சங்கீதம் 31 விளக்கம்
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
ஒன்பதாவது நெருக்கத்தின் ஜெபம்
பொருளடக்கம்
1. எட்டு விண்ணப்பங்கள் - ஜெபத்திற்குப் பதில் கிடைப்பதற்கு எட்டு இரகசியங்கள் - ஜெபிப்போருக்கு கிடைக்கும் பதினாறு ஆசீர்வாதங்கள் - (31:1-8)
2. தாவீது ராஜாவின் பதினைந்து விதமான துன்பங்கள் - (31:9-13)
3. எட்டு விண்ணப்பங்கள் - பதில் கிடைப்பதற்கு எட்டு காரணங்கள் - (31:14-18)
4. ஜெபிப்போருக்கு கிடைக்கும் ஒன்பது பெரிய ஆசீர்வாதங்கள் - இதற்காகக் கர்த்தரைத் துதித்தல் - (31:19-24)
தாவீதுக்கு சவுலின் மூலமாய் துன்பமும் நெருக்கமும் உண்டாயிற்று. தாவீதின் ஜீவனுக்கு ஆபத்தும் உண்டாயிற்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாவீது முப்பத்தொன்றாவது சங்கீதத்தை எழுதியிருக்கிறார். தாவீது கேகிலா பட்டணத்திலிருந்தபோது அவருடைய ஜீவனுக்கு மரணம் மிகவும் நெருக்கமாயிருந்தது. கர்த்தர் தாமே தாவீதை தமது கிருபையினால் பாதுகாத்தார் (1சாமு 23:13).
மாயோன் வனாந்தரத்தில் சவுல் தாவீதுக்கு மிகவும் நெருக்கமாய் வந்துவிட்டார். பர்வதத்தின் ஒரு பக்கத்தில் தாவீதும், மற்றொரு பக்கத்தில் சவுலும் இருந்தார்கள். இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் கர்த்தர் தாவீதின் ஜீவனைப் பாதுகாத்தார். என்கேதி வனாந்தரத்திலுள்ள குகையிலும் கர்த்தர் தாவீதைப் பாதுகாத்துக்கொண்டார்.
முப்பத்தொன்றாவது சங்கீதத்தில் தாவீதின் ஜெபங்களும் துதிகளும், விசுவாச அறிக்கைகளும் நிரம்பியிருக்கிறது. தாவீது கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறார். கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிறார். தன்னுடைய இக்கட்டுக்களிலிருந்தும், ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் தாமே தன்னைப் பாதுகாக்கவேண்டுமென்று தாவீது விசுவாசத்தோடு ஜெபம்பண்ணுகிறார் (சங் 31:1-8).
தனக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கத்தையும், ஆபத்தையும் தாவீது கர்த்தரிடத்தில் அறிக்கை செய்கிறார். தாவீது தன்னுடைய பிரச்சனைகளை கர்த்தரிடத்தில் முறையிட்டாலும் அவர் இன்னும் கர்த்தரையே நம்பியிருக்கிறார். தன்னுடைய சத்துருக்களுக்கு விரோதமாய்க் கர்த்தர் தம்முடைய கிருபையினால் எழும்பி வருவார் என்று தாவீது விசுவாசத்தோடிருக்கிறார். தாவீதின் ஜெபத்தில் அவருடைய விசுவாசமும் நிரம்பியிருக்கிறது (சங் 31:9-18).
இந்த சங்கீதத்தின் முடிவில் தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்.கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோரும் தன்னைப்போல கர்த்தர்மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும், கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்றும் அவர்களை உற்சாகப்படுத்துகிறார் (சங் 31:19-24).
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும் (சங் 31:1).
தாவீது நெருக்கத்திலிருந்தாலும் கர்த்தர் தன்னை விடுவிப்பார் என்று விசுவாசிக்கிறார். தன்னுடைய வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் கர்த்தருடைய சமுகத்தில் விசுவாசத்தோடு ஏறெடுக்கிறார். கர்த்தர் தம்முடைய இரக்கத்தினால் மாத்திரமல்ல, தம்முடைய நீதியினாலும் தன்னை விடுவிக்குமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதியாயிருக்கிறார். அவரே நீதியும் நியாயமுமுள்ளவர்.
தாவீதின் சத்துருக்கள் அநியாயக்காரராயிருக்கிறார்கள். அவர்களிடத்தில் நீதியுமில்லை. நியாயமுமில்லை. துன்மார்க்கமான அவர்கள் எந்தவிதமான முகாந்தரமுமில்லாமல் தாவீதைத் துன்பப்படுத்துகிறார்கள். நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் தாமே, தனக்கும், தன்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கும் நடுவில் நியாயாதிபதியாயிருந்து, தம்முடைய நீதியை ஸ்தாபிக்கவேண்டுமென்றும், தம்முடைய நீதியினால் தன்னை சத்துருக்களின் கையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீதுக்கு விடுதலை உடனே தேவைப்படுகிறது. விடுதலையில் காலதாமதம் ஏற்பட்டால் தாவீது தன்னுடைய விசுவாசத்தில் சோர்ந்துபோய்விடுவார். அவர் நீண்டகாலமாக கர்த்தரை விசுவாசத்தோடு நம்பியிருக்கிறார். கர்த்தரை நம்புகிறவர்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போகமாட்டார்கள். தம்மை நம்புகிறவர்களை கர்த்தர் ஒருக்காலும் வெட்கமடையும்படி செய்யமாட்டார். தாவீது கர்த்தரை நம்பியிருக்கிறபடியினால், அவர் தன்னையும் வெட்கமடையாதபடி செய்வார் என்று முழுநம்பிக்கையோடிருக்கிறார்.
தாவீது கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, தான் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பதையும், தான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்திருப்பதையும் சொல்லி, அவர் கர்த்தரைத் துதிக்கிறார். தாவீது தன்னிடத்தில் நம்பிக்கையாயில்லை. அவர் தன்னுடைய சுயபலத்திலோ, சுயபராக்கிரமத்திலோ, தன்னுடைய சுயபுத்தியிலோ நம்பிக்கை வைக்கவில்லை. தாவீது வேறு எந்த சிருஷ்டியையும் நம்பவில்லை. அவர் கர்த்தரை மாத்திரமே நம்பியிருக்கிறார்.
கர்த்தரை மாத்திரமே நம்பியிருக்கிற தன்னை, கர்த்தர் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யவேண்டும் என்பதே தாவீதின் விண்ணப்பம். கர்த்தருடைய வாக்குத்தத்தம் தன்னுடைய ஜீவியத்தில் நிறைவேறவேண்டுமென்று தாவீது எதிர்பார்க்கிறார். வாக்குத்தத்தம் நிறைவேறவில்லையென்றால் தாவீது தன்னுடைய ஆத்துமாவில் சோர்ந்துபோய்விடுவார். தாவீதுக்கு ஏமாற்றமுண்டாகும். தாவீது ஜனங்கள் மத்தியில் வெட்கப்பட்டுப்போவார். இப்படிப்பட்ட அவமானங்கள் எதுவும் தனக்கு வராதவாறு, கர்த்தர் தாமே தம்முடைய நீதியினிமித்தம், தன்னுடைய சத்துருக்களின் கையிலிருந்து, தன்னை விடுவிக்குமாறு, தாவீது கர்த்தரிடத்தில் பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீதின் நம்பிக்கை
1. உம்மை நம்பியிருக்கிறேன் (சங் 31:1,6).
2. நீர், என் கன்மலை (சங் 31:3).
3. நீரே என் கோட்டை
4. தேவரீரே எனக்கு அரண் (சங் 31:4).
5. உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் (சங் 31:5).
6. சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்
7. உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன் (சங் 31:7).
8. நீர் என் உபத்திரவத்தைப் பார்த்திருக்கிறீர்.
9. என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.
10. சத்துருவின் கையில் என்னை ஒப்புக் கொடுக்கமாட்டீர் (சங் 31:8).
11. என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்
12. நான் நெருக்கப்படுகிறேன் (சங் 31:9).
13. துக்கத்தினால் என் கண் கருகிப் போயிற்று.
14. என் ஆத்துமாவும், என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
15. என் பிராணன் சஞ்சலத்தினால் கழிந்து போயிற்று (சங் 31:10).
16. என் அக்கிரமத்தினாலே என்பெலன் குறைந்தது
17. என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையுமானேன் (சங் 31:11).
18. எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்.
19. வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகிஓடிப்போனார்கள்.
20. செத்தவனைப் போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன் (சங் 31:12).
21. உடைந்த பாத்திரத்தைப்போலானேன்.
22. அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன் (சங் 31:13).
23. திகில் என்னைச் சூழ்ந்து கொண்டது
24. அநேகர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்
25. நானோ, கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன் (சங் 31:14).
26. நீரே என் தேவன் என்று சொன்னேன்.
27. என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது (சங் 31:15).
28. கர்த்தாவே உம்மை நோக்கிக் கூப்பிட்டேன் (சங் 31:17).
29. உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது. (சங் 31:19).
30. உம்மை நம்புகிறவர்களுக்கு, நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற நன்மை பெரியது. (சங் 31:20).
31. உமது கூடாரத்திலே ஒளித்து வைத்துக் காப்பாற்றுகிறீர் (சங் 31:20).
32. மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைக்கிறீர்
33. கர்த்தர், அரணாண நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப் பண்ணினார் (சங் 31:21).
34. உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நினைத்தேன் (சங் 31:22).
35. என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்
36. பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் கர்த்தரில் அன்பு கூருங்கள். உண்மையானவனைக் கர்த்தர் தற்காப்பார் (சங் 31:23).
37. நீங்களெல்லாரும் திடமாயிருங்கள்
38. கர்த்தர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங் 31:24).
தாவீதின் விண்ணப்பங்கள்
1. நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும் (சங் 31:1).
2. உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்
3. உமது செவியை எனக்குச் சாயும் (சங் 31:2).
4. சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்
5. நீர், எனக்குப் பலத்த துருகமாயிரும்
6. எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்
7. உமது நாமத்தினிமித்தம் என்னை நடத்தியருளும் (சங் 31:3).
8. உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டும்
9. துன்மார்க்கர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கி விடும் (சங் 31:4).
10. எனக்கு இரங்கும் கர்த்தாவே (சங் 31:9).
11. என் சத்துருக்களின் கைக்கு என்னைத் தப்புவியும் (சங் 31:15).
12. என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கு என்னைத் தப்புவியும்
13. உமது முகத்தை என்மேல் பிரகாசிக்கப் பண்ணும் (சங் 31:16).
14. உமது கிருபையினாலே என்னை இரட்சியும்
15. நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் (சங் 31:17).
16. துன்மார்க்கர் வெட்கப்பட்டுப்போகும்படிச் செய்யும்
17. துன்மார்க்கர் பாதாளத்தில் மவுனமாயிருக்கப்பண்ணும்
18. பொய் உதடுகள் கட்டப்பட்டுப் போகும்படி செய்யும் (சங் 31:18)
நீர் எனக்கு அடைக்கலமான அரணாயிரும்
உமது செவியை எனக்குச்சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும் (சங் 31:2).
கர்த்தர் தாவீதோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையில் உண்மையுள்ளவர். தாவீதும் கர்த்தரை விசுவாசிக்கிறார். கர்த்தரே தாவீதுக்கு பலத்த துருகமாகயிருக்கிறார். கர்த்தர் கற்பாறையைப்போல வலிமையுள்ளவர். கற்பாறை சீக்கிரத்தில் தேய்ந்துபோகாது. அது அழிந்தும்போகாது. கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தில் கற்பாறையைப்போல உறுதியாயிருப்பார்.
கர்த்தரே நமக்குப் பெலனாயிருக்கவேண்டும். நம்முடைய சுயபலத்தை நாம் சார்ந்திராமல், கர்த்தருடைய பலத்தை மாத்திரமே நாம் நம்பி சார்ந்திருக்கவேண்டும். நாம் கர்த்தரை நம்பும்போது அவர் நம்மைப் பெலப்படுத்துவார். நம்முடைய பலவீனத்தில் கர்த்தருடைய பெலன் நம்மைப் பூரணமாய் இடைக்கட்டித்தாங்கும். கர்த்தர் நமக்கும் பெலன்கொடுப்பார். தம்முடைய பெலனை நமக்காகவும் வெளிப்படுத்துவார்.
தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். கர்த்தரிடத்தில் தன்னுடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுக்கிறார். கர்த்தர் தாமே தம்முடைய செவியை தனக்குச் சாய்த்து, சீக்கிரமாய்த் தன்னைத் தப்புவிக்குமாறு தாவீது பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதுக்கு மரண ஆபத்து மிகவும் அருகாமையில் வந்திருக்கிறது. சிறிது காலதாமதம் ஏற்பட்டாலும் தாவீதின் ஜீவனுக்கு மரணம் நேரிடும்.
கர்த்தர் தம்முடைய கிருபையினால், தமக்கு ஏற்ற வேளையில் தம்முடைய பிள்ளைகளுக்கு உதவி செய்வார். தாவீதோ மிகவும் அதிகமான நெருக்கத்திலிருப்பதினால், கர்த்தர் சீக்கிரமாய் தன்னைத் தப்புவிக்குமாறு கர்த்தரை அவசரப்படுத்துகிறார். கர்த்தர் நீதியுள்ளவர். நியாயாதிபதி தன்னுடைய நீதியை காலதாமதமில்லாமல் நிறைவேற்றவேண்டும். காலதாமதமாய் நிறைவேற்றப்படும் நீதி பெலனற்றதாயிருக்கும்.
கர்த்தரே தாவீதுக்கு அடைக்கலமான அரணாயிருக்கிறார். கர்த்தரிடத்தில் நாம் அடைக்கலமாய் வரும்போது, அவரே நமக்கு அரணாகயிருந்து நம்மைப் பாதுகாக்கிறார். சத்துருக்கள் கர்த்தரை மீறி நம்மைத் தொடமுடியாது. தாவீது கர்த்தருடைய பாதுகாப்பையும், அடைக்கலத்தையும் உணர்ந்தவராக, ""நீர் எனக்கு அடைக்கலமான அரணாயிரும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்.
கர்த்தரின் குணங்கள்
1. கர்த்தர் பலத்த துருகம்; கன்மலையுமானவர் (சங் 31:2-3)
2. அடைக்கலமான அரண் (சங் 31:2)
3. கோட்டை (சங் 31:3)
4. கர்த்தர் சத்தியபரர் (சங் 31:5)
5. கர்த்தர் (சங் 31:1, 9, 14, 17, 21)
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே
என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும் (சங் 31:3).
கன்மலையும் கோட்டையும் உறுதியானது. அவை அசைவதுமில்லை. அசைக்கப்படுவதுமில்லை. இயற்கையாகவே கன்மலை பூமியில் உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். கன்மலை இயற்கையான பாதுகாப்பு. கோட்டை செயற்கையான பாதுகாப்பு. இவை இரண்டுமே நம்மைப் பாதுகாக்கப் பலனுள்ளவை. தாவீது உலகப்பிரகாரமான கன்மலையையோ, கோட்டையையோ நம்பவில்லை. அவர் கர்த்தரை மாத்திரம் நம்புகிறார். கர்த்தரே தன்னுடைய கன்மலையும், தன்னுடைய கோட்டையுமாயிருக்கிறார் என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறார்.
நம்முடைய ஆவிக்குரிய பிரயாணத்தில் நமக்கு வழிகாட்டி தேவை. நமக்குப் பாதை சரியாகத் தெரிந்தால்தான் நம்முடைய இலக்கை நோக்கி நம்மால் முன்னேறிச் செல்லமுடியும். பாதை தவறிப்போய்விட்டால் இலக்கை அடையமுடியாது. தாவீதுக்கு கர்த்தரே வழிகாட்டியாகயிருக்கிறார். கர்த்தரே தாவீதை வழிநடத்துகிறார். கர்த்தர் தம்முடைய நாமத்தினிமித்தம், தனக்கு வழிகாட்டி, தன்னை நடத்தியருளவேண்டுமென்று தாவீது பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார்.
கர்த்தர் நம்மை வழிநடத்தும்போது, அவருடைய வழிநடத்துதலுக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும். கர்த்தருடைய வழிநடத்துதல் நமக்கு வேண்டுமென்று விசுவாசத்தோடு ஜெபம்பண்ணவேண்டும். கர்த்தர் தாமே நம்முடைய கரத்தைப் பற்றிக்கொண்டு, நம்மை வழிநடத்தும்போது, நமக்குப் பாதுகாப்பு உண்டு. கர்த்தருடைய வழிநடத்துதலினால், நாம் பாதை மாறாமல், நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற இலக்கை, சென்றடையலாம்.
தேவரீரே எனக்கு அரண்
அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண் (சங் 31:4).
தாவீதுக்கு விரோதமாய் அவருடைய சத்துருக்கள் வலைகளை வைத்திருக்கிறார்கள். அந்த வலைகளில் தாவீது சிக்கிக்கொள்வதற்கு வாய்ப்புள்ளது. தாவீது எவ்வளவுதான் கவனமாய் நடந்தாலும், சத்துருக்களின் வலையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகையினால் தாவீது தன்னுடைய சுயபலனை நம்பவில்லை. கர்த்தரை மாத்திரமே நம்புகிறார். தன்னுடைய சத்துருக்கள், தனக்கு மறைவாய் வைத்த வலைக்கு, தன்னை நீங்கலாக்கிவிடுமாறு, தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீது சத்துருக்களின் வலையில் சிக்கிக்கொண்டாலும், கர்த்தர் தம்முடைய வல்லமையினால், தாவீதை அவர் சிக்கிக்கொண்ட வலையிலிருந்து பத்திரமாகத் தூக்கி மீட்டுவிடுவார்.
தாவீது எப்போதுமே கர்த்தருடைய சித்தத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறவர். எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது என்று தாவீது ஆவிக்குரிய அமைதியிலிருப்பார். சத்துருக்களின் வலையில் சிக்கிக்கொள்வது கர்த்தருடைய சித்தமாகயிருக்குமானால், அது நிறைவேறட்டும் என்று நீடிய பொறுமையோடிருப்பார்.
ஆனால், இப்போதோ தாவீது தன்னுடைய ஜீவனுக்காக விண்ணப்பம்பண்ணுகிறார். தன்னுடைய சத்துருக்கள் தனக்கு மறைவாய் வைத்த வலைக்குத் தன்னை நீங்கலாக்கிவிடுமாறு ஜெபம்பண்ணுகிறார். தன்னுடைய ஆவியைக் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார். நம்முடைய ஆவி கர்த்தருடைய கரத்திலிருக்கும்போது அது பாதுகாப்பாயிருக்கும். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும், நம்முடைய ஆவியையும் சரீரத்தையும் கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும். தாவீது கர்த்தரிடத்தில் தன்னுடைய ஆவியை ஒப்புக்கொடுக்கும்போது, ""தேவரீரே எனக்கு அரண்'' என்று சொல்லுகிறார். கர்த்தரே தாவீதுக்குப் பாதுகாப்பாயிருக்கிறார். தம்மை நம்புகிற பிள்ளைகள் எல்லோருக்கும், தமக்குக் கீழ்ப்படிகிற பிள்ளைகள் எல்லோருக்கும் கர்த்தரே அரணாகயிருக்கிறார். கர்த்தரே நமக்குப் பாதுகாப்பாகயிருக்கிறவர். கர்த்தர் நமக்கு அரணாயிருக்கும்போது தீங்கு நம்மை அணுகாது.
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர் (சங் 31:5).
தாவீது இப்போது மிகுந்த நெருக்கத்திலிருக்கிறார். அவருடைய ஜீவனுக்கு ஆபத்து உண்டாயிருக்கிறது. மரணம் அவரை நெருங்கி வந்திருக்கிறது. மரணத்தின் வாசலில் தாவீது நிற்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ""உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்'' என்று கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு சொல்லுகிறார். தன்னுடைய ஜீவனுக்கு ஆபத்து வந்தாலும், தாவீது தன்னுடைய ஆவியைக் குறித்தும் ஆத்துமாவைக் குறித்தும் மிகுந்த கரிசனையோடிருக்கிறார். தன்னுடைய சரீரத்தைவிட, தன்னுடைய ஆவியும் ஆத்துமாவுமே முக்கியமானது என்பது தாவீதுக்குத் தெரியும்.
நம்முடைய சரீரத்திற்கு பல வேதனைகளும், தீங்குகளும் உண்டாகலாம். சரீரத்திற்கு பாடுகளும் உபத்திரவங்களும் வரலாம். சரீரம் கஷ்டப்படும்போது நம்முடைய ஆத்துமாவைக்குறித்து நாம் மிகுந்த கரிசனையோடிருக்கவேண்டும். உலகப்பிரகாரமான காரியங்களினால் நாம் நெருக்கப்படும்போது, நம்முடைய ஆத்துமாவைக்குறித்து நாம் கவலைப்படவேண்டியதில்லை என்று ஒரு சிலர் தவறாக உபதேசம்பண்ணுகிறார்கள். கர்த்தரோ நம்முடைய ஆத்துமாவுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்று உபதேசம் செய்கிறார்.
நாம் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், நம்முடைய ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால், நமக்கு பேரிழப்பு உண்டாகும். நம்முடைய பொறுமையினால் நம்முடைய ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளவேண்டும் (லூக் 21:19). தன்னுடைய ஆவியையும் ஆத்துமாவையும் எப்படி காத்துக்கொள்வது என்று தாவீது யோசித்துப் பார்க்கிறார். தன்னுடைய ஆவியை கர்த்தருடைய கையில் ஒப்புவிப்பதே, தன்னுடைய ஆவிக்கும், ஆத்துமாவுக்கும் பாதுகாப்பானது என்பதை தாவீது உணர்ந்துகொள்கிறார்.
கர்த்தர் சத்தியபரராயிருக்கிறார். அவர் நீதிபரராகவும் இருக்கிறார். கர்த்தர் தம்முடைய நீதியினால், தாவீதின் சத்துருக்களிடமிருந்து அவரை விடுவித்திருக்கிறார். சத்தியபரராகிய கர்த்தர், தாவீதின் சத்துருக்களிடமிருந்து, அவருடைய ஆத்துமாவையும், ஆவியையும் மீட்டுக்கொண்டிருக்கிறார்.
வீண்மாயைகளைப் பற்றிக்கொள்கிறவர்கள்
வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன் (சங் 31:6).
மனுபுத்திரரில் ஒரு சிலர் தங்கள் சுயபலத்தை நம்புகிறார்கள். அவர்களுடைய மாம்ச பலமே அவர்களுக்கு பெரும்பலமாகத் தெரிகிறது. மாம்ச பெலம் வீணானது. இது மாயையானது. தங்கள் மாம்சபலத்தை நம்புகிறவர்கள் வீண்மாயைகளைப் பற்றிக்கொள்கிறவர்கள். இவர்கள் விக்கிரகாராதனைக்காரர்கள். விக்கிரகங்கள் தங்களுக்கு உதவிசெய்யும் என்று நம்புகிறார்கள். ஆனால் விக்கிரகங்கள் மாயையானவை. அவற்றிற்கு ஜீவன் இல்லை. பெலனில்லை. அவற்றால் ஒரு உதவியும் செய்யமுடியாது.
விக்கிரகாராதனைக்காரர்கள் குறிசொல்லுகிறவர்களை நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் கற்பனைகளை பொய்யாய்ப்பேசுகிறவர்கள். வீண்மாயையைப் பற்றிக்கொள்கிறவர்கள் விக்கிரங்களையும், குறிசொல்லுகிறவர்களையும் நம்பி அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.
தாவீது வீண்மாயைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை வெறுக்கிறார். அவர்களைப் பின்பற்ற மறுக்கிறார். தாவீது கர்த்தரை மாத்திரமே நம்பியிருக்கிறார். கர்த்தர் மாத்திரமே ஜீவனுள்ள தேவன். தம்மை நம்புகிறவர்களுக்கு அவர் பெலன் கொடுப்பார். தம்முடைய பிள்ளைகளுக்கு கர்த்தரே பெலனாயிருப்பார்.
உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்
உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப்பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர் (சங் 31:7).
தாவீது கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார். அவருடைய கிருபையை நம்புகிறார். தாவீது தேவனிடத்தில் வைத்திருக்கும் நம்பிக்கை அவருக்கு ஆறுதலாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. இதனிமித்தமாய் தாவீது கர்த்தருடைய கிருபையில் களிகூர்ந்து மகிழுகிறார்.
கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமில்லை. மனுஷன் முகத்தைப் பார்த்தாலும் கர்த்தர் நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார். அவர் தாவீதின் உபத்திரவத்தைப் பார்க்கிறார். அவருடைய ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார். தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய உபத்திரவத்தையும், ஆத்தும வியாகுலங்களையும் சொல்லுவதற்கு முன்பாகவே, கர்த்தர் அவற்றை அறிந்திருக்கிறார். கர்த்தருடைய சமுகத்தில் நாம் ஜெபிப்பதற்கு முன்பாகவே, நம்முடைய வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் நாம் ஏறெடுப்பதற்கு முன்பாகவே, கர்த்தர் அவற்றை அறிந்திருக்கிறார். நாம் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாய் நமக்கு உத்தரவு கொடுக்கிறார்.
சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமலிருக்கிறீர்
சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர் (சங் 31:8).
தாவீதுக்கு அவருடைய வாழ்க்ககையில் பலவிதமான அனுபவங்கள் உண்டாயிற்று. தன்னுடைய ஜீவியகாலம் முழுவதிலும் தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். கர்த்தரை நம்பியிருப்பதினால் தாவீது வெட்கப்பட்டுப்போய்விடவில்லை. கர்த்தர் தாவீதைப்பற்றி நன்றாய் அறிந்திருக்கிறார். தாவீதின் உபத்திரவங்களை கர்த்தர் பார்க்கிறார். அவருடைய ஆத்தும வியாகுலங்களை கர்த்தர் அறிந்திருக்கிறார். தாவீதை அவருடைய ஆபத்துக்களிலிருந்தும், நெருக்கங்களிலிருந்தும் எப்படி, எப்போது விடுவிக்கவேண்டும் என்பது கர்த்தருக்குத் தெரியும். கர்த்தர் தம்மை நம்புகிற பிள்ளைகளை ஒருபோதும் கைவிடமாட்டார்.
சத்துருக்கள் தாவீதை சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தாவீதைப் பிடித்து அவருடைய ஜீவனைக் கொன்றுபோடவேண்டுமென்று, அவரை நெருங்கி வருகிறார்கள். கர்த்தரோ தாவீதுக்கு அடைக்கலமான அரணாயிருக்கிறார். பலத்த துருகமாயிருக்கிறார். இதனால் தாவீதின் சத்துருக்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை. கர்த்தர் தாவீதை அவருடைய சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளை, கர்த்தர் ஒப்புக்கொடுத்தால் மாத்திரமே, சத்துருவால் நம்மைப் பிடிக்க முடியும். கர்த்தருடைய அனுமதியில்லாமல், சத்துருவால் நம்மைத் தொடமுடியாது.
தாவீதின் சத்துருக்கள் அவரை நெருக்குகிறார்கள். அசையமுடியாதபடி ஒடுக்குகிறார்கள். ஆனால் கர்த்தரோ தாவீதை, சத்துருக்களின் கைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்கிறார். தாவீதின் நெருக்கத்திலிருந்து அவருக்கு பெரிய விடுதலையைக் கொடுக்கிறார். தாவீதின் பாதங்களை விசாலத்தில் நிறுத்துகிறார். இதனால் தாவீது சுதந்தரமாயும், சுயாதீனமாயும், கர்த்தருடைய சமுகத்தில் நடப்பதற்கு அவருக்கு கிருபை கிடைத்திருக்கிறது. அவருடைய பாதங்கள் நெருக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விசாலத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. தாவீது பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதுவும் கர்த்தருடைய கிருபையே. கர்த்தருடைய கிருபையை நம்புகிறவர்களுக்கு அவர் அரணாகயிருக்கிறார்.
கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்
எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று. என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள். செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன். அநேகர் சொல்லும் அவதூறைக்கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்; (சங் 31:9-13).
தாவீது இதுவரையிலும் தேவனுடைய நீதியைப்பற்றி பேசினார். ""உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்'' (சங் 31:1) என்று தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணினார். இப்போதோ கர்த்தருடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் தாவீது கெஞ்சி மன்றாடுகிறார். தாவீது மிகுந்த நெருக்கத்திலிருக்கிறார். எல்லா பக்கத்திலிருந்தும் அவருக்கு ஆபத்து உண்டாயிற்று. தன்னுடைய சுயபலத்தினால் இந்த ஆபத்துக்களிலிருந்து தன்னால் தப்பிக்க முடியாது என்பது தாவீதுக்கு நன்றாகத் தெரியும். தேவனுடைய கிருபையும் இரக்கமும் தனக்கு இருந்தால் மாத்திரமே, தன்னுடைய சத்துருக்களிடமிருந்து தாவீதால் தப்பிக்க முடியும்.
தாவீது கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ண ஆரம்பிக்கும்போது, ""எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்'' என்று கர்த்தருடைய சமுகத்தில் கதறி அழுகிறார் (சங் 31:9). அவருடைய உபத்திரவங்கள் அவரை வருத்தப்பட வைக்கிறது. துக்கத்தினால் அவர் வருத்தங்களின் மனுஷனாகயிருக்கிறார். தாவீது தன்னுடைய ஜீவியத்தில் இதுவரையிலும் இந்த அளவுக்கு சோர்ந்துபோயிருந்ததில்லை. பயப்படுவதும், வருத்தப்படுவதும் தாவீதின் சுபாவமல்ல. ஆனால் இங்கோ தனக்கு மிகுந்த நெருக்கமும், ஆபத்தும் ஏற்பட்டிருப்பதினால் தாவீதின் இருதயம் கலங்குகிறது.
தாவீது நெருக்கப்பட்ட சமயங்கள்
1. தாவீது சவுலோடு தங்கி இருந்த சமயம் சவுல் தாவீதை 21 தடவைகள் கொலை பண்ண முயற்சி பண்ணினார் (1சாமு 18:1-26:25).
2. சத்துருக்கள் நடுவே தங்குதல் (1சாமு 27:1-30:31)
3. யுத்தங்கள் (2சாமு 5:1-10:19)
4. பின்மாற்றம் (2சாமு 11:1-12:31)
5. குடும்பப் பிரச்சனைகள் (2சாமு 13-14)
6. அப்சலோமின் கலகம் (2சாமு 15-20)
7. தாவீதின் மற்ற பிரச்சனைகள் (2சாமு 21; 2சாமு 24)
தாவீது சங்கீதங்களை எழுதுவதில் வல்லவர். எல்லாவிதமான இசைக்கருவிகளையும் அவர் நேர்த்தியாக இசைப்பார். அவர் ஆடுகளை மேய்க்கிற சிறுவனாகயிருந்தபோதே அவரிடத்தில் துணிச்சலும் வீரமும் இருந்தது. ஆடுகளை பீறிப்போட வந்த ஓநாய்களோடும் சிங்கங்களோடும் தாவீது யுத்தம் செய்திருக்கிறார். ராட்சதனாகிய கோலியாத்தை தாவீது ஜெயித்திருக்கிறார். தாவீது தன்னுடைய இருதயத்தில் எப்போதுமே மிகுந்த சந்தோஷத்தோடிருப்பார். ஆரம்ப நாட்களில் அவருக்கு துக்கம் என்றால் என்ன என்றே தெரியாது.
ஆனால் இப்போதோ தாவீது மிகுந்த துக்கத்தோடு கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். அவருடைய கண்களில் கண்ணீர் நிரம்பியிருக்கிறது. கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக பெருமூச்சுவிட்டு அழுகிறார். ""துக்கத்தினால் என் கண்ணும், என் ஆத்துமாவும், என் வயிறுங்கூட கருகிப்போயிற்று'' என்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் அழுது புலம்புகிறார். அவருடைய இருதயத்திலும் சிந்தையிலும் வருத்தமுண்டாயிற்று. இந்த வருத்தம் அவருடைய சரீரத்தையும் பாதித்திருக்கிறது.
தன்னுடைய அக்கிரமத்தினால் தன் பெலன் குறைந்து, தன்னுடைய எலும்புகளும் உலர்ந்துபோயிற்று என்று தாவீது கர்த்தரிடத்தில் சொல்லுகிறார் (சங் 31:10). தாவீதின் சிநேகிதர்கள் அவரிடத்தில் அன்புகூரவில்லை. தாவீதின் வேதனையைப் பார்த்து அவர்கள் ஆறுதல் சொல்லவும் வரவில்லை. அவர்கள் ஆறுதல் சொல்லாமல் அவரைக் குறித்து ஏளனமாய்ப் பேசுகிறார்கள். தாவீதின் பாடுகளுக்கு அவருடைய அக்கிரமமே காரணம் என்று தாவீதைக் குற்றப்படுத்துகிறார்கள். இதனால் தாவீதின் பிராணன் சஞ்சலத்தினாலும், அவருடைய வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று.
தாவீதின் சிநேகிதர்கள் தாவீதை பார்க்கும்போது அவரைவிட்டு விலகி ஓடிப்போய்விடுகிறார்கள் (சங் 31:11). தாவீது தன்னுடைய சிநேகிதர்களுக்கு முன்பாகவும், சத்துருக்களுக்கு முன்பாகவும் பரிதாபமாக நிற்கிறார். தன்னுடைய அயலாருக்கு அவர் நிந்தையாகவும், தனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமாயிருக்கிறார். வீதியிலே தாவீதைக் கண்டவர்கள் அவருக்கு விலகி ஓடிப்போய்விடுகிறார்கள். தாவீதுக்கு ஆறுதல் சொல்ல மெய்யான சிநேகிதர் ஒருவருமில்லை.
தாவீது செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டிருக்கிறார் (சங் 31:12). தாவீதைப் பார்க்கிறவர்களெல்லோரும், அவரை ஒரு உடைந்த பாத்திரத்தைப்போல பார்க்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் நம்முடைய சிநேகிதர்களும் இப்படித்தான் இருப்பார்கள். சிநேகிதர்களை நம்புவதற்குப் பதிலாக நாம் கர்த்தரையே நம்பவேண்டும். நமக்கு ஆபத்துக்கள் வரும்போது நம்முடைய சிநேகிதர்கள் நமக்கு உதவிபுரிய வரவேண்டும். அவர்கள் நமக்கு ஆறுதலாயிருக்கவேண்டும்.
ஆனால் நமக்கு பாடுகளும், பிரச்சனைகளும், வேதனைகளும், உபத்திரவங்களும் வரும்போது அவர்களோ நம்மை விட்டு விலகி ஓடிப்போய்விடுகிறார்கள். நமக்கு விரோதமாக தூஷண வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.
நாம் தாழ்ந்திருக்கும்போது, நம்முடைய சத்துருக்களுக்கு மாத்திரமல்ல, நம்முடைய அயலாருக்கும் நாம் நிந்தையாகயிருப்போம். நமக்கு அறிமுகமானவர்களுக்குக்கூட நாம் அருக்களிப்புமாயிருப்போம்.
தாவீதுக்கு விரோதமாக அநேகர் அவதூறு சொல்லுகிறார்கள். அந்த அவதூறுகள் எல்லாவற்றையும் தாவீது தன் செவிகளினால் கேட்கிறார் (சங் 31:13). தாவீதுக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் சதிஆலோசனை பண்ணுகிறார்கள். அவர்களுடைய சதிமோசங்கள் தாவீதுக்கும் தெரியவருகிறது. இதனால் திகில் அவரைச் சூழ்ந்து கொள்கிறது. சத்துருக்கள் தாவீதின் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள். தாவீதின்மீது கல்லெறிய எல்லோரும் தங்கள் கைகளில் கல்லையெடுத்திருக்கிறார்கள். இதனால் தாவீதுக்கு எல்லா பக்கத்திலிருந்தும் பயம் சூழ்ந்துகொள்கிறது.
கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன்
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். என் காலங்கள் உமது கரத்தி-ருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும் (சங் 31:14,15).
தாவீதை உபத்திரவங்களும், இக்கட்டுக்களும், திகில்களும் சூழ்ந்திருந்தாலும், இவையெல்லாவற்றிற்கும் மத்தியில் தாவீது கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறார். தன்னைச் சுற்றியிருக்கிற ஆபத்தான சூழ்நிலைகளைப் பார்க்காமல் தாவீது கர்த்தரையே நோக்கிப் பார்க்கிறார். சத்துருக்களின் சதிஆலோசனைகள் மூலமாய் தனக்கு ஆபத்து வரும் என்று நம்பாமல், இந்த ஆபத்துக்களிலிருந்து தன்னை விடுவிக்கிற கர்த்தரையே தாவீது நம்பியிருக்கிறார். ஆபத்துக்களில் அமிழ்ந்து போகாதவாறு கர்த்தர் தாவீதை கரம்பிடித்து தூக்கிவிடுவார்.
தாவீதின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாக சதிஆலோசனை செய்கிறார்கள். மனுஷர் மத்தியிலே தாவீதுக்கு இருந்த நற்பெயரை அவர்கள் கெடுத்துப்போட்டார்கள். தாவீது சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து எல்லாவற்றையும் இழந்துவிட்டார். இவற்றை தாவீதின் சத்துருக்கள் அவரிடமிருந்து அபகரித்துக்கொண்டார்கள். உலகப்பிரகாரமான காரியங்களை மாத்திரமே சத்துருக்களால் அபகரிக்க முடிந்தது. தாவீது கர்த்தரிடத்தில் சமாதானமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறார். இந்த தெய்வீக சமாதானத்தையும் ஆறுதலையும் தாவீதின் சத்துருக்களால் அவரிடத்திலிருந்து அபகரித்துக்கொள்ள முடியவில்லை.
தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். இந்தநம்பிக்கையினிமித்தமாய் அவருக்கு ஆறுதல் உண்டாயிருக்கிறது. தாவீதின் சத்துருக்களினால் அவருடைய நம்பிக்கையை அசைக்க முடியவில்லை. கர்த்தரை நம்புகிற நம்பிக்கையிலிருந்து, அவர்களால் தாவீதை பிரிக்க முடியவில்லை. தாவீது விசுவாசத்தினால் கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கிறார். ""நீரே என் தேவன்'' என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
தாவீது கர்த்தரை தன்னுடைய தேவனாக தெரிந்துகொண்டார். கர்த்தரும் தாவீதை தம்முடைய பிள்ளையாக அங்கீரித்திருக்கிறார். தாவீது இனிமேல் கர்த்தருக்குரியவர். இதனால் தாவீது விசுவாசத்தோடு, ""என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது'' என்று கர்த்தரிடத்தில் சொல்லுகிறார். தாவீதைப்போல நமக்கும், கர்த்தரே நம்முடைய தேவனாகயிருக்கவேண்டும். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கவேண்டும். நம்முடைய ஜீவனை கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும்.
நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கும்போது, அவரால் நமக்கு உதவிபுரிய முடியும். கர்த்தர் நம்முடைய தேவனாகயிருக்கும்போது, அவரால் நம்மைப் பாதுகாக்க முடியும். நமக்கு உதவிசெய்வதற்கு நம்முடைய தேவன் இருக்கும்போது, நாம் கவலைப்படவேண்டிய அவசியம் எதுவுமில்லை. எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று நாம் அவருடைய சமுகத்தில் அமைதியும் ஆறுதலும் பெற்றுக்கொள்ளலாம்.
தாவீது தன்னுடைய காலங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். தாவீது கர்த்தரைத் தன்னுடைய தேவனாக நம்புகிறார். அந்த நம்பிக்கையோடு, ""என் சத்துருக்களின் கைக்கும், என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்'' என்று பணிவோடு விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் தாவீதின் ஜெபத்தைக் கேட்பார். அவருடைய ஜெபத்திற்குப் பதில் கொடுப்பார். தாவீதின் சத்துருக்களின் கையிலிருந்து கர்த்தர் அவரைத் தப்புவிக்கச் செய்வார்.
கர்த்தருடைய ஊழியக்காரர்
நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும். கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப்பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும். நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக (சங் 31:16-18).
தாவீது கர்த்தரையே நம்பி, அவருடைய சமுகத்தில் விசுவாசத்தோடு தன்னுடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுக்கிறார். நம்முடைய காலங்கள் எல்லாம் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. இந்த வாக்கியத்திற்கு ""நம்முடைய வாய்ப்புக்களெல்லாம் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது என்று வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம் பண்ணுகிறார்கள்.
நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருப்பதினால், நம்முடைய ஆபத்துக்களிலிருந்து நம்மை மீட்பதற்கு சரியான காலம் எது என்பது கர்த்தருக்குத் தெரியும். நாம் கர்த்தருடைய காலத்திற்காக பொறுமையோடு காத்திருக்கவேண்டும். நம்முடைய காலங்களை நம்முடைய கரத்தில் எடுத்துக்கொண்டு, நமக்கு இஷ்டமான பிரகாரம் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. கர்த்தருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து, கர்த்தருடைய சித்தம் நம்மில் நிறைவேற, நாம் விசுவாசத்தோடு காத்திருக்கவேண்டும்.
தாவீது என்கேதி வனாந்தரத்தில் இருந்தார். அப்போது சவுல் தாவீதைத் தேடி அங்குபோனார். சவுல் ஒரு கெபியிலிருந்தபோது, தாவீதும் அவருடைய மனுஷரும் அந்த கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது தாவீதின் மனுஷர், தாவீதை நோக்கி ""இதோ நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இது தானே'' என்றார்கள் (1சாமு 24:1-5).
தாவீதோ தன்னுடைய மனுஷர் சொன்னபடி செயல்பட மறுத்துவிட்டார். இது கர்த்தருடைய நாளல்ல என்பது தாவீதுக்குத் தெரியும். ""கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன் மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் என்னைக் காப்பாராக, அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்'' (1சாமு 24:6) என்று தாவீது தன்னுடைய மனுஷருக்கு பிரத்தியுத்தரம் சொன்னார்.
தாவீது இப்போது சவுலைக் கொன்றால் அது தாவீதுக்குப் பாவமாகயிருக்கும். தாவீது தன்மீது எந்தவிதமான பாவமும் இல்லாமல் தப்பித்துக்கொள்ள விரும்புகிறார். தாவீதின் காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. தாவீது அந்த காலத்திற்காக காத்திருக்கிறார். கர்த்தருடைய காலமே நல்லகாலம். நாம் எதை செய்தாலும் கர்த்தருக்குச் சித்தமான காலத்தில், கர்த்தருக்குச் சித்தமான காரியங்களைச் செய்யவேண்டும்.
தாவீதுக்கு கர்த்தருடைய இரட்சிப்பு தேவைப்படுகிறது. கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்மை இரட்சிக்கிறவர். தாவீது தன்னுடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கும்போது, ""நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிப்பண்ணி உமது கிருபையினாலே என்னை இரட்சியும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்.
தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். கர்த்தரை நம்புகிற பிள்ளைகள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போகமாட்டார்கள். கர்த்தரை நம்பாத துன்மார்க்கரே வெட்கப்பட்டுப்போவார்கள். ""துன்மார்க்கர் வெட்கப்பட்டு பாதாளத்தில் மௌனமாயிருக்கட்டும்'' என்று தாவீது கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்கிறார்.
துன்மார்க்கர் தாவீதுக்கு விரோதமாய்த் தூஷண வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அவர்கள் தாவீதுக்கு விரோதமாக பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிறார்கள். அவர்களுடைய உதடுகள் பொய் உதடுகள். தாவீதால் அவர்களுடைய உதடுகளை அடக்க முடியவில்லை. அதை அவரால் கட்டிப்போட முடியவில்லை. கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பது தாவீதுக்குத் தெரியும். தனக்கு விரோதமாய்த் துன்மார்க்கர் தூஷண வார்த்தைகளைப் பேசும்போது, அந்த வார்த்தைகளில் சிறிதும் உண்மையில்லை என்பது தாவீதுக்குத் தெரியும்.
தாவீது தனக்கு விரோதமாகப் பேசுகிறவர்களுக்காக கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறார். ""நீதிமானுக்கு விரோதமாய் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய்உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக'' என்று கர்த்தருடைய சமுகத்தில் சொல்லுகிறார். பொய் பேசுவதினால் ஒருபாவமும் இல்லையென்று ஒரு சிலர் நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் துணிகரமாய்ப் பொய்பேசி, துணிகரமான பாவத்தைச் செய்கிறார்கள்.
பொய் பேசுகிறவர்களின் உதடுகள் ஒருபோதும் சும்மாயிருப்பதில்லை. அவர்கள் நல்லோரைக் குறித்தும், தீயோரைக் குறித்தும் பொய்யான வார்த்தைகளைப் பேசுவார்கள். நீதிமானுக்கு விரோதமான கபடான வார்த்தைகளைப் பேசுவார்கள். அவர்களுடைய வார்த்தையில் உண்மையிருக்காது. அவர்கள் பேசுவதை எல்லோரும் கேட்பார்கள். நீதிமானும் கேட்பார். கர்த்தரும் கேட்பார்.
நீதிமானால் பொய் பேசுகிறவர்களுக்கு எதிர்த்து நிற்க முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், நமக்கு விரோதமாய்ப் பொய் பேசுகிறவர்களை, தாவீதைப்போல கர்த்தருடைய சமுகத்தில் ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். ""அவர்களுடைய பொய்உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக'' என்று ஜெபம்பண்ணவேண்டும்.
கர்த்தர் ஒளித்து வைத்து காப்பாற்றுகிறார்
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர் (சங் 31:19,20).
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மை செய்கிறார். கர்த்தருடைய நன்மையை தாவீது இங்கு விரிவாகச் சொல்லுகிறார். கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர். அவர் நல்லரென்பதை எல்லோரும் ருசித்துப் பார்க்கலாம். ஆனாலும் அவர் இஸ்ரவேலுக்கு விசேஷித்த பிரகாரமாக நல்லவராயிருக்கிறார். தமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக தம்மை நம்புகிறவர்களுக்கும் கர்த்தர் அநேக நன்மைகளை உண்டுபண்ணி வைத்திருக்கிறார். கர்த்தருடைய நன்மைகளெல்லாம் பெரிதாயிருக்கிறது. கர்த்தருடைய கிருபையை விசுவாசித்து, அதில் சார்ந்திருக்கிறவர்களுக்கு தெய்வீக சமாதானமும், தெய்வீக நன்மையும் உண்டாகும்.
தாவீது கர்த்தருடைய நன்மையைப்பற்றிச் சொல்லும்போது, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு பெரிதான நன்மைகளை உண்டுபண்ணி வைத்திருப்பதாகச் சொல்லுகிறார். கர்த்தர் நமக்கு நன்மைகளைச் சேமித்து வைத்திருக்கிறார். நமக்காக நன்மை சேமிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய நன்மையை நாம் அனுபவிக்கும் வண்ணமாக, கர்த்தர் நம்முடைய கரங்களிலும் நன்மைகளைக் கொடுக்கிறார். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு, அவருடைய வாக்குத்தத்தின் பிரகாரம், நன்மைகள் உண்டாகும்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நித்திய உடன்படிக்கையை செய்திருக்கிறார். இதன் பிரகாரமாய் அவர் நமக்கு நித்திய ஆசீர்வாதங்களையும், நித்திய பொக்கிஷங்களையும் உண்டுபண்ணி வைத்திருக்கிறார். அவற்றை நாம் விசுவாசத்தோடு பெற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கும், அவரை நம்புகிறவர்களுக்கும் மாத்திரமே அவருடைய நன்மை கிடைக்கும்.
நமக்கு கர்த்தருடைய நன்மை கிடைக்கவில்லையென்றால், அது நம்முடைய தப்பிதமேயல்லாமல், அது ஒருபோதும் கர்த்தருடைய தப்பிதமாகாது. ஏனெனில் கர்த்தர் நமக்கு தம்முடைய பெரிதான நன்மைகளை உண்டுபண்ணி வைத்திருக்கிறார். நாம் தான் அந்த நன்மையை, கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரை நம்பி பெற்றுக்கொள்ளவேண்டும். விசுவாசிக்காதவர்களுக்கு கர்த்தருடைய கிருபையுமில்லை. அவருடைய நன்மையுமில்லை.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை விசேஷித்த பிரகாரமாகப் பாதுகாக்கிறார். கர்த்தர் நம்மை தம்முடைய கூடாரத்திலே ஒளித்து வைத்து காப்பாற்றுகிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோருமே, கர்த்தரால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மனுஷருடைய அகங்காரத்திற்கு கர்த்தர் நம்மை தமது சமுகத்தின் மறைவிலே மறைத்து வைத்திருக்கிறார். துன்மார்க்கருடைய நாவுகளின் சண்டைக்கு கர்த்தர் நம்மை விலக்கிப் பாதுகாக்கிறார்.
கர்த்தர் தமது கூடாரத்திலே நம்மை ஒளித்து வைத்துக் காப்பாற்றுகிறார். நமக்கு விரோதமாய் எத்தனை சத்துருக்கள் வந்தாலும், அவர்களால் நம்மை கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் நாம் கர்த்தருடைய கூடாரத்திலே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறோம். நம்மைக் காப்பாற்றுவதற்காகவே கர்த்தர் நம்மை தம்முடைய கூடாரத்திலே ஒளித்து வைத்திருக்கிறார்.
கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவதற்கு பல்வேறு விதமான உபாயங்களை கையாளுகிறார். கர்த்தருடைய கிரியைகளெல்லாமே அவரை நம்புகிறவர்களுக்கு நன்மையாக இருக்கும். கர்த்தருடைய கூடார மறைவில் தங்கியிருக்கிறவர்கள் பாதுகாப்பாயிருப்பார்கள். கர்த்தருடைய செட்டைகளின் மறைவிலிருப்பதுதான் நமக்குப் பாதுகாப்பு.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாருக்கு என்னும் சம்பிரதிக்கும், எரேமியா தீர்க்கதரிசிக்கும் மனுஷர் மூலமாய் ஆபத்து உண்டாயிற்று. கர்த்தர் அவர்களுடைய சத்துருக்களிடமிருந்து, அவர்களை மறைத்துக்கொண்டார். ""பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியே-ன் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயே-ன் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளைகொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்'' (எரே 36:26)
கர்த்தர் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணுகிறார்
கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம். உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர் (சங் 31:21,22).
தாவீது கர்த்தருடைய நன்மைக்காக அவரை நன்றியோடு துதிக்கிறார். கர்த்தர் தமது கிருபையை தனக்கு அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால் தாவீது கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறார். தாவீது கர்த்தரிடத்திலிருந்து இவ்வளவு பெரிதான நன்மையை எதிர்பார்க்கவில்லை. தாவீது எதிர்பார்த்ததைவிட, கர்த்தர் அவருக்கு பெரிதான நன்மையைக் கொடுக்கிறார். தாவீது அதை நன்மையென்று சொல்லாமல், அதை ""கர்த்தருடைய கிருபை'' என்று சொல்லுகிறார்.
தாவீது, வனாந்தரத்திலே, தன்னுடைய ஜீவனுக்குப் பயந்து ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார். ஆனால் கர்த்தரோ தாவீதுக்கு அரணான நகரத்தில், தம்முடைய கிருபையை அவருக்கு விளங்கப்பண்ணுகிறார். அது தாவீதுக்கு அதிசயமாயிருக்கிறது. கர்த்தருடைய கிரியைகளெல்லாமே அற்புதங்களும் அதிசயமுமானது. கர்த்தர் தமது கிருபையை தனக்கு அதிசயமாய் விளங்கப்பண்ணினார் என்று அங்கீரித்து, தாவீது கர்த்தரை நன்றியோடு துதிக்கிறார்.
கர்த்தர் நமக்கு விசேஷித்த கிருபைகளையும், உதவிகளையும் செய்யும்போது, நாம் அவற்றிற்காக கர்த்தரை விசேஷித்த பிரகாரமாய்த் துதிக்கவேண்டும். தாவீதுக்கு பிரச்சனைகள் அதிகரித்தபோது அவருக்கு மனக்கலக்கமுண்டாயிற்று. மிகுந்த பயமுண்டாயிற்று. மனுஷரால் உண்டாகும் பயத்தைவிட, கர்த்தர் நமக்கு உண்டுபண்ணி வைத்திருக்கிற நன்மை மிகவும் பெரியது. கர்த்தருடைய நன்மையே வல்லமையுள்ளது.
தாவீதுக்கு மனக்கலக்கமுண்டானபோது, அவர் விசுவாசத்திலே சோர்ந்துபோய்விட்டார். விசுவாச வார்த்தைகளைச் சொல்லுவதற்குப் பதிலாக, அவிசுவாச வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ""உம்முடைய கண்களுக்கு முன்பாக வெட்டுண்டேன்'' என்று கூட சொல்லிவிட்டார். தாவீது இதை அவருடைய மனக்கலக்கத்திலே சொன்னார். தாவீதின் விசுவாசம் அவரை விட்டு நீங்கிப்போய்விட்டது. ஆனாலும் கர்த்தருடைய கிருபை தாவீதை விட்டு விலகவில்லை. தாவீது தன்னுடைய விசுவாசத்தில் தோல்வியடைந்துவிட்டார். கர்த்தரோ தம்முடைய வாக்குத்தத்தில் உண்மையுள்ளவராயிருக்கிறார்.
தாவீது தன்னுடைய மனக்கலக்கத்தில், அவிசுவாச வார்த்தைகளைச் சொன்னாலும், கர்த்தர் அவர்மீது இன்னும் அன்பாகவே இருக்கிறார். தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். கர்த்தர் அவருடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்கிறார். மனக்கலக்கத்திலே தாவீதைப்போல நாமும், அவிசுவாச வார்த்தைகளைப் பேசினாலும், கர்த்தரைவிட்டு விலகிப்போய்விடக்கூடாது. கர்த்தரை நோக்கிக் கூப்பிடவேண்டும். தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு கர்த்தருடைய கிருபை பெரிதாயிருக்கும். கர்த்தர் தமது கிருபையை நமக்கு அதிசயமாய் விளங்கப்பண்ணுவார்.
நாம் கர்த்தரை விட்டு விலகிப்போய்விட்டாலும், கர்த்தர் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார். நாம் கீழே விழுந்தாலும், கர்த்தருடைய கிருபையினால் எழும்பி நிற்போம். கர்த்தர் நம்மீது கிருபையும் அன்புமுள்ளவர். நாம் பாவிகளாகயிருக்கையிலேயே கர்த்தர் தமது அன்பை நமக்கு விளங்கப்பண்ணியிருக்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவிசுவாசத்திலும், மனக்கலக்கத்திலும் தகாத வார்த்தைகளைப் பேசிவிடக்கூடாது. விசுவாசத்தை விட்டுவிடக்கூடாது. கர்த்தரை நோக்கிக் கூப்பிடவேண்டும். கர்த்தர் மெய்யாகவே நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்டு அவற்றிற்குப் பதில்கொடுப்பார்.
கர்த்தர் செய்திருக்கிற காரியங்கள்
1. கர்த்தர் என்னை மீட்டுக்கொண்டார் (சங் 31:5).
2. என் உபத்திரவத்தை அறிந்திருக்கிறார் (சங் 31:7).
3. என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்
4. சத்துருவின் கையில் என்னை ஒப்புக் கொடுக்காமல் பாதுகாக்கிறார் (சங் 31:8).
5. என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினார்
6. கர்த்தர் நன்மையை உண்டுபண்ணி வைத்திருக்கிறார். (சங் 31:19).
7. கர்த்தரை நம்புகிறவர்களுக்கு நன்மையை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்
8. கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப் பண்ணினார் (சங் 31:21).
""உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்'' என்று தாவீது சொல்லுகிறார். நாமும் நமக்குப் பிரச்சனைகள் வரும்போது நமது மனக்கலக்கத்திலே நாம் கர்த்தரைக் குறை கூறுகிறோம். இது பாவம். இந்தப் பாவத்திலிருந்து நாம் மனந்திருந்த வேண்டும். யோபு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
கர்த்தரைத் தனது மனக்கலக்கத்திலே தூஷித்த தாவீது, இப்போது அவரை ஸ்தோத்திரம் பண்ணுகிறார். ""உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்'' என்று அறிக்கை செய்கிறார் (சங் 31:22).
கர்த்தருடைய பரிசுத்தவான்களே
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காது, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங் 31:23,24).
தாவீது சகல பரிசுத்தவான்களுக்கும் ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லுகிறார். ""கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்'' என்பதே தாவீதின் ஆலோசனை. கர்த்தரிடத்தில் அன்புகூருவதுதான் அவருடைய பரிசுத்தவான்களின் மெய்யான சுபாவம். கர்த்தரில் அன்புகூராதவர்கள் அவருடைய பரிசுத்தவான்களாயிருக்கமாட்டார்கள்.
தாவீது கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு இந்த ஆலோசனையைச் சொல்லுகிறார். நாம் கர்த்தரிடத்தில் இதுவரையிலும் எவ்வளவு அன்புகூருகிறோமோ, அதைவிட இன்னும் அதிகமாய் அன்புகூரவேண்டும். நம்முடைய அன்பை வார்த்தையினாலும் கிரியையினாலும் வெளிப்படுத்தவேண்டும். கர்த்தரிடத்தில் நாம் அன்புகூருவதற்கு சாட்சிகளாய் ஜீவிக்கவேண்டும்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு நல்லவராகவே இருக்கிறார். உண்மையானவனை கர்த்தர் தற்காத்துக்கொள்கிறார். அவனைப் பாதுகாக்கிறார். தம்முடைய பிள்ளைகளுக்கு விரோதமாக இடும்பு செய்கிறவர்களுக்கு, கர்த்தர் தாமே பூரணமாய்ப் பதிலளிப்பார். கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லோரும் திடமனதாயிருக்குமாறு தாவீது ஆலோசனை சொல்லுகிறார். ஏனெனில் கர்த்தர் தாமே நம்முடைய இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
நாம் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள். கர்த்தர் தமது கிருபையை நமக்கு அதிசமாய் விளங்கப்பண்ணவேண்டுமென்று நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். கர்த்தர் நமக்கு உண்டுபண்ணி வைத்திருக்கிற அவருடைய பெரிதான நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். கர்த்தர் நம்மை தம்முடைய கூடாரத்திலே ஒளித்து வைத்து காப்பாற்றும்படியாக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களாகிய நாம் சோர்ந்துபோய்விடக்கூடாது. திடமனதாயிருக்கவேண்டும். கர்த்தர் நம்முடைய இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் என்று விசுவாசிக்கவேண்டும். கர்த்தரை நம்புகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது.
ஏன் திட மனதாயிருக்க வேண்டும் என்பதற்குக் காரணங்கள்
1. கர்த்தர், தமக்கு பயந்தவர்களுக்கு பெரிதான நன்மையை உண்டு பண்ணி வைத்திருக்கிறார்.
2. மனுபுத்திரருக்கு முன்பாக தம்மை நம்புகிறவர்களுக்கு கர்த்தர் நன்மை செய்வார்.
3. மனுஷருடைய அகங்காரத்துக்கு மீட்டு தமது சமுகத்தின் மறைவிலே மறைந்திருக்கிறார். (சங் 31:20)
4. மனுஷருடைய நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, தமது கூடாரத்திலே ஒளித்து வைத்துக் காப்பாற்றுகிறார்.
5. தமது கிருபையை அதிசயமாய் விளங்கப் பண்ணினார் (சங் 31:21).
6. என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார் (சங் 31:22).
7. உண்மையானவனைக் கர்த்தர் தற்காக்கிறார் (சங் 31:23).
8. இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்
9. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங் 31:24).