பாபிலோனின் தொங்கும் தோட்டம்

பாபிலோனின் தொங்கும் தோட்டம்

பண்டைய உலக அதிசயங்களில் இரண்டாவது அதிசயமாக சொல்லப்படுகிறது பாபிலோனின் தொங்கும் தோட்டம். இது இன்றைய ஈராக் தேசத்தில், பாக்தாத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில், யூப்ரடீஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் அல் ஹில்லாவுக்கு அருகே இருந்ததாகக் கூறப்படுகிறது. பாபிலோனிய தொங்கு தோட்டத்தை கி.மு. 600–ம் ஆண்டில் அமைத்தவர், மன்னர் இரண்டாம் நெபுகத் நாசர். இவர் பாபிலோனிய சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி சிறந்த முறையில் ஆட்சி புரிந்தவர்.

பாபிலோனிய வம்சத்தின் குறிப்பிடத்தக்க மன்னனாக விளங்கினார் இரண்டாம் நெபுகத் நாசர். பாபிலோனிய அரசர்கள் வாழ்ந்து வந்த அரண்மனையைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக மிக நீளமான சுவர் ஒன்று கட்டப்பட்டது.

வரலாற்று அறிஞர் ஹிரோடோட்டஸ் அந்த சுவர் பற்றி குறிப்பிடும் போது சுமார் 56 மைல்கள் நீளமும், 320 அடி உயரமும் கொண்டதாக கூறியுள்ளார். அதனால்தான், ஆன்டிபாட்டரின் முதல் உலக அதிசய பட்டியலில் பாபிலோனிய பெருஞ்சுவர் மற்றும் தொங்கும் தோட்டம் என்று சேர்த்தே பதிவு செய்திருந்தார்.

ஆனால் அகழ்வாராய்ச்சியாளர்களி ன் தொடர்ந்த ஆய்வுகளில் கிடைத்த சான்றுகள் படி பார்த்தால், அதிகபட்சம் அந்த சுவரின் நீளம் 10 மைல்கள் தான் என்றும், ஹிரோடோட்டஸ் குறிப்பிட்டதுபோல அத்தனை உயரமும் இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியானது. ஹிரோடோட்டஸ், பாபிலோன் நகரம் அதன் காலத்தில் வேறெந்த நகரையும் விட இணையற்ற வனப்புடன் கூடிய நகராக விளங்கியதாகக் குறிப்பிடுகிறார். பாபெல் தேசத்தை நிம்ரோத் எனும் மன்னன் நிர்மாணித்தான்.

வேதாகமக் குறிப்புகள் படி நிம்ரோத் தான் உலகின் முதல் அரசாட்சியை நிறுவிய மன்னன். 'பாபெல்' என்ற சொல்லுக்கு 'கடவுளின் நுழைவாயில்' என்று

பொருள். பின்னர் அது கிரேக்கப் பதமான 'பாபிலோன்' என்ற சொல்லில் அழைக்கப்பட்டது. நியோபாபிலோனிய வம்சத்தின் அரசன் நெபுபோல்சாரின் மறைவுக்குப் பிறகு கி.மு. 605–ல் முடிசூட்டிக் கொண்ட நெபுகத் நாசர், தனது தீரம் மிக்க போர்த்திறனால், பாபிலோனிய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டே சென்றான். நெபுகத் நாசர் என்பதற்கு 'ஞானத்தின் முதல் மகனைக் காப்பவன்' என்று பொருள்.

பாபிலோனின் காக்கும் கடவுளான மர்தூத்தின் மகன் என்றும் புகழப்படுகிறார். நெபுகத் நாசருக்கு 'விதிகளை வென்றவன்' என்ற பொருள்படும்படியான 'பகத் நாசர்' என்ற பெயரும் உண்டு. யூதர்களின் அரசனாகிய யோயாக்கீமை தோற்கடித்து அவனைக் கப்பம் கட்ட வைத்தான். ஆனால் சில மாதங்களிலேயே அவன் கலகம் செய்த காரணத்தினால் அவனைக் கொன்று விட்டு, அவனது மகன் யோயாக்கீனை யூத அரசனாக முடி சூட வைத்தான். அவனும் சில வருடங்கள் கழித்து நாசரை எதிர்த்து கலகம் செய்ததனால், அவனைக் கொன்று விட்டு, அவனது சித்தப்பா சிதேக்கியாவை அரசனாக்கினான். ஒன்பது வருடகால இடைவெளிக்குப் பிறகு சிதேக்கியாவின் போக்குகள் சரியில்லாமல் போகவே அவனையும் அவனது சந்ததியினரையும் அழித்து விட்டு அவர்களது நாட்டை தனது தேசத்துடன் இணைத்துக் கொண்டான்.

அந்த இறுதிப் போரின் போதுதான், யூதர்களின் புனிதக் கோயிலான பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சாலமன் ஆலயத்தை அழித்தான். யூத தேசத்தைப் போலவே பாபிலோனுக்கு அருகிலிருந்த மெதியன் அரசோடு சதா சண்டை மூளும் சூழல் இருந்தது. தொடர்ந்து போர் அறிவிப்பு தருவதினால், நாட்டின் நிதிநிலைமை மோச மாகிவிடும் என்பதாலும், வீரர்கள் சோர்வுற்று விடுவார்கள் என்பதாலும், மெதியன் அரசனின் மகளை ராஜதந்திர நடவடிக்கையாக மணம் செய்து கொண்டான். அமைத்தியாஸ்என்று அழைக்கப்பட்ட அந்த இளவரசியின் மீது மிகுந்த காதலுடன் இருந்தான் நெபுகத் நாசர்.

மலைப்பாங்கான இடமான மெதிய தேசம் இயற்கையிலேயே வனப்பு மிக்கது. எங்கு பார்த்தாலும் பசுமை கொஞ்சும் செடி கொடிகள்... அபூர்வமான கனிகள் கொழிக்கும் மரங்கள், பனி போர்த்தியபடி புன்னகைத்துக் கொண்டிருக்கும் மலர்கள் என்று இயற்கை சூழ வாழ்ந்து வந்த அமைத்தீஸ் பாபிலோனிய தேசம் வந்ததும் மிரண்டு போனாள்.

அரண்மனைகள், கட்டிடங்கள் என்று அதன் எழில் தோற்றம் பார்ப்பவர்களை எல்லாம் கவர்ந்தாலும், அமைத்தீஸுக்கு தனது தாய் தேசமான மெதியன் போல் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. சதா தனது தேசத்தையும் தாய் வீட்டையும் நினைத்தபடி சோம்பிக்

கிடந்த அமைத்தீஸின் மன வாட்டத்தை போக்குவதற்காக, நெபுகத் நாசர் செயற்கையான மலைப் பிரதேசத்தையும், தோட்டத்தையும் உருவாக்க நினைத்து கட்டியது தான் பாபிலோனிய தொங்கும் தோட்டம். கி.மு 64 முதல் கி.பி. 21 வரை வாழ்ந்த 'ஸ்ட்ராபோ' எனும் ரோம் நகரைச்சார்ந்த புவியியல் நிபுணர் பாபிலோன் தோட்டத்தின் பிரம்மாண்ட அளவுகள் பற்றி குறிப்பிடுகையில் ஒவ்வொரு பக்கத்திற்கும் 382 அடிகள் நீளம் கொண்ட சதுர வடிவிலான அந்த தோட்டத்தின் உள்ளே சுற்றிவர 32 அடிகள் கொண்ட சுற்றுப்பாதை இருந்தது. சுமார் நான்கு தேர்கள் ஒரே நேரத்தில் சுற்றி வருமளவு அகலமானதாக அந்த பாதை இருந்தது. தொங்கும் தோட்டம் என்று சொல்லப்படுவதால் ஏதோ ஒரு கயிற்றில் கட்டப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகக் கருத வேண்டாம்.

கிரேக்கச் சொல் 'கிரமடோஸ்' மற்றும் லத்தீன் சொல் 'பென்சிலிஸ்' ஆகியவற்றின் நேரடியான மொழிபெயர்ப்பாக 'தொங்கும் தோட்டம்' என்று குறிப்பிட்டு வந்தனர். அதன் அமைப்பை வைத்துச் சொல்வதனால், இன்றைய நவீன யுகத்தின் மாடிப்பூங்கா என்று குறிப்பிடலாம். உள்கூட்டில் வெற்றிடமான உருளை வடிவ நீளமான தூண்களை பூமியிலிருந்து நிறுவி அதனுள் ஆற்று

மணலை நிரப்பி மேல் மட்டத்தில் கற்களாலும் பளிங்கினாலும் ஆன தளத்தை உருவாக்கி, அதன் மீது செடிகளையும் மரக் கன்றுகளையும் நட்டு வைத்து அதற்குத் தேவையான நீர்ப்பாசனத்துக்கு யூப்ரட்டீஸ் நதியிலிருந்து தண்ணீரை அடுக்குக் குழாயின் மூலம் சக்கரங்கள், ஷடூஃப் என்றழைக்கப்படும் சங்கிலி போன்றதொரு அமைப்பின் மூலம் சிறிய வாளிகளால் இறைக்கப்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்கள் காரணமாக பாபிலோனிய தொங்கும் தோட்டம் முற்றிலும் அழிந்து விட்டது. அதனுடைய சுவடுகள் கூட இப்பொழுது கண்டுபிடிக்கப் படவில்லை. ஜெர்மனைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் கோல்மே சுமார் 14 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு 1899–ம் ஆண்டு பாபிலோனிய பெருஞ்சுவரின் சில பகுதிகளையும் அரண்மனையின் சில அறைகளையும் அகழ்வாராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தினார். யூப்ரட்டீஸ் நதியிலிருந்து தொங்கும் தோட்டம் இருந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு, இடையே உள்ள தூரம் மிக அதிகம் என்பதால் அங்கிருந்து நீர்ப்பாசனம் செய்வதென்பது இயலாத காரியம் என்று ஒருசிலர் சுட்டிக் காட்டி பாபிலோனிய தொங்கும்
தோட்டம் நிஜமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

அதுவொரு புராண இதிகாசக் கற்பனை என்றும் சந்தேகத்தை எழுப்புகிறார்கள். எப்படியிருந்தாலும், காதலின் மற்றொரு சின்னமான பாபிலோனின் தொங்கும் தோட்டம் உலக அதிசயப் பட்டியலில் இடம் பிடித்து விட்டது.

செயற்கை தொங்கும் தோட்டம்...

எல்லாவற்றையும் பிரதி எடுக்கத் துடிக்கும் இன்றைய நவீன யுகம், பாபிலோனின் தொங்கும் தோட்டம் போன்றதொரு பிரம்மாண்டமான மாடிப்பூங்காவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னியின் புற நகரான 'பாரங்காரு' ஒரு துறைமுக நகரம். வணிக ரீதியாக பல தேசத்தைச்சார்ந்த கப்பல்கள் அன்றாடம் அங்கு வந்து போன வண்ணம் உள்ளன. பெரும் செல்வந்தர்களையும், தொழிலதிபர்களையும், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் நோக்கில், துறைமுகம் அருகே ஒரு செயற்கை தொங்கும் தோட்டத்தை நிர்மாணிக்கும் முயற்சியில் அந்த நகர மேம்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

கட்டியது யார்?

பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை செமிராசின் தோட்டம் என்று குறிப்பிடுவோர் சிலர். அசிரியன் பேரரசி செமிராஸ் என்பவரால் இது உருவாக்கப்பட்டது என்று ஒரு சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதற்குப் போதுமான வரலாற்றுச் சான்றுகள் எதுவுமில்லை. அதே நேரத்தில், நெபுகத் நாசரால் தான் இது கட்டப்பட்டது என்பதற்கு, கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் சில புராண இதிகாசங்கள் சாட்சியாக இருக்கின்றன.

கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோஸஃபஸ் தனது ஃபெரோஸஸ் எனும் காவியத்தில் தொங்கும் தோட்டம் பற்றிக்குறிப்பிட்டிருக்க ிறார். டயோடோரஸ் தனது 'ஸ்டேசியஸ் ஸ்நீட்டஸ்' எனும் நூலிலும், கியூட்டஸ் க்யூரியஸ் தனது 'அலெக்ஸாண்டர் தி கிரேட்' எனும் வரலாற்று நூலிலும் நெபுகத் நாசரால் தொங்கும் தோட்டம் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். வருங்காலத்தை முன்கூட்டியே தெரிவித்ததாக கூறப்படும் தீர்க்கதரிசி டேனியல், நாசரின் அரண்மனையில் வேலை பார்த்திருந்தார். அவரது குறிப்புகளிலும் நாசரால் தான் தொங்கும் தோட்டம் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், ஹிரோடோடஸ் தனது குறிப்புகளில் பாபிலோனிய அரண்மனையைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருந்த பாபிலோனியப் பெருஞ்சுவர் பற்றியும் பாபிலோனிய நகரின் பேரழகைப் பற்றியும் விரிவாக எழுதியிருந்தாலும், தொங்கும் தோட்டம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை. 

நன்றி: டெய்லி தந்தி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.