இந்த ஐந்தாவது வார்த்தையை நாம் நான்கு தலைப்புகளின் கீழ் இங்கு தியானிப்போம்.
1.தாகத்தின் பொது விளக்கம்
2.வேதத்தில் தாகம்
3.இயேசுவின் தாகம்
4.நித்திய தாகம்
I. தாகத்தின் பொது விளக்கம்
*.''தாகம்'' என்ற வார்த்தை ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு, ஆர்வம் போன்ற
பல வார்த்தைகளில் தம் பொருளை
வெளிப்படுத்துகின்றது.
*.இல்லாத ஒன்றை அடைவதற்கான ஒரு உள் உந்து சக்தியை, ''தாகம்'' என்று
பொதுவாக கூறலாம்.
*.பொதுவாக சரீரத்துக்கு தேவையான தண்ணீருக்காக, சரீரத்தில் உண்டாகும் ஒரு
சரீர உணர்ச்சியை ''தண்ணீருக்கான தாகம்'' என்கிறோம்.
மூன்று வகை தாகங்கள்
1.தண்ணீருக்கான சரீர தாகம்
2.இல்லாத ஒன்றை அடைய ஏங்கும் மன தாகம்
3.ஆத்மாவுக்கு தேவையான ஆத்மீக தாகம்
II. வேதத்தில் தாகம்
வேதத்தில் பொதுவாக, இரண்டு வகை தாகங்களைப் பற்றி, சொல்லப்படுவதைப் பார்க்கிறோம்.
1.சரீர தாகம்
2.ஆத்மீக தாகம்
இவற்றை பற்றி, சுருக்கமாக இங்கே காண்போம்.
1. பழைய ஏற்பாட்டில், சரீர தாகம்
1. பொது மக்களின் தாகம் :
*.வனாந்தரத்தில் தண்ணீர் இல்லாததால், மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.
*."நீர் எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் தண்ணீர்
தாகத்தினால் கொன்று போட, எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர்?"
என்றார்கள்
(யாத் 17:3).
*.இஸ்ரவேல் ஜனங்களின் துன்பத்தைப் பற்றி கூறும் போது, ஏசாயா இவவாறு கூறுவார்.
*."அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்" (ஏசா 5:13).
*.அதுபோலவே தேவன் தம் மக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணும்போது, "அவர்கள்
இனி தாகமடையார்" என்று கூறினார். (ஏசா 49:10).
*.மேலும் 2 நாள் 32:11, ஏசா 41:17, 48:21, 55:1, 2சாமு 17:29, சங் 107:5
ஆகிய இடங்களில் பொது மக்களின் சரீர தாகத்தைப்பற்றி பழைய ஏற்பாடு
கூறுகிறது.
2. தனி மனிதர்களின் சரீர தாகம் :
*.சிம்சோன் தன்னுடைய தாகத்தைப் பற்றி கூறும் போது, "இப்பொழுது நான்
தாகத்தினால் செத்து, விருத்தசேதனமில்லாதவர்களின் கையிலே விழ வேண்டுமோ?"
என்றார் (நியா 15:18).
*.சிசோரா, யாகேலை நோக்கி "குடிக்க எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா; நான்
தாகமாயிருக்கிறேன்" என்றார் (நியா 4: 19).
*.தாவீது தன் தாகத்தைப் பற்றி கூறிய போது, "என் தாகத்துக்கு காடியை
குடிக்கக் கொடுத்தார்கள்" என்றார் (சங் 69: 21).
3. பூமியின் தாகம் :
*.மனிதனின் சரீர தாகத்தைப் பற்றி மட்டுமல்லாமல், பூமியின் தாகத்தையும்
பழைய ஏற்பாடு கூறுகிறது.
*.ஏசாயா 35:7--ல், தாகமுற்ற நிலத்தை "வெட்டாந்தரை" என்றும், ஏசாயா 44:3 –
ல் தாகமுற்ற நிலத்தை "வறண்ட நிலம்" என்றும் பைபிள் கூறுகிறது.
4. உயிரினங்களின் தாகம் :
*.சங் 104: 11, "காட்டிலுள்ள கழுதைகளின் தாகத்தைப்" பற்றி கூறுகிறது.
*.சங் 50: 2, "நீரில் உள்ள மீன்களின் தாகத்தைப்" பற்றி கூறுகிறது.
2. பழைய ஏற்பாட்டில் ஆத்மீக தாகம்
*.சங்கீதக்காரருக்குண்டான ஆத்மீகத் தாகத்தைப் பற்றி, அவர் தம்முடைய சங்கீதங்களில்
குறிப்பிடுகின்றார்.
*."என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது" (சங் 42:2).
*."என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது" (சங் 63:1).
*."வறண்ட நிலத்தைப் போல், என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது" (சங் 143:6)
3. புதிய ஏற்பாட்டில் சரீர தாகம்
*.சமாரியப் பெண்ணிடம், இயேசு கூறும் போது "இந்த தண்ணீரைக்
குடிக்கிறவனுக்கு, மறுபடியும் தாகம் உண்டாகும்" என்றார் (யோவா 4: 13).
*.தீர்வை நாளுக்காக ஆயத்தமாக இருந்தவர்களைப் பார்த்து, "நான்
தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்" என்றார் (மத் 25: 35).
*.மேலும் சரீர தாகத்தைப் பற்றி, புதிய ஏற்பாட்டில் ரோமர் 12: 20, 1கொரி
4:11, 2கொரி 11:7, வெளி 7:16 ஆகிய வசனங்களில் பார்க்கிறோம்.
4. புதிய ஏற்பாட்டில் ஆத்மீக தாகம்
*.சமாரியப் பெண்ணிடம், இயேசு கூறுகையில் "நான் கொடுக்கும் தண்ணீரைக்
குடிக்கிறவனுக்கு ஒருபோதும் தாகம் உண்டாகாது" என்றார் (யோவா 4:1).
*.மேலும் "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன், ஒருக்காலும் தாகமடையான்"
என்று கூறினார்
(யோவா 6: 35).
*.யோவா 7: 37--ல், ஆத்மீக தாகம் கொண்ட யாவரும், தன்னிடம் வர வேண்டுமென்று
இயேசு அழைக்கிறார்.
*.மேலும், ஆத்மீகத் தாகத்தைப் பற்றி, புதிய ஏற்பாட்டில் வெளி 21:6, 22:17
ஆகிய வசனங்களில் பார்க்கிறோம்.
