம் கடந்து வருகிறது. எல்லா ஆசீர்வாதங்களுக்கும், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதே அடிப்படையானது.
நியாயப்பிரமாணத்தை மீறுவது பாவம். நாம் மனந்திருந்தி, நம்முடைய பாவங்களை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்யும்போது, கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். பாவம் செய்கிறவர்களுக்குத் தண்டனை உண்டு. பாவத்தின் சம்பளம் மரணம். கர்த்தரோ நம்முடைய பாவத்தினிமித்தமாய், நமக்குத் தண்டனை கொடுக்காமல், நம்முடைய பாவங்களை தம்முடைய கிருபையினால் மன்னித்துவிடுகிறார். நமக்கு வரவேண்டிய தண்டனைகளை நமக்கு வராதவாறு நீக்கிப்போடுகிறார்.
பாவம் ஒரு பாரமான சுமை. கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது, நம்மீது பாரமாக சுமத்தப்பட்டிருக்கும் பாவத்தின் சுமையை கர்த்தர் நம்மை விட்டு நீக்கிப்போடுகிறார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது, நம்முடைய பாரம் நீங்கி, நம்முடைய சுமை இலகுவாயிருக்கும். பாரமான பாவசுமை நம்மை விட்டு நீங்கிப்போகும்.
தாவீது பாக்கியவானைப்பற்றிச் சொல்லும்போது, ""எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்'' என்று சொல்லுகிறார். பாவத்தை மூடுவது என்னும் வார்த்தைக்கு ""நிர்வாணத்தை மூடுவது'' என்று பொருள். நாம் நிர்வாணியாயிருக்கும்போது நமக்கு வெட்கமும் அவனமானமும் உண்டாகும். நம்முடைய நிர்வாணம் மூடப்படும்போது, அந்த வெட்கமும் அவமானமும் நம்மைவிட்டு நீங்கிப்போகும்.
நம்முடைய நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு, நாம் உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களை கர்த்தரிடத்தில் வாங்கிக்கொள்ளவேண்டும் (வெளி 3:18). நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்போது, அந்தப் பாவம் கிறிஸ்துவினுடைய நீதியின் வஸ்திரத்தினால் மூடப்படுகிறது. இனிமேல் நம்முடைய பாவம் யாருக்கும் பிரத்தியட்சமாய்த் தெரியாது. கிறிஸ்துவினுடைய நீதியின் வஸ்திரம் மாத்திரமே பிரத்தியட்சமாய்த் தெரியும்.
கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது, அவர் நம்முடைய அக்கிரமத்தை எண்ணாதிருக்கிறார். நம்முடைய மீறுதல்களுக்கும், பாவங்களுக்கும் தக்கதாய் கர்த்தர் நமக்கு தண்டனை கொடுக்காமல், அந்தத் தண்டனையை நீக்கிப்போடுகிறார். நம்முடைய அக்கிரமத்தை கர்த்தர் எண்ணாதிருக்கிறார். இதனால் கிறிஸ்துவின் நீதி நமக்குள் கடந்து வருகிறது. நாம் இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறோம்.
கர்த்தர் நம்முடைய அக்கிரமத்திற்குத் தக்கதாய் நமக்கு தண்டனை கொடுக்காமல், நம்மைக் கிருபையாய் மன்னிக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்முடைய மீறுதல்களையும், பாவங்களையும், அக்கிரமங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டார். அவர் நமக்காகப் பாவமானார். தாவீது இந்த சத்தியத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""எவனுடைய அக்கிரமத்தை கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான்'' என்று சொல்லுகிறார்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் பரிசுத்தமாய் ஜீவிக்கவேண்டும். மறுபடியும் பாவம் செய்ய திரும்பிப் போய்விடக்கூடாது. நம்முடைய ஆவியில் கபடம் இருக்கக்கூடாது. இந்த உலகத்தில் கபடம் இல்லாமல் இருக்காது. எல்லோரும் பாவம் செய்து ஏகமாய்க்கெட்டுப்போயிருக்கிறோம். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டபோது நம்முடைய ஆவியில் கபடமில்லாமல் ஜீவிக்க வேண்டுமென்று தீர்மானம்பண்ணவேண்டும். ""எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்'' என்று தாவீது சொல்லுகிறார்.
நாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக, நம்முடைய பாவங்களைக் குறித்து மனம்வருந்தி, மனந்திருந்தி, நம்முடைய பாவங்களையெல்லாம் அறிக்கை செய்கிறோம். இதன் பின்பு இயேசுகிறிஸ்துவின் சுபாவம் நமக்குள் காணப்படவேண்டும். கர்த்தர் நம்மை தம்முடைய சாயலாக சிருஷ்டித்திருக்கிறார். நாம் பாவம் செய்தபோது நம்முடைய தேவசாயல் மங்கிப்போயிற்று. நம்முடைய பாவங்களும் மீறுதல்களும் மன்னிக்கப்பட்ட பின்போ, நம்முடைய தேவசாயலை கர்த்தர் புதுப்பிக்கிறார். புதுப்பிக்கப்பட்ட நம்முடைய ஆவியில் கபடம் இருக்கக்கூடாது.
பாக்கியவானின் ஆசீர்வாதங்கள்
1. மீறுதல் மன்னிக்கப்படும்
2. பாவம் மூடப்படும்
3. அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருப்பார் (சங் 32:2)
4. அவன் ஆவி கபடமில்லாதிருக்கும் (சங் 32:2; சங் 15:1-5; சங் 24:3-5)
நமது பாவங்களை நாம் கர்த்தரிடத்தில் அறிக்கையிடும்போது அது மன்னிக்கப்படும் என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறார். (2நாளா 7:14; சங் 86:5; எரே 31:34; மத் 12:31-32; லூக்கா 6:37; 1யோவான் 1:9)
வேதாகமத்தில் பாவ அறிக்கைக்கு எடுத்துக்காட்டுக்கள்
1. இஸ்ரவேல் ஜனங்களின் பாவத்தை மன்னியும் (1இராஜா 8:30,34,36,39,50)
2. நான் பாவம் செய்தேன் (யோபு 7:20)
3. நான் நீசன் (யோபு 40:4)
4. நான் என்னை அருவருத்து, தூளிலும், சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் (யோபு 42:6)
5. என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும் (சங் 25:18)
6. என்மேல் இரக்கமாயிரும், உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும். (சங் 41:4)
7. எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே (லூக்கா 11:4).
8. தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் (லூக்கா 18:13).
ஒருவனுடைய அக்கிரமத்தை எண்ணாதிருத்தல் என்பது ஒருவனை நீதிமானாக எண்ணுதல் என்று பொருள்படும். இயேசு கிறிஸ்துவில் நாம் நீதிமான்களாக எண்ணப்படுகிறோம்.
மீட்பைப் பற்றிய உபதேசம்
1. நமதுபாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து விட்டுவிடும் போது, கர்த்தர் நம்மை நீதிமான்களாக எண்ணுகிறார். (ரோமர் 5:13; ரோமர் 6:23)
2. இரட்சிக்கப்பட்டவன் பாவம் செய்வதை நிறுத்த வேண்டும். திரும்பத்திரும்ப அதே பாவத்தைச் செய்தால், அவன் பாவமன்னிப்பை மறுபடியும் பெறவேண்டும். இல்லையேல், பாவத்தின் சம்பளம் அவனுக்கும் மரணம்தான். (எசே 18:4,20-26; ரோமர் 6:23)
3. நமது பாவத்தை நாம் அறிக்கை செய்தால்தான், கிறிஸ்து நமது பாவங்களை மன்னிப்பார். அறிக்கை பண்ணாத பாவங்கள் மன்னிக்கப்படாது. கிறிஸ்து நமது பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். மனந்திரும்பாதவனுக்கு இரட்சிப்பு இல்லை. (மாற்கு 16:15-16)
4. கர்த்தர் எல்லா பாவத்தையும் தண்டிப்பார். பாவமான வார்த்தைகூட கர்த்தருக்கு அருவருப்பானது. (மத் 12:37-39).
5. தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தின் பிரகாரம், நாம் தேவனிடம் பாவஅறிக்கை செய்ய வேண்டும். (லூக்கா 13:3,5)
தேவன் பாவியை நீதிமானாக்குகிறார். தேவனுடைய இரட்சிப்பு எல்லாருக்கும் உரியது. ஆனாலும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிகிறவர்கள் மட்டுமே இரட்சிக்கப் படுவார்கள். பாவ மன்னிப்பு பெறவில்லையென்றால் அவனுடைய பாவத்தின் சம்பளம் மரணம்.
எலும்புகள் உலர்ந்து போயிற்று
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுத-னாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.) (சங் 32:3,4)
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய பாவங்களைக் குறித்து நம்மிடத்தில் உணர்த்தும்போது, நாம் அவற்றை கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்து, அவற்றை விட்டு விலகி வந்துவிடவேண்டும். பாவத்தை அடக்கி வைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ தேவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்வான்.
தாவீது சில காலம் தன்னுடைய பாவத்தை தனக்குள் அடக்கி வைத்திருந்தார். அவர் அதை அடக்கி வைத்த மட்டும், நித்தம் தனக்குள்ளே கதறினார். இதனால் அவருடைய எலும்புகள் உலர்ந்துபோயிற்று. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய பாவங்களைக் குறித்து உணர்த்தும்போது, நாம் அமைதியாயிருக்கக்கூடாது. நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடாமல், அவற்றை நமக்குள் அடக்கி வைத்துக்கொண்டிருக்கக்கூடாது.
பாவம் தீமையானது. அது பயங்கரமானது. நம்முடைய ஆத்துமாவை அழிவுக்கு நேராக இழுத்துச் செல்லக்கூடியது. ஒரு சிலர் அநேக பாவங்களை செய்வார்கள். ஆனாலும் தங்களுடைய பாவங்களைக் குறித்து உணர்வடையமாட்டார்கள். தங்களுடைய சிந்தைகளையும், செயல்களையும் வேறு ஏதாவது திசையில் திருப்பி, அதில் கவனம் செலுத்துவார்கள். தங்களுடைய பாவத்தைக் குறித்து மனம்வருந்தி, மனந்திருந்தி, கர்த்தருடைய சமுகத்தில் இப்படிப்பட்டவர்கள் பாவமன்னிப்பு கேட்கமாட்டார்கள். பாவம் செய்வது இவர்களுடைய சுபாவமாக மாறிவிடும். கொடூரமான பாவங்களை துணிகரமாய்ச் செய்துவிடுவார்கள்.
கர்த்தருடைய சமுகத்தில் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும்போது, அவர் அவற்றை மன்னிப்பதற்கு கிருபை நிறைந்தவராகயிருக்கிறார். நாம் இரட்சிக்கப்படுவதற்கு இதுவே தேவன் நியமித்திருக்கும் திட்டம். தேவனுடைய திட்டத்திற்கு விரோதமாய் சிந்திக்கும்போதும், செயல்படும்போதும் நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்காது. அது அமைதியில்லாமல் கதறும். இதனால் நம்முடைய எலும்புகளெல்லாம் உலர்ந்துபோகும்.
நாம் பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிடாமல், நமக்குள்ளே அடக்கி வைத்திருந்தால் தேவனுடைய நீதியின் கரம் நம்மேல் இரவும் பகலும் பாரமாய் அமர்ந்திருக்கும். தாவீது சிறிதுகாலம் தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிடாமல் தனக்குள்ளே அடக்கி வைத்திருந்தார். தேவனுடைய கை அவர்மேல் பாரமாயிருந்தது. இதனால் அவருடைய சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. அவருடைய எலும்புகள் உலர்ந்துபோயிற்று. அவருடைய சரீரமும், சரீரத்தின் எல்லா அவயவங்களும் வறண்டுபோயிற்று.
என் பாவத்தை கர்த்தருக்கு அறிவித்தேன்
நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.) இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது (சங் 32:5,6).
நம்முடைய மனச்சாட்சியில் சமாதானம் உண்டாவதற்கு ஒரே ஒரு வழி மத்திரமே உள்ளது. நம்முடைய அக்கிரமத்தை மறைக்காமல், நம்முடைய பாவங்களை கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்யவேண்டும். இதுவே நம்முடைய மனச்சாட்சியில் சமாதானம் பெறுவதற்கு மெய்யான வழி. நம்முடைய பாவங்களை அறிக்கை செய்யும்போது கர்த்தர் அவற்றை மன்னிக்கிறார். நம்மை நீதிமான்களாக அறிவிக்கிறார்.
தாவீது தன்னுடைய அக்கிரமத்தை மறைக்காமல் தன்னுடைய பாவத்தை கர்த்தருக்கு அறிவித்தார். தன்னுடைய மீறுதல்களை கர்த்தருக்கு அறிக்கையிட்டார். அப்போது கர்த்தர் தாவீதினுடைய பாவத்தின் தோஷத்தை மன்னித்தார்.
நாம் உண்மையாக மனந்திரும்பி, நம்முடைய பாவங்களை கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்யும்போது, கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார். தாவீது இதைப்பற்றிச் சொல்லும்போது, ""என் மீறுதல்களை கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன். தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்'' என்று சொல்லுகிறார். தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்னும் ஆறுதல் அவருடைய மனச்சாட்சியில் உண்டாயிற்று. தாவீதின் பாவங்கள் மன்னிக்கப்பட்டபோது அவருடைய மனச்சாட்சியில் சமாதானமும், இளைப்பாறுதலும் உண்டாயிற்று.
கெட்ட குமாரன் மனந்திரும்பி தன்னுடைய தகப்பனிடத்திற்குத் திரும்பி வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே அவனுடைய தகப்பன் அவனைப் பார்த்து, ஓடிச்சென்று கட்டியணைத்து அவனை முத்தமிட்டான். தன் மகனுடைய பாவங்களை தகப்பன் மன்னித்துவிட்டான் என்பதற்கு அவன் முத்தமிட்டது ஒரு அடையாளம். கெட்ட குமாரனுடைய பாவமன்னிப்பு அவனுடைய தகப்பனின் முத்தத்தினால் முத்திரையிடப்பட்டு உறுதிபண்ணப்பட்டது.
கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். நம்மை நீதிமான்களாக அறிவிக்கிறார். இதற்காக சகாயம் கிடைக்கும் காலத்தில் பக்தியுள்ளவன் எவனும் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்வான் என்று தாவீது சொல்லுகிறார். பக்தியுள்ளவர்களெல்லோருமே ஜெபிக்கிற ஜனமாயிருக்கிறார்கள். பவுல் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டபோது, உடனே அவர் ஜெபம்பண்ணினார். கர்த்தர் அனனியாவுக்கு சவுலைப்பற்றி சொன்னபோது, ""நீ எழுந்து சவுல் என்னும் பெயருள்ள ஒருவனைத் தேடு. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்'' (அப் 9:11) என்று சொன்னார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணவேண்டும். நாம் தாராளமாய் ஜெபம்பண்ணவேண்டும். கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுவதினால் நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் உண்டு. ஜெபம்பண்ணுகிறவர்களுக்கு கர்த்தருடைய பாதுகாப்பும் பராமரிப்பும் கிடைக்கும். மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும், கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிற பிள்ளைகளை, அந்த ஜலப்பிரவாகம் அணுகாது. கர்த்தர் நமக்கு அரணாகயிருப்பார். அவரே நம்மைப் பாதுகாக்கிறவர்.
கர்த்தர் நமக்கு மறைவிடமாயிருக்கிறார்
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்: என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.) (சங் 32:7)
தாவீது கர்த்தரோடு பேசுகிறார். கர்த்தரிடத்தில் தான் வைத்திருக்கிற நம்பிக்கையை தாவீது அறிக்கை செய்கிறார். கர்த்தரிடமிருந்து தான் எதிர்பார்ப்பதையும் தாவீது சொல்லுகிறார். ""நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்'' என்பதே தாவீது கர்த்தரிடத்தில் சொல்லுகிற விசுவாச வார்த்தையாகும்.
தாவீது விசுவாசத்தினாலே கர்த்தரிடத்தில் நெருங்கிச் சேர்ந்திருக்கிறார். தாவீது கர்த்தரோடிருக்கும்போது இந்த உலகத்தின் பாடுகளெல்லாம் அவருக்குப் பெரிதாய்த் தெரியவில்லை. எந்தத் தீங்கும் தன்னை அணுகாதவாறு அவை தன்னை விட்டு, விலகியே இருப்பதை தாவீது அறிந்துகொள்கிறார். ஏனெனில் கர்த்தர் தாவீதை இக்கட்டுக்கு விலக்கிக் காத்துக்கொள்கிறார். இந்த உலகத்தில் தாவீதுக்கு அநேக நெருக்கங்களும், அநேக இக்கட்டுக்களும் உள்ளது. ஆனால் இவை எதுவும் தாவீதை நெருங்க முடியவில்லை. கர்த்தர் தாவீதுக்கு மறைவிடமாயிருக்கிறார்.
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னை அடக்கி வைத்திருந்தார் (சங் 32:3). அப்போது எந்தத் தீங்கும் தாவீதை அணுகாதவாறு கர்த்தர் தாமே அவரைப் பாதுகாத்துக்கொண்டார். கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னித்துவிட்டு, நம்மை அப்படியே விட்டுவிடமாட்டார். கர்த்தருடைய பாதுகாப்பு நமக்கு இல்லையென்றால், நாம் மறுபடியும் பாவச்சேற்றிலே விழுந்துவிடுவோம்.
நம்முடைய பாவங்களை கர்த்தர் மன்னிக்கும்போது, நாம் நம்மை கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும். நமக்கு பாவமன்னிப்பின் சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்போது, நம்மை கர்த்தருடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். கர்த்தருடைய கிருபை நம்மைப் பாதுகாக்கும். கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால் நமக்கு மறைவிடமாயிருப்பார். நம்மை இக்கட்டுக்கு விலக்கிக் காப்பார். நாம் மறுபடியும் பாவத்தில் விழுந்துவிடாதவாறு நம்மை கரம்பிடித்து வழிநடத்துவார்.
கர்த்தர் நம்முடைய பாவங்களை தமது கிருபையினால் மன்னிக்கிறார். நம்மை இக்கட்டுக்கு விலக்கிக் காத்துக்கொள்கிறார். அத்தோடு இரட்சணியப்பாடல்கள் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்படியும் செய்கிறார். பக்தியுள்ளவர்களெல்லோரும் கர்த்தருடைய சமுகத்திலே இரட்சணியப்பாடல்களைப் பாடவேண்டும். தன்னுடைய ஆத்தும இரட்சிப்புக்காக தாவீது கர்த்தரைத் துதிப்பதுபோல, நாமும் துதிக்கவேண்டும். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் கர்த்தரைத் துதித்துப் பாடவேண்டும்.
நான் உனக்குப் போதிப்பேன்
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக்காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (சங் 32:8).
தாவீது இப்போது மனுபுத்திரரோடு பேசுகிறார். கர்த்தர் தாவீதை இரட்சித்திருக்கிறார். தான் மாத்திரம் இரட்சிக்கப்பட்டால் போதுமென்று தாவீது சுயதிருப்தியோடிருப்பதில்லை. இயேசுகிறிஸ்து சீமோன் பேதுருவிடம், ""நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து'' (லூக் 22:32) என்று சொன்னார். தாவீது குணப்பட்டிருக்கிறார். இப்போது தன்னுடைய சகோதரரை ஸ்திரப்படுத்துகிறார்.
தாவீது இப்போது மற்ற சகோதரருக்கும் போதிக்கிறார். அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்குக் காண்பிக்கிறார். சாலொமோன் ராஜா கர்த்தரிடத்தில் பக்தியாயிருந்தார். கர்த்தரைத் துதித்தார். அவரை ஆராதித்தார். அவர் கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிற பிரசங்கியாராகவும் ஊழியம் செய்தார். சாலொமோன் தன்னுடைய வாக்கியங்களைப்பற்றிச் சொல்லும்போது, ""தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்'' (பிர 1:1) என்று சொல்லுகிறார்.
தாவீது தன்னுடைய சகோதரருக்கு ஆலோசனை சொல்லும்போது, ""உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்'' என்று சொல்லுகிறார். வேதபண்டிதர்களில் சிலர், இந்த வசனத்திற்கு வியாக்கியானம் சொல்லும்போது, இவை கர்த்தர் சொல்லுகிற வார்த்தைகள் என்று சொல்லுகிறார்கள். கர்த்தர் நமக்குப் போதிப்பார் என்றும், நாம் நடக்கவேண்டிய வழியை நமக்குக் காண்பிப்பார் என்றும், நம்மேல் தம்முடைய கண்ணை வைத்து நமக்கு ஆலோசனை சொல்லுவார் என்றும் இந்த வசனத்திற்கு வியாக்கியானம் சொல்லுகிறார்கள்.
ஆனாலும் இந்த வார்த்தைகள் தாவீதின் வார்த்தைகள்தான் என்று வியாக்கியானம் சொல்லுவோரும் அநேகர் இருக்கிறார்கள். தாவீதின் உபதேசத்தைக் கேட்பதற்காக அவரிடத்தில் அநேகர் கூடிவருகிறார்கள். அவருடைய பிள்ளைகளும், அவருடைய குடும்பத்தாரும் தாவீதின் போதகத்தைக் கேட்பதற்காக வருகிறார்கள். அவருடைய பாதபடியில் அமர்ந்து அவருடைய உபதேசத்தைக் கேட்கிறார்கள். அவர்களுக்கு ""உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்'' என்று தாவீது சொல்லுகிறார்.
தாவீதின் ஜீவியத்தில் அவருக்கு ஏராளமான அனுபவங்கள் உண்டாயிற்று. அவர் பல சமயங்களில் வாழ்ந்திருந்தார். சில சமயங்களில் தாழ்ந்திருந்தார். அரண்மனையிலும் வாழ்ந்தார். காடுகளிலும் அலைந்து திரிந்தார். தாவீது தன்னுடைய அனுபவங்களையெல்லாம், தன்னிடத்தில் வருகிறவர்களுக்கு உபதேசமாகச் சொல்லுகிறார். தன்னுடைய வார்த்தைகளை அவர்கள் செவிகொடுத்துக் கேட்டாலும், கேட்காமல் போனாலும், தாவீது அவர்களுக்குப் போதிக்க ஆயத்தமாயிருக்கிறார்.
ஆவிக்குரிய காரியங்களில் வழிநடத்துகிறவர்கள், தங்களுடைய போதகத்தைக் கேட்கிறவர்களை கண்காணிக்கவேண்டும். அவர்கள்மேல் தங்கள் கண்களை வைத்து அவர்களுக்கு ஆலோசனை சொல்லவேண்டும். ஆவிக்குரிய உபதேசியார்கள் கண்காணிகளாகவும் இருக்கவேண்டும்.
புத்தியில்லாத குதிரை
வாரியனாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம் (சங் 32:9).
பாவிகளுக்கு எச்சரிப்பின் வார்த்தை இங்கு சொல்லுப்பட்டிருக்கிறது. பாவிகள் தாறுமாறாக ஜீவிக்கக்கூடாது. தங்களை யாரும் ஆளுகை செய்ய முடியாதபடி, எல்லா காரியங்களிலும் கட்டுப்படாமல் மீறி நடக்கக்கூடாது. குதிரையை வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டவேண்டும். இல்லையென்றால் அது நமக்கு கீழ்ப்படியாது. அதை நாம் எப்படித்தான் வளர்த்தாலும் அது புத்தியில்லாத குதிரையைப்போலவும், கோவேறு கழுதையைப்போலவும் இருக்கும். பாவிகள் இப்படிப்பட்ட குதிரைகளைப்போலவும், கோவேறு கழுதைகளைப்போலவும் யாருக்கும் அடங்காமல் இருக்கவேண்டாம் என்று தாவீது உபதேசம் பண்ணுகிறார்.
கர்த்தர் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நமக்குப் புத்தியைக் கொடுத்திருக்கிறார். நாம் புத்தியுள்ளவர்களாயிருப்பது நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம். இதுவே நமக்கு மெய்யான சந்தோஷம். நமக்கு மேலான அதிகாரத்திலுள்ளவர்கள் நம்மை ஆளுகை செய்வதற்கு, நம்மைக் கீழ்ப்படுத்துகிறோம். தேசத்தின் சட்ட திட்டங்களுக்கு கர்த்தருடைய பிள்ளைகள் கீழ்ப்படிந்து நடப்பார்கள். நாம் எதை பேசினாலும், எதை செய்தாலும் நிதானமாயும், ஞானமாயும் செய்வோம். கர்த்தருடைய கிருபை நம்மை ஆளுகை செய்வதினால், நமக்கு வாரும் கடிவாளமும் தேவையில்லை. தேவனுடைய கிருபையே நமக்குப் போதும். கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்கிறவர்கள் பொல்லாங்குகளுக்கும், தண்டனைகளுக்கும் தப்பித்துக்கொள்வார்கள்.
குதிரைக்கும் கோவேறு கழுதைக்கும் ஆறறிவு இல்லை. வாரினாலும் கடிவாளத்தினாலும் வாயைக் கட்டித்தான் அவற்றை அடக்க வேண்டும். நாமோ ஆறறிவுடையவர்கள். ஆகையினால், நாமே மனமுவந்து தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (நீதி 26:3).
கர்த்தரை நம்பியிருக்கிறவன்
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள் (சங் 32:10,11).
தாவீது பாவிகளுக்கு எச்சரிப்பின் வார்த்தைகளைச் சொல்லுகிறார். துன்மார்க்கருக்கு அநேக வேதனைகள் உண்டு. பாவத்தின் சம்பளம் மரணம். சந்தோஷமாய்ப் பாவம் செய்கிறவர்கள், பாவத்தின் தண்டனையை வருத்தத்தோடு அனுபவிப்பார்கள். தன்னுடைய பிள்ளைகளுக்கு வருத்தமும், வேதனைகளும் வரக்கூடாது என்பதற்காகவே, தாவீது அவர்களுக்கு எச்சரிப்பின் வார்த்தைகளைச் சொல்லுகிறார்.
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகள் உண்டு. கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். இது கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு ஆறுதலான வார்த்தை. நாம் கர்த்தரை நம்பி ஜீவிக்கும்போது, கர்த்தர் நம்மைப் பாதுகாப்பார். நம்மைப் பராமரிப்பார். நாம் கர்த்தரை நம்பி, அவரோடு நெருங்கிய ஐக்கியத்தில் ஜீவிக்கும்போது கர்த்தருடைய கிருபை நம்மைச் சூழ்ந்துகொள்ளும். கர்த்தருடைய கிருபை நம்மை எல்லா பக்கத்திலும் சூழ்ந்துகொள்ளும். சத்துரு நம்மை எந்தப் பக்கத்திலிருந்தும் அணுகமுடியாது. எல்லா பக்கத்திலும் கர்த்தர் நமக்கு அரணாயிருப்பார்.
கர்த்தரை நம்பியிருக்கிற நீதிமான்களுக்கு தாவீது ஆசீர்வாதமான வார்த்தைகளைச் சொல்லுகிறார். ""நீதிமான்களே கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்'' என்று நீதிமான்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார். மேலும் ""செம்மையான இருதயமுள்ளவர்களே நீங்களெல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்'' என்று செம்மையான இருதயமுள்ளவர்களுக்கும் ஆலோசனை சொல்லுகிறார். இதுவே தாவீதின் போதனை. இதுவே தாவீது நமக்குக் காட்டுகிற வழி. இதுவே தாவீது நம்மேல் கண்ணை வைத்து நமக்குச் சொல்லுகிற ஆலோசனை. தாவீதின் ஆலோசனையைக் கேட்டு நாம் கர்த்தரை நம்பும்போது, கர்த்தருடைய கிருபை நம்மையும் சூழ்ந்துகொள்ளும்.
நீதிமானின் ஆசீர்வாதங்கள்
1. மீறுதல் மன்னிக்கப்படும் (சங் 32:1,5)
2. பாவம் மூடப்படும் (சங் 32:1)
3. அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருப்பார் (சங் 32:2)
4. ஆவியில் கபடமில்லாதிருக்கும்
5. தேவனிடமிருந்து சகாயங் கிடைக்கும் (சங் 32:6)
6. மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது
7. கர்த்தர், மறைவிடமாயிருப்பார் (சங் 32:7)
8. இக்கட்டுக்கு விலக்கிக் காப்பார்
9. இரட்சணியப் பாடல்கள் சூழ்ந்து கொள்ளும்படி செய்வார்
10. கர்த்தர் நன்மையானவற்றைப் போதிப்பார் (சங் 32:8)
11. கர்த்தர் நல்வழியைக் காட்டுவார்
12. கர்த்தரை நம்பியிருக்கிறவனை கிருபை சூழ்ந்து கொள்ளும் (சங் 32:10)