ஆதாம் ஏவாள் - ஏதேன் தோட்டம்

ஆதாம் ஏவாள் - ஏதேன் தோட்டம்

பைபிளின் முதல் மனிதனான ஆதாம் வருகிறான். ஆதாம் பற்றி காண்போமா?


ஏதேன் என்ற அழகிய தோட்டத்தை உண்டாக்கி அதில் மனிதனை விடுகிறார் இறைவன். அந்த தோட்டம் முழுவதும் மரங்களும், செடி கொடிகளும், விலங்குகளும், பறவைகளும் மிகுந்து காணப்படுகின்றன. அந்த தோட்டத்தில் நீர் இரைக்க நான்கு ஆறுகள் ஓடுகின்றன - அவை பைசோன், கீகோன், இதெக்கேல், ஐபிராத்து. மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல என்ற இறைவன் ஆதாமுக்கு அயர்ந்த தூக்கம் வர செய்து, அவனது முதுகெலும்பில் ஒன்றை எடுத்து அதனை பெண்ணாக மாற்றுகிறார். அவள் பெயர் ஏவாள். ஆதாமும் ஏவாளும் சந்தோசமாக அந்த வனத்தில் வாழ்கின்றனர். அந்த தோட்டத்தில் இரண்டு வித்தியாசமான மரங்கள் உள்ளன. ஒன்று நன்மை தீமை அறிய செய்யும் அதிசய கனியை கொண்ட மரம், இன்னொரு மரம் சாகாவரம் அளிக்கும் அதிசய கனியை கொண்ட மரம். 





இறைவன் அவர்களிடம், 'நீங்கள் இந்த தோட்டத்தில் உள்ள எந்த கனியையும் உண்ணலாம், ஆனால் அந்த இரண்டு மரங்களின் கனியை மட்டும் உண்ண வேண்டாம், அதை உண்டால் நீங்கள் சாவீர்கள்' என்று எச்சரிக்கிறார். ஒரு நாள், ஏவாளிடம் ஒரு சர்ப்பம் வருகிறது. 'இந்த தோட்டத்தில் உள்ள எந்த கனியையும் உண்ண வேண்டாம் என்று இறைவன் உங்களிடம் கூறினாரா?' என்று கேட்டது. அதற்கு அவள், 'தோட்டத்தின் நடுவில் இருக்கும் இரண்டு மரங்களின் கனியை மட்டும் உண்ண வேண்டாம், அதனை உண்டால் நாங்கள் இறப்போம் என்றார்' என்கிறாள். அதற்கு சர்ப்பம், 'நீங்கள் சாவதில்லை, அதனை உண்டால் நீங்கள் இறைவனை போல் ஆகி விடுவீர்கள்' என்றது. சர்ப்பத்தின் சூழ்ச்சியில் வீழ்ந்த ஏவாள் முதலாவது நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை பறித்து உண்டாள். தன் கணவனான ஆதாமுக்கும் கொடுத்தாள், அவனும் உண்டான். அவர்கள் நன்மை தீமை அறியும் அறிவை அடைந்து விலங்குகளில் இருந்து வேறுபடுகின்றனர். தாங்கள் ஆடையின்றி இருப்பதை உணர்ந்து அத்தி மர இலைகளை தைத்து ஆடைகளை உருவாக்கி உடுத்தி கொள்கின்றனர்.

இறைவன் மாலை நேரத்தில் ஏதேனுக்கு வருகிறார். அவரை கண்டு இருவரும் ஒளிந்து கொள்கின்றனர். அப்பொழுது இறைவன் அவர்களை நோக்கி கூப்பிட, அவர்கள், 'நாங்கள் ஆடையின்றி இருப்பதால், உங்கள் முன் வர தயங்கி ஒளிந்திருக்கிறோம்' என்கின்றனர். அதற்கு அவர் ஆதாமை நோக்கி, 'நீ ஆடையின்றி இருக்கிறாய் என்று உனக்கு அறிவித்தது யார்? நான் உண்ண வேண்டாம் என்று கூறிய கனியை உண்டாயா?' என்கிறார். அதற்கு அவன், 'நீங்கள் எனக்கு கொடுத்த ஏவாள் அதனை எனக்கு தந்தாள், நான் உண்டேன்' என்றான். ஏவாள், 'சர்ப்பம் என்னை வஞ்சித்தது, அதனால் நான் உண்டேன்' என்றாள். இதனால் இறைவன் சர்ப்பத்தை நோக்கி, 'நீ இப்படி செய்ததினால், அனைத்து விலங்குகளிலும் நீ சபிக்கப்பட்டிருப்பாய். வாழ்நாளெல்லாம் உன் வயிற்றால் நகர்ந்து மண்ணை தின்பாய்' என்று சபிக்கிறார். அடுத்து ஏவாளை நோக்கி, 'நீ இந்த தவறை செய்த படியினால் நீ குழந்தை பெறும் நேரத்தில் மிகுந்த வேதனையை அடைந்து துன்பத்தோடே குழந்தையை பெற்றெடுப்பாய், வாழ்நாளெல்லாம் உன் கணவனுக்கு கீழ்ப்பட்டு இருப்பாய். அவன் உன்னை ஆண்டு கொள்வான்' என்று சபிக்கிறார். இறுதியாக ஆதாமிடம், 'நீ என் வார்த்தையை கேளாமல் அந்த கனியை உண்டபடியினால் வாழ்நாளெல்லாம் வருத்தப்பட்டு உழைத்து உண்பாய். மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட நீ மண்ணுக்கே திரும்புவாய்' என்று சாபமிடுகிறார்.

இறுதியாக அவர்களுக்கு தோல் உடைகளை உண்டாகி உடுத்தி, உழைத்து உண்ணும் படி, அவனை ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேற்றி விடுகிறார். அவன் சாகாவரம் அளிக்கும் ஜீவவிருட்சத்தின் கனியை உண்டுவிடாமல் தடுக்க, ஏதேனை சுற்றி வேலியடைத்து, தீப்பிழம்புடைய வாள்களை ஏந்திய கேரூபீன்கள் என்ற தேவதூதர்களை ஏதேனுக்கு காவலாக அமர்த்துகிறார். வெளியேற்றப்பட்ட ஆதாமும் ஏவாளும் இறைவனை மறக்கவில்லை. அவர்களுக்கு காயீன், ஆபேல் என்று இரு மகன்கள் பிறக்கின்றனர். காயீன் பயிரிடுகிறவனானான், ஆபேல் மந்தை மேய்ப்பவனானான். காயீனும், ஆபேலும் தங்கள் முதற்பலனை இறைவனுக்கு படைக்கின்றனர். ஆபேலின் படைப்பை இறைவன் விரும்புவதை அறிந்த காயீன் தன் இளையனான ஆபேலை கொலைசெய்கிறான். இதனால் இறைவன் காயீனை சபிக்கிறார். காயீன் அவ்விடம் விட்டு சென்றுவிடுகிறான். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பல குழந்தைகள் பிறக்கின்றனர், அவர்கள் மூலமாக பூமி எங்கும் மனிதன் பரவுகிறான், நாகரீகங்கள் தோன்றுகின்றன"

இனி இதனை உண்மையா என்று பார்ப்போமா?

பைபிள் உண்மையில் ஒரு புதிர். பல இடங்களில் குறிப்பாக சில செய்திகளை வெளியிடுகிறது. இந்த ஆதாம் ஏவாள் கதை 'தவ்ராத்' எனப்படும் பைபிளின் முதல் ஐந்து ஆகமங்களில் முதலான ஆதியாகமத்தில் உள்ளது. தவ்ராத் சில செய்திகளை குறிப்பாக கூறியுள்ளதாக புதிர் போடுகிறது. கீழே காண்க.

"மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப் பட்டவைகளோ, இந்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளின் படியெல்லாம் செய்யும் படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்." - உபாகமம் 29:29

முடிவு காலம் நெருங்க நெருங்க தான் இதற்கான உண்மையான விடைகளை தேடி மக்கள் ஆராய்வர், அறிவு பெருகும் என்று கூறுகிறது.

"தானியேலாகிய நீயோவென்றால், முடிவு காலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதை பொருளாக வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரை போடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்." - தானியேல் தீர்க்கதரிசனம் 12:4

விளக்கம்:
"தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்." - ஆதியாகமம் 2:7

பைபிள் கூறுவது உண்மைதானா? பரிமாண கொள்கை படி, நுண்ணுயிரிகள் நீரில் இருந்து உண்டாயிருக்க வேண்டும் என்பதே! ஒரு உடலமைப்பு தோன்ற கார்பன் அவசியம். நீரில் ஹைட்ரஜென், ஆக்சிஜென் மட்டுமே உள்ளன. எனவே மண்ணில் இருந்து கலந்த ரசாயனங்கள் தான் உடலமைப்பு தோன்ற காரணம். நுண்ணுயிரிகள் முதல் படிப்படியாக பரிமாணம் ஏற்பட்டு இறுதியில் மனிதன் தோன்றினான் என்பது அறிவியல். எனவே மனிதன் மண்ணில் இருந்து உருவானான் என்பது பிழையில்லை.

மனிதனுக்கு இருப்பது இறைவனின் உயிரா? மண்ணில் இருந்து நுண்ணுயிரிகளின் உடலமைப்பு தோன்றியது என்று கண்டோம். உடலைமப்பு வந்துவிட்டது ஆனால் உயிர்? உயிரற்ற பொருட்களில் இருந்து உயிர் தோன்ற வாய்ப்பே இல்லை என்பது அறிவியல் கண்ட உண்மை - (ABIOGENESIS). அதன் படி நீரில் கலந்த மண்ணிலிருந்து அமைந்த உடலமைப்புக்கு உயிர் இறைவனை அன்றி எவராலும் தர இயலாது! இன்று வரை உயிர் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு விழித்து நிற்கிறது விஞ்ஞானம்! எனவே மனிதன் மட்டுமல்ல அனைத்து ஜீவன்களும் கொண்டுள்ளது இறைவனின் உயிர் தான்! இதனை பைபிள் உருவகமாக சித்தரிக்கின்றது!

மனிதன் பாம்பு கூட பேசினானா? அந்த பாம்பு கால்களுடனா இருந்தது? - பைபிள் கூறுகிறதே!

அதே பைபிள் தான் அந்த பாம்பு "சாத்தான்" என்று பின்னால் கூறுகிறது. அவன் எடுத்து வந்து மனிதனை வஞ்சித்த உருவம் பாம்பின் உருவம். ஆதாமும், ஏவாளும் மிருகங்களை போல் ஆரம்பத்தில் இருந்ததால், பாம்பு பேசுகிறதே என்று ஆச்சரியப்படவில்லை என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் பாம்புகள் காலுடனா இருந்தன? பைபிள் என்ன புது கதை கூறுகிறது? என்று வியக்கவேண்டாம்! கூகிளில், பாம்பு இனத்தின் முந்தய உருவம் எப்படி இருந்தது (SNAKE'S ANCESTORS HAD LEGS) என்று தேடி பாருங்கள். பாம்புகள் காலுடன் தான் இருந்தன என்று அறிவியல் கூறுகிறது. 'மண்ணை தின்பாய்' என்று ஏன் இறைவன் சாபமிட்டார்? பாம்பு என்ன மண்ணையா உண்கின்றன? மண்ணை தின்பாய் என்றால், மண்ணை மென்று விழுங்குவது அல்ல! மண்ணோடு மண்ணாக இருந்து தன் காலத்தை கழிக்க வேண்டும் என்பது பொருள்!


மனுசி மனிதன் எலும்பில் இருந்து படைக்கப்பட்டதாக பைபிள் கூறுகிறது உண்மையா?
பைபிளின் கூறுவது ஒரு குறிப்பு.  "இறைவன் மனுசியை மனிதனுக்கு அயர்ந்த தூக்கம் வர செய்து, அவன் முதுகு எலும்பில் ஒன்றை எடுத்து அதிலிருந்து அவளை படைத்தார். மனிதனுக்கு அவன் எலும்பு எடுக்கப்பட்ட இடத்தை தசையால் அடைத்தார்" என்று கூறுகிறது. அதன் பின் வரும் வரிசையில், அவளை மனிதனிடம் கொண்டு வந்து, "இதோ உன் மனைவி" என்கிறார். அதற்கு அவன், "இவள் என்னிலிருந்து எடுக்கப்பட்டவளாய் இருக்கிறாள்" என்கிறான். அதற்கு இறைவன், "இனி மனுஷன் அவன் தாய் தந்தையை விட்டு பிரிந்தாலும், அவன் தன் மனைவியோடு ஒன்றி இருப்பான். அவர்கள் ஒரே மாமிசமாய் இருப்பார்கள்" என்கிறார். இதில் இருந்து, புரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், "மனைவியே கணவனுக்கு முதுகு எலும்பு என்பதை ஆதாம் போல் மனிதர்கள் உணர வேண்டும், கணவனும் தானும் ஒன்று என்பதை மனைவி புரிந்து நடக்கவேண்டும், அவர்கள் இருவரும் வேறாய் இருந்தாலும், தாய் தந்தையை விட்டு பிரிந்தாலும் ஒன்றி வாழ வேண்டும்" என்பதே. ஆதாமுக்கும், ஏவாளுக்கும் தாய் தந்தை இல்லை. எனவே அவர்களின் தாயும் தந்தையும் இறைவனே. இறைவன் தன்னை விட்டு இவர்கள் பிரிந்தாலும் ஒன்றி வாழ வேண்டும் என்று கூறுவதை புரிந்து கொள்ள வேண்டும்.

நன்மை தீமை அறியும் மரம், ஜீவவிருட்சம் என்றால் என்ன? நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை புசித்தால், மனிதன் அறிவு பெறுவான் என்கிறது பைபிள். ஜீவவிருட்சம் கனியை புசித்தால், நித்திய ஜீவன் பெறுவான் என்கிறது. இது உண்மையா? 
பைபிள் காணப்படும் நன்மை தீமை அறியும் மரத்தின் கனி என்பதும் ஒரு குறிப்பு. மனிதன் உண்மையில் எப்படி அறிவை பெற்றான் என்பதை அது 'நன்மை தீமை அறியும் கனி' என்று கூறி மறைத்துள்ளது. அதனை தான் 'மறைக்கப்பட்டவைகள்' என்று வேதம் கூறுகிறது. நன்மை தீமை அறியாத போது, மனிதனிடம் பொறாமை இல்லை, வஞ்சகம் இல்லை, வெறுப்பு இல்லை, கோவம் இல்லை, தன்னலம் இல்லை என்று கூறுகிறது. இறைவன் சொல்லுக்கு கட்டுப்படாமல், அவர் பேச்சை மீறி பிசாசு சொன்ன வார்த்தையை கேட்டு மனுசி மூலம் மனிதன் தவறு செய்து, இன்றுள்ள குணத்தை பெற்றான் என்பதே உண்மை. அது எந்த செயல் என்கிற போது, "நன்மை தீமை அறியும் கனி" என்று ஒரு குறிப்பை கூறி மறைத்துள்ளது - இதுவே பொருள். இதற்கு சான்று ஜீவவிருட்சம் என்ற மரத்தின் கனியை உண்டால் மரணமில்லை என்று கூறும் அதே பைபிள், இயேசு நாதர் நல்லவர்களுக்கு "நித்திய ஜீவன்" அருள்கிறார் என்று பின்பு மாற்றி கூறுகிறது. பூமியில் இருந்தாதாக முதல் புத்தகத்தில் கூறப்படும் அந்த மரத்தை, பரலோகத்தில் இருக்கிறது என்று கடைசி புத்தகத்தில் கூறியிருக்கிறது! இதற்கு வேறு எடுத்துகாட்டு - ஆவியின் கனிகள் என்று பைபிள் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆவியின் கனிகள் என்றால் "பொறுமை, அன்பு, பக்தி ...." என்று விளக்குகிறது. எனவே மனிதன் இறைவனின் சொல்பேச்சு கேளாமல், பிசாசுகளின் பேச்சை கேட்டு அறிவை அடைந்தான் என்றுதான் கூறுகிறது. அவன் என்ன செயல் செய்து அறிவை அடைந்தானோ அதனை "நன்மை தீமை அறியும் கனி" என்று மறைத்துள்ளது.


இது இவர் யார் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.