"சனகெரிப் சங்கம்"
(Sanhedrin)
என்ற கிரேக்கச் சொல் - எபிரேய மொழியில் 'சன்கட்ரின்' என்று மருவியுள்ளது. அதைத் தமிழில் 'சனகரீம்' என்றும் 'சனகெரிப்' என்றும் கூறுவர்.
சனகெரிப் சங்கம் என்பது யூத நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் படைத்த ஆளும் கௌன்சில் ஆகும். இது 'மாநாடு' (அ) 'மன்றம்' (council) என அழைக்கப்படும். எண்ணாகமம்: 11:16 ல் குறிக்கப்பட்ட 70 தலைவர்களே இச்சங்கத்தின் துவக்கம் என்று 'தல்மூத்'தில் (Talmud) சொல்லியுள்ளது. மோசேயுடன் சேர்த்து 71 உறுப்பினர்கள்.
யூத மக்களுக்கு அமைந்த ஆளுகையில் இது மிகவும் முக்கியமானது. இந்த சங்கத்திற்கு தலைவனாக பிரதான ஆசாரியன் இருப்பான். மற்ற ஆசாரியர்களும், சாதாரண மக்களும் இதில் கலந்து கொள்வார்கள்.
புதிய ஏற்பாட்டுக் காலங்களில் சனகெரிப் சங்கம் யூதர்களின் உள்ளுர் மற்றும் சமய விஷயங்கள் அனைத்தின் பேரிலும் அதிகாரம் செலுத்தியது. என்றாலும், சனகெரிப் சங்கம் ரோமர்களுக்கு எதிராக எதையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எந்த குற்றவாளிக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரமும்
யூதத்தலைவர்களுக்கு அளிக்கப்படவில்லை. (யோவான்: 18:31,32). ஆகவேதான் இயேசு ரோம கவர்னரான பொந்தியு பிலாத்துவின்
ஆணையின்பேரில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.
சனகெரிப் சங்கம் பிரதான ஆசாரியனைத் தவிர, 70 உறுப்பினர்களைக் கொண்டது. இந்த உறுப்பினர்கள் யூத நாட்டின் தலைவர்கள் மற்றும் மூப்பர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். போதகப் பாரம்பர்யம் (Rabbinic) ஆனது மோசேயும், அவனோடு சேர்ந்த 70 தலைவர்களையும் குறிக்கிறது எனக் கூறுகிறது.
நீதிமன்றங்களில் பரிகரிக்கக்கூடாத வழக்குகளைக் கூட இந்த சனகெரிப் சங்கத்தால் தீர்ப்புச் செய்யப்பட்டது. இதனுடைய ஆட்சி யூதேயாவிற்குள்ளேயே அடங்கியிருந்தது. நியாயப்பிரமாணத்தை மீறுவதைக் குறித்தும் இச்சங்கம் வழக்குகளை விசாரிக்கும்.
(யோவான்: 18:22,31).
இச்சங்கம் விசாரிக்கும் வழக்குகள்:
சமய நெறியை மீறிய வழக்குகள்,
திருமணம், மணவிலக்குகள்,
புரட்டுக் கொள்கைகள்,
மூதாதை வரிசைப் பட்டியல்கள் (வம்ச அட்டவணை - Geneologies),
ஆண்டுக் குறிப்பேடு (Calandar),
முதலியவற்றைப் பற்றி எழுந்த சிக்கல்கள் போன்ற யாவையும் இச்சங்கம் வரையறுத்து முடிவு கட்டியது.
வரையறுப்பையும், முடிவையும் வெளி நாடுகளில் வாழ்ந்த யூதர் பெரிதும் மதித்து, தங்கள் வழக்குகளை முடிவு கட்டுவதற்கு அவைகளை முன் மாதிரிச் சட்டங்களாகக் (Precedence) கொண்டார்கள்.