மல்கியா 3ஆம் அதிகாரம் விளக்கம்
மேசியாவின் வருகையைப்பற்றியும், அவருக்கு முன்பாக அவருடைய வழியை ஆயத்தம்பண்ணுகிறவரைப்பற்றியும் இந்த அதிகாரத்தில் வாக்குத்தத்தமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. மேசியாவின் வருகையின்போது நடைபெறும் சம்பவங்கள் இங்கு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது (மல் 3:1-6).
யூதர்கள் கர்த்தருடைய பிரமாணங்களைத் தீட்டுப்படுத்துகிறார்கள். இதன் நிமித்தமாக கர்த்தர் அவர்களைக் கடிந்துகொள்கிறார். அவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும். அப்போது கர்த்தர் தம்முடைய கிருபையோடும் இரக்கத்தோடும் அவர்களிடத்திற்கு திரும்பி வருவார் (மல் 3:7-12).
துன்மார்க்கருடைய பாவங்களும், அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசுவதும் (மல் 3:13-15). நீதிமான்களுடைய நீதியும், அவர்கள் தேவனுக்காகப் பேசுவதும். கர்த்தர் நீதிமான்களுக்கு தம்முடைய வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் (மல் 3:16-18).
இதோ, வருகிறார் மல் 3:1-6
மல் 3:1. இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல் 3:2. ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
மல் 3:3. அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும் படிக்கும், அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.
மல் 3:4. அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
மல் 3:5. நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூ-க்காரரின் கூ-யை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர்சொல்லுகிறார்.
மல் 3:6. நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆûயால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
நாஸ்திகர்கள் ""தேவன் இல்லை'' என்று சொல்லுகிறார்கள். அவர்கள் தேவனைப்பற்றி பரியாசமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். ""நியாயத்தீர்ப்பின் தேவன் எங்கே'' என்று நாஸ்திகர்களும், பாவிகளும் கேட்கிறார்கள். அவர்களுடைய கேள்விக்கு, இந்த அதிகாரத்தின் முதலாவது வசனம் பதில் சொல்லுகிறது.
""தேவன் இங்கே இருக்கிறார், அவர் வாசற்படிக்கு அருகாமையில் வந்திருக்கிறார்'' இதுவே நாஸ்கருடைய கேள்விக்கு சரியான பதில். தங்களுக்கு ஒரு மேசியா வருவார் என்று யூதர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த மேசியா இப்போது வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். கர்த்தர் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக வருகிறார்.
மேசியா வருவதற்கு முன்பாக, யோவான்ஸ்நானன் இந்தப் பூமிக்கு வருவார். அவர் கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணுவார். ஏசாயா தீர்க்கதரிசி யோவான்ஸ்நானனைப்பற்றி தீர்க்கதரிசனமாய்ச் சொல்லியிருக்கிறார்.
""கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வை பண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகலமலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று'' (ஏசா 40:3-5).
யோவான்ஸ்நானன் கர்த்தருடைய தூதன். ""இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்'' (மல் 3:1) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
யோவான்ஸ்நானனுக்கு பரலோகத்திலிருந்து கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் மனுஷரிடத்திலிருந்து கட்டளையைப் பெற்றுக்கொள்ளவில்லை. எல்லா தீர்க்கதரிசிகளுமே கர்த்தருடைய தூதர்களாயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தர் கொடுத்த செய்தியை ஜனங்களுக்கு சொல்லுகிறார்கள். ஜனங்கள் தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டுமென்றும், அவர்களுடைய இருதயங்கள் புதுப்பிக்கப்படவேண்டும் என்றும் எல்லா தீர்க்கதரிசிகளும் சொல்லுகிறார்கள். யோவான்ஸ்நானனும் மற்ற தீர்க்கதரிசிகளைப்போலவே, மனந்திரும்புதலின் செய்தியை ஜனங்களுக்கு சொல்லுகிறார்.
யோவான்ஸ்நானன், இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகப்போய், அவருக்கு வழியை ஆயத்தம்பண்ணுவார். யூதர்கள் ஆபிரகாமின் சந்ததியில் வந்தவர்கள். ஆபிரகாம் தங்களுடைய முற்பிதா என்று சொல்லிக்கொள்வதில், யூதர்கள் பெருமைப்படுகிறார்கள்.
கர்த்தர் ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணினார். ஆபிரகாமையும், அவருடைய சந்ததியையும் ஆசீர்வதிப்பதாகச் சொன்னார். அந்த உடன்படிக்கையின் மூலமாக தங்களுக்கும் ஆசீர்வாதம் வரும் என்று யூதர்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்களை இரட்சிப்பதற்கு தங்களுக்கு ஒரு இரட்சகர் தேவையில்லை என்றும், கர்த்தர் ஆபிரகாமோடு பண்ணின உடன்படிக்கையே தங்களுக்கு போதுமானது என்றும் யூதர்கள் நினைக்கிறார்கள்.
யோவான்ஸ்நானன் இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக இந்தப் பூமிக்கு வரவேண்டும். யூதர்கள் மத்தியிலே, அவர்களுடைய இரட்சிப்புக்கு தடையாகயிருக்கும் தடைகளை நீக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம்பண்ணவேண்டும். தங்களுடைய இரட்சிப்புக்கு, கர்த்தர் ஆபிரகாமோடு பண்ணின உடன்படிக்கை போதுமானதல்ல என்பதை யூதர்கள் உணரவேண்டும். தங்களுக்கு இயேசுகிறிஸ்துவாகிய இரட்சகர் தேவை என்பதை யூதர்கள் அங்கீகரிக்கவேண்டும்.
யோவான்ஸ்நானன், யூதர்கள் மத்தியிலே இயேசுகிறிஸ்துவின் தூதனாக வந்தார். கிறிஸ்துவின் வருகை சமீபமாயிருக்கிறது என்றும், யூதர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்றும், கிறிஸ்துவாகிய இரட்சகர் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்றும் யோவான்ஸ்நானன் யூதர்கள் மத்தியிலே உபதேசம்பண்ணினார்.
மல்கியா தீர்க்கதரிசி மேசியாவின் வருகையைக் குறித்தும் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். ""நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்'' (மல் 3:1) என்று மல்கியா மேசியாவின் வருகையைப்பற்றி முன்னறிவிக்கிறார்.
உடன்படிக்கையின் தூதனானவர், இந்த உலகத்தைப் புறக்கணித்து விட்டார் என்றும், அவர் இந்த உலகத்திற்கு வரமாட்டார் என்றும் யூதர்கள் நினைத்தார்கள். இது அவர்களுடைய அவிசுவாசம். அவர்கள் மேசியாவைப்பற்றிச் சொல்லும்போது, ""வரவேண்டிய மேசியா'' என்றே சொன்னார்கள். மேசியாவின் வருகையை யூதர்கள் விரும்பினார்கள். அவர்கள் மேசியாவைத் தேடினார்கள். அவர்கள் தேடுகிற ஆண்டவரும், அவர்கள் விரும்புகிற மேசியாவும், தம்முடைய ஆலயத்திற்கு தீவிரமாய் வருவார்.
""இதோ வருகிறார்'' (மல் 3:1) என்று சேனைகளின் கர்த்தரும் மேசியாவின் வருகையைப்பற்றிச் சொல்லுகிறார். மேசியா ஆண்டவராகவும், உடன்படிக்கையின் தூதனுமானவராகவும் இருக்கிறார். ஆண்டவர் என்னும் வார்த்தை ""அதோனாய்'' என்று மூலபாஷையில் எழுதப்பட்டிருக்கிறது. ""அதோனாய்'' என்னும் பெயருக்கு ""கர்த்தர் சர்வவல்லமையுள்ளவர்'' என்று பொருள். இந்த உலகம் ""அதோனாய்'' என்னும் தேவனை ஆதாரமாகவும், அஸ்திபாரமாகவும் வைத்து ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் எல்லாவற்றிற்கும் ஆண்டவராயிருக்கிறார்.
கிறிஸ்துவானவர் எல்லோருக்கும் கர்த்தராயிருக்கிறார். ""எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே'' (அப் 10:36).
கிறிஸ்துவானவரிடம் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. "" அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது'' (மத் 28:18) என்று சொன்னார்.
""கிறிஸ்துவானவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது'' (லூக் 1:33).
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உடன்படிக்கையின் தூதனுமானவர். மேசியா பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார். தேவனுக்கும் மனுஷருக்கும் இடையில் சமாதானத்தை உண்டுபண்ணுவதே இயேசுகிறிஸ்துவின் ஊழியம்.
கிறிஸ்துவானவர் உடன்படிக்கையின் தூதனாகயிருக்கிறார். அவர் தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தராயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாய் தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தமும், சமாதானமும் உண்டாயிற்று.
""ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டது'' (எபி 2:2,3).
""உடன்படிக்கையின் தூதனானவர்'' என்னும் வாக்கியத்திற்கு ""உடன்படிக்கையின் அதிபதியானவர்'' என்றும் வேதபண்டிதர்கள் பொருள் சொல்லுகிறார்கள். கிறிஸ்துவானவர் உடன்படிக்கையின் அதிபதியாகயிருந்தாலும், அவரே அந்த உடன்படிக்கையை மனுக்குலத்திற்கு அறிவிக்கிற தூதராகவும் இருக்கிறார்.
கிறிஸ்துவாகிய ஆண்டவரை யூதர்கள் தேடுகிறார்கள். உடன்படிக்கையின் தூதரான மேசியாவை யூதர்கள் விரும்புகிறார்கள். பக்தியுள்ள யூதர்கள் மேசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மேசியாவின் வருகையை விரும்பினார்கள்.
மேசியாவின் வருகைக்காக காத்திருந்தவர்கள், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருந்தார்கள். அவர்கள் எருசலேமிலே மீட்பு உண்டாகக் காத்திருந்தார்கள்.
""அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவே-ன் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்'' (லூக் 2:25).
""அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்'' (லூக் 2:38).
இயேசுகிறிஸ்துவைத் தேடுகிறவர்கள், அவருக்குள் சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்துவே நம்முடைய இருதயத்தின் வாஞ்சையாயிருக்க வேண்டும். அப்போது அவர் நம்முடைய இருதயத்தின் மகிழ்ச்சிக்கு காரணராயிருப்பார்.
மேசியா தீவிரமாய் வருவார். அவருடைய வருகை சமீபமாயிருக்கிறது. முற்பிதாக்களின் காலத்தில், யூதர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்தார்கள். அப்போது, மேசியா அவர்களுக்கு சமீபமாயிருந்ததைவிட, இப்போது இவர்களுக்கு மிகவும் சமீபமாயிருக்கிறார். மேசியா தீவிரமாய் வருவார்.
மேசியா தம்முடைய ஆலயத்திற்கு தீவிரமாய் வருவார். இந்த ஆலயம் எருசலேமிலுள்ளது. இது கர்த்தருடைய ஆலயம். இது அவருடைய பிதாவின் வீடு.
""புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்தி-ருந்து எடுத்துக் கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்'' (யோவா 2:16).
மேசியாவின் வருகையைப்பற்றிச் சொல்லும்போது, ""ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்?'' (மல் 3:2) என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் உலகத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்க்கும்படியாக வரவில்லை. தம் மூலமாக இந்த உலகம் இரட்சிக்கப்படவேண்டும் என்பதற்காகவும், இந்த உலகத்திலுள்ள ஜனங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் மேசியா இந்த உலகத்திற்கு வருகிறார்.
இயேசுகிறிஸ்து தம்முடைய மாம்சசரீரத்தில், இந்த உலகத்திலிருந்த காலத்தில், அவருடைய மகிமையும் வல்லமையும், அவரிடத்திலிருந்து ஓரளவு வெளிப்பட்டது. அவருடைய மகிமைக்கு முன்பாக யாராலும் நிற்க முடியவில்லை. இயேசுகிறிஸ்து மறுரூபமலையிலே, மறுரூபமானபோது, அவரைப் பார்த்த சீஷர்கள், அவருக்கு முன்பாக நிற்க முடியாமல் கீழே விழுந்தார்கள்.
யூதமார்க்கத்துத் தலைவர்கள் மேசியாவின் துக்கத்தைப்பற்றி அதிகமாய் சொல்லுகிறார்கள். இந்த துக்கம் இஸ்ரவேலுக்கு வரும் துக்கமாகும். இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வரும்போது, இஸ்ரவேல் தேசத்திற்கு, மிகுந்த துக்கமும், துன்பமும், வேதனையும் உண்டாகும்.
மேசியா புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போல இருப்பார். பொன்னைப் புடமிடும்போது, அக்கினியானது, பொன்னையும் களிம்பையும் வெவ்வேறாகப் பிரிக்கும். அக்கினி பொன்னை உருக்கும்.
மேசியா வண்ணாருடைய சவுக்காரத்தைப்போல இருப்பார். வஸ்திரங்களுடைய கறைகளையும், அழுக்கையும் சவுக்காரம் நீக்குவதுபோல, மேசியாவும் நம்முடைய இருதயத்திலுள்ள பாவக்கறைகளையும், அசுத்தத்தையும் நீக்குவார்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மனுக்குலத்தை இரட்சிப்பதற்காகவே இந்தப் பூமிக்கு வந்தார். அவர் மனுஷருடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாய் மனுஷருடைய இருதயங்களில், இதுவரையிலும் மறைவாகயிருந்த சிந்தனைகளெல்லாம், வெளிப்படுத்தப்படும்.
""பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவே-ல் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்'' (லூக் 2:34).
இந்தப் பூமியிலே ஏராளமான மனுஷர் இருக்கிறார்கள். அவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள். தூற்றுக்கூடை கர்த்தருடைய கையில் இருக்கிறது. கர்த்தர் இந்தப் பூமியிலுள்ள மனுஷரில், துன்மார்க்கரையும் நீதிமானையும் வெவ்வேறாகப் பிரிப்பார்.
""தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றார்'' (மத் 3:12).
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் நீதிமான்களுக்குள்ளே நற்கிரியைகளை நடப்பிக்கும். தமக்கு பயந்து பரிசுத்தமாய் ஜீவிக்கிறவர்களுக்கு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நன்மையான ஈவுகளைக் கொடுப்பார். கிறிஸ்துவின் சுவிசேஷம் நீதிமான்களுக்கு ஜீவனுக்கேதுவான நற்கந்தமாகயிருக்கும்.
மேசியா உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டு சுத்திகரித்துக்கொண்டிருப்பார். அவர் புடமிடுகிறவரைப்போல உட்கார்ந்திருப்பார். அவர் வெள்ளியையும் பொன்னையும் புடமிட்டு சுத்திகரிப்பார். மனுஷருடைய இருதயங்களில் காணப்படும் உள்ளான அசுத்தங்களையெல்லாம் நீக்கி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். மேசியா அக்கினியினால் புடமிடுவார். பொன்னும் வெள்ளியும் அக்கினியினால் புடமிடப்படும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளை பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் அபிஷேகம்பண்ணுவார். பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுடைய இருதயங்களில் அக்கினியைப்போல கிரியை நடப்பிப்பார்.
""மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்'' (மத் 3:11).
கர்த்தரால் புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்டவர்கள் கர்த்தருடையவர்களாயிருப்பார்கள். அவர்கள் நீதிமான்களாயிருப்பார்கள். அவர்கள் கர்த்தருக்கு நீதியாய் காணிக்கையை செலுத்துவார்கள். நீதிமான்கள் தங்களை கர்த்தருக்கு பூரணமாய் ஒப்புக்கொடுப்பார்கள். தங்களை பரிசுத்தம்பண்ணிக்கொள்வார்கள். மேசியா லேவியின் புத்திரரை சுத்திகரிப்பார். அவர்களைப் பொன்னைப்போலவும், வெள்ளியைப்போலவும் புடமிடுவார் (மல் 3:3).
விருட்சத்தை பரிசுத்தம்பண்ணும்போது, அந்த விருட்சத்திலிருந்து நல்ல கனிகள் உண்டாகும். மேசியா பாவியான மனுஷர்களை இரட்சித்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்கள் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் நற்கனிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் நல்ல கனிகளைக்கொடுக்கும் நல்ல விருட்சங்களாகயிருப்பார்கள்.
""அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்'' (மல் 3:4) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எருசலேமின் காணிக்கை இனிமேல் கர்த்தருக்கு அருவருப்பானதாகயிருக்காது. ஆசாரியர்கள் இதுவரையிலும் நசல் பிடித்ததையும், ஊனமானதையும் கர்த்தருடைய பலிபீடத்திலே பலிசெலுத்த கொண்டு வந்தார்கள். ஆசாரியர்கள் இனிமேல் கர்த்தர் அருவருக்கிற பலிகளையும், காணிக்கைகளையும் பலிபீடத்திற்கு கொண்டு வரமாட்டார்கள். அவர்கள் நீதியாய் காணிக்கையை செலுத்தும்படிக்கு கர்த்தருடைய பலிபீடத்திற்கு வருவார்கள்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு பிரியமான காணிக்கைகளை செலுத்துவார்கள். கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிற கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து, அவர்கள் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த வருவார்கள். யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்கு பிரியமாயிருக்கும்.
பூர்வநாட்களிலும், முந்தின வருஷங்களிலும் ஆசாரியர்கள் கர்த்தருக்குப் பிரியமான காணிக்கைகளை செலுத்தினார்கள். கர்த்தரும் அவர்களுடைய காணிக்கைகளில் பிரியமாயிருந்தார். பூர்வநாட்களில் இருந்ததுபோலவே, ஆசாரியர்கள் இப்போது செலுத்துகிற காணிக்கைகளும் கர்த்தருக்கு பிரியமாயிருக்கும் (மல் 3:4).
கர்த்தருடைய கிருபை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு கிடைத்திருக்கிறது. கர்த்தர் அவர்களை பொன்னைப்போலவும், வெள்ளியைப் போலவும் புடமிட்டு சுத்திகரித்திருக்கிறார். அவர்கள் பசும்பொன்னைப்போலவும் சுத்தவெள்ளியைப்போலவும் சுத்தமாயிருக்கிறார்கள். அவர்கள் இப்போது கர்த்தருக்கு பிரியமான காணிக்கைகளை செலுத்துகிறார்கள். கர்த்தருக்கு நீதியாய் காணிக்கைகளை செலுத்துகிறார்கள்.
மேசியா தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காக, பிதாவின் சமுகத்திலே பரிந்து பேசுகிறார். ஆகையினால் அவர்கள் செலுத்துகிற காணிக்கைகள் கர்த்தருக்கு பிரியமாயிருக்கிறது. கர்த்தர் அவர்களுடைய காணிக்கைகளை அங்கீகரிக்கிறார்.
இந்தப் பிரபஞ்சத்து ஜனங்களில் நீதிமான்களும் இருக்கிறார்கள். துன்மார்க்கரும் இருக்கிறார்கள். துன்மார்க்கரில் அநேகர் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பி, தங்களுடைய பாவங்களை மேசியாவிடம் அறிக்கை செய்கிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவர்களுடைய ஆத்தும இரட்சகராயிருக்கிறார். தங்கள் பாவங்களுக்கு உண்மையாய் மனந்திரும்புகிறவர்களை கிறிஸ்துவானவர் இரட்சிக்கிறார்.
ஆனாலும் இரட்சிக்கப்படாத துன்மார்க்கர் இன்னும் மனுஷர் மத்தியிலே இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவில்லை. துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள். இவர்கள்மீது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வரும். இவர்களுக்கு நியாயத்தீர்ப்பு செய்யும்படியாகவே, மேசியா இவர்கள் மத்தியில் வந்திருக்கிறார்.
""நியாயத்தீர்ப்பின் தேவன் எங்கே'' என்று துன்மார்க்கர் கேட்கிறார்கள். கர்த்தர் தங்களை நியாயந்தீர்க்க வருவார் என்பதை அவர்கள் நம்பவில்லை. அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக துணிகரமாய்ப் பேசுகிறார்கள். கர்த்தர் துன்மார்க்கருக்கு பிரதியுத்தரம் சொல்லும் வண்ணமாக, ""நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வருவேன்'' என்றும், ""உங்களுக்கு விரோதமாய் தீவிரமான சாட்சியாயிருப்பேன்'' (மல் 3:5) என்றும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மேசியா இந்தப் பூமியில் வரும்போது துன்மார்க்கருக்கு குழப்பமும் பயமும் உண்டாகும். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கும்படியாக வரவில்லை. அவர்கள்மீது நியாயத்தீர்ப்பு செய்யும்படியாகவே வருகிறார். பாவிகள் இயேசுகிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும். கிறிஸ்துவானவர் தம்முடைய சுவிசேஷத்தினால் அவர்களை நியாயந்தீர்ப்பார்.
சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், கர்த்தருக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூ-க்காரரின் கூ-யை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய் சேனைகளின் கர்த்தர் தீவிரமான சாட்சியாயிருப்பார் (மல் 3:5).
விபசாரக்காரர் தங்களுடைய மாம்சத்தின் இச்சைகளுக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கிறார்கள். சூனியக்காரர் ஆவிக்குரிய துன்மார்க்கராயிருக்கிறார்கள். பொய்யாணையிடுகிறவர்கள் கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறார்கள். தாங்கள் பேசுகிற பொய் வார்த்தைகளை இவர்கள் கர்த்தருடைய நாமத்தினால் ஆணையிடுகிறார்கள். விதவைகளையும் திக்கற்ற பிள்ளைகளையும் ஒடுக்குகிறவர்கள் அவர்களை வஞ்சிக்கிறார்கள்.
துன்மார்க்கர் கர்த்தருக்கு பயப்படமாட்டார்கள். அவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளுக்கு இதுவே அடிப்படை காரணம். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள், அவருடைய நீதிக்கும், நியாயத்தீர்ப்புக்கும் பயப்படுவார்கள். அவர்கள் பிறருக்கு தீங்குகளும், அநியாயங்களும், அக்கிரமங்களும் செய்யவும் பயப்படுவார்கள். தமக்கு பயப்படாமல் அநியாயம் செய்கிறவர்களுக்கு விரோதமாக, சேனைகளின் கர்த்தர் தீவிரமான சாட்சியாயிருக்கிறார்.
""நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை'' (மல் 3:6) என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் துன்மார்க்கருக்கும், அநியாயம் செய்கிறவர்களுக்கும் விரோதமாக தம்முடைய நீதியான தீர்ப்பைச் சொல்லுகிறார். கர்த்தர் தம்முடைய கிருபையினால், தம்முடைய நியாயத்தீர்ப்புகளை உடனே நிறைவேற்றாமல், காலதாமதம்பண்ணுகிறார். கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள், அவருக்கு ஏற்ற வேளையிலே நிறைவேறும். அவர் கர்த்தர். அவர் மாறாதவர்.
""கர்த்தர் மாறாதவர்'' என்று இஸ்ரவேல் வம்சத்தார் சொல்லுகிறார்கள். அவர்கள் இந்த சத்தியத்தை தங்கள் ஜீவியத்தில் அனுபவித்திருக்கிறார்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரோடும், அவர்களுடைய முற்பிதாக்களோடும் உடன்படிக்கை செய்திருக்கிறார். கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையில் உண்மையுள்ளவராயிருக்கிறார். கர்த்தர் மாறாதவர். ஆகையினால் அவருடைய உடன்படிக்கையும் மாறவில்லை.
இஸ்ரவேல் வம்சத்தார், பல சந்தர்ப்பங்களில் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள். கர்த்தருக்கு கோபத்தை உண்டுபண்ணினார்கள். அவர்கள் கர்த்தரை வருத்தப்பட வைத்தார்கள். அவர்கள் கர்த்தரைவிட்டு விலகி, அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிப்போனார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு பரிசுத்தமானவர்கள். ஆனால் அவர்களில் அநேகர் பரிசுத்தமாய் ஜீவிக்காமல் பாவத்திற்கு அடிமைகளாக ஜீவித்தார்கள்.
இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கர்த்தர் எதிர்பார்க்கிற பரிசுத்தமோ, உண்மையோ, நீதியோ, கீழ்ப்படிதலோ காணப்படவில்லை. கர்த்தர் தம்முடைய நீதியினால் அவர்களை ஒதுக்கி தள்ளியிருக்கலாம். தம்மைவிட்டு விலகிப்போன யூதர்களை கர்த்தர் புறக்கணித்திருக்கலாம். ஆனால் கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரை ஒதுக்கி தள்ளிவிடவில்லை. அவர்களை புறக்கணித்து கைவிட்டுவிடவில்லை.
கர்த்தர் தம்முடைய உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். இஸ்ரவேல் வம்சத்தாருடைய முற்பிதாக்களோடு தாம் பண்ணின உடன்படிக்கைகளை கர்த்தர் நினைவுகூருகிறார். அவர்களைப் பாதுகாக்கிறார். அவர்களைப் பராமரிக்கிறார். கர்த்தர் மாறாதவராயிருக்கிறார். கர்த்தருடைய அன்பும், கிருபையும், இரக்கமும் மாறவில்லை. இதனால் யாக்கோபின் புத்திரர் நிர்மூலமாகவில்லை.
கர்த்தர் யாக்கோபின் புத்திரருக்கு சொல்லுகிற ஆசீர்வாதமான வார்த்தைகளை, நமக்கும் சொல்லுகிறார். கர்த்தர் நமக்கும் மாறாதவராயிருக்கிறார். அவர் நம்மீது வைத்த அன்பு மாறவில்லை. அவருடைய கிருபையும் இரக்கமும் மாறவில்லை. ஆகையினால் நாம் நிர்மூலமாகாமலிருக்கிறோம். நாம் இன்றைய தினத்தில் நிர்மூலமாகாதிருப்பது கர்த்தருடைய சுத்தக்கிருபை.
நிறைவேறிய முன்னறிவிப்புகள்
1. நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். (மல் 3:1).
2. நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்.
3. இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நிறைவேற வேண்டிய முன்னறிவிப்புகள்
1. அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார் (மல் 3:3).
2. அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும் படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்.
3. அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். (மல் 3:4).
4. நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வருவேன். (மல் 3:5).
5. சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூ-க்காரரின் கூ-யை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன்.
""இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன்'' (மல் 3:1) என்னும் இந்த வாக்கியம் மத் 11:10; மாற்கு 1:2; லூக்கா 1:76; லூக்கா 7:27 ஆகிய வசனங்களில் மேற்கோளாகக் கூறப் பட்டிருக்கிறது. ""இதோ'' என்பது மல்கியாவின் காலத்தைக் குறிக்கவில்லை. இது கர்த்தருடைய நாளில் உள்ள சந்ததியைக் குறிக்கிறது. மல் 2:17 ஆவது வசனத்தில் ""நியாயந்தீர்க்கிற தேவன் எங்கே'' என்னும் கேள்விக்கு இங்கு பதில் கூறப்பட்டிருக்கிறது.
செருபாபேல் கட்டிய ஆலயம் கர்த்தருக்காகக் கட்டப்பட்டிருக்கிறது. மேசியா வந்த ஆலயம் ""என் பிதாவின் வீடு'' என்று அழைக்கப்படுகிறது. (யோவான் 2:16).
இயேசு கிறிஸ்துவே உடன்படிக்கையின் தூதனாக இருக்கிறார். தேவனுக்கும், மனுஷனுக்கும் நடுவில் புதிய உடன்படிக்கையை முன்னறிவித்திருக்கிறார்.
ஒரே வசனப்பகுதியில் மேசியாவின் முதலாவது வருகையும், இரண்டாவது வருகையும் கூறப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள காலம் மல் 3:1 ஆவது வசனத்திற்கும், மல் 3:2 ஆவது வசனத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். மல் 3:1 ஆவது வசனம் இயேசு கிறிஸ்துவின் முதலாவது வருகையைக் குறிப்பிடுகிறது. அப்போது அவர் யூதருக்காகவும், தம்முடைய தேவாலயத்திற்காகவும் யோவான் ஸ்நானனுடைய நாட்களில் வந்தார். மல் 3:2-3 ஆகிய வசனங்கள் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிப்பிடுகிறது. இந்த வருகையில் அவர் நியாயந்தீர்ப்பதற்காக வருவார்.
மல் 3:4-6 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் முன்னறிவிப்புகள்
1. இஸ்ரவேல் மறுபடியும் ஸ்தாபிக்கப்படும். (மல் 3:4)
2. எல்லா பாவிகள்மீதும் நியாயத்தீர்ப்பு உண்டாகும். (மல் 3:5)
3. தமக்கு ஊழியம் செய்கிறவர்களைக் கர்த்தர் கடாட்சிப்பார். (மல் 3:17)
இவை தவிர மல்கியாவில் கூறப்பட்டிருக்கும் மற்ற முன்னறிவிப்புகள்
1. இஸ்ரவேலர் மறுபடியும் கூட்டிச்சேர்க்கப் படுவார்கள். (மல் 3:18)
2. கர்த்தருடைய நாள் (மல் 4:1-3)
3. கர்த்தருடைய நாளில் இஸ்ரவேலுக்கு ஊழியம் செய்ய எலியா மறுபடியும் திரும்பி வருவார். (மல் 4:5-6).
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, அவர் மனுஷரை நியாயந்தீர்ப்பார், சுத்திகரிப்பார். அப்போது யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
யூதாவிலுள்ள ஜனங்கள்
1. சூனியக்காரர்
2. விபசாரர்
3. பொய்யாணை இடுகிறவர்கள்
4. ஒடுக்குகிறவர்கள்
5. கர்த்தருக்குப் பயப்படாதவர்கள்
ஒடுக்கப்படுகிறவர்கள்
1. கூ- அபகரிக்கப்பட்ட கூலிக்காரர். (மல் 3:5)
2. விதவை
3. திக்கற்ற பிள்ளைகள்
4. பரதேசி
கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையில் மாறாதவராக இருக்கிறார். ஆயினும் மனுஷருடைய சுயாதீன சித்தத்தின்படி, அவர்களுடைய கிரியைகளைப் பொருத்து அவர்களுக்கு நியமித்த தமது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் கர்த்தர் மனம் மாறுகிறார். அவருடைய கிருபையின் நிமித்தமாகவும், இரக்கத்தின் நிமித்தமாகவும் மனுஷருக்கு வருமென்று அறிவித்த ஆக்கினையைத் தாமதப்படுத்துகிறார். ஆயினும் தேவனுடைய திட்டமும், நோக்கமும் ஒருபோதும் மாறுவதில்லை. தம்முடைய நோக்கத்தையும், திட்டத்தையும் செயல்படுத்தும் வழிகளைக் கர்த்தர் சில சமயங்களில் மாற்றுகிறார்.
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? மல் 3:7-12
மல் 3:7. நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.
மல் 3:8. மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே.
மல் 3:9. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.
மல் 3:10. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல் 3:11. பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற் போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல் 3:12. அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரோடு வழக்காடுகிறார். அவர்கள் கர்த்தரை பயபக்தியோடும், உண்மையான இருதயத்தோடும் ஆராதிக்கவேண்டும். அவர்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும். இஸ்ரவேல் வம்சத்தார், நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரகாரம், கர்த்தருக்கு பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். ஆனால் அவர்களோ கர்த்தரை வஞ்சிக்கிறார்கள்.
""நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்'' (மல் 3:7) என்று சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு சொல்லுகிறார். அவர்கள் தங்கள் எஜமானரை விட்டு விலகிப்போய்விட்டார்கள். அவர்களுடைய எஜமான் அவர்களுக்கு கொடுத்த வேலைகளை செய்யாமல், எஜமானை ஏமாற்றுகிறார்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தார்மீது குற்றம் சொன்னாலும், தம்முடைய கிருபையான வார்த்தைகளையும் அவர்களுக்கு சொல்லுகிறார். ""என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்'' (மல் 3:7) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேல் வம்சத்தார் மறுபடியும் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும். கர்த்தர் தங்களுக்கு கொடுத்த வேலைகளை உண்மையாய்ச் செய்யவேண்டும்.
ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கு பிரயாணம்பண்ணுகிறவர், பாதை மாறிப்போய்விட்டால் காணாமல் போய்விடுவார். அவருக்கு சரியான பாதை எது என்று அறிவிக்கப்படும்போது, அவர் தன்னுடைய தப்பிதமான பாதையை விட்டு விலகி, சரியான பாதைக்கு திரும்பி வரவேண்டும். அது தான் அவருக்கு நல்லது. இஸ்ரவேல் வம்சத்தாரோ, சோரஸ்திரீ தன் புருஷனைவிட்டு விலகிப்போனதுபோல, கர்த்தரைவிட்டு விலகி சோரம்போயிருக்கிறார்கள். சோரஸ்திரீ தன்னுடைய புருஷனிடத்திற்கு திரும்பி வரவேண்டும்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தரைவிட்டு விலகிப்போயிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரிடத்திற்கு திரும்பி வரவேண்டும். அப்பொழுது கர்த்தரும் அவர்களிடத்திற்கு திரும்பி வருவார். கர்த்தர் அவர்கள்மீது சொன்ன தம்முடைய நியாயத்தீர்ப்புக்களையெல்லாம் அவர்களைவிட்டு நீக்கிப்போடுவார்.
ஆனால் இஸ்ரவேல் வம்சத்தாரோ கர்த்தரிடத்திற்கு திரும்பி வர விரும்பவில்லை. ""நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும்'' (மல் 3:7) என்று யூதர்கள் கர்த்தரிடத்தில் கேட்கிறார்கள். கர்த்தர் தங்களைக் குற்றப்படுத்துவது யூதர்களுக்கு பிடிக்கவில்லை. தாங்கள் கர்த்தரைவிட்டு விலகிப்போகவில்லை என்றும், விலகிப்போனால்தான் அவரிடத்திற்கு திரும்பி வரவேண்டும் என்று நினைத்து, ""நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும்'' என்று யூதர்கள் கர்த்தரிடத்திலே கேட்கிறார்கள்.
யூதர்கள் தங்களைப்பற்றியும், தங்களுடைய பாவங்களைப்பற்றியும், மீறுதல்களைப்பற்றியும் அறியாதவர்களாயிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனுடைய பிரமாணமும் தெரியவில்லை. தங்களுடைய ஆவிக்குரிய நிலமையும் தெரியவில்லை. கர்த்தர் தங்களிடத்தில் எதை எதிர்பார்க்கிறார் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை. தாங்கள் இப்போது இருப்பதுபோலவே, எப்போதும் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கர்த்தரைவிட்டு விலகிப்போனது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. யூதர்கள் பாவத்தில் ஜீவிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்பாமல், தொடர்ந்து பாவத்திலேயே ஜீவிக்க வேண்டுமென்று தீர்மானமாயிருக்கிறார்கள். யூதர்கள் தேவனை வஞ்சிக்கிறார்கள்.
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரிடம், ""மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே'' (மல் 3:8) என்று சொல்லுகிறார். அவர்கள் தங்கள் எஜமானை வஞ்சிக்கிறார்கள். கர்த்தரிடத்திலுள்ள நன்மைகளை, வஞ்சித்துப் பெற்றுக்கொள்ளலாம் என்று பேராசைப்படுகிறார்கள்.
கொள்ளையிடுகிறவர்கள் வழியிலே காத்திருப்பதுபோல, யூதர்கள் கர்த்தருடைய நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, அவருடைய சமுகத்திற்கு முன்பாக காத்திருக்கிறார்கள். ""நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்'' (மல் 3:8) என்று சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரிடம் சொல்லுகிறார். மனுஷன் தேவனை வஞ்சிக்கவேண்டுமென்று நினைக்கக்கூடாது. இப்படிப்பட்ட துணிகரமான எண்ணங்கள் மனுஷனுக்கு உண்டாகக்கூடாது.
மனுஷன் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறான். தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமல் மீறுகிறான். அவன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறான். கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமல், அவருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுவது, அவரை வஞ்சிப்பதற்கு சமமானது. இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தரை வஞ்சித்தாலும், தாங்கள் கர்த்தரை வஞ்சிக்கவில்லை என்றும், தங்களிடத்தில் ஒரு குற்றமுமில்லை என்றும் சாதிக்கிறார்கள். தங்களிடத்தில் குற்றம் காணப்படுமென்றால், கர்த்தர் அதை தங்களுக்கு நிரூபிக்கவேண்டுமென்று விவாதம் பண்ணுகிறார்கள்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தரை வஞ்சிக்கிறார்கள். இதற்கு மேல் என்ன செய்யவேண்டுமென்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், கனத்தையும் வஞ்சிக்கிறார்கள். கர்த்தருக்கு பரிசுத்தமானதாக பிரதிஷ்டை பண்ணப்பட்டதையும் வஞ்சிக்கிறார்கள். கர்த்தருடைய ஊழியத்தை தாங்கள் உண்மையாக செய்வதாக சொல்லி, மாய்மாலம்பண்ணி, கர்த்தரை வஞ்சிக்கிறார்கள்.
கர்த்தரை வஞ்சிக்கிறவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய ஓய்வுநாளை வஞ்சித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறார்கள். கர்த்தருடைய ஊழியத்திற்காக படைக்கப்பட்டிருக்கிற காணிக்கைகளை வஞ்சிக்கிறார்கள். கர்த்தருக்கு படைக்கவேண்டிய காணிக்கைகளை வஞ்சித்து, காணிக்கை செலுத்தாமல் வஞ்சிக்கிறார்கள்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதமாக இத்தனை காரியங்களை செய்தாலும், ""எதிலே உம்மை வஞ்சித்தோம்'' என்று கேட்கிறார்கள். கர்த்தர் அவர்களிடத்தில், ""தசமபாகத்திலும் காணிக்கைகளிலும் தானே'' (மல் 3:8) என்று பிரதியுத்தரமாய்ச் சொல்லுகிறார்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு காணிக்கைகளை செலுத்தவில்லை. கர்த்தருடைய ஆலயத்திலே தசமபாகங்களை கொண்டு வந்து கொடுக்கவில்லை. அவர்கள் தேவாலயத்திலுள்ள ஆசாரியர்களை வஞ்சிக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய பிரமாணத்தில் சொன்ன பிரகாரம், பலிபீடத்திலே பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டு வரவில்லை. நசல் பிடித்ததையும், ஊனமானதையும் பலிபீடத்திற்கு கொண்டு வருகிறார்கள். பலிசெலுத்துவதற்கு தகுதியற்றதை பலிசெலுத்த கொண்டு வருகிறார்கள்.
""நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்'' (மல் 3:9) என்று கர்த்தர் சொல்லுகிறார். இஸ்ரவேல் புத்திரர் தம்மை வஞ்சிப்பதினால், கர்த்தர் அவர்களைத் தண்டிக்கிறார். இஸ்ரவேல் தேசத்திலே பஞ்சத்தையும், கொள்ளைநோயையும், ஆகாரக்குறைவையும், தண்ணீர் தாகத்தையும், பசியையும், பட்டினியையும் கொடுத்து அவர்களைத் தண்டிக்கிறார். வெட்டுப்பூச்சிகள் அவர்களுடைய தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் தின்றுபோடுகிறது. அவர்களுக்கு ஏற்ற காலங்களிலே மழை பெய்யவில்லை.
கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாரைத் தண்டிக்கிறார். இதனால் அவர்களுக்கு அப்பக்குறைவு உண்டாயிற்று. அவர்கள் கர்த்தரை வஞ்சித்தார்கள். இதன் மூலமாய் அவர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக்கொள்கிறார்கள். அவர்கள் இப்போது கர்த்தரால் சபிக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
இஸ்ரவேல் தேசத்தில் விளைச்சல் இல்லை. தேசத்தில் நல்ல விளைச்சல் உண்டாயிருந்தபோது, அவர்கள் கர்த்தருக்கு காணிக்கைகளையும், தசமபாகங்களையும் செலுத்தவில்லை. இப்போதோ தேசத்தில் மழையில்லை. விளைச்சலில்லை. தானிய அறுவடையுமில்லை. அவர்களால் கர்த்தருக்கு காணிக்கைகளையும் தசமபாகங்களையும் செலுத்த முடியவில்லை.
யூதர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும். அவர்கள் கர்த்தரை வஞ்சிக்கக்கூடாது. கர்த்தருக்கு செலுத்தவேண்டிய தசமபாகங்களையும், காணிக்கைகளையும் ஒழுங்காக செலுத்தவேண்டும். அப்போது கர்த்தருடைய சாபமும், நியாயத்தீர்ப்பும் அவர்களைவிட்டு நீங்கும். அவர்கள்மீது கர்த்தருடைய ஆசீர்வாதம் வந்து தங்கும்.
""என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்'' (மல் 3:10) என்று கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு சொல்லுகிறார். நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருக்கிற காணிக்கைகளை ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டு வரவேண்டும். இதனால் கர்த்தருடைய பலிபீடத்தில் ஊழியம் செய்கிற ஆசாரியருக்கும், லேவியருக்கும், அவர்களுடைய வீட்டாருக்கும் போஜனமுண்டாயிருக்கும். கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களுக்கு போஜனம் கிடைக்கும்போது, கர்த்தருக்கு காணிக்கைகளை செலுத்துகிறவர்களுக்கும், அவர்களுடைய வீட்டாருக்கும் போஜனம் கிடைக்கும்.
நாம் முதலாவதாக கர்த்தருக்கு செலுத்தவேண்டிய தசமபாகங்களையும் காணிக்கைகளையும் அவருக்கு செலுத்த வேண்டும். ""அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்'' (மல் 3:10) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் இங்கு சொல்லுகிற வாக்கியம் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நன்மையான எல்லா ஈவுகளும் நமக்கு பரலோகத்திலிருந்து வருகிறது. கர்த்தர் தம்முடைய பொக்கிஷ சாலையிலிருந்து, நமக்கு தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும் வருஷிக்கப்பண்ணுவார். கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதம் வானத்தின் பலகணிகளைத் திறந்துகொடுப்பதுபோல திடீரென்றும், தாராளமாகவும் கொடுக்கப்படும்.
""அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்'' (2இராஜா 7:2).
நம்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவதற்காகவே, கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறக்கிறார். கர்த்தர் தம்முடைய பொக்கிஷசாலைகளின் பலகணிகளைத் திறக்கும்போது, நமக்கு இடங்கொள்ளாமல் போகுமட்டும், நம்மேல் கர்த்தருடைய ஆசீர்வாதம் வரும். கர்த்தர் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு இடம் இருக்காது.
பாவிகள் மனந்திரும்பும்போது, கர்த்தர் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார். அவர்களுடைய இருதயங்களைப் புதுப்பிக்கிறார். அவர்களோடு ஒப்புரவாகுகிறார். அவர்களுக்கு தம்முடைய ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறார். கர்த்தரிடத்தில் நமக்கு கொடுப்பதற்காக, அவருடைய பண்டகசாலையிலே, ஆசீர்வாதங்கள் ஏராளமாய் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆசீர்வாதங்கள் நமக்கு கொடுக்கப்பட ஆயத்தமாயிருக்கிறது.
நம்முடைய விசுவாசக் குறைவினால், கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கு, நம்மிடத்தில் இடம் இருக்காது. நம்முடைய விசுவாசம் குறையும்போது, நம்முடைய இடமும் குறைகிறது. நம்முடைய விசுவாசம் அதிகரிக்கும்போது, நம்முடைய இடம் விஸ்தாரமாகிறது.
கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்போது, சபிக்கப்பட்டிருந்த பூமி மறுபடியும் ஆசீர்வதிக்கப்படும். ""பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற் போவதுமில்லை'' (மல் 3:11) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நாம் கர்த்தருடைய ஆலயத்திலே தசமபாகங்களையும், காணிக்கைகளையும் கொண்டு வரும்போது, கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். நமக்கு இடங்கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வாதம் உண்டாயிருக்கும். ""அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும்'' (மல் 3:12) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்து வந்த நாள்தொடங்கி, மல்கியாவின் காலம் வரையிலும் அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக் கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப் போனார்கள்.
""என்னிடத்திற்குத் திரும்புங்கள்'' என்று கர்த்தர் பல சந்ததிகளிடம் இந்த வாக்கியத்தைக் கூறி வருகிறார் (மல் 3:7). இதே வாக்கியத்தை இன்னும் கூறுவார். தம்மிடத்தில் ஜனங்கள் திரும்பி வந்தால், கர்த்தர் அவர்களோடு கூட இருந்து அவர்களுக்கு நன்மை செய்வார். ஆனால் இஸ்ரவேல் புத்திரரோ கர்த்தரைவிட்டு விலகிப்போய் இருப்பதையே உணராமல் இருக்கிறார்கள்.
கர்த்தர் மனுஷனோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி தசமபாகமும், காணிக்கைகளும் கர்த்தருக்குரியது. கர்த்தருக்குரியதை மனுஷர் வைத்துக் கொள்வது கர்த்தரை வஞ்சிக்கும் செயலாகும். (மல் 3:8-9).
கர்த்தரை வஞ்சிப்பதினால் மனுஷருக்குச் சாபம் வரும். இஸ்ரவேல் தேசத்தாருக்கு மட்டுமல்லாமல் கர்த்தரை வஞ்சிக்கிற யாவருக்கும் சாபம் வரும். நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே தசமபாகம் செலுத்தப்பட்டிருக்கிறது. (ஆதி 14:20; ஆதி 28:22) புதிய ஏற்பாட்டில் கிருபையின் காலத்திலும் கர்த்தருக்குத் தசமபாகம் செலுத்த வேண்டும் என்னும் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆசாரியத்துவத்தையும், கர்த்தருடைய ஊழியங்களையும் ஆதரிப்பதற்காகத் தசமபாகமும் காணிக்கைகளும் சேகரிக்கப்படுகிறது. (1கொரி 9:7-14). இஸ்ரவேல் தேசத்தில் தேவாலயமும், லேவியருடைய பட்டணமும் பண்டசாலை என்று அழைக்கப்படுகிறது.
தசமபாகம் கொடுப்பதினால் ஆசீர்வாதங்கள்
1. கர்த்தருடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்.
2. கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பார்.
3. பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பார்.
4. எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்.
கர்த்தருடைய ஆசீர்வாதம் வரும்போது தேசம் செழிக்கும் (மல் 3:12). வனாந்தரம் நல்ல விளைச்சல் நிலமாகும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் உண்டாகும் (ஏசா 35).
கர்த்தருக்கு விரோதமான பேச்சுக்கள் மல் 3:13-15
மல் 3:13. நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள்.
மல் 3:14. தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?
மல் 3:15. இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.
சீயோனிலுள்ள பாவிகள் கர்த்தருக்கு விரோதமாகத் தூஷண வார்த்தைகளைப் பேசுகிறார்கள். ""நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது'' (மல் 3:13) என்று கர்த்தர் சொல்லுகிறார். யூதர்களிடத்தில் பெருமையும், ஆணவமும் காணப்படுகிறது. அவர்கள் தேவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தங்களைப்பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள்.
கர்த்தருடைய நியாயத்தீர்ப்பும், கோபமும் அவர்கள்மீது வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். பாவிகள் தங்களுடைய பாவங்களை அங்கீகரித்து, தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும். தங்களுடைய பாவங்களினிமித்தமாய், கர்த்தர் தங்களுக்கு கொடுக்கும் தண்டனை நீதியானது என்பதை அங்கீகரித்து, தண்டனைகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும். ஆனால் யூதர்களோ கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தண்டனைகளை ஏற்றுக்கொள்ளாமல், கர்த்தருக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
யூதர்கள் தமக்கு விரோதமாகப் பேசின பேச்சுக்கள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் அவர்களோ, ""உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம்'' என்று கேட்கிறார்கள். யூதர்கள் மெய்யாகவே கர்த்தருக்கு விரோதமாகப் பேசினார்கள். அதை அவர்களால் மறுக்க முடியாது. ஆனால் கர்த்தர் தங்கள்மீது குற்றம் சொல்லுகிற பிரகாரம், தாங்கள் கர்த்தருக்கு விரோதமாக கடினமான பேச்சுககளைப் பேசவில்லை என்று சொல்லுகிறார்கள்.
""தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?'' (மல் 3:14) என்று இஸ்ரவேல் வம்சத்தார் கேட்கிறார்கள்.
தேவனை சேவிப்பது விருதா என்றும், தேவன் தங்களுடைய ஆராதனைக்கு பாத்திரரல்ல என்றும், அவர் விருதாவானவர் என்றும் யூதர்கள் சொல்லுகிறார்கள். கர்த்தரை ஆராதிப்பதினால் தங்களுக்கு ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லை என்று பக்தியில்லாத யூதர்கள் சொல்லுகிறார்கள்.
கர்த்தரை நம்புகிறவர்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்புவார்கள். பரிசுத்தமுள்வர்கள் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக, பயபக்தியோடும், துக்கித்தும் நடப்பார்கள். தங்களுடைய ஆத்துமாக்களை வருத்துவார்கள். இப்படிச் செய்வதினால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் உண்டாகப்போவதில்லை என்று பக்தியில்லாத யூதர்கள் சொல்லுகிறார்கள்.
இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. ஆனாலும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதினால், தங்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு கர்த்தரிடத்தில் உண்மையான பக்தியில்லை.
கர்த்தரிடத்தில் நம்பிக்கையிருப்பதுபோல வேஷம்போடுகிறார்கள். அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதுபோல மாய்மாலம்பண்ணுகிறார்கள். மாய்மாலக்காரருக்கு எல்லாமே வீணாகயிருக்கும். ஆகையினால்தான் மாய்மாலக்காரர், தெளிந்த புத்தியில்லாமல், ""தேவனை சேவிப்பது விருதா'' என்று சொல்லுகிறார்கள்.
பக்தியில்லாத யூதர்கள் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக துக்கித்து நடக்கிறார்கள். அவர்கள் தம்மை துக்கத்தோடு சேவிக்கவேண்டுமென்று கர்த்தர் எங்கும் சொல்லவில்லை. கர்த்தரை சேவிக்கிறவர்கள், அவரை சந்தோஷமாய்ச் சேவிக்கவேண்டும். கர்த்தருடைய சமுகத்திலே மகிழ்ந்து களிகூரவேண்டும். அவர்கள் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக சந்தோஷமாயும் உற்சாகமாயும் நடக்கவேண்டும்.
கர்த்தருக்கு முன்பாக துக்கித்து நடக்கவேண்டும் என்பது பக்தியில்லாத யூதர்களின் சொந்தக் கற்பனை. இது கர்த்தருடைய பிரமாணமோ அல்லது அவருடைய கட்டளையோ அல்ல. யூதர்கள் தங்களுடைய சுயவிருப்பத்தின் பிரகாரமாக, கர்த்தருக்கு முன்பாக நடந்துகொண்டு, கர்த்தர்மீது குறை சொல்லுகிறார்கள். தங்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை என்று வேதனையோடு பேசுகிறார்கள். தாங்கள் இன்னும் தரித்திரத்திலும், உபத்திரவத்திலும், பாடுகளிலும், வேதனைகளிலும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.
பக்தியில்லாத யூதர்கள் இங்கு சொல்லுகிற மதியீனமான வார்த்தைகளை, புதிய ஏற்பாட்டுக்காலத்திலே சதுசேயர்களும் சொன்னார்கள். அவர்கள் இம்மையை மாத்திரம் நம்பி, மறுமையை மறுதலித்துவிட்டார்கள். சதுசேயருக்கு உலகப்பிரகாரமான காரியங்கள் மாத்திரமே முக்கியமானதாயிருக்கிறது. அவர்கள் பரலோகத்தின் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
""இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்'' (1கொரி 15:19).
பக்தியில்லாத யூதர்கள் துன்மார்க்கத்தை விரும்புகிறார்கள். துன்மார்க்கம் பண்ணினால்தான் தங்கள் வாழ்க்கையில் செழிப்பாயிருக்க முடியும் என்பது இவர்களுடைய நம்பிக்கை. பொய்சொல்லுகிறவர்களும், பிறரை வஞ்சிக்கிறவர்களும், பிறருக்கு தீங்கு செய்கிறவர்களும் செழித்திருப்பார்கள் என்று பக்தியில்லாத யூதர்கள் நம்புகிறார்கள்.
ஆகையினால் இவர்கள் அகங்காரிகளை பாக்கியவான்கள் என்கிறார்கள். ""தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்'' என்றும், ""அவர்கள் தேவனை பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்கள்'' (மல் 3:15) என்றும் சொல்லுகிறார்கள். புறம்பான ஐசுவரியம் மெய்யான ஆசீர்வாதமல்ல. நம்முடைய இருதயத்தின் சந்தோஷமும், சமாதானமும் ஆறுதலுமே நமக்கு மெய்யான ஆசீர்வாதம்.
பாவிகள் தங்களுடைய பாவமான கிரியைகளினால் தங்களுக்கு ஐசுவரியத்தை சேர்த்து குவித்து வைக்கிறார்கள். அவர்களுக்கு ஐசுவரியம் சேருவதுபோல, அவர்கள்மீது கர்த்தருடைய கோபமும், சாபமும் வந்து குவியும். ஒருவன் துன்மார்க்கமான வழிகளில் ஐசுவரியத்தைச் சேர்க்கும்போது, அவனுக்கு சமாதானம் இருக்காது. அவனிடத்தில் தேவபக்தியோ, தேவனை நம்புகிற விசுவாசமோ இருக்காது.
""இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்'' (சங் 73:12). துன்மார்க்கர் தங்கள் ஆஸ்தியை விரும்புகிறார்கள். திரளான ஆஸ்தியை தங்களுக்கு பெரிதான ஆசீர்வாதம் என்று சொல்லுகிறார்கள். கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதமே நமக்கு மெய்யான ஐசுவரியம்.
துன்மார்க்கர் கொஞ்சகாலம் செழித்திருப்பார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பு துன்மார்க்கர்மீது நிச்சயமாகவே வரும். கர்த்தர் தமக்கேற்ற வேளையில், துன்மார்க்கரை நியாயந்தீர்ப்பார். துன்மார்க்கருக்கு அழிவு வரும். துன்மார்க்கனுடைய ஆஸ்தி, அவனுடைய அழிவிலிருந்து, அவனைத் தப்பிக்க வைக்காது. உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகை.
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாகத் தொடர்ந்து கலகம் பண்ணுகிறார்கள். கர்த்தருக்கு எதிர்த்து நிற்கிறார்கள். மல்கியாவின் புஸ்தகத்தில் கர்த்தர் கூறிய 14 கட்டளைகளுக்கு இஸ்ரவேல் புத்திரர் பத்து இடங்களில் கலகமான மறுமொழிகளைக் கூறியிருக்கிறார். (மல் 1:2).
கர்த்தருக்குப் பயந்தவர்கள் மல் 3:16-18
மல் 3:16. அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.
மல் 3:17. என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.
மல் 3:18. அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.
இந்தப் பூமியிலுள்ள மனுஷரில் அநேகர் துன்மார்க்கராயிருந்தாலும், அவர்கள் மத்தியில் கர்த்தருக்குப் பயந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தெய்வபக்தி குறைந்துபோனாலும், தேவதூஷணம் அதிகரித்தாலும், அவர்களுக்கு மத்தியிலே தெய்வபக்தியுள்ள ஜனங்களும் இருக்கிறார்கள். இவர்கள் கர்த்தர்மீது பக்திவைராக்கியமாயிருப்பார்கள். இவர்கள் கர்த்தரை நம்பி, கர்த்தருக்குப் பயந்து ஜீவிப்பார்கள். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்பதை இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
கர்த்தருக்கு பயந்தவர்கள், அவருடைய மகிமையையும், மாட்சிமையையும் பயபக்தியோடு அங்கீகரிப்பார்கள். கர்த்தருடைய தெய்வீக ஆளுகைக்கு தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள்.
இந்தப் பிரபஞ்சத்தின் சரித்திரத்திலே, கர்த்தருக்கு பயந்த மீதியான ஜனம், எல்லா காலங்களிலும் இருக்கிறார்கள். சில சமயங்களில் கர்த்தருக்கு மீதியானவர்களின் எண்ணிக்கை குறைவாகயிருக்கலாம். அவர்கள் கர்த்தருடைய நாமத்தைத் தியானித்துப் பார்ப்பார்கள். கர்த்தர் தம்முடைய வார்த்தையிலே தம்மைப்பற்றியும், தம்முடைய சித்தத்தைப்பற்றியும், தம்முடைய பராமரிப்புக்களைப்பற்றியும் எழுதியிருக்கிறார். கர்த்தருக்குப் பயந்தவர்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்ப்பார்கள். வேதத்தின் வார்த்தைகளைத் தியானித்து, அதன் மூலமாய் கர்த்தருடைய நாமத்தையும் தியானிப்பார்கள்.
கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள். தாங்கள் பயப்படும் கர்த்தரைப்பற்றி, அவர்கள் தங்களுக்குள்ளே கலந்து உரையாடுவார்கள். தமக்குப் பயந்தவர்களை கர்த்தர் ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்திருக்கிறார். அவர்கள் மத்தியிலே சகோதர ஐக்கியம் இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பாயும், ஆதரவாயும் பேசிக்கொள்வார்கள். அவர்கள் பேசிக்கொள்வதை கர்த்தரும் கவனித்துக் கேட்பார்.
கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் ஞானமாகப் பேசிக்கொள்வார்கள். அவர்களுடைய வார்த்தைகளில் பரிசுத்தமும் விசுவாசமும் இருக்கும். அவர்கள் ஒருவரோடொருவர் ஆவிக்குரிய காரியங்களை பேசிக்கொள்வதினால், அவர்களுடைய விசுவாசமும் பரிசுத்தமும் விருத்தியாகும்.
தேசத்திலே துன்மார்க்கரும், அகங்காரிகளும் அதிகரிக்கும்போது, கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒற்றுமையாயிருந்து கர்த்தரைத் துதிப்பார்கள். பரிசுத்தமாய் ஜீவிப்பார்கள். துன்மார்க்கர் துணிகரமாய்ப் பாவம் செய்யும்போது, கர்த்தருக்குப் பயந்தவர்களோ, கர்த்தரை நம்பி நன்மை செய்வார்கள். கர்த்தர்மீது தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைக் காத்துக்கொள்வார்கள்.
""சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்'' (யோபு 17:8).
பாவிகளும் தெய்வபக்தியில்லாதவர்களும் சத்தியத்தைப் புரட்டுவார்கள். தேவனைப்பற்றித் தூஷணவார்த்தைகளைப் பேசுவார்கள். இப்படிப்பட்ட காலத்தில்கூட, கர்த்தருக்குப் பயந்தவர்கள், கர்த்தருடைய நாமத்தினாலே, பாவிகளைக் கடிந்துகொள்வார்கள். பாவிகளால் கர்த்தருக்குப் பயந்தவர்களை வஞ்சிக்க முடியாது.
சாத்தான் யாரை விழுங்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கம்போல சுற்றிக்கொண்டிருக்கிறான். மாய்மாலக்காரர் யாரை வஞ்சிக்கலாம் என்று சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ளப்போதகர்களும் மனுஷர் மத்தியிலே கபட வார்த்தைகளைப் பேசுகிறார்கள். கர்த்தருக்கு விரோதமான தூஷணவார்த்தைகளைச் சொல்லுகிறார்கள். மனுஷருடைய ஆத்துமாக்களை வஞ்சிப்பதற்கு பிரயாசப்படுகிறார்கள்.
பாவிகளும் துன்மார்க்கரும் ஜனங்களுக்கு விரோதமாகத் தீங்கு செய்ய, சுறுசுறுப்பாய் கிரியை செய்யும்போது, கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்களுடைய கரங்களை பலப்படுத்திக்கொள்வார்கள். ஒருவரோடொருவர் பக்திவிருத்திக்கேதுவான வார்த்தைகளையும், ஆவிக்குரிய காரியங்களில் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையும் பேசி தங்களை கர்த்தருக்குள் திடப்படுத்திக்கொள்வார்கள்.
தமக்கு பயந்தவர்களுக்கு, கர்த்தரும் ஆதரவாயிருப்பார். அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும்போது, அவர்கள் பேசுவதை கர்த்தரும் கவனித்துக் கேட்பார். பரிசுத்தவான்களுடைய பேச்சு கர்த்தருக்குப் பிரியமானதாயிருக்கும்.
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு இரண்டு சீஷர்கள் எம்மாவு ஊருக்கு போகும் வழியிலே, இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் பேசிக்கொண்டு போனார்கள். அப்போது உயிர்த்தெழுந்த கிறிஸ்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அவர்களோடுகூட கிறிஸ்துவானவர் மூன்றாம் நபராக நடந்துபோனார்.
""அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்து போனார்'' (லூக் 24:13-15).
பரிசுத்தவான்கள் கர்த்தருக்காக ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் தமக்காக செய்கிற ஊழியங்களை, கர்த்தர் தம்முடைய நினைவிலே வைத்திருக்கிறார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது (மல் 3:16). கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களைப் பார்த்து, ""நல்லது, உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்களே, கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்'' என்று சொல்லுவார்.
கர்த்தரிடத்தில் ஞாபகபுஸ்தகம் இருக்கிறது. இந்தப் புஸ்தகம் கர்த்தருக்கு பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய சமுகத்திலே பெருமூச்சுவிட்டு, கண்ணீர் விட்டு அழுகிறவர்களுக்காகவும், ஞாபகபுஸ்தகம் இருக்கிறது.
""என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?'' (சங் 56:8).
கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களின் எல்லா காரியங்களையும், தம்முடைய ஞாபகபுஸ்தகத்தில் எழுதி வைத்திருக்கிறார். நாம் கர்த்தரைத் துதிக்கிற துதிகள், அவரைப் புகழ்ந்து பேசுகிற வார்த்தைகள், கர்த்தருக்காக நாம் செய்கிற ஊழியங்கள் ஆகிய எல்லாவற்றையும் கர்த்தர் தம்முடைய ஞாபகபுஸ்தகத்தில் எழுதி வைத்து நினைவுகூருகிறார். நாம் கர்த்தருக்காக செய்கிற ஊழியம் ஒருபோதும் வீணாய்ப்போவதில்லை. கர்த்தர் தமக்கு ஏற்ற காலத்திலே, நம்முடைய கிரியைகளுக்கு ஏற்ற பலனை, நமக்குக் கொடுப்பார்.
""என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள்'' (மல் 3:17) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் கர்த்தருடையவர்கள். கர்த்தர் அவர்களுக்காக சம்பத்தை சேர்த்து வைக்கிறார்.
""இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது'' (யாத் 19:5).
கர்த்தருடைய பரிசுத்தவான்கள் அவருக்கு சம்பத்தாயிருக்கிறார்கள். ""நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கீரிடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்'' (ஏசா 62:3). கர்த்தர் தம்முடைய சம்பத்தை சேர்க்கும் நாள் வரப்போகிறது.
கர்த்தர் பூமியின் மண்ணிலிருந்து தம்முடைய பரிசுத்தவான்களைக் கூட்டிச்சேர்ப்பார். அவர்கள் இப்போது எல்லா தேசங்களிலும் சிதறப்பட்டவர்களாக இருக்கிறார்கள். கர்த்தர் அவர்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்ப்பார். விதையை விதைக்கும்போது, அது நிலத்தின் எல்லா பாகங்களிலும் சிதறி விழும். அது அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கும்போது, அதை அறுவடை செய்து தானியத்தைக் கூட்டிச்சேர்ப்பார்கள். அதுபோலவே கர்த்தர் தம்முடைய ஜனத்தைக் கூட்டிச்சேர்ப்பார்.
கர்த்தருடைய ஜனத்தின்மீது அவருடைய கிருபை வந்து தங்கியிருக்கும். அவர்களுக்கு கர்த்தருடைய சமுகத்திலே பாதுகாப்பும், பராமரிப்பும் உண்டாயிருக்கும். ""ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்'' (மல் 3:17) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
""தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்'' (சங் 103:13). கர்த்தருடைய ஜனமாகிய நாம், பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு ஊழியம் செய்வதுபோல, நாமும் நம்முடைய கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும். இது கர்த்தருடைய ஊழியக்காரர்மீது விழுந்த கடமை.
நாம் கர்த்தருடைய பிள்ளைகளாயிருக்கிறோம். நாம் மறுபடியும் பிறந்து, நம்முடைய புதிய சிருஷ்டியின் மூலமாக, கர்த்தருடைய தெய்வீக சுபாவங்களை சுதந்தரித்துக்கொள்ளவேண்டும். கர்த்தருடைய ஆவிக்குரிய நன்மைகளுக்கும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கும் நாம் சுதந்தரவாளிகளாயிருக்கவேண்டும்.
நாம் கர்த்தருடைய ஊழியக்காரராயிருக்கவேண்டும். நாம் சும்மாயிருப்பதற்காக கர்த்தர் நம்மைத் தெரிந்தெடுக்கவில்லை. தம்முடைய பிள்ளைகள் ஒரு ஊழியமும் செய்யாமல் சோம்பேறியாகயிருக்கவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமல்ல. நாம் சும்மாயிருக்கவேண்டும் என்பதற்காக கர்த்தர் நமக்கு ஆவிக்குரிய பயிற்சிகளைக் கொடுக்கவில்லை. நாம் கர்த்தருடைய ஊழியத்தை செய்யவேண்டும். இதுவே நம்மைக் குறித்து கர்த்தருடைய சித்தம்.
கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் சந்தோஷமாயும், உற்சாகமாயும் ஊழியம் செய்யவேண்டும். கர்த்தருடைய அன்பே நம்மை ஆளுகை செய்து, அவருடைய ஊழியப்பாதையில் நம்மை வழிநடத்தவேண்டும். கர்த்தருடைய ஊழியக்காரர்கள், தங்கள் இருதயத்தில் பெருமையில்லாமல், மிகுந்த மனத்தாழ்மையோடு, கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும்.
நெகேமியா கர்த்தருக்கு அதிகமாய் ஊழியம் செய்தார். ஆனாலும் நெகேமியா கர்த்தருடைய இரக்கத்திற்காகவும், கிருபைக்காகவும் கெஞ்சி மன்றாடி ஜெபிக்கிறார்.
""ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக'' (நெகே 13:22).
கர்த்தர் தம்முடைய ஊழியக்காரரை கடாட்சிப்பார். அவர்களுக்கு தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் காண்பிப்பார். தம்முடைய பிள்ளைகளுக்கும், உலகப்பிரகாரமான பிள்ளைகளுக்கும் கர்த்தர் வித்தியாசத்தை உண்டுபண்ணுவார்.
""அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்'' (மல் 3:18) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
பக்தியில்லாத யூதர்கள் இப்போது தேவனுக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். அவர்கள் பேசுகிற பேச்சுக்கள் கடினமாயிருக்கிறது. தேவனை சேவிப்பது விருதா என்று சொல்லுகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் வித்தியாசமில்லை என்று சொல்லுகிறார்கள். துன்மார்க்கர்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வராது என்று சொல்லி துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள்.
கர்த்தரோ நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இடையே வித்தியாசத்தை உண்டுபண்ணுவார். தமக்கு ஊழியம் செய்கிறவனுக்கும், தமக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை, கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு காண்பிப்பார்.
கர்த்தரை விசுவாசியாதவர்கள், தங்கள் அக்கிரமத்தில் ஜீவித்து, துன்மார்க்கத்தில் மரித்துப்போவார்கள். கர்த்தருடைய தெய்வீக பாதுகாப்பும் பராமரிப்பும் துன்மார்க்கருக்கு கிடைக்காது. ரோமப்பேரரசின் சேனை எருசலேமை அழித்துப்போட்டார்கள். அப்போது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை தங்கள் மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத யூதர்கள், எருசலேமோடு சேர்ந்து அழிந்துபோனார்கள். கர்த்தரை நம்பினவர்களோ அழிவுக்குத் தப்பித்துக்கொண்டார்கள்.
கர்த்தர் இங்கு சொல்லுகிற தீர்க்கதரிசனம், இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, பூரணமாய் நிறைவேறும். மனுபுத்திரர் எல்லோரும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுவார்கள். ஒரு பிரிவிலுள்ளவர்கள் கர்த்தரை சேவிக்கிறவர்கள். மற்றொரு பிரிவிலுள்ளவர்கள் கர்த்தரை சேவிக்காதவர்கள். கர்த்தரை சேவிக்கிறவர்கள் நீதிமான்களாயிருப்பார்கள். கர்த்தரை சேவிக்காதவர்கள் துன்மார்க்கராயிருப்பார்கள்.
கர்த்தரை சேவிக்கிறவர்கள் அவருக்கு ஊழியம் செய்வார்கள். கர்த்தரை சேவியாதவர்கள் அவருக்கு ஊழியம் செய்யமாட்டார்கள். இந்த உலகத்தில் நீதிமானுக்கும் அக்கிரமக்காரனுக்கும் இடையே வித்தியாசம் காண்பது சிரமமாயிருக்கிறது. எல்லோரும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். துன்மார்க்கன்கூட நீதிமானின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு மாய்மாலம்பண்ணுகிறான்.
கர்த்தரிடத்தில் பக்தியில்லாதவன்கூட, பக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு, ஜனங்களை வஞ்சிக்கிறான். இக்காலத்தில் நம்முடைய பார்வையில், அநேகர் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள்போல இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய இருதயமோ கர்த்தரைவிட்டுத் தூரமாய் விலகிப்போயிருக்கிறது. அவர்களுடைய இருதயங்களில் பரிசுத்தமில்லை. அங்கே துன்மார்க்கம் நிரம்பியிருக்கிறது. கர்த்தர் அவர்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறார். கர்த்தர் துன்மார்க்கரை தம்முடைய ஊழியக்காரராக அங்கீகரிக்கமாட்டார்.
கர்த்தருக்கு பயந்தவர்களில் அநேகர் அவருக்கு ஊழியம் செய்வார்கள். அவர்கள் ஒருவேளை பிரபலமான ஊழியக்காரர்களாக இல்லாமலிருக்கலாம். அவர்கள் பெரிய ஸ்தாபனங்களை சேராதவர்களாகவும் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் செய்வார்கள். கர்த்தர் அவர்களுடைய இருதயங்களைப் பார்த்து, அவர்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தருடைய கடைசி நியாயத்தீர்ப்பு நாளின்போது, அவர் நீதிமானையும் துன்மார்க்கனையும் வெவ்வேறாகப் பிரிப்பார். கர்த்தருக்கு மறைவான காரியம் எதுவுமில்லை. அவர் மனுஷருடைய இருதயங்களை ஆராய்ந்து பார்த்து, நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இடையே இருக்கிற வித்தியாசத்தை, பிரத்தியட்சமாக வெளிப்படுத்துவார். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளின்போது எந்த மனுஷனாலும், அவருக்கு முன்பாக மாய்மாலம்பண்ண முடியாது. அன்று நம்முடைய உண்மையான சுபாவம் வெளிப்படும்.
மனுஷர் கர்த்தருக்குப் பயப்படும்போது இந்தச் சம்பவம் நடைபெறும். மனுஷருடைய பேச்சைக் கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருடைய சமுகத்தில் ஞாபகப்புஸ்தகம் ஒன்றுள்ளது. அதில் கர்த்தருக்குப் பயந்தவர்களின் பேச்சும், செயலும் எழுதப்பட்டிருக்கும்.
நிறைவேற வேண்டிய முன்னறிவிப்புகள்
1. என் சம்பத்தை நான் சேர்க்க வருவேன். (மல் 3:17).
2. நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.
3. அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கும் ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள். (மல் 3:18).
4. சூளையைப்போல எரிகிற நாள் வரும். (மல் 4:1).
5. அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்.
6. என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். (மல் 4:2).
7. நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
8. துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் (மல் 4:3).
9. நான் உங்களிடத்திற்கு எ-யா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். (மல் 4:5).
10. எலியா பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். (மல் 4:6).
விசுவாசிகளுக்கு ஒப்புமையாகக் கூறப்பட்டிருக்கிற காரியங்கள்
1. சம்பத்து (மல் 3:17)
2. கொழுத்த கன்றுகள் (மல் 4:2)
3. சூரியன் (நியா 5:31)
4. பொன் (யோபு 23:10)
5. கனிதரும் விருட்சம் (சங் 1)
6. மான் (சங் 42:1)
7. பச்சையான ஒலிவமரம் (சங் 52:8)
8. பனைமரம் (சங் 92:12)
9. கேதுருமரம் (சங் 92:12)
10. நட்சத்திரங்கள் (தானி 12:3)
11. கழுகுகள் (ஏசா 40:31; சங் 103:5)
12. சீயோன் மலை (சங் 125)
13. உப்பு (மத் 5:13)
14. வெளிச்சம் (மத் 5:14)
15. பட்டணம் (மத் 5:14)
16. விளக்கு (மத் 5:14)
17. கோதுமை (மத் 3:12-13)
18. பாலகர் (மத் 11:25)
19. மீன் (மத் 13:48)
20. ஊழியக்காரன் (மத் 25:21)
21. ஆடு (யோவான் 10; சங் 23)
22. கிளை (யோவான் 15)
23. ஆட்டுக்குட்டி (யோவான் 21)
24. மாளிகை (1கொரி 3:9)
25. பந்தயச்சாலையில் ஓடுகிறவர்கள் (1கொரி 9:24)
26. சரீரத்தின் அவயவங்கள் (1கொரி 12)
27. நிருபங்கள் (2கொரி 3:1-3)
28. ஸ்தானாபதிகள் (2கொரி 5:20)
29. தூண்கள் (கலா 2:9; வெளி 3:12)
30. போர்ச்சேவகர்கள் (2தீமோ 2:3)
31. மல்யுத்தம் பண்ணுகிறவன் (2தீமோ 2:5)
32. பாத்திரங்கள் (2தீமோ 2:20)
33. ஜீவனுள்ள கற்கள் (1பேதுரு 2:5)
34. ஆவிக்கேற்ற மாளிகை (1பேதுரு 2:5)
35. அந்நியர்களும், பரதேசிகளும் (1பேதுரு 2:11)
36. பிள்ளைகள் (1யோவான் 2:1,12)
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது இஸ்ரவேல் புத்திரர் தங்களுடைய தேசத்திற்குத் திரும்பி வருவார்கள். அங்கு நீதிக்கும், அநீதிக்கும் இடையேயிருக்கிற வித்தியாசத்தைக் காண்பார்கள். (மத் 24:29-31; ரோமர் 11:25-29).