சந்தேகக் கோட்டையில் பயணிகள்
கிறிஸ்தியானும், நம்பிக்கையும் நடந்து செல்லும் வழியில் ஒரு அழகான ஆற்றின் அருகே வந்து சேர்ந்தார்கள். அளவுகடந்த மகிழ்ச்சியுடன் ஆற்றின் தெளிந்த நீரைப் பருகினார்கள். கரையிலிருந்து மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். பச்சைப்பசேலென்ற புல்வெளியில் படுத்து உங்கினார்கள்.
விழித்து எழுந்தவுடன் கற்கள் நிறைந்த பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால்கள் வலியெடுத்தது! கற்பாதையில் நடப்பது கடினமாக இருந்தது! அப்போது அவர்கள் செல்லவேண்டிய பாதைக்கு அருகில் புல்வெளிப் பாதை என்ற பசும்புற்களால் நிறைந்த பாதையைக் கண்டார்கள். வெகுதூரம் வரை அந்த பாதை கற்ப்பாறைக்கு இணையாகவே செல்வதுபோலத் தென்பட்டது!
புல்வெளிப் பாதையில் கால் வைத்து நடந்தார்கள். மெத்தைமீது நடப்பதுபோன்று கால்களுக்கு இதமாக இருந்தது! தாங்கள் செல்லவேண்டிய கற்பாதையைப் பற்றி நினைக்கவேயில்லை!
அந்தப் பாதையில் நடந்து செல்லும்போது அசட்டு நம்பிக்கை என்ற பெயருடைய ஒருவனைச் சந்தித்தார்கள்.
இந்தப்பாதை மோட்சத்துக்குத்தான் செல்கிறது. பயப்படாமல் என்பின்னே வாருங்கள் என்றான் அவன். பயணிகள் இருவரும் கவலை நீங்கப்பெற்றவர்களாக அவனைப் பின்தொடர்ந்தார்கள்!
இரவு வந்தது. இருளில் பாதை கண்ணுக்குத் தெரியவில்லை!
அப்போது கால்தவறி கிடுகிடு பாதளத்திற்குள் விழுந்துவிட்டான் அசட்டு நம்பிக்கை! அவனுடைய கூக்குரலைக் கேட்டு திடுக்கிட்டு நின்றுவிட்டார்கள் பின்னால் வந்த இருவரும்! அவனைக் குரல்கொடுத்துக் கூப்பிட்டு பார்த்தார்கள். ஆனால் பதிலே வரவில்லை! தீடிரென்று இடி, மின்னலோடு பெரிய மழை பெய்தது! புல்வெளிப் பாதையெங்கும் வெள்ளம் நிரம்பி விட்டது! தங்கள் தவறை உணர்ந்த கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப முயன்றார்கள். ஆனால் வழி தெரியவில்லை!
மழையிலிருந்து தப்புவதற்காக ஒரு பாறை இடுக்கினுள் சென்று அமர்ந்தார்கள். களைப்பு மிகுதியால் அப்படியே உறங்கிவிட்டார்கள்! அவர்கள் தங்கிய இடத்துக்குச் சற்றுத் தொலைவில் தான் சந்தேகக் கோட்டை என்ற கோட்டை இருந்தது. நம்பிக்கையற்றவன் என்ற அரக்கன் தனது மனைவியோடு அங்கே வசித்து வந்தான்.
மறுநாள் காலை. தனது நிலத்தைச் சுற்றிப் பார்க்க வந்த அரக்கன் தூங்கிக்கொண்டிருக்கும் இருவரையும் கண்டு கடும் கோபம் கொண்டான். யாரது, எனது நிலத்தில் படுத்து உறங்குவது? என்று கர்ணகடுரமான குரலில் கேட்டான். திடுக்கிட்டு விழித்த இருவரும் அரக்கனைக் கண்டு பயந்து நடுநடுங்கினார்கள்.
ஐயா, நாங்கள் மோட்சத்துக்குச் செல்லும் பயணிகள். வழிதவறி இங்கு வந்துவிட்டோம். தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள், என்று கெஞ்சினான் கிறிஸ்தியான். ஆனால் அரக்கனோ அவர்களைப் பிடித்திழுத்துக் கொண்டுபோய் கோட்டையிலுள்ள பாதாளச் சிறையில் அடைத்துவிட்டான்! மூன்று நாட்கள் இரவும், பகலும் அவர்களைத் திரும்பியே பார்க்கவில்லை! உண்ண உணவு கிடையாது! குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லை! பாறாங்கல் தரையில், பாதாள அறையின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, சோர்வோடு கிடந்தார்கள் இருவரும்!
அரக்கன் தனது மனைவியிடம் இவர்களைப் பற்றிக் கூறினான். அவிசுவாசம் என்ற அவனது மனைவி மிகவும் கொடூரமானவள். கொஞ்சம்கூட இரக்கம் காட்டாமல் அவர்களை நன்றாக அடிக்கும்படி ஆலோசனை கூறினாள் அவள்.
பாதாளச் சிறைக்குச் சென்ற அரக்கன் தனது குறுந்தடியைக் கொண்டு அவர்களை நையப் புடைந்தான்! ஆனால் அசையாமல் விழுந்துகிடந்த இருவரும் ஒன்றுமே பதில் பேசவில்லை! மறுநாள் இரவு அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்த அவிசுவாசம் தனது கணவனிடம் அவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டுமாறு யோசனை கூறினாள். பாதாளச் சிறைக்குச் சென்ற அரக்கன், நீங்கள் இனித் தப்பிச் செல்ல முடியாது. உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதுதான் ஓரே வழி என்று பயங்காட்டினான்! ஆனால் கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மனம் தளர்ந்துவிடவில்லை! ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டு மேலும் ஒரு நாளைக் கழித்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட அவிசுவாசம் தனது கணவனை அழைத்து, நீர் இதற்குமுன் இங்கு கொல்லப்பட்டவர்களின் எலும்புகளைக் காட்டிப் பயயமுறுத்தும் என்று கேட்டுக்கொண்டாள். அரக்கன் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஏற்கனவே அங்கே கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் காட்டினான். அந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு பயந்தாலும், இருவரும் தற்கொலை செய்துகொள்ள மறுத்துவிட்டார்கள். அரக்கன் அவர்களை மீண்டும் பாதாளச் சிறையில் அடைத்தான்.
அப்போது கிறிஸ்தியான், அடடா, என்னிடம் ஒரு சாவி இருக்கிறதே என்று கூறியபடி ஆண்டவரின் வாக்குத்தத்தம் என்ற சாவியை வெளியே எடுத்தான். இதோ இந்தச் சாவியைக் கொண்டு எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம் என்றான் உற்சாகத்துடன். சரி, வா போகலாம் என்று எழுந்தான் நம்பிக்கை.
இருவருமாக பாதாளச் சிறையின் கதவண்டை வந்தார்கள். கிறிஸ்தியான் வாக்குத்தத்தம் என்ற சாவியைக் கொண்டு பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான்! ஆனால் பெரிய இரும்புக் கதவை அசைப்பது தான் கடினமாக இருந்தது. முழுமுயற்சியோடு கதவைத் திறந்துவிட்டார்கள்! அந்தச் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அரக்கன் விழித்துவிட்டான்.
கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தப்பி ஓடுவதைக் கண்ட அரக்கன் அவர்களை விரட்டினான். ஆனாலும் அவனுக்குத் திடீரென மூட்டுவலி வந்துவிட்டது! ஓட முடியாமல் கீழே விழுந்துவிட்டான்! பயணிகள் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு வந்து சேர்ந்தார்கள்.
மகிழ்ச்சி மலையில் பயணிகள்
அழகான தோட்டங்கள் நிறைந்த மகிழ்ச்சி மலைக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். பழ மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் அமர்ந்து களைப்பாறினார்கள்.
மலையுச்சியில் அறிவு, ஞானம், கவனம், தங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்கள். பயணிகளைக் கண்டவுடன் அவர்களை அன்போடு வரவேற்றார்கள். உணவளித்து உபசரித்தர்கள். கிறிஸ்தியானும், நம்பிக்கையும் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு விவரமாகக் கூறினார்கள். அவற்றை ஆவலோடு கேட்ட மேய்ப்பர்கள் இரவு தங்கிப் போகும்படி வேண்டிக் கொண்டார்கள். அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில் இரவைக் கழித்தார்கள்.
மறுநாள் காலையில் எச்சரிக்கை என்ற பெயரையுடைய குன்றுக்கு அழைத்தச் சென்றார்கள். அங்கிருந்து பார்த்தபோது சற்றுத் தொலைவில் கண்பார்வையற்ற சிலர் கல்லறைகளுக்கு நடுவே தட்டுத் தடுமாறியவாறு சுற்றிவருவது தெரிந்தது!
யார் இவர்கள்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.
இந்த மலைக்கு வரும் வழியில் கற்பாதைக்கு அருகில் புல்வெளிப் பாதை இருந்ததல்லவா? அந்தப் பாதையில் சென்று, சந்தேகக் கோட்டை என்ற கோட்டையின் அரக்கனுடைய கையில் பிடிபட்டவர்கள் தாம் இவர்கள். அவன் இவர்கள் கண்களைக் குருடாக்கி இப்படி அலையவிட்டுவிட்டான் என்றார்கள் மேய்ப்பர்கள்.
திடுக்கிட்ட கிறிஸ்தியானும், நம்பிக்கையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் கண்கள் கலங்கின! தங்களைக் காப்பாற்றிய ஆண்டவரை எண்ணித் துதித்தார்கள்.
மேய்ப்பர்கள் பயணிகள் இருவரையும் மலையின் அடியிலிருந்து ஒரு கதவண்டை அழைத்துச் சென்றார்கள். கதவைத் திறந்த உள்ளே பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள். உள்ளே மிக ஆழமான பள்ளம் காணப்பட்டது. கருமை நிறப் புகை வெளிக்கிளம்பியது! நெருப்பு எரிகிற இரைச்சலும் கேட்டது! வேதனையில் புலம்புகிறவர்களின் கூக்குரல் எழுந்தது! இது எந்த இடம்? என்று கேட்டான் கிறிஸ்தியான். இது நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி, பாசாங்கு செய்பவர்களின் வாசல் என்று இதற்குப் பெயர் என்று விளக்கினார்கள் மேய்ப்பர்கள்.
பிறகு பயணிகளை தெளிவு என்ற மலைமுகட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு தொலைநோக்கியை அவர்கள் கையில் கொடுத்து, இதோ இதன்மூலம் பார்த்தால் மோட்சத்தின் வாசல் தெரியும் என்று கூறினார்கள். ஆனால் பதட்டத்தின் காரணமாகப் பயணிகளின் கை ஆடியது! அதனால் அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை!
பயணிகள் மேய்ப்பர்களிடமிருந்து விடைபெறும் வேளை வந்தது. மேய்ப்பர்களில் ஒருவன் அவர்கள் இனிச் செல்லவேண்டிய பாதையின் வரைபடம் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்தான். மற்றறொருவன் முகத்துதி என்பவனைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி ஆலோசனை கூறினான், மூன்றமவன் மயக்க நிலத்தில் படுத்து உறங்கிவிடாதீர்கள் என்று எச்சரித்தான். நாலாமவன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக! என்று கூறி வழியனுப்பி வைத்தான்.
முகத்துதியைச் சந்தித்தல்
கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்கள். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று தயங்கி நின்ற போது அங்கியால் முகத்தை மூடியிருந்த ஒருவன் அருகே வந்து ஏன் நிற்கிறீர்கள்? என்று கேட்டான்.
பயணிகள் இருவரும் பாதை தெரியவில்லை என்றார்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள், நானும் மோட்சத்திற்குத்தான் போகிறேன் என்றான் அவன். இருவரும் அவனுக்குப் பின்னே சென்றார்கள். அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றபடியால் எந்தத் திசையில் செல்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை!
அப்போது இருவரும் ஒரு பெரிய வலையில் சிக்கிக்கொண்டார்கள்! அவர்களால் நகரக்கூட முடியவில்லை! அவர்களை அழைத்துவந்தவர்களின் முகத்திரை விலகியது! அவன்தான் முகத்துதி என்பதைக் கண்டு கலக்கமடைந்ததார்கள்! அவன் அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றான்.
முகத்துதியிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று மேய்ப்பன் கூறினாரே! நாம் கவனக் குறைவால் இப்படி மாட்டிக்கொண்டோமே! பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் (நீதி.29:5 ) என்ற வார்த்தை எவ்வளவு உண்மையாகி விட்டது! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். சிறிது நேரம் கழித்து பிரகாசமான ஆடையணிந்து ஒருவர் அவர்களருகே வந்தார். அவர் கையில் ஒரு சாட்டை இருந்தது. வலையைக் கிழித்து அவர்களை விடுவித்தார்.
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேசத்தை தரித்துக் கொள்வானே (2 கொரி 11:14) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை மறந்துவிட்டீர்களே! மேய்ப்பன் கொடுத்த வரைபடத்தை எடுத்துப்பார்த்துச் சரியான பாதையை அறிந்திருக்கலாமே! என்று கடிந்து கொண்ட அவர் சாட்டையை எடுத்து அவர்களை அடித்தார்.
தண்டனையை அளித்த பின்பு வாருங்கள் சரியான பாதையை உங்களுக்கு காட்டுகிறேன் என்று அவர்களை அழைத்துச் சென்று சரியான பாதையில் செல்ல வைத்தார். இருவரும் மயக்க நிலத்தை வந்தடைந்தார்கள். காற்றே இல்லாததுபோல காணப்பட்டது! நடப்பதற்கே கடினமாக இருந்தது! நம்பிக்கை சற்று அமர்ந்து ஒய்வெடுக்கலாம் என்று கூறினான்.
மேய்ப்பன் கூறியதை மறந்துவிட்டாயா? இது மயக்க நிலம் நாம் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தான் கிறிஸ்தியான்.
உறங்கிவிடாதிருக்க ஆண்டவர் செய்த அற்புதங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடந்து, அந்த நிலத்தைக் கடந்துவிட்டார்கள்.
பேரின்பபுரத்தில் பயணிகள்
இருவரும் பேரின்பபுரத்தை அடைந்தார்கள். இங்கு நறுமணம் கொண்ட தென்றல் வீசியது! தihயெங்கும் வண்ண வண்ண மலர்கள்! எங்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள்! இங்கு சூரியன் இரவுபகலாகப் பிரகாசித்தது!
அங்கிருந்தபடியே மோட்சத்தைக் கண்டு மெய்மறந்து நின்றார்கள்! முத்துக்களாலும், நவரத்தினங்களாலும் கட்டப்பட்டிருந்த அந்தப் பட்டணம் பிரகாசமாக ஒளி வீசியது. தரையெங்கும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டு தகதகவென்று மின்னியது! சூரிய ஒளி அதன்மீது பட்டுப் பிரதிபலிப்பதைக் காண முடியாமல் கண்களைப் பொத்திக் கொண்டார்கள் இருவரும்! மோட்சப் பட்டணம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது!
பயணிகள் இருவரும் அங்கிருந்து தோட்டத்தின் பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் படுத்து ஒய்வெடுத்தார்கள்.
அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தபோது தங்கம்போல ஒளிவீசும் ஆடையணிந்த இருவரைச் சந்தித்தார்கள். அவர்கள் முகம் பிரகாசமாக இருந்தது! பயணிகளைக் கண்டு நலம் விசாரித்தார்கள் அவர்கள்.
இன்னும் இரண்டு சோதனைகளைத்தான் நீங்கள் சகிக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு மோட்சத்தை அடையலாம் என்று அவர்கள் கூறியவுடன் பயணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
மேலும் சிறிது தூரம் சென்றவுடன் மோட்சத்தின் வாசலைக் கண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கும் வாசலுக்குமிடையே ஒரு பெரிய ஆறு ஓடியது! ஆதன் ஆழமோ அதிகம்! அதைக் கடக்கப் பாலமும் இல்லை! பயணிகள் இருவரும் தயங்கி நின்றார்கள்!
ஆதுவரை அவர்களுடன் வந்த ஒளிவீசும் ஆடையனிந்தவர்கள் நீங்கள் அந்த வாசலை அடையவேண்டுமானால் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்கள். பயந்து நடுங்கியபடியே ஆற்றினுள் இறங்கினார்கள் இருவரும்! சுpறிது நேரம் போவதற்குள்ளாக நீர்மட்டம் அவர்கள் தலைக்குமேல் வந்துவிட்டது! கிறிஸ்தியான் மூழ்கத்துவங்கினான்!
ஐயோ, அமிழ்ந்து போகிறேனே! என்று புலம்பினான். கவலைப்படதே கிறிஸ்தியான். ஆழம் அதிகமில்லை! என் கால்களுக்குக் கீழாக கடினமான தரை தட்டுப்படுகிறது என்று தேற்றினான் நம்பிக்கை.
ஆனால் கிறிஸ்தியானோ, நான் சாகும் வேளை நெருங்கிவிட்டது. என்னால் பாலும் தேனும் ஓடும் மோட்ச பூமியைப் பார்க்க முடியாது என்ற அங்கலாய்ப்போடு நம்பிக்கையின்மீது சாய்ந்துவிழுந்தான். கிறிஸ்தியான் மூழ்கிவிடக்கூடாதே என்று மிகவும் கடினத்துடன் அவனைத் தாங்கிப் பிடித்தபடியே நீந்தினான் நம்பிக்கை.
அப்போது நம்பிக்கை விசுவாசத்தோடு, இயேசுவானவரே, எங்களைக் காப்பாற்றும் என்று வேண்டினான். இந்த வார்த்தைகள் கிறிஸ்தியானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. அவனும் புத்துணர்வோடு நீந்தத் துவங்கினான். இவ்வாறு முதல் சோதனையில் வெற்றிபெற்றார்கள்!
மோட்சத்தை அடைந்தனர்
இருவரும் மறுகரையை அடைந்தார்கள். அங்கே ஒளிவீசும் ஆடை தரித்த இருவரும் வர்களுக்காகக் காத்திருந்தார்கள். பயணிகளை அன்போடு வரவேற்றார்கள்.
மோட்சம் ஒரு மேன்மையான குன்றின்மீது இருப்பதை நான் என் கனவில் கண்டேன். பயணிகள் ஒளிவீசும் ஆடை தரித்தவர்களுடன் சேர்ந்து மோட்சத்தை நோக்கி நடந்தார்கள். வாசலை நெருங்கியவுடன் மோட்சத்தின் தூதர்கள் அவர்களை எதிர்கொண்டு வந்தார்கள்.
இவர்கள் இருவரும் பூமியில் வாழும்போது ஆண்டவரை நேசித்தவர்கள். எல்லாவற்றையும் அவருடைய நாமத்திற்கென்று விட்டுவிட்டவர்கள் என்று கிறிஸ்தியானும் நம்பிக்கையும் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.
எக்காளம் வாசிப்பவர்கள் எக்காள தொனியோடு அவர்களை வரவேற்றார்கள். பயணிகள் இருவரும் வாசலை அடைந்தார்கள். அங்கேதான் இரணடாவது சோதனை இருந்தது!
அடையாளச் சுருள் எங்கே! என்ற கேள்வி கேட்கப்பட்டது.
உடனே அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த சுருளை எடுத்துக் கொடுத்தார்கள். அவை இராஜாதிராஜாவிடம் கொண்டுபோகப்பட்டன.
அவற்றைச் சோதித்த அவர் இந்தச் சுருள்களைக் கொண்டு வந்தவர்கள் எங்கே? என்று கேட்டார்.
அவர்களை உள்ளே அழைத்து வாருங்கள் அவர்கள் உள்ளே நுழையத் தகுதியுள்ளவர்களே என்று தீர்ப்பளித்தார் இராஜாதிராஜா.
கதவு திறக்கப்பட்டது. கிறிஸ்தியான், நம்பிக்கை இருவரும் மோட்சத்தினுள் நுழைவதை நான் என் கனவில் கண்டேன்.
இதோ அவர்கள் நுழைந்தவுடன் அவர்கள் உருவம் மாறியது! அவர்கள் முகம் பிரகாசித்தது! அவர்கள் பொன்போல ஒளிவீசும் ஆடையணிந்தவர்களாகக் காணப்பட்டார்கள்! அவர்கள் தலையில் பொன்முடி சூடப்பட்டது! ஆண்டவரைத் துதித்துபாட கின்னரம் கொடுக்கப்பட்டது!
மோட்சத்திலுள்ள மணிகள் எல்லாம் ஒலியெழுப்பின! எங்கும் பாடல் தொனி! ஆண்டவருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள் என்ற குரல் எழும்பியது!
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக (வெளி.5:13) என்ற பாடலைப் பாடி அனைவருமாக ஆண்டவரைத் துதித்தனர்!
