*"கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்"* (சங். 115:12).
நான் வாலிப வயதிலே, வேலை தேடி சென்னைப் பட்டணத்திற்கு வந்தபோது, உணவின்றி தவித்தேன். பிளாட்பாரத்தில் படுத்துக்கொண்டேன். உடுக்க சரியான துணியில்லை. ஒரு சிறிய மளிகைக் கடையிலே மாதம் இருபது ரூபாய்க்கு வேலை செய்தேன். அப்பொழுது போலீஸ் லாரியை, சிலர் கல்லெறிந்துவிட்டு, எங்கள் மளிகைக் கடையிலே வந்து ஒளிந்தபடியால், நான் சென்னை மத்திய சிறைச் சாலையிலே அடைக்கப்பட வேண்டியதாயிற்று.
யோசேப்பின் வாழ்க்கையும் அப்படித்தானே இருந்தது! அவருடைய சொந்த சகோதரர்களால் பகைக்கப்பட்டு, குழியிலே போடப்பட்டார். யோசேப்பை அடிமையாய் விலைக்கு வாங்கின இஸ்மவேலர், அவரை எகிப்திலே விற்றார்கள். போத்திப்பார் வீட்டிலே அவர் அநியாயமாய் குற்றஞ்சாட்டப்பட்டார். ஏறக்குறைய பதிமூன்று வருடங்கள், *சிறைச்சாலையிலே, விலங்குபோட்டு ஒடுக்கினார்கள். அவருடைய பிராணன் இரும்பிலே அடைபட்டிருந்தது* (சங். 105:17,18).
ஆனால் கர்த்தர் யோசேப்பை மறக்கவில்லை. சத்தியத்துக்காகவும், பரிசுத்தத்துக்காகவும், வைராக்கியமாய் நின்ற, யோசேப்பை நினைத்தருளினார். பார்வோனுடைய சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்ல வைத்து, எகிப்திலே இரண்டாவது உயர்ந்த அதிபதியாய் உயர்த்தினார். அனைத்து வருடங்களின் பாடுகளும், வேதனைகளும் முடிந்தது. மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டானது. நல்ல மனைவியையும், எப்பிராயீம், மனாசே என்ற இரண்டு பிள்ளைகளையும் கொடுத்தார்.
அதன்பின்பு, ஏறக்குறைய எண்பது ஆண்டுகள், அவர் தன் தகப்பனையும், தன் சகோதரர்களையும் வைத்து காப்பாற்றினார்.
அதுபோல கர்த்தர் எனக்கும் ஆசீர்வாதமான நாட்களைத் தந்தார். வருமான வரி இலாகாவில் பணியாற்றினேன். எனக்கு நன்றாய் படித்த குணசாலியான, அழகுள்ள மனைவியை கர்த்தர் தந்தார். கர்த்தர் எனக்குக் கொடுத்த நான்கு பிள்ளைகளும், இரட்சிக்கப்பட்டு அபிஷேகம் பெற்றிருக்கிறார்கள். ஏறக்குறைய 43 வருடங்கள் கிறிஸ்துவினுடைய மகிமையான பணியை முழு பெலத்தோடு செய்ய தேவன் எனக்கு கிருபை செய்தார்.
மோசே ஜெபித்தார். *"தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்"* (சங். 90:15).
கர்த்தர் உங்களை உலகப்பிரகாரமாகவும் ஆசீர்வதிப்பார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் தருவார். அவர் உங்களை நினைத்திருக்கிறார். *"என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்"* (எரே. 31:14).
யோசேப்பின் உண்மையையும், உத்தமத்தையும் பலரும் மறந்துவிட்டார்கள். *பானபாத்திரக்காரன் சொப்பனம் கண்டு உயர்வு பெற்றபின்பு, யோசேப்பை நினையாமல், அவரை மறந்துவிட்டான்* (ஆதி. 40:23).
மனுஷன் மறந்தாலும், கர்த்தர் உங்களை மறப்பதில்லை.
மொர்தெகாய், ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டவர்களை வெளிப்படுத்தி, ராஜாவை பாதுகாத்தார். அனைவரும் அதை மறந்துவிட்டார்கள். ஆனால் கர்த்தரோ அதை நினைவுபடுத்தி, அகாஸ்வேரு ராஜாவுக்கு தூக்கம்வராமல் செய்து, மொர்தெகாயை உயர்த்தினார்.
தேவபிள்ளைகளே, நீங்கள் செய்த நன்மைக்கு பதில் தீமை செய்யலாம். ஆனால் கர்த்தரோ, உங்கள்மேல் நினைவாயிருந்து, உங்களை உயர்த்துவார்.
நினைவிற்கு:- *"அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது"* (சங். 98:3).
சகோ. J. சாம் ஜெபத்துரை.