பண்டிகை , திருவிழா ஆகியவற்றிற்கு எபிரேய மொழியில்"ஹக்"(Hag) என்று பதம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு"விருந்து"என பொருள்படும். விழாக்கள் அனைத்தும் விருந்துண்ணும் பழக்கமா இருப்பதனால் இப்படி
அறியப்பட்டிருக்கலாம். (சகரியா: 8:19 ).
இஸ்ரவேலரிடையில் பலவகையான திருவிழாக்கள் காணப்பட்டன. பெரிய விழாக்களுக்கு முன்பு உபவாசித்தலும் (நியாயதிபதிகள்: 26,27 அதிகாரங்கள், 1சாமுவேல்: 7:5,6, 2ராஜாக்கள்: 19:1-17, எரேமியா: 36:4-6,) , விழாக்களில் பலியிடுவதும் (1சாமுவேல்: 7:16, 2 சாமுவேல்: 23:16,17) முக்கிய அம்சங்களாகும்.
இஸ்ரவேலரிடையில் காணப்பட்ட விழாக்கள் யாவும் மூன்று வகையாகப் பகுக்கப்பட்டன. அவை:
1. திருநூல் சட்ட ஒழுங்கிற்குட்பட்டவை:(Canonical Festivals)
ஓய்வுநாள், அமாவாசை, ஏழாவது அமாவாசை, ஏழாவது ஆண்டு, பெந்தெகோஸ்தே அல்லது ஐம்பதாவது ஆண்டு.
2. வாழ்க்கை வழக்கிலுள்ளவை:(
இவை புண்ணிய யாத்திரைக்குரியது)
பஸ்கா, புளிப்பில்லா அப்பப் பண்டிகை, வாரங்களின் விழா, கூடாரப் பண்டிகை ஆகியவை.
3. திருநூல் சட்ட ஒழுங்கிற்கு வெளியிலுள்ளவை:
பிரதிஷ்டை விழா, புரீம் விழா, நியாயப் பிரமாண விழாக்கள் முதலியவை:
பண்டிகையின் நோக்கம்:
பழைய ஏற்பாட்டுக் காலங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிதாவாகிய தேவன் பஸ்கா என்னும் பண்டிகையை தந்தார். இதை அவர்கள் தலைமுறை தலைமுறைதோறும் கொண்டாடி ஆசரித்து வந்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பஸ்காவை ஆசரித்தார். (மாற்கு: 14:12, லூக்கா: 22:1,8@ 2:41,42, 22:15 மத்தேயு: 26:17, யோவான்: 2:13, 12:1).
பிதாவாகிய தேவன், "...நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக" (யாத்திராகமம்: 13:10) என கூறினார். இதனால், இவர்கள் பஸ்கா பண்டிகையை வருஷந்தோறும் கொண்டாடி வந்தனர்.
"பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று கேட்டால், நீ அவனை நோக்கி: கர்த்தர் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்..." "கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக் குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றார்" (யாத்திராகமம்: 13:14-16)
எனவே,தேவன் கொண்டாடச் சொன்ன ஒவ்வொரு பண்டிகையிலும் தேவனுடைய வல்லமையும், தம்முடைய தேவ ஜனங்களுடைய மீட்பும், அதை அவர்கள் நினைத்து நன்றி செலுத்துதலும், கொண்டாட்டமும் இருக்கும்.பஸ்கா பண்டிகை மட்டும் அல்ல, புரிம் பண்டிகையும் தேவன் அவர்களுக்கு கொடுத்த மீட்பை வெளிப்படுத்துகிறது. (எஸ்தர்: 9:21,22).
பண்டிகையின் நோக்கம்:
தேவன் தம்முடைய ஜனங்களுக்கு கொடுத்ததான மீட்பு, ஆசீர்வாதம் ஆகியவற்றை நினைத்து, தேவனுக்கு நன்றி செலுத்தி, அதை நினைவு கூர்ந்து ஆராதிப்பதாகும். அதுமட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளுக்கும், வருங்கால சந்ததிகளுக்கும் தேவனுடைய மீட்பையும், அவரது வல்லமையும் வெளிப்பட, அதை அவர்களும் அறிந்து தேவனை நோக்கி ஜெபிக்க, துதிக்க ஏதுவாகும்.பண்டிகை கொண்டாட வேண்டிய அவசியமென்ன?:
இன்றை சூழ்நிலையில் இதை சற்று சிந்தித்து பார்ப்போம். இன்று இருக்கிற பெந்தேகொஸ்தே ஊழியக்காரர்கள் - "சினிமா பார்க்கக் கூடாது, கேளிக்கை கூடாது, வீண்பொழுது போக்குக் கூடாது, நகை போடக் கூடாது என சபைமக்கள் நடுவே போதிப்பது சரிதான். தவறல்ல. ஆனால், அதேசமயம், அதற்கான மாற்று வழிகளையும் சிந்தித்து செயல்பட்டால் நல்லது.
அதாவது சபையில் வருகிறவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் அல்ல. இந்துக்கள் மற்றும் புறஜாதியினரே. இவர்கள் இந்த கேளிக்கைகளை உடனே விட்டுவிடவும் மாட்டார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி ஒன்று வேண்டும். (அதற்காக புறஜாதிய வழக்கப்படி அவர்களைப்போல நாம் கொண்டாட இயலாது. தேவன் எதை அனுமதித்திருக்கிறாரோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்) நாம் வாழ்வதோ புறஜாதியார் மத்தியில்தான். நம்மைச் சுற்றிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டாடுகிற விழாக்களை நம்மவர்கள் காணத்தான் செய்கிறார்கள்.
விக்கிரகங்களை தொழுதுகொள்ளும் மக்கள் அவைகளால் ஒரு பலனுமில்லை என அறிந்திருந்தும் அதை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜீவனுள்ள தேவனை நாம் கொண்டாடக் கூடாது? என நம்மக்கள் நினைக்கத்தான் செய்வார்கள். இதன் விளைவுகளை பழைய ஏற்பாட்டு சம்பவங்களில் நாம் காண்கிறோம்.
(யாத்திராகமம்: 32:4,5).
ஜனங்களின் மனநிலையை அறிந்த தேவன் - இவர்கள் அந்நிய தேவர்களை நாடி சோரம் போகக் கூடாது என்பதற்காகத்தான் மாற்று ஏற்பாடாக - தேவன் பண்டிகைகளை ஏற்படுத்தினார் என கருதுகிறேன். வாசித்துப்பாருங்கள்: (யாத்திராகமம்: 34:22,23, உபாகமம்: 16:16, யாத்திராகமம்: 23:17,13,14).
நமக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு ஆராதனை ஒரு பண்டிகை போலத்தான். சிறப்பு தினங்கள், வாலிபர் கொண்டாட்டம், நற்செய்தி கொண்டாட்டம், விடுதலைப் பெருவிழாக்கள், குடும்ப ஆசீர்வாத கொண்டாட்டம், சிறப்பு உபவாசக் கூடுகை, சிறப்பு முகாம்கள், கருத்தரங்குகள், ஜெப முகாம், படைமுயற்சி கூட்டங்கள் ... போன்ற எத்தனையோ காரியங்கள் நமக்குண்டு. அடிக்கடி அதையெல்லாம் பண்டிகை கொண்டாட்டங்களைப்போல உற்சாகப்படுத்தி ஆத்துமாதாயம் செய்ய வேண்டும்.