இவ்வுலகில், கடவுளை நம்புகிறவர்களுள்அநேக பிரிவினைகள் இருக்கிறது.
இதில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பைபிளை கடவுளின் வெளிப்பாடாக
ஏற்றுக் கொண்டுள்ளனர். பைபிள் மனிதர்களிடம் உள்ள புத்தகங்களில்
பழமையானது. பல தெளிவான சரித்திர உண்மைகளையும் தீர்க்க தரிசனங்களையும்
கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நிறைவேறியும் விட்டது.
இப்படிப் பட்ட வேத புத்தகத்தை கொண்ட கிறிஸ்தவர்களிடையே ஏன் மார்க்க
பேதங்கள்? பற்பல பிரிவுகள்? இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலர், "உங்களில்
உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும்
உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே." என்று I கொரி 11: 19 ல்
கூறுகிறார். இப்படி பலவிதமான மார்க்க பேதங்கள் உண்டாகக் காரணம் என்ன?
வேதாகமம் சொல்லும் சத்தியம் ஒன்றே. பற்பல பிரிவுகள் இருக்கிறது என்றாலே,
பல தவறான கொள்கைகள், வேத வசனங்களுக்கு தவறான விளக்கங்கள் இருக்கிறது
என்று அர்த்தம். கிறிஸ்து சொன்னபடியே அப்போஸ்தலர்களுக்கு பின்பு தவறுகள்
என்ற களைகள் பல சாத்தானால்
விதைக்கப்பட்டன.
வேத ஆராய்ச்சி குறைவு
மூல பைபிள், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. இந்த மூல பைபிளை,
பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பொது ஏற்பட்ட சில தவறுகள்.
புதிய ஏற்பாட்டில் சுமார் 4000 கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரதிகளை மூலப் பிரதிகளிலிருந்து
நகல் எடுக்கும் போது சில பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய ஏற்பாட்டில்
இப்போது பூர்விக பிரதிகளாக இருப்பவை:
a. சிநெயாடிக் (SINAITIC -1844 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
b. வாடிகன் எண் 1209 (VATICAN No.1209 – 1475 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
c. அலெக்சாண்டிரியன் பிரதி (ALEXANDRINE – 1968 ல் கண்டு பிடிக்கப்பட்டது)
மேற்கூறிய பிரதிகளில் சிநெயாடிக் தான் மிகவும் பூர்விகமானது. முதல்
இரண்டு பிரதிகளும் நான்காம் நூற்றாண்டிலும், அலெக்சாண்டிரியன் பிரதி 5ம்
நூற்றாண்டிலும் எழுதப்பட்டவைகள். இந்த பிரதிகளுக்கும், இதற்குப் பின்பு
எழுதப்பட்ட பிரதிகளுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. இதனால் நம்மிடையே
சில சத்திய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஒரு சிலர் ஓரிரு வசனங்களை மட்டுமே பிடித்துக் கொண்டு, சில கொள்கை களை
வகுத்துக் கொண்டு, ஒரு சபையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒரு விஷயத்தை
குறித்து ஆராயும் போது, அது சம்பந்தமான எல்லா வேத வாக்கியங்களையும்
ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படி செய்யாமல், புரியாததை விட்டு விட்டு
அல்லது தவறான அர்த்தம் எடுத்துக் கொண்டு புரிந்த சில வசனங்களைக் கொண்டு,
ஒரு கொள்கையை வகுத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் இப்பிரபஞ்சத்தின்
தேவனான சாத்தான் அவர்களது மனக்கண்களை குருடாக்கி இருப்பதேயாகும். ( 2
கொரி 4:4 ).
வேதவாக்கியங்களை ஆராயும் பொழுது , ஒரு வசனம் மற்ற வசனங்களுக்கு
முரண்பாடாக தோன்றினால், நாம் அந்த வசனங்களின் உண்மைப் பொருளை, அதாவது
அந்த வசனங்கள் எந்தப் பொருளில் எழுதப்பட்டுள்ளதோ, அந்தப் பொருளை நாம்
புரிந்து கொள்ளவில்லை என்பது புலனாகிறது.
ஏனெனில் வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டு,
ஒன்றுக்கொன்று இசைவாக இருக்கிறதேயல்லாமல் முரண்பாடாக இருக்காது.
ஆகையினால்தான், "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்" என்று சொல்லப்
பட்டிருக்கிறது. (யோவான் 5:39 )