நற்செய்தி நூல்களும் அப்போஸ்தலர் நடபடிகளும்
புதிய ஏற்பாடு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் 4 சுவிசேஷங்களுடன் ஆரம்பிக்கிறது.. “சுவிசேஷங்கள்” என்பதை சரியான தமிழ்நடையில் “நற்செய்தி நூல்கள்” என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் இது, நற்செய்தியை அல்லது நல்ல சரித்திரத்தை அறிவிக்கும் நூல்கள் என்னும் கருத்தில் “காஸ்பல்” (Gospel) என்ற வார்த்தையில் அறியப்படுகிறது.மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் இதன் எழுத்தாளர்கள், “நற்செய்தியாளர்கள்” அல்லது “சுவிசேஷகர்கள்” என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தங்கள் சொந்த எழுத்து நடையில் இயேசுவின் சரித்திரத்தை நமக்குத் தருகிறார்கள்.
நான்கு நற்செய்தி நூல்களும் நான்கு வித்தியாசமான கோணங்களிலிருந்து இயேசுவின் வாழ்க்கையை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இயேசு எப்படிப்பட்டவர்? அவர் என்ன செய்தார்? அவருக்கு சம்பவித்தது என்ன? அவை ஏன் சம்பவித்தன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நற்செய்தி நூல்கள் நான்கும் நமக்குப் பதில் தருகின்றன.
என்றாலும், அவை இயேசுவின் பிறப்பைக் குறித்த காரியங்களை எடுத்துரைத்தபின் முக்கியமாக அவரது கடைசி மூன்றரை ஆண்டு கால ஊழியங்களையும், அவரின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் போன்ற காரிய்ங்களையும் தெளிவாக நமக்கு படம் பிடித்துக் காட்டும் சரித்திர புத்தகமாக விளங்குகின்றன.
இயேசுவின் சீஷர்கள் குறித்தும், அவர்கள் எப்படி இயேசுவை மேசியாவாக கண்டு கொண்டனர் என்பது குறித்தும் இந்நூல்களில் பல்வேறு சம்பவங்கள் மூலம் அறிகிறோம். நமது ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவம், பாவ மனுக் குலத்தை மீட்க சிலுவைப் பிராயச்சித்தமும், தேவனுடைய மாபெரும் திட்டமும் போன்ற சத்தியங்களையும் தமது சரித்திரக் குறிப்புகளில் கவனமாய் உள்ளடக்கித் தருகின்றன இந்த நற்செய்தி நூல்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவின் மரணத்தின் மூலம் ஏற்பட்ட மாபெரும் வெற்றி, தமது பின்னடியார்களாகிய அப்போஸ்தலருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியை விட்டுச் செல்லுதல் போன்ற காரியங்களும் சுவிசேஷங்கள் நமக்குத் தரும் விபரங்கள் ஆகும்.
இன்னும் கூறப்போனால், நான்கு சுவிசேஷங்களிலும் கூறப்பட்டிருக்கும் இயேசுவின் வாழ்க்கையும், அவர் செய்த காரியங்களனைத்தும் அதினதின் காலக்கிரமத்தின்படி எழுதப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். வரிசைக்கிரமமாக இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கூறுவதைக் காட்டிலும், இயேசுவின் வாழ்க்கையின் உன்னத நிகழ்ச்சிகளைக் கூறுவதையே அதன் ஆசிரியர்கள் தங்கள் பிரதான நோக்கமாக கொண்டனர்.
நற்செய்தி நூல்கள் எழுதப்படக் காரணங்கள்
இயேசு கிறிஸ்துவைக் குறித்த அனைத்து சரித்திரக் குறிப்புகளும், அவர் நாட்களில் அவரைப் பின்பற்றிய உண்மையான விசுவாசிகள் மற்றும் அவரது சீஷர்கள் மூலம் பாலஸ்தீன யூதருக்கு, நினைவாற்றலிலிருந்து சொல்லப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்தது. ஆனால், சுவிசேஷம் யூத எல்லையை விட்டு புறஜாதியாரை அடைந்தபோது நடந்தவற்றை சரித்திரமாக எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அப்படி எழுதப்பட்ட நூல்கள் ஆரம்பத்தில் ஏராளம் எழுந்தாலும் (லூக்கா: 1:1-4), காலப்போக்கில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நூல்கள் மட்டுமே திருமறையாக இன்றுவரை நிலைத்திருக்கின்றன. பரிசுத்த ஆவியின் ஏவுதலால் இவை எழுதப்பட்டமையால் தவறில்லாத உண்மைச் சரித்திரமாக இன்று நம் கையில் வந்துள்ளது.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட நற்செய்தி நூல்களின் தேவை என்ன?
ஒரு காரியத்தை வலுவாய் உறுதிப்படுத்த ஒரு நீதிமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் தேவைப்படுவதுபோல, இயேசுவின் வாழ்க்கை சரித்திரமும் நான்கு நற்செய்தியாளர்களால் எழுதப்பட்டு உண்மை சரித்திரமாய் உறுதிபட்டுள்ளது.
ஒரு கட்டிடத்தை புகைப்படம் எடுக்கும் ஒருவர் கட்டிடத்தின் முழு அமைப்பும் தெளிவாய் கிடைக்க ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை எடுப்பதுபோல, நமதாண்டவரின் வாழ்க்கை குணாதிசயங்கள், ஊழியம் இவற்றை தெளிவுறக் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் சொந்த மொழிநடையில் எழுத வேண்டியது அவசியமாயிற்று.
மத்தேயு இயேசுவை ராஜாவாகவும், மாற்கு இயேசுவை ஊழியக்காரராகவும். லூக்கா இயேசுவை மனித குமாரனாகவும், யோவான் இயேசுவை தேவகுமாரனாகவும் சித்தரிக்கிறார்கள்.
இவை நான்கும் இயேசுவின் ஊழியம், போதனைகள் மற்றும் அற்புதங்களையே சித்தரித்துக் காட்டினாலும், ஒரு நூலிலிருந்து மற்றது வேறுபட்டிருக்கிறது. மாற்கு எழுதாமல் விட்டதை மத்தேயு எழுதுகிறார்.
ஒருநோக்கு நற்செய்தி நூல்கள்
நான்கு சுவிசேஷங்களுமே இயேசுவின் 18 ஆண்டுகால வாழ்க்கையை (12 வயது முதல் 30 வயது வரை) எழுதாமல் விட்டுவிடுகின்றன. ஒவ்வொரு நூலும் தன்னில்தானே முழுமையுற்றதாயிருப்பினும், ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் எழுதுகின்றனர்.தாங்கள் எழுதும்படி தெரிந்தெடுத்த கருப்பொருளில், மையக்கருத்தில் கவனம் செலுத்தி எழுதுகிறபடியினாலேயே இவ்வித வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சுவிசேஷங்களும் ஒன்றைஒன்று அதிகம் ஒத்திருப்பதால் அவை “ஒரு நோக்கு நற்செய்தி நூல்கள்” அல்லது “திரி அநுபந்த சுவிசேஷங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
ஒருநோக்கு நற்செய்தி நூல்கள் இயேசுவின் கலிலேயா ஊழியத்தை அதிகம் எடுத்து எழுதும்போது, யோவான் நற்செய்தி நூல் நமதாண்டவரின் யூதேயா ஊழியத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
முதல் மூன்று நூல்களும் இயேசுவின் அற்புதங்கள், உவமைகள் மற்றும் திரள் கூட்டத்திற்கு அவர் பிரசங்கித்த பிரசங்கங்களையும், போதித்த போதனைகளையும் விவரித்துக் காட்டுகின்றன.
ஆனால், நான்காவது சுவிசேஷம் (யோவான்), இயேசுவின் ஆழமான போதனைகளையும், சம்பாஷணைகளையும், ஜெபங்களையும் சித்தரித்துக் காட்டுகிறது.
இன்னும் கூறினால், “திரி அநுபந்த நூல்கள்” (மத்தேயு, மாற்கு. லூக்கா) இயேசுவின் இவ்வுலக செயல்களைச் சித்தரிக்கும்போது, யோவான் சுவிசேஷம் இயேசுவின் பரலோக உறவையும், மனுமக்களோடு அவர் கொண்ட தனிப்பட்ட உறவையும் தெளிவாய்த் தருகிறது.
பகுதி: 4
புதிய ஏற்பாடு 27 புத்தகங்களின் சுருக்கமான தொகுப்பு
1. மத்தேயு:
அ) பின்னணி:புதிய ஏற்பாடு 27 புத்தகங்களின் சுருக்கமான தொகுப்பு
1. மத்தேயு:
ஆசிரியர்: மத்தேயு
எழுதப்பட்ட காலம்: பாலஸ்தீனா அல்லது அந்தியோகியா
எழுதப்பட்ட காலம்: கி.பி.70 - கி.பி.80
சேருமிடம்: பாலஸ்தீனா அல்லது அந்தியோகியா யூதர்கள், புறஜாதிகள்
எந்நிலையில் எழுதப்பட்டது:
பாலஸ்தீனா மற்றும் அந்தியோகியாவிலுள்ள விசுவாசிகளுக்கு “கிறிஸ்து கட்டளையிட்ட அனைத்தையும்” குறித்துப் போதிப்பதன் தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “தாவீதிய மேசியாவின் சுவிசேஷம்”
கருப்பொருள்: புதிய மேசியாவின் கீழ் புதிய இஸ்ரவேலுக்கு போதித்தல்
நோக்கம்: புதிய இஸ்ரவேலின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தாவீதிய மேசியாவாகிய கிறிஸ்து கட்டளையிட்ட அனைத்து காரியங்களை புறஜாதி சீஷர்களும், கிரேக்க, ரோம கலாச்சாரங்களில் வாழும் யூதர்களும் கைக் கொள்வதில் அவர்களுக்கு உதவும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு போதனை கையேட்டை அளித்தல்.
முக்கியவசனம்:
மத்தேயு: 28:18-20 - “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்பொய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பாிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.”
2. மாற்கு
அ) பின்னணி:
ஆசிரியர்: மாற்கு
எழுதப்பட்ட இடம்: ரோமாபுரி (1பேதுரு: 5:13)
எழுதப்பட்ட காலம்: கி.பி.65 (முதலாவதாக எழுதப்பட்ட சுவிசேஷமாக மாற்கு அளித்த முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
சேருமிடம்: ரோம புறஜாதிகள்
எதற்காக எழுதப்பட்டது: ரோமாபுரியில் நீரோவின் அடக்குமுறைக்கு கீழ்ப்பட்ட விசுவாசிகளுக்காக.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “பாடுபடும் ஊழியரின் சுவிசேஷம்”
கருப்பொருள்:
தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றின ஒரு ஊழியரான கிறிஸ்து, தம்முடைய பாடுகளை எவ்வாறு ஜெயங்கொண்டார் என்பதை எடுத்துக் காட்டுவதன் மூலம் ரோமாபுரியில் பாடுகளுக்குள்ளான கிறிஸ்தவர்களை ஊக்குவித்தல்.
முக்கிய வசனம்:
மாற்கு: 10:45 - “மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.”
3. லூக்கா
அ) பின்னணி:
ஆசிரியர்: லூக்கா
எழுதப்பட்ட இடம்: சிசேரியா, ரோமாபுரியாக இருக்கக் கூடும்.
எழுதப்பட்ட காலம்: கி.பி.70 - கி.பி.85
சேருமிடம்: தெயோப்பிலுவேல் (ரோமாபுரியில் வாழ்ந்தவராக இருக்கக்கூடும்.
எந்நிலையில் எழுதப்பட்டது: ரோமத் தலைவன் கிறிஸ்தவத்தைக் குறித்து அறிய வேண்டிய தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “இரக்கமுள்ள இரட்சகரின் சுவிசேஷசம்”
கருப்பொருள்:
கிறிஸ்துவினுடைய வார்த்தைகள் மற்றும் செயல்களைக் குறித்த ஒரு முறையான விவரம்.
நோக்கம்:
ஒரு ரோமத் தலைவனான தெயோப்பிலுவிற்கு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையைக் குறித்த ஒரு முறையான விவரத்தை அளித்தல்.
முக்கியவசனம்:
லூக்கா: 2:10,11 - “...பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.”
4. யோவான்
அ) பின்னணி:
ஆசிரியர்: யோவான்
எழுதப்பட்ட இடம்: எபேசு
எழுதப்பட்ட காலம்: கி.பி.90 - கி.பி.100
சேருமிடம்: எபேசுவைச் சுற்றி வாழ்ந்த யூதர்களும், புறஜாதிகளும்
எப்போது எழுதப்பட்டது:
முரண்பாடுகளும், சமயத் தீவிரவாதிகளும் அதிகமாயிருந்த காலத்தில், கிறிஸ்து உண்மையில் யார் என்பதை விசுவாசிகளும், அவிசுவாசிகளும் அறிய வேண்டிய தேவையிலிருந்தபோது எழுதப்பட்டது.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “தெய்வீக மேசியாவின் சுவிசேஷம்”
கருப்பொருள்: இயேசுவினுடைய வாழ்க்கையும், அற்புதங்களும் அவர் மேசியா என்பதை வெளிப்படுத்துகின்றன.
நோக்கம்:
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை மேசியாவாக மக்கள் விசுவாசிப்பதிலும், அவ்வாறு செய்வதன் மூலம் தேவனோடு ஒரு உறவுமுறையை அனுபவிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ்வதிலும் அவர்களுக்கு உதவுதல்.
முக்கியவசனம்:
யோவான்: 20:31 - “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.”
5. அப்போஸ்தலர்
அ) பின்னணி:
ஆசிரியர்: லூக்கா
எழுதப்பட்ட இடம்: சிசேரியா, ரோமாபுரியாக இருக்கக்கூடும்.
எழுதப்பட்ட காலம்: கி.பி.70 - கி.பி.85
சேருமிடம்: தெயோப்பிலுவேல் ( ரோமாபுரியில் வாழ்ந்திருக்க கூடும்)
எந்நிலையில் எழுதப்பட்டது: ரோமத் தலைவன் கிறிஸ்தவத்தைக் குறித்து அறிய வேண்டியதன் தேவை இருந்த போது
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “கிறிஸ்துவினுடைய ஊழியம் விரிவடைந்தது”
கருப்பொருள்: சபையின் பிறப்பு மற்றும் வளர்ச்சியைக் குறித்த முறையான விவரம்
நோக்கம்:
ரோமத் தலைவனான தெயோப்பிலு கிறிஸ்தவத்தைக் குறித்த சத்தியத்தை அறியும்படியாக, சபையின் பிறப்பு மற்றும் விரிவாக்கத்தைக் குறித்த ஒரு முறையான விவரத்தை அளித்தல்
குறிப்பு விவரம்: அப்போஸ்தலர்: 1:8 வசனத்தின் அடிப்படையில், காலம் - சார்ந்த தொகுப்புகளோடு கூடிய மூன்று மடங்கான குறிப்பு விவரம்:
1. எருசலேமில் ( 2:1 - 6:1)
2. யூதேயா மற்றும் சமாரியாவில் (18:1 - 12:1)
3. பூமியின் கடைசி பரியந்தம் (13:1 - 28,31)
மிக முக்கிய புத்தகம்:
1. சுவிசேஷங்களை முன் ஊகிக்கிறது
2. நிருபங்களுக்கு முன்னானது
3. தோ்வு செய்தலின் திறம்:
- பேதுருவின் நடபடிகள் - (1-12)
- பவுலின் நடபடிகள் (13-28)
முக்கிய வசனம்:
அப்போஸ்தலர்: 1:8 - “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்”
நிருபங்களுக்கு ஒரு முன்னுரை
ரோமர் முதல் வெளிப்படுத்தல் வரை
ரோமர் முதல் வெளிப்படுத்தல் வரை
I. கடித வடிவம்:
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களில் 21 புத்தகங்கள் நிருபங்களாகும்.
நிருபங்கள் என்றால் “கடிதங்கள்” என்று பொருள்.
அ) படைப்பின் முறை:
1. எழுத்தாளரால் எழுதப்பட்டது
2. ஒரு செயலாளர் மூலமாக எழுதப்பட்டது
3. உரையாற்றப்பட்ட செய்தியின் பதிவு செய்யப்பட்டது
4. செய்தியைக் கேட்டவர்களின் வாய்மொழியில் கூறினர்
ஆ) எழுதுவதின் நோக்கம்:
1. ஒரு உள்ளூர் சபையின் குறிப்பிட்ட சர்ச்சைகளை விசேஷமாக குறிப்பிடுதல்.
2. பொதுவான கொள்கைகளும் மதிப்புரைகளும்.
இ) கடிதத்தின் அமைப்பு:
1. அனுப்புநர் (ரோமர்: 1:1)
2. பெறுநர் (1கொரிந்தியர்: 1:2)
3. வாழ்த்துதல் (கலாத்தியர்: 1:3-5)
4. கருத்துப் பகுதி ( எபேசியர்: 1:3 - 6:20)
5. இறுதி நல் வாழ்த்துக்கள் (கொலோசெயர்: 4:7 - 18)
II. கடிதங்களின் வகைகள்:
அ) பொதுவான (உலகளாவிய) நிருபங்கள்.
ஆ) பிரத்தியேகமான (பவுலினுடைய) நிருபங்கள்.
1. இம்மை மறுமை குறித்தவை: (இறுதிக்காலங்களைக் குறித்தவை

2. தனிப்பட்ட தேவையைக் குறித்தவை: (இரட்சிப்பின் கோட்பாடு) : கலாத்தியர், 1கொரிந்தியர், 2கொரிந்தியர், ரோமர்.
3. சிறை நிருபங்கள்: எபேசியர், கொலோசெயர், பிலிப்பியர், பிலமோன்.
4. போதகர் குறித்த சர்ச்சைகள்: 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து.
III. புதிய ஏற்ப்பாட்டு கடிதங்களின் கால வரிசை:
அ) முந்திய கால கட்டம்: கலாத்தியர், யாக்கோபு
ஆ) இரண்டாம் ஊழியப் பயணம்: 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர்.
இ) மூன்றாம் ஊழியப் பயணம்: 1கொர்ந்தியர், 2கொரிந்தியர், ரோமர்.
ஈ) முதலாம் ரோம சிறையிருப்பு: எபேசியர், கொலோசெயர், பிலமோன், பிலிப்பியர்.
உ) சுதந்திரத்தின் கால கட்டம்: 1தீமோத்தேயு, 1பேதுரு, தீத்து.
ஊ) இரண்டாம் ரோம சிறையிருப்பு: 2தீமோத்தேயு, 2பேதுரு.
எ) பவுலுக்குப் பிந்தியவை: எபிரேயர், 1யோவான், 2யோவான், 3யோவான், யூதா.
IV. பவுலினுடைய கடிதங்களின் தனித்தன்மை:
அ) நீளம் - நீளமானவை (பெரும்பாலான மற்ற கடிதங்களைவிட மூன்று மடங்கு நீளமானவை.
ஆ) உள்ளடக்கம் - வேதாந்தம்
இ) செய்தி (முழுச் சமுதாயத்திற்கும் அளிக்கப்படுகிறது)
V. பதிமூன்று கடிதங்களை எழுதின பவுல்:
1. தெய்வீக அழைப்பும், அர்ப்பணிப்பும் (கலத்தியா்: 1; 2கொரிந்தியர்: 3:1-18; எபேசியர்: 3:1-13)
2. தெய்வீக அப்போஸ்தல அதிகாரம் (2கொரிந்தியர்: 10-13)
3. மக்களின் மீது ஆழமான அன்பு ( 1தெசலோனிக்கேயர்: 2:7,8)
4. சவிசேஷத்தினுடைய பொருள் மற்றும் உபயோகத்தை குறித்த தெய்வீக நுண்ணறிவு (ரோமர்: 1-15)
5. நிலைமைக்கேற்றபடி தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் திறமும், இணக்கமும் உடையவர் (1கொரிந்தியர்: 9:21-23)
6. சாீரப்பிரகாரமாக துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் படைத்தவர் (2கொரிந்தியர்: 11:23-29)
7. இலக்கியப் பின்னணி; செய்தியை அறிவிப்பதில் மிகச் சிறந்தவர் (எபேசியர்: 1-6)
8. கிறிஸ்துவுடன் ஆழமான அனுபவங்களை உடையவர் (2கொரிந்தியர்: 12:2-10)
6. ரோமர்
அ) பின்னணி:
ஆசிரியர்: தொ்தியு மூலமாக பவுல் (ரோமர்: 16:22)
எழுதப்பட்ட இடம்: கொரிந்து (ரோமர்: 16:23)
எழுதப்பட்ட காலம்: கி.பி.55 - 56 (பவுலின் மூன்றாம் பயணத்தின்போது)
சேருமிடம்: ரோமாபுரியுலுள்ள சபை. பிரிட்டன் முதல் அரேபியா வரை பரந்திருந்த ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகராகிய ரோமாபுரி, 10 லட்சம் மக்கள் தொகை கொண்டிருந்த ஒரு பல்வேறு பண்பாட்டு மக்களைக் கொண்ட ஒரு பட்டணமாக இருந்தது. அது பல்வேறுபட்ட நாடுகளின் வர்த்தக மையமாக செயல்பட்டது. ரோமாபுரியில் சபை துவக்கப்பட்ட விவரம் புதிய ஏற்பாட்டில் விளக்கப்படவில்லை; பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பு, புதிய விசுவாசிகள் மீண்டும் ரோமாபுரிக்கு வந்தது சபையின் துவக்கமாக இருந்திருக்கக் கூடும். (அப்போஸ்தலர்: 2:10)
எந்நிலையில் எழுதப்பட்டது: ஸ்பானியாவிற்குப் போகும் வழியில் ரோமாபுரிக்குச் செல்ல வேண்டுமென்ற பவுலினுடைய திட்டத்தின்போது (ரோமர்: 15:14-24)
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “கிருபையின் சுவிசேஷம்”
கருப்பொருள்: கிருபையின் சுவிசேஷத்தைக் குறித்த ஒரு முழுமையான ஆய்வுக் கட்டுரை.
நோக்கம்: பவுல்தான் பிரசங்கித்த சுவிசேஷத்தை முழவதுமாக விளக்குவதன் மூலம், ஸ்பானியாவிற்குப் போகும் வழியில் ரோமாபுரிக்குச் செல்லுவதற்கான வழியை ஆயத்தம் செய்தல்.
குறிப்பு விவரம்: கோட்பாடு மற்றும் உபயோகம்
முக்கியவசனம்:
ரோமர்: 1:16,17 - “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.”
1கொரிந்தியர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: எபேசு
எழுதப்பட்ட காலம்: கி.பி.54 (பவுலின் மூன்றாம் ஊழியப் பயணத்தின்போது)
சேருமிடம்:
கொரிந்தியர் சபை. கொரிந்து பட்டணம் கி.மு.46 ல் ரோமர்களால் மீண்டுமாக கட்டப்பட்டு ஒரு முக்கிய வர்த்தக மையமானது; அது எஜியன் மற்றும் ஏடிரியாட்டிக் கடல்களுக்கிடையே உள்ள குறுகிய நிலப்பரப்பிலுள்ள தெற்கு கிரீஸ் நாட்டில் அமைந்திருந்தது. கிரேக்கர், ரோமர், ஆசியர், எகிப்தியர் மற்றும் யூதர்கள் ஆகியோரைக் கொண்டிருந்த கொரிந்து பட்டணத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 3 லட்சமாக இருந்தது. எப்பிரோபதீத்துவின் கோயில் (கிரீஸ் நாட்டினுடைய “அன்பின் தேவதை”) இப்பட்டணத்தின் மீது ஆதிக்கம் கொண்டிருந்தது; இக்கோயிலின் 1000 தாசிகள், கொரிந்து பட்டணத்தின் ஒழுக்கக்கேட்டிற்குக் காரணமாயிருந்தார்கள். பவுல் தன்னுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தில் கொரிந்து சபையை நிறுவினார். (அப்போஸ்தலர்: 18:1-18). பவுல் இச்சபைக்கு எழுதின நான்கு கடிதங்களில் - “1கொரிந்தியர்” - இரண்டாம் கடிதமாகும்.
எந்நிலையில் எழுதப்பட்டது:
ஒழுக்கம், கோட்பாடு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளைக் குறித்த குலோவேயாளினுடைய வீட்டாரின் (கொரிந்து சபை அமைக்கப்பட்டிருந்த இடம்) அறிக்கை; கொரிந்திய சபையின் மூன்று அங்கத்தினர்கள் கொண்டுவந்த விசாரணைக் கடிதம்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “ஒரு பாகானிய சமுதாயத்தில் நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கை”
கருப்பொருள்: கொரிந்துவில் சபைப் பிரச்சினைகளைச் சரி செய்தல்
நோக்கம்:
குலோவேயாளினுடைய வீட்டாரின் வாய்மொழி அறிக்கையினாலும், கொரிந்தியர்களிடமிருந்து வந்த ஒரு கடிதத்தினாலும் எழும்பியிருக்கும் சர்ச்சைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் பதிலளித்தல்.
குறிப்பு விவரம்: குலோவேயாளினுடைய அறிக்கை மற்றும் கொரிந்துவினுடைய கடிதத்திற்கான பதில்.
முக்கிய வசனம்: 1கொரிந்தியர்: 16:13,14 - “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருசராயிருங்கள், திடன் கொள்ளுங்கள். உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.”
8. 2கொரிந்தியர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: மக்கதோனியா
எழுதப்பட்ட காலம்: கி.பி.55 (பவுலின் மூன்றாம் ஊழியப் பயணத்தின்போது)
சேருமிடம்:
கொரிந்தியர் சபை. பவுல் கொரிந்து சபைக்கு குறைந்த பட்சம் மூன்று முறை சென்றிருக்கிறார். அவருடைய மூன்றாம் ஊழியப் பயணத்திற்குச் சற்று முன்னதாக 1கொரிந்தியர் எழுதப்பட்டது. இந்த சபைக்குப் பவுல் எழுதின நான்கு கடிதங்களில் இது கடைசிக் கடிதமாகும்.
காலத்தின் தேவை: பெரும்பாலான குழப்பவாதிகளின் மனந்திரும்புதலைக் குறித்த தீத்துவின் அறிக்கை. (2கொரிந்தியர்: 7:13-15).
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “பவுலுடைய ஊழியம் மற்றும் அப்போஸ்தல தன்மையின் பாதுகாப்பு அரண்கள்”
கருப்பொருள்: பவுலினுடைய ஊழியம் மற்றும் அப்போஸ்தல தன்மையின் விளக்கம்.
நோக்கம்:
கொரிந்திய சபையின் பெரும்பாலான மக்கள், முந்தின கடிதத்தில் கூறப்பட்டுள்ள சர்ச்சைகளினால் ஏற்பட்ட மனந்திரும்புதலின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பவுலக்கு எதிராக செயல்படும் சிறிய கூட்டத்தினரைக் கடிந்துரைப்பதும்.
குறிப்பு விவரம்: கோட்பாட்டைக் காட்டிலும், தனிப்பட்ட காரியங்களடங்கிய மூன்று மடங்கான பிரிவு.
1. பெரும்பான்மையினருக்கு பவுலினுடைய ஊழியம் விளக்கப்பட்டது. (2கொரிந்தியர்: 1:12 - 7:16)
2. எருசலேமின் ஒருங்கிணைந்த சபைகளுக்கு (2கொரிந்தியர்: 8:1 - 9:15) சிறுபான்மையினருக்கு.
3. பவுலினுடைய ஊழியம் பாதுகாக்கப்பட்டது. (2கொரிந்தியர்: 10:1 - 13:10).
முக்கியவசனம்: 2கொரிந்தியர்: 4:5 - “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.”
9. கலாத்தியர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: சீரியாவிலுள்ள அந்தியோகியா
எழுதப்பட்ட காலம்:
ஏறக்குறைய கி.பி.49 - கி.பி.50 (அப்போஸ்தலர்: 11:27 - 30 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பஞ்சத்தைக் குறித்து கலாத்தியர்: 2:1 - 10 வசனங்கள் கூறுகின்றன).
சேருமிடம்:
கலாத்தியாவிலுள்ள சபைகள். மத்திய துருக்கி வழியாக, கடற்பரப்பு முழுவதிலும் பரந்து கிடக்கும் ஒரு பெரிய ரோம மாகாணமாக கலாத்தியா திகழ்ந்தது. அதில் பவுல் எந்தளவிற்கு ஊழியத்தினிமித்தமாக பிரயாணம் பண்ணினார் என்பது தெளிவாகவில்லை. அவர் தன்னுடைய முதல் ஊழியப் பயணத்தில், அந்தியோகியா, இக்கோனியா, லிஸ்திரா மற்றும் தொ்பை ஆகிய இடங்களில் சபைகளை ஸ்தாபித்தார் என்பதை (அப்போஸ்தலர் 13 மற்றும் 14 அதிகாரங்களிலிருந்து) நாம் அறிகிறோம். அவர் இந்த இடங்களுக்கு மீண்டுமாக இரண்டுமுறை சென்றார். (அப்போஸ்தலர்: 16:6; 18:23). கலாத்தியருக்கு எழுதப்பட்ட நிருபம், இந்தப் பட்டணங்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள கலாத்தியருக்கு எழுதப்பட்டது என்று “தெற்கு கலாத்திய கோட்பாடு விளக்கம்” கூறுகிறது.
எந்நிலையில் எழுதப்பட்டது:
“யூதராக்குபவர்களின்” தவறான போதனை. புறஜாதி விசுவாசிகள் இரட்சிப்பைப் பெறவேண்டுமென்றால், அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டு, மோசேயின் பிரமாணத்தைக் கைக் கொள்ள வேண்டும் என்று போதிக்கும் யூத விசுவாசிகள் யூதராக்குபவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “நியாயப்பிரமாணமும், எதிராகக் கிருபையும்”
கருப்பொருள்: பாவமன்னிப்பைப் பெற நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ள வேண்டும் என்ற யூதராக்குபவர்களின் கோட்பாட்டை எதிர்த்து போராடுதல்.
நோக்கம்: யூதராக்குபவர்கள் போதித்த “நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளுதலின் சுவிசேஷத்திற்கு” எதிராகப் பவுல் புறஜாதிகளுக்குப் பிரசங்கித்த இலவசக் கிருபையின் சுவிசேஷத்தைப் பாதுகாத்தல்.
குறிப்பு விவரம்:
1. இரண்டு மடிப்பான வாக்குவாதம் மற்றும் பயன். இரண்டு மடிப்பான வாதம்: சுயசரிதத்தின் வாதம் (கலாத்தியர்: 1:6 - 2:21) கோட்பாட்டின் வாதம் (3:1 - 4:31).
2. நடைமுறை உபயோகம் (கலாத்தியர்: 5:1 - 6:10)
முக்கியவசனம்: கலாத்தியர்: 2:16 - “...நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.”
10. எபேசியர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோம சிறை (எபேசியர்: 3:1; 4:1; 6:20)
எழுதப்பட்ட காலம்: கி.பி.60 - கி.பி.62
சேருமிடம்:
எபேசு மற்றும் அதைச் சுற்றியுள்ள சபைகள், ஆசிய மாகாணத்தின் முதன்மையான பட்டணமாகிய எபேசு, துருக்கியின் மேற்குக் கரையோரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பத்து இலட்சம் மக்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினருக்கு ஒரு மதப்பிரகாரமான மற்றும் வர்த்தக மையமாக திகழ்ந்தது. எபேசுவிலுள்ள சபை, பவுலின் மூன்றாம் ஊழியப் பயணத்தின்போது ஸ்தாபிக்கப்பட்டது. (அப்போஸ்தலர்: 19 அதிகாரம்). சுவிசேஷம் எபேசுவிலிருந்து அம்மாகாணம் முழுவதிலும் பரம்பிற்று. வெளிப்படுத்தல் 2 மற்றும் 3 அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு சபைகளின் பொதுவான பகுதியாகிய லிகஸ் பள்ளத்தாக்கின் நகரங்களிலும், கொலோசெ, இராபோலி, லவோதிக்கெயா போன்ற இடங்களிலும் சபைகள் நிறுவப்பட்டன. (அப்போஸ்தலர்: 19:8 -10)
எந்நிலையில் தேவைப்பட்டது:
மனமாற்றமடைந்த யூதர்கள் , தங்களிடம் வெறுப்பைக் காண்பிக்கக் கூடிய புறஜாதி சகோதரரிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள விரும்பினார்கள். எபேசுவிலிருந்த இந்நிலை எபேசியருக்கான நிருபத்தை எழுதுவதற்கு காரணமாக அமைந்தது.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “கிறிஸ்துவுக்குள் அனைவரும் ஒன்று”
கருப்பொருள்: சபையின் மூலமாக கிறிஸ்துவுக்குள்ளான அனைத்துக் காரியங்களையும் தொகுத்தல்.
நோக்கம்:
வரவிருக்கும் யுகத்தின் தனிச்சிறப்பாக அமையவிருக்கும் ஒற்றுமையின் ஒரு “வெள்ளோட்டமான” சபையின் மூலம் கிறிஸ்துவுக்குள்ளான அனைத்தையும் தொகுத்து, ஒன்று சோ்ப்பதை எடுத்துக் காட்டுதல்.
குறிப்பு விவரம்: கோட்பாடு மற்றும் நடைமுறை பிரிவுகள்
கோட்பாடு “ஐசுவரியம்” (எபேசியர்: 1:3 - 3:21)
பயிற்சி “நடை” (எபேசியர்: 4:1 - 6:20)
முக்கியவசனம்:
எபேசியர்: 1:9,10 - “காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளெ தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.”
11. பிலிப்பியர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோம சிறை (பிலிப்பியர்: 1:13,14)
எழுதப்பட்ட காலம்: கி.பி.60 - கி.பி.62
சேருமிடம்:
பிலிப்பியிலுள்ள சபை. கிழக்கத்திய நாடுகளுடன் ரோமாபுரியை இணைக்கும் மிகப் பெரிய ராணுவ சாலையான எக்நேசியா வழியிலுள்ள மக்கதோனியாவின் வடக்கு கிரேக்க மாகாணத்தில் பிலிப்பி அமைந்திருந்தது. இத்தாலிய குடிமக்கள் முதன்முதலாக ரோமாபுரியில் குடியேறி, ஒரு ரோம குடியேற்றத்தை இம்மாகாணத்தில் ஏற்படுத்தினார்கள். என்வே, அவர்கள் தன்னாட்சி மற்றும் வாணிப வரிகளிலிருந்து விலக்கு போன்ற விசேஷமான உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவித்தார்கள். பெண்கள் ஓர் உயரிய சமுதாய அந்தஸ்த்தைப் பெற்று, பொது வாழ்க்கையிலும், வாணிகத்திலும், உற்சாகமாக பங்கு வகித்தார்கள். பவுல் தன்னுடைய “மக்கதோனியா தரிசனத்தின்” விளைவாக, தன்னுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தின்தின்போது இந்த சபையை ஸ்தாபித்தார். (அப்போஸ்தலர்: 16:9-40).
எந்நிலையில் எழுதப்பட்டது:
கிறிஸ்துவுக்காக தற்போது ரோமாபுரியில் சிறைப்பட்டிருந்த பவுலுக்கு பிலிப்பியர் சமீபகாலத்தில் அளித்த காணிக்கை (பிலிப்பியர்: 4:10-19).
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “சிறையிலிருந்து துதியுடன்”
கருப்பொருள்: தனிப்பட்ட குறிப்புகள் மற்றும் மதிப்புரைகளுடன், ஒரு பரிசிற்காக நன்றி கூறுதல்.
நோக்கம்:
எப்பாப்பிரோதீத்துவின் மூலம் பிலிப்பியர் அனுப்பியிருந்த அவர்களுடைய பரிசிற்காக நன்றி கூறுதல் (பிலிப்பியர்: 2:25; 4்18). ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்தல். சிறையில் பவுலினுடைய தற்போதைய நிலைமையைக் குறித்து விவரமளித்தல்.
குறிப்பு விவரம்: ஒரு வரையறுக்கப்பட்ட குறப்புகளை பின்பற்றவில்லை. என்றாலும், ஆழமான வேதாந்த மற்றும் நடைமுறை நுண்ணறிவை அளிக்கிறது.
முக்கியவசனம்: பிலிப்பியர்: 1:21 - “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்”
12. கொலோசெயர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோம சிறை (கொலோசெயர்: 4:18)
எழுதப்பட்ட காலம்: கி.பி.60 - கி.பி.62
சேருமிடம்:
கொலோசெயில் உள்ள சபை. கொலோசெ, எபேசுவிலிருந்து 100 மைல்கள் கிழக்கிலுள்ள அழகான லிகஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாயிருந்தது. இராபோலி, லவோதிக்கேயா, மற்றும் கொலோசெ ஆகிய மூன்று பட்டணங்களை உள்ளடக்கிய இந்த “மூன்று - பட்டணம் பகுதியில்” கொலோசெ மிகவும் சிறிய பட்டணமாயிருந்தது. அங்கு சபை எவ்வாறு துவங்கப்பட்டது என்பதைக் குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. பவுல் எபேசுவில் தங்கியிருந்த போது, கொலோசெயின் முக்கியஸ்தர்களான பிலமோன் மற்றும் எப்பாப்பிரா போன்றவா்கள் விசுவாசிகளாகி, பின்பு தங்களுடைய பட்டணத்திற்கு திரும்பிச் சென்றதன் விளைவாக அங்கு சபை தோன்றியிருக்கக் கூடும். (கொலோசெயர்: 1:7,8).
எந்நிலையில் எழுதப்பட்டது:
பாவமன்னிப்பைப் பெறுவதற்கு நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ள வேண்டுமென்ற யூதக் கோட்பாடு உள்பட, கொலோசெயில் காணப்பட்ட சமயசமத்துவம் (கலப்பான போதனை) (கொலோசெயர்: 2:16,17,21-32); கிரேக்க தத்தவம் (கொலோசெயர்: 2:8) மற்றும் சமரச மறையியல் இறைநிலை (கொலோசெயர்: 2:18).
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “ஒப்புயர்வற்ற கிறிஸ்து”
கருப்பொருள்: கிறிஸ்துவின் மூலமாக அளிக்கப்படும் இரட்சிப்பு போதுமானது.
நோக்கம்:
ஒரு விசுவாசியின் இருதயத்தில் கிரியை செய்யும் கிறிஸ்துவின் ஆள்தத்துவத்தை எடுத்துரைப்பதின் மூலம் கொலோசெயிலுள்ள முரண்பாடான சமயக் கருத்துக்களை எதிர்த்தல்.
குறிப்பு நேரம்: கோட்பாடு மற்றும் நடைமுறைப்படுத்தலின் பிரிவுகள்.
கோட்பாடு:
1. நேரானது: கிறிஸ்துவின் ஓப்புயர்வு (கொலோசெயர்: 1:13 - 2:7)
2. எதிர்மாறானது: முரண்பாடான சமயக் கருத்துக்களுக்கு விரோதமாக செயல்படுத்துவது. (கொலோசெயர்: 2:8 - 2:23).
கிறிஸ்துவுடன் இணைதல் (கொலோசெயர்: 3:1-4)
கிறிஸ்துவின் மரணத்தில் இணைதல் (கொலோசெயர்: 3:5-11)
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இணைதல் (கொலோசெயர்: 3:12 - 4:6).
முக்கியவசனம்:
கொலோசெயர்: 2:9,10 - “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.”
13. 1தெசலோனிக்கேயர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: கொரிந்து
எழுதப்பட்ட காலம்: கி.பி.50 - கி.பி.51 (பவுலின் இரண்டாம் ஊழியப் பயணத்தின்போது)
சேருமிடம்:
தெசலோனிக்கேய சபை. ரோம மாகாணமான மக்கதோனியாவின் தலைநகரான தெசலோனிக்கேயா, கிரீஸ் நாட்டின் கிழக்கு கடற்கரையிலிருந்த ஒரு செழிப்பான துறைமுகப்பட்டணமாகும். அது பிலிப்பியிலிருந்து 90 மைல்கள் தூரத்திலுள்ள எக்னேசியா வழியில் அமைந்திருந்தது. பவுலினுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தின்போது இங்கு சபை நிறுவப்பட்டது. (அப்போஸ்தலர்: 17:1-20).
எந்நிலையில் எழுதப்பட்டது: பாடுகளின் மத்தியில் இந்த சபை உறுதியுடன் நிலைநிற்பதைக் குறித்த தீமோத்தேயுவின் சாதகமான அறிக்கை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “இரண்டாம் வருகையைக் குறித்த ஆறுதல்”
கருப்பொருள்: ஊக்கம், அறிவுரை மற்றும் ஆறுதல்.
நோக்கம்:
பாடுகளுக்குட்பட்டிருக்கும் தெசலோனிக்கேயருக்கு ஊக்கமளித்து, கிறிஸ்துவின் அதி சீக்கிர வருகையின்போது நிகழவிருக்கும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையினால் அவர்களை ஆறுதல்படுத்துதல்.
குறிப்பு விவரம்: ஊக்கம் மற்றும் அறிவுரை
ஊக்கம் (1தெசலோனிக்கேயர்: 1:2 - 3:13)
அறிவுரை (1தெசலோனிக்கேயர்: 4:1 - 5:22)
முக்கியவசனம்:
1தெசலோனிக்கேயர்: 5:23,24 - “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே செய்வார்.”
14. 2தெசலோனிக்கேயர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: கொரிந்து
எழுதப்பட்ட காலம்: கி.பி.50 - கி.பி.51 (1தெசலோனிக்கேயர் எழுதப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு)
சேருமிடம்: தெசலோனிக்கேய சபை
காலத்தின் தேவை: கிறிஸ்துவின் இரண்டாம் போதனையைக் குறித்த தவறான போதனையை எதிர்த்தல்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “இரண்டாம் வருகையைக் குறித்த திருத்தம்”
கருப்பொருள்: கர்த்தருடைய நாளின் வருகை
நோக்கம்: கர்த்தருடைய நாள் ஏற்கனவே வந்தாயிற்று என்ற தவறான எண்ணத்தைச் சரிசெய்தல்.
குறிப்பு விவரம்: ஊக்கம், திருத்தம் மற்றும் அறிவுரை
1. ஊக்கம் (2தெசலோனிக்கேயர்: 1:3 - 1:12)
2. திருத்தம் (2தெசலோனிக்கேயர்: 2்1 - 2:17)
3. அறிவுரை (2தெசலோனிக்கேயர்: 3:1 - 3:14)
முக்கியவசனம்: 2தெசலோனிக்கேயர்: 2:15 - “ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலை கொண்டு, வார்த்தையினாலாவது, நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.”
போதக நிருபங்களுக்கு ஒரு முன்னுரை
1தீமோத்தேயு முதல் பிலமோன் வரை
I. பெயர்: 1தீமோத்தேயு முதல் பிலமோன் வரை
தனி நபர்களுக்கு எழுதப்பட்டது.
II. ஆசிரியர்:
அ) மரபு வழியாக - அப்போஸ்தலனாகிய பவுல்.
ஆ) ஆசிரியரின் நிருபணம்:
1. போதக நிருபங்கள் அவை பவுலினால் எழுதப்பட்டவை என வலியுறுத்துகின்றன. (1தீமோத்தேயு: 1:1; 2தீமோத்தேயு: 1:1; தீத்து: 1:1).
2. ஆசிரியரின் நிருபணத்தைக் குறித்த ஆதிசபையின் இந்த நிருபங்கள் பவுலினால் எழுதப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.
3. இந்த நிருபங்கள் பவுலினால் எழுதப்பட்டவை என்பதை வெளிப்புறமான சான்றுகள் தொடர்ச்சியாக நிரூப்பிக்கின்றன.
III. அப்போஸ்தலர் 28 ம் அதிகாரத்திற்குப்பின்பு பவுலின் இயக்கங்கள்:
அ) ரோமாபுரியில் 2 வருட சிறை தண்டனை (அப்போஸ்தலர்: 28:30,31; பிலிப்பியர்: 1:19,25-27; 2:24)
ஆ) விடுதலையான பின்பு தொடர்ச்சியான ஊழியப் பயணங்கள் (பிலமோன் 22).
இ) கிழக்கிலுள்ள சபைகளுக்கு பயணம்:
1. எபேசு (1தீமோத்தேயு: 1:5)
2. கொரிந்து, துரோவா, மிலேத்து (2தீமோத்தேயு: 4:13,20)
3. கிரேத்தா (தீத்து: 1:5)
4. மக்கெதோனியா (தீத்து: 3:12)
ஈ) ரோமாபுரியில் மீண்டுமாக சிறை தண்டனை (2தீமோத்தேயு: 1:8,16,17; 2:9; 4:10).
IV. பவுலினுடைய உடன் வேலையாட்கள்:
அ) தீமோத்தேயு:
1. பவுலினுடைய இரண்டாம் ஊழியப் பயணத்தின்போது அவரைச் சோ்ந்து கொண்டவர். (அப்போஸ்தலர்: 16:1-3).
2. பவுலினுடைய மிக நெருங்கிய பயணத்துணைகளில் ஒருவன்.
- பவுலுடன் மக்கெதோனியா, அகாயா, ஆசியா மற்றும் ரோமாபுரியில்.
- பவுலின் 13 கடிதங்களுள், 6 கடிதங்களில் பவுலுடன் சோ்ந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறான் (2கொரிந்தியர்: 1 :1; பிலிப்பியர்: 1:1; கொலோசெயர்: 1:1; 1தெசலோனிக்கேயர்: 1:1; 2தெசலோனிக்கெயர்: 1:1; பிலமோன்: 1 வசனம்.)
3. வாலிபன் என்றாலும் நம்பகமானவன் (1தீமோத்தேயு: 4:12; 1கொரிந்தியர்: 16:11, 4:17; பிலிப்பியர்: 2:19)
4. எபேசுவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலுமுள்ள சபைகளுக்குப் பொறுப்பாளி (1தீமோத்தேயு: 1:3; 3:14,15)
ஆ) தீத்து:
1. எருசலேமில் எழும்பின வாக்குவாதத்திற்கு ஆளான புறஜாதியான் (கலாத்தியர்: 2:1-5).
2. பத்து வருடங்களுக்குப் பிறகு கொரிந்திய சபையுடன் இணைக்கப்பட்ட குறிப்பிடப்பட்டவன் (2கொரிந்தியர்: 1:23 - 2::18; 7:5 - 15; 8:6,16-23).
3. 8,10 வருடங்களுக்குப் பின்பு, கிரேத்தாவிலுள்ள சபைகளுக்குப் பொறுப்பாளி (தீத்து: 1:5).
4. தல்மாத்தியாவில் ஊழியம் (2தீமோத்தேயு: 4:10)
15. 1தீமோத்தேயு
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: மக்கெதோனியாவாக இருக்கக்கூடும்.
எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.62 - கி.பி.64
சேருமிடம்: எபேசுவிலுள்ள தீமோத்தேயு.
காலத்தின் தேவை: எபேசுவிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலுமுள்ள சபைகளை வழிநடத்துவதற்குத் தேவையான போதனையை தீமோத்தேயுவிற்கு அளித்தல்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “ஒரு இளம் போதகருக்கு அறிவுரை கூறுதல்”
கருப்பொருள்: சபையை வழிநடத்தி, அறிவுறுத்துவதற்கான போதனைகள்.
நோக்கம்: பவுல் வரும்வரை சபையின் வேலையை எவ்வாறு ஒழுங்கு செய்து, நிர்வகிப்பது என்பதைக் குறித்து தீமோத்தேயுவிற்கு போதித்தல்.
குறிப்பு விவரம்: ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தின் பிரிவுகள்:
1. சபையின் ஒழுங்கு (1தீமோத்தேயு: 1:3 - 3:13)
2. சபையின் நிர்வாகம் (1தீமோத்தேயு: 3:14 - 6:19)
முக்கியவசனம்:
1தீமோத்தேயு: 3:14,15 - “நான் உன்னிடத்தில் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.”
16. 2தீமோத்தேயு
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: ரோமாபுரி
எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.65 - கி.பி.67
சேருமிடம்: எபேசுவிலுள்ள தீமோத்தேயு
எப்போது தேவைப்பட்டது: ரோமாபுரியில் பவுல் மரணத்துக்கேதுவாக தண்டனையளிக்கப்படுவதற்கு முன்பாக எழுதிய கடைசி வார்த்தைகள்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “பவுலின் இறுதி அறிவுரை”
கருப்பொருள்: பவுலினுடைய மரண சாசனம்
நோக்கம்: சபையை முறையாக வழிநடத்தி, போதிப்பதில் தீமோத்தேயுவை ஊக்குவித்தலும், மழைகாலத்திற்கு முன்பாக தேவையான சில பொருட்களைக் கொண்டு வரும்படி அவனுக்குக் கூறுவது.
குறிப்பு விவரம்: முறைப்படியற்றது:
1. கடந்த காலம் (2தீமோத்தேயு: 1:3-18)
2. நிகழ்காலம் (2தீமோத்தேயு: 2:1-26)
3. எதிர்காலம் (2தீமோத்தேயு: 3:1-17)
4. பவுலின் பிரியாவிடை (2தீமோத்தேயு: 4:1-18)
முக்கியவசனம்:
2தீமோத்தேயு: 2:2 - “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.”
17. தீத்து
அ) பின்னணி:
ஆசிரியர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: நிக்கப்போலி
எழுதப்பட்ட காலம்: ஏறக்குறைய கி.பி.62 - கி.பி.64
சேருமிடம்: கிரேத்தாவிலுள்ள தீத்து.
காலத்தின் தேவை: சபையை வழிநடத்துவதில் தீத்துவிற்குத் தேவையான போதனையை அளித்தல்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “கிரேத்தாவிலுள்ள ஒரு போதகருக்கு அறிவுரை அளித்தல்”
கருப்பொருள்: சபையை வழிநடத்தி, அறிவுறுத்துவதற்கான போதனைகள்.
நோக்கம்: கிரேத்தா தீவிலுள்ள சபைக்கு மேய்ப்பனாக செயல்படுவதில் தீத்துவிற்குப் போதனையளித்தல்.
குறிப்பு விவரம்: ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தின் பிரிவுகள்:
1. சபையின் ஒழுங்கு (தீத்து: 1:5-19)
2. சபையின் நிர்வாகம் (தீத்து: 1:10 - 3:14)
முக்கியவசனம்: தீத்து: 2:7,8 - “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக் குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமில்லாதவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.”
ஆசிரியர்: சார்லஸ் mc