சங்கீதம் 29 விளக்கம்

  சங்கீதம் 29 விளக்கம்

    (தாவீதின் சங்கீதம்.)

    முதலாவது துதியின் சங்கீதம்

    பொருளடக்கம்

        1. கர்த்தரைத் துதிக்க வேண்டும் என்னும் நான்கு கட்டளைகள் - (29:1-2)

        2. கர்த்தரைத் துதிப்பதற்கு இருபது காரணங்கள் - கர்த்தருடைய சத்தத்தையும் மகாவல்லமையையும் பற்றிய விளக்கம் - (29:3-11) 


    தாவீது இருபத்தொன்பதாவது சங்கீதத்தை ஒரு விசேஷித்த சூழ்நிலையில் எழுதுகிறார்.  அவர் இந்த சங்கீதத்தை எழுதும்போது, இடி, மின்னல், மழை, புயல்காற்று ஆகியவை உண்டாயிற்று. தாவீது எட்டாவது சங்கீதத்தை  சந்திரனின் வெளிச்சத்தில் எழுதினார். பத்தொன்பதாவது சங்கீதத்தை அதிகாலை வேளையில் சூரிய வெளிச்சத்தில் எழுதினார். 


    இந்த உலகத்திலுள்ள பலவான்களின் புத்திரர்கள் எல்லோரும்  கர்த்தரைத் துதிக்கவேண்டுமென்று தாவீது சொல்லுகிறார் (சங் 29:1,2). கர்த்தர் நமது துதிகளுக்குப் பாத்திரராயிருக்கிறார்.  கர்த்தருடைய நன்மைகளை நினைத்து நாம் அவரைத் துதிக்கவேண்டும். இடி, மின்னல், பெருமழை ஆகியவற்றில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுகிறது     (சங் 29:3-9). கர்த்தர் இந்த உலகத்தின்மீது சர்வஆளுகை உடையவர் (சங் 29:10). கர்த்தர் தமது சபைக்கு விசேஷித்த சிலாக்கியங்களைக் கொடுக்கிறார் (சங் 29:11). 


    கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள் சங் 29 : 1,2

    கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்

        பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்  (சங் 29:1). 


    பூமியிலுள்ள  பலவான்கள் எல்லோரும் கர்த்தருக்கு  மகிமையைச் செலுத்தவேண்டும். வானத்தில் இடி ஓசை கேட்கிறது. ஒவ்வொரு முறை இடி ஓசை கேட்கும்போதெல்லாம், அது  கர்த்தரை மகிமைப்படுத்துவதாக தாவீது வியாக்கியானம் பண்ணுகிறார். பலவான்களும் பலவான்களின் புத்திரரும், பிரபுக்களும் கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டும். 


    பலவான்களின் புத்திரரிடத்தில்  பெலமும் வல்லமையும் உண்டு. இவர்கள் கர்த்தருக்கு  மகிமையைச் செலுத்தவேண்டுமென்று தாவீது மறுபடியும் மறுபடியும் சொல்லுகிறார். கர்த்தருடைய மகிமையை  பலவான்களின் புத்திரர் அங்கீகரிக்கவேண்டும். கர்த்தர் நம்மை ஆளுகைசெய்கிறவர் என்பதை நாமெல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.  


    நம்முடைய கர்த்தருக்கு முதலாவதாக நம்மையே ஒப்புக்கொடுக்கவேண்டும்.  நம்முடைய ஜீவியத்தில் நாம் கர்த்தருக்கு முதல் இடம் கொடுக்கவேண்டும். கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுத்த பின்பு, நம்முடைய ஊழியங்களை அவருக்கு அர்பணிக்கவேண்டும்.  கர்த்தருடைய மகிமையையும் வல்லமையையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். கர்த்தர் நம்மிடத்தில் பெலனையும் வல்லமையையும் ஒப்புக்கொடுத்திருக்கிறார். அதினிமித்தமாய் நாம் பலவான்களின் புத்திரராயிருக்கிறோம்.  


    கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற பெலனையும் வல்லமையையும் கர்த்தருடைய மகிமைக்காகவும், அவருடைய ஊழியத்திற்காகவும் பயன்படுத்தவேண்டும். கர்த்தருக்கு நம்முடைய கிரீடங்களைக் கொடுக்கவேண்டும். நம்முடைய சிரசிலுள்ள கிரீடங்களைக் கழற்றி, அவற்றை  கர்த்தருடைய பாதபடியில் சமர்ப்பிக்கவேண்டும். நம்முடைய செங்கோல்களையும், பட்டயங்களையும், திறவுகோல்களையும் கர்த்தருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கவேண்டும். நாம் இவற்றையெல்லாம் நம்முடைய சுயஆதாயத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதற்காகவே  நாம் இவற்றைப் பயன்படுத்தவேண்டும்.  


    தாவீது பலவான்களின் புத்திரர் எல்லோருக்கும் இந்த ஆலோசனையைப் பொதுவாகச் சொல்லுகிறார். ""பலவான்களின் புத்திரரே கர்த்தருக்கு  மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்'' என்று தாவீது சொல்லிவிட்டு, மறுபடியுமாக, ""கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்'' என்று திரும்பவும் சொல்லுகிறார்.


    நாம் கர்த்தரை ஆராதிக்கவேண்டும்.  இதுவே சுவிசேஷத்தின் மொத்த சாரம். ""பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்;அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து.  மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும்உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்'' (வெளி 14:6,7). 


    கர்த்தர் நம்முடைய துதிகளுக்கும் ஆராதனைகளுக்கும் பாத்திரராயிருக்கிறார்.  கர்த்தரைத் துதித்து ஆராதிப்பது நம்முடைய கடமை. இதுவே நம்முடைய சிலாக்கியம். 

    கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமை வச.2

    கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;  பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் (சங் 29:2).  


    கர்த்தர் மகிமையுள்ளவர். அவருடைய நாமம் பரிசுத்தமானது.  கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை நாம் அவருக்குச் செலுத்தவேண்டும். இதுவே மெய்யான ஆராதனை. பரிசுத்த அலங்காரத்துடனே நாம் கர்த்தரைத் தொழுதுகொள்ளவேண்டும்.  இதுவே மெய்யான ஆவிக்குரிய ஆதாரம். கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக நாம் பயபக்தியோடு வந்து நின்று, அவரை பயத்துடனும், நடுக்கத்துடனும் ஆராதிக்கவேண்டும். 


    கர்த்தர் நம்மீது  அன்பாயிருக்கிறார்.  அவர் நம்மை நேசிக்கிறார். நம்முடைய ஆராதனையில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். நாம் கர்த்தருடைய  சமுகத்திற்கு முன்பாக வந்து நிற்கும்போது, அவருடைய பரிசுத்தத்தின் அலங்காரத்தை நோக்கிப் பார்க்கவேண்டும்.  பரிசுத்தத்தில் ஒரு அழகு இருக்கிறது. கர்த்தரை நாம் எப்படித்தான் ஆராதித்தாலும், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்வது மாத்திரமே  கர்த்தருக்குப் பிரியமான ஆராதனை. 


    கர்த்தர் தம்முடைய நாமத்தில் பரிசுத்தராயிருக்கிறார்.  கர்த்தருடைய நாமம் உயர்ந்தது. கர்த்தர் என்னும் நாமத்திற்கு ""நான் நானாகயிருக்கிறேன்'' என்று பொருள். தாவீது இந்த சங்கீதத்தில்  கர்த்தர் என்னும் நாமத்தை பதினெட்டு தடவை சொல்லுகிறார். கர்த்தருடைய நாமம் பரிசுத்தமாயிருப்பதினால், தாவீது அந்த நாமத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார். 


    ""பரிசுத்த அலங்காரம்'' என்னும் வாக்கியம் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (சங் 29:2; சங் 96:9; சங் 110:3;      1நாளா 16:29; 2நாளா 20:21). விசுவாசிகள் சரீரத்திலும் ஆவியிலும் பரிசுத்தமாயிருக்க வேண்டும் கிறிஸ்துவில் பரிசுத்த அலங்காரத்துடனிருப்பது சாத்தியமே (1கொரி 1:30; 2கொரி 5:17-18). தேவன் பரிசுத்த மகத்துவமுள்ளவர்''   (யாத் 15:11). தேவன் வீற்றிருக்கும் இடம் ""பரிசுத்த சிங்காசனம்'' (சங் 47:8). தேவன் பரிசுத்த நகரத்தில் வாசம் பண்ணுகிறார் (வெளி 21:2,10; வெளி 22:19). கர்த்தர் பரிசுத்தர், கர்த்தர் பரிசுத்தர் என்று ஜீவன்கள் இரவும் பகலும் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது (ஏசா 6:3; வெளி 4:8). தேவன் பரிசுத்த தூதர்கள் மத்தியிலும் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு மத்தியிலும் வாசம் பண்ணுகிறார் (வெளி 14:10; வெளி 18:20; வெளி 22:6). தேவன் அனைத்தையும் பரிசுத்தமாகவே சிருஷ்டித்தார். நரகத்தில் தள்ளப்பட்ட கலகக்காரரைத் தவிர, மற்ற அனைவரும் நித்திய காலமாக பரிசுத்தமாகவே இருப்பார்கள்.

    பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பரிசுத்தமான காரியங்கள்

        1. பூமி  (யாத் 3:5) 

        2. தேசம் (யாத் 19:6) 

        3. பரிசுத்த ஓய்வுநாள் (யாத் 16:23)

        4. மனுஷர் (யாத் 22:31)

        5. ஸ்தலம் (யாத் 26:33)

        6. வஸ்திரங்கள் (யாத் 28:22)

        7. காணிக்கைகள் (யாத் 28:38)

        8. சபை (யாத் 12:16)

        9. பொருட்கள் (யாத் 28:38)

        10. கிரீடம் (யாத் 29:6)

        11. அபிஷேக தைலம் (யாத் 30:25)

        12. பலிபீடம் (யாத் 29:37)

        13. நாள் (யாத் 35:2)

        14. வழிபடுபவர்கள் (யாத் 29:37)

        15. தகனபலி (லேவி 2:3)

        16. ஆட்டுக்கடா (லேவி 16:4)

        17. ஆசாரிப்புக்கூடாரம்  (லேவி 16:33)

        18. கர்த்தர் (லேவி 19:2)

        19. கனி (லேவி 19:24)

        20. கர்த்தருடைய பரிசுத்த நாமம்  (லேவி 20:3)

        21. ஆசாரியர் (லேவி 21:6)

        22. பண்டிகைகள் (லேவி 23:2)

        23. முதற்கனி (லேவி 23:20)

        24. வருஷம் (லேவி 25:12)

        25. மிருகஜீவன் (லேவி 29:9)

        26. வீடு (லேவி 27:14)

        27. வயல் (லேவி 27:16)

        28. நேர்ந்துகொள்ளப்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் (லேவி 27:28)

        29. தசமபாகம் (லேவி 27:30)

        30. ஜலம் (எண் 5:17)

        31. தட்டுமுட்டுகள் (எண் 31:6)

        32. பணிமுட்டுகள் (1இராஜா 8:4)

        33. உடன்படிக்கைப் பெட்டி (2நாளா35:3)

        34. பட்டணம் (நெகே 11:18)

        35. மலை (சங் 2:6)

        36. ஆலயம் (சங் 5:7)

        37. வானம்  (சங் 20:6)

        38. சந்நிதி (சங் 28:2)

        39. ஆவி (சங் 51:11)

        40. பர்வதம் (சங் 87:1 சங் 5:7  ஏசா 11:9)

        41. புயம் (சங் 98:1)

        42. வாசஸ்தலம் (சங் 68:5)

        43. வாக்குத்தத்தம் (சங் 105:42)

        44. கிரியை (சங் 145:17)

        45. எருசலேம் (ஏசா 4:3)  

        46. வித்து (ஏசா 6:13)

        47. மந்தை (எசே 36:38) 

        48. அறைவீடு (எசே 42:13)

        49. உடன்படிக்கை (தானி 11:28-30)

        50. தேவர்கள் (தானி 4:8-9)

        51. மாம்சம் (ஆகாய் 2:12)

        52. தேசம் (சக 2:12)

        53. தூதர்கள் (மத் 25:31)

        54. தீர்க்கதரிசிகள் (லூக்கா 1:70; அப் 3:21)

        55. இயேசு (அப் 4:27)

        56. நியாயப்பிரமாணம் (ரோமர் 7:12)

        57. கற்பனை  (ரோமர் 7:12; 2பேதுரு 2:21)   

        58. பிசைந்தமா (ரோமர் 11:16)

        59. வேர்  (ரோமர் 11:16)

        60. முதற்பலன் (ரோமர் 11:16)

        61. கிளைகள் (ரோமர் 11:16)

        62. பலி (ரோமர் 21:12)

        63. முத்தம் (ரோமர் 16:16)

        64. சரீரம்  (1கொரி 3:17)

        65. பிள்ளைகள் (1கொரி 7:14) 

        66. சரீரமும், ஆவியும் (1கொரி 7:34)

        67. பரிசுத்தவான்கள் (எபே 1:14; கொலோ 1:22; கொலோ 3:12)

        68. அப்போஸ்தலர்  (எபே 3:5; வெளி 18:20)

        69. சபை  (எபே 5:27)

        70. சகோதரர்  (1தெச 5:27)

        71. கைகள்  (1தீமோ 2:8)

        72. வேதவாக்கியங்கள்  (1தீமோ 3:15)

        73. அழைப்பு  (2தீமோ 1:9)

        74. கண்காணி  (தீத்து 1:8)

        75. ஸ்திரீகள்  (1பேதுரு 3:5)

        76. கிறிஸ்து  (எபி 7:26)

        77. ஆசாரியத்துவம் (1பேதுரு 2:5)

        78. ஜாதி (1பேதுரு 2:9)

        79. பேச்சு (2பேதுரு 3:11)

        80. விசுவாசம் (யூதா 1:20)

    கர்த்தருடைய சத்தம் சங் 29 : 3-9

    சங் 29:3. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.


    சங் 29:4. கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது


    சங் 29:5. கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.


    சங் 29:6. அவைகளைக் கன்றுக்குட்டிகளைப் போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.


    சங் 29:7. கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கும்.


    சங் 29:8. கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.


    சங் 29:9. கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.


    கர்த்தர் எல்லாவற்றிற்கும் மேலாக சர்வஆளுகையுள்ளவர். தாவீது இந்த சங்கீதத்தில்  தேவனுடைய சர்வஆளுகையை விவரித்துச் சொல்லுகிறார். இயற்கையில் கர்த்தருடைய மகிமையும் அவருடைய வல்லமையும் வெளிப்படுகிறது. இயற்கையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களும் கர்த்தருடைய மகத்துவத்தை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. கர்த்தருடைய மகிமையினால் இடி முழக்கம் உண்டாகிறது.


    நாம் இடி முழக்கத்தை நம்முடைய  செவிகளினால் கேட்கும்போது, நாம்  கர்த்தருடைய மகத்துவத்தையே கேட்கிறோம்.  கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது.  வானத்தில் இடிமுழக்கம் கேட்கும்போது, மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்.  கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார் (சங் 29:3). 


    ""கர்த்தருடைய சத்தம்'' என்னும் வாக்கியம் இந்த சங்கீதத்தில் ஏழுதடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (சங் 29:3,4,5,7,8,9) வேதாகமத்தில் மொத்தம் 522 தடவைகள் இந்த வாக்கியம் வந்துள்ளது. ஏதேன் தோட்டத்தில் முதல் முதலாக கர்த்தருடைய சத்தத்தைப்பற்றி வாசிக்கிறோம். உலகில் பல்வேறு விதமான சத்தங்கள் உள்ளதாக பவுல் கூறுகிறார்.

    பரிசுத்த வேதாகமத்தில் ""சத்தம்'' என்ற சொல்லின் பயன்பாடுகள்

        1. கர்த்தருடைய சத்தம் (ஆதி 3:8-10; சங் 29; வெளி 10:3-4). மனுஷருக்கு கர்த்தருடைய சத்தம் தெளிவாகக் கேட்டது       (ஆதி 3:8-10; யாத் 19:19)        

        2. உன் மனைவியின் வார்த்தை (ஆதி 3:17)

        3. உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம்  (ஆதி 4:10)

        4. எக்காள சத்தம் (யாத் 19:19)

        5. ஜெயதொனியின் சத்தம் (யாத் 32:18) 

        6. அபஜெயதொனியாகிய சத்தம் (யாத் 32:18)

        7. ஆணையின் சத்தம் (லேவி 5:1)

        8. இஸ்ரவேலின் சத்தம் (எண் 21:3) 

        9. தகப்பன் சொல் (உபா 21:18)

        10. தாயின் சொல் (உபா 21:18)

        11. யூதாவின் சத்தம் (உபா 33:7)

        12. மனிதனுடைய சொல் (யோசு 10:14)

        13. ஒடுக்குகிறவனுடைய சத்தம் (யோபு 3:18)

        14. சிங்கத்தின் கெர்ச்சிப்பு (யோபு 4:10)

        15. அழுகிறவர்களின் ஓலம் (யோபு 30:31)

        16. களிப்பும் துதியுமான சத்தம் (சங் 42:4)

        17. தூஷிக்கிறவனுடைய சத்தம் (சங் 44:16)

        18. கெம்பீரசத்தம் (சங் 47:1)

        19. சத்துருவினுடைய கூக்குரல் (சங் 55:3)

        20. பாம்பாட்டிகள் ஊதும் சத்தம் (சங் 58:5)

        21. ஜெபத்தின் சத்தம் (சங் 66:19)

        22. கீதசத்தம் (சங் 98:5)

        23. பெருமூச்சின் சத்தம்  (சங் 102:5)

        24. வார்த்தையின் சத்தம் (சங் 103:20

        25. குமுறலின் சத்தம் (சங் 104:7)

        26. இரட்சிப்பின் கெம்பீரசத்தம் (சங் 118:15)

        27. போதகரின் சொல் (நீதி 5:13)

        28. குருவியின் சத்தம் (பிர 12:4)

        29. காட்டுப்புறாவின் சத்தம் (உன் 2:12)

        30. கூக்குரலின் சத்தம் (ஏசா 65:19)

        31. பிள்ளை பெறுகிற குமாரத்தியின் சத்தம்  (எரே 4:31)

        32. களிப்பின் சத்தம்  (எரே 7:34)

        33. மகிழ்ச்சியின் சத்தம் (எரே 7:34)

        34. மணவாளனின் சத்தம் (எரே 7:34)

        35. மணவாட்டியின் சத்தம் (எரே 7:34)

        36. கர்த்தருடைய நாளின் சத்தம் (செப் 1:14)

        37. தீர்க்கதரிசிகளின் சத்தம் (அப் 13:27)

        38. பிரதான தூதனுடைய சத்தம் (1தெச 4:16)

        39. தூதர்களுடைய சத்தம் (வெளி 5:11)

        40. பெரு வெள்ளத்து இரைச்சலைப் போன்ற சத்தம் (வெளி 1:15; வெளி 14:2; வெளி 19:6)

        41. பலத்த இடிமுழக்கம்  (வெளி 14:2; வெளி 19:6; வெளி 10:3-4)

        42. சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசை (வெளி 14:2)

        43. பாடகர்களின் சத்தம் (வெளி 14:2)

        44. திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரம் (வெளி 19:1)

        45. திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்  (வெளி 19:6)

    தேவனுடைய சப்தத்தைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்காட்டானவர்கள்

        1. ஆதாம் (ஆதி 3:8-10)

        2. ஆபிரகாம் (ஆதி 18; ஆதி  22:18; ஆதி 26:5)

        3. மோசே (யாத் 3; அப் 7:31)

        4. இஸ்ரவேல் (யாத் 19:19; உபா 4:12,33,36;  (உபா 5:23-28)

        5. எலியா (1இராஜா 19:12-13)

        6. ஏசாயா (ஏசா 6:4-6)

        7. எசேக்கியேல் (எசே 1:24; எசே 8:18; எசே 9:1; எசே 10:5;       எசே 43:2)

        8. தானியேல் (தானி 10:6-9)

        9. பேதுரு (அப் 10:13; 2பேதுரு 1:17-18)

        10. யாக்கோபு (மத் 17:5)

        11. யோவான் (வெளி 1:10-12; வெளி 4:1; வெளி 10:3-8; வெளி 21:3)

        12. பவுல்  (அப் 9:3-7)

    மனுஷருடைய சத்தத்தைத் தேவன் கேட்டதற்கு எடுத்துக்காட்டுகள்

        1. இஸ்மவேல்   (ஒரு பிள்ளையின்  சத்தத்தையே தேவன் முதன்முதலாகக் கேட்டார்) (ஆதி 21:17)

        2. இஸ்ரவேல்  (எண் 20:16; எண் 21:3; உபா 26:7)

        3. யோசுவா (யோசு 10:14)

        4. மனோவா (நியா 13:9)

        5. எலியா (1இராஜா 17:22)

        6. யோனா (யோனா 2:2)

        7. இயேசு (யோவான் 12:28)

    ""தண்ணீர்'' என்னும் சொல்லின் உருவக பயன்பாடுகள்

        1. நிலையின்மை அல்லது இருமனம் (ஆதி 49:4)

        2. கிறிஸ்துவில் ஆவிக்குரிய வாழ்க்கை  (யாத் 17:6; 1கொரி 10:4; வெளி 22:17)

        3. பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுதல் (எண் 8:7; எண் 31:23;    எசே 36:25)

        4. பாவத்திலிருந்து விடுபடல்  (எண் 19:7-21; எண் 31:23)

        5. ஆவிக்குரிய வளர்ச்சி (சங் 1:3)

        6. இரட்சிப்பு (ஏசா 12:3; யோவான் 4:7-14)

        7. தேவனுடைய வார்த்தை (யோவான் 3:5; யோவான்  15:3; எபே 5:26; யாக் 1:18; 1பேதுரு 1:23)

        8. ஆவியானவரின் அபிஷேகம் அல்லது உன்னதத்திலிருந்து வரும் பெலன் (லூக்கா 24:49; யோவான்  7:37-39; அப் 1:4-8; அப் 2:16-21,38-39)

        9. தண்ணீர்  ஞானஸ்நானம். கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் அடையாளம் (1பேதுரு 3:21)

        10. சேனைகள் (வெளி 12:15; எரே 47:2)

        11. அனுதின பராமரிப்பு (சங் 23:2)

        12. தொல்லைகள் (சங் 69:1-2,14; சங் 124:5; ஏசா 48:1)

        13. பாவம் (நீதி  9:17)

        14.  மனுஷத்துவம் (பிர 11:1; வெளி  17:1,15)

        15. தேவன் (எரே 2:13; எரே 17:13)


    கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது. அவருடைய சத்தம் மகத்துவமுள்ளது. கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது.  லீபனோனின் கேதுரு மரங்கள் வலுவானவை. அவற்றை முறிப்பது மிகவும் கடினம். கர்த்தருடைய சத்தமோ லீபனோனின் கேதுரு மரங்களையும் முறித்துவிடுகிறது (சங் 29:4,5). 


    லீபனோனில் ஏராளமான கேதுரு மரங்கள் இருக்கும். அங்கு வீசுகிற பலத்த புயல்காற்று கேதுரு மரங்களை வேரோடு கீழே சாய்த்துவிடும். புயல்காற்றினால் லீபனோனும் சீரியோனும் காண்டாமிருகக் குட்டிகள்       போல துள்ளுகிறது. கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறது. கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார். மரங்கள் பெருங்காற்றினால் அசைந்து முறிந்து விழுகிறது. பூமியதிர்ச்சியினால்  பூமி அசைகிறது.


    தாவீதுக்கு விரோதமாக சத்துருக்கள் யுத்தம்பண்ணினார்கள். அவர்களெல்லோரும் முறிந்து விழுந்தார்கள். இந்த சங்கீதத்தில்  சொல்லப்பட்டிருக்கிற இயற்கையின் காரியங்கள், தாவீதோடு யுத்தம்பண்ணின சத்துருக்களைக் குறிக்குமென்று வேதபண்டிதர்களில் சிலர்  வியாக்கியானம் சொல்லுகிறார்கள். 


    சீரியர்கள் தாவீதுக்கு சத்துருக்கள். இவர்கள் லீபனோனின்  வனாந்தரத்திற்கு அருகாமையில் தாவீதுக்கு விரோதமாய் பாளையமிறங்கியிருந்தார்கள். எமோரியர்களுக்கு எர்மோன் பர்வதமே எல்லை. மோவாபியரும் அம்மோனியரும் காதேஸ் வனாந்தரத்தில்  தாவீதுக்கு விரோதமாக பாளையமிறங்கியிருந்தார்கள். 


    கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கும்.  கர்த்தர் தம்முடைய சத்தத்தினால் மின்னல்களை அனுப்பினார்.  இடி முழக்கம் உண்டாயிற்று. வனாந்தரத்தில் கர்த்தருடைய இடி ஓசை சத்தம் கேட்கிறது.  அது காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறது. 


    கர்த்தருடைய சத்தம் பெரிய காரியங்களைச் செய்கிறது. அது  பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்குகிறது. பெண்மான்கள் இயற்கையாகவே தங்கள் குட்டிகளை ஈனும்.  அவை கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கும்போது, அந்த அதிர்ச்சியில் தங்கள் குட்டிகளை எளிதாக ஈன்றுவிடும். கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு வனாந்தரமும், வனாந்தரத்திலுள்ள மிருகங்களும் நடுங்குகிறது.  தங்களை குகைகளிலும் பள்ளங்களிலும் ஒளித்துக்கொள்கிறது.  


    கர்த்தருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையை பிரஸ்தாபிக்கிறார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் அவருடைய ஷேக்கைனா மகிமை வானத்திலிருந்து  இறங்கி வந்து தங்கியிருக்கிறது. கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்போது நம்மால் சும்மாயிருக்க முடியாது. நாம் கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துவோம். பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுவோம். அவருடைய மகிமையை  பிரஸ்தாபம்பண்ணுவோம். 

    கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார் சங் 29 : 10

    சங் 29:10. கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார். 


    கர்த்தர் மனுக்குலத்தார் எல்லோருக்கும் ராஜாவாகயிருக்கிறார்.  அவர் என்றென்றைக்கும் ராஜாவாக உட்கார்ந்திருக்கிறார். கர்த்தரே நம்மை ஆளுகை செய்கிறவர் என்பதை அங்கீகரித்து,  நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும். கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார். அவர் என்றென்றைக்கும்  ராஜாவாக வீற்றிருக்கிறார். 


    இந்தப் பூமியிலே ஏரளமான பிரச்சனைகள் இருக்கிறது. இயற்கையின் சீற்றங்கள் உண்டாகிறது.  தேசங்களுக்கு மத்தியிலே யுத்தங்கள் உண்டாகிறது. ராஜ்யங்கள் அழிந்துபோகிறது. ராஜாக்கள் தங்களுடைய  சிங்காசனத்தை இழந்துபோகிறார்கள். இவையெல்லாம் இந்தப் பூமியிலே நடந்துகொண்டிருந்தாலும், கர்த்தரோ என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார். 


    கர்த்தருடைய ஆலோசனை நித்தியமானது. அது தெய்வீக ஆலோசனை. காலத்தினால் கர்த்தருடைய ஆளுகை முடிந்துபோவதில்லை. கர்த்தர் சகலவற்றையும் ஆளுகை செய்கிறவர்.  அவர் சர்வஆளுகையுள்ளவர். அவர் சதாகாலமும் ஆளுகை செய்கிறவர். அதனால் அவர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார். கர்த்தருடைய ராஜ்யம் அவருடைய மகிமையில்  திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய திட்டங்களும் ஆலோசனைகளும் எக்காலத்திற்குமுரியது. கர்த்தருடைய ராஜ்யம் நித்தியமானது. அவருடைய ஆளுகையும் நித்தியமானது. 

    கர்த்தருடைய ஜனம் சங் 29 : 11

    சங் 29:11. கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். 


    கர்த்தருடைய ஆளுகை கிருபை நிறைந்தது. அவருடைய ராஜ்யம் கிருபையின் ராஜ்யம்.  கர்த்தருடைய ராஜ்யத்தில் அவருடைய மகிமை பிரகாசமாய் வெளிப்படுகிறது. கர்த்தருடைய ஆலயத்தில் அவருடைய ஜனங்கள் அவரை பரிசுத்த அலங்காரத்துடனே  தொழுதுகொள்வதற்காக வருகிறார்கள். அங்கு அவர்கள் கர்த்தரைத் தேடுகிறார்கள். கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரை கண்டடைகிறார்கள். கர்த்தருடைய சிந்தையையும், அவருடைய சித்தத்தையும், அவருடைய ஆலோசனையையும்  அவருடைய ஜனங்கள் அவருடைய ஆலயத்திலே கண்டுகொள்கிறார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்கு வருகிறவர்கள் ஒவ்வொருவரும் அவருடைய மகிமையைப்பற்றி மாத்திரமே பேசுகிறார்கள்.


    தாவீது ராஜா கர்த்தருடைய மகிமையைப்பற்றி சொல்லும்போது, ""கர்த்தாவே  உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும். உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்'' (சங் 145:10) என்று  சொல்லுகிறார். கர்த்தருடைய கிரியைகள் அவரைத் துதித்தாலும், அவருடைய பரிசுத்தவான்கள் மாத்திரமே அவரை ஸ்தோத்திரிப்பார்கள். அவருடைய கரத்தின் கிரியைகளில் வெளிப்படுகிற மகிமையை  அவருடைய பரிசுத்தவான்கள் மாத்திரமே ஸ்தோத்திரத்தோடு சொல்லுவார்கள். 


    கர்த்தர் தம்முடைய ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்.  கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பி வரும் சத்துருக்களிடமிருந்து  கர்த்தர் அவர்களைப் பாதுகாத்துக்கொள்வார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைச் சுற்றிலும் அரணாகயிருப்பார். கர்த்தருடைய பிள்ளைகள்  நற்கிரியைகளைச் செய்வதற்கு அவர்களை ஆசீர்வதிப்பார்.  


    கர்த்தர்  தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார். சமாதானமே மெய்யான ஆசீர்வாதம்.  கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு சமாதானத்தைத் திட்டமிட்டிருக்கிறார். அவர் நமக்கு தம்முடைய சமாதானத்தையே கொடுக்கிறார்.  கர்த்தர் கொடுக்கிற சமாதானமும், சந்தோஷமும் நித்தியமானது. நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குள் சமாதானமாயிருப்பதே மெய்யான ஆசீர்வாதம்.


    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.