வேதபாரகர்"(Scribes)



நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சி பெற்று அதனை விளக்குவதிலும், போதிப்பதிலும் நிலைத்திருந்த ஒரு வகுப்பினர்தான்
'வேதபாரகர்' என அழைக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இச்சொல் அரண்மனையிலுள்ள ஒருவித அதிகாரிகளைக் குறிப்பிட்டு வந்தது. (2இராஜாக்கள்: 18:18; எரேமியா: 36:12). சிறையிருப்பின் காலத்தில்தான் இச்சொல் நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சி பெற்ற
பண்டிதர்களைக் குறிப்பிடும் ஒரு சொல்லாக மாறியது.

சிறையிருப்புககுப் பின் நியாயப் பிரமாணம் யூதர்களுடைய வாழ்க்கையில் அச்சாணியாக மாறியது. இந்த நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் எஸ்றா நடத்திய யூத சமய புனரமைப்பின்போதுதான் வேதபாரகர் யூத சமயத்தினுள் ஒரு முக்கிய வகுப்பினராக உருவானார்கள்.
(எஸ்றா: 7:6,11,12).

எஸ்றா ஆசாரிய பாரம்பரியத்திலிருந்து எழுந்த வேதபாரகன். (எஸ்றா: 7:12). அக்காலத்தில் எழுந்த இதர வேதபாரகர்களும் அப்படியே ஆசாரிய
பாரம்பரியத்திலிருந்து எழுந்துள்ளனர். (நெகேமியா: 8:7; 2நாளாகமம்: 34:13). இவர்கள் தனிக் குழுக்களாக வாழ ஆரம்பித்தனர். (1நாளாகமம்: 2:55).

அந்தியோகஸ் எபிபனேஸ் IV (Antiochus Epipanas IV) - சின் கொடுமையின் காலத்தில், மக்களுக்கு ஊக்கமூட்டி தீமையை எதிர்க்கக் காரணமாயிருந்தது இந்த வேதபாரகர் சங்கம். (1மக்கபேயர்: 7:11-17). பிற்காலத்தில் பரிசேயர் இவர்களுக்குள்ளிருந்தே எழும்பியதாக கருதப்படுகிறது.

புதிய ஏற்பாட்டில் வேதபாரகர் பற்பல இடங்களில் குறிப்பிடப்படுவதைக் காணலாம். (மத்தேயு: 13:52; மாற்கு: 9:11,14). இவர்கள் பாலஸ்தீனா முழுவதும் பரம்பியிருந்தாக அறியலாம்.

1. மாற்கு: 7:1 - எருசலேம்
2. லூக்கா: 5:17 - கலிலிலேயா
3. மத்தேயு: 7:28
இவர்கள் 'சனகெரிம்' சங்கத்திலும் உறுப்பினர்களாக இருந்தனர். (அப்போஸ்தலர்: 4:6; மாற்கு: 3:22; 7:1)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.