“இயேசு… நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா, என்றார். அதற்கு அவன், ஆம் ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை அறிவீர் என்றான்” (யோவான் 21:15).
குரங்கு தன் குட்டியை தன் மார்போடு அணைத்து வைத்திருப்பதில்லை; குட்டிதான் தன் தாயின் மார்பை இறுகப் பிடித்துக்கொள்ளும். தாய்க் குரங்கு எவ்வளவுதான் தாவினாலும் குட்டி விழுந்து விடாது. தவறி குட்டி விழுந்துவிட்டால் தாய்க் குரங்கு குட்டியைத் திரும்பவும் சேர்த்துக்கொள்ளாது. இது குரங்கின் இயல்பு. சிலமனிதரும், தம்மைச் சார்ந்திருக்கிறவர்கள் தங்கள் விருப்பப்படி நடக்கவில்லை என்று கண்டால், அவர்களை கைவிட்டு விடுவார்கள்.
ஆனால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோ அதற்கு மாறானவர். இயேசுவின் சீஷர்களுக்குள் பேதுரு சற்று வித்தியாசமானவன். தம்மை யார் என்று சொல்லுகிறார்கள் என்று இயேசு கேட்டபோது, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்” என்று பேதுருவே அறிக்கை செய்தான். மேலும், “ஆண்டவரே, உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்” என்றும் கூறினான். ஆனால், “இவரை அறியேன்” என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக இயேசுவை மறுதலித்ததும் இவன்தான். பேதுரு இயேசுவை மறுதலித்த அந்த நிமிடமே அவர் அவனைப் புறக்கணித்திருக்கலாம்.
ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, தமது உயிர்த்தெழுதலின் பின்பு பேதுருவைப் பார்த்து, “நீ என்னை நேசிக்கின்றாயா” என்றுதான் கேட்டார். ‘நீ மறுதலித்தாலும் உன் நேசத்திற்காக நான் காத்திருக்கிறேன்’ என்பதுபோலத் தொனித்தது இயேசுவின் வார்த்தை. மாத்திரமல்ல, நேசிக்கிறேன் என்ற சொன்ன பேதுருவிடம், தமது ஊழியப் பணியைச் செய்யும்படி இயேசு பொறுப்பைக் கொடுத்தார். கடைசிவரைக்கும் ஆண்டவர் பேதுருவைத் தள்ளிவிடவே இல்லை. இன்று நமது வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பார்ப்போமாக. அன்று பேதுரு மூன்று தடவையாக இயேசுவை மறுதலித்தான். இன்று நாம் எத்தனை தரம் அவருக்காக நிற்கவேண்டிய தருணங்களில் அந்த இடத்தைவிட்டே வழுவிப் போயிருக்கிறோம்!
யூதாஸ் ஒரேதரம் காட்டிக்கொடுத்தான். இன்று நாம் நமது பேச்சினால், செய்கையினால், வாழ்வுமுறையினால் எத்தனைதரம் காட்டிக் கொடுத்திருக்கிறோம். இதற்குப் பல உரிய காரணங்களை நாம் சொல்லக்கூடும். ஆனால், தேவசமுகத்தைவிட்டு தவறிப்போகிறோம் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், இந்த நிமிடம் வரைக்கும் ஆண்டவர் நம்மைக் கைவிடவில்லை. என்னை மன்னியும் என்று தேவபாதம் அணுகும்போதெல்லாம் அவர் நம்மை ஏற்று அணைக்கிறார். ஆகவே, இன்று நம்மால், உம்மை நேசிக்கின்றேன் ஆண்டவரே என்று சொல்லக்கூடுமா?
------------------------------