*_"கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்."_*- (யாக்கோபு 1:19).
அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூசல்வெட் வெள்ளை மாளிகையில், செயற்கையான சிரிப்புடன், தன்னிடம் ஏதோ ஒரு சில வார்த்தைகளை உதிர்த்து விட்டு, கைகுலுக்கி, தினமும் தன்னை காண நிற்பவர்களிடம் தான் சொல்வதை அவர்கள் கேட்கிறார்களா என்று அறிய ஆவல் கொண்டார்.
அதற்காக அவர் ஒரு நாள் தன்னிடம் வந்து கைகுலுக்கியவர்களிடம் வாய் நிறைந்த புன்னகையுடன் 'நான் என்னுடைய பாட்டியை இன்று காலை கொலை செய்து விட்டேன்' என்று கூறினார். கைகுலுக்கியவர்கள் அவர் ஏதோ சொல்கிறார் என்றும், ஆனால் அவர் என்ன சொன்னார் என்பதையும் கவனியாமல், 'என்ன அருமையான வேலை', 'ஓ, இந்த அற்புத வேலையை தொடர்ந்து கைகொள்ளுங்கள்' என்று பாராட்டினார்களாம்.
கடைசியில் வேறு நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு தூதுவர் மட்டுமே அவர் சொன்னதை சரியானபடி கேட்டார். அதற்கு ஒரு சிறிய புன்சிரிப்புடன், 'அது அவர்களுக்கு ஏற்றதே' என்று கூறினாராம்.
ஆம், பிரியமானவர்களே யாருக்கும் மற்றவர்கள் சொல்வதை கேட்பதற்கு விருப்பம் இல்லை, தாங்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
சபைகளில் போதகர் சொல்லும் கர்த்தருடைய வார்த்தைகளை சரியானபடி கேட்பவர்கள் சிலரே. பிரசங்கம் முடிந்த பிறகு அங்கு வந்திருந்த சிலரிடம் போதகர் என்ன சொன்னார் என்று கேட்டு பாருங்கள், எதையாவது மழுப்புவார்கள். சரியாக கவனித்திருக்க மாட்டார்கள். கேட்பதற்கு விருப்பம் இல்லை
நம்மிடம் வருகின்றவர்கள் சொல்லும் பிரச்சனைகளை நாம் கேட்கிறோமோ என்றால் அநேகருக்கு அதற்கு பொறுமை இருப்பதில்லை. எனக்கே ஆயிரம் பிரச்சனைகள், அதில் இவர்கள் படும் பாடுகளையும் நான் கேட்க வேண்டுமா? என்று எரிச்சலடைவார்கள்.
சில பேரிடம் பேச சொல்லி பாருங்கள், நாள் போகிறதும், நேரம் போகிறதும் தெரியாமல் பேசி கொண்டே இருப்பார்கள். அதை மற்றவர் கேட்கிறாரா இல்லையா என்பதை குறித்து கவலையே இல்லாமல் பேசி கொண்டே இருப்பார்கள். எதையாவது பயனுள்ளதை பேசினார்களா என்று பார்த்தால், நிச்சயம் இல்லை, ஊர்க்கதையும், உலக கதையும் தான் முக்கியமாக இருக்கும்.
சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு (1தீமோத்தேயு 4:7) என்று வேதம் எச்சரிக்கிறது. ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள் என்றும் ஆலோசனை கூறுகிறது.
ஆனால் நாமோ, பேசுகிறதற்கு தீவிரமாயும், கேட்கிறதற்கு பொறுமையாயும் இருப்பதால்தான் அநேக பிரச்சனைகள் இந்த உலகத்தில், வீடுகளில், சபைகளில் காணப்படுகிறது.
தேவன் நம்மோடு பேச வாஞ்சிக்கிறார். அவர் பேசுவதை கேட்கிற காது அநேகருக்கு இல்லை. எப்போதும் நாமே பேசி கொண்டிருக்கிறோம். அவர் பேசுவதை கேட்போம். தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை விட்டுவிட்டு, தேவ பக்திக்கேதுவாக முயற்சி செய்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென்.