(லூக். 13:16).

இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த, ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா?” (லூக். 13:16).

அநேக உலக மக்கள், பலவிதமான கட்டுகளுக்குள் சிக்கி, யார் தங்களை அவிழ்த்துவிடுவார்கள் என்று கலங்குகிறார்கள். சிலருக்கு மரண கட்டுகள். சிலருக்கு பாதாளத்தின் கட்டுகள். சிலருடைய நிம்மதியை குலைக்கும் கட்டுகள். சிலருக்கு கழுத்திலுள்ள கட்டுகள் (ஏசா. 52:2).

ஒரு தேவாலயத்திலே, பதினெட்டு வருடமாய் சாத்தானுடைய கட்டிலிருந்து விடுதலை பெறாமலிருக்கிற, ஒரு ஸ்திரீயை இயேசு கண்டார். அந்தக் கட்டுக்குப் பின்னால் ஒரு பொல்லாத ஆவி இருக்கிறது என்பதை, ஜெப ஆலயத் தலைவனும், மற்ற விசுவாசிகளும் அறியவில்லை. அந்தக் கட்டு அவளை நிமிர்ந்து நடக்கக்கூடாமல், அடிமைத்தனத்துக்குள் வைத்திருந்தது. அதுதான், “பெலவீனப்படுத்துகிற ஒரு ஆவி.” அதை யாரும் அறியவில்லை. அவள் ஆபிரகாமின் குமாரத்தி என்றும், ஆபிரகாமுக்குள் கர்த்தர் செய்த உடன்படிக்கையின் வாக்குத்தத்தமும் அவளுக்கு உண்டென்றும், அவள் விடுதலையாக்கப்பட வேண்டியவள், என்றும் அறிய வில்லை.

வெளி கண்களுக்குப் புலப்படாத, பெலவீனப்படுத்துகிற ஒரு பொல்லாத ஆவி அவளை ஆட்கொண்டிருந்தது. இயேசு மனதுருகி, அவள்மேல் தன் கைளை வைத்தார். “ஸ்திரீயே, உன் பெலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய்” என்று சொல்லி, அற்புத சுகத்தைக் கொடுத்தார்.

எந்தவித பிசாசின் போராட்டமாயிருந்தாலும், இயேசு கிறிஸ்துவை நம்பி அவரண்டை வரும்போது, நிச்சயமாகவே அவர் விடுதலையாக்க வல்லமை யுள்ளவர். வேறு எந்த மனித சக்திகளினாலும், மந்திரவாதிகளினாலும் மனிதனை விடுதலையாக்க முடியாது. மனிதன் இரட்சிக்கப்படும்படி, இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல், வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை. “குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36).

இன்றைக்கு உலகமானது, உலகத்தின் அதிபதியான பிசாசின் கீழ் கிடக்கிறது. வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள், மனிதனுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தை அடிமைத்தனத்துக்குள் வைத்திருக்கிறது. விதவிதமான கட்டுகள், பொல்லாத ஆவிகள் உலகத்திலுண்டு. ஆனால் விடுதலையாக்குகிறவர் இயேசு ஒருவர்தான். கிறிஸ்துவின் நாமம் உங்களை விடுதலையாக்கும். அவர் உங்களுக்காக சிந்தின இரத்தம், உங்களை விடுதலையாக்கும். அவருடைய வாயின் வார்த்தைகள், வேத புத்தகத்தின் வசனங்கள், உங்களை விடுதலையாக்கும்.

வேதம் சொல்லுகிறது, “பிசாசு பிடித்த குருடும், ஊமையுமான ஒருவன் இயேசுவிடத்தில் கொண்டு வரப்பட்டான். குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார். ஜனங்களெல்லாரும் ஆச்சரியப் பட்டு, தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்” (மத். 12:22,23).

அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்களென்று எழுதியிருக்கிறபடியே, அநேகர் கிறிஸ்துவின்மேல் அன்பு வைத்து, அவரை ஏற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு இயேசுவை அழையுங்கள். அவருடைய கிருபையின்படி, உங்களுக்கு இரங்கி விடுவிப்பார்.

நினைவிற்கு:- “நான் சிறுமையும், எளிமையுமானவன். கர்த்தரோ என்மேல் நினைவா யிருக்கிறார். தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர். என் தேவனே, தாமதியாதேயும்” (சங். 40:17).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.