​*ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்*

*ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்*
இன்றைய பெரும்பாலான போதகர்களின் ஆஸ்தான வேதவாக்கியம் இது என்றால் அதுமிகையல்ல, எப்படி ஐந்து அப்பத்தைக் கொடுத்தவுடன் கர்த்தர் பன்மடங்கு ஆசீர்வதித்தார் பாருங்கள் என்று பிரசங்கித்தவர்கள் இல்லையென்றே சொல்லலாம், ஆனால் உண்மையிலே அந்த அதிகாரத்தில் ஐந்து அப்பத்தை கொடுத்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம் என்பதற்காகவா பரிசுத்தாவியானவர் எழுதியுள்ளார். இந்த அதிகாரத்தை மட்டும் ஆராய்வோம், இது காணிக்கை கொடுக்கவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட அதிகாரமல்ல, அதற்கு வேறு பகுதிகள் உண்டு, இதை தவறாக பயன்படுத்தவேண்டாம் என்பதற்காக எழுதியுள்ளேன்.
1] உண்மையில் ஐந்து அப்பத்தை கொடுத்த சிறுவன் ஐயாயிரம் அப்பத்தை பெற்றுக்கொண்டு வீடு சென்றானா? இல்லை, அவனால் பலபேர் பசியாறினர் அவனும் அவர்களில் ஒருவன் அவ்வளவே!
2] இந்த வசனத்திலிருந்து போதகர்கள் பெரும்பாலும் பிரசங்கிப்பது, நீங்கள் ஐந்து அப்பம் கொடுக்காவிட்டால், எங்களால் எந்த ஊழியமும் செய்யமுடியாது, யாரும் பயனடையமுடியாது, இது உண்மையா? அன்று ஐந்தப்பம் இரண்டு மீன் யாரிடமும் இல்லாவிட்டாலும் இயேசு அவர்களுக்கு உணவு கொடுத்திருப்பார், ஒன்றும் இல்லாமையிலுருந்து அவரால் எதைவேண்டுமானாலும் உருவாக்கமுடியும். இன்றைக்கு ஐந்தப்பமும், இரண்டுமீனை விசுவாசிகள் ஊழியனுக்கு கொடுக்காவிட்டால் ஊழியர்கள் ஊழியத்தைவிட்டே பறந்துவிடும் நிலையில்தான் இருக்கிறார்கள். ஊழியர்களே இயேசு ஐந்தப்பத்தை ஒருபோதும் நமபவில்லை, நாமும் அதை நம்பி இந்த ஊழியத்தில் இறங்கவேண்டாம். அப்போஸ்தலர்கள் யாரிடமும் ஐந்தப்பமோ, பணமோ, பொருளோ வாயை திறந்து கேட்கவில்லை, ஆனால் விசுவாசிகளே மனமுவந்து கொடுத்ததை ஏற்றுக்கொண்டனர், நாம் ஏன் அதை பின்பற்றக்கூடாது, உங்கள் தேவையை தேவனே நிறைவேற்றுவார் என்றால் என்ன அர்த்தம்? ஊரெல்லாம் சென்று நான் வாய் கிழிய கத்தி காணிக்கை கேட்பேன், மக்கள் கொடுத்துவிட்டால், கர்த்தர் கொடுத்தார் என்று சாட்சி சொல்லுவது, இதுவா ஊழியம். நமது தேவைகள், சபை தேவைகள் யாருக்கும் தெரியாமலே கர்த்தர் விசுவாசிகளைக் கொண்டு சந்திப்பதே, சரியானது, இதுதான் உண்மையான சாட்சி.
3] ஐந்தப்பம் இரண்டு மீன்கள் மூலம் நான் கற்றுக்கொண்டது  என்னவெனில், சுவிசேஷ ஊழியத்திற்கு கன்வெண்ஷன் கூட்டம் நடத்தும் நாம், ஒருபோதும் வருகிறவர்களுக்கு வேண்டுமானாலும் போஷிக்கலாமேயல்லாமல், வந்தவர்களிடம் நாற்காலிக்கு இவ்வளவு காசு என வசூலில் ஈடுபடக்கூடாது.
4] அன்றைக்கு வெறும் ஐந்தப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்க போதுமானதாக இருந்தது, ஆனால் இன்றைக்கோ, ஐயாயிரம்பேர், ஐயாயிரம் அப்பங்களும் இரண்டாயிரம் மீன்களும் போதகர்களுக்கு தந்தாலும் ஒரு போதகனை கூட அது திருப்தி படுத்த முடியாமல் உள்ளதே, பின் எப்படி மற்றவர்களுக்கு அதைக்கொண்டு போஷிக்கமுடியும்
5] அன்று தன்னிடம் வசனம் கேட்கவந்தவர்களின் பசியாற்ற இயேசு ஐந்தப்பத்தை வாங்கினார், இன்று தங்கள் பேரிலும் தங்கள் பிள்ளைகள் பேரிலும் கல்லூரிகள், பள்ளிகள் கட்டுவதற்கு அல்லவா போதகர்கள் ஐந்தப்பத்தை வாங்குகிறார்கள் இது எப்படி வேதமுறையாகும்.
6]அன்று வந்திருந்த ஒரு சிறுவனிடம் மட்டும்தான் இயேசு ஐந்தப்பத்தை வாங்கினார், ஆனால் இன்றைக்கு வந்தவர்கள் எலோரிடமும் ஐந்தப்பத்தை வாங்குவது எப்படி சரியாகும்?
7] இந்த அற்புதத்தை தேவன் செய்தபோது எல்லோரும் அவரை மெய்யாகவே உலகத்திலிருந்து வருகிறவரான தீர்க்கதரிசி என்று கொண்டாடினார்கள், ஆனால் அது சரியான விசுவாசமல்ல என்பது பின்னர் தெரிந்தது. எப்படி? அதே மக்கள் இந்த தீர்க்கதரிசி எப்போதும்  நமக்கு உணவு தரும்படி இவரை ராஜாவாக்கிவிடலாம் என்று கருதி அவரை நெருங்குகையில், அவர் விலகிப்போனார் என்றுபார்க்கலாம். ஆக ஐந்தப்பம் இரண்டு மீனை தேவன் ஆசீர்வதித்தது, அவர்களுக்கு உணவு கொடுக்க மட்டுமல்ல, தன்னை மேசியா என நிரூபிக்கவுமே! ஆனால் அவர்களோ அவர் கொடுத்த சாப்பாட்டின்மேலேயே கவனமாக இருந்ததால்  இயேசு அவர்களை கடிந்துகொள்ளவேண்டியதாயிற்று. (நீங்கள் அப்பம் புசித்த்தாலேயே என்னை பின்பற்றுகிறீர்கள் என) ஆக மேசியாவாக நிரூபிக்க செய்யப்பட்ட சில அற்புதங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, அந்த அற்புதங்கள் மட்டுமே இன்று பின்பற்றப்படும் சத்தியங்களாகிப்போகின.
இந்த பதிவின் மூலம்,  ஊழியத்திற்கு பணம் தேவையில்லையென்றோ, உதவிகள் அவசியமற்றது என்றோ நான் சொல்லவரவில்லை, ஆனால் இந்த வேத வசனப்பகுதியை எடுத்து தவறாக வியாக்கியானம் செய்யவேண்டாமே என கூறிக்கொள்ள விரும்புகிறேன்!

Filed under: Uncategorized

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.