எகிப்து தேசம் & யோசேப்பு - வரலாற்று தடயங்கள்
இஸ்ரவேலர்களின் அடிமைக் காலத் துயரங்களை யோசேப்பின் கதையிலிருந்து பைபிள் கூறத் தொடங்குகிறது. யோசேப்பு ஆபிரகாமின் விசுவாசமும், ஈசாக்கின் நற்பண்பும், யாக்கோபின் தன்னம்பிக்கையும் கொண்டவர். பைபிளில் காணப்படும் வியப்புக்குறிய மனிதர்களுள் இவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
- பைபிளில் கணக்கிட, யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு எகிப்திய அதிகாரியாக உயர்த்தப்பட்ட நாட்கள் கி.மு 1900-1850 என்ற கால அளவிற்குள் வருகின்றன.
இக்காலங்களில் எகிப்தை 12ஆம் வம்சத்தை சேர்ந்த இரண்டாம் செனுசுரத் (கி.மு 1897-1878), மூன்றாம் செனுசுரத் (கி.மு 1878 - 1839) என்ற இரண்டு அரசர்கள் ஆண்டனர். எனவே, இரண்டாம் செனுசுரத்தின் நாட்களில் யோசேப்பு எகிப்தின் மேல் அதிகாரியாகி மூன்றாம் செனுசுரத்தின் ஆட்சியிலும் பதவி வகித்தார் என கணக்கிடலாம். இஸ்ரவேல் புத்திரர் எகிப்தை அடைந்து 71 ஆண்டுகளான பின் (கி.மு 1805) யோசேப்பு இறந்தார். கி.மு 1805-இல் அரசி சொபெக்நெப்ரூ (கி.மு 1806-1802) எகிப்து தேசத்தை ஆண்டு வந்தார். யோசேப்பு இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் 12ஆம் வம்சத்தின் ஆட்சி வீழ்ந்தது.
யோசேப்பை உறுதிப்படுத்தும் தடயங்கள்:
1) எகிப்திற்கு விற்கப்படும் யோசேப்பு:
கி.மு 2000 -1800 காலங்களில் செமித்தியர்கள் எகிப்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமைகளாக பெறப்பட்ட ஆசியர்களின் பெயர்களை 12ஆம் வம்சத்தை சேர்ந்த சில எகிப்திய ஹியராடிக் (சமயஞ்சார்ந்த) பாப்பிரஸ்கள் குறிப்பிடுகின்றன. பண்டைய எகிப்து தேசத்திற்கும், மெசப்பொத்தொமிய தேசங்களுக்கும் நிலவிய அடிமைவர்த்தகத்தை இதனால் அறியலாம்.
Genesis 37:28 -So when the Midianite merchants came by, his brothers pulled Joseph up out of the cistern and sold him for twenty shekels of silver to the Ishmaelites, who took him to Egypt. (NIV) |
ஆதியாகமம் 37:28 - அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிற போது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக் காசுக்கு* விற்றுப் போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள்.
* தமிழ் பைபிளில் இருபது வெள்ளிக் காசுகள் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 'இருபது சேக்கல்' அல்லது 'இருபது நிறைவெள்ளி' என்பதே பொருத்தமான தமிழ் சொற்கள். பண்டைய சுமேரியர்களும் எகிப்தியர்களும் வெள்ளியை இடைநிறுத்தி கொடுத்து பொருட்களை வாங்கி வந்தனர். 11.5 கிராம் இடை கொண்ட வெள்ளி ஒரு சேக்கல் எனப்பட்டது. அக்காலத்தில் காசுகள் (coins) வழக்கத்தில் இல்லை.
- 1 சேக்கல் - 11.5 கிராம் வெள்ளி
- 20 சேக்கல் - 230 கிராம் வெள்ளி
- 1 திபன் (deben) - 90 கிராம் வெள்ளி
- 1 கித் (kit) - 9 கிராம் வெள்ளி
ஆதியாகமம் 37:28 யோசேப்பு 20 சேக்கல் வெள்ளிக்கு விற்கப்பட்டதாக கூறுகிறது. யோசேப்பு கி.மு19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அக்காலத்தில் ஒரு அடிமைக்கு 20 சேக்கல் (230 கிராம் வெள்ளி) என்பது மிக சரியான விலை. பண்டைய எகிப்து பதிவேடுகள் இதனை உறுதி செய்கின்றன.
Behold, I have sent you Hanya, the commissioner of the archers, with merchandise in order to have beautiful concubines, i.e. weavers; silver, gold, garments, turquoises, all sorts of precious stones, chairs of ebony, as well as all good things, worth 160 deben. In total: forty concubines - the price of every concubine is forty of silver. Therefore, send very beautiful concubines without blemish.- Letter from Amenhotep III to Milkiluதமிழாக்கம்: "அழகான அடிமைப் பெண்களை உன்னிடத்தில் பெற்று வர வில்லாளர்களின் அதிகாரியான அன்யாவிடம் 160 திபன் மதிப்புள்ள நெசவாளர்கள், பொன்வெள்ளிகள், பட்டாடைகள், ரத்தினங்கள், விலையுர்ந்த கற்கள், கருங்காலிமர நாற்காலிகள் என பலவித நற்பொருட்களை கொடுத்து அனுப்பியுள்ளேன். ஒரு அடிமைப் பெண்ணின் விலை 40 வெள்ளி என்ற கணக்கில் 40 அடிமைப் பெண்களாகிறது. எனவே குறையில்லாத அழகான அடிமை பெண்களை அனுப்பி வை"160 திபன் / 40 = 4 திபன் = 40 கித் = 360 கிராம் வெள்ளி = 31 சேக்கல்
மேற்கோளில் உள்ள குறிப்பு கி.மு 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த எகிப்திய மன்னனின் தூதுச் செய்தி. கி.மு 14ஆம் நூற்றாண்டில் ஒரு அடிமைக்கு சுமார் 30 சேக்கல் விலையாக கருதப்பட்டது. இக்குறிப்புகளைக் கணக்கில் கொண்டால், கி.மு 19ஆம் நூற்றாண்டில் ஓர் அடிமைக்கான விலை 20 சேக்கலாகிறது.
2) எகிப்தில் நிலவிய அநீதிகள்:
இஸ்மவேலர்கள் யோசேப்பை பாரோவின் பிரதானியான போத்திபாரிடத்தில் விற்றனர். போத்திபார் அவரை தன் வீட்டு விசாரணைக்காரனாக்கினார். அந்நாட்களில் போத்திபாரின் மனைவி யோசேப்புடன் தகாத உறவு கொள்ள முயல்கிறாள். அவர் தனக்கு இணங்காததை அவள் கண்ட போது, தன் கணவனிடத்தில் அவரைக் குறித்து பொய் குற்றஞ்சாட்டி அவரை சிறைத் தண்டனைக்குள்ளாக்கினாள். (ஆதியாகமம் 39)
இதே கதை 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த "பாப்பிரஸ் டி'ஆர்பினி"என்ற எகிப்திய ஓலையில் காணப்படுகிறது.
இக்கதையில் இரு சகோதரர்கள் காணப்படுகின்றனர். அண்ணனின் மனைவி இளையவனுடன் தகாத உறவு கொள்ள விரும்புகிறாள். அதற்கு அவன் இணங்காததைக் கண்ட அப்பெண், கொளுந்தன் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாய் தன் கணவனிடம் பொய் கூறுகிறாள். இதனால் அண்ணன் தம்பியைக் கொலை செய்ய தேடுகிறான். ஆனால் உண்மை கண்டுபிடிக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்படுகிறாள்.இக்கதை போத்திப்பார் மனைவி குறித்து அக்காலங்களில் நிலவிய செய்தியைக் கருப்பொருளாக வைத்து எழுதப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
கோதுமை தானியங்களை பெற்றுகொண்டதாக எகிப்தின் தலைமை சுயம்பாகி ஒருவர் பானை ஓட்டில் ஒப்புதல் எழுதியுள்ளார். |
சிறையில் வாடிய நாட்களில், எகிப்து ராஜனின் பானப்பத்திரக்காரனும், சுயம்பாகியும் தங்கள் சொப்பனங்களுக்குரிய பொருளை யோசேப்பிடம் கேட்டறிந்தனர் (பைபிள்). "பானப்பத்திரக்காரன்", "சுயம்பாகி" என்ற பட்டப்பெயர்கள் எகிப்திய கையேடுகளில் காணப்படுகின்றன. இத்தகைய அரண்மனைப் பணியிடங்கள் அக்கால எகிப்து தேசத்தில் விளங்கி வந்தன என இதனால் அறியலாம்.
பாரோ மன்னர்கள் தங்களது பிறந்தநாட்களில் சிறைகைதிகளை விடுவித்து வந்தனர் என ரொசெட்டாக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இச்செய்தியை ஆதியாகமம் 40:20,21 வசனங்களும் கூறுகின்றன.
3) யோசேப்பு உயர் அதிகாரியாகிறார்:
இறைவன் யோசேப்பை நினைத்தருள பாரோ சொப்பனங்கண்டு கலங்குகிறான். பாரோ கண்ட கனவிற்குரிய பொருளை யோசேப்பு எடுத்துக் கூறுகிறார். மகிழ்ந்த மன்னன் அரண்மனைப் பணியில் அமர்த்தி அவரை பெருமைப்படுத்துகிறான் (ஆதியாகமம் 41). அமர்னா களிமண் பலகைகளில் பாரோ மன்னர்கள் செமித்தியர்களை அரண்மனைப் பணிகளில் அமர்த்தியதாக செய்திகள் காணப்படுகின்றன.
ஆதியாகமம் 41:14 - அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல் கிடங்கிலிருந்து கொண்டு வந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்
பாரோக்களும், எகிப்திய அரண்மனை பிரதானிகளும் மீசைத்தாடி மயிர்களை சவரஞ்செய்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்வழக்கம் எகிப்தின் பாரம்பரிய சடங்குகளில் மிகவும் தொன்மையானது. பாரோ மன்னர்கள் தங்களது முக்கிய பிரதானிகளுக்கு பொற்கச்சையை சூட்டி பெருமைப்படுத்தும் மரபையும் எகிப்திய பதிவேடுகள் கூறுகின்றன. பண்டைய ஓவியங்களிலும் இந்த மரபைக் காணலாம்.
ஆதியாகமம் 41:41-43,45: "பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின் மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்து தேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.... பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியன் போத்திபிராவின் குமாரத்தி ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்"
யோசேப்பு காலத்தைச் சேர்ந்த ரா கோவிலின் மீந்துள்ள பகுதி. (ஓன் பட்டணம்) |
சாப்நாத்பன்னேயா என்பது பாரோ யோசேப்புக்கு இட்ட எகிப்திய பெயரின் எபிரேயச் சொல். மெய்யான எகிப்திய பெயரைக் குறித்து இன்றும் தெளிவான முடிவுகள் இல்லை. 'போத்திபேரா'என்பதற்கு 'ராவினால் கொடுக்கப்பட்டவர்' என்பது பொருள். பண்டைய எகிப்தியர்கள் 'ரா' என்ற சூரிய கடவுளை வழிபட்டு வந்தனர், இவ்வழிபாட்டிற்கு பெயர் பெற்ற ஓர் பண்டைய எகிப்து நகரமே ஹீலியொபோலிஸ் (ஓன்பட்டணம்). பாரோன் தன்னுடைய இரண்டாம் இரதத்தையும் யோசேப்புக்கு கொடுத்தான். 14ஆம் வம்சத்தில் இருந்தே எகிப்து தேசத்தில் இரதங்களைப் பயன்படுத்த தொடங்கினர் என்ற செய்தி நிலவி வருகிறது. இது தவறு. 14,15-ஆம் வம்சங்களில் பெருவாரியான தேர்களைக் கட்டி போர்களுக்கு பயன்படுத்த தொடங்கினர். எனினும் அதற்கு முந்திய காலங்களில் இருந்தே பாரோ மன்னர்களும் முக்கிய பிரதானிகளும் இரதங்களை சுயதேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.
பாரோ யோசேப்பை தனக்கடுத்த நிலையில் பணி அமர்த்தினான் என பைபிள் கூறுகிறது. எகிப்திய அரண்மனைகளில் மன்னனுக்கு அடுத்த அதிகாரங்கள் மதகுருகளுக்கும் அமைச்சர்களுக்கும் தரப்பட்டிருந்தன. எனினும் அமைச்சர்களைக் குறித்து அனைத்து ராஜவம்சங்களிலும் குறைந்த குறிப்புகளே உள்ளன. இரண்டாம் செனுசுரெத், மூன்றாம் செனுசுரத் அரசாட்சிகளில் 'சொபெக்-எம்ஹத்', 'நம்ஹொடப்' என்ற இரு அமைச்சர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இருவரும் மூன்றாம் செனுசுரெத்தின் பிற்காலத்தை சார்ந்தவர்கள். நம்ஹொடப் அமைச்சர் பணியோடு மன்னனின் பிரதான உதவியாளராகவும் செயலாற்றிருக்கிறார். இதுவரை நம்மிடம் உள்ள எகிப்திய வரலாற்றில் அமைச்சராகவும், பிரதான உதவியாளராகவும் விளங்கிய ஒரே நபர் இவரே. நம்ஹொடப் யோசேப்பாக இருக்க வாய்ப்புகள் இல்லை. எனினும் 2ஆம், 3ஆம் செனுசுரத் மன்னர்களது காலங்களில் யோசேப்பு அமைச்சராகவும், பிரதான உதவியாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற பின், நம்ஹொடப் அப்பணிக்கு உயர்த்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. 'பார்வோனுக்கு தகப்பன்' என்பது ஆன்மீக ஆலோசனைகளை எடுத்துக்கூறும் பணியைக் குறிக்கும்.
ஆதியாகமம் 45:8 - "ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்"
4) பஞ்சம் உண்டான காலம்:
ஆதியாகமம் 41:48,49 - அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களை எல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான். இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
குறிப்பு: இம்மூன்று சுவர் ஓவியங்களும் பண்டைய எகிப்தின் வேளாண்மை பணிகளைக் குறிக்கவே இங்கு பதிக்கப்பட்டுள்ளன. யோசேப்பு காலத்தில் நிகழ்ந்த விளைச்சலை குறிப்பதாக எண்ணவேண்டாம்.
யோசேப்பு பணியிலிருந்த போது, செழிப்பான பருவங்களில் விளைந்த தானியங்களைத் திரட்டி கடற்கரை மணலைப் போல சேர்த்து வைத்தார். இதனால் பஞ்சம் உண்டான காலங்களில் எகிப்து தேசம் காப்பாற்றப்பட்டது என பைபிள் கூறுகிறது. எகிப்து தேசம் முழுவதும் அதிக கொள்ளளவு கொண்ட பண்டைய களஞ்சியங்கள் (குதிர்கள்) காணப்படுகின்றன. இக்களஞ்சியங்கள் பெருமளவான கோதுமை தானியங்களைக் கொள்ளும். கி.மு 2000-1800 காலக்கட்டங்களில் செய்யப்பட்ட களஞ்சிய கட்டமைப்பு மாதிரிகளும் எகிப்தில் பெரிதளவில் கண்டெக்கப்பட்டுள்ளன.
ஆதியாகமம் 41: 53,54,56,57 - எகிப்து தேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின், யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது.
எகிப்து-மெசப்பொத்தோமிய தேசங்களில் ஏழு வருட பஞ்சம் நிகழ்ந்திருப்பதை பல தடயங்கள் உறுதி செய்கின்றன. நைல் டெல்டா பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு கல்வெட்டு (Famine Stela) எகிப்தில் நிலவிய 7 வருட பஞ்சத்தைக் குறிப்பிடுகிறது. நைல் நதியில் நீர்வரத்து நின்று, எகிப்து தேசத்தில் பஞ்சம் கொடிதாகிறது. பஞ்சத்தின் கொடுமையை தாங்காத மன்னன் புரோகிதர்களை அழைத்து பரிகாரம் கேட்கிறான். மன்னனின் துயர்நீக்க புரோகிதர்கள் நைல்நதியை வணங்கி வந்தனர். அச்சமயம் நைல் நதிதேவன் தலைமை புரோகிதனின் கனவில் தோன்றி விரைவில் பஞ்சம் நீங்கும் என ஆறுதல் கூறுகிறான். விடியற்காலை எழுந்தவுடனே புரோகிதன் இச்செய்தியை அறிவிக்க, மன்னன் மகிழ்ந்து நைல் நதிதேவனுக்கு கோவில் கட்டினான். இவ்வாறு இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கதையில் காணப்படும் மன்னன் ஜோசர், தலைமை புரோகிதரின் பெயர் இம்ஹொடப். ஜோசர் மூன்றாம் வம்சத்தை சார்ந்த எகிப்திய பாரோ மன்னன் - கி.மு 2670 காலத்தை ஒட்டி வாழ்ந்துள்ளார். இவரது தலைமை மதகுருவாக இம்ஹோடப் விளங்கினார்). இது யோசேப்பின் கதையை ஒத்திருப்பதைக் காணலாம்.
சில பைபிள் ஆய்வாளர்கள் யோசேப்பும் இம்ஹோடப்பும் ஒருவரே என கருத்து தெரிவிக்கின்றனர். இது தவறு. பைபிள் கூறுகின்ற காலக் குறிப்புகளைக் கணக்கில் கொண்டால் யோசேப்பு வாழ்ந்த காலம் கி.மு 19ஆம் நூற்றாண்டு என்று திட்டவட்டமாக தெளிவாகும். இம்ஹோடப் கி.மு 27ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் - யோசேப்பு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் பணியாற்றியவர். யோசேப்பும், இம்ஹோடப்பும் ஒரே நபர் அல்ல. வேறுசிலர், பிற்கால இஸ்ரவேலர்கள் இக்கதையை திருத்தஞ்செய்து தங்களது இறைவனை போற்றிப் புகழ்ந்துள்ளதாக கருதுகின்றனர். இதுவும் தவறான கருத்து. இக்கதையில் கூறப்பட்டுள்ள ஜோசர், இம்ஹோடப் ஆகிய நபர்கள் யோசேப்பிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும், இக்கதை பைபிளிற்கு பின்பு எழுதப்பட்டது தான். இக்கல்வெட்டு கி.மு 332-இல் செதுக்கப்பட்டது. பைபிள் (ஆதியாகமம்) இக்கல்வெட்டிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. ஜோசரும், இம்ஹோடப்பும் வாழ்ந்த காலத்தை (கி.மு-27ஆம் நூற்றாண்டு) ஒட்டி இக்கல்வெட்டு கூறுகின்ற கதைக்கு எவ்வித தடயங்களும் இதுவரை இல்லை. பிற்கால எகிப்தியர்கள் இக்கதையை ஜோசருக்கும், இம்ஹோடப்பிற்கும் இணைத்து எழுதிருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
இக்கல்வெட்டைப் போலவே எகிப்திய பாப்பிரஸ் (pWien D6319)ஒன்று அத்தேசத்தில் நிலவிய 7 வருட பஞ்சத்தை கூறுகிறது. நெபர்காசேகர் என்ற பாரோவின் ஆட்சியில் கொடிய பஞ்சம் நிகழ்ந்ததாக இப்பாப்பிரஸ் கூறுகிறது. அச்சமயம் பாரோவின் சொப்பனத்தில் எகிப்தியரின் தேவன் தோன்றி தேசத்தின் கோவில்களைச் சீர்படுத்துமாறு கூறுகிறான். மன்னன் இணங்கி எகிப்தின் கோவில்களைச் சீர்படுத்த, நைல் நதியில் நீர்வரத்து உண்டாகி பஞ்சம் நீங்குகிறது. இக்கதையும் யோசேப்பு குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகளுக்கு ஒத்திருப்பதைக் காணலாம். நெபர்காசேகர் கி.மு2740-இல் வாழ்ந்தவர். யோசேப்பு பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன் இவர் எகிப்தை ஆண்டுள்ளார். ஆனால் நெபர்காசேகரைப் பற்றிய இக்கதை பைபிளிற்கு பின்பு எழுதப்பட்டது. நெபர்காசேகர் கனவு கண்டதையோ, அவரது அரசாட்சியில் பஞ்சம் உண்டானதையோ உறுதிபடுத்த கி.மு 28ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தடயங்கள் ஏதும் இல்லை. நெபர்காசேகர் மடிந்து 2000 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய பிற்கால எகிப்தியர்களே (கி.மு 237) நெபர்காசேகர் காலத்தில் 7 வருட பஞ்சம் உண்டானதாக எழுதியுள்ளனர். ஆனால் இப்பாப்பிரஸ் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. இது ஒரு மொழிப்பெயர்ப்பு பிரதி. இச்செய்திகள் கி.மு 2055 -1650காலங்களில் இருந்தே எகிப்தில் விளங்கியிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். (இக்காலத்தில் தான் யோசேப்பு வாழ்ந்ததாக பைபிள் கூறுகிறது). எகிப்திய வட்டாரங்களில் இச்செய்திகள் காலப்போக்கில் மருவியிருக்கலாம்.
எகிப்தில் எடுக்கப்பட்ட இவ்விரு தடயங்களும் 7 வருட பஞ்ச காலத்தையும், அதற்கு ஒரு சொப்பனத்தையும் தங்கள் கதைகளில் எடுத்துக்கூறுவதை தெளிவாக காணலாம். இவ்விரண்டு தடயங்களும் பைபிளிற்கு பின்பே எழுதப்பட்டுள்ளன. எனினும் பண்டைய எகிப்து மக்களிடையே 7 வருட பஞ்சத்தையும், அதோடு தொடர்புடைய ஒரு சொப்பனத்தையும் குறித்து நம்பிக்கைகள் விளங்கி வந்ததை இவை உறுதி செய்கின்றன. பஞ்சம் நிகழ்ந்த காலத்தைக் குறித்து அக்கால எகிப்தியர்களிடம் முரண்பாடு உள்ளதையும் இதனால் அறியலாம். எகிப்து மட்டுமின்றி, மெசப்பொத்திமிய கல்வெட்டுகள் சிலவற்றிலும், 7-வருட பஞ்சகாலம் குறித்து செய்திகள் காணப்படுகின்றன. கில்கமேஷ் காப்பியத்தில் 'அனு' என்ற தேவன் 7 வருட கொடிய பஞ்சத்தைக் குறித்து முன்னறிவிக்கிறான். பண்டைய மத்திய-கிழக்கு தேசங்களில் நிகழ்ந்த ஒரு கொடிய பஞ்சம் அக்கால மக்களிடையே அழியாத நினைவை ஏற்படுத்தியுள்ளது. இதனை இத்தடயங்கள் உறுதி செய்கின்றன.
ஆதியாகமம் 41:57 - சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசம் எங்கும் ஆகாரம் இருந்தது. தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாய் இருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
5) யோசேப்பின் மரணம்:
ஆதியாகமம் இறுதியாக யாக்கோபு, யோசேப்பின் மரணங்களை கூறுகிறது. இருவரது சரீரங்களும் சுகந்தவர்க்கமிட்டு பதனிடப்பட்டன. யாக்கோபின் பிரேதம் மக்பேலாவில் அடக்கஞ்செய்யப்பட்டது. யோசேப்பின் பிரேதத்தை சவப்பெட்டியில் கிடத்தி எகிப்திலேயே வைத்தனர். எனினும் மோசே எகிப்தை விட்டு செல்லும் போது யோசேப்பின் எழும்புகளை எடுத்துச் சென்றார்.
ஆதியாகமம் 50: 1-3: அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான். பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள். சுகந்தவர்க்கமிட நாற்பது நாள் செல்லும்; அப்படியே அந்நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கம் கொண்டாடினர்.
எகிப்தின் ஈமச்சடங்குகளை (மம்மி) பைபிள் துல்லியமாக எடுத்துக்கூறுகிறது. பண்டைய எகிப்தில் உடலை பதப்படுத்தியே அடக்கஞ்செய்தனர். முதலில் இதயத்தை தவிர பிரேதத்தின் உள்ளுறுப்புகளை அகற்றி, அவைகளை தனி கற்ஜாடிகளில் வைத்தனர். பின் உறுப்புகள் நீக்கப்பட்ட பிரேதத்தை நன்கு வற்றச்செய்வர். நீர்வற்றிய பிற்கு, சோடியம் கார்பனேட்-பைகார்பனேட் கலவையை பிரேதத்தில் சேர்த்துக்கட்டி, வாசனைத் திரவியங்களைப் பூசி, சவப்பெட்டியில் கிடத்துவர். இப்பணிகளுக்கு நாற்பதுநாட்கள் தேவைப்படும். இறுதியாக கற்ஜாடிகளையும், சவப்பெட்டியையும் ஒரே பிரமிட் (அ) கல்லறையில் பாதுகாப்பாக வைத்தனர். இறந்தவருக்கு பிடித்த ஆடைகள், பொன்வெள்ளி ஆபரணங்கள், சிலைகள், சித்திரங்கள் என பலவிதமான பொருட்களையும் கல்லறையில் வைத்துவிடுவார்கள். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவெனில், எகிப்தியர்கள் நூற்றுப்பத்து வயதை எட்டிய மூத்தமக்களை தீர்க்காயிசுள்ளவர்களாக கருதினர் (Aling 1981:51, note 25). யோசேப்பு 110 வருஷங்கள் வாழ்ந்தார் என பைபிள் கூறுகிறது. |
ஆதியாகமம் 50:23, 26 - யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் அவன் மடியில் வளர்க்கப்பட்டார்கள்... யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்து வைத்தார்கள்.
எகிப்தின் 'டெல்-எல்தாபா' மாநிலப்பகுதிகளே பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள 'ராமசேஸ்' பட்டணம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்பகுதியில் 12ஆம் வம்சத்தைச் சார்ந்த அரண்மனை ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது. பன்னாட்டு வர்த்தகங்களை கண்காணித்த அரச அதிகாரி ஒருவர் இதில் வாழ்ந்துள்ளார். அரண்மனைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் 12 கல்லறைகள் உள்ளன. இவைகளில் ஒரு கல்லறை உயர்ந்த அளவிலும், முற்பகுதியில் சிறிய கோவிலோடும், கொள்ளை அடிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. எனினும் ஒரு சிலையின் உடைந்த தலைப்பகுதிகள் மட்டும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. |
ராஜவம்சத்திற்கு உரிய எந்த சிற்பவேலைகளும் இச்சிலையில் இல்லை. உடலிற்கு மஞ்சள் நிறச்சாயம் பூசப்பட்டு காளான் வடிவ தலைமயிரோடு இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஆசிய ஆண்மக்களைக் குறிக்கும் எகிப்திய சிற்ப வேலைகள். இம்மனிதர் ஆசியாவை சேர்ந்தவர், எகிப்திய அரசுப்பணி வகித்தவர் என்பதை இத்தடயங்கள் விளக்குகின்றன. இவர் யோசேப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறிப்பு:
யோசேப்பு காலத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான எகிப்திய பொன், வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 'அல்-அஹ்ரம்' என்ற எகிப்தின் பிரபல தினசரி பத்திரிக்கை செய்திகள்வெளியிட்டுள்ளது. எகிப்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத சிறுதொல்பொருட்களை இடமாற்றம் செய்யும்போது, யோசேப்பின் சித்திரமும் பெயரும் பொறிக்கப்பட்ட வட்டநாணயங்களைத் தற்செயலாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என இப்பத்திரிக்கை கூறுகிறது. இவைகளை ஆராய்ந்த டாக்டர் சையத் முஹமது என்ற தொல்பொருளாய்வாளர் ஒரு நாணயத்தில் பாரோவின் கனவை சித்திரிக்கின்ற வகையில் ஒரு பசுமாடு பொறிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். யோசேப்பின் மெய்யான பெயரும், சாப்நாத்பன்னேயா என்ற எகிப்திய பெயரும், உருவப்படமும் பொறிக்கப்பட்ட சில நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சையத் கூறுகிறார். சிலவற்றில் காலமும், எழுத்துக்களும் கூட பொறிக்கப்பட்டுள்ளதாக அல்அஹ்ரம் கூறுகிறது. அக்காலங்களில் எழுத்துமுறை வளர்ந்து வந்ததால் தற்போது அறியப்பட்டுள்ள பழமையான சித்திர எழுத்துக்களைக் கொண்டு நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள செய்திகளை ஆராய்ந்து வருவதாக சையத் கூறுகிறார். நாணயங்கள் கி.மு 8,7ஆம் நூற்றாண்டுகளில் தான் வழக்கத்திற்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதி வருகின்றனர். இச்செய்தி மெய்யென கண்டுபிடிக்கப்பட்டால், நாணயங்களின் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி போகும்! குர்-ஆனில் யோசேப்பின் காலத்தில் நாணயங்கள் இருந்ததாக செய்திகள் உள்ளன. 'அல்-அஹ்ரம்' குர்ஆனை ஒப்பிட்டு இச்செய்தியை வெளியிட்டுள்ளதால் இது சர்ச்சைக்குரியதாக உள்ளது.
குர்ஆன் 12:20 - இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து அவரை அவர்கள் எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.சில ஆய்வாளர்கள் குர்-ஆனை மெய்ப்படுத்த சையத் தவறான செய்திகளை முன்வைப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். சிலர், அவை நாணயங்கள் அல்ல, நாணய வடிவில் செய்யப்பட்ட சேக்கல்கள், நினைவுபொருட்கள் எனக் கருதுகின்றனர். எனினும் இவை இன்றும் ஆய்விற்கு உட்பட்ட நிலையிலேயே உள்ளன. சையது முஹமது அவர்களின் செய்திகள் உறுதியாகும் வரை இவைகளை யோசேப்பிற்கு சான்றாக கருதவேண்டாம் என மேற்கத்திய திருச்சபைகள் தெரிவிக்கின்றன. இந்த நாணயங்கள் மெய்யானாலும், பொய்யானாலும் யோசேப்பு வாழ்ந்தார் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை.
சங்கீதம் 19:7 - கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
இது இவர் யார் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது