கருப்பு தேவதை

ராஜூ மிகவும் சோர்வடைந்தவனாக இருந்தான். அவனுக்கு இன்னும் வேலை
கிடைக்கவில்லை. வீட்டிலே பணக்கஷ்டம்.

காலை முதல் மாலை வரை பல்வேறு முயற்சிகளை செய்துவிட்டான். ஆனால், எதுவும்
பயனளிக்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியாதவனாக, இறைவனிடம் மன்றாடினான்.
தன் மன பாரங்களை எல்லாம் அவர் முன்பாக வைத்தான்.

இறுதியாக, அவன் அறையின் விளக்கு வெளிச்சத்தின் வழியாக ஒரு இருள் உள்ளே நுழைந்தது.

கருங்கல்லில் செதுக்கிய சிலை போன்ற ஒரு உருவம் அவனுக்கு முன்பாக வந்து
நின்றது. அண்டங்காக்கையை போன்ற சிறகுகள் அதற்கு இருந்தது.

"பயப்படாதே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!" என்றது அந்த உருவம்.

ராஜூ திடுக்கிட்டான்.
"யார் நீ? என்னை ஒன்றும் செய்துவிடாதே! நான் சாமி பிள்ளை!" என்றான்.

"நல்லது, என்னையும் சாமி தான் அனுப்பினார், உனக்கு உதவவே நான் வந்தேன்!"
என்றது அந்த உருவம்

"உதவுவதற்கா? ச்சீ அப்பாலே போ சாத்தானே !"
என்றான் ராஜூ

"மானிடா! என்னை ஏன் திட்டுகிறாய்! உனக்கு உதவத்தானே வந்திருக்கிறேன்!"
என்று மீண்டும் கூறியது அந்த உருவம்

"இல்லை, நீ சாத்தானின் தூதன், உன் உருவத்தை பார்த்தாலே எனக்கு
தெரிகிறது!" என்றான் ராஜூ

"ஹா! ஹா! ஹா!" என்று ஒரு மூதாட்டியைப் போல் சிரித்துவிட்டு, "முதலில்
என்னை சாத்தான் என்றாய், பின்னர் என்னை சாத்தானின் தூதன் என்கிறாய். நான்
உனக்கு எப்படி எதிரியானேன் மானிடா! நீ தானே உதவி கேட்டாய், அதனால் தானே
நான் வந்தேன்" என்றது அந்த உருவம்

"கடவுளுடைய தூதர்கள் ஒளியின் தூதர்கள், உன்னைப் போல இப்படி கருப்பாக
இருக்க மாட்டார்கள், ஒரு திடகாத்திரமான வாலிபனைப் போல் இருப்பார்கள்,
அல்லது இளம் பெண்ணைப் போல் இருப்பார்கள், இப்படி ஒரு மூதாட்டியைப் போல்
இருக்க மாட்டார்கள்!" என்றான் ராஜூ

"அட மானிடா! உன்னை சுற்றிப் பார், கருப்பு என்பது இயற்கை, அண்டத்தில்
உள்ள சிறு துளிகள் மட்டுமே ஒளி உடைய நட்சத்திரங்களும், வின்மீன்களும்.
மீதமுள்ள அண்டம் முழுவதும் கருமைதானே. ஒளியை உருவாக்கும் முன்பு கடவுள்
என்னை உருவாக்கினார். குழந்தையாய் பிறக்கும் அனைவரும் முதுமையை நோக்கியே
செல்கின்றனர், என்னை நோக்கியே நகர்கிறது உங்கள் பயணம்"

"நீ நன்றாக பேசுகிறாய் கருப்பு உருவமே! ஆனால் நீ ஒளியின் தூதன் இல்லை
என்பதை ஒப்புக்கொள்கிறாயா? நீ சாத்தானுடைய தூதுவன் தானே !"

"யூதருக்கு பாபிலோனியர் சாத்தான்,

ஆதி கிறிஸ்தவருக்கு யூதர்கள் சாத்தான்,

இயேசுவை எதிர்த்து பேசிய போது பேதுரு ஒரு சாத்தான்,

இயேசுவை கொல்ல திட்டமிட்ட யூதாஸ் அவருடைய சாத்தான்.

மொத்தத்தில் தீமையே சாத்தான், எதிரியே சாத்தான்.

கருப்பு என்பது சாத்தான் அல்ல, கடவுளின் முதல் படைப்பு!" என்றது அந்த
கருப்பு உருவம்

"உன் நயவஞ்சகம் எனக்கு புரிகிறது, நீ வேதத்தை புரட்டுவது தெளிவாகவே
புரிகிறது, ச்சீ என்னைவிட்டு அகன்று போ கருப்பு பிசாசே!"

"சரி மானிடா ! நான் சென்றுவிடுகிறேன். உன் இரவுக்கு உறக்கத்தையும், உன்
கூந்தலுக்கு கருமையையும், கருப்பு நிற செலவாணி காகிதத்தையும், நாளை நீ
செல்லும் பாதைக்கு நிழலையும் கொடுக்கும்படி கடவுள் என்னை அனுப்பினார்,
ஆனால் நீ என்னை போகச்சொல்கிறாய், நான் போகிறேன். இனி நீ கண்ணை மூடினாலும்
என்னை காண மாட்டாய்! வெயிலின் கொடுமையில் நான் உன் அருகே வரமாட்டேன்,
கருமையும் கருப்பு மையும் உன் காகிதங்களில் இருப்பதில்லை!" என்று
கூறிவிட்டு விண்ணை நோக்கி பறந்தது அந்த உருவம்.

"அப்பாடா! சாத்தான் போய் விட்டது என்று கண்களை மூடினான் ராஜூ. அவன்
கண்களுக்குள் எரிச்சலூட்டும் சூரிய ஒளிபோல் பிரகாசித்தது"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.