ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு



ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு

பிறப்பு : 16 டிசம்பர் 1867

மிஷினரி தளம்: இந்தியா, இலங்கை

இறப்பு : 18 சனவரி 1951

*அன்பில்லாமல் கொடுக்கலாம். ஆனால் கொடுக்காமல் அன்பாயிருக்க முடியாது.*-ஏமி



தனது வாழ்வை இந்தியாவை நேசித்து கொடுத்த உத்தம தாயின் வரலாறு.

*இளம்பருவம்:*

ஏமி கார்மைக்கேல் 1867 ஆம் ஆண்டு கவுண்டி டவுன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மில்லிஸ்லே எனும் கிராமத்தில் பிறந்தார். இவரின் தகப்பனார் பெயர் டேவிட், தாயின் பெயர் கேத்ரின் என்பதாகும். இந்த தம்பதியருக்கு 7 பிள்ளைகள் இருந்தனர். ஏமி கார்மைக்கேல் எல்லாருக்கும் மூத்த மகளாகப் பிறந்தார். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ராபர்ட் வில்சன் என்பவரால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். இவரே ஏமிக்கு ஆசிரியராக இருந்து அறிவு புகட்டினார்.

ஏமிக்கு கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தது. அவர் சொந்த நாட்டில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் நீல நிறத்தில்தான் கண்கள் இருக்கும். இதனால் ஏமி இயேசுவிடம் அடிக்கடி தன் கண்ணின் நிறத்தை மாற்றும்படி ஜெபிப்பாராம். ஆனால் ஆண்டவர் ஏதும் செய்யாதபடியால் வருத்தத்துடன் இருப்பாராம். ஆனால் தான் ஊழியத்திற்கு இந்தியா வந்தபின்பு தன் கண்களின் நிறம் இந்தியர்களின் கண்கள் போல பழுப்பு நிறத்தில் இருப்பதைக் கண்டு ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்.

ஏமிக்கு ஊழிய வாஞ்சை அதிகமாயிருந்தது.ஆனால் அவர் பல விதங்களில் மிஷனரி பணிக்கு செல்ல இயலாதவராய் இருந்தார். அவர் நியூரால்ஜியா எனும் கொடிய நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார்.அது அவருடைய முழு சரீரத்தையும் பலவீனப்படுத்தி, சகிக்க முடியாத வலியினால் பல நாட்கள் படுக்கையில் இருக்க வைத்தது.

*ஊழியப் பாதை:*

1880 ஆம் ஆண்டில் ஏமி ஞாயிறு பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். சிறியதாய் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊழியம் பிறகு 500 பேருக்கு மேல் சேர்ந்ததால் மாணவர்கள் அமர  இடம் இல்லாத அளவிற்கு வளர்ந்தது.பிறகு சிலரின் பண உதவியுடன் வேறு இடத்தில் இந்த ஞாயிறு பள்ளி நடைபெற்றது.

1887 ஆம் ஆண்டு நடைபெற்ற கெஸ்விக் கூடுகையில் திரு.ஹட்சன் டெய்லர் மிஷனரி வாழ்க்கையைக் குறித்தும் அதன் தேவைப் பற்றியும் பேசுவதைக் கேட்டார். ஏமியைத் தத்து எடுத்து வளர்த்த ராபர்ட் வில்சன் இந்த கெஸ்விக் கூடுகையின் துணை நிறுவனராயிருந்தார். ஹட்சனின் பிரசங்கத்தின் மூலம் ஏமி தான் மிஷனரி ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். உடனே ஊழியத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். உடனே அவர் ‘China Inland Mission’ என்ற மிஷனரி அமைப்பில் விண்ணப்பித்து லண்டன் நகருக்கு மிஷனரி பயிற்சிக்காக சென்றார்.

*இந்தியாவில் ஏமியின் ஊழியங்கள்:*

தொடக்கத்தில் ஏமி ஜப்பானுக்கே பயணம் செய்தார். ஆனால் உடல்நிலைக் காரணமாக அவர் திரும்ப நேரிட்டது. பின்பு சில காலம் அவர் இலங்கையில் ஊழியம் செய்தார்.பின்பு அவர் இந்தியாவிலுள்ள பெங்களூர் பட்டணத்திற்கு வந்தார். ஆண்டவர் கொடுத்த பாரத்தின் காரணமாக இந்தியாவிலேயே ஊழியம் செய்ய முழுமையாய் ஒப்புக்கொடுத்தார்.

*டோனாவூர் ஐக்கியம்:*

பின்பு அவர் தமிழ்நாட்டிற்கு வந்தார். ஏமியுடைய பெரும்பாலான ஊழியம் வாலிப பெண்களுக்கு மத்தியில் இருந்தது. இவர் மூலமாய் அநேக வாலிப பெண்கள் விபச்சாரத்திலிருந்து மீட்கப்பட்டனர். அதோடல்லாமல் அநேக குழந்தைகளை எடுத்து வளர்கக ஆரம்பித்தார். இதனால் ‘டோனாவூர் ஐக்கியம்‘ என்ற அமைப்பை டோனாவூரில் நிறுவினார். ஏமியின் வழிநடத்துதலால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட் குழந்தைகளுக்கு அவர் அமைப்பு அடைக்கலமாய் இருந்தது.இந்திய கலாச்சாரத்தைக் கனப்படுத்தும்படி இந்த அமைப்பில் உள்ள அனைவரும் சேலை உடுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
                               
இந்த அமைப்பில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு இந்திய பெயரே அளிக்கப்பட்டது. ஏமியும் சேலை அணிவதை வழக்கமாகக் கொண்டு ஒரு இந்தியர் போலவே வாழ்ந்தார். தமிழர்களின் தோல் வண்ணத்தைப் பெற காப்பி நிறத்தால் தன் தோலை சாயம் பூசினார்.

இவரிடம் மிஷனரி வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டதற்கு ‘மிஷனரி வாழ்க்கை என்பது மரணத்திற்கு ஏதுவானது’ என்று பதில் கூறினார். அந்த அளவிற்கு அவர் மிஷனரி பணிக்காகத் தன்னை அர்ப்பணித்தார்.

இவரின் ஊழியத்தால் கவரப்பட்ட ராணி மேரி 1912-ல் டோனாவூரில் ஒரு மருத்துவமனை நிறுவ நிதியுதவி அளித்தார்.1918-ல் சிறுவர்களுக்கான ஆதரவு இல்லத்தை நிறுவினார்.இந்த சிறுவர்கள் பெரும்பாலும் இவரால் மீட்கப்பட்ட (விபச்சாரத்திற்க்கு வ்லுக்கட்டாயமாக்கப்பட்டவர்களின் குழந்தைகள்) ஆவார்கள்.

*இறுதி நாட்கள்*

1932 ஆம் ஆண்டு ஏமி அம்மையார் கீழே விழுந்ததால் ,பலமாக காயப்பட்டார். அதன் விளைவாக மரணம் வரை படுக்கையிலே இருக்க நேரிட்டது.ஆனால் அம்மையார் அந்த காலக்கட்டத்தில் 16 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார்.

1951 ஆம் ஆண்டு ஏமி தன்னுடைய 83 ஆம் வயதில் மரணமடைந்தார்.அவர் தன்னுடைய கல்லறையில் நினைவுக்கல் ஏதும் பதிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.ஆனால் அவர் அன்பாய் நேசித்த குழந்தைகள் , அவருடைய கல்லறையில் பறவைகள் இளைப்பாற ஓரிடத்தை உருவாக்கி அதில் ‘அம்மா‘ என்ற சொல்லைப் பதிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.

இந்திய தேசம் 1948 ஆம் ஆண்டு ‘தேவதாசி’ முறையை ஒழித்தது. ஏமியின் பெருமுயற்சியே இதற்கு வித்திட்டது.

இன்றும் கூட டோனாவூர் ஐக்கியம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது
இப்படிபட்ட இந்த மிஷனெரியின் நினைவு தினம் இன்று.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.