வைபவங்களில் 'எளிமையில்' திருப்தி காண வேண்டும்!
- சகரியா பூணன்
இன்று விசுவாசிகள், எந்த அளவிற்கு உலகப்பொருளுக்கு அடிமையாய்
இருக்கிறார்கள் என்பதைத் திருமண சமயங்களில் நாம் தெளிவாய் காணலாம். ஆம்,
திருமண வைபவங்களில் பொருளாசையையும், பேராசையையும் சிறிதுகூட
வெட்கமில்லாமல் இன்றைய விசுவாசிகள் பகிரங்கமாய் கொண்டுவந்து
கொட்டுகிறார்கள்!
கிட்டத்தட்ட ஒவ்வொரு ஸ்தாபனங்களிலும் உள்ள எல்லா
விசுவாசிகளும்மனமுவந்து கடைப்பிடிக்கும் "வரதட்சணை" விஷயத்தை சற்று
சிந்தித்துப் பாருங்கள்!
வரதட்சணை (Dowry) வேண்டுமென கேட்பவர்கள் கிறிஸ்துவின் நாமத்திற்கு
அபகீர்த்தியே கொண்டு வருகிறார்கள்!
இதுபோன்றவர்கள் ஒருக்காலும் ஆண்டவருடைய சீஷர்களாய் இருக்கவே முடியாது.
"எப்படியும் வரதட்சணை கொடுப்பார்கள்" என 'எதிர்பார்ப்பவர்களும்' இதே
ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்!!
மேலும், இன்று திருமண வைபவங்களில் பணம் எவ்வளவாய்
விரையமாக்கப்படுகிறது என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள்
திருமண வைபவத்தை நீங்கள் சிறப்பாய் செய்ய விரும்புவதில் தவறேதும் இல்லை.
உங்களிடம் போதுமான பணமிருந்தால் அவ்வாறு செய்யுங்கள்!
ஒரு திருமண வைபவத்தில், இயேசுவே முன்னின்று ஏராளமான திராட்சரசத்தை
ஜனங்களுக்கு உண்டு பண்ணிக்கொடுத்தார் என வாசிக்கிறோம். ஆனால், இதுபோன்ற
சிறப்பான திருமண வைபவத்தை நடத்துவதற்காக விசுவாசிகள்கடன் வாங்குவது தான்
கொடுமையானதாகும்.
நீங்கள் கடன் வாங்கி ஓர் டாம்பீகமான வைபவத்தை நடத்துவதைக் காட்டிலும்,
ஓர் எளிய திருமண நிகழ்ச்சியை நடத்துவதே சாலச் சிறந்ததாகும்.
ஆனால், அந்தோ இதுபோன்ற தருணங்களில் இன்று அநேகருடைய மனதில் "மற்றவர்கள்
நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?" என்ற எண்ணமே பெரியதாய் தோன்றுகிறது.
இவர்களில் ஒருவராவது இத்திருமண வைபவத்தைக் குறித்து"தேவன் என்ன
சொல்லுவார்?"என சிந்திப்பதேயில்லை.
இவர்கள் தேவனுடைய அபிப்பிராயத்திற்கு பயந்திருப்பதைக் காட்டிலும் மனுஷருடைய
அபிப்பிராயத்திற்கே பயந்திருக்கிறார்கள்!!
ஆ, இது கொடுமை!!
தேவன் நமக்குத் தந்தவைகளில்"போதுமென்ற மனதோடு"வாழ்வதும் தேபக்தியின்
மற்றொரு முக்கியமான
குணாதிசயமாகும்.
இயேசுவின் சீஷர்களாய் வாழும் அனைவரும், தேவன் அவர்களுக்குத் தந்த வருமானத்தின் வட்ட
எல்கைக்குள்தான் வாழவேண்டும். 'தன் பிள்ளைகள் எவ்வளவு சம்பாதிக்க
வேண்டும்' என்பதை தேவன் மாத்திரமே தீர்மானம் செய்கிறார்.
ஆகவே, அதிகமாய் சம்பாதிக்கும் மற்ற கிறிஸ்தவர்களோடு நம்மை ஒருபோதும்
ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. இவ்வாறு மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு
பார்ப்பவர்கள் 'புத்தியீனர்கள்' என்றே வேதாகமம் கூறுகிறது (2கொரிந்தியர்
10:12).
தேவன் நமக்கென்று தந்த வட்டஎல்கைக்குள் வாழ்வதை நடை முறையில்
கூறவேண்டுமென்றால், "மற்ற குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் ஒன்றை
வாங்கியிருக்கிறார்கள்" என்பதற்காக, அதை வாங்கத் திராணியில்லாத நாம் அதை
வாங்கிவிடக்கூடாது என்பதேயாகும்.
நம்மால் வாங்க முடிந்த அளவில் "திருப்தி காணவே"நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!!
ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசுவைப் பெற்றெடுத்த மரியாளின் மனப்பான்மையை
சற்று சிந்தித்துப் பாருங்கள்.
தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் வேளையில், ஒரு சுத்தமான அறையோ அல்லது ஓர்
மறைவான இடமோ கூட அவளுக்கு இல்லை!!
இருப்பினும், அவள் அதற்காக குறைகூறவேயில்லை. மாறாக, அவள் தன்னை தாழ்த்தி,
தேவன் தனக்கென்று நியமித்த பங்கை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டாள்!!
இதுவே, நம் வட்டஎல்கைக்குள் போதுமென்ற மனதோடு நாம் வாழ்வதற்குரிய பொருளாகும்.!