ஜெர்மானியனான ஹிட்லர், யூதர்களும் ஜெர்மானியர்களும் அதிகமாக வாழும் ஆஸ்திரியாவின் மீது படையெடுத்துச் சென்று, அங்கே இருந்த யூதர்களை மட்டும் கொன்றொழித்த தருணம்.
அப்போது ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் ஓர் இளைஞன் இழுத்துச் செல்லப்பட்டான். சுற்றியிருந்தவர்கள் யாவரும் அதை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, அவனைக் காப்பாற்ற முன்வரவில்லை. அந்நேரத்தில் அங்கிருந்த ஒரு ஜென்மானியப் படைவீரர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் மனிதனைச் சுட்டிக்காட்டி, “அவன் ஒரு யூதன், எனவே அவன் செத்து ஒழியட்டும்” என்று கத்தினான். அதற்கு அங்கிருந்த இன்னொரு மனிதன், “அப்படியில்லை அவனைப் பார்த்தால் ஒரு ஜெர்மானியனைப் போன்று தெரிகின்றது. எனவே அவனைக் காப்பாற்றியே ஆகவேண்டும்” என்று சொல்லிவிட்டுக் குதித்தான். உடனே அங்கிருந்த எல்லாரும் ஆம் அவன் ஒரு ஜெர்மானியன்தான் என்று ஆமோதித்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டவன் காப்பாற்றப்பட்டான். அந்த வெள்ளத்தில் விழுந்து காப்பாற்றியவனோ உள்ளே விழுந்தவனைச் சுட்டிக்காட்டி, “ஆமாம் இவன் ஒரு ஜெர்மானியன்தான். ஆனால் அவனைக் காப்பாற்றிய நானோ ஒரு யூதன்” என்றான்.
இதைக் கேட்டு அங்கே திரண்டிருந்த ஹிட்லரின் நாசிப்படையினர் வியந்துபோய் நின்றனர். யூதர்கள் என்றால் சுயநலவாதிகள், யாரைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள், ஆணவம் பிடித்தவர்கள் என்ற தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு யூதர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என உணர்ந்துகொண்டார்கள்.
ஒருவரைப் பற்றிய தவறான பார்வை - முன்சார்பு எண்ணம் – மனிதருடைய வாழ்க்கைக்கு எந்தளவுக்குத் தடையாக இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. நற்செய்தி வாசகத்தில் பிலிப்பு நத்தனியேலைப் பார்த்து, ”இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கொண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்கிறார். அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?” என்கிறார். அதாவது நத்தனியேலைப் பொறுத்தளவில் ‘புறவினத்தார் அதிகமாக வாழ்வும் கலிலேயாவிலிருந்தும், அதில் உள்ள ஓர் ஊரான நாசரேத்திலிருந்தும் நல்லது வரவே வராது என்பதுதான் எண்ணமாக இருக்கின்றது. நத்தனியேல் இவ்வாறு கேட்டதற்கு பிலிப்போ ‘வந்து பாரும்’ என்று பதிலளிக்கிறார்.
பலநேரங்களில் ஒருவரை குறித்து, ஒரு சமூகத்தைக் குறித்து தவறான பார்வையே கொண்டிருக்கிறோம். என்றைக்கு அந்த மனிதரைக் குறித்து அல்லது அந்த சமூகத்தைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்கிறோமோ அன்றைக்குத்தான் அவர்களைக் குறித்து தெளிவான பார்வையைக் கொண்டிருக்க முடியும். இல்லையென்றால் நமது வாழ்க்கை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். ஆகவே ஒருவரைப் பற்றிய நல்ல பார்வையை நல்ல எண்ணத்தைக் கொண்டுவாழ்வோம். *அந்த எண்ணம்தான் நம்முடைய வாழ்வைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கின்றது.*
இந்த நேரத்தில் நம்முடைய எண்ணங்கள் உயர்ந்தவையாக, நல்லவையாக இருக்க இறைவனால் பணிக்கப்படுகின்றோம். *வாழ்க்கையை வடிவமைப்பது எண்ணங்களே*. ஆம்.. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை கட்டமைப்பது எண்ணங்களே. எப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகிறான் என்பதைப் பொறுத்தே அவனது வெற்றி தோல்வி அமைகிறது. நல்ல எண்ணங்களை தன்னம்பிக்கையோடு சிந்திப்பவன் வெற்றி பெறுகிறான். தன்னம்பிக்கை இல்லாத எண்ணம் தோல்வி அடைகிறது.
“ஒரு மான் குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. குட்டிகளைப் பெற்றெடுத்த பின்பும், தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே அந்த மான் வசித்துவந்தது. அந்த குகை சிங்கம் வசிக்கும் குகையாகும். பல நாட்களாக அந்த சிங்கம் குகைக்கு வரவில்லை. வேறு காட்டிற்கு சென்றிருந்த அந்த சிங்கம் திடீரென ஒருநாள் அந்த குகைக்கு வந்தது.
பொதுவாக மான்கள் சிங்கத்தை கண்டால் பயந்து ஓடும். ஆனால் இந்த மான் தைரியம்கொண்ட மானாக திகழ்ந்தது. சிங்கத்தைக் கண்டவுடன் பதட்டம் அடையாமல் தன் குட்டிகளிடம், சிங்கம் அருகில் வந்ததும், சிங்கத்தின் கறிவேண்டும் என சத்தமாக கத்துமாறு கூறியது. சத்தத்தை கேட்ட சிங்கம், பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது. பின்னர் எவ்வித பிரச்சனையும் இன்றி அந்த மான் தனது குட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது” எண்ணம் போல் வாழ்வு என்பதற்கு இந்த கதை சிறந்த உதாரணம்.
ஆகவே நம்முடைய வாழ்வில் நல்ல, உயர்வான எண்ணங்களைக் கொண்டுவாழ்வோம். அது நம்முடைய வாழ்வை மேலும் மேலும் உயர்த்தும். அதே நேரத்தில் முன்சார்பு எண்ணங்கள், அடுத்தவரைக் குறித்த தவறான எண்ணங்கள் நம்மைப் பாதாளம்வரை தாழ்த்தும். எனவே *முன்சார்ப்பில்லாத, நல்ல மனநிலையோடு வாழ்வோம்*. அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
– Palay, Fr. Maria Antonyraj