1. அச்சம் துறந்த அந்திரேயா… இயேசுவின் முதல் சீடர்
அந்திரேயா இயேசுவின் பன்னிரண்டு திருத் தூதர்களில் முதலில் இயேசுவோடு இணைந்தவர். முதலில் இவர் திருமுழுக்கு யோவானின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டு அவர் தான் மெசியா என்னும் எண்ணத்தில் அவருடைய சீடரானவர். பின் திருமுழுக்கு யோவானே இயேசுவைச் சுட்டிக் காட்டி அவரே உண்மையான கடவுள் என்று சொன்னதால் இயேசுவோடு இணைந்தவர். இயேசுவை நம்பி அவரோடு இணைந்த முதல் சீடர் என்னும் பெருமை இவருக்கு உண்டு.
அந்திரேயா கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தவர். அந்திரேயா தான் இயேசுவின் சீடர்களில் முக்கியமானவரான பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தவர். அந்த பேதுரு அந்திரேயாவின் சகோதரன். இருவரும் மீன்பிடி தொழிலைச் செய்து வாழ்க்கை நடத்தி வந்த வேளையில் தான் மீட்பரைக் குறித்து கேள்விப்பட்டு மெசியாவுக்கான தேடுதலில் ஈடுபட்டார்கள்.
அந்திரேயா பணிசெய்யச் சென்ற இடம் இன்றைய ரஷ்யா !
இன்றைய ஜார்ஜியாவிலுள்ள காக்கசீய மலையடிவாரத்தில் அந்திரேயா பணி செய்யச் சென்றார். அங்குள்ள மக்களுக்கு இயேசுவைப் பற்றிப் போதிக்கத் துவங்கினார். அங்கே இயேசுவைப் பற்றிப் போதிப்பது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. இயேசு யார் என்பதே அறிந்திராத மக்களுக்கு முதலில் அவரைப் பற்றிய அறிமுகமும் தேவைப்பட்டது. அந்திரேயா பொறுமையாய் மக்களைச் சேர்த்தார். மக்களிடம் கிறிஸ்தவ மதத்தை விளக்கினார். அங்குள்ள மக்களிடம் சில காலம் பணியாற்றியபின் அங்கிருந்து இஸ்தான்புல் க்குச் சென்றார்.
இஸ்தான்புல் அப்போது பைசாண்டியம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. அங்கே அவருக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருந்தன. மக்கள் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
அங்குள்ள அரசாங்கம் அவரைச் சிறையில் அடைத்தது. அந்திரேயா எதற்காக நாட்டுக்கு வந்திருக்கிறார், அவருடைய எண்ணம் என்ன என்பதைக் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வந்தது.
‘மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ என்று அந்திரேயா முழங்கினார். அரசாங்கம் அவரை எச்சரித்தது.
‘இயேசு நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர் ‘ என்று முழங்கினார். அவரை மக்கள் கல்லால் எறிந்தார்கள். ஆனாலும் அந்திரேயா சளைக்கவில்லை. தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்.
இயேசுவோடு பணியாற்றிய காலத்தில் பெரும்பாலும் இவருடைய பெயர் குறிப்பிடப்பட்டதே இல்லை. இயேசு ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து அளிப்பதற்குக் காரணமான சிறுவனை அழைத்து வந்ததாக அந்திரேயாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றபடி அந்திரேயா எந்த விதமான முக்கியப் பணிகளையும் செய்ததாக விவிலியம் சொல்லவில்லை. ஆனால் இப்போது உறுதியாக கண்காணாத தூரத்துல் கல்லடி பட்டும் பணியாற்றுகிறார்.
அந்திரேயா கிரீஸ் நாட்டிற்குப் பலமுறை பயணம் செய்தார். ஒரு முறை அவர் கிரீஸ் நாட்டிற்குப் பயணம் செய்து பட்ரேஸ் என்னும் நகரை வந்தடைந்தார். அங்கு அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்தார். பலரைக் குணமாக்கினார். யாரைக் குணமாக்கினாலும், இயேசு உனக்குச் சுகமளித்தார் என்று சொல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்ததால் இயேசுவின் பெயர் அங்கே பரவத் துவங்கியது.
அங்கே ஒரு ரோம ஆளுநர் இருந்தார். அவருடைய பெயர் ஏஜியேட்ஸ். அவருடைய மனைவி மேக்ஸ்மில்லா ஒருமுறை உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அவரை அந்திரேயா குணப்படுத்த அவள் கிறிஸ்துவை நம்பும் கூட்டத்தில் சேர்ந்தாள். ஏஜியேட்ஸ் இதை வெறுத்தான். அந்திரேயாவை விரைவில் நாடு கடத்த வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் அவனுடைய சகோதரன் ஸ்ராட்டோக்லிஸ்ம் அந்திரேயாவுடன் சேர்ந்தார். அவரையே அந்திரேயா அந்த நாட்டின் கிறிஸ்தவ மதத் தலைவராக நியமித்தார். ஏஜியேட்ஸ் இதனால் பெரிதும் எரிச்சலடைந்தான்.
அவன் அந்திரேயாவை அழைத்தான்
‘நீ.. இந்த நாட்டை விட்டு உடனே வெளியேறவேண்டும். மக்களிடையே பிளவு படுத்தும் நடவடிக்கையை நீ செய்து வருகிறாய். அது ஒத்துக் கொள்ளக் கூடியதல்ல. எனவே நீ உடனடியாக வெளியேற வேண்டும்’ என்றான்
‘நான் பிரிவினை உண்டாக்க வந்தேன் என்பது நீங்களாய் சொல்வது. நான் உண்மையைப் பற்றியும், அறிந்தவற்றைப் பற்றியும் உலகிற்குச் சொல்லவே வந்திருக்கிறேன்.’
‘என்ன உண்மை’
‘இயேசுவே கடவுள் என்னும் உண்மை. இந்த உண்மையை அறிய நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்’ அந்திரேயா சாந்தமாய்ச் சொன்னார்.
ஏஜியேட்ஸ் எரிச்சலடைந்தான் ஆனாலும் எதுவும் பேசாமல் அப்போது அவரை விடுவித்தான். அந்திரேயா தொடர்ந்து பணி செய்தார்.
அந்திரேயா நிறைய தீர்க்கத்தரிசனங்கள் சொன்னார். சிறையில் மத்தியாஸ் அடைக்கப்பட்ட போது உருக்கமாக செபித்தார். அவருடைய செபத்தினால் சிறையில் அவரைக் கட்டியிருந்த சங்கிலிகள் உடைந்து தெறித்தன.
ஆள்பவர்களின் கோபமும் மக்கள் கோபமும் அந்திரேயா மீது திரும்பியது. அவர்கள் அந்திரேயாவை அடித்து உதைத்தனர். அவருடைய பற்கள் உடைந்து தெறித்தன. அவர்கள் அவருடைய விரல்கள் சிலவற்றை வெட்டி எறிந்தனர். அவரைக் குற்றுயிராக்கி ஒரு மலைச்சரிவில் எறிந்தார்கள்.
மலைச்சரிவில் கிடந்த மனிதருக்கு இயேசு தரிசனமானார் !! அவருடைய காயங்களை ஒரே நாளில் ஆற்றினார்.
மறுநாள்.
மக்கள் முன்னிலையில் மீண்டும் தோன்றினார் அந்திரேயா ! அதே பழைய உற்சாகத்துடன். மக்கள் அதிர்ந்தார்கள். இப்படி அடித்துப் போட்ட ஒரு மனிதனும் பிழைத்து வந்ததாக வரலாறு இல்லையே என்று நடுங்கினார்கள்.
அந்திரேயா அவர்களிடம் தன்னைக் குணமாக்கியதும் அதே இயேசு தான் என்று சொல்ல, மக்கள் பலர் அவரையும், இயேசுவையும் நம்பினார்கள்.
அவருடைய போதனைகள் வேகமாகப் பரவின.
ஒரு முறை ஒரு பெண் தன்னுடைய ஒரே மகனை மரண கோலத்தில் பார்த்து கதறிக் கொண்டிருந்தாள். அந்திரேயா அங்கே வந்தார்.
‘நான் இவனை உயிர்ப்பித்தால் நீங்கள் இயேசுவை நம்புவீர்களா ?’ அவர் கேட்டார்.
அந்த சூழ்நிலையில் யார் தான் இல்லை என்று சொல்வது. அவள் ஆம் என்று கதறினாள்
அந்திரேயா அவனைத் தொட்டார்., ‘இயேசுவின் பெயரால் சொல்கிறேன் எழுந்திரு’ என்றார். இறந்தவன் எழுந்தான். சுற்றி நின்றவர்கள் பயத்தில் விழுந்தனர். இதே போல் எங்கும் கண்டதில்லையே என்று பயந்தனர்.
நிலமை கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருப்பதைக் கண்ட ஏஜியேட்ஸ் அந்திரேயாவைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தான்.
அந்திரேயா பிடிக்கப் பட்டார். அவருக்கு விசாரணையில்லாமலேயே தீர்ப்பிடப்பட்டது.
மரண தண்டனை ! அதுவும் சிலுவை மரணம்.
அந்திரேயா X வடிவ சிலுவையில் அறையப்படவேண்டும் என்று தீர்ப்பானது. X வடிவ சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டால் தரையையும், மக்களையும் பார்க்க முடியாமல் வானத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிவரும். அது சிலுவையில் இருப்பவரை அதிக வேதனையடையச் செய்யும் என்பதும். தலை கீழாக X வடிவ சிலுவையில் தொங்கினால் மரணம் நிகழ அதிக நேரமாகும், வலியும் அதிகமாகும் என்று பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு அந்திரேயாவுக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது.
அந்திரேயா சிலுவையில் அறையப்பட்டார்.
அந்திரேயாவின் மரணம் ஊரெங்கும் பரவியது. சுமார் இருபத்தையாயிரம் மக்கள் சிலுவையைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்திரேயா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். வானத்தில் அவருக்கு இயேசு காட்சியளித்தார். அந்திரேயா பரவசத்துடன் அந்தக் காட்சியை சுற்றி நின்ற மக்களுக்கு விளக்கினார். மக்கள் இன்னும் அதிகமாக நம்பிக்கை வளர்த்தார்கள்.
இரண்டு நாட்கள் சிலுவையில் தொங்கிய அந்திரேயா விடாமல் மக்களுக்குப் போதித்துக் கொண்டே இருந்தார். ம
மாபெரும் மக்கள் எழுச்சி அரசுக்கு எதிராக எழும்புவதை அறிந்த மன்னன் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி விடவேண்டுமென்று விரும்பி சிலுவையை நெருங்கினான். ஆனால் அந்திரேயா ஒத்துக் கொள்ளவில்லை. தான் இயேசுவை தரிசித்து விட்டதாகவும், இனிமேல் புவி வாழ்க்கை சாத்தியமில்லை என்றும் பிடிவாதமாய் சிலுவையில் தொங்கினார்.
மன்னன் வீரர்களுக்கு ஆணையிட்டான். அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்குங்கள்.
வீரர்கள் அந்திரேயாவின் சிலுவையை நெருங்க அவர்களின் கைகள் மரத்துப் போயின. அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. மன்னன் பயந்தான். மக்கள் வியந்தார்கள்.
திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி வெள்ளம் பாய்ந்து வந்து அந்திரேயாவை நனைத்தது. அரை மணி நேரம் அந்த ஒளி அந்திரேயா மீது பாய்ந்து கொண்டே இருந்தது. அந்த ஒளி விலகியபோது அந்திரேயா இறந்து போயிருந்தார்.
அந்திரேயா இறந்தபோது காலம் கிபி 69, நவம்பர் முப்பதாம் நாள்.
ஏஜியேட்டசின் மனைவி மேக்ஸ்மில்லாவும், அவரது சகோதரன் ஸ்ராட்டோகிலிஸ் ம் அந்திரேயாவை சிலுவையிலிருந்து இறக்கி அடக்கம் செய்தார்கள். அந்திரேயா அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு மக்கள் குவிய ஆரம்பித்தார்கள். சிலர் குணமும் அடைந்ததாக செய்திகள் பரவ மக்கள் ஏராளமாக அவருடைய அடக்க இடத்தை மொய்த்தார்கள்.
மக்களின் மனமாற்றம் மன்னன் ஏஜியேட்டசை வருத்தியது. தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு குத்த, அவன் தற்கொலை செய்து கொண்டான்.
கி.பி 357 ம் ஆண்டு கான்ஸ்டண்டன் மன்னன் அந்திரேயாவில் உடல் எலும்புகளை மட்டும் எடுத்து பைசாண்டியத்திலுள்ள தூய அப்போஸ்தலர் தேவாலயத்தில் வைத்தார். அவருடைய உடல் எலும்புகளின் ஒருபாகம் ஸ்காட்லாந்து தேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கபாலம் ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
1967ம் ஆண்டு அந்திரேயாவின் கபாலம் மீண்டும் பட்ரேஸ் திருச்சபைக்கு திரும்ப அளிக்கப்பட்டது.
1967ம் ஆண்டு அந்திரேயாவின் கபாலம் மீண்டும் பட்ரேஸ் திருச்சபைக்கு திரும்ப அளிக்கப்பட்டது.
அவர் ஸ்காட்லாந்து தேசத்தின் புனித தந்தையாகப் போற்றப்படுகிறார். ஸ்காட்லாந்தும், இங்கிலாந்தும் இணைந்தபின், இங்கிலாந்து தேசக் கொடி அவருடைய X வடிவ சிலையை தன்னுடைய தேசியக் கொடியில் பொறித்து பெருமைப்படுத்தியது !
2. பிலிப்பு செய்த பிரமிக்கும் பணி
இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் அல்லது திருத்தூதர்களில் ஒருவரான பிலிப்பு அதிகம் அறியப்படாதவர். விவிலியத்தில் அவரைப்பற்றி பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதிக ஆழமான விசுவாசம் உடையவராகவும் இவர் சித்தரிக்கப்படவில்லை. ‘ஆண்டவரே தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று இயேசுவிடம் இறுதி இரா உணவில் கேட்டவர் இவர். என்னைக் கண்டவன் தந்தையைக் கண்டான் என்னும் இயேசுவின் பதிலும் உடனே திருப்தியும் அடைந்து விடுகிறார்.
பிலிப்பின் பணி ரஷ்யாவிலுள்ள சைத்தியாவில் நடந்தது. தொடர்ந்து இருபது நீண்ட ஆண்டுகள் இயேசுவைப் பற்றி சைத்தியா நகரில் போதித்து நடந்தார். பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாக நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த அவர் பின் அங்கிருந்து ஆசியா மைனரிலுள்ள (தற்போதைய துருக்கி) எராப்போலி என்னும் நகரில் வந்து பணியைத் தொடர்ந்தார்.
பிலிப்பு தன்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான அதிசயச் செயல்களைச் செய்தார்.
எராப்போலி நகர் மக்கள் தங்களுடைய கடவுளாக ஒரு பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் சுற்றி நின்று பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பிலிப்பு அவர்கள் முன்னால் வந்து நின்று கையில் சிலுவையை ஏந்தி அந்தப் பாம்பு செத்துப் போகட்டும் என்று சபித்தார். உடனே பலிபீடத்தின் அடியிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு தனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் மீது விஷத்தை உமிழ்ந்து விட்டு இறந்து விட்டது.
மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த விஷம் பட்ட மக்கள் அங்கேயே இறந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்த நாட்டு மன்னனின் மகன் !
கூடியிருந்த மக்கள் பிலிப்புவின் மீது கொலை வெறி கொண்டார்கள். பிலிப்பு அசரவில்லை. மன்னனின் மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் உயிர் பெற்றான். மக்கள் நடுங்கினார்கள்.
பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பிலிப்புவின் செய்கைகள் பயத்தையும் கோபத்தையும் கொடுத்தன. எப்படியும் பிலிப்புவை உயிருடன் விட்டால் இதே போல இன்னும் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். இவனுடைய கடவுளைக் கொன்றது போல இவனையும் கொல்லவேண்டும் என்று பிலிப்புவை சுற்றி வளைத்தார்கள்.
அப்போது பிலிப்புவிற்கு வயது 87.
பிலிப்புவை பிடித்த அவர்கள் ஒரு சிலுவையில் பிணைத்துக் கட்டினார்கள்.
சிலுவையில் தொங்கிய பிலிப்பு, சிலுவையில் இயேசு விண்ணப்பித்தது போல தன்னைக் கொல்வோரை மன்னிக்குமாறு கடவுளை வேண்டினார். அதைக் கேட்ட மக்கள் இன்னும் ஆத்திரமடைந்தார்கள்.
சிலுவையில் தொங்கிய பிலிப்புவை நோக்கி மக்கள் கற்களை எறிய ஆரம்பித்தார்கள்.
கற்கள் பிலிப்புவின் உடலைப் பதம் பார்த்தன. உடலெங்கும் காயங்களுடனும், இரத்தம் சொட்டச் சொட்ட கல்லடி பட்டு பிலிப்பு அங்கேயே இறந்தார்.
எராபோலியில் பிலிப்புவின் கல்லறை இன்றும் இருக்கிறது.
3. மனதில் நின்ற மத்தேயு
இயேசுவின் சீடர்களில் பெருமைக்குரியவர். வரிவசூலிக்கும் தொழிலைச் செய்து வந்ததால் அவருக்கு பல்வேறு விதமான, பல்வேறு கலாச்சாரப் பின்னணியில் வாழ்ந்த மக்களோடு பரிச்சயம் இருந்தது. அதுவே பல் மொழிகளில் மத்தேயு அறிவு கொள்ளவும் துணை நின்றது. மொழியறிவு நன்றாக இருந்ததால் மத்தேயுவுக்கு அது இறைப்பணி ஆற்றுவதில் பெரும் பங்காற்றியது. எபிரேயம், கிரேக்கம், அராமிக் போன்ற மொழிகளில் அவருக்கு நல்ல புலமை இருந்தது.
மத்தேயு தன்னுடைய பணியை முதலில் இயேசு பணி செய்த இடங்களிலேயே தொடர்ந்து செய்து வந்தார். அவருடைய ஆழ்ந்த சட்ட அறிவு இருந்தது. யூதர்களின் முன்னோர்கள் பற்றியும், பழைய தீர்க்கத் தரிசனங்கள் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருந்ததால் அவர் இயேசுவின் வரவை தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறல் என்னும் அடிப்படையிலேயே போதித்து வந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகள் அவர் யூதர்களிடையே பணியாற்றினார்.
பாரசீகத்திலும், எத்தியோப்பியா பகுதிகளிலும் அவர் தன்னுடைய இரண்டாவது கட்ட பணியை ஆரம்பித்தார். அங்கும் கிறிஸ்தவ மதத்தைப் பல்வேறு இடர்களுக்கு இடையே நடத்திய மத்தேயு பின் எகிப்துக்குப் பயணமானார்.
எகிப்து நாட்டில் இறைப்பணி செய்துகொண்டிருந்த போது எகிப்து மன்னனின் மகன் இறந்து போனான். மத்தேயுவின் பெயர் நாடெங்கும் பரவுவதற்கு அது ஒரு காரணமானது. மத்தேயு அரசனின் மாளிகைக்குச் சென்று எகிப்து மன்னனுடைய மகனைத் தொட்டு உயிர்ப்பித்தார் ! நாடு முழுவதும் அந்த செய்தி பரவியது.
பலர் மத்தேயுவை நம்ப ஆரம்பித்தார்கள்.
பலர் மத்தேயுவை நம்ப ஆரம்பித்தார்கள்.
அரசவையில் இபிஜெனியா என்ற ஒரு இளவரசி இருந்தாள். அவளுக்கு தொழுநோய். தொழுநோயாளிகள் ஆண்டவனின் சாபம் பெற்றவர்கள் என்று கருதப்பட்ட காலம் அது. இளவரசியும் ஒதுக்கி வைக்கப்பட்டாள். இயேசு பல தொழுநோயாளிகளைக் குணப்படுத்தியதைப் பார்த்திருந்த மத்தேயு இளவரசியின் தொழுநோயையும் குணப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அரசவைக்குச் சென்றார். மத்தேயுவை யாரும் நம்பவில்லை. மத்தேயு கவலைப்படவில்லை நேராக இளவரசியிடம் சென்றார். இயேசுவின் பெயரால் நலம் பெறு என்றார். அவள் நலம் பெற்றாள்.
மத்தேயு சுமார் இருபத்து மூன்று ஆண்டுகள் எகிப்திலும், எத்தியோப்பியாவிலும் பணிபுரிந்தார்.
அதன் பின் கி.பி 90 ஆம் ஆண்டு. ஆட்சி செய்து கொண்டிருந்த தொமீதியன் மத்தேயுவின் பணிகளைப் பார்த்து எரிச்சலடைந்தான். மத்தேயுவை இனிமேலும் வளரவிடக்கூடாது என்று முடிவெடுத்து அவனுக்கு மரண தண்டனை விதித்தான். அவரை நிற்க வைத்து படைவீரர்களை வைத்து ஈட்டியால் குத்தச் செய்தான் மன்னன். மத்தேயு உடலை ஈட்டிகள் துளைத்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்த மத்தேயு இயேசுவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இறந்தார்.
பல சீடர்களோடு ஒப்பிடுகையில் மத்தேயு நீண்ட நாட்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். வரி வசூலிக்கும் இழிவென்று கருதப்பட்ட தொழிலைச் செய்த மத்தேயு, கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டு நூல்களில் இடம்பெற்றுள்ள முதல் நூலை எழுதியவர் என்னும் புகழ்பெற்றவர்.
4. தலைகீழ் சிலுவையில் நாத்தான் வேல்
இயேசுவின் சீடர்களில் ஒருவரான நாத்தான் வேல் இந்தியாவின் வடமேற்குப் பகுதி வரை வந்து இறைபணி ஆற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு உறிதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதன்பின்னர் ஆசியா மைனரில் சிலகாலம் பணியாற்றினார். அங்குள்ள ஏராப்போலி என்னுமிடத்தில் பிலிப்பு என்னும் சீடரும் பணியாற்றி வந்தார். இருவருமாக சேர்ந்து சிலகாலம் அங்கே பணியாற்றினார்கள். நாத்தான் வேலுக்கு பார்த்தலமேயு என்னும் பெயரும் உண்டு
அதன்பின்னர் நாத்தான் வேல் ஆர்மேனியாவில் தன்னுடைய பணியை ஆரம்பித்தார். ஆர்மேனியாவில் இறைப்பணி ஆற்றச் சென்றது கி.பி 60ல். அங்கு ததேயு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை நிறுவியிருந்தார். நாத்தான் வேல் அவரோடு இணைந்து சில காலம் பணியாற்றினார்.
ஐந்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து இறைபணி ஆற்றினார்கள். கிறிஸ்தவம் மிகவும் விரைவாகப் பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பிற மத நம்பிக்கையாளர்களும், அரசும் இவர்களுக்கு எதிரானார்கள்.
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை அவர்கள் கொன்று குவித்தார்கள். கிறிஸ்துவை நம்புபவர்கள் என்று பிரகடனப் படுத்தியோர் கொல்லப்பட்டார்கள். அந்த கூட்டத்தில் ததேயுவும் இறந்தான்.
நாத்தான் வேல் தப்பினார்.
அப்போது அங்கு ஆண்டு வந்த அரசனுடைய மகளுக்கு மூளைக் கோளாறு இருந்தது. நாத்தான் வேல் அரண்மனைக்குச் சென்றார். இயேசுவை நம்பினால் அந்த பெண்ணைக் குணப்படுத்துவதாக வாக்களித்தார். அரண்மனை வாசிகள் சிரித்தனர். பின், குணம் பெற்றால் நம்புவோம் என்றனர். நாத்தான் வேல் மண்டியிட்டு செபித்தார். பின் அந்தப் பெண்ணைத் தொட்டு சுகமளித்தாள். அவளுடைய மூளை நோய் உடனடியாக விலக, அனைவரும் அதிசயித்தனர்.
அரண்மனையில் பலர் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்தில் இணைந்தார்கள். அரசனும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தான்.
அரசனும் அரண்மனை மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தில் இணைந்ததைக் கண்டு ஆனந்தமடைந்த நாத்தான் வேல் அரசன் வணங்கிய சிலையைப் பார்த்தார். அதில் அசுத்த ஆவிகள் நிறைந்திருப்பதாய் தெரிந்தது அவருக்கு. கையிலுள்ள சிலுவையை எடுத்து சிலையை நோக்கி நீட்டினார். அசுத்த ஆவிகள் மக்களின் கண் முன்னால் சிலையை விட்டு வெளியேறி ஓடின.
சிலைக்கு வழிபாடு செய்து வந்த பூசாரிகள் கடும் கோபமடைந்தனர். அவர்கள் அரசருடைய சகோதரன் மூலமாக நாத்தான் வேலைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினார்கள். அரசனின் சகோதரன் பூசாரிகளின் பக்கம் சாய்ந்தான்.
நாத்தான் வேல் பிடிக்கப்பட்டார்.
அவருக்கு சிலுவை மரணம் தீர்ப்பானது. அதுவும் உயிருடனே நாத்தான் வேலுடைய தோலை உரித்து, பின் அவரை சிலுவையில் தலை கீழாய் அறைய வேண்டும் என்று தீர்ப்பானது. மிகவும் கொடூரமான, வேதனையான, நினைத்தாலே உயிரை உலுக்கும் முறையில் கிபி. 68 ல் நாத்தான் வேல் கொல்லப்பட்டார்.
டைபர் நதியோரமாய் அமையப்பெற்றிருக்கும் பார்த்தலமேயு ஆலயத்தில் இவருடைய எலும்புகள் இன்னும் பத்திரப் படுத்தப் பட்டுள்ளன.
5. கல்லெறி கல்லறைக்கு அனுப்பியது
(அல்பேயுவின் மகன் யாக்கோபு )
யாக்கோபு கப்பர்நாகூமில் வசித்து வந்தவர். அவருடைய தந்தை அல்பேயு. இவருடைய தாய் மரியாவும், இயேசுவின் தாய் மரியாவும் உறவினர்கள். இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் இருந்திருக்க வேண்டும், எனவே தான் சிலுவையில் இயேசு தொங்கிய போது சிலுவையின் கீழே இயேசுவின் தாயாருடன் யாக்கோபின் தாய் மரியாவும் இருந்தார்.
இயேசுவின் திருத் தூதர்களில் இரண்டு யாக்கோபுக்கள். ஒன்று அல்பேயுவின் மகன் யாக்கோபு. இன்னொருவர் யோவானின் சகோதரன் யாக்கோபு. யோவானின் சகோதரர் யாக்கோபு பைபிளில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறார். ஆனால் அல்பேயுவின் மகன் யாக்கோபு ஒரு சில இடங்கள் தவிர எங்கும் குறிப்பிடப்படவில்லை.
யாக்கோபின் போதனைகள் பெரும்பாலும் எருசலேமிலும் அதைச் சுற்றிய நகரங்களிலுமே நடந்திருப்பதாய் நம்பப்படுகிறது. சீரியத் திருச்சபையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று போதனைகள் நிகழ்த்தியதாகவும் இறையியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
யாக்கோபு இயேசு இறந்த அதே மண்ணில் மக்களால் கல்லால் எறியப்பட்டுக் கொல்லப்பட்டார்.
6. நல்லவராய் ஒரு யூதா ததேயு
இயேசுவைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு யூதா உண்டு, அது யூதாஸ் ஸ்காரியோத்து. இன்னொரு யூதா இவர். யூதா ததேயு.
மெசபடோமியாவில் ததேயு தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்தார். அங்கே மக்களுக்கு இயேசுவின் போதனைகளைப் போதித்ததுடன், அங்குள்ள அரசனின் நோயையும் குணமாக்கினார். அரசனின் நோயைக் குணமாக்கிய ததேயுவின் புகழ் நாட்டில் சட்டென்று பரவியது. பலர் ததேயுவிடம் நலம் பெற வேண்டும் என்னும் விண்ணப்பங்களோடு வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசுவின் பெயரால் குணமாக்கினார் ததேயு.
ஆர்மீனியா பகுதியில் ததேயு வீரியமுடன் பணியாற்றினார். இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஐந்து பேர் ஆர்மீனியா பகுதியில் பணியாற்றியிருக்கிறார்கள். ததேயு ஆர்மீனியத் திருச்சபையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஆர்மீனியாவே உலகின் முதல் கிறிஸ்தவ நாடானது. ததேயு கி.பி 43ம் ஆண்டிலிருந்து துவங்கி பதினைந்து – முதல் இருபது ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள அவருடைய போதனைகள் காரணமாயின.
கடைசியில் ததேயு, பாரசீகத்தில் பணியாற்றுவதற்காக வந்தார். அங்கே ஒரு இடத்தில் சிலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ததேயு சிலைகளை வழிபடுவதால் பயனில்லை என்று மக்களிடையே உரையாற்றினார். கோபம் கொண்ட அவர்கள் ததேயுவுக்கு எதிராக திரும்பினார்கள். நாட்டில் இது ஒரு கலவரமாக மாறியது. வெகுண்டெழுந்த சிலை வழிபாடு செய்த மக்கள் கிறிஸ்தவர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள்.
ததேயுவும் கொல்லப்பட்டார்.
ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார் அவர்.
ரோமிலுள்ள பினித பேதுரு ஆலயத்தில் இன்னும் ததேயுவின் எலும்புகள் பத்திரப்படுத்தப் பட்டுள்ளன.
7. கானானியனாகிய சீமோனுக்கு சிரச்சேதம்
கானாவூரைச் சேர்ந்தவர் ஆனதால் இவர் கானானியனாகிய சீமோன் என்று அழைக்கப்பட்டார். இயேசுவின் சீடர்களில் அதிகம் அறியப்படாத சீடர்களில் ஒருவர் இந்த சீமோன். சீமோன் பேதுரு மிகவும் அதிகம் பிரபலமடைந்தவராக இருக்க, இந்த சீமோனுடைய பெயர் விவிலியத்தில் அதிகம் காணப்படவில்லை.
சீமோனின் பணி வட ஆப்பிரிக்கப் பகுதியில் ஆரம்பமானது. எகிப்து, சைரீன், மாரிடானியா, லிபியா போன்ற இடங்களில் அவர் தன்னுடைய இறைப்பணியை நிகழ்த்தினார். செலோத்துகள் என்னும் தீவிரவாதக் குழுவில் இருந்தவர் இந்த சீமோன் என்று சொல்லப்படுகிறது. மிகுந்த நெஞ்சுரமும், துடிப்பும் மிக்கவர்கள் இந்த செலோத்துகள். சீமோனும் உற்சாகத்துடனும், துணிச்சலுடனும் தன்னுடைய பணியை நடந்தி வந்தார்.
கார்த்தேஜ் என்னும் நகரம் வட ஆப்பிரிக்காவில் இருந்தது. அங்கே தன்னுடைய பணியை தீவிரப்படுத்தினார் சீமோன். நகரில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீ போல பரவியது. சீமோன் மகிழ்ந்தார்.
எதிர்ப்பட்ட இடர்களையெல்லாம் செபத்தினாலும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தகர்த்து தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் சீமோன். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பலரை போதிக்கும் பணிக்காகவும் தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டி சீமோன் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார்.
கி.பி ஐம்பதில் பிரிட்டனில் கிளாஸ்டன்பரி என்னுமிடத்தில் கிறிஸ்தவத்தைப் போதிக்கத் துவங்கினார் சீமோன். அப்போது அந்த நாடு ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்தது ! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோமர்கள் லண்டனியம் என்னும் கோட்டையைக் கட்டி தங்கினார்கள். அந்த லண்டனியம் தான் இன்று லண்டன் என்று அழைக்கப்படுகிறது.
சீமோனின் மறை பரப்பும் பணி ரோமர்களிடமும், லத்தீன் மொழி பேசிய பூர்வீக வாசிகளிடமும் நடந்தது. ரோமர்கள் பலர் சீமோனை எதிர்த்தார்கள். ஆனாலும் அப்போஸ்தலர்களுக்கே உரிய மன திடமும், துணிச்சலும் சீமோனிடமும் இருந்ததால் அவர் கலங்கவில்லை. இயேசுவுக்காக இடர்கள் பட்டால் அது பெரும் பேறு என்று கருதினார்.
கி.பி 59 – கி.பி 62 க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் வந்திருந்த ரோமர்களுக்கும், போவாதீசியர்களுக்கும் கடும் சண்டை நடந்தது. அதில் ரோமர்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள். அந்த காலகட்டத்தில் சீமோனும் பிரிட்டனை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்துக்கே திரும்பி வந்தார்.
பாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்குச் சென்று மறைப்பணி ஆற்றினார் சீமோன். அங்கு சில காலம் பணியாற்றிய சீமோன் ததேயுவைச் சந்தித்தார். ததேயுவும் அந்தப் பகுதியில் பணிசெய்து வந்தார். இறைப்பணிக்காய் சில தளங்களை அங்கே உருவாக்கிவிட்டு இருவரும் பாரசீகம் நோக்கிப் பயணமானார்கள்.
பாசசீகத்தில் சுவானிர் என்னுமிடத்தில் நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் ததேயு ஈட்டியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
சீமோனையும் மக்கள் சிறை பிடித்தார்கள்.
அவரைக் கட்டி வைத்து ரம்பத்தால் அறுத்து அவரையும் கொலை செய்தார்கள். வலியைத் தாங்கிக் கொண்டு இயேசுவுக்காய் இறப்பதைப் பெரும் பேறாகக் கருதி உயிர் நீத்தார் சீமோன்.
8. செபதேயுவின் மகன் யாக்கோபு
இயேசுவின் சீடர்களில் முக்கியமானவர் இவர். பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு இந்த மூவரும் பைபிளில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். பல முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். யோவானின் சகோதரனே இந்த யாக்கோபு.
யாக்கோபுவின் பணி பெரும்பாலும் ஸ்பெயின் நாட்டில் நடந்ததாக வரலாறு கூறுகிறது. ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்த ஸ்பெயின் நாட்டில் யூதர்கள் ஏராளமாக இருந்தார்கள். இவர்கள் பலர் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். அவர்களிடையே யாக்கோபு இறைவனின் போதனைகளை எடுத்துரைத்து நம்பிக்கையூட்டினார்.
ஸ்பெயினில் தன்னுடைய போதனைகளை முடித்தபின் மீண்டும் எருசலேமுக்கே திரும்பினார் யாக்கோபு. அங்கும் தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்தார். இயேசுவையே சிலுவையில் அறைந்த கூட்டம் அங்கே இருந்தது. யாக்கோபுவை அவர்கள் விடவில்லை.
தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு. அவர் அங்கும் தன்னுடைய போதனையைச் செய்தார். அவரை கட்டி இழுத்துச் சென்ற படை வீரனே இவருடைய போதனையில் ஈர்க்கப்பட்டு மனம் மாறினார். கூடியிருந்த எதிர்ப்பாளர்களின் முன்னிலையிலேயே அந்த படைவீரன் யாக்கோபின் முன்னால் மண்டியிட்டு தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். யாக்கோபு அவனை முத்தமிட்டு, உனக்கு அமைதி உண்டாகட்டும் என்றார்.
கூடியிருந்தவர்களின் கோபம் விஸ்வரூபமெடுத்தது.
இயேசுவைக் கொன்ற ஏரோது மன்னனின் மகன் ஏரோது அகரிப்பா அப்போது ஆளுநனாக இருந்தார். அவன் யாக்கோபையும், அந்த படை வீரனையும் ஒன்றகாக் கொலை செய்யுமாறு ஆணையிட்டான்.
இருவரும் ஒரே நேரத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் !
9. இந்தியா வந்த தோமா
தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை.
தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டினார். அவருடைய கைகளின் காயம் அவர் கண்களுக்கு முன்னால் நின்றது. விலாவை காட்டினார். விலாவின் ஈட்டிக் காயம் தோமாவின் கண்களுக்குள் விழுந்தது. உடனே காலில் விழுந்தார் தோமா. என் ஆண்டவரே என் கடவுளே .. என்று கதறினார்.
இயேசுவின் அப்போஸ்தலர்கள் யாருமே இயேசுவை என் ஆண்டவரே, என் கடவுளே என்று அழைப்பதாக விவிலியம் சொல்லவில்லை. ஆனால் தோமா அறிக்கையிடுவதைச் சொல்கிறது. அப்படிப் பார்க்கையில் தோமாவின் நம்பிக்கை மற்றவர்களின் நம்பிக்கையை விட ஆழமானதாய் தோன்றுகிறது. எந்த அளவுக்கு அவர் இயேசுவைச் சந்தேகித்தாரோ, அந்த அளவுக்கு அவருடைய நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டார்.
இந்த தோமா தான் கிறிஸ்தவம் இந்தியாவில் நுழைய முதல் காரணமானவர் !
தோமாவின் வாழ்க்கை குறித்த தகவல்கள் தோமாவின் பணி என்னும் நூலில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. எடெசா என்னும் பகுதியில் வாழ்ந்த லிசியஸ் என்பவரால் சிரியா மொழியில் எழுதப்பட்டது தான் இந்நூல். இந்நூல் கி.பி 200 ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அப்போஸ்தலர்கள் பணி செய்ய ஆரம்பித்த நாட்களில் ஒருமுறை அனைவரும் ஒன்று கூடி எல்லோரும் தனித்தனியே பணி செய்ய வேண்டுமென்றும், யார் எங்கே பணி செய்வது என்றும் விவாதித்தார்கள். விவாதத்துக்குப் பின் அனைவரும் சீட்டு எழுதிப் போட்டு அந்த சீட்டில் எழுதப்பட்டிருக்கும் நாட்டிற்குச் சென்று பணி புரியலாம் என்று தீர்மானித்தார்கள். அதன் படி சீட்டு எடுக்கையில் தோமாவுக்கு வந்த சீட்டில் எழுந்தப்பட்டிருந்த நாட்டின் பெயர் “இந்தியா” !
தோமாவுக்கு இந்தியாவுக்குச் செல்ல விருப்பம் இல்லை. மொழி தெரியாத தேசத்தில் அவருக்கு பணி செய்யும் விருப்பம் இல்லாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்த கலாச்சார, மத அமைப்புகளும் தோமாவை தயக்கமடையச் செய்திருக்கலாம் என்றும் கணிக்க முடிகிறது. இந்தியாவுக்குச் செல்ல முடியாது என்று தோமா மறுத்து விட்டு எருசலேமிலே சுற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கே வந்தார் ஒரு வணிகர். அவருடைய பெயர் ஹப்பான். கொண்டேபோர்னஸ் என்னும் அரசனால் ஒரு நல்ல தச்சுத் தொழிலாளியைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த ஹப்பான் எருசலேம் வந்தார். எருசலேம் வந்த ஹப்பானுக்கு தோமாவை அறிமுகப்படுத்தி வைத்தார் ஒருவர். அவர் இயேசுவே என்று இறை விசுவாசிகள் நம்புகிறார்கள்.
கப்பலில் பயணம் செய்த இருவரும் நீண்ட நாட்கள் பயணம் செய்து தட்சசீலா நகரை வந்தடைந்தார்கள். காந்தாரா அரசின் தலைநகராக விளங்கியது தான் இந்த தட்சசீலா நகர். அவர்கள் வரும் வழியில் சிந்து நதிக்கரையில் சில காலம் தங்க நேர்ந்ததாகவும் அந்த நாட்களில் சிந்து நதிக்கரையில் அவர் கிறிஸ்தவத்தைப் போதித்ததாகவும் நம்பப்படுகிறது. கி.பி 44ம் ஆண்டின் இறுதியில் அவர் இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடும்.
தட்சசீலா நகர் அப்போதே ஒரு பெரிய வணிக நகராக இருந்தது. பல நாடுகளிலும் உள்ள வணிகர்கள் இங்கே வியாபார நிமித்தமாக சந்தித்துக் கொள்வது வழக்கமாய் இருந்தது. அங்குள்ள மக்களுக்கும் கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் அராமிக் மொழிப் பரிச்சயம் இருந்திருக்கிறது.
தோமா அங்கேயே தன்னுடைய போதனையை ஆரம்பித்தார். இயேசுவின் வாழ்க்கை போதனைகள், அவருடைய உயிர்ப்பு போன்ற நிகழ்வுகளை தோமா மக்களுக்கு விளக்கினார். இந்தியா ஏற்கனவே தத்துவங்களாலும், பழம் பெரும் கலாச்சாரங்களாலும் நிறைந்திருந்ததால் தோமாவுக்கு போதிய வரவேற்பு இருக்கவில்லை. முதலில் வணிகத்துக்காக வந்திருந்த மக்களே அவருடைய பேச்சை நம்பினார்கள். பின் ஒரு சிலர் தோமாவின் கொள்கைகளை ஏற்றனர். மிகவும் மெதுவாகவே அவருடைய போதனை மக்களிடையே பரவியது.
இதற்கிடையில் ஹப்பான் தோமாவை அழைத்துக் கொண்டு கொண்டேபோர்னஸ் மன்னனின் முன்னால் வந்து நின்றார். மன்னன் தோமாவைப் பார்த்தான், தோமாவிடம் தனக்கு ஒரு அழகான அரண்மனையைக் கட்ட வேண்டும் முடியுமா என்று கேட்டான். தோமா ஒத்துக் கொண்டார். அவர் மன்னனை ஊருக்கு வெளியே உள்ள ஒரு விசாலமான இடத்துக்கு அழைத்து சென்று அந்த இடத்தில் அரண்மனை கட்டித் தருவதாகச் சொன்னார். அரண்மனையைச் சுற்றிலும் புல் தரைகளும், மரத்தாலான அழகிய அரண்மனையும் செய்து தருவதாக கூறிய தோமா அரண்மனை எப்படி இருக்கும் என்பதையும் விளக்க ஆரம்பித்தார்.
வெளிச்சம் உள்ளே நுழைய ஏதுவாக கதவுகள் எல்லாம் கிழக்கு நோக்கி அமைக்க வேண்டும், தெற்கு நோக்கி சன்னல்களை அமைத்தால் நல்ல காற்றோட்ட வசதி இருக்கும், தண்ணீர் வடக்கு பக்கமும், சமையல் அறைகள் தெற்குப் பக்கமும் இருக்க வேண்டும் என்று தோமா விளக்கிக் கொண்டே செல்ல மன்னனுக்கு பரம திருப்தி.
மன்னன் பணத்தை அள்ளி தோமாவிடம் வழங்கிவிட்டு சென்றார். தோமாவோ அந்த பணத்தைக் கொண்டு அருகிலிருந்த ஏழை கிராமங்களுக்குச் சென்றார். அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார். கிறிஸ்தவ மதத்தையும் போதித்தார். பல நோயாளிகளின் பிணிகளை அகற்றினார். பேய் பிடித்திருந்ததாய் நம்பப்பட்ட சிலரை குணமாக்கினார்.
மன்னனை அடிக்கடி சந்தித்த தோமா, அரண்மனை ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து வருவதாகச் சொல்லி பணம் வாங்கி அதை ஏழைகளுக்குக் கொடுத்தார். கடைசியில் இனிமேல் கூரை வேயவேண்டும் என்று கூறி பணம் வாங்கினார். எல்லா பணத்தையும் செலவிட்டார் தோமா. அரசனைத் தவிர வேறு யாரிடமும் அவர் பணம் வாங்கவில்லை.
மன்னனுக்கு அரண்மனையைக் காணும் ஆசை வந்தது. ஒருநாள் திடீரென அரண்மனை கட்டும் வேலை நடக்கும் இடத்துக்கு வந்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிலம் இன்னும் பொட்டல்காடாகவே கிடந்தது. அரண்மனை கட்டுவதற்கான முதல் அடி கூட எடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை.
கோபத்தில் கொதித்த மன்னன் தோமாவையும், ஹப்பாரையும் உடனே வரவழைத்தார். ‘என்னுடைய அரண்மனை எங்கே ? நீங்கள் இருவருமாய் சேர்ந்து மன்னனையே ஏமாற்றி விட்டீர்களா ?’ என்று கத்தினார்.
தோமாவோ அமைதியாக, அரண்மனை கட்டியாகி விட்டது அரசரே.. என்றார்.
‘எங்கே ? இன்னும் என்னை ஏமாற்ற வேண்டாம். நான் சென்று பார்த்தேன். அங்கே எதுவும் இல்லை’ மன்னனின் கோபம் அதிகரித்தது.
‘நான் கட்டியிருக்கும் அரண்மனையை நீர் இறந்த பின்பு தான் காண முடியும்’ தோமா சொன்னார். அரசரின் கோபம் எல்லை கடந்தது. உடனே இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சில நாட்களில் மன்னன் கொண்டேபோர்னஸ் ன் தம்பி காத் மரணமடைந்தார். அவர் விண்ணகத்துக்குச் செல்கையில் அங்கே ஒரு அழகான அரண்மனை இருந்தது. காத் அருகிலிருந்த வான தூதரிடம் அந்த அரண்மனையில் தனக்கு ஒரு இடம் கிடைக்குமா என்று வினவினான். அதற்கு அந்த தேவதூதர், இல்லை.. இந்த அரண்மனை மன்னன் கொண்டேபோர்னஸ் க்காக தோமா என்பவரால் கட்டப்பட்டது. இது அவருக்கே சொந்தம் என்று சொன்னார். காத் தன்னை எப்படியாவது பூமிக்கு அனுப்பவேண்டுமென்றும் இந்த தகவலை தான் உலகிற்குச் சொல்ல விரும்புவதாகவும் சொல்ல தேவதூதர்கள் அவரை மீண்டும் பூமிக்கே அனுப்பினார்கள்.
மரணமடைந்திருந்த காத் திடீரென எழும்பினான். அவன் இறந்துபோன நிமிடங்களில் கண்ட காட்சி அவரை உலுக்கியது. கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். மன்னன் கொண்டேபோர்னஸ் ஆனந்தத்தில் தம்பியைக் கட்டித் தழுவினான். அவனோ, மன்னனிடம், ‘எனக்கே தெரியாமல் இப்படி ஒரு அரண்மனையை விண்ணகத்தில் கட்டி வைத்திருக்கிறீர்களே.. அதில் ஒரு அறையையாவது எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்டான்.
மன்னன் அதிர்ந்தான். அவனுக்கு தம்பி எந்த அரண்மனையைச் சொல்கிறான் என்று புலப்படவில்லை. தம்பி தான் கண்ட காட்சிகளை விளக்க மன்னன் வியப்பும், நடுக்கமும் அடைந்தான். உடனடியாக தோமாவை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். தோமாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட மன்னன் உடனே கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டான். அவனுடைய தம்பியும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினான்.
இந்த செய்தி ஊருக்குள் பரவ பலர் தோமாவின் போதனைகளில் நம்பிக்கை கொண்டனர். தோமாவின் போதனை அருகிலுள்ள ஊர்களுக்கும் பரவியது. மன்னனே கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டதால் தோமாவுக்கு கொண்டேபோர்னஸ் அரசின் கீழ் இருந்த பகுதிகளில் போதனை செய்கையில் எந்த அச்சுறுத்தலும் எழவில்லை. பலதரப்பட்ட மக்கள் கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள்.
ஒரு கிறிஸ்தவச் சபையை தட்சசீலத்தில் ஆரம்பித்த திருப்தியுடன் தோமா தட்சசீலத்தை விட்டுப் புறப்பட்டார். ஆனால் அவருடைய திருப்திக்கு சில ஆண்டு கால நீளமே இருந்தது. கொண்டேபோர்னஸ் மன்னன் இறந்தபின் குஷணர்களால் கைப்பற்றப்பட்ட நகரம், கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தது. குஷண வம்சத்தில் வந்த கனிஷ்கரால் கிறிஸ்தவ மதம் துடைத்தெறியப்பட்டது. சென்ற நூற்றாண்டுவரை தட்சசீலத்தில் நடந்த நிகழ்வுகள் ஒரு கட்டுக்கதையாக நம்பப்பட்டு வந்தன, ஆனால் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மன்னன் கொண்டேபோர்னஸ் மற்றும் அவனுடைய தம்பி காத்-ன் உருவம் பொறிக்கப்பட்ட நாணயமும், 1935ம் ஆண்டு தட்சசீல அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிலுவை ஒன்றும் ‘புனித தோமாவின் பணி’ என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட இந்த நிகழ்வுகள் குறித்த சிறு நம்பிக்கையை அளிக்கின்றன.
தட்சசீலாவிலிருந்து விடைபெற்ற தோமா சொகோட்டிரா தீவு வழியாக கேரளாவுக்குச் செல்ல விரும்பினார். அதன் படி முதலில் சொகோட்டிரா தீவை அடைந்தார். சொகோட்டிரா தீவில் சிலகாலம் தங்கி அங்கே கிறிஸ்தவ மதத்தை மக்களிடம் போதித்து பலரை கிறிஸ்தவர்களாக்கினார். இவர்கள் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இங்கே கிறிஸ்தவம் நன்கு வளர்ந்தது. சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் இந்த தீவில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கி.பி 1542, செப்டம்பர் 18 ல் புனித சவேரியார், புனித இன்னாசியாருக்கு எழுதிய கடிதத்தில் சொகோட்டிரா தீவு வாழ் கிறிஸ்தவர்கள் பற்றிய விளக்கமான குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி 1680 ல் வின்சென்சோ மரியா என்பவர் சொகோட்டிரா தீவில் கிறிஸ்தவ மதம் அழிந்து வருவதாகக் குறிப்பிட்டார். முஸ்லிம் மதத்தவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சொகோட்டிரா தீவு வந்தபின் அங்கு மிச்சமிருந்த கிறிஸ்தவ மதமும் வேரோடு அழிந்தது.
தட்சசீலாவிலிருந்து கேரளாவுக்குப் பயணமானார் தோமா. கி.பி 52ம் ஆண்டின் இறுதியில் அவர் முசிறி துறைமுகத்தில் காலடி எடுத்து வைத்தார். அப்போது கேரளா மலபார் என்று அழைக்கப்பட்டது. சேரர்கள் அந்த நாட்டை ஆண்டு வந்தார்கள். கேரளாவுக்கு வருகை தந்த தோமா மகிழ்ந்தார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன, ஒன்று கேரளா செல்வச் செழிப்பும், வணிகச் சிறப்பும், ஏராளமான மக்களையும் பெற்றிருந்தது. இரண்டாவதாக யூதர்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள், யூதர்களுக்கென்று தொழுகைக் கூடமும் இருந்தது.
யூதர்களின் தொழுகைக் கூடத்தில் தோமா பேசினார் ! யூதர்களின் பழைய ஏற்பாட்டு நம்பிக்கைகளையும், அவற்றின் நிறைவேறுதலாக வந்தவரே இயேசு என்றும் அவர் தன்னுடைய போதனையை அமைத்துக் கொண்டார். ஏராளம் தீர்க்கத் தரிசனங்களின் நிறைவேறுதலாய் இயேசுவைக் காட்டியதால் யூதர்கள் பலர் அவரை நம்பினார்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள்.
யூதர்களுக்கு அடுத்தபடியாக உயர்குலம் என்று அழைக்கப்பட்ட நம்பூதிரிகளின் மேல் தோமாவின் கவனம் விழுந்தது. கல்வியறிவு பெற்ற அவர்களை மனம் மாற்றினால் அதன்மூலம் பலரை கிறிஸ்தவத்தில் இணைக்க முடியும் என்று அவர் நம்பினார். அதன்படி பல நம்பூதிரிகளை தோமா தன் வசம் ஈர்த்தார். சில ஆயிரக்கணக்கான நம்பூதிரிகள் கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள். மலபார் கடற்கரைப் பகுதிகளில் ஏழு சபைகளை தோமா ஏற்படுத்தினார். பள்ளூர், முசிறி, பரூர், கோட்டமங்கலம், காயல், நிர்ணம் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் அவை நிலை நிறுத்தப்பட்டன. மனம் மாறிய நம்பூதிரிகளால் அந்த சபைகள் நிர்வாகிக்கப் பட்டன.
கோட்டமங்கலத்தில் தோமா செய்ததாக சொல்லப்படும் ஒரு அற்புதம் மிகவும் சுவாரஸ்யமானது. அங்கே பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள். ஒருமுறை அவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கையில் தோமாவும் அங்கே சென்றார். அவர்கள் தண்ணீரை செபித்து மேல் நோக்கி எறிந்து கொண்டிருந்தார்கள். தோமா அவர்களிடம் வந்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் செபிப்பதாகவும், கடவுளை நோக்கி தண்ணீரை தெளிப்பதாகவும் சொல்ல, அப்படியானால் அந்தத் தண்ணீர் ஏன் கீழே விழுகிறது என்று கேட்டிருக்கிறார். தண்ணீர் கீழே விழாமல் மேலேயா செல்லும் என அவர்கள் சிரித்திருக்கிறார்கள். அப்போது தோமா அவர்களிடம் ஒரு விண்ணப்பம் ஒன்றை வைத்தார்.
எல்லோரும் தண்ணீரை அவரவர் விரும்பும் தெய்வத்தை நினைத்துக் கொண்டு மேல் நோக்கி எறியவேண்டும், யார் எறியும் தண்ணீர் கீழே வரவில்லையோ அவர்களின் கடவுளே உண்மையான கடவுள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த விண்ணப்பம்.
அவர்கள் சவாலை ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டே தண்ணீரை மேல் நோக்கி எறிந்தார்கள். எல்லா தண்ணீரும் கீழே விழுந்தது. கடைசியாக தோமா எறிந்தார். கடவுளை வேண்டிக்கொண்டே அவர் எறிந்த தண்ணீர் வானத்தில் நின்றது. தோமா சுற்றிலும் பார்க்க அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். அவர்களில் பலர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். கேரளாவின் மார்த்தோமா சபை சகோதரர்களிடம் இன்றும் சொல்லப்படும் இந்தக் கதை புனித தோமாவின் பணிகள் என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின் இப்போது தென் தமிழகத்தில் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள திருவிதாங்கோடு என்னுமிடத்தில் போதனைகளை தொடர்ந்து அங்கும் ஒரு சபையை ஆரம்பித்தார். அங்கே கி.பி 57ம் ஆண்டில் இயேசுவின் தாய் மாதாவின் பெயரில் ஒரு ஆலயம் கட்டினார் தோமா. அதற்கு அன்றைய சேர மன்னன் உதயன் சேரலாதன் முழு அனுமதியும் உதவிகளும் அளித்த செய்தி வியப்பளிக்கிறது. ‘இயேசு தர்மத்தில் சேர அரசர் குலம்’ என்னும் நூல் இவற்றை விவரிக்கிறது. கிறிஸ்தவ வரலாற்றில் மாதாவின் பெயரில் கட்டப்பட்ட முதல் ஆலயம் இது தான். இதுவே கிறிஸ்தவ வரலாற்றின் முதல் ஆலயமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
தோமா பல அதிசயச் செயல்களையும் இந்தப் பகுதிகளில் செய்திருக்கிறார். ஒருமுறை பனை மரத்திலிருந்து ஒருவன் தவறி விழ ‘அங்கேயே நில்’ என்று தோமா கைகளை உயர்த்திச் சொன்னதும் அங்கேயே நின்றிருக்கிறார். பின் தோமா செபித்து அவரை பத்திரமாகத் தரையிறக்கியிருக்கிறார். ஒருமுறை கடல் கொந்தளித்து மீனவக் கிராமங்கள் பயந்தபோது கடலை அடக்கியதாகவும், இறந்த ஒரு சிறுமிக்கு உயிர் அளித்ததாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இன்றும் கேரளாவிலுள்ள பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் தங்களை தோமா கிறிஸ்தவர் என்றே அழைத்துக் கொள்கிறார்கள். பாரம்பரிய வரலாற்றில் வந்திருப்பதால் அவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசம் பாதுகாக்கப்படுவதாகவும் கருதுகிறார்கள். அவர்களிடையே தோமாவின் நினைவு நாள் கொண்டாட்டங்கள், புனிதப் பயணக் கொண்டாட்டங்கள் போன்றவை நடைபெறுகின்றன. அவர்களிடம் தோமாவின் வரலாற்றைக் கூறும் பாரம்பரியப் பாடல்களான வீரதியன் பாடல்கள், ரப்பான் தோமை பாடல்கள் மற்றும் மார்க்கம் களியாட்டம் போன்றவையும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
மலபாரில் சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய தோமா அங்கிருந்து இன்றைய சென்னை – மயிலாப்பூர் பகுதியாக இருக்கும் கோரமண்டல் பகுதிக்குப் பணியாற்றச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி மலபாரில் சபையை நம்பிக்கைக்குரிய நபர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுக்கு சபையை வழிநடத்தும் அறிவுரைகளையும் வழங்கிவிட்டு கோரமண்டல் புறப்பட்டார். கோரமண்டல் பகுதியை அடுத்துள்ள இடங்களிலும், மதுரை, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம் போன்ற முக்கியம் வாய்ந்த இடங்களிலும் இயேசுவைப் பற்றி அறிவிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது.
இயேசுவின் சீடர் தோமா தமிழில் பேசினார் என்பதால் தமிழர்கள் தங்கள் வரலாற்றுப் பெருமையை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்திக் கொள்ளலாம். தோமா தமிழ் மொழியைக் கற்று மக்களிடம் தமிழிலேயே உரையாற்றினார் என்பது ஆச்சரியமான செய்தி. தன்னுடைய முதுமைப் பருவம் நெருங்கி வருகையிலும் அவருடைய இறை ஆர்வம் தணியவே இல்லை. சென்னையிலுள்ள சின்னமலையில் இருந்த குகை ஒன்றை அவர் ஆழமான செபத்துக்காய் பயன் படுத்தினார். அங்கே வரும் மக்களுக்கு போதனைகள் வழங்கினார். சின்னமலைக்குச் சற்றுத் தொலைவில் பெரியமலை ஒன்றும் இருந்தது அங்கும் அவருடைய போதனைகள் தொடர்ந்தன.
மைலாப்பூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் அவருடைய போதனை நிகழ்ந்தது. ஏராளமான மக்கள் புதிய தகவலை ஆர்வமுடன் கேட்டார்கள். இறை செய்தியைக் கேட்பதற்கு பேதங்கள் இல்லை என்னும் நிலை கிறிஸ்தவத்தில் இருந்ததால் தோமாவின் போதனைகள் அடித்தட்டு மக்களை மிகவும் வசீகரித்தன.
ஒருமுறை தோமா சின்னமலை பகுதியில் போதித்துக் கொண்டிருக்கையில் மக்களுக்குத் தாகம் எடுத்தது. கடும் கோடைக் காலம். பக்கத்தில் நீர் நிலைகள் ஏதும் இல்லாத நிலை. தண்ணீருக்கு வேறு வழி இல்லை. தோமா செபித்தார். பின் கையிலிருந்த கோலால் பாறையை ஓங்கி அடித்தார். பாறையிலிருந்து நீர் பீறிட்டது. மக்கள் தாகம் தீர அருந்தினார்கள். தோமாவின் பெயர் பரவியது.
தோமாவின் பெயரும், கிறிஸ்தவம் என்னும் புதிய மதமும் மைலாப்பூர் பகுதியில் பரவுவதைக் கண்ட காளி கோயில் பூசாரி ஒருவர் கோபம் கொண்டார். தோமாவை ஒழித்துக் கட்டுவதற்காக தன்னுடைய குழந்தையையே கொன்று அந்த பழியை தோமாவின் மேல் போட்டான். தோமா கைது செய்யப்பட்டார். அவர் மீது தண்டனை விதிக்கும் நேரத்தில் அவர் அரசனிடம் அனுமதி கேட்டு கல்லறைக்குச் சென்றார். அங்கு சென்று அந்தக் குழந்தையை உயிர்த்தெழச் செய்தார். மக்கள் ஆச்சரியமடைந்தனர். குழந்தையிடம் தோமா, கொலையாளி யார் எனக் கேட்க குழந்தை தன் தந்தையை நோக்கிக் கையை நீட்டியது. தோமா தப்பினார்.
தோமாவின் புகழ் மேலும் பரவியது. ஒருமுறை மதகை அடைத்துக் கொண்டிருந்த யானைகளாலேயே நகர்த்த முடியாத பாரமான மிகப் பெரிய மரத் தடி ஒன்றை, தோமா தன்னுடைய இடையில் கட்டியிருந்த கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு சென்றதாகவும் அந்த தடியை வைத்து அவர் ஒரு ஆலயம் கட்டியதாகவும் தோமா வாழ்க்கை நூல் குறிப்பிடுகிறது.
காளி கோயில் பூசாரிகள் தோமாவை எப்படியும் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதன் படி அவர்கள் தோமாவை கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அவர் சின்னமலையிலும், பெரியமலையிலும் தங்கும் நேரம், செபிக்கும் நேரம் போன்றவற்றைக் கவனித்தார்கள். ஒருநாள் சின்னமலையில் செபித்துக் கொண்டிருக்கையில் பூசாரிகள் அவரைத் தாக்கினார்கள். அவர் அங்கிருந்து தப்பி பெரியமலைக்குச் சென்றார். அங்கு சென்று அங்கிருந்த கற்சிலை ஒன்றை கட்டி அணைத்தபடி செபிக்கத் துவங்கினார். அவரைத் தேடி வந்த பூசாரிகள் அவரைக் கொல்ல இது தான் தக்க சமயம் என்று தீர்மானித்தார்கள்.
ஈட்டி ஒன்று தோமாவைக் கிழித்தது. இதயப் பகுதியில் இறங்கிய ஈட்டி உயிரை வெளியேற்றியது. கி.பி 65ல் மயிலாப்பூர் வந்த தோமா கி.பி 72ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தியதி மரணமடைந்தார். சுமார் இருபத்தொன்பது வயதானபோது இயேசுவின் சீடராக மாறியவர் இந்த தோமா. புனித தோமாவின் பணி, தோமாவின் நற்செய்தி, தோமாவின் திருவெளிப்பாடு போன்ற நூல்கள் தோமாவின் வரலாறை நாம் அறிய நமக்குத் துணை நிற்கின்றன.
10. இயேசுவின் அன்புச் சீடர் யோவான்
இயேசுவின் சீடர்களில் மிகவும் முக்கியமானவர் யோவான். இவர் செபதேயுவின் மகன் யாக்கோபின் தம்பி. இயேசு தன்னுடைய சீடர்களில் அதிகமாய் நேசித்தது இந்த யோவானைத் தான். இயேசு கைது செய்யப்பட்டபோது அவரைத் தெரியாது என்று மூன்று முறை மறுதலித்தவர் இவர். ஆனாலும் இயேசு கைது செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பின் எல்லா சீடர்களும் தலைமறைவாகி விட இவரும் பேதுருவும் தான் துணிச்சலாக, தலைமைச் சங்க முற்றம் வரை வந்து இயேசுவை என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விட்டனர். இயேசுவை மறுதலித்தது தவறு என்பது கோழி கூவிய போது அவருக்கு விளங்கியது ! பின் அவர் இயேசுவை விட்டு விலகவில்லை. சிலுவையில் இயேசு தொங்கியபோது சிலுவை அடியிலேயே நின்றிருந்தவர் அவர்.
இவரிடம் தான் இயேசு தன்னுடைய தாயை ஒப்படைத்தார்.
இவருடைய பணி பாலஸ்தீனத்தில் தான் தொடர்ந்தது. முதலில் சமாரியர்களிடையே இவருடைய பணி துவங்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. சமாரியர்கள் பலரை கிறிஸ்தவர்களாக்கியவர் இவர் தான். அன்னை மரியாளை தன்னுடைய தாயைப் போல பாதுகாத்தார். இயேசுவின் கடைசி விண்ணப்பத்தை அவர் வாழ்நாளின் முதல் கடமையாகக் கொண்டார்.
இரண்டாம் கட்டமாக எபேசு நகரில் யோவானின் பணி நடந்தது. பல்வேறு இடர்கள் நேர்ந்த போதும் துணிச்சலை விடாமல் மதத்தைப் போதிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார். தாமிதியன் பேரரசர் அரசாண்டு கொண்டிருந்தபோது யோவான் இறை பணி ஆற்றியமைக்காகக் கைது செய்யப்பட்டார். யோவான் தன்னுடைய மறை போதனைகளை விட்டு விட வேண்டுமென்று பேரரசர் பல எச்சரிக்கைகள் அனுப்பியும் யோவான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.
அரசருக்கு முன்பாகவே இயேசுவின் அதிசயங்களைக் குறித்துப் போதித்தார். மன்னன் கடும் கோபம் கொண்டு யோவானை கொதிக்கும் எண்ணையில் வீச கட்டளையிட்டார் !
படைவீரர்கள் பெரிய பானையில் எண்ணையை ஊற்றிக் கொதிக்க வைத்தார்கள். எண்ணை கொதித்தது. அதன் அனலில் படைவீரர்களின் உடல்கள் கருகின. யோவான் இழுத்து வரப்பட்டார்.
கொதிக்கும் எண்ணையில் யோவான் வீசப்பட்டார்.
எரிந்து பஸ்மமாகிப் போவார் என்று படைவீரர்கள் ஆவலுடன் காத்திருக்க அவர்களுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி. யோவான் கொதிக்கும் எண்ணையில் நின்று இறைபுகழ் பாடிக் கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த வீரர்கள் மன்னனிடம் தகவலைச் சொல்ல, மன்னனும் அந்த காட்சியைக் கண்டு நடுங்கினான்.
இனிமேலும் யோவானை தன்னுடைய பூமியில் நடமாட விடக்கூடாது என்று முடிவெடுத்த மன்னன் அவரை தற்போதைய துருக்கி நாட்டின் கடல்பகுதியில் இருந்த பத்மு என்னும் தீவுக்கு நாடுகடத்தினான். யோவான் தீவில் தூக்கி எறியப்பட்டார். அங்கிருந்த குகை ஒன்று அவருக்கு அடைக்கலமானது.
அந்த குகையில் அமர்ந்தபடியே அவர் திருவெளிப்பாடு நூலை எழுதினார். அந்தக் குகை அப்போகாலிப்ஸ் குகை என்று அழைக்கப்படுகிறது.
யோவானின் தலைமறைவு வாழ்க்கை கி.பி 96 ல் முடிவுக்கு வந்தது. அப்போதைய அரசரான நெர்வா கிறிஸ்தவ மதத்தின் மீது சற்று இறுக்கம் தளர்ந்த மனநிலையிலேயே இருந்ததால் யோவானின் தண்டனையை ரத்து செய்தார். யோவான் எபேசு நகருக்குத் திரும்பினார். சிமிர்னா, சர்தை, பிலதெல்பியா மற்றும் பல இடங்களுக்கும் சென்று கிறிஸ்தவ மத உரைகள் நிகழ்த்தி தலைவர்களையும் நியமித்தார்.
கி.பி 100 ஆம் ஆண்டு யோவான் இறந்தார். இயற்கை மரணம் !! இயேசுவின் அப்போஸ்தலர்களில் இயற்கை மரணம் அடைந்த ஒரே சீடர் யோவான் தான் !
இவர் விவிலியத்தில் இடம்பெற்றுள்ள யோவான் நற்செய்தியையும், திருவெளிப்பாடு எனும் நூலையும், வேறு மூன்று அறிவுரை நூல்களையும் எழுதி கிறிஸ்தவ மறையில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
11. இயேசுவின் சகோதரர் யாக்கோபு
இயேசுவுக்கு யாக்கோபு, யோயே, சீமோன், யூதா என்று நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். இவர்கள் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று ஒருசாராரும், இவர்கள் இயேசுவின் உடன்பிறந்தவர்கள் அல்ல உறவினர்கள் தான் என்று இன்னொரு சாராரும் காலம் காலமாக தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு வாதிடுகிறார்கள். குறிப்பாக கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் இயேசுவுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் அன்னை மரியை, வணக்கத்துக்குரியவராகப் பார்ப்பதால் அன்னைக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகள் இருப்பது அவருடைய புனிதத் தன்மையைப் பாதிக்கும் என்று கருதுகிறார்கள்.
மார்ட்டின் லூதர் மூலமாக பிரிந்து சென்ற சபையினர், புராட்டஸ்டன்ஸ், இயேசுவுக்கு சகோதரர்கள் இருந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். முதலிலேயே தோன்றியது கத்தோலிக்க மதம் என்பதாலும், விவிலியத்தில் எங்கும் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று குறிப்பிடப்படுவதில்லை என்பதாலும், அக்கால வழக்கப்படி பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளும் கூட சகோதரன் என்றே அழைக்கப்படுவதாலும், விவிலிய நிகழ்வுகள் எதிலும் சகோதரர்கள் பற்றிய குறிப்பு காணப்படாததாலும் அன்னை மரிக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்பதே பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.
இந்த யாக்கோபு இயேசுவின் சகோதரர் என்று அறியப்படுகிறார். முதலில் இயேசுவின் பணிகளிலும் அவருடைய போதனைகளிலும் அதிகமாக ஆர்வம் காட்டாத இவர், இயேசுவின் மரணம் உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் தீவிர சீடராகிறார். அவருடைய பணி சிங்கத்தின் குகையிலேயே நடந்தது. அதாவது எருசலேமில் !
எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைவராக இவர் பொறுப்பேற்று மக்களைத் துணிவுடன் நடத்தினார். இவருடைய கண் முன்னால் பல சீடர்களை யூதத் தலைவர்கள் கொன்றாலும் கூட கடைசி வரை துணிச்சலோடு வாழ்ந்தார். இவருடைய துணிச்சல் தான் மற்ற அப்போஸ்தலர்களை வேறு வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பை வழங்கியது என்றும் சொல்லலாம்.
யாக்கோபின் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. யூதத் தலைவர்களுக்கும் தலைமைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் இது பெருத்த களங்கமாக இருந்தது. தங்களால் இயேசு கொல்லப்பட்ட பின் சபை இப்படி விஸ்வரூப வளர்ச்சி அடையும் என்று அவர்கள் சிந்தித்திருக்கவில்லை. எத்தனையோ இறைவாக்கினர்களைக் கொன்று குவித்த பரம்பரை, இப்போது இயேசுவைக் கொன்றதால் சிக்கலில் சிக்கி விட்டது.
யாக்கோபுவை எப்படியாவது கொல்லவேண்டும் என்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் உறுதியான முடிவை எடுத்துவிட்டார்கள். ஆனால் எப்படிக் கொல்வது ? எப்போது கொல்வது ? சரியான சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார்கள் மதகுருக்கள்.
வாய்ப்பு அப்போதைய ஆளுநர் பெஸ்டஸ்ன் மரணத்தின் மூலமாக வந்தது. ரோம ஆளுநனாக இருந்த பெஸ்டஸ் மரணமடைந்தான். அடுத்த ஆளுநர் பதவியேற்கவிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆளுநராக யாரும் இல்லாத சூழல். இந்த சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டனர். எருசலேம் தேவாலய தலைமைச் சங்கத்தினர்.
அவர்கள் யாக்கோபுவைக் கைது செய்தார்கள்.
யாக்கோபு போலித் தீர்க்கத் தரிசனம் சொல்கிறார். மதத்தை இழிவுபடுத்துகிறான் என்று குற்றம் சாட்டினார்கள். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சாட்சிகள் யாக்கோபுக்கு எதிராக பொய் சாட்சி சொன்னார்கள்.
யாக்கோபுக்கு மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டது !
எருசலேம் தேவாலயத்தின் உப்பரிகைக்கு இழுத்துச் செல்லப்பட்டார் யாக்கோபு.
கீழே ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். யாக்கோபின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்து நின்று கண்ணீர் விட்டார்கள்.
‘இயேசுவை நீயும் மறுதலித்து, இதோ கூடியிருக்கும் மக்களையும் மறுதலிக்கச் சொல். அப்போது நான் உன்னை விடுவிப்பேன்’ தலைமை குரு நிபந்தனை விதித்தான். யாக்கோபு பார்த்தார். கீழே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், யூதர்களும். அவர் அந்த இடத்தையும் தன்னுடைய போதனைக்காகப் பயன்படுத்தினார். கூடியிருந்த்த மக்களுக்கு இயேசுவைப் பற்றி அறிவிக்கலானார்.
கோபம் கொண்ட தலைமைச் சங்க உறுப்பினர்கள். அவரை உப்பரிகையிலிருந்து கீழே தள்ளினார்கள்.
கீழே விழுந்த யாக்கோபு மீது யூதர்கள் கற்களை எறிந்தார்கள். ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று கூறி இயேசு கற்றுக் கொடுத்த மன்னிப்பை வாழ்க்கையின் வலிமிகுந்த தருணத்திலும் வழங்கினார் யாக்கோபு.
அதைக் கண்ட யூதன் ஒருவன் வெறி கொண்டு துணி துவைக்கப் பயன்படுத்தும் ஒரு பெரிய உருளைக் கட்டையால் யாக்கோபின் உச்சியில் அடித்தான். யாக்கோபு மண்டை உடைய, உயிரை விட்டார்.
Thanks - Bro. Xavier