பிறந்த நாள்:ஆகஸ்ட் 3 - 1949
பிறந்த ஊர்:சூசைபட்டி, மதுரை
பெற்றோர் வேலை:விவசாயம்
படித்தது:12ம் வகுப்பு (PUC) பின்பு வேதாகம கல்லூரியில் இணைந்து
கத்தோலிக்க போதகருக்கான படிப்பை தொடர்ந்தார்.
படித்த பள்ளி:செயின்ட் மேரீஸ் உயர் நிலைப்பள்ளி, மதுரை
பார்த்த வேலை:கத்தோலிக்க பாதிரியார்
பார்க்கிற வேலை:இயேசு கிறிஸ்துவின் ஊழியன்
கத்தோலிக்க பாதிரியாரான வருடம்:1974
இரட்சிக்கப்பட்ட வருடம்:1983
யார் மூலமாக?:சகோதிரர் DGS தினகரன் அவர்கள்.
வெளியிட்டுள
இசைத்தட்டுகள்:50க்கும் மேல்
பாடல்கள்:350 கும் மேல்
மொழிகள்: தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், சிங்களம் (இவர் பாடல்கள்
பலரால் பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)
இசை ஞானம்: தேவன் கொடுத்த வரம்
இருக்கும் இடம்: காளையர் கோயில், சிவகங்கை மாவட்டம்
திருமணம்: இல்லை
சொந்த நிலம்: இல்லை... இருக்கும் இடம் காளையார்கோவில் பகுதி மக்கள்
ஊழியத்திற்காக கொடுத்தது 5 ஏக்கர் நிலம்.
இடத்தின் பெயர்: ஜெபத்தொட்டம்
தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஓர் நபர். 2009ம்
ஆண்டு நான் மலேசியா தேசத்திற்கு சென்ற பொழுது அங்கொரு மேதடிஸ்ட்
ஆலயத்தில் ஆராதனையை முடித்த பின்னர் ஓர் சபை அங்கத்தினர் (தமிழர்) எங்களை
தங்களுடைய வாகனத்தில் கூட்டிக்கொண்டு போனார். அவர் இரட்சிக்கப்பட்ட
அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மனைவி, பிள்ளைகள் கைவிட்ட நிலைமையில்,
வருமானம் சரியாக இல்லாததால் தன் வாழ்க்கையை
முடித்துக்கொள்ள தன் காரை எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் ஓட்டினார்.
அப்போது யாரோ ஒருவர் கொடுத்த பெர்க்மான்ஸ் ஐயா பாட்டு இசைத்தட்டு
தட்டுபட்டது. அதில் உள்ள பாடலை கேட்க ஆரம்பித்தார். "விண்ணபத்தை
கேட்பவரே, என் கண்ணீரை காண்பவரே" என்கிற பாடலை கேட்டதும் கதறி அழுதார்.
இயேசுவை தேடினார். கண்டுகொண்டார்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. எங்கே ஓர் மூலையில் உள்ள
பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல், இன்னொரு நாட்டில் வாழ்ந்து
கொண்டிருக்கிற இந்து குடும்பத்தை சேர்ந்த, இயேசுவை யார் என்றே தெரியாத
நபரை இரட்சிக்கப்பட வைத்ததே..
இவருடைய ஆசை எப்படியாவது இறப்பதற்குள் பெர்க்மான்ஸ் அவர்களை பார்த்து
விடவேண்டும் என்பதுதான். இன்று குடும்பமாய் இயேசுவை ஏற்றுக்கொண்டு
சந்தோசமாய் உள்ளனர். நம்மால் கொடுக்கப்படும் செய்திகள், ஆலோசனைகள்
மட்டும் அல்ல. ஓர் சிறிய பாடல், தேவனை நேசிக்கும் உணர்வோடு நீங்கள்
எழுதும் அல்லது பாடும் ஒவ்வொரு பாடலும் ஒரு நபரை தேவனுக்குள்
வழிநடத்தும். ஒருவேளை ஐயா அவர்களுக்கு இந்நபரை தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் உலகில் உள்ள பல கோடிக்கணக்கான தமிழ் கிறிஸ்தவர்கள் இவரை மறக்கவே
முடியாது.
கிறிஸ்தவ கீர்த்தனைகள், பாமாலைகள் போன்ற சிறந்த பாடல்களுக்கு பிறகு
ஜிக்கி அம்மா, FMPB பாடல்கள், தினகரன் ஐயா பாடல்கள் என்று பல வந்தன.
இதில் FMPB பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. சகோதரர் பாடல்களும் பட்டி
தொட்டி எல்லாம் சிறப்புற்றது. இன்று திருச்சபைகளில், ஆலயங்களில்,
சபைகளில், ஜெபங்களில், கூட்டங்களில், இவருடைய பாடல்கள் இல்லாமல் இல்லை
என்ற நிலைமைக்கு வந்து விட்டது. இந்த ஓர் தனி நபருடைய சாதனை விண்ணை
தாண்டிவிட்டது. இவரை எடுத்து பயன்படுத்தின கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
யார் இந்த தந்தை பெர்க்மான்ஸ்? இவர் கத்தோலிக்க சபையில், சித்தாந்தத்தில்
ஊறிப்போன பெற்றோருக்கு மகனாய் பிரிந்தவர். சிறுவயது முதலே தாய்க்கு
மிகவும் கீழ்ப்படிந்து நடந்தபடியால்
கட்டுகொப்புடன் வாழ்ந்து வந்தார். தன்னை கத்தோலிக்க போதகராக அர்ப்பணித்து
கொண்ட இவர். தன்னுடைய படிப்பை கத்தோலிக்க கல்லூரியில் தொடர்ந்தார்.
இசைக்கருவி வாசிப்பதில் மிகவும் தேர்ந்த இவர் வாலிப வயதில் பாடல்கள் பாடி
அனைவரையும் மகிழ்விப்பார். கத்தோலிக்க குருப்பட்டத்திற்கு படித்தாலும்
பாவ மன்னிப்பு நிச்சயம் பெறாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தார்.
இவர் நாடகம் போடுவதில் ஆர்வம் கொண்டவர். ஒருமுறை மதுரையில் உள்ள ஓர் சிறு
கிராமத்தில் இரவு நாடகம் நடந்து
கொண்டிருந்தது, வாலிபர் மற்றும் கத்தோலிக்க போதகரான பெர்க்மான்ஸ் தான்
ஓர் காதல் இசைவுக்கு ராகம் மீட்டிகொண்டிருந்தார். புனிதமாக கருதவேண்டிய
போதகருக்கான அங்கியை போட்டு இசை வாசிப்பதை பார்த்த ஓர் வயதான தாயார்
பெர்க்மான்சிடம் வந்து "எயா.. இதற்க்கு தானா சாமியார் ஆனீர்கள்? எஞ்சாமி
இந்த கேவலத்திற்க்கா இசை போடுகிறீர்கள்?" என்று வேதனையுடன் கேட்டார்.
கடவுளே நேராக வந்து பேசினதை போல உணர்ந்தார். மனம் நொந்தவராய் நாடகத்தின்
பாதியிலேயே ஓடிவிட்டார்.
தேவன் தெளிவாக பேசுவதை உணர்ந்தார். "நீ பரலோகத்தை காட்ட வேண்டியவன். இந்த
அசிங்கத்தை காட்றியேடா? இது உனக்கு வேலையா? என்று தேவன் தன்னுடைய
ஊழியத்தை செய்ய அழைத்தார். அன்றே ரட்சிக்கபட்டார்.
1991 ம் வருடம் கத்தோலிக்க போதக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் அதை பற்றி கவலைபடாமல் இன்றும் தேவனுக்காக உழைத்து வருகிறார். இவர்
பாடல்களின் விசேஷம் பரிசுத்த வேதாகமத்தை மையமாக வைத்தே பாடல்களை
எழுதிவருகிறார். படிக்காத பாமரர் முதல் படித்த மேதைகள் வரை இவர் பாடல்கள்
பாடி தேவனை மகிமைபடுத்துகின்றனர். ஒரு முறை எங்கள் ஊழியத்தின் சார்பாக
ஆனைகட்டி மலைக்கு சென்றிருந்தோம். அங்கே மலை மேலே ஏறி செல்ல பாதை இல்லை.
செடி, மர வேர்களை பிடித்து ஏறினோம். மலை உச்சியில் ஓர் கிறிஸ்தவ சபை.
படிப்பறிவே இல்லாத அங்குள்ள மக்கள் சகோதரர் பாடலை பாடி தேவனை
ஆராதித்தபோது தேவன் சகோதரர் அவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்
என்று தெளிவாக அறிந்து கொண்டேன்.
இந்த சாட்சியை படிக்கும் சகோதர சகோதரிகளே.. நீங்கள் தாலந்து படைத்தவராக
இருக்கலாம். அதை தேவனுக்கென்று படைக்கும் போது நிச்சயம் தேவன் உங்களை
உயர்த்துவார். அவரிடம் உங்களை ஒப்புகொடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில்
தேவன் அளிக்கும் மாற்றத்தை உணர்வீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்
மாற்றம் கண்ட இவர் வாழ்க்கை
பலரின் வாழ்க்கையை மாற்றியது
உயிருண்டு இவர் பாடலில்
கொஞ்சும் இசை இனிமையில்
இவர் பாடல்கள் பாடாத சபையில்லை.