<b>*..பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். - (செப்பனியா 3:20).*</b>
இந்த புதிய ஆண்டின் வாக்குதத்தமாக தேவன் மேற்கண்ட வசனத்தை கொடுத்திருக்கிறார். போன ஆண்டின் வாக்குதத்தமாக 'நானே உங்கள் பரிகாரியாகிய கர்த்தர்' என்று வாக்குரைத்த தேவன், வாக்கு மாறாதவராக இருந்து, நம்முடைய பிரச்சனைகளிலும், போராட்டங்களிலும், வியாதியின் நேரத்திலும் நம்முடைய பரிகாரியாக இருந்து நம்மை காத்தார். இந்த புதிய ஆண்டிலும் நம்மை 'பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்' என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஒருவேளை கடந்த வருடத்தின் வாக்குதத்தம் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறவில்லை என்றால், அதனால் மனம் சோர்ந்து போக வேண்டாம். கர்த்தர் ஒருநாளும் பொய் சொல்வதில்லை. கர்த்தர் வாக்குதத்தத்தில் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் சொன்னால் சொன்னதுதான். '..தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே' - (2கொரிந்தியர் 1:20) என்று வசனம் கூறுகிறது. பின் ஏன் நடக்கவில்லை என்றால், ஒரு வேளை நம்முடைய வாழ்வில் பாவகட்டுகள் இருந்தால் அவருடைய வாக்குதத்தம் நம் வாழ்வில் நிறைவேறாவண்ணம் அது தடை செய்கிறது.
இந்த வருடத்தின் வாக்குதத்தத்திலும், செப்பனியா 3:20-ன் பின் பாகம் தான் வாக்குதத்த வசனம். அதன் முன்பாகத்தை பார்த்தால், 'அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்' என்று எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் நம் சிறையிருப்பை திருப்பும்போது, இந்த வாக்குதத்தம் நிறைவேறும். என்ன சிறையிருப்பு? ஒருவேளை பாவத்தின் சிறையிருப்பாயிருக்கலாம், வறுமையின் சிறையிருப்பாய் இருக்கலாம், சாபத்தின் சிறையிருப்பு, வியாதியின் சிறையிருப்பு.. இப்படி சொல்லி கொண்டே போகலாம். '..எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம்' - (எஸ்றா (9:7) என்று எஸ்றா அறிக்கையிட்டதுபோது நமது அக்கிரமங்களினிமித்தம் நாம் சிறையிருப்பில் இருந்தாலும், கர்த்தர் அவற்றை மாற்றுவார். இந்த சிறையிருப்புகளை எப்போது மாறும்? எப்போது கர்த்தர் திருப்புவார்? நாம் அவரிடத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும்போது, நம் பாவ வழிகளை விட்டு திரும்பும்போது, அவரிடத்தில் நம்மை அர்ப்பணித்து, நீரே எனக்கு எல்லாம் என்று நம்மை அவரிடத்தில் ஒப்பு கொடுக்கும்போது, அவர் நம்முடைய சிறையிருப்பை திருப்புவார். நாம் நம்மை அவருக்கு ஒப்புகொடுக்கும்போது, அவர், 'என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்' (எரேமியா 46:27) என்று அன்போடு கூறி, நம்முடைய சிறையிருப்பை மாற்றுவார். ஆமென் அல்லேலூயா!
ஒருவேளை நீங்கள் உங்கள் வேலையிடத்தில் தலைகுனிந்து காணப்படுகிறீர்களோ? உங்கள் உறவினர் மத்தியில், உங்கள் ஜனத்தார் மத்தியில், உங்கள் தெருவில், உங்கள் ஊரில், நீங்கள் வெட்கத்தோடு காணப்படுகிறீர்களோ? கர்த்தர் உங்கள் சிறையிருப்பை திருப்பி, நீங்கள் வெட்கப்பட்ட இடத்தில் உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைக்கப்போகிறார். நீங்கள் கலங்காதிருங்கள். பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் என்று சொல்லும்போது, சகல உறவினர்களுக்குள்ளும், சகல கூட வேலை செய்கிறவர்களுக்குள்ளும், சகல கண்களுக்கும் முன்பாக உங்களை தேவன் உயர்த்துவார். உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைக்கபோகிறார்.
நீங்கள் எந்த சிறையிருப்பில் இருந்தாலும், அதை தேவன் மாற்றும்படியாக அவரிடத்தில் ஒப்புகொடுங்கள். அப்போது அவர் அந்த சிறையிருப்பை மாற்றி, நிச்சயமாக உங்களை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக மாற்றுவார். அப்போது உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். நீங்கள் களிகூறுவீர்கள்! ஆமென் அல்லேலூயா!
இந்த வருடத்தின் இந்த வாக்குதத்தம் உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும், உங்கள் வேலையிடங்களிலும், நிறைவேற உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறோம். அந்த ஆசீர்வாதம் என்றும் உங்களில் நிலைத்திருப்பதாக! ஆமென் அல்லேலூயா!