இயேசு நமக்காக வெளிப்பட்டார்!
கே.ப.ஆபிரகாம்
பாகம் 2
2. இயேசு பிறந்ததினால் கிருபை வெளிப்பட்டது!
“நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்”(2தீமோ.1:10).
ஆதாமின் பாவத்தினால் ஆக்கினைக்குள்ளான மனுக்குலம் மரணத்தை சம்பாதித்ததுமல்லாமல் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை காண இயலாமல் தவித்தது. ஆனால் இயேசு பிறந்ததினால் தகுதியற்ற நமக்கு அவரது கிருபை வெளிப்பட்டது.“அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். … கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின”(யோவா.1:16,17) என யோவான் அப்போஸ்தலன் எழுதுகிறார். இயேசு பிறக்கும் போது நம்மை மீட்கும்படியான கிருபையும் வெளிப்பட்டது. அவரது கிருபை ஒன்றே நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் பாவபிரமாணத்திலிருந்தும் விடுதலையாக்கிற்று. ஆகவேதான் சிமியோன்,“உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது”என்று பாடினார். இதை வாசிக்கும் அன்பானவர்களே, தேவன் நம்மேல் வைத்த கிருபை பெரியது, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம் அவரது கிருபையைக் கொண்டாடுவோம்.
3. இயேசு பிறந்ததினால் நித்தியஜீவன் வெளிப்பட்டது!
“அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்”(1யோவா.1:2).
ஆதி தகப்பன் ஆதாமின் கீழ்ப்படியாமையினாலே மரணம் நம்மை ஆண்டுகொண்டது. மனிதன் பாவத்தினாலே நித்திய ஆக்கினையை அடைகிறான். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பிறந்ததினால் நமக்கு நித்திய ஜீவன் வெளிப்பட்டது. அவரை விசுவாசிக்கிற எவருக்கும் தேவன் நித்திய ஜீவனை வாக்குப் பண்ணியிருக்கிறார்.“குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார் இயேசு”(யோவா.6:40). நாம் பெற்றிருக்கிற இந்த வாக்குத்தத்தம் எவ்வளவு மேன்மையானதாயிருக்கிறது. இது இயேசு பாலகனாய் இவ்வுலகில் பிறந்ததினால் நமக்கு வெளிப்பட்ட ஆசீர்வாதமாகும். இந்த நித்திய ஜீவனை பெறுவதற்காக இவ்வுலக மனிதன் எத்தனையோ அச்சாரங்களை அனுசரித்தும் தன்னை வருத்திக் கொண்டும் அதை அடையாமற் போகிறான். எந்தவொரு கிரியையினாலும் இதை அடையவே முடியாது. ஆனால் இயேசு தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனை ஈவாக வழங்குகிறார். அதாவது நித்திய நித்தியமாய் அவரோடிருக்கும் பாக்கியத்தைக் கொடுக்கிறார். இப்பாக்கியத்தை அவரோடு அறையப்பட்ட அந்த கள்ளன் தனது வாழ்நாளின் கடைசி வேளையில் பெற்றான். இக்கிறிஸ்துமஸ் நாட்களில் அவரிடத்தில் நாம் பெற்ற நித்திய ஜீவனை, இதுவரை இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலிருக்கிற மற்றவர்களுக்கு அறிவிப்போமா! இது ஒன்றே மெய்யான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாய் இருக்கும்.“இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன்”(ரோம.6:22).
4. இயேசு பிறந்ததினால் பாவமன்னிப்பாகிய மீட்பு வெளிப்பட்டது!
“அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரி டத்தில் பாவமில்லை”(1யோவா.3:5).
இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பில்லை என்பது மாறாத சட்டமாயிருந்தது. காளை, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தினாலே பாவம் நிவிர்த்தி செய்யப்படவில்லை. பலியினாலும் காணிக்கையினாலும் மீட்பின் கிரயத்தை செலுத்த இயலவில்லை. மீட்பின் கிரயத்தைச் செலுத்தும்படியாகவும் கிருபாதார பலியாகவும் தன்னையே ஒப்புக்கொடுத்து இயேசு இவ்வுலகில் வந்தார்.“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்”(பிலி.2:6,7). அவர் பாவமறியாதவர், தமது பரிசுத்த இரத்தத்தை நமக்காக சிந்தினார். அதினாலேயே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. இயேசு பிறந்ததினால் பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு வெளிப்பட்டது.
எனவே நாம் விடுதலைப் பெற்று இன்று தேவனோடு ஒப்புரவானோம். நாம் அவரது பிள்ளைகளாகக் கூடிய சிலாக்கியத்தையும்‘அப்பா, பிதாவே’என்று அவரை அழைக்கக் கூடிய பாக்கியத்தையும் பெற்றோம். இதுவே கிறிஸ்துமஸின் சந்தோஷம்!
