குருத்து ஞாயிறு Palm Sunday Tamil Sermon

குருத்து ஞாயிறு
Palm Sunday Tamil Sermon

ஒரு தந்தையும் மகனும் பிழைப்பு தேடி காட்டு வழியே பயணம் செய்தனர். காட்டு
வழியில் கற்களும் முட்களும் சிறுவனின் கால்களை பதம் பார்த்தன. கால்களில்
ஏற்பட்ட வலி, அவனது வேகத்தை குறைத்தது. அதோடு பசியும், களைப்பும்,
சோர்வும் வாட்டின.

தந்தை அவனை சிறிது நேரம் அமர வைத்தார். மகனின் வலியை சகிக்க முடியாத
தந்தை, அவனை சிறிதுநேரம் தோளில் தாங்கினார். அவருக்கும் களைப்பு தட்டவே,
தன் மகனிடம் கூறினார், தம்பி நான் முதலில் நடக்கிறேன் பிறகு நீ என்
பாதச்சுவடுகளை, தடங்களை பின்பற்றி அதிலேயே உன் கால்களையும் வைத்து நடந்த
வா.
அப்போது கற்களும், முட்களும் உன் கால்களைத் தீண்டாது என்று கூறி தந்தை
முன் நடந்த கற்களின் கடுமையையும், முட்களின் கொடுமையையும் தாங்கிக்கொண்டு
மகனை பத்திரமாக அழைத்துச் சென்றார்.

தன் சுகத்தை, மகிழ்ச்சியை, சந்தோசத்தை ஏன் தன்னையே மறந்து, தன் பிள்ளை
கஷ்டப்படாமல் கரை சேர கொடுமைகளை
தாங்கினார் தந்தை.

அதுபோலதான் தன் அவஸ்தை, பெருமையை, தெய்வம் என்ற நிலையை வலிந்து
பிடித்துக் கொள்ளாமல் (பிலிப் 2, 6-11) ஒரு அடிமை போல, நாமெல்லாம்
கஷ்டப்படாமல் விண்ணகம் சேர துன்ப, துயர, கரடுமுரடான வழி நடந்து நம்மை
மீட்டவர்தான் இயேசு.

அவரின் பாடுகளின் துவக்கம் தான் இந்த
குருத்து ஞாயிறு.

நமக்காக பாடுகள், வேதனைகள், துன்பங்கள் பட, ஏன் சாவதற்கு இயேசு
தயாராகிறார் என்பதை நினைவுபடுத்துகிறது
இந்த நாள்.

நமக்காக கொல்லப்பட கழுதை மீது
ஏறிச்செல்கிறார்.

திருவிழாவிற்கு சமையலுக்காய் கொல்லப்படப்போகும் ஆடு எவ்வாறு மாலை
மரியாதையுடன் மந்திரிக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறதோ, அப்படி மேள
தாளத்துடன், ஓசான்னா பாடி அழைத்துச் செல்லப்படுகிறார் இயேசு.

என்னே இயேசுவின் துணிச்சல் !

அவரின் பாடுகள் நம்மீது அவர்கொண்ட பாசத்தின் வெளிப்பாடு. அவரின் பாடுகள்
அவர்மீது திணிக்கபட்டது அல்ல. அவராக விரும்பி ஏற்றுக்கொண்டது.

நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்
(யோ 10,11) என்று சொல்லி மனமுவந்து பாடுகளை, சாவைச் சந்தித்தவர் இயேசு.

தான் கொண்ட
இலட்சியத்திற்காக, தான் வந்த நோக்கத்திற்காக, துன்பங்களைக் கண்டு
பின்வாங்கவில்லை. ஓடி ஒளிந்து கொள்ளவில்லை எதிர்த்துப் பேசவில்லை, அழுது
புலம்பித்
தள்ளவில்லை அவர்.

ஆனால் அவைகளைச் சந்திக்க கழுதைமீது ஏறுகிறார்.

நான் கிளர்ந்தெழவில்லை, விலகிச் செல்லவுமில்லை அடிப்போருக்கு என்
முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்.
நிந்தனை செய்வோர்க்கும், காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை
மறைத்துக்கொள்ளவில்லை (எசா 50, 6).

என்னே இயேசுவின் துணிச்சல்.

எருசலேமில் பாடுகள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். கொன்று
விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். இன்று குருத்தோலை ஏந்தி ஓசான்னா
பாடுபவர்கள் ஓரிரு நாட்களில் இவனை சிலுவையில் அறையும் என்று கத்துவார்கள்
என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தும் துணிந்து செல்கிறார். ஏன்?

இலட்சியத்தை நிறைவேற்ற, நாம் மீட்படைந்து விண்ணகம் சேர. யாராவது பாடுகள்
படுவதற்கு, துன்பப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு ஆரவாரத்தோடு,
மகிழ்ச்சியோடு பவனி செல்வார்களா? ஆனால் இயேசு சென்றாரே, அந்த துணிச்சல்
நம்மிடம் இருக்கிறதா?

துன்ப துயரங்கள், பிரச்சனைகள் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கிறோமே சீடர்களைப் போல
(மாற் 14, 50-52).

துன்பங்களைத் தாங்குபவன், சந்திப்பவன், எதிர்கொள்பவன் தான் என் சீடன்
என்பதை இயேசு பலமறை உரைத்திருக்கிறாரே
(மத் 16,24),
யோ 12, 24, 15,13, 16,33).

துன்பங்களைத் தாங்க தூயவர் இயேசு துணிச்சலுடன் பயணிக்கிறார். இதுவே
குருத்து ஞாயிறு துணிந்து நடக்க நாம் தயாரா?

இதுவே குருத்து ஞாயிறு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.